கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

பித்தன்


மெளலாசா அவர்களுக்கு வணக்கம்.

‘பித்தனின் பெண்களில் ஏன் நபி இல்லை என்ற வாதத்திற்கு ‘ என்று நீங்கள் தொடங்கும்போதே நீங்கள் இந்த வாதத்தை முழுமையாக படிக்கவில்லை (செலக்டிவ் அம்னீஷியா! ?) என்று தெளிவாகிறது. இந்த கேள்வியை கேட்டு விளக்கமளித்து இஸ்மாயில் தான் வாதத்தை தொடங்கினார். அதிலுள்ள தவறுகளை/குறைகளை அல்லது அப்படி நான் எண்ணியதை சுட்டிக்காட்டியே இந்த வாதம் தொடங்கப்பட்டது. இதை மூன்றாவது தடவையாக எழுதிகிறேன்!

கிராமப்புற கோவில்களில் பூசாரிகளாக இருக்கும் பெண்கள் வயதான பெண்மணிகளாக இருந்தார்கள். (நான் பார்த்தவரை) மேலும் தினசரி பூசையெல்லாம் அங்கு இருக்காது. மாதவிலக்குக் காரணங்களுக்காக பெண்களை யாரும் வீட்டை விட்டு துரத்திவிடுவதில்லை. தாயையும் தந்தையையும் தெய்வமாக மதிக்கிறோம். தாயை வணங்குவது போல பெண்தெய்வங்களையும் வணங்குகிறோம். இதில் ஒன்றும் தவறில்லை. மாரியம்மன் கோவில் போன்ற பெண் தெய்வ கோவில்களுக்கு பெண்கள் மாதவிடாய் சமயங்களில் கூட போகலாம் என்றும் கூட சில பாட்டிகள் சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன். எனவே ‘அதே காரணங்களோடு அவர்கள் ஏன் தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள் ‘ என்று எதிர் கேள்வி கேட்பவர்கள் தாயை கூட மதிக்கத்தெரியாதவர்கள் என்பதோடு, வெறும் விதண்டாவாதத்திற்காக கேட்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது. பெண்களை தெய்வமாக வணங்குகிறது ஒரு மதம். பெண்களைக் கோவிலுக்குள் கூட விட மறுக்கிறது இன்னொரு மதம். சிந்தித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்! இந்த விளக்கங்கள் எதையும் ‘இங்கே ‘ நான் சொல்லத்தேவையில்லை. இந்த வாதம் இந்து மதத்தைப் பற்றியதே அல்ல. நான் எதோ இஸ்லாம் மோசமான மதம் என்றும் இந்து மதம்தான் உயர்ந்ததென்றும் வாதிடுவது போல எண்ணிக்கொண்டே நீங்கள் அனைவரும் வாதத்திற்கு வருவதாகத் தெரிகிறது. அதனால் தான் நான் இஸ்லாத்தில் தவறுகளை சுட்டிக் காட்டினால் அதற்கு விளக்கமளிக்க முடியாமல், பதிலுக்கு இந்து மதத்தில் குற்றம் கண்டு பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்படி நீங்கள் குறிப்பிடுவதால் இரண்டு மதத்திலும் தவறுகள் உண்டு என்பதாகத் தான் ஆகுமே ஒழிய இஸ்லாத்தில் தவறுகள் இல்லை என்று ஆகிவிடாது. இந்த வாதம் இரண்டு மதத்திற்கான ஒப்பீடு அல்ல. இஸ்மாயிலின் முதல் கட்டுரையில் இருந்த தவறுகளை சுட்டிக் காட்டியேதான் வாதம் தொடங்கியது. நீங்கள் அனைவரும் வசதியாக மற்ற மதத்தை குறைகூறிக்கொண்டு பிரச்சனையை எளிதாக திசை திருப்பிக்கொண்டிருக்கிறீர்கள். இதையும் நான் ஐந்தாவது முறையாக எழுதுகிறேன்.

இரண்டு வாரங்களுக்கு ஒருவராக வந்து சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். புதிதாக எதாவது சொன்னாலும் பரவாயில்லை. திரும்ப திரும்ப இவைகளையே எழுதிகொண்டிருக்க எனக்கு நேரமில்லை. வேறு எழுதுவதற்கும் நிறைய இருக்கிறது. ஜெயமோகனின் கட்டுரை வேறு மண்டைக்குள் சுழன்றுகொண்டிருக்கிறது. எனவே இதுதான் நான் இந்த தலைப்பிற்காக அனுப்பும் கடைசி வாதம். இரண்டு வாரத்திற்கு ஒருவராக வந்து ‘கண்ணியமாக ஆடை அணிவது தவறா ? ‘ என்று கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். தவறு என்று யார் சொன்னது. நான் அப்படி சொன்னதுபோல ஒரு மாய தோற்றத்தை நீங்களாக உருவாக்க முயல்வதாகத் தெரிகிறது! கண்ணியமாக ஆடை அணிவதையோ, தாங்களாகவே விரும்பி முகத்துணி அணிவதையும்கூட தவறில்லை என்று விளக்கமாக எழுதிவிட்டேன். மீண்டும் வந்து கண்ணியமாக ஆடை அணிவது தவறா என்று கேட்டால் என்ன சொல்வது. நுனிப்புல் மேயாமல் என் கடிதங்களை முழுவதும் படிக்கும் படியும், வெறும் வார்த்தைகளைப் பார்க்காமல் அதன் பின்னிருக்கும் கருத்துக்களைப் படிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். அப்படி ஆடை அணிவது தவறில்லை. ஆனால் அதை கட்டாயப் படுத்துவது தவறுதான். அதுவும் மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது; எனவே அதில் அனைத்து கட்டாயங்களும் தவறுதான். (இஸ்லாமியரின் கண்ணியமான ஆடை எனக்கு கண்ணியமற்றதாக தெரிவதாக நீங்களே கற்பனை செய்து கொண்டால் எப்படி ? அல்லது உங்கள் கனவிலப்படி தோன்றியிருக்கவேண்டும்! கட்டாயத்தைத்தான் தவறு என்று கூறுகிறேன்.) ‘சுதந்திர நாட்டில் பெண்களுக்கான ஆடையை அவர்களே தேர்ந்தெடுப்பது எப்போது ? ‘ என்று மிக எளிமையான கேள்வியை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். கவனமாக, வசதியாக யாரும் இதற்கு பதில் சொல்ல மறுக்கிறீர்கள்!!

‘நான் கேட்கிறேன் ‘கட்டாயப்படுத்தி ‘ கண்ணிய ஆடை அணியச் சொன்னால் தப்பா ? ‘ என்று எழுதியிருக்கிறீர்கள். நியாயமான கேள்வியாகப் படுகிறது. நல்லதிற்காகத்தானே சொல்கிறோம். சரி. கண்ட கண்ட உணவையும் உண்பதால் குழந்தகளுக்கும் மக்களுக்கும் நோய்கள் வருகின்றன. எனவே ‘கட்டாயப்படுத்தி ‘ அனைவரும் இவை இவைகளைத்தான் சாப்பிட வேண்டும் என்று சொல்வோமே. நல்லதுக்குத்தானே! கண்ட கண்ட புத்தகங்களையும் படித்து மக்கள் கெட்டுவிடுகிறார்கள். எனவே ‘கட்டாயப்படுத்தி ‘ எல்லோரும் இந்த இந்த புத்தகங்களைத்தான் படிக்கவேண்டும் என்று சொல்வோமே. (எல்லா பத்திரிக்கைகளையும் நிறுத்திவிடலாம்) நல்லதிற்குத்தானே! கண்ட கண்ட மோசமான படங்களைப் பார்த்து மனிதர்கள் மோசமாகிக்கொண்டிருக்கிறார்கள். எனவே ‘கட்டாயப்படுத்தி ‘ இப்படிப் பட்ட படங்களைத்தான் எடுக்கவேண்டும் என்றும் சொல்வோமே. நல்லதுக்குத்தானே!! மதக்கருத்துக்களுக்குள் அடிமைப் பட்டுக்கிடக்கும் உங்களுக்கு இந்த வாக்கியங்களின் அடிப்படைப் புரியப்போவதில்லை. அதுதான் சுதந்திரம். அந்நிய அடிமைத்தனத்தை விட மோசமானது நம்மை நாமே அடிமைப்படுத்திக்கொள்வது. (மத, சாதி, சமுதாய காரணிகளுக்காக).

மோசமான அரசியல் வாதிகளும் ஊழல் சமுதாயமும், செயல்படாத நீதி மன்றங்களும் சுதந்திரத்தில் இருக்கலாம். சுதந்திரத்தை ஒழுங்காக பேணிக்காக்காமல் விட்டதற்காக நாம் தரும் விலை அது. என்றாலும் மேற்கூறிய எந்த காரணாங்களுக்காகவும், வேறு சாதி மதக் காரணங்களுக்காகவும்கூட சுதந்திரத்தை இழந்துவிடக்கூடாது என்பது என் கருத்து.

அதிகபட்சமாக சமஸ்கிருதம் படிக்கத்தேவையில்லை என்பதே என் தாழ்மையான கருத்து. ஏன், தமிழ் மத நூல்களைக்கூட படிக்க வேண்டாம். அதுதான் இந்து மதத்தின் பெருமையே. நீங்கள் எதையும் படித்திருக்கத் தேவையில்லை. கடவுள் மேல் அன்பு, பக்தி இருந்தால் போதுமானது. கட்டாயம் கோவிலுக்கு போகவேண்டும், ஓதவேண்டும், நூல்கள் படிக்க வேண்டும் என்று எந்தவிதமான ‘கட்டாயங்களும் ‘ இல்லை. நான் ‘க்ளு ‘ அல்லது ‘ஐடியா ‘ கொடுக்கவேண்டியதில்லை. பெரியாரின் ஒரு புத்தகத்தைப் படித்தாலே உங்களுக்கு வேண்டிய ‘க்ளு ‘க்கள் கிடைத்துவிடும். ஆனால் இந்த வாதம் அவற்றைப்பற்றியே அல்ல. மேலும் உங்களைப் போல எங்கள் மதத்திலுள்ள தவறான கருத்துக்களை நான் மறுத்துக் கொண்டிருக்கவில்லை! ஒப்புக்கொண்டுதான் அதற்கும் எதிராக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

பூமி தோன்றியதைப்பற்றிய சிறு அறிவியல் அறிவும், மக்கள் தோன்றி பரிணாம வளர்ச்சி பெற்று, கூட்டங்களாக பிரிந்த சிறு வரலாற்று அறிவும் இருந்தாலே மதம் மனிதானால் தோற்றுவிக்கப்பட்டது என்ற உண்மை தெரிந்துவிடும். உண்மையை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றால், அது உங்கள் இஷ்டம், அதற்குமேல் அதில் சொல்ல ஏதுமில்லை. மேலும் தவறே இல்லாமல் மூட நம்பிக்கைகளே இல்லாமல் எந்த மதமும் இருக்கமுடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. கருவறைக்குள் யார் நுழையலாம், தீண்டாமை, இரட்டைக் குவளை என்று அதிகம் இந்துக்களை பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டு, பார்த்து- இஸ்லாத்தை மறந்துவிடப்போகிறீர்கள். அவைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அது தவறுதான் என்று நாங்கள் ஒத்துகொண்டுதான் அதை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் குறைந்தபட்சம் உங்கள் மதத்திலுள்ள குற்றங்களை ஒத்துக்கொள்ளவாவது முதலில் முயற்சியுங்கள். பின்னர் மனமிருந்தால் அவற்றைக் களைவதைப் பற்றி யோசிக்கலாம். மற்றபடி ‘குறையிருந்தால் களைய பாடுபடுவோம் ‘ என்று ஒப்புக்காக குரல் கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்கிக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஐந்தறிவு விலங்கு யானைக்கு பிடிக்கும் மதத்தைவிட ஆறறிவு மிருகம் மனிதனுக்கு பிடிக்கும் ‘மதம் ‘ மிக மோசமானது. மதத்தைப் பிடித்து நாம் பின்பற்றலாம் ஆனால் மதம் நம்மைப் பிடித்துவிட இடமளிக்கலாகாது என்பதே என் கருத்து.

‘ஆஸிட் ஊற்றக்கூறும் காரணம் இஸ்லாத்தில் இருப்பதாக ஆதாரமில்லாமல் ‘உடான்ஸ் ‘ விட்டிருப்பதாக ‘ எழுதி இருக்கிறீர்கள்!! காஷ்மீர் இஸ்லாமியர்களுடையது என்றும், அதனால் காஷ்மீரிலிருக்கும் பெண்கள் கட்டாயமாக முகமூடி அணியவேண்டும் என்றும் இல்லையென்றால் ஆஸிட் ஊத்திவிடுவோம், சுட்டுக்கொல்வோம் என்று காஷ்மீரில் இஸ்லாமியத் தீவிர வாதிகள் சொல்வது மாதத்திற்கு ஒரு முறையாவது அனைத்து ஏடுகளிலும் வரும் செய்தி. சில மாதங்களுக்கு முன் அப்படி அணியாமல் வந்த பெண் ஒருவரை சுட்டுக்கொன்று விட்டார்கள் என்ற செய்தி அனைத்து ஏடுகளிலும் வந்தது.

இது எதுவுமே ஆதாரமில்லையா ?!! [ஒன்று நீங்கள் செய்தியே படிப்பதில்லை அல்லது ‘செலக்டிவ் அம்னீஷியா ‘ உங்களுக்கு முற்றிவிட்டது!]. ‘இதைத்தான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது ‘ என்று சொல்வார்கள். இதற்கெல்லாம் ஆதாரமான கருத்து-பெண்கள் கட்டாயமாக முகமூடி அணியவேண்டும் என்பது- இஸ்லாமிலிருந்து வந்தது அதைத்தான் அவர்கள் காரணமாக கூறுகிறார்கள் என்பது தான் நான் எழுதியிருப்பது! என் எழுத்தின் அடிப்படையையே நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. (இஸ்லாத்தில் நேரிடையாக ஆசிட் ஊற்ற சொல்லவேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள் போலிருக்கிறது!) ஆமாம் சட்டத்தினால் முடியாததை – சமயக் கருத்துக்களுக்கு அடிமையாவதை, பெண்களை அடிமையாக நடத்துவதை- இஸ்லாமியக் கோட்பாடுகள் சாதித்திருக்கின்றன என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்துமாகும்.

ஒழுக்கம் பெற்றோரை மதிப்பதிலிருந்தே தொடங்குகிறது. எனவே நீங்கள் சொல்லி அவர்கள் கண்ணியமாக ஆடை அணியவில்லை என்றால் நீங்கள் ஒழுக்கத்தை ஒழுங்காக போதிக்கவில்லை என்றுதான் ஆகிறது. நம் நாட்டில் சட்டம் ஒழுங்காக கடைபிடக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் அது இந்து மதத்தின் தவறில்லை. அது மத சம்பந்தப்பட்டதே இல்லை. சமூகம் ஊழல் நிறைந்ததாக இருக்கிறது. மக்களும் சகித்துக்கொள்ள பழகிவிட்டார்கள். அது சட்டத்தின் குற்றமில்லை. மக்களின் குற்றம். சட்டம் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதற்காகவே பொதுவான சட்டம் தேவையில்லை என்று கூறுவதை ஒத்துக்கொள்ளமுடியாது. இஸ்லாம் தமிழ் நாட்டோடோ இந்தியாவோடோ முடிந்துவிடுவதில்லை. அதை சுட்டிக்காட்டவே செளதி அரேபியாவை சுட்டிக்காட்டினேன். எனவே இந்தியாவிலுள்ள சட்ட ஓட்டைகளை மட்டும் கொண்டு பேசமுடியாது. மற்ற நாடுகளில், சட்டம் ஒழுங்காக வேலை செய்யும் நாடுகளிலும் கூட ‘தலாக் ‘ தான் விவாகரத்திற்குரியதாக இருக்கிறது என்பதையும் தாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே இந்தியாவில், அரசியல்வாதிகள் தலையீட்டால் நீதி மன்றங்கள் ஒழுங்காக நடைபெறாமல் இருக்கும் ஒரே காரணத்துக்காக நான் பொது சட்டம் கேட்பது உங்களுக்கு பாசாங்காக தெரிந்தால் அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது! சட்டம் எல்லோருக்கும் பொதுதான். அப்படி சட்டங்களை நடக்கவைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. இந்துக்கள் யாவரும் ஒரு மனைவியோடு இருக்கிறார்கள் என்றோ, இஸ்லாமியர்கள் அல்லோருமே 4 மனைவிகள் வைத்திருக்கிறார்கள் என்றோ யாரும் சொல்லவில்லை. அப்படி கூறி வாதத்தை திசை திருப்பாதீர்கள். மதக் கருத்துக்கள் வழி காட்டிகள்தான். இந்து மதம் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வழிதான் காட்டுகிறது. கட்டாயப்படுத்தவில்லை. அதைவிட, விவாகரத்தை எளியதாக வைத்திருக்கவில்லை. திருமணம், விவாகரத்து இவையெல்லாம் தனி மனித ஒழுக்கங்கள். மதம், ஒன்றை எளிமையாக்கி பெண்களுக்கு அநீதி இழைக்கவேண்டியதில்லை என்பதுதான் வாதம். மற்றபடி இதற்கு விவாதமே தேவையில்லை. இஸ்லாமியர்கள், மற்றவர்கள் எத்தனை பேர் எத்தனை திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று சதவிகித அடிப்படையில் ஒரு புள்ளி விவரம் எடுத்தாலே எது அப்பட்டமான பொய் என்பது எளிதாக விளங்கிவிடும்.

‘தங்களைப்போன்ற ‘இலவச சூலம் வழங்கிகள் ‘ என்று குறிப்பிட்டு என்னை நீங்கள் கேவலப்படுத்திருக்கத் தேவையில்லை.

உங்கள் ‘செலக்டிவ் அம்னீஷியாவை ‘ கழட்டி வைத்துவிட்டு என்னுடைய கடிதங்களை, கட்டுரைகளைப் படித்திருந்தாலே

நான் சங்கராச்சாரிகளையும், ஆர்.எஸ்.எஸ் களையும் கடுமையாக சாடிவருவது தெரிந்திருக்கும். தலிபன்கள் புத்தர் சிலையை உடைத்ததற்கும் இந்துத்வா-க்கள் மசூதியை உடைத்ததற்கும் ஒரு வித்தியாசமுமில்லை. இரண்டுமே தவறுதான் என்று மிகத்தெளிவாக எழுதியிருக்கிறேன். எனவே சங்கரர் ஏற்றுக்கொண்டாரா, சங்க் பரிவாரம் ஏற்றுக்கொண்டதா என்று என்னை எதிர் கேள்வி கேட்பதோ அல்லது நான் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி.-சங்க் பரிவாரக் கும்பல்களில் ஒருவன் என்று நினைத்துகொண்டு சண்டைக்கு வருவதோ அடிமுட்டாள்தனம். என் எழுத்தின் நோக்கத்திற்கு நேர் எதிர். என் கடிதங்களின் அடிப்படை சாரத்தையே நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது காட்டுகிறது!

சங்க் பரிவாரர்களும் சங்கரரும் என்ன முஸ்லீமா என்று நீங்கள் கேட்பதும் ‘இந்துத்வா ‘ என்பது இந்துமதக் கருத்தல்ல என்று நான் குறிப்பிட்டதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்பதும் இன்னுமொரு விதண்டாவாதம். நான் சொன்னது ‘இந்துத்வா ‘ வுக்கும் இந்து மதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதுதான். இந்துத்வா என்பது அரசியல் என்றுதான் தெளிவாக குறிப்பிட்டேன். இந்துக்களிலேயே சிலர் அரசியல் காரணங்களுக்காக இந்த கோஷத்தை எழுப்புகிறார்கள். இந்துக்களில் சிலர் அந்த கோஷத்தை எழுப்புவதாலேயே அது இந்து மதத்தோடு சம்பந்தமுள்ளது என்று எண்ணக்கூடாது என்பது தான் நான் கூறிய கருத்து. நான் சொன்ன ‘கதை ‘யை நீங்களே ஒத்துக்கொள்ளாதபோது அவர்கள் எப்படி ஒத்துக்கொள்வார்கள் ? அப்படி ஒத்துக்கொண்டால் அவர்கள் அரசியல்வாதிகளே இல்லை ஐயா! மிக முக்கியமாக நான் சொன்னதின் அடிப்படை, ‘இப்படி தைரியமாக தவறு என்பதை தட்டிக் கேட்டு இந்துக்களில் பலபேர் சங்கரர்களையும், சங்க் பரிவார்களையும் தாக்கி எழுதி வருகிறோம். அப்படி யாரும் நீங்கள் உங்கள் மதத் தவறுகளை ஏன் சுட்டிக்காட்ட மறுக்கிறீர்கள் ‘ என்பதுதான். நாங்கள் இப்படி தவறென்று சுட்டிக்காட்டி போராடுவதுபோல நீங்கள் யாரும் ஒரு இமாமையோ மத போதகர்களையோ தட்டி கேட்பதில்லையே ஏன் ? இமாம் கூட வேண்டாம், உலகம் முழுவதும் தெரிந்த பயங்கர தீவிரவாதி பின் லேடனைத் தாக்கி கூட யாரும் பேச மறுக்கிறீர்களே ஏன் ? சிந்தித்துக்கொள்ளுங்கள்.

இந்துத்வா என்பது தவறான அணுகுமுறை என்றுதான் நான் சொல்லிவருகிறேன். இந்துத்வா கோஷத்தை கண்டு வருத்தமும் கோபமும் படும் முதல் மனிதனாகவே நான் இருக்கிறேன். நவீன உலகிலுள்ள ஆயுதமேந்தும் தீவிரவாதிகளிலேயே, மதத்திற்காக தீவரவாதிகள் உருவாகியிருப்பது இஸ்லாத்திற்காக மட்டும்தான். இந்துத்வா என்பதும் அதுபோல மதத்தீவரவாதத்தை நோக்கியே பயனப்படுவதால் அதைக் (வடமாநிலங்களில் ஏற்கனேவே சில மோசமான நிகழ்சிகள் நடந்துவிட்டது) கண்டு வருந்தி தவறென்றும் சொல்லிவருகிறேன். ‘மதசீர்திருத்தம் என்ற சப்பைக்கட்டுக்களோ, மதமாற்றத் தடை சட்டம் என்ற பூட்டுக்களோ போட்டு இஸ்லாம் வளர்க்கப் படவேண்டுமென்பதில்லை. வெளியேறியவர்களை இழுத்து தன்னை வளார்த்துக்கொள்ளும் நிலையில் இஸ்லாம் இல்லை ‘ என்று நீங்கள் எழுதியதை ஒத்துக்கொள்கிறேன். ஏனெனில் அவைகளெல்லாம் சுதந்திரமாக இருப்பவர்களுக்காக ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, அடிமைத்தனத்திலேயே இருந்து, பெண்ணடிமைத்தனத்தையே உயர்வாக சொல்லும் நிலையில்தான் இஸ்லாம் இருக்கிறது; மதத்திற்காக தீவிரவாதத்தை உண்டாக்கும், சரியென்று சப்பைக்கட்டும் நிலையில்தான் இஸ்லாம் இருக்கிறது. எப்படி இப்படி சொல்லலாம் என்று யாரும் சண்டைக்கு வரவேண்டாம். பின் லேடன்களையும், தாவூத் இப்ராஹிம்களையும் எதிர்த்து நீங்களோ, இஸ்லாமோ குரல் கொடுக்காதவரை, தீவிரவாத எழுச்சியை இஸ்லாமிய எழுச்சி விழிப்புணர்ச்சி என்று கண்மூடித்தனமாக கூறிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை, இப்படி சொல்ல யாருக்கும் உரிமை இருக்கிறது.

என் கருத்துக்கள் சமூகம் சம்பந்தபட்டதென்றும், சுதந்திரம் (முக்கியமாக பெண்களுக்கு) சம்பந்தப்பட்டதென்றும், மதக் கருத்துக்களைவிட மனித நேயமே முக்கியம் என்பதே என் எழுத்துக்களின் முக்கிய சாரம் என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. அதனாலேயே நான் சொல்வது பாசாங்காக உங்களுக்குத் தெரிவதிலும் ஆச்சரியமில்லை. எனக்கு அதில் வருத்தமுமில்லை. என்னுடைய சில கடிதங்களை மட்டும் படித்துவிட்டு, அதையும் அறைகுறையாக, எதையும் புரிந்து கொள்ளாமல் படித்துவிட்டு, நீங்கள் என்னையோ என் எழுத்துக்களின் நோக்கத்தையோ முழுமையாகப் புரிந்து கொண்டுவிடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இந்தவார திண்ணையில் ‘இந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல் ‘ என்ற கட்டுரையை நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். (இல்லையெனில் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி – யாழினி).

நாங்கள் சொன்னால்தான் உங்களுக்கு கசக்கிறது. உங்கள் மதத்தை தவறென்று சொல்லவே நாங்கள் சொல்வதாக உங்களுக்குப் படுகிறது எந்தவித ஆதாரமும் இல்லாமலேயே பேசிக்கொண்டிருப்பதாகவும் படுகிறது. சரி இப்போது சொல்வது இஸ்லாமியப் பெண்கள். பாதிக்கப்பட்டப் பெண்கள், தாங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம், அடக்கி வைக்கப்பட்டிருக்கிறோம் என்று விலாவாரியாக சொல்கிறார்கள். எந்த ஊரில், யார் பேசியது என்று தக்க ஆதாரங்களுடன் இருப்பதாகத் தெரிகிறது. (அல்லது இதுவும் கூட எந்தவித ஆதாரமுமில்லாமல் எழுதப்பட்டிருப்பதாக

நீங்கள் சாதிக்கப் போகிறீர்களா ?) அப்படித் தாங்கள் கருதும்பட்சத்தில், புதுக்கோட்டை வரை ஒரு முறைப் போய் வரும்படியாக கேட்டுக்கொள்கிறேன். (அது கூட தேவையில்லை, அது வெளிவரும் ஒரு ஆரம்பம் தான். தாங்கள் இருக்கும் இடத்திற்கருகிலுள்ள பெண்களை கேட்டாலே -திறந்த மனதோடு கேட்டால்-விளங்கிவிடும்!). இப்போது தக்க ஆதாரங்களோடு விஷயம் வெளியே வந்திருப்பதால், ‘இஸ்லாமில் தவறு இருந்தால் களையபோராடுவது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமை ‘ என்று கூறிக்கொண்டிருக்கும் இஸ்மாயில்களும், ரூமிகளும், மெளலாசாக்களும் என்ன செய்யப் போகிறீர்கள் எப்படிக் குரல் கொடுக்கப் போகிறீர்கள் என்று அறிய மிக ஆவலாக இருக்கி(றோம்)றேன்.

என் எழுத்தின் அடிப்படை நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ள கஷ்டப்படுவதாலும், இந்த வாதம் தொடர்பான என்னுடைய கடைசிக் கடிதமாக இது இருப்பதாலும்…

என் எழுத்துக்கள் எந்த இஸ்லாமிய நண்பர்களையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வணக்கங்களுடன்,

பித்தன்.

piththaa@yahoo.com

நன்றி யாழினி: http://www.thinnai.com/pl0219041.html

Series Navigation

பித்தன்

பித்தன்