நாணயமா ? நமக்கா ? – நான் சொல்வதெல்லாம் நம்பிடும் உடன்பிறப்பே பொங்கியெழு

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

கழகக்கண்மணி வெற்றுத் தமிழறிஞர் சொதப்பப்பனார்


எந்த ஒரு நூலையும் இப்படி ஒற்றைவரியில் குறுக்குவது என்பது அறிவார்ந்த நாணயமின்மையே. ஈ. வே. ரா தொடங்கிய திராவிட இயக்கம் கடந்த ஐம்பதுவருடங்களாக நூல்களை குறுக்குவது, திரிப்பது, வாசிக்காமல் வசைபாடுவது என்ற அளவிலேயே தன் இயக்கத்தை நடத்திவந்துள்ளது. தன் சார்பில் வலுவான ஒரு நூலைக்கூட உருவாக்க முடியாத மலட்டு இயக்கமாக அது ஆனமைக்குக் காரணமும் இதுவே. தனக்கு சற்றும் தெரியாத விஷயங்களை வசைபாட தனக்கு உரிமை இருப்பதாக எண்ணியவர் ஈ.வே.ரா. அவர் உருவாக்கிய அந்த மரபு இன்றுவரை தொடர்ந்து தமிழ்ச்சூழலில் ஆக்கபூர்வமான விவாதங்கள் ‘தலைமறைவாகவே ‘ நிகழ முடியும் என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.

ஜெயமோகன்

இவ்வாறு சொல்லிவிட்டது ஒரு மரமேறத்தெரியாத மந்திக்குரங்கு. வாலைப்பிடித்தாடிடும் வானரம். நடந்தோடிடும் நரிக்குணமுள்ள நம்மிடமே நாக்கூசாமல் நயவஞ்சகம் நயம்பிடவந்த நல்லபாம்பு. (எல்லா வார்த்தைகளும் ‘ந ‘ எழுத்தில் ஆரம்பிப்பதைக் கண்டு புல்லரித்து என் கவித்துவ மகிமையைப் புகழ் பாடு தம்பி.)

நாணயத்தைப் பற்றி நாக்கூசாமல் நம்மிடமே பேசுகின்றனர். நாம் அறிந்த நாணயம் எல்லாம் நாம் பண்ணும் நாணயம் என்று அறியாத இவர்கள் கேட்கிறார்கள் – நம் சார்பில் வலுவான ஒரு நூலைக்கூட உருவாக்க முடியவில்லையாம். என்ன துணிச்சல் ? இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாமா இவர்கள் ? பார்ப்பன அடிவருடிகள் கேட்கலாமா இதை ? கீதையின் போதையில் உளறுபவர்கள் கேட்கலாமா இதை ? மலையாளிகள் அன்று நடிகர்களாகி நம்மைக் கணக்குக் கேட்டார்கள். இன்று எழுத்தாளர்களாகி நம்மைக் கணக்குக் கேட்கிறார்கள்.

உலக தரத்தில் ஒப்பற்ற திரைக்காவியங்களைப் படைத்த அண்ணா ‘நல்ல தம்பி ‘யை அமெரிக்கப் படத்தை அடியொற்றிப் படைத்ததை அறிவார்களா இந்தஅசடர்கள் ?

கம்பனின் கவிதைகளைக் கழிவுக் கண்ணாடி கொண்டு பொறுக்கி எடுத்த அண்ணாவின் ‘கம்பரசம் ‘ அறியாத கபோதிகள் கேட்கிறார்கள் வலுவான நூலை நம்மால் தரமுடியாதா என்று ? வெள்ளிக்கிழமை அறியாத வீணர்கள் கேட்கிறார்கள் வலுவான நூலை நம்மால் தரமுடியாதா என்று ? ரோமானிய சாம்ராஜ்யத்தின் அந்தப்புரத்தின் அழகை அள்ளித் தெளித்த ‘ரோமாபுரி ராணிகள் ‘ படித்திராத அசடர்கள் நம்மைக் கேட்கிறார்கள் வலுவான நூலைத் தரமுடியாதா என்று ?

‘சுண்டலை வேண்டியதில்லை, வண்டலை நோண்டியிருக்கிறேன் ‘ என்ற கருத்துச் செறிவு நிறைந்த கவிதை நடையில் திரைக் காவியம் படைத்த நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள் வலுவான நூலை நம்மால் தர முடியாது என்று ? ‘தொல்காப்பியப் பூங்கா ‘வில் வீசிய காற்றை வைத்தே லட்சக்கணக்கில் நாணயம் பண்ணிய நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள் வலுவான நூலை நம்மால் தரமுடியாது என்று. சிவபெருமான் தலையில் இருக்கும் சந்திரனுக்கும் கங்கைக்கும் முறை தவறிய காதலை உருவாக்கி பெரும் சாதனை படைத்த கதைகளை உருவாக்கிய கலைஞர் என்று போற்றப்படும் என்னைப்பார்த்து கேட்கிறார்கள் கண்ணற்ற கபோதிகள். திருக்குறளுக்கு ஆயிரமாவது பொழிப்புரை எழுதி நாம் நாணயம் பண்ணியது தெரியாதா இவர்களுக்கு ?

இந்த சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் இலக்கியம் படைக்கிறேன் என்று நாணயத்தை இழந்திருக்கிறார்களே தவிர நாணயத்தை என்றேனும் கண்டதுண்டா ? இலக்கியம் பண்ணி நாணயம் பண்ணிக் கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து கேட்கலாமா இவர்கள் ?

**

பகவத் கீதை வழியில் போனால் திசை இல்லாத இடம் போய்ச் சேருவோம் என்று உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டது வானரம். நாம் நாற்திசையெங்கும் கொடிகட்டி எண் திசையெங்கும் முரசொலித்து பட்டி தொட்டியெல்லாம் கஞ்சித்தொட்டியாகும் வரை, விடமாட்டோம் தமிழை என்று அறியாத மூடம் காலைப்பிடித்து ஆடுகிறது.

தவழ்ந்தாடும் தத்தி நடக்கும் தணலை மிதிக்கும்! விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் நாம் நாணயம் பண்ணும் கொள்கையை மண்டியிட வைத்ததில்லை! நாணயத்துக்காக முன் வைத்த காலை பின் வைக்க நினைத்ததுமில்லை! கொள்கை இன்று ஒன்று; நாளை ஒன்று. நாணயம் எப்போதும் உண்டு. கொள்கை விற்ற காசு குரைக்குமா என்ன ? கொள்கை என்பது நாம் காலில் போடும் செருப்பு . வீசியெறியப் பயன்படலாம். ஆனால் நாணயம் என்பது நாம் அணியும் துண்டு. விடுவோமா இதனை ?

நானாவது இவ்வாறு கொள்கையை காத்திட, நம் வீரவரலாற்றைக் காத்திட இப்படி வசைக்கடிதங்களாவது எழுதுகிறேன். அம்மையார் தன்னையும் திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாகக் கூறிக்கொள்கிறார். இப்படி வசைக்கடிதமாவது எழுதியதுண்டா ? நான் இவ்வாறெல்லாம் சாதனைகள் பல புரிந்துகொண்டிருக்கும்போது வீராணம் தண்ணீர் கொண்டுவந்ததும், வீரப்பனை அழித்ததுமே தன் சாதனை என்று இயம்பி தனக்கும் திராவிட இயக்கத்துக்கும் காத தூரம் என்பதை ஊரறிய உரைத்திடுகின்றார். அறிவார்ந்தோர் உண்மையை உணர்ந்திடுவர்.

***

இதோ உன் விருப்பத்தினை நிறைவேற்றிட என்னைப் பாராட்டி நானே எழுதிய கவிதை

வேட்டியை அவிழ்த்துவிட வெறுங்கை வீசுவோர்

(சொதப்பப்பா இட்ட தலைப்பு)

தேரோடும் திருக்குவளை வீதியிலே

தெருவோரப் புழுதியிலே

விளைந்த செடி வீரமிக்க இளையசெடி

புழுதியிலே முளைத்ததனால்

புதையுண்டு போகுமெனப்

புல்லர்கள் நினைத்ததுண்டு

எதையுண்டும் வாழ்வதற்கு

சில பேர் இருக்கின்றார் நாட்டினிலே

கதையேனும் உண்டா

நித்தநித்தம் நெருப்பையுண்டு

வாழ்ந்தவர் நாம் எனும்

வரலாறு கொண்டோம்

(மேற்கண்டது கலைஞரின் உண்மையான கவிதை)

சொதப்பப்பாவின் பிற்சேர்க்கை இது :

நெருப்பு மட்டுமல்ல

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

அனைத்தையும் உண்டு அழித்தும் விட்டோம்.

ஏப்பம் விடும்போது கேட்கும் ஒலியை வைத்து

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

நம்மிடம் உண்டென்று நம்பிடுவார்

விளங்காதவர்.

(பொழிப்புரை: ‘கொண்டோம் ‘ என்பது ‘கொண்டேன் ‘ என்று என்னைத்தான் குறிக்கிறது)

**

வாழ்க அண்ணா நாமம். வாழ்க அண்ணா பெயரில் நான் தொடர்ந்து என் உடன் பிறப்புக்கு போடும் நாமம்

**

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா