அமெரிக்காவில் அல்பங்கள் ஆயிரம்…

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

தஞ்சாவூரான்


காட்சி 1:

====

நண்பரின் மகனுக்குப் பிறந்த நாள். ஒரு வாரம் முன்பே நண்பர் தொலைபேசியில் அழைத்து கண்டிப்பாக வரச்சொல்லியிருந்தார். ஒரு சனிக்கிழமை மாலையில் அவர் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார். பலவகையான இந்திய உணவு வகைகள், இனிிப்புகள், குழந்தைகளின் கும்மாளம்என்று ஒரே கலகலப்பாக இருந்தது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அங்கு ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்த சஞ்சனாதான்! அனைவரையும் கவனிப்பதும், உணவு வகைகளை ஒழுங்கு செய்வதும் என்று அங்கும் இங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தாள். இவள், நண்பரின் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் அவருடைய இன்னொரு நண்பரின் மனைவி.

யாரோ ஒருவர் கேக்கைப் பார்த்துவிட்டு, கேக்கில் நண்பரின் மகன் பெயர் கிரீமில் எழுதி இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும் என்று யோசனை சொன்னார்! உடனே சஞ்சனா, ‘ஒரு நிமிடத்தில் வருகிறேன் ‘ என்று கூறிவிட்டு வெளியில் சென்றாள். அவர்கள் வீடும் அதே தளத்தில்தான் இருந்தது. சிறிது நேரத்தில் திரும்பி வந்த சஞ்சனாவின் கையில் இருந்தது ஒரு பிளாஸ்டிக் பை! உள்ளே வெண்ணிறத்தில் ஏதோ ஒன்று. அவசர அவசர அவசரமாக கேக் இருக்கும் இடத்திற்கு சென்ற சஞ்சனா, பையைப் பிரித்து உள்ளே இருந்ததை எடுத்து கேக்கின்மேல் பரப்பி பெயர் மற்றும் பூ வேலைப்பாடுகளை பரபரவென்று செய்ய ஆரம்பித்துவிட்டார்!

நல்ல விஷயம்தானே, குறிப்பறிந்து தக்க சமயத்தில் செய்துவிட்டாரே என்று நினைக்கிறீர்களா ? கையில் எடுத்து வந்தது என்னவென்று சஞ்சனாவிடம் பிறகு கேட்டபோது: ‘நல்லவேளை! போனவாரம் இன்னொரு நண்பரின் மகளுக்குப் பிறந்தநாள். கேக்கில் இருந்த கிரீமை யாரும் சாப்பிடவில்லை. பத்திரமாக வைத்திருந்தேன். இப்போது உதவியது! ‘

காட்சி 2:

====

ஆனந்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை! மனைவியின் H4 விசாவிற்காக அவனுடைய பாஸ்போர்ட் முழுவதையும் நகல் எடுத்து இந்தியாவிற்கு அனுப்பவேண்டும். திருமணம் முடிந்து உடனே இங்கு வந்தாகிவிட்டது. இதோ இரண்டு வருடங்களும் ஆகிவிட்டன. மனைவியை அழைக்க மும்முரமாக வேண்டிய ஆவணங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இந்த பாஸ்போர்ட் நகல் எடுப்பதுதான் இப்போது பெரிய வேலை. அலுவலகத்தில் எடுக்கலாம். ஆனால் நிறைய எடுக்கவேண்டுமே என்று குழம்பிக்கொண்டிருந்தான்.

அப்போது தொலைபேசி ஒலித்தது. பேசியது கோட்டி. ஆறு வருடங்களாக இங்கு இருக்கிறான். நல விசாரிப்புகள் முடிந்து நகல் விஷயத்தைக் கோட்டியிடம் சொன்னான். உடனே கோட்டி சொன்ன ஒரு யோசனை ரொம்பவும் நல்லதாகப் பட்டது. உடனே உடை மாற்றிக்கொண்டு கிளம்பி அவன் சென்ற இடம் வால்மார்ட் எனும் அமெரிக்காவின் மலிவு விலைகடை ஒன்று. மின்சாதன பகுதிக்குச் சென்று ஒரு 3-in-1 (print/scan/copy) வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான். அடுத்த இரண்டு மணி நேரத்தில் எல்லா நகல் எடுக்கும் வேலையையும் முடித்துக் கொண்டான். மாலையில் திரும்பவும் வால்மார்ட் சென்று பொருட்களைத் திருப்பிக் கொடுக்கும் (return) வரிசையில் நின்றான். அவன் கையில் காலையில் வாங்கிய 3-in-1!

கோட்டி சொன்ன யோசனை: ‘வால்மார்ட் சென்று 3-in-1 வாங்கு, வேலை முடிந்ததும் ரிடர்ன் செய்துவிடு. வால்மார்ட்டில் வாங்கிய பொருட்களை திருப்பினால், கேள்வி எதுவும் கேட்க மாட்டார்கள் ‘

காட்சி 3:

====

சுமதியும் கண்ணனும் ஒரு மூன்றெழுத்து இந்திய கணிணி நிறுவனத்தின் மூலம் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். இருவருக்கும் வெவ்வேறு இடத்தில் வேலை. சமீபத்தில்தான் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது கண்ணனின் தாயார் இங்கு இருந்தார்கள். ஆறுமாத விசா முடிந்ததும் அவர்கள் இந்தியா சென்றுவிட்டார்கள். இருவருக்கும் வேலையை விடவும் மனதில்லை. குழந்தையை day care எனப்படும் குழந்தைக் காப்பகத்தில் விடவும் மனதில்லை. காரணம், வைட்டமின் ‘ப ‘. உடனே கணக்குகள் அனைத்தையும் போட்டுவிட்டு, சுமதியின் பெற்றோரை அழைக்க முடிவு செய்தனர். பெற்றோரும், மகள் மருமகன் பாசமாக அழைக்கிறார்கள் என்று சொந்த செலவில் விசா, விமான சீட்டு எடுத்துக் கொண்டு அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்கும் ஆவலோடும், கனவுகளோடும் வந்து சேர்ந்தனர்.

வந்து சேர்ந்த ஒரு வாரம் பயணக்களைப்பு காரணமாக வெளியில் எங்கும் செல்லவில்லை. அடுத்த வாரம்அவர்கள் சுற்றிப் பார்த்த இடம் பக்கத்தில் உள்ள ஒரு shopping mall! அதற்கு அடுத்த வாரம் ஒரு பூங்கா (அமெரிக்காவில் தடுக்கி விழுந்தால் பூங்காக்கள் பார்க்கலாம், அனைத்து மாநிலங்களிலும்!). அதற்கப்புறம் வெளியில் செல்வதற்கான அறிகுறியே காணவில்லை. சுமதியின் அம்மா குழந்தையை முழுநேரமும் பார்த்துக் கொள்வார். அப்பாவிற்கோ போர் என்றால் அப்படி ஒரு போர் அடித்தது. மகனோ மருமகனோ

ஊர் சுற்றிப்பார்க்கும் வழக்கம் இல்லாதவர்களின் பெற்றோர்களோ, மாமனார் மாமியார்களோ இங்கு வந்தால் கதை கந்தல்தான்!

பக்கத்து குடியிருப்பில் சில தமிழ் குடும்பங்களில் தமிழ் சேனல் இருந்ததால், அப்பாவிற்கு அங்கு சென்று பொழுது போக்க சில நேரம் வசதியாயிருந்தது. அப்படி சில நண்பர்கள் அப்பாவிற்கு கிடைத்தார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், சுமதிக்கோ கண்ணனுக்கோ பக்கத்தில் யார் குடியிருக்கிறார்கள் என்ற விவரமே தெரியாது. தெரிந்து கொள்ளவும் இப்போது privacy விரும்பும் IT இளைஞர்கள் பெரும்பாலனோர்கள் போல் விருப்பமும் இல்லை.

சில மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் ஒரு நண்பர் வீட்டிற்கு சென்ற அப்பா, ஒரு போன் இந்தியாவிற்கு செய்து கொள்வதாக கூறினார்அமெரிக்காவில் வாழும் பெரும்பாலானவர்கள் அதிகமாக செலவு செய்வதாக கருதிக் கொள்ளும் ஒரு செலவினம், இந்தியாவிற்கு போன் செய்வதுதான். நண்பரும், இந்த உதவி கோரிக்கையை திடாரென்று எதிர்கொண்டதால் சரி செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். அப்பா அன்று இந்தியாவிற்கு செய்த போன் கால்களின் எண்ணிக்கை 5!!

பிறகுதான் தெரிந்தது, சுமதியோ கண்ணனோ அவருக்குப் போன் செய்ய calling card வாங்கித் தருவதில்லையென்று!! அப்படி அதிசயமாக வாங்கிக் கொடுத்தாலும், ஒரு 5 டாலர் கார்டுதான். அது ஒரு 30 நிமிடம் பேசலாம். தவிரவும், இருவரையும் ஒரு ‘photo point ‘ (இந்தியர்களின் வழக்கமான சுற்றிப்பார்க்கும், புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இடங்கள்) கூட அழைத்து செல்லவில்லை. அமெரிக்கா வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் செல்ல விரும்பும் இடம், நயாகரா நீர்வீழ்ச்சி. அதற்கு கூட ஏதோதோ காரணம் சொல்லிவிட்டு அவர்களை அழைத்து செல்லவில்லை. அப்பாவின் நண்பர் புண்ணியத்தில் ஒரு இடம் சென்று நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார் அதுவும், கட்டாயம் புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு!! அந்த புகைப்படங்களோடு ஆறு மாதம் கழித்து அப்பாவும் அம்மாவும் ஊர் சென்றுவிட்டது தனிக்கதை!

சுமதியும், கண்ணனும் குழந்தையை day care center அனுப்பாமல் மிச்சம் பிடித்த பணம் சில பல ஆயிரங்கள்!!

மேற்கூறியவை ஒரு சிறிய உதாரணங்கள்தான். இன்னும் நிறைய இருக்கின்றன. என்ன ஆயிற்று இந்திய IT வல்லுனர்களுக்கு ? கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள், அதில் ஒரு சிறு பங்கேனும் நிம்மதியாக ஊர்சுற்ற செலவு செய்யலாமே ? நான் ஒன்றும் ஊதாரித்தனமாக இருக்க சொல்லவில்லை. சிக்கனம் செய்வதற்கும் கஞ்சத்தனத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது பணம்தான் பிரதானம் என்று இபோதுள்ள தலைமுறையினர் நினைக்கிறார்களா ? தாய் தந்தை உறவு என்பது எல்லாம் மறக்கப்பட்ட

ஒன்றாகிவிட்டதா ? கை நிறைய சம்பளம் வாங்கும் இவர்கள் ஏன் சில சமயம் அல்லது பல சமயங்களில் சீப்பாக நடந்துகொள்கிறார்கள் ?

இதை நான் யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கோடு எழுதவில்லை. மனதில் உள்ள ஆதங்கத்தைதான் வெளிப்படுத்தியுள்ளேன். பணம் சேர்ப்பது அவசியம்தான், அதற்காக அல்பமாக இருப்பதுவும் அவசியமா ? ?

அன்புடன்,

தஞ்சாவூரான்.

thanjai_raja2004@yahoo.com

Series Navigation

தஞ்சாவூரான்

தஞ்சாவூரான்