கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

இந்துமதி சுப்பிரமணியன்


கவிஞர் மகுடேசுவரனை அவரது படைப்புகள் மூலமாக நன்றாக அறிவேன். ஆனால் அறிமுமில்லை. மத்தளராயன் என்ற புனைப்பெயரில் எழுதும் இரா. முருகன் அவர்களை திண்ணைக்கு வந்த பிறகுதான் தெரியும். வாரபலன் என்ற பெயரில் அவர் எழுதும் மடல்களை படித்திருக்கிறேன். வாயு என்ற கதையும் நினைவிருக்கிறது. அவர் வார பலனில் எழுதும் பல விஷயங்கள் புரியாது என்றாலும், ஆர்வத்தை தூண்டுகிற மாதிரி எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.

மகுடேசுவரன் எழுதியுள்ள கடிதத்துக்கான அடிப்படை என்ன என்பது எனக்குத் தெரியும்.

ஒரு பிரபல தமிழ் இணையத்தளத்தில் நடக்கும் அரட்டையில் பேசப்பட்ட சில விஷயங்கள் அடிப்படையில் தான் அந்த மடலை அவர் எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறது. காரணம், அந்த அரட்டையில் பேசப் பட்ட சில விஷயங்களை சுட்டிக் காட்டுவது போலத்தான் அவரது மடல் இருக்கின்றது. அந்த குறிப்பிட்ட அரட்டையில் நானும் கலந்து கொண்டேன்.

பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நெறிப்படுத்தி நடத்தும் அந்த அரட்டையில் ( chat) , மகுடேசுவரனுக்கும், எழுத்தாளர் சுஜாதாவுக்கும் நடந்த அரட்டையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தந்திருக்கிறேன்.

< - செருகல் - >

பிரபல எழுத்தாளர் : மகுடேசுவரன், அமுதசுரபியில் ரவி சுப்ரமணியம் , வெ.சா. இரா.மு கட்டுரைகளைப்

படித்தீர்களா ?

மகுடேசுவரன் : சார், அவசியம் படிக்கிறேன், கொஞ்ச காலமாகவே அமுதசுரபியைப் படிக்கவில்லை.

பிரபல எழுத்தாளர் : மகுடேசுவரன், அதில் உங்கள் கவிதைகள் பற்றி , இரா.முருகன் எழுதியுள்ளார். ரவி,

வைரமுத்துவுக்கு சாகித்திய அகாதமி விருது பற்றி எழுதியுள்ளார்.

மகுடேசுவரன் : தமிழ் இலக்கியம் 2004 மாநாட்டில் கவியரங்கப் பங்கேற்பிற்காக சென்னை வந்திருந்தேன்.

அந்நிகழ்ச்சியைப் ஓட்டி என் கவிதைகள் குறித்து அவர் எழுதியுள்ளாரோ ?

பிரபல எழுத்தாளர் : ஆம். கொஞ்சம் நக்கலாக எழுதியிருந்தார். அவரது வழக்கமான நடையில்.

மகுடேசுவரன் : சார், அந்த மாநாட்டில் அவருக்கு ஒரு வணக்கம் போடத் தவறிவிட்டேன்.

பிரபல எழுத்தாளர் : மகுடேசுவரன், இந்த வணக்கங்கள் எல்லாம் அவசியம்.

< - செருகல் முடிவு - >

நான் மகுடேசுவரனை கேட்க விரும்புவது….

1. ‘ சார், நான் வணக்கம் போட்டிருந்தால், என்னைப் பற்றி நல்ல விதமாக எழுதி இருப்பீர்களா ? ‘ என்று

மத்தளராயன் அவர்களிடன் விசாரித்தீர்களா ? அவர் மின்னஞ்சல் முகவரி, திண்ணையிலேயே கிடைக்கிறதே ?

2. ‘வணக்கம் போட்டால், நல்ல விமரசனம் கிடைக்கும் என்று ஒரு பிரபல எழுத்தாளரான நீங்கள்,

தொகுப்புகள் எல்லாம் வெளியிட்ட ஒரு அறியப்பட்ட கவிஞனான என்னிடம், பொது இடத்தில் உரையாடும்

போது, சொல்ல முடிகிற நிலைமை இருக்கிறது என்றால், அப்படிப்பட்ட

இலக்கிய உலகில் நீங்களும் நானும் குப்பை கொட்டி என்ன ஆகப்போகிறது ? ‘ என்று உங்களுக்கு சுஜாதா அவர்களைப் பார்த்து கேட்கத் தோன்ற வில்லையா ?

3. தறுதலை, ஒருதலை என்கிற வார்த்தை விளையாட்டுக்களை விட்டு, நல்ல கவிஞர் என்று அறியப்பட்ட நீங்கள், எப்போது வெளியே வரப் போகிறீர்கள் ?

அன்புடன்

இந்துமதி சுப்பிரமணியன்

sindumathy@hotmail.com

( அந்த அரட்டையின் தொகுப்பு ( chat transcript) என்வசம் இருக்கிறது. விரும்பினால் இணைப்புத்

தருகிறேன்)

Series Navigation

இந்துமதி சுப்பிரமணியன்

இந்துமதி சுப்பிரமணியன்