கொஞ்சமாய் குட்டிக்கதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

எஸ்ஸார்சி


–1

ஒரு ஊரில் நான்கு வேலையில்லாத வெட்டிப்பேர்வழிகள் எங்கேயாவது அமர்ந்துகொண்டு எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருந்தனர்.
அதே ஊர்க்காரன் வேறு ஒருவன் அவர்களிடம் வந்து உங்களில் யார் பேசாமல் இருக்கிறீர்களோ,அவர்களுக்கு நான் ஒரு பெரிய பரிசு தரப்போகிறேன் என்றான்.
நால்வரும் அமைதியாயினர். சொன்னபடியே யாரும் வாய் திறக்கவில்லை.
‘ஏன் நீங்கள் யாருமே பேசவில்லையா’ பேசாமல் இருந்தால் மட்டுமே அவர்கட்குப் பரிசுதருவதாய்ச்சொன்ன அவனே அவர்களிடம் ஒர் கேள்வி வைத்தான்.
முதலாமவன் பதில் சொன்னான்.
‘ நீங்க தானே சார் எங்களை ப்பேசாமல் இருக்குணுண்ணு சொன்னது’ என்று சொல்லி ப் பேசிவிட்டான்.
இரண்டாமவன் குறுக்கே பாய்ந்து நியாயம் சொன்னான்’ நீங்க கேட்ட கேள்விக்கு ஒரு பதிலு மட்டுமே சொன்னான். அவன் ஒண்ணும் உங்ககிட்ட பேசிடல’
இப்படிச்சொல்லிப் பேசி முடித்தான்.
மூன்றாமவன் வெடுக்கென்று, ‘ நீங்க ரெண்டு பேருமே இப்ப பேசிட்டிங்க’
என்று சொல்லிய தானும் தன் பங்குக்குப்பேசிவிட.
இதனைப்பார்த்துக்கொன்டிருந்த நாலாமவன்,
‘நான் தான் தப்பிச்சேன் வாயத்தொறந்துப்பேசிட்டு ஒண்ணும் மாட்டிகில’ சொல்லி முடித்துவைத்தான்..
பரிசு தருவதாக சொன்னவன் ‘ அடுத்த ஊர் சந்தைக்குப்போயி உதைக்காத கழுதையா பாத்து ஒண்ணு வாங்கியாங்க உங்கள்ள ஆரு முதல்ல அந்தக்கழுதய இங்க வாங்கி வந்தாலும் கட்டாட்யம் ஒரு பரிசு உண்டு’ மீண்டும் சொன்னான்.
இன்னும் நால்வரும் அந்த உதைக்காத ஒரு கழுதைக்காகத்தான் இன்னும் சந்தை முழுவதும் அலைந்து திரிகின்றனர்.

2
ஒருவன் வீட்டுத்தோட்டத்தின் இரவு நேரத்தில் மட்டும் கதவைத்திறந்தால் உடனே பெரிய பெரிய கற்கள் வானத்திலிருந்து பொத் பொதென்று வீழ்ந்தன. எத்தனை நாள் இதே துன்பம். அவனால்
ஒன்றும் சமாளிக்கவே முடியவில்லை. ஒரு சாமியாரிடம் சென்று யோசனை கேட்டான்.
சாமியார் சொன்னார் ‘உன் வீட்டுத்தோட்டத்தில் ஒரு மினி இருக்கிறது. அதனை வீட்டுத்தோட்டத்தில் கிடக்கும் பெரிய கல் உரலில் மந்திர சக்தியால் பிணைத்து க்கட்டி விடுகிறேன். ஒரு நூறு ருபாய் மட்டும் செலவாகும் நீ வீட்டைக்காலி செய்துகொண்டு அடுத்த ஊருக்கு போய் விடு அது தான் சரி’
என்றான். குடியிருந்த வீட்டுத் தோட்டத்துக்கதவை அவன் திறக்காமலே தன் வீட்டைக்காலி செய்து கொண்டு சாமியாரிடம் ஒரு நூறு ருபாய் பணம் கொடுத்து விட்டு மாட்டு வண்டியில் வீட்டு ஜாமான்களை ஏற்ரிக்கொண்டு புறப்பட்டான்.
அடுத்த ஊரில் ஒரு வாடகை வீடு பார்த்து கொண்டுபோன தன் ஜாமான்களை இறக்கிமுடித்தான்.
அன்று இரவு தன் புதிய வீட்டுக்கதவைத்திறந்து பார்த்தான்.
பொத்தென்று ஏதோ வீழும் ஒலி மீண்டும் கேட்டது. தன் பழைய வீட்டு கல் உரல் தான் கீழே வந்து இறங்கியது.
‘ கல் உரலை விட்டு விட்டு வந்துவிட்டாய், நீ என்ன செய்வாய் அதான் பார்த்தேன் அந்தகல் உரலையும் பேர்த்து எடுத்துக்கொண்டு நான் வரவேண்டும் அல்லவா அதான் கொஞ்சம் தாமதம் இப்போதுதான் வந்தேன்’ அதே மினிதான் பதில் சொன்னது.
‘ போச்சி மோசம் ஏ பாழாய்ப்போன மினியே இங்கயும் வந்துட்டயா நீ’’’ ‘ அலறினான் அவன்.
‘ இந்த ஊருலயும் உனக்கு ஒரு சாமியாரு இல்லாமலா உடனே போய் பாரு ஒரு நல்ல யோசனை சொல்லுவாரு ‘
மினி கச்சிதமாய்ப்பதில் சொன்னது.
————————————————————————————————

3
.நான்கு மூடர்கள் ஊர் ஊராக சுற்றி ச்சுற்றி வந்தனர். ஒரு நாள் மாலை நேரம் நன்கு இருட்டியும் விட்டது.
நால்வரும் அப்படியே பாதையில் கொஞ்சம் ஒரமாய்ப் படுத்து உறங்க ஆரம்பித்தனர்.
திருடர்கள் இருவர் அப்போது அந்த வழியே வந்தனர். ஒரே கும்மி இருட்டு.
ஒரு திருடன் சொன்னான், ‘ வழியில கருப்பா கட்டைவ சிலது கிடக்கும் போல பாத்துவா’
என்றான் மற்றொருவனிடம்.
நான்கு மூடர்களில் ஒருவனிடம் மட்டும் ஒரு கால் ரூபாய் திட்டு இருந்தது. அதை அவன் கோவணத்தில் முடித்து
வைத்திருந்தான்
எல்லா மூடர்களும் உறங்குவது போல் பாசாங்கு செய்தனர்
எல்லாரையும் தாண்டித்தாண்டி இரு திருடர்களும் சென்றனர்.
‘ பாத்து வா இங்க பெரியகட்ட ஒண்ணும் கிடக்கு’ முதலில் சென்ற திருடன் மீண்டும் எச்சரிக்கை செய்தான்..
கோவணத்தில் காசு முடிந்து வைத்திருந்த அந்தத் திருடனுக்கு சும்மா இருக்க முடியவில்லை.
‘ இந்த பெரிய கட்டயும் ஒண்ணும் சும்மா கெடக்கவில்லை. ஒரு நாலணா பணத்தை கோமணத்துல முடிஞ்சிகினுதான் படுத்து இருக்கு’ என்று தன் பெருமை பேசினான்.
‘ ஆகா கட்டை இல்ல இதுவ. எல்லாம் ஆளுவதான் . ’ சொல்லிய திருடர்கள் நால்வருக்கும் தலா ரெண்டு உதை சரி வாட்டமாய்க் கொடுத்தனர். அந்தக் கால் ரூபாய் பணத்தையும் பிடுங்கிக்கொண்டு திருடர்கள் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

4
ஒரு குடியானவன் வயலில் நெல் பயிர் செய்திருந்தான். அவ்வயலின் ஒரு வரப்பின் மீது ஒரு கருவேல் மரம் ஒங்கி வளர்ந்திருந்தது.. அதன் மீது பறவைகள் சில அமர்ந்திருந்தன
மரத்தின் நிழலால் அதன் அடியிலிருந்த நெற்பயிர்கள் சரியாக வளரவில்லை. ஆக அக்
குடியானவன் மரத்தை வெட்டிவிடுவதாக முடிவு செய்தான் அதை க்கேட்டுவிட்ட அந்த
மரம் பறவைகளிடம் சொல்லிப் புலம்பியது.
‘ நிழல் என்னாலா வந்தது நீங்களே சொல்லுங்கள் குடியானவன் என்னை ஏன் வேட்டவேண்டும்’
மரத்தில் அமர்ந்திருந்த பறவைகள் கூறின,
‘ உன்னை வெட்டிவிட்டால் எங்களுக்கு வேறு ஒரு மரம் கிடைக்கும்
ஆனால் நீ’ ‘
மரம் சொன்னது
‘ உங்களுக்கு அமர இடம் தந்தேன். நீங்கள் எனக்காக பேசி என்னைக்காப்பாற்றக்கூடாதா’
பறவைகள் யோசித்தன. அக்குடியானவன் வரும் சமயம் பார்த்து,
‘ குடியானவனே பதில் சொல். உனக்கு உன் நிழல் தரைமீது விழுகிறதானே’ வினா வைத்தன
‘ விழுகிறது அதற்கென்ன’’
‘ நீ இரவில் வந்து பார் மரத்திற்கு நிழல் விழுகிறதா’
‘ இரவில் எப்படி நிழல் விழும்’
‘ இரவிலும் விழும் நிலா ஒளி வீசும்போது’
‘ ஆமாம் லேசாக ஒரு நிழுல் விழும், நானும் பார்த்திருக்கிறேன்’
‘ ஆக நிழலுக்கு க்காரணம் மரம் இல்லைதானே’
‘ ஆமாம் மரம் காரணமில்லை’
‘’ பிறகு ஏன் மரத்தை வெட்டப்போகிறாய்’
‘ சரி வெட்டவில்லை’
‘ உன் வீட்டு அருகால் சட்டத்திற்காகத்தான் இந்த மரமே வளர்கிறது’
‘ அப்படியா’
‘ ஆமாம் மரம் முற்றிய பின் நாங்களே உன்னிடம் வந்து சேதி சொல்லுவோம்’
‘ ஆமாம் ஆமாம் புதிய வீடொன்று கட்டவேண்டும்தான் என் மனைவி சொன்னாள்’
‘ ஆக அதுதான் விஷயம் அதைச் சொல்லிவிட்டுபோகவே நாங்ககள் உன்னிடம் வந்தோம்’
பறவைகள் கோஷமிட்டன.
எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தது அம்மரம் மரத்தின் கீழே ஒரு நரிக்குறவன் நாட்டுத்துப்பாக்கியோடு
பறவைக்கூட்டத்தைப்பார்த்து
’ ஆகா ,நம்ம நல்ல நேரம் இண்ணைக்கு’ சொல்லிக்கொண்டே
டுமீல் என்று சுட்டான்.
ஒருபறவை மட்டும் கீழே நிலை தடுமாறி கீழே சுழன்று சுழன்று வீழ்ந்தது.
நெல்பயிர், மரம். பறவை, குடியானவன், குறவன், கதிரவன் எல்லாமே இப்போது ஒரினமாககத்தெரிகிறது அம்மரத்திற்கு..
————————————————————————————————–

5 ஒரு குடியானவனின் வயலில் நெற்பயிர்கள் இருந்தன
அவ் வயலில் சில பயிர்கள் மட்டும் ஒங்கி பச்சைப்பசேல் என வளர்ந்திருந்தன. அந்த வயலில் இருந்த உண்மையான நெற்பயிர்கள் இப்படிப் பேசிக்கொண்டன.
‘ நம்மால் முடியவில்லை இவை மட்டும் எப்படி இவ்வளவு உயரம் பச்சைப்பசேல் என வளர்ந்துள்ளன’
‘ இவை நெல் மிரட்டிகள் நம் போல் தோற்றத்தில் மட்டுமே இருப்பவை. நாம் முற்றிய நெல் மணிகள் தரவேண்டும் நமக்கு பொறுப்புண்டு. அவைகட்கு அந்தபொறுப்பு இல்லை அவை உயரமாய் வளரும். வளர்வதோடு சரி நல்ல விவசாயிக்கு உண்மை புரிந்து விடும் அவன் அவைகளை ப்பிடுங்கி எறிந்து விடுவான்’
நெற்பயிர்கள் பேசிக்கொண்டன.
‘நெல் மிரட்டிகள் தமக்குள் பேசிக்கொண்டன,
‘ இந்தப்புலம்பல் எப்போதும் உண்டு. அன்று தேவ அசுரர்கள் பாற்கடலைக்கடைந்தபோதே துவங்கியது இந்த வேலை. அப்போது அக் கடவுளையே எமாற்றியவர்கள் நம் முன்னோர்கள். இவைகள் என்ன அந்த கீதை ஒதிய கிருட்டினனை விடவுமா’

‘ எப்போதும் நெல் மிரட்டிகள் பேசும் பாஷை நெற்பயிர்களாகிய நமக்கு மட்டும் விளங்குவதில்லை. ஆனால் நாம் பேசும் பாஷையை மட்டும் அவை எப்படி அறிகின்றன’ என்றன நெற்பயிர்கள்.
‘ அதுதான் இன்னும் எங்களுக்கும் பிடிபடவில்லை’ கடவுள் தான் குறுக்கிட்டுப்பேசிமுடித்துவைத்தார்.
—————————————————————————————————

6

சீவூரில் ஒரு கணக்குப்பில்ளை இல்லாத பொல்லாத பிரச்சனைகளை க்கொடுத்துவந்தான்.
ஊர் மக்கள் அவனால் பட்ட இம்சைகள் சொல்ல முடியாமல் இருந்தன.
கரம்பாகக்கிடப்பதை கரும்பு பயிர் செய்யப்பட்டதாக எழுதுவான். பொரம்போக்கு நிலம் உபயோகித்தில் இருப்பதை
பட்டா என்பான். பட்டா உள்ள நிலத்தை பொரம்பொக்கு என்பான். வெள்ளப்பாழ் என்றால் வயலில் வெள்ளாமை சபாஷ்
என்பான். மேயாத மாட்டை பட்டியில் அடைப்பான். பட்டியில் அடைத்த மாட்டை விற்றும் விடுவான்
கொஞ்சமா இம்சைகள்.
அவனுக்கு வயதாகிக்கொண்டே வந்தது. அந்திமக்காலம் நெருந்கிக்கொன்டிருந்தது. தன் சாவிலும் ஊருக்கு
ஒரு பிரச்சனையை கொடுத்துவிட்டுத்தான் சொர்க்கமோ இல்லை இல்லை அந் நரகமோ போய்ச்சேரவேண்டும். என்று முடிவு செய்தான்.
ஆக அயலூர் சென்று அந்த ஊர் மக்களிடம். சீவூர் கணக்குப்பிள்ளை,
‘ நான் இறக்கப்போகிறேன். இறந்த பிறகு என் சவத்தை என் பிறந்து வாழ்ந்த சீவூரில் புதைக்கமால்
உங்கள் ஊர் சுடுகாட்டில் கொண்டுவந்து புதைக்க முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். நான் அங்கு செய்து விட்ட கொடுமைகளுக்கு செத்த பிறாகாவது அங்கு புதைக்காமல் என் உடலை வெளியூரில் புதைத்தால் தான் அவர்ளது அந்த ஆத்திரம் தீருமாம். ஆக நீங்கள் சாக்கிரதையாக இருங்கள் எச்சரிக்கை செய்யவே வந்தேன்,’.
கனக்குப்பிள்ளை இப்படி த்தன் வேலைமுடித்துவிட்டு சீவூருக்கு த்திரும்பினார். தன் ஊர் மக்களிடம்,
‘ எனக்கு வயதாகி விட்டது. அந்திமக்காலமும் வந்துவிட்டது. நான் இந்த ஊருக்கு ஒரு நல்லதும் செய்யவே இல்லை. ஆக என் சவத்தை இந்த சீவூரில் புதைக்க வேண்டாம்.
அசலூரில் கொண்டுபோய் புதைத்துவிடுங்கள்’
சொல்லிவிட்டுப்பின் சில தினங்களில் இறந்துபோனான். சீவூர் கணக்குப்பிள்ளையின்
பிணத்தைப் பாடையில் வைத்துத்தூக்கிகொண்டு அசலூருக்குப்போனார்கள். சீவூர் மக்கள் கணக்குப்பிள்ளையின் பிணத்தைச்சுமந்து கொண்டு வருவதைப்பார்த்த அசலூர் கிராம மக்கள்
சண்டக்குத்தயார் ஆனார்கள். சீவூர் மக்கள்
பிணத்தைத்தரையில் வைக்கபோனார்கள்
‘ பிணத்தை பாடையில்வைத்துத் தூக்கினால் சுடுகாட்டில் தான் இறக்கிவைக்கவேண்டும் ‘
எனக்கூறித்தடுத்து பிரச்சனை பெரிய சண்டையில் முடிந்தது.
சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் எனச்சொல்லிக்கொண்டே சீவூர் மக்கள்
பிணத்தோடு ஊர் திரும்பினர்.
இன்றுவரை சீவூருக்கும் அந்த அச்லூருக்கும் பிரச்சனை இருந்துகொண்டுதானே இருக்கிறது.

—————————————————————————————————
7

ஒரு காகம் சொன்னது. நான் தான் இந்த க்காட்டிற்கே த்தலைவன்
என்னைக்கண்டால் எல்லா காட்டு மிருகங்களும் ஒட்டமாய் ஒடுகின்றன என்றது.
எல்லா பறவைகளுக்கும் ஒரே ஆச்சரியம்.
‘ எப்படிச்சாத்தியம் இது என்றன’ பிற பறவைகள்.
‘ நீங்களே கண்ணால் பாருங்கள் அப்புறம் என்னை நம்புங்கள்’ என்றது காகம்
எல்லா பறவைகளும் ஒரு மரத்தில் அமர்ந்து கொண்டன.
காட்டில் அந்தப்பக்கமாய் வந்த ஒரு சிங்கம் ஒன்றின் முதுகின் மீது இப்போது அந்தக் காகம் அமர்ந்து கொண்டது.
சிங்கம் கம்பீரமாய் காட்டில் கர்ஜித்துக்கொண்டே நடக்க நடக்க, எல்லா மிருகங்களும் ஒட்டம் பித்தன’ மரத்தின் மீது அமர்ந்திருந்த
பறவகள் எல்லாம் காகத்தின் முட்டாள்தனத்தை ப்பார்த்து நகைத்தன.
திரும்பிய அந்த காகம்’ ‘ பார்த்தீர்கள் அல்லவா மிருகங்கள் எல்லாம் அலறி அடித்துக்கொண்டு ஒடுவதை’ என்றது
பறவைகள் கூறின
‘ இப்போதும் சிங்கம் தன் பாதையில் சென்றுகொண்டேதான் இருக்கிறது. காட்டு மிருகங்கள் அலறி அடித்துக்கொண்டு ஒடிக்கொண்டேதான்னை இருக்கின்றன நீயே பார்’
காகம் கூர்ந்து சிங்கம் செல்லும் வழியைப்பார்த்தது. பார்த்தது
வெட்கத்தில் காகம் திண்டாட எல்லாப்பறவைகளும்
அதன் அதன் கூட்டிற்குக்கிளம்பின.

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

கொஞ்சமாய் குட்டிக்கதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

எஸ்ஸார்சி


1
அடுத்தவன்வீட்டுத் தென்னைமரத்தில் ஏறி ஒருவன் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தான். தென்னை மரத்துக்குச்சொந்தக்காரன் அவனைப் பார்த்துவிட்டான்.
‘யாரது அது தென்னைமரத்தில்’
‘ ஏன் நாந்தான்’
‘ என்னாப்பா செய்யுற’
‘ வேற ஒண்ணும் இல்லே கண்ணுகுட்டிக்கி கொஞ்சம் பில்லு பாக்குரென்’
‘ என்னா இது தென்னை மரத்துல ஏறிகினு கண்ணுகுட்டிக்கி பில்லு பாக்குறயா’
‘ ஆமாம்’,
‘ என்னாப்பா புது சேதியா இருக்கு’
‘ அதான் மரத்துமேல பில்லு இல்லுன்னு தெரிஞ்சிகிட்டேன்’
‘ அப்பறம்’
‘ தோ இறங்கிகிட்டே இருக்கேனே தெரியல’
அவன் பதில் சொன்னான்.

2
ஒரு எஜமானன் வீட்டில் ஒரு கழுதையும் நாயும் இருந்தன.
ஒர் நள்ளிரவில் கழுதை கத்தியது
வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியே வரவில்லை.
மீண்டும் கழுதை கத்தியது.
வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியே வந்தான்.
கைத்தடியால் ஒங்கி ஒரு போடுபோட்டன்.
கழுதை அலறிப்போயிற்று.
நாய் சொன்னது.
‘நானும் குலைக்கிறேன் இப்போது நம் வீட்டுக்காரன் என்னை என்ன செய்கிறான் பார்’ என்றது.
கழுதை அதையும் பார்ப்போம் என்றது.
சொல்லியபடியே நாய் குலைக்க வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியில் வந்து சுற்றிச் சுற்றிப்பார்த்துவிட்டு
பின் கதவு தாளிட்டுக்கொண்டான்.
கழுதைக்கு ஆத்திரமாய் வந்தது.
நாய் சமாதானம் சொன்னது.’ இந்த இடம் சரிவராது ஆளுக்கு ஆளுக்கு ஒரு சட்டமாய் இருக்கு. நாம் இருவரும் இந்த எஜமான் வீட்டைவிட்டு ஒடிவிடுவோமா’
‘ நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஆனாலும்’
கழுதை லேசாக இழுத்து நிறுத்தியது
‘ ஏன் என்ன சொல்கிறாய்’ நாய்த் திருப்பிக் கேட்டது.
‘ நம் எஜமானனுக்கும் அவன் மனைவிக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வரும்’
‘ வந்தால்’
‘ உன்னைப் போய் நான் கட்டிகிட்டதுக்கு தெருவுல கட்டிக்கிடக்கிற அந்தக் கழுதைய கட்டிகிட்டுகுடும்பம் பண்ணுலாம்’ இப்படியேத்தான் அடிக்கடி நம் எஜமான் மனைவியிடம் புலம்புகிறார் என் நீண்ட காதுகளால் நானே கேட்டிருக்கிறேன்’.
‘ அப்புறம்’
‘ ஒருக்கால் எஜமான் அப்படி ஒரு நோக்கத்தோடு என்னைத்தேடி வரும்போது நான் இங்கு இருக்கவேண்டும் அல்லவா அதான் பார்க்கிறேன்’ என்றது கழுதை..
‘ நீ சொல்வதும் ஒரு விதத்தில் சரித்தான்’ நாய் பதில் சொன்னது.
3
ஒருவன் ஒருஆமையைக்கொல்ல ஒங்கி ஒங்கிப் பிரம்பால் அடித்தான்
ஆமை சாகவில்லை.
கல்லால் அடித்தான். கம்பால் பெருந்தடியால் அடித்தான்
ஆமை செத்தால்தானே. சாகவில்லை.
அடுத்தவன் ஒருவன் அதைப்பார்த்துக்கொண்டே சென்றான்.
அவனோ ஜீவ ஹிம்சை பிடிக்காதவன் .நமக்கு ஏன் வம்பு என்று வாயைமூடிக்கொண்டான்.
இருந்தாலும் ஒருவனுக்கு வாய் மட்டும் அப்படிச் சும்மா இருந்துவிடுமா என்ன.
ஆமை அடிப்பவனிடம் வந்து நின்றுகொன்டான்.
‘ நாம நம் வாயால சொல்லக்கூடாது. நமக்கு ஏன் வம்பு. அந்தப் பாவம். நாமளா போய் அதைச் சொல்றது மகா தப்பு’.
ஆமையை அடித்துக்கொண்டிருந்தவன் இப்போது அவன் சொல்வதைக்காது கொடுத்துக்கேட்க ஆரம்பித்தான். ஒரு விஷயத்தைச்சொல்வபவர்களுக்கு காதுகொடுத்துக் கேட்பவர்கள் எல்லாமே சாட்சாத் அந்த பரமேச்வரன் ஆகத்தானே. தெரிகிறார்கள்
ஆக மீண்டும் ஆரம்பித்தான்.
‘ ஆமைய அப்படியே போட்டு அடிச்சா அது எப்படி சாவும். புறட்டிபோட்டுட்டு அடிச்சாத்தான் சாவும். அதப்போய் எதுக்கு நம்ப வாயால ஒருத்தருக்குச்சொல்றது. அந்த பாவம்தான் நமக்கு எதுக்கு’ நிறுத்தினான்.
ஆமை அடித்துக்கொண்டிருந்தவன் அடுத்த நொடியே அந்த ஆமையை

புறட்டிப்போட்டு ஒரே அடியில் அதன் கதையை முடித்தான்

4.
ஒரு பிச்சைக்காரன் தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டு சென்றான். ஒரு வீட்டு வாயிலில்
‘ அம்மா தாயே எதானாச்சிம் போடுங்க. வவுறு பசிக்குது’ ஒங்கிக்கத்தினான்.
அந்த அம்மாள் ஒய்யார நடை நடந்து வெளியில் வந்தாள். ஆக
பிச்சைக்காரனுக்கு அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை என்று உறுதியாகிவிட்டது.
‘ அம்மா தாயே உங்க ஆத்தா அப்பன சொர்க்கத்துல பாத்தேன். ரொம்ப செருமம்.
அங்க பச்ச அரிசி சோறு போடுறது இல்லயாம். கட்டிக்கக் கூட ஒரு நல்ல துணிமணி கொடுக்கமாட்டென்றாங்கன்னு சொல்லி சொல்லி அழுதாங்க. ரொம்ப பரிதாபமா இரிந்திச்சி
எதானா நீ குடுத்தா நா கொண்டு போயி அங்க அவாளிடத்திலே சேத்தும் பூடுவேன் அப்பறம் உன் இஷ்டம் தாயி’’
அப்பா அம்மா கேட்கிறார்கள். அதுவும் புருஷன் வேறு வீட்டில் இல்லாத நல்ல சமயம்.
இதைவிட ஒரு பெண்ணுக்கு என்ன பெரிய பேறு வாழ்க்கையில் கிடைத்துவிடப்போகிறது, எண்ணிய அவள் ஒரு பட்டு வேட்டி, பட்டுப்புடவை பச்ச அரிசி ஒரு பை எனக் கணிசமாய் பிச்சைக்கரனிடம் கொடுத்து
‘ பத்திரமா அப்பா அம்மாகிட்ட நீ சேத்துடு என் சாமி’’ என்று கெஞ்சி முடித்தாள்.

பிச்சைக்காரன் அவள் கொடுத்தது எல்லாம் சுருட்டிக்கொண்டு இடத்தைக்காலி செய்தான்

அவன் அப்படிப்போகவும் அவள் புருசன் வீடு திரும்பவும் சரியாக இருந்தது.

‘யார் வந்தது’
கீழே அரிசி இத்யாதிகள் எல்லாம் சிந்தி இருந்தது.
அவன்தான் கேட்டான்.
‘ அதாங்க என் ஆயும் அப்பனும் சொர்க்கத்துல கொல பட்டினி கெடக்குராங்களாம். சொர்க்கத்துலேந்து வந்த ஒரு பிச்சைக்காரன் தான் என்கிட்ட சேதி சொன்னாரு. அவங்களுக்கு கட்டிக்கத்துணி கூடம் சரியா இல்லயாம். அதான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் அனுப்பி வச்சேன்’
சொல்லி நிறுத்தினாள்.
‘ எங்க அவன்’ கணவன் சீறினான்.
‘ இந்நேரம் தோ அந்த தெரு தாண்டி இருப்பான்’.
தான் வந்த அதே குதிரையில் ஏறிக்கொண்டு பிச்சைக்காரனை அவன் துறத்திக்கொண்டு சென்றான்
பிச்சைக்காரன் இது விஷயம் எப்படியோ தெரிந்துகொண்டவனாய் வழியில் நின்றிருந்த ஒரு மாமரத்தின் மீது
ஏறி உச்சியில் அமர்ந்து கொண்டான்
பிச்சைக்காரன் மாமரத்தில் இருப்பது அறிந்த அவன்
குதிரையை மாமரத்தின் கீழ் நிறுத்திவிட்டு மரத்தில் பாய்ந்து பாய்ந்து ஏறினான்.
பிச்சைக்காரனும் தாவித்தாவி க்கடைசியாய் பொத்தென்று குதிரை முதுகின்மீது படார் எனக் குதித்து குதிரையோடு ஒடி மறைந்தான்.
கீழே இறங்கிய அவனுக்கு இப்போது அந்தக் குதிரையும் போய்த்தொலைந்தது..
பொடி நடையாய் சோர்ந்துபோய் அவன் வீட்டுக்குத்திரும்பினா¡ன்.
‘ எங்க நம்மக் குதிரையைக்காணும்’ மனைவி ஆரம்பித்தாள்
‘ நல்லக்கதை.யா இருக்குடி நீ கேக்குறது. அங்க சொர்க்கத்துல எம்மாமனுக்கும் மாமிக்கும் எங்க போவுனுன்னாலும் நடயா நடந்து காலு வீங்கிக் கொப்புளமாக்கெடக்குதுன்னுல்ல அந்த பிச்சக்காரன் சொல்லுறான். அதான் பெரியவங்க குதிரையிலயே பொவுட்டும் வருட்டும்னு நானேதான் நம்ம குதிரையை குடுத்துவுட்டேன்’ அழகாய்ச்சொல்லிமுடித்தான்.
‘ அய்யா தருமத்தொரயாச்சே சும்மாவா நானு முந்தி விரிச்சன்’
அவள் சொல்லி முடித்தாள்.
——————————————————–

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி