இம்மொபைல் ஆக்கும் மொபைல்!

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

சந்திரசேகர்


மனுஷனுக்கு எது இன்றியமையாததோ தெரியாது, இப்ப ‘மொபைல் இல்லாதார் வாழ்க்கை, இருந்தும் இல்லாதான் வாழ்க்கை ‘ போலத்தான்!

எங்கும் சிவமயம் போயி இப்ப எங்கும் ‘செல் ‘மயம்!

கற்றோர்க்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு. இப்ப ‘செல் ‘லிருக்கும் இடமெல்லாம் ‘செல்வாக்கு ‘ இருக்குது!

அப்பவே ஜோசியன் சொன்னான். ‘செல் ‘ லு போக பாக்கியிருப்பு – ன்னு! இப்பதான் பிள்ளைங்களுக்கு செல்லு வாங்கிக் கொடுத்த அப்பனுக்கெல்லாம் புரியுது, பில் கட்றப்ப ‘செல் ‘ போக பாக்கிதான் (கைல) இருப்புன்னு!

மொபைல் உபத்திரவங்கள்:

சட்டை பையில வெக்கலாம்னா, ஹார்ட் அட்டாக் வரும்கிறானுங்க! சரி, பாண்ட் பாக்கெட்ல வெக்கலாம்னா, ஆண்மை குறைஞ்சுடும்னு பயமுறுத்துறாங்க!

பின்னர் சொன்ன செய்தி மட்டும் நெஜம்னா, குடும்ப கட்டுப்பாட்டுத் துறை எல்லா லாரி டிரைவருக்கும் இலவச மொபைல் வழங்கலாம்! எயிட்ஸ்ஸாவது குறையும்!

மொபைல் வெச்சிருக்கிற பொண்ணுங்க பாடு, அதைவிட மோசம். சேல கட்றவங்க இடுப்புல சொருக முடியாது! சல்வார் கமீஸ் போடறவங்க நிலைமை கேக்கவே வேணாம்!

பார்த்தா, கழுத்துல தாலிய விட ஜெகத்ஜோதியா ஒரு நாடால கட்டி தொங்கப் போட்டு போவங்க, இல்ல சின்ன சைஸ் பைக்குள்ள மொபை(ய)ல உக்காரவெச்சு, மெடல் மாதிரி தொங்க விடுவாங்க!

தொங்க விடறதுன்னதும் வேற ஒரு மேட்டர் ஞாபகம் வருது! இந்த கம்ப்யூடர், ஸாஃப்ட்வேர், அக்குவேர், ஆணிவேர் கம்பெனியெல்லாம் இப்ப, ID Card ங்குற பேர்ல, நம்பர் ப்ளேட் மாதிரி எல்லார் கழுத்துலயும் மாட்டாடறாங்க! வேல பண்றவங்களாவது, வேல முடிஞ்சு வெளிய வரப்ப, இந்த கழுத்து பட்டயை கழட்டி வெச்சுறலாம்ல ? அவங்கள பார்க்கறப்ப எதோ நம்பர் போட்ட கைதிகளாவோ, இல்ல வேற கழுத்துப் பட்டை போடற நாலு கால் ஜந்துக்களையோ நினைக்கத் தோணுது!

சரி, திரும்ப மொபைலுக்கே வருவோம்….

சில சுவாரஸ்யமான செல்லுபுராணம் பாப்போமா ?

1. இப்பதான் திடார்னு சிவபெருமானுக்கு ஜலதோஷம் sorry ப்ரதோஷம்கிற சாக்குல திடார்னு ஒரு அலை அடிச்சிருக்கே! அதனால கோயில் வாசல்ல நல்ல கூட்டம். பூக்கடைல பூ வாங்க கையை நீட்டுனவன், நீட்டிகிட்டேயிருக்கேன். மறுபக்கம் பூக்காரம்மா ‘செல் ‘லுல சும்மா ‘பூந்து வெளாடராங்க! யாருக்கோ பிசினெஸ் (Nack) நெளிவு சுளிவெல்லாம் சொல்லிகொடுத்துகிட்டு இருக்காங்க. பலர் கை நீட்டிகிட்டிருந்தாலும், அவங்க அட்வைஸ் தொடருது!

நடுல மறு கையை ‘போ, போ ‘ ங்கிற மாதிரி வீசுறாங்க! ஆனா பேச்சு மட்டும் மொபைல்ல தொடருது! சுத்தி நிக்கிற கஸ்டமருக்கெல்லாம் ரொம்ப அவமானமாப் போச்சு! ‘ என்னடா பூ வாங்க வந்தா, விரட்டுறாங்களேன்னு! பேச்சு முடிஞ்சதும், பூக்காரம்மா போட்டாங்களே ஒரு போடு! ‘ஏன்யா, மாடு சைடுல தலைய விட்டு பூவ திங்குது; நீ பாட்டுக்கும் நிக்குறயே ? மாட விரட்டக் கூடாது ? நாந்தான், முக்கிய மேட்டர் பேசிக்கிட்டிருக்கேன்ல ‘ – இது எப்படியிருக்கு!!

2. ரெகுலரா பார்க்ல வாக்கிங் வர நண்பர் ரெண்டு நாளா மிஸ்ஸிங்! மறுநாள், அவர மார்கெட்ல பார்த்தேன்! எதையோ பறி கொடுத்த மாதிரி அவர் முகம்! ‘என்ன மணிகண்டா, ரெண்டு நாளா காணலை ? ஏன் டல்லாயிருக்கே ? ‘ மணிகண்டன் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு, ‘சார், நீங்க நல்ல ப்ரெண்டுங்கிறதால சொல்றேன், வெளிய சொல்லீறமாட்டாங்களே ? ‘ என்ற பீடிகை போட்டுச் சொன்னதைக் கேட்டு, சிரிப்பதா, அவருக்காக வருத்தப்படுவதா தெரியவில்லை!!

சார் நான் பாஃரின் கம்பெனியின் இந்திய மார்கெட்டிங் ரெப் என்று உங்களுக்குத் தெரியும்; நிறைய டார்கெட்! ப்ரெஷர்! மொபைல் தான் சார் என் மூச்சுக் குழாயே! இப்ப அதுதான் எனக்கு எமனா வந்து நிக்குது!

நான் – என்னப்பாயிது,மார்கெட்டிங் ஆளுக்கு மொபைல் இல்லாம ஆகுமா ?

மணி- ‘அட அதுதான் சார் ப்ராப்ளமே! ஒரு ப்ரேசில் பார்ட்டிக்கு பொருள் இந்தியாவிலிருந்து சப்ளை செய்ய என் கம்பெனி விலையெல்லாம் பேசி முடிச்சிடுச்சி. பாஃக்டரி விசிட்டுக்கு ஒரு ஆளை ப்ரேசில் பார்ட்டி அனுப்பியிருந்தாங்க. அவர் ப்ரொடக்ஷன் எல்லாம் பார்த்துட்டு, ஒரே ஒரு புது மெஷினும் சேர்த்தா வேலை வேகமா ஆகும்னு ரிப்போர்ட் எழுதி வெச்சுட்டாரு! அதுக்கு நேர கெடுவும் வெச்சிட்டாரு! 2 ந ாள்! உடனே என் கம்பெனில பேசி, மெஷின் சப்ளையர்கிட்ட பேசி, பேரம் முடிச்சு, எல்லாம் மொபைல்லயே கோஆர்டினேட் பண்ணேன் சார். மெஷின் சப்ளையர், ப்ரேசில் பார்ட்டி, நான் எல்லாரும் ஒரு ஹோட்டல் லாபில பேப்பர்ஸ் ஸைன் பண்ண வைட் பண்றோம்; பைஃனல் ஓகே மட்டும் என் கம்பெனி ப்ரெசிடெண்ட் பண்றதுதான் பாக்கி.

அப்ப பார்த்து பாழாப் போன எனக்கு ‘நம்பர் ஒன் ‘ வந்திருச்சு! பாத் ரூம்ல ஒரு கைல ‘மொபைல் – செல் மணி ‘; இன்னொரு கைல ‘ஒன் ‘ மணி!

ரொம்ப வெவரமா, ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ரிங்கிங் டோன் வெச்சிருந்து என்ன ப்ரயோஜனம் ? பாஸ் கூப்ட நேரம் பார்த்து, வலது கை செல்லை காதுக்கு தூக்கி பதில் சொல்றதுக்கு பதிலா, (இடது கைப் பழக்கம் உள்ளவர்) இடது கையைத் தூக்கிட்டேன்! மூஞ்சியெல்லாம் ‘மூச்சா! ‘ பெல் அடிச்சுகிட்டேயிருக்கு! கண்ணெல்லாம் தண்ணி! மறுகைல இருக்கிற செல்ல உயர்த்தறப்போ, பதட்டத்துல, மொபைலை டாய்லெட்ல தவற விட்டுட்டேன்! ப்ளூ டூத் – ரொம்ப Hi-Fi மொபைல் வேறே! தண்ணுக்குள்ளேயிருந்தும் மணி அடுச்சிகிட்டேயிருந்துச்சு! கைய விடலாம்னு பார்த்தா, அது கரெக்டா, சக்ஷன் U பெண்ட்ல மாட்டிகிருச்சி! வெளிய வரல! கைய அசிங்கப்படுத்தினதுதான் மிச்சம்!! பாழாப் போன் செல் பழக்கம் ; எல்லா அட்ரஸ், போன் நம்பர், அதுலதான் ஸ்டோர் பண்ணி வெச்சேன்! வெளிய வந்து, பப்ளிக் பூத்லயிருந்து USக்கு போன் போட்டா, கனெக்ட் ஆகமாட்டேன்னுது! அவசரமா, லேப்டாப் திறந்து, நெட் கனெக்ட் பண்ணி, யாஹூ Chat ல தலைவரோட பேசிட்டேன். ப்ரேசில் வேல முடிஞ்சாலும், அங்க US ல தலைவர் என்ன நெனச்சாரோ தெரியல!

வார்னிங் மெயில் ஒண்ணு அனுப்பி, சம்பளத்துலயும் 10% வரும் மாசத்துலயிருந்து பிடிச்சு, அதோட போன் செலவுக்குன்னு தர தொகையையும் கட் பண்ணி, பட்டயம் எழுதிட்டாரு! எரியற அடுப்புல எண்ணைய விட்ட மாதிரி, எல்லா கஸ்டமர் நம்பர், சப்ளையர் நம்பர் எல்லாம், பாத் ரூம் ப்ளஷ் தண்ணியோட போயிருச்சு! அதெல்லாம் எப்படி திரும்ப சேக்கறதுன்னே தெரியல! ‘ பின்னர் மெதுவாக – ‘சார், மொபைல ‘மூச்சா ‘ போற இடத்துல விட்டேன்னு தெரிஞ்சா, எல்லாம் சிரிப்பாங்க! என் பொண்டாட்டிகிட்ட கூட, எவனோ பிக்பாக்கெட் அடிச்சுட்டான்னு சொல்லிட்டேன்! அவளுக்கு நிஜம் தெரிஞ்சா, கேலி பண்ணியே கொன்னுடுவா! ‘ என்றார், பரிதாபமாக! என்னத்தச் சொல்ல!

3. க்ளினிக்ல பார்த்தது – ஒரு ஆளு, ஒரு பக்கமா தலைய சாய்ச்சுகிட்டே வந்தாரு.

ரிஷப்ஷன் பெண்மணி : பேரு ?

சா.ம (ஹி,ஹி.. சாய்ந்த மனிதர்!) : ர்ர்ர்ரவி

ரிஷ: என்ன ?

சா.ம: ர்ர்ர்ரவி. (மேற்கொண்டு பேச முடியவில்லை! வாயில் ஜொள் வடிகிறது!) உடன் வந்த பெண் சொன்னார்: மொபைல்ல பேசி, பேசியே, இந்தாளு இப்படி ஆயிட்டாரு சார்!

நான்: என்னது மொபைல்னாலயா ? (முக்கை நுழைப்பது தப்புதான். என்ன செய்ய ? ஆர்வக் கோளாறு!)

பெண்: ‘ஆமா, சார், இந்த ஷேர் மார்கெட், மூசுவல் பஃண்ட், அது இதுன்னு திரிவாரு! எந்நேரமும் போன், இல்லைன்னா, இண்டெர்நெட்! கொஞ்சம் காசு பார்த்துட்டாரு! பிடிச்சுருச்சு சனியன்! வெளில எங்கயானும் கூப்டா, ‘இல்ல வரல ‘ ம்பாரு; நல்லது கெட்டது எதுனாலும் நாந்தான் போகணும். இவரு எந்நேரமும், காத சாய்ச்சுப் பேசிகிட்டேயிருப்பாரு! ஒரு நாள் என்னிக்கி இல்லாத அதிசயமா என்னையும் வெளில கூப்டாரு! சரின்னு வண்டில பின்னால உட்கார்ந்தேன்! கொஞ்ச தூரம் தான். ஒரு போஃன் வந்திச்சு! போச்சு! அப்படியே, வண்டிய ஓரம் கட்டி, நின்னு பேசுனாரு, பேசுனாரு, பேசிகிட்டேயிருந்தாரு! கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்! பின்ன மெதுவா நினைவுக்கு வந்து, ‘ என்ன ராஜி, லேட் ஆயிருச்சான்னாரு! ஹி, ஹி ‘ன்னரு! ‘எனக்கெப்படிங்க தெரியும், எங்க கூட்டிகிட்டு போறேன்னு ? ‘ லேட்டா, சீக்கிரமான்னு, நீங்கதான் சொல்லணும் ‘ னேன்.

கடிகாரத்தப் பார்த்தார் – ‘சரி,லேட் ஆயிருச்சு, வீட்டுக்கே போகலாம் ‘ கிறார்! ஏன் ? ‘ஷேர் மார்கெட், க்லோஸிங் டைம்! அப்படியே நெட்ல உட்கார்ந்தா கொஞ்சம் காசு பாத்துறலாம் ‘.

‘அன்னிக்கி முடிவு பண்ணேன்; இவரோட வெளியவே போக்கூடாதுன்னு! இது முத்திப்போயி, இப்படி நிக்கிறாரு! முதல்ல, கொஞ்சம் கழுத்து வலி, எதாச்சும் தேய்ச்சுவிடேன் ‘ ன்னாரு; அப்புறம், கொஞ்சம் ‘Stiff neck ‘ அதுவே சரி ஆயிரும்னாரு. அப்புறம், வாய் இழுத்துகிச்சு!

இப்ப, இப்படி, எல்லாரையும் கோணலாவே பார்க்கிற மாதிரி ஆக்கிட்டான் ஆண்டவன்! ‘

மெல்ல விசும்பி, அதுவே பெரிய அழுகையாய் வெடித்தது!

கேட்கவே பரிதாபமாக இருந்தது! அதைவிடப் பரிதாபம், அந்த ஆள் நிக்கிற போஸ்! சந்தேகமா ஏட்டைய்யா பார்க்கிற மாதிரி! ஒரு டிக்ரியா சாஞ்சு பார்த்துகிட்டிருக்கார்!

4. சமீபத்தில் மறைந்த அப்பாவின் மாதாந்திர திதி- புரோகிதருக்காக காலைல ஆபீஸில் 1 ஹவர் பர்மிஷன் போட்டு, ‘ தேவுடு ‘ காத்திக்கொண்டிருந்தோம்! மணி பதினொண்ணு ஆகியும் வரலை! இங்கே அண்ணனுக்கும், அவரைப் பார்த்து எனக்கும் டென்ஷன்! விடாத மழை வேற! 11.30 க்கு அய்யர் மெதுவாக வர்றார்! நாங்கள் வாயைத் திறப்பதற்குள், ‘ ‘ அது வந்துண்ணா, மழைல மொபைல் நனஞ்சுடுத்து! சார்ஜும் ஆக மாட்டேங்கற

‘d0! உங்க நம்பர் மட்டும் இல்ல, எல்லார் நம்பரும் இதுலதான் இருந்தது! எல்லாம் போச்சு! ‘ என்கிறார்!

போன ஆத்மாவின் வேல நல்லா நடக்கணும்னு, பொறுத்துகிட்டோம்; இதே ஆபீஸா இருந்தா, இப்படி சாக்கு சொல்ல முடியுமா ?

5. பையன் அப்பாகிட்ட: ‘யப்பா, பிறந்த நாளுக்கு இந்த சின்ன சின்ன கிஃப்ட் எல்லாம் வாங்கித் தந்து என்னை இன்சல்ட் செய்யாதீங்கப்பா! அட்லீஸ்ட் ஒரு நோக்கீயா 1100 மாடலாச்சும் வாங்கிக் குடுப்பா, அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்! ‘

பையன் ? காலேஜ்னு நெனச்சா, அது உங்க தப்பு. இப்பதான், ப்ரி-நர்சரியிலிருந்து, ஒண்ணாங்கிளாஸ் போறான்!

இப்படியே போச்சுன்னா, வருங்காலத்துல, வயிற்றுக்குள் குழந்தையை ஸ்கான் பண்ணிப் பார்க்கறப்ப, முதுகெலும்பும்போடு கழுத்தெழும்பு திரும்பும் இடம், ஒரு திரும்பு திரும்பி, ஒரு 20 டிக்ரி கோணலா உருவாயிருக்கும்! பரிணாம வளர்ச்சி!!

6. மற்றொரு கேஸ் அதைவிட ஆபத்தானது! புது மாப்பிள்ளை! கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கூப்பிடறான்னு, ஒரு கைல பைக் ஓட்டிகிட்டே, மறுகையால மொபைல் பேசியிருக்கார்! இருட்டில் கவனிக்காம, பின் லைட் ஆன் செய்யாம நின்ன லாரிமேல் மோதி, ‘V ‘பத்து!

இப்ப V ஷேப்ல பாண்டேஜ், தலைல காய்ச்சல் குறைய பத்து – ரெண்டும் போட்டு, அய்யா கல்யாணம் தள்ளிப் போயிருச்சு!

நல்ல வேளை அடி, ஆஸ்பத்திரியோட போச்சு! இத மாதிரி மொபைல் பேசிகிட்டே, ரெயில்வே லைன் க்ராஸ் பண்ண ரெண்டு இள வயது பொண்ணுங்க மேல போயி சேர்ந்த கதை பேப்பரில் படிச்ச அன்னிக்கி, வயத்துல சோறே இறங்கல!

சில மொபைல் பைத்தியங்கள்..

ரொம்ப முத்தின கேசுலேர்ந்து ஆ..ரம்பிப்போம்!

7) அட்வான்ஸ்டா, காதுல கடுக்கண் சைசுல, ஒரு பட்டனைச் சொருகிகிட்டு, தானா பேசிகிட்டே போவானுங்க! கேட்டால், ‘Hands free ‘ ம்பானுங்க! பாதி விபத்துக்கள், இந்த ‘Hands free ‘ கேசுங்களாலதான்!!

8) சில வசதியானவங்க, அதுலயே, பாட்டு, கேமரா, மெயில், எல்லாம் இருக்கிறமாதிரி வாங்குறாங்க! எனக்குப் புரியல! பாட்டு கேட்க, சிம்பிளா, சைனாக்காரன் விக்கிற 50/- ரூ FM ரேடியோ போதுமே ? கேமரால என்ன, பெரிய கலை ஓவியமா எடுக்கப் போறானுங்க ? எல்லாம் கலைஞ்ச ஓவியம்தான்! அதான், ஒரு டெல்லி ஸ்கூல் பையனும்,பொண்ணும் மாட்டிகிட்டாங்களே! ஸ்கூல் பேரே நாறிடிச்சு! மற்ற வகையராக்களை சொல்லவே வேண்டாம்; செல்போன்ல மெயில் படிக்க நெஜமாலுமே வசதிப்படுமா ? சந்தேகம்தான்! திருடு போனாலும், ரொம்ப விலையுள்ளதாலே, வயித்தெரிச்சல்தான், மிச்சம்!

9) சில இளவட்டங்கள், மெதுவா,எதோ பேசிகிட்டேயிருப்பாங்க. நடு நடுவே, நினைவு வந்து, நம்ம சொல்ற வேலையெல்லாஞ் செய்வாங்க! செல் பேசுற காலேஜ் பொண்ணுகிட்ட எதேனும் வேல சொல்லிப்பாருங்க ? தமாஷு!

பக்கத்து வீட்ல கொஞ்சம் சரியா கண் தெரியாத பெரியவர் – சாப்பிட உக்கார்ந்துட்டு பேத்திகிட்ட தெரியாத்தனமா மோர் ஊத்தச் சொன்னாரு. அவளும் பேச்சு சுவாரஸ்யத்துல, ஊத்துறா, ஊத்துறா ஊத்திகிட்டே இருக்கா! தட்டு நெறம்பி,மோர் கீழ ஓடிக்கிட்டிருக்கு! தாத்தாவுக்கோ கண் தெரியாதா, அவரும் தட்டுல கைய அளைஞ்சு, அளைஞ்சு, ரொம்பிப்போன மோருக்குள்ள சோத்துப் பருக்கைய தேடுறாரு! சந் தேகம் வந்து, ‘அம்மா, அம்மா, பவானி, ரொம்ப மோர் ஊத்திட்ட போல; போதும்மா ‘ ங்கறார். ஊஹும், பவானி கேட்டாதானே ? No more, more ன்னு தாத்தா சொல்லச் சொல்ல இங்கே மோர் ப்ரவாகமெடுத்து ஓடுது!!

10) கொஞ்சம் எகானமி ரேஞ்ச் கேசுங்களும் இருக்கு. பார்த்தீங்கன்னா, ரத்தக் கண்ணீர் எம்.ஆர். ராதா மாதிரி ஆகிப்போன கைகள், குனிந்த நன்நடைன்னு நடப்பாங்க! நாமதான் பார்த்து போகணும். இல்லன்னா நேரா நெட்டுக்குத்தா ( ‘Head-on Collision ‘) மோத வாய்ப்பிருக்கு! காரணம், வேறொண்ணுமில்லை! SMS ன்னு ஒண்ண இந்த மொபைல்காரங்க கண்டுபிடிச்சான் பாருங்க, பெரிய வேதனை! எப்பப் பாரு, அதக் குத்திகிட்டே இருப்பாங்க; பதில் வந்ததும், ‘குணா ‘ கமலஹாசன் ரேஞ்சுக்கு பரவசமாகி, உடன் பதில் போடுவாங்க! சிலர் இதுல ரொம்ப ‘கை ‘ தேர்ந்த பார்ட்டிங்க!

கீயக் குத்துற வேகம் பார்த்தீங்கன்னா சும்மா டைப்ரைட்டிங் ஹையர் தோத்துப்போற மாதிரி ஸ்பீடா அடிப்பாங்க! ‘கீ ‘க்கு வாய் இருந்தா, ‘கீ ‘, ‘கீ ‘ ன்னு கத்தும்! மொபைல் கம்பெனிக்காரங்க பல இளவட்டங்கள மடக்கிப்போடுறதே, இந்த இலவச SMS கொடுத்துதான்!

11) வயசான அம்மா தனியா வெளிய போயிருந்தாங்கன்னா, எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க, ஒரு மொபைல வாங்கிக் கொடுத்தோம். அட்லீஸ்ட் ஒரு பட்டனை அமுக்கி பதில் சொல்லறதுக்கு; என்ன ஆச்சுன்னா, ஆர்வக் கோளாறுல, அம்மா,சும்மா ‘பூந்து ‘ விளையாடிட்டாங்க! அப்பப்ப, பெரிய பதவியில் உள்ள மாமா, டார்கெட், பாலன்ஸ் ஷீட், அது, இதுன்னு மண்டை உடைச்சுக்கிற அக்கா, ஷேர் மார்கெட் எக்ஸ்சேஞ்சின் ப்ெ ரஸிடென்ட் மாப்பிள்ளை, எக்ஸ்போர்ட் டெட்லைன் தினம் தினம் கண்காணிக்க வேண்டிய அடியேன் போன்றோருக்கு, ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு அரை டஜன் வெத்து SMSகளும், Missed Calls ம் வந்து டார்ச்சர் செய்ததன் பலன் – அதிரடியான ‘சூடான ‘ பில்லும், அம்மா ஞான உபதேசம் செஞ்சதும் தான்!

‘போடா, இத்தன நாள் வெளிய போகலையா, வரலையா ? நாங்கள்லாம், வெறும் டெலிபோனே பார்க்காமலே இத்தன நாள் ஓட்டலையாக்கும் ‘ என்று சொல்லி, மொபைலை புறம் ஒதுக்கிட்டாங்க!

சரி, இத்தன சொல்றானே, இவன் மொபைல் வெச்சிருக்கானான்னு கேக்குறீங்களா ? என்ன பண்றது, என்னால முடிஞ்சவரை, ‘ஊரோட ஒத்து வாழறேன்! ‘ ஆனா, அதுல கம்பெனி வேல நிமித்தம், ஒரு சில SMS மற்றும் போன் போடமுடியாம, நம்ம கஸ்டமரோட, இல்ல சப்ளையரோட தலை கிட்ட பேச வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தான், இந்த பாழாப் போன மொபைல் போஃன கையில் எடுக்கறேன்! என்ன சரிதானே ? ஸாரி, நம்ம பார்ட்ஸ் சப்ளையர் ஒருத்தர்கிட்டயிருந்து ‘செல் ‘லுல கால் வருது! நம்ம அப்புறம் பேசலாம். மின்னூட்டம் தானே, எங்க போயிறப்போகுது ? கட்!

chandra_jgp@yahoo.co.uk

Series Navigation

சந்திரசேகர்

சந்திரசேகர்