கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா?

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

ஜயராமன்


ரொம்ப நாட்களாக என் மனைவிக்கு கனமான இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. வெறும் முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்த நாம் இன்று வெறும் கல்கண்டு, ராணிக்கதிர் அளவில் முடங்கிவிட்டது ஏதோ மட்டமோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது. நம் பழகும் சமூகத்தில் ஒரு பந்தா பண்ண வழியில்லாமல் இருந்தது மிகவும் துக்ககரமான ஒரு விஷயம்.

இந்த சூழலில் வார்த்தை பத்திரிக்கை ஆரம்பிக்கப்போகிறார்கள் என்று கேட்டதும் படு உத்சாகம் அடைந்தாள் மனைவி. காரணம், சகாய சந்தாவில் வருஷத்துக்கு நூறு ரூபாய்தான். எடைக்குப்போட்டால் ஒரு முப்பது ரூபாய் தேறினால், நெட் எழுபது ரூபாயில் கனமான இலக்கியம் படிக்கலாம் என்று கணக்குப் போட்டு விளக்கினாள். எனக்கு இது கசக்கவில்லை, சரியான ஐடியாவாகவே பட்டது.

பணத்தைக் கட்டியதும் அழகான ப்ளாஸ்டிக் உறையில் போட்டு மஞ்சள் கலர் பத்திரிக்கை ஒன்று தந்தார்கள். இதோ வார்த்தை பத்திரிக்கை வாங்கியிருக்கிறேன் பாருங்கள் என்று அழகாக எல்லோருக்கும் தெரியும்படி பஸ்ஸில் பிடித்துக்கொண்டே வீடு வந்தேன்.

கனமான இலக்கிய தாகம் அடங்காமல் பெருகியது. இரண்டு நாட்கள் கவனமாக பரிக்ஷைக்கு மாதிரி உட்கார்ந்து படித்தேன்.

ஒரு மாலையில், என் பார்யாள் என் ஈடுபாட்டைப் பார்த்து பொறாமைப்பட்டாள். “நீங்கள் கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா?” என்றாள். என்.எஸ்.கே ஸ்டைலில் “சரிவா, உக்காரு!” என்றேன்.

புத்தகத்தை வாங்கி பய பக்தியுடன் பார்த்தாள்.

பார்த்ததும் அவளுக்கு ஒரு நிராசை “அய்ய! என்னங்க இது பத்து பைசா பாட்டு புத்தகம் மாதிரி பேப்பர் எல்லாம் உங்க கலர்ல இருக்கு. கொஞ்சம் நல்ல பேப்பர்ல போடப்படாதா!” என்றாள்.

எனக்கு கோவம்… “ஆமாம், படமெல்லாம் உன் கலர்ல போட்டிருக்கிறாங்க இல்ல… ஒன்னுமே விளங்காம. இருட்டா…அதுக்காகத்தான்…” என்றேன்.

சபாஷ் சரியான பதிலடி என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

ஒரு பக்கத்தைத் திறந்து ஆவலாகப் படித்தாள், “என்னங்க, ஒன்னுமே புரியலையே!”

“திரைப்படம், விஞ்ஞானமும், கலையும் சரிவிகிதத்தில் புனைந்த ஒன்றாக இருப்பதால், நாள்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் விஞ்ஞானம் தன்னுடன் சேர்ந்து இயங்கும் படைப்பாற்றலின் உத்திகளையும் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையை முன்வைக்கிறது”

“என்னங்க சொல்றாரு இவரு?” என்று விழித்தாள் மனைவி.

“அசடு! இதுதான் கனமான இலக்கிய மொழி. கொஞ்சமும் லகுவா புரியக்கூடாது. இப்போ இதையே “திரைப்படத்தில் விஞ்ஞானம் முக்கியமாக இருப்பதால் படைப்பு உத்திகள் மாறிக்கொண்டே இருக்கின்றன” என்று சொல்லலாம்தான். இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். ஆனால், நான் சொன்னது குமுதம் பாஷை. அதாவது மட்டம்! அதை எப்படியாவது விலக்க வேண்டும். அதையே சுத்தி சுத்தி இப்படி எழுதினால் அது வார்த்தை இலக்கியம். புரியுதா!”.

சரி என்று தலையாட்டினாள்.

இப்ப புரிந்துவிட்டது அவளுக்கு.

எல்லாவற்றையும் தலைகீழாக சுற்றி எழுதவேண்டும், அவ்வளவுதான். “புதிய சாத்தியங்கள் ஏற்படுகின்றன” என்று எழுதக் கூடாது “புதிய கண்டுபிடிப்புகளின் வழியே நிகழும் இம்மாற்றம் திரைப்படங்களின் இயல்மொழியில் புதிய சாத்தியங்களை அறிமுகப்படுத்துகிறது” என்று மாற்றத்தை முன்வைத்து எழுதவேண்டும். சரிதானே!

நன்றாகப்புரிந்தது. இதோ பாருங்கள் “இயக்குனரின் உத்தியை நுட்பங்கள் காட்டுகின்றன” என்று சொல்லக் கூடாது. “நுட்பங்கள் எப்போதும் அதனை இயக்குபவரின் கட்டளையே செய்துமுடிக்கின்றன” என்று எழுதவேண்டும். அதாவது, எல்லா அனிச்சைகளையும் செய்பொருட்களாக்கி விட வேண்டும்… அவ்வளவுதானே!” என்றாள்.

“க.க.கொ.க” என்றேன் (கச்சிதமாய் கவ்விக்கொண்டாய் கள்ளி!) என்று சிலாகித்தேன்.

சரி, இந்த கட்டுரையை முழுதுமாக படித்தாயா?

“ஐயோ, அது ஆகாத காரியம். அந்த கட்டுரை பதினோரு பக்கம் போகிறது. மூன்றாவது பக்கத்தைத் தாண்டினால் எனக்கு தமிழே மறக்கிறது.. என்னால் ஆகாது! ” என்றாள்.

“சரிங்க.. விடுங்க.. ஒன்னும் வேண்டாம்… எனக்கு கதை தாங்க பிடிக்கும்.. நான் அதையே படிக்கிறேன்” என்றாள்.

விடாது ஐந்து கதைகளையும் படித்தவளுக்கு கடைசியில் ஒரு டவுட்…

“ஏங்க! இந்த கதைகளிலே கனமான இலக்கிய கதை எது என்று எப்படீங்க கண்டுக்கறது” என்றாள்.

“அது ரொம்ப சுலபம்… எந்த கதையிலாவது யாராவது சோரம் போவாங்களே” என்றேன். ஆச்சரியப்பட்டாள்!! “அட ஆமாங்க…. இருக்குங்க… அதுவும் குடும்பத்தோட போறாங்க”.

“அப்புறம் என்ன சந்தேகம்! அதுதான் கனமான இலக்கிய கதை… புரிந்ததா” என்றேன்.

என் அறிவை அறிந்து என்னை மதிப்பாக பார்த்தாள் என் இடதுபக்கத்துக்காரி!

நேரமாகி விட்டிருந்தது.. என் தம்பி வந்தான்.. அவனுக்கு ஒரு சந்தேகம். “அண்ணா, வார்த்தை என்பது திராவிட வார்த்தையா, ஆரிய வார்த்தையா?” என்றான்.

“குழப்பமான வார்த்தை” என்றேன்.

“அப்படிச்சொல்வதை விட, தெளிவற்ற மற்றும் ஒவ்வாத பல்வேறு கோணங்களில் முன்வரும் உத்திகளின் கட்டளைகளை உள்வாங்கி புதிய சாத்தியங்களை அறிமுகப்படுத்துவதே வார்த்தை” என்றாள் என் மனைவி.

நான் பாய்ந்து அவள் கைகளை பற்றினேன்.. “நீ எங்கேயோ போய்விட்டாய். இவ்வளவு சீக்கிரம் கனமான இலக்கியவாதியாகிவிட்டாயே. க.க.கொ.க ” என்றேன்.

“சரி, சரி! வாங்க.. சாப்பிட… சீரியலுக்கு டயமாச்சு… அபிக்கு என்னாச்சோ!” என்று கவலையோடு எழுந்தாள் மனைவி.

சபை கலைந்தது.


vaithikasri@gmail.com

Series Navigation

ஜயராமன்

ஜயராமன்