ஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

சித்ரா ரமேஷ்


ரயிலில் இரண்டு நாள் தொடர்ச்சியாகப் பயணம் செய்திருக்கிறீர்களா ? ஏறியவுடன் பரபரப்பாக இருக்கும். சாமான்களை அடுக்கி, ஜன்னலோர சீட் கிடைத்தால் மகிழ்ந்து, பக்கத்துச் சீட்காரர் நம் மனதுக்குப் பிடித்துப் போய் பேசி அரட்டை அடித்து, வருவதையெல்லாம் வாங்கித் தின்று கொண்டு ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கும். மறுநாள் கரி படிந்து அழுக்காக அலுத்துப் போய் எப்போதடா இறங்குவோம் என்றாகி விடும். மீண்டும் நாம் இறங்க வேண்டிய ஸ்டேஷனை நெருங்க நெருங்க இந்தப் பயணம் முடியப் போகிறதே,மீண்டும் நம் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமே என்ற வெறுமையும், அப்பாடா வீட்டுக்குப் போய்விடலாம் என்ற நிம்மதியும் சேர்ந்து ஒரு குழப்பமான மனநிலை வந்து விடும். பள்ளியில் கடைசி வருடம். எப்போது இந்த ஸ்கூலை விட்டுப் போவோம் என்று தோன்றும். பள்ளியை விட்டு வெளியேறிவிட்டால் மீண்டும் திரும்ப முடியாது. இந்தப் பருவமும் இந்த நண்பர்களும் திரும்ப கிடைக்காது என்ற துக்கமும் இருக்கும். கடைசி வருடம் எங்கள் சயின்ஸ் டாச்சர் இன்னும் பெரிய பெண்களாகி விட்டதால் எங்களைக் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு தனக்கு அதிகமாகி விட்டது போல் கெடுபிடிகளை அதிகப் படுத்தினாள்.

தான் வகுப்பில் இல்லாவிட்டாலும் என்ன நடக்கிறது என்பதை அறிய இரண்டு பேரை குளோஸ்டு சர்குயூட் காமரா போல நியமித்திருந்தாள்.

இந்த ரகசியம் தெரியாமல் அந்த ஒற்றர்களையும் வைத்துக் கொண்டே

‘அப்ஸரா ‘ என்ற சுஜாதா கதையை விலாவாரியாக சொல்லிக் கொண்டிருந்தேன். ‘அ ‘ ‘ப் ‘ இருவரின் கொலையையும் சொல்லி முடித்து ‘ஸ ‘ கொலையைச் சொல்லும் போது டாச்சர் புயலென உள்ளே நுழைந்து

கதைக் கேட்ட யாருக்கும் எந்த விதப் பாதிப்பும் இல்லை. போர்க்களம்தான்! அந்த ஒற்றர்கள் கூட வாயைப் பிளந்து கொண்டு முக்கால்வாசிக் கதையைக் கேட்டுவிட்டுதான் வத்தி வைக்கப் போயிருக்கிறார்கள். அந்த டாச்சர் வகுப்பு அது. அந்த டாச்சர் ஏன் கிளாஸுக்கு வரவில்லை எனப்தைப் பற்றியெல்லாம் யாரும் யோசிக்கக் கூடாதுதான். ஏற்கெனவே வகுப்பில் நுழையும் போதெல்லாம் தெருவைப் பார்த்து அமைந்திருந்த ஜன்னலை மூடச் சொல்வார்கள். ஜன்னல் வழியாக நாங்கள் யாரையாவது பார்த்து மயங்கி விடுவோமாம். மனதை படிப்பில் செலுத்த முடியாதாம் என்று என்னவோ காரணங்கள். சுறுசுறுப்பாக இயங்கும் காலை, மாலை வேளைகளிலேயே மொத்தம் பத்து பேர்தான் தெருவில் நடந்து கொண்டிருப்பார்கள். இதில் காலை பதினோரு, பன்னண்டு மணி வெய்யிலில் ஈ, காக்கா இருக்காதத் தெருவில் எந்த கந்தர்வனைப் பார்த்து நாங்கள் மயங்கப் போகிறோமோ ? எதற்கும் கேள்விகள் கேட்காமல் கீழ்ப்படிந்து நடந்தால்தானே பெண்கள் பெருமையடைவார்கள் ? ஜன்னலுக்கு அருகே உட்கார்ந்திருந்த எனக்குத்தான் இதனால் தலைவலி! இவர்கள் வகுப்பில் சாத்தப்படும் ஜன்னல் மற்றவர்கள் வகுப்பில் திறக்கப் பட்டுவிடும். நான்தான் இந்த வம்பு செய்வதாக ஒரு சந்தேகம்! தமிழாசிரியை வகுப்புக்கு வந்ததும் ஜன்னைலை எதற்கு மூட வேண்டும் காற்றும் வெளிச்சமும் வர வேண்டாமா என்று சொல்லி திறக்கச் சொல்வார்கள்.இதனால் ஏற்கனவே என் மீது அதிருப்தி ஏற்பட்டு ‘அப்ஸரா ‘ விஷயத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டதில்

ஓநாய், ஆடு கதை போல சமீபத்தியத் தவறுகளை பட்டியலிட்டு என் அம்மாவிடம் சொல்லப் போவதாக சொன்னதும் தப்பித்து விட்டோம் என்று

புரிந்து விட்டது. “ ‘ ஸ்ரீகாந்த் பற்றி நீ எழுதினியாமே. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தியாமே”, என்று சம்பந்தமில்லாமல் இவர்கள் வகுப்பில் நடக்காத விஷயத்தைப் பெரிது படுத்த அம்மாவிடம் சொல்லிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். என் அம்மா நடிகர் ‘ஸ்ரீகாந்த் ‘ பற்றி எழுதினாலும் ஒன்றும் சொல்லமாட்டாள் என்ற தைரியம்தான்!

அதென்ன ‘ஸ்ரீகாந்த் ‘ பற்றி கட்டுரை ? அப்போ கிரிக்கெட் வீரர் ‘ஸ்ரீகாந்த் ‘ டாமில் நுழையவே இல்லை. நடிகர் ‘ஸ்ரீகாந்த்தும் ‘ கிடையாது. வங்காள எழுத்தாளர் சரத்சந்தர சட்டர்ஜி எழுதிய ‘ஸ்ரீகாந்த் ‘ என்ற நாவலைப் பற்றியது. ஒரு அருமையான மொழிபெயர்ப்புக் கதை. சரத் சந்திரர்

எழுதிய நாவல்கள் அனைத்துமே பிரமாதமாக இருக்கும். ‘தேவதாஸ் ‘

இவர் எழுதிய நாவல்தான். இவருடைய நிறைய கதைகள் திரைப் படமாகக் கூட வந்திருக்கிறது. வங்காள மக்களுக்கும் கேரள மக்களுக்கும் இருக்கும் இலக்கிய ரசனை இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தினருக்கும் கிடையாதுதான். பிபூதிபூஷன்பானெர்ஜீ எழுதிய ‘பதேர்

பாஞ்சாலி ‘ உலகத் திரைபடவரிசையில் பேசப்படும் அருமையான நாவல்.

இதெல்லாம் பற்றி காற்றும், வெளிச்சமும் தர மறுக்கும் அந்த டாச்சருக்கு எப்படிப் புரியும் ? மேலும் ஒரு கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்ட கட்டுரை!இதை ஏதோ அரைகுறையாகப் பார்த்து விட்டு ஒற்றர்கள் கொடுத்தத் தகவலை நம்பி குற்றசாட்டு! இத்தனைக்கும் அம்மாவுக்கு நெருங்கிய ஃபிரெண்ட் மாதிரித்தான். நட்பு வேறு கொள்கை வேறு என்பதில் தெளிவாக இருந்த ஆசிரியை என்னை கண்டித்துத் திருத்த வேண்டிய கடமை இன்னும் அதிகமாக கட்டுப்பாடுகள் அதிகமாக்கப் பட்டு விட்டன. அம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்ல “பரவாயில்லை உங்க ஸ்கூலில் பெண் குழந்தைகளை படிங்கடின்னு மிரட்டினால் உக்காந்து படிக்கறாங்களே! எங்க ஸ்கூல் பசங்கக் கிட்ட இத மாதிரி கிளாஸுக்குப் போகாம படிங்கன்னு சொல்லியனுப்பினால் மறு நிமிஷம் கிளாஸில் ஒரு பையன் இருக்க மாட்டான். எல்லோரும் கிரெளண்டுக்கு ஓடிப் போயிருப்பாங்க” என்று நைசா அந்த டாச்சர் கிளாஸுக்கு வராமல் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பாடம் எடுப்பதைப் பற்றிப் பேசி சமாளித்து விட்டாள்.

அந்த ஒற்றன் யார் என்பதைக் கண்டு பிடித்து ‘என்ன இந்த வருடத்து ‘பெஸ்ட் ஸ்டுடண்ட் அவார்ட் ‘ உனக்குத்தானா ? ‘ என்று அப்பாவியாக எங்க குழுவினர் விசாரித்து இவள் மூலமாக அந்த டாச்சர் காதில் போய் விழட்டுமே என்ற அலட்சியத்தோடுதான் செய்தோம். எல்லோரும் படித்து உருப்படற வழியை பார்ப்போம் என்று அக்கப் போரையெல்லாம் தவிர்த்து விட்டோம். ஆனால் வலுவில் வந்தால் ? ஒரே இனிஷியல், ஒரே பெயர், ஒரே வகுப்பு எல்லாம் ஒன்றாக இருந்ததால் யாரோ ஒரு ஆசைக் காதலன் எழுதிய கடித்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை! யாருக்காக எழுதப்பட்டது என்பதைப் பற்றி விசாரணைக் கமிஷன்!பத்தாம் வகுப்பு படிக்கும் போது பாம்பேயிலிருந்து ஒரு பெண் வந்து சேர்ந்தாள்! எதுக்குப்பா இப்படி கஷ்டப்பட்டு படிக்கிறீங்க ? பாம்பேல ஜாலியா இருக்கலாம். பாக்க நல்லாயிருந்தா படிக்கவே வேண்டாம். ஏதாவது வேலைக்குப் போகலாம்” என்று லோ கட் பிளவுஸ், எப்போது குட்மார்னிங் சொல்ல வைக்கும் தாவணி இப்படி டிரஸ் செய்து கொண்டு “ஆத்தா நான் பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன் என்று மயில் கணக்காய் இருப்பவர்களுக்கு பல தத்துவங்கள் சொல்லி ஏற்கனவே புஷ்பா தங்கதுரை கதையெல்லாம் படித்து பம்பாய் ஒரு பயங்கர நகரம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கலாச்சார அதிர்ச்சியைக் கொடுத்தாள். கடிதம் யாருக்கு வரும் ? ரொம்ப நியாயமாக நடந்து கொள்கிறார்களாம். என்னையும் அவளையும் கூப்பிட்டு விசாரித்தார்கள். ‘போன வாரம் புதன் கிழமை சாயங்காலம் நீஎங்கே போயிருந்தே” என்று கேட்டதும் அங்கேயிருந்த என் மேத்ஸ் டாச்சரிடம் “உங்க வீட்டலதானே டுயூஷன் படிச்சுக்கிட்டு இருந்தேன்” என்று நம்பகத் தகுந்த ஆதாரத்தோடு சொன்னதும் சந்தேகப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விட்டேன். அவளும் எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சாதித்து விட்டாள்.

அப்படி ஒரு முகராசி சிலருக்கு! நான் பாட்டுக்கு தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாலும் என்ன பண்ணுகிறாய் என்று விசாரிப்பார்கள். டெஸ்க் அடியில் உட்கார்ந்து இட்லி சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை கண்டுக்கவேமாட்டாங்க! இட்லி வைத்திருக்கும் டிஃபன் பாக்ஸைத் திறந்ததும் நல்லெண்ணெயும் மிளகாய்ப் பொடியும் சேர்ந்து கும்மென்று வாசனை வரும். அது கூடவாத் தெரியாது! நாமதான் பெரிய கம்யூனிஸ்ட்ன்னு நினைப்பாச்சே!காம்ரேட்ஸைக் காட்டிக் கொடுக்க மாட்டோமே! ஹெட்மிஸ்ட்ரஸ் ரூமை விட்டு வெளியில் வரும்போது இருவரும் திக் ஃபிரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். “லெட்டர் எழுதறவங்கக்கிட்ட வீட்டு அட்ரஸ் கொடுக்க வேண்டியதுதானே!” என்று யதார்த்தமாக கேட்க “ ஆமா! யாரு அட்ரஸ் எல்லாம் கொடுத்தா ?சும்மாப் பேசும் போது பேர், கிளாஸ் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு லெட்டர் எழுதிட்டான்!”, அடிப்பாவி சும்மா பேசினாலே காதல் வந்து விடுமா ?

“சேச்சே! அதெல்லாம் இல்லெப்பா! சும்மா ஒரு பாய்பிரெண்டுன்னு சொல்லிக்க இருக்கட்டுமேன்னுதான்!”, என்று அவள் சொன்னதும்

வாழ்க்கையில் என்னவெல்லாம் தேவைப்படுகிறது என்பது புரிந்தது.

பரவாயில்லை உலகம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.

மற்றப் பெண்கள் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி “அந்த லெட்டரில் என்ன எழுதியிருந்தது ?”, என்பதுதான். ஏறக்குறைய என்ன எழுதப் பட்டிருக்கலாம் என்பது தெரிந்த பெண்ணிடமே கேட்கச் சொன்னேன். “யாருக்குத் தெரியும் ? எதோ போன புதன் கிழமை மீட் பண்ணியதைப் பற்றி எழுதியிருப்பான். இந்த புதன் கிழமையும் மீட் பண்ணலாமா என்று எழுதியிருப்பான்”, என்று எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு பிறகுதான் சொன்னாள். அசப்பில் சந்திரபாபு போல் இருந்த அந்தப் பையனைப் பார்த்த பிறகு அதற்கு மேல் அதில் எந்தப் பரபரப்பும் இல்லை.

சிரிப்புத்தான் வந்தது. அப்பொ நிறைய பசங்க காமெடியன் போலத்தான் இருப்பாங்க! பருவ வயதில் பெண்கள் அழகாக இருப்பதைப் போல் ஆண்பிள்ளைகள் தமாஷாக இருப்பார்கள். இதில் ஒரு அசட்டு மூஞ்சியை வேறு காட்டிக் கொண்டு காதல் பார்வைப் பார்த்தால் செம காமெடியாகத்தான் இருக்கும்.

ஆமா இந்த ஸ்கூலை விட்டு போவதற்கு என்ன கஷ்டம்! என்று ஆயிரம் முறை சொல்லி கொண்டாலும், நாம் எல்லோரும் அடிக்கடி மீட்

பண்ணிக்கலாம். லெட்டர் எழுதிக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தாலும் மீண்டும் அதே வகுப்புத் தோழியரோடு அதே அமைப்பில் இணைய முடியாது என்பதை உணராமல் இல்லை. ஸ்டடி ஹாலிடேஸுக்கு முதல் நாள்தான் கடைசியாக நம் வகுப்பில் இருக்கப் போகிறோம் என்பதை

அறியாமலேயேப் பிரிந்தோம். கடைசி நாள் பரீட்சையன்று பார்த்த சிலரைப் அப்புறம் பார்க்கவேயில்லை. பப்ளிக் எக்ஸாம் எழுதுகிற அன்று பெரியப் பொறுப்பு! முதல் டெஸ்க்கில் உட்கார்ந்திருந்ததனால் கேள்வித்தாள் கையில் வந்ததும் ஒரு பார்வைப் பார்த்து விட்டு எல்லாம் ரொம்ப ஈஸியாகத்தான் இருக்கு எனபதைப் போல் பின்னால் திரும்பிப் பார்த்துச் சிரிக்க வேண்டும்! பிறகுதான் எல்லோரும் அவர்கள் கேள்வித்தாளைப் பார்ப்பார்கள். பெண்களுக்கு இந்த மாதிரி சென்ட்டிமெண்ட்டெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். ஓம் முருகா,ஸ்ரீராமஜெயம் சிலுவை, பிறைநிலா786 எழுதுவது என்று எம்மதத்துப் பெண்களுக்கும் இந்த மாதிரி எக்கச்சக்க நம்பிக்கைகள். பரீட்சைத் தொடங்குவதற்கு முன்னால் இந்த மாதிரி டென்ஷன் பார்ட்டி பக்கத்தில் நின்று விட்டால் நமக்கு மாரடைப்பே வந்து விடும். இதெல்லாம் நீ படிக்கலையாப்பா! இதுதான் ரொம்ப முக்கியம்ன்னு அவங்க ஸ்கூல்ல சொன்னாங்களாம்” என்று கையையும் காலையும் உதைத்துக் கொண்டு குட்டிப் போட்ட பூனை மாதிரி குறுக்கும் நெடுக்கும் நடந்து நகத்தைக் கடித்து விரலை ரத்தக் களறியாக்கிக் கொண்டு செமையாகப் படுத்துவார்கள். இத்தனி நாள் படிக்காதது எதுவும் புதுசா வராதுடி! இனிமே எதையும் புதுசா படிச்சு எழுதப் போவதில்லை என்று சொன்னாலும் கேட்காமல் கண்ணீருடன் தான் பரீட்சை ஹாலில் நுழைவார்கள். இதற்காக அவசரம் அவசரமாக குவெஸ்டின் பேப்பரை ஒரு பார்வைப் பார்த்து விட்டு எல்லோரையும் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிந்தி விட்டு எழுதத் தொடங்க வேண்டும். அப்படியெல்லாம் ஒன்றும் கஷ்டமாக இல்லை ஜாலியாகத்தான் எழுதினோம். வகுப்பில் இருப்பதிலேயே வசதியான பெண் ஒருத்தி எங்க ஊரை விட்டுத் தள்ளியிருக்கிற தியேட்டருக்கு, அவர்களோட தியேட்டர் என்று சினிமா பார்ப்பதற்கு கூட்டிக் கொண்டுப் போனாள். வெஜிடபிள் பிரியாணி, வெங்காயத் தயிர்ப்பச்சடி என்ற ஒரு அபூர்வ சாப்பாட்டை வாழ்க்கையில் முதன் முதலாக சாப்பிட்டேன். “இவ்விடம் பிரியாணி அரிசி கிடைக்கும்” மளிகைக் கடையில் என்று எழுதப்பட்டிருக்கும் போர்டைப் பார்த்தாலே

அந்த அரிசியிலேயே மட்டன், சிக்கன் எல்லாம் கலந்திருக்கும் என்று

சமையல் விஷயத்தில் நிறைந்த பொது அறிவு பெற்று கற்பனை செய்திருந்தவள்! ஏதோ எங்க வீட்டில் செய்யும் வத்தக் குழம்பு, சாம்பார், பொரிச்சக் கூட்டு, பருப்பு உசிலி சமாச்சாரங்களைத்தான் உலகமெங்கிலும் சாப்பிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்ததால் வந்த கற்பனை! ஹோட்டலுக்குப் போனாலும் மசால் தோசை மட்டுமே சாப்பிடுவோம். அது கூட வருடம் ஒரு முறைதான்! அப்ப ஹோட்டலில் கூட இந்த மாதிரி ஐட்டமெல்லாம் கிடைக்காது. அவர்கள் வீட்டில் இந்த விருந்தைச் சாப்பிட்டு விட்டு என்ன படத்திற்குப் போனோம் தெரியுமா ? ““இதயக்கனி”! அவங்க தியேட்டரில் ஓடற படத்துக்குத்தானே போக முடியும் ? நான் “இது வேண்டாம். தலையிலே தொப்பி வைத்துக் கொண்டு காவேரியை வாழ்த்திப் பாடுகிறார் என்று நம்பிப் போகவேண்டாம்” என்று லேசாகச் சொல்லிப் பார்த்தேன். விதி யாரை விட்டது ? இதுக்குப் பதிலா

‘மன்மத லீலை” பார்க்கலாம். அது ‘ஏ ‘ படம் நம்மையெல்லாம் விட மாட்டார்கள் என்று இதில் போய் உட்கார்ந்தால்.. பாவம் வாழ்க்கையிலேயே இரண்டு மூன்று திரைப்படம் பார்த்திருந்த ஒருத்திக்கு ரத்தக் கொதிப்பு ஏறி தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. அவளை மெல்ல ஆசுவாசப் படுத்தி எத்தனை நாள் சின்னப் பெண்ணாகவே இருப்பது நம்மையெல்லாம் ‘அடல்ட் ‘ ஆக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று என்று கிண்டல் செய்து கிளைமாக்ஸ் பார்க்காமலேயே கிளம்பி விட்டோம். என்ன

நடக்கும் ? வழக்கம் போல் போலிஸ் வந்திருக்கும். கதாநாயகி ‘அத்தான் ‘

என்று எம்ஜிஆர் காலில் விழும் காட்சி இருந்திருக்கும். இழந்த இளமையைத் தேடும் முயற்சியில் புரட்சித் தலைவர் நடித்த படம்! சும்மாவா ? இந்த அதிர்ச்சியிலிருந்து மீள வீட்டில் அனுமதி வாங்கி ‘மன்மத லீலை ‘ ரசித்துப் பார்த்தோம். இதுக்கு ‘ஏ ‘ கொடுத்திருக்காங்களே!

இதயக்கனிக்கு டபுள் ஏ தர வேண்டாமா ? என்று ஒருத்தி அங்கலாய்த்தாள். எங்க ஊர்ல நடக்கும் ஒரே திருவிழாவான பங்குனி உத்திரத் திருவிழாவுக்குப் போய் திரிந்து விட்டு வீட்டுக்குத் திரும்பினோம். லீவு முடியும் வரை ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் மாறி மாறி போய்க் கொண்டிருந்தோம். “ என் ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு வரும் போது எந்த கலாட்டாவும் பண்ணாதீங்கடா” என்று என் அருமைச் சகோதர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மழை என்று என் வீட்டில் வந்து நின்று கொண்டிருந்த என் தோழியைப் பார்த்து வெறுத்துப் போய் என் அண்ணன் தம்பிகள் “மழை ஏன் இப்படிக் கேவலமாக இருக்கு இவ்வளவு கோரமான மழையைப் பார்த்ததேயில்லை” என்று கன்னாபின்னாவென்று டபுள் மீனிங் வைத்துப் பேசி என் மானத்தை வாங்கியதால் இந்த எச்சரிக்கை! இந்த மாதிரி சமயத்தில் வயது வித்தியாசம் எல்லாம் மறைந்து போய் ரொம்ப நெருங்கிடுவாங்க! அந்தப் பெண்ணுக்கு நல்ல வேளை தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று புரியாமல் அதுவும் இவர்கள் செய்யும் கலாட்டாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் போனபிறகு “ஏண்டி உன் ஃபிரெண்ட்ஸ் ஒருத்திக் கூட தேற மாட்டாங்களா” என்று துக்கம் விசாரித்து என்னைச் சீண்டிவிட்டார்கள்.அப்படியும் அவர்கள் கிளம்பிப் போனபிறகு “யாருடி அது ரயில் ராதிகா மாதிரி கொஞ்சிக் கொஞ்சி பேசிகொண்டிருந்தாள் ? ஒய்விஜயா மாதிரி ஒருத்தி இருந்தாளே”, என்றெல்லாம் அன்பாக விசாரித்தான் அண்ணன்.தினமும் பேசிப் பழகும் எனக்குத் தெரியாத உண்மையெல்லாம் அவனுக்கு ஒரு பார்வையில் பதிவாகி விடுகிறது. இதில் ஃபர்ஸ்ட்ஹாண்ட் தகவல் வேணும் என்று அப்பப்ப கடைசித் தம்பியை விட்டுப் பார்க்கச் சொல்லி அனுப்பிகொண்டிருந்தான். அவனும் சின்னப் பையன் என்ற சலுகையில் கோபிகைகள் நடுவில் கண்ணன் மாதிரி எங்க அரட்டையில் சேர்ந்து கொண்டுப் பேசி எல்லோரையும் அறுத்துத் தள்ளி.. என்ன செய்தால் என்ன ? எல்லோரும் அவனையும் ஞாபகம் வைத்துக் கொண்டு விசாரிக்கிறார்கள். ஒரே ஒரு பெண் மட்டும் “உங்கண்ணன் பாக்கறத்துக்கு ஹிந்திப்பட ஹீரோ மாதிரி இருக்காண்டி” என்று சொல்லி விட்டுப் போனாள். அடச்சே! இதுக்கா எல்லோரும் வந்தாங்கன்னு எனக்கு வெறுத்துப் போச்சு! இதை இன்னும் அவனிடம் சொல்லவில்லை. சொன்னால் கர்வம் ஏறிக்கும் என்ற நல்லெண்ணம்தான்!

சிலர் படிப்பைத் தொடர ஊரை விட்டுக் கிளம்பினார்கள். சிலர் ஊரிலேயே இருந்து கொண்டு ஏதோ செய்தார்கள். நிறைய பேரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவேயில்லை. அதில் ஒருத்தி 20 வயதிலேயே

இறந்தும் போய்விட்டாள். எட்டாவது படிக்கும் போது ரெண்டு பேர் உட்காரும் டெஸ்க்கில் இடப் பற்றாக்குறையால் மூன்று பேர் உட்காருவோம். அப்போது என்னோடும் சுபா என்ற என் ஃபிரெண்டோடும் பழிச் சண்ண்டைக்கு நிற்பாள். ஸ்கேல் வைத்து அளந்து பிளேடால் கோடு போட்டு அதைத் தாண்டி துளி இடம் கூட கொடுக்க முடியாது என்று துரியோதனன் போல் கறாராகச் சொல்லிவிடுவாள். இவள் சண்டையால் எனக்குக் கிடைத்த அருமையானத் தோழிதான் சுபா! இந்தப் பூங்கோதைத்தான் இப்படி அல்பாயுசில் இறந்து விடுவாள் என்பது தெரியாமல் நானும் சுபாவும் சேர்ந்து கொண்டு அவளோடு விடாமல் சண்டை போட்டிருக்கிறோம். துரதிருஷ்டவசமாக வகுப்புப் புகைப்படம் எடுக்கும் அன்று அவள் பள்ளிக்கு வரவில்லை. அந்த போட்டோவைப் பார்க்கும் போதெல்லாம் அதில் இருப்பவர்களை விட இல்லாத அவள் ஞாபகம்தான் அதிகம் வருகிறது. பதினாறு வயதில் பிரிந்த நாங்கள் இருபத்தியைந்து வருடங்கள் கழித்து அழகான ஆண்ட்டிகளாக மீண்டும் சந்தித்தோம். (கூட்டிக் கணக்குப் பாத்துட்டாங்களா!) கணவர், குழந்தைகள் என்று எந்தப் பிடுங்கலும் இல்லாமல் அதேத் துடிப்போடு ஜெயண்ட் வீல், ரோலர் கோஸ்டர் எல்லாவற்றிலும் சுற்றி ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு விஜிபியையே கலக்கினோம். சுஜாதாவோட “கற்றதும் பெற்றதும்” படிக்கும் போதெல்லாம் உன்னைத்தாண்டி நினைச்சுக்குவேன்” என்று ஒருத்தி சொன்னாள். எதுக்கு ? நல்லதாக எதைப் படித்தாலும் பகிர்ந்து கொண்டதைத்தானே அவரும் செய்கிறார்.வகுப்புப் புகைப் படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பெயரெல்லாம் நினைவுப் படுத்திப் பார்த்துக் கொண்டோம். ஒரு சிலரோடு ஒரு வார்த்தைக் கூடப் பேசியதில்லை திடுக்கிடும் என்ற உண்மையைப் பகிர்ந்து கொண்டோம். வராதவர்களில் யார் யார் எங்கேயிருக்கிறார்கள் என்று வம்படித்தோம். ஒருத்தி எங்க ஊரிலேயே டாக்டராக இருக்கிறாள். நெய்வேலிக்கு வா. கார் வைத்திருக்கிறேன். நீ வசதியாகச் சுற்றிப் பார்க்கலாம்” என்றாள்.நமக்கு எதற்குக் கார் ? ஒரு லேடாஸ் சைக்கிள் இருந்தால் போதுமே!எல்லோரையும் சிங்கப்பூர் வாங்க என்று கூப்பிட்டுவிட்டு எப்ப வரீங்கங்கறதை மட்டும் கரெக்டாக சொல்லிடுங்க” அப்பத்தானே வீட்டைப் பூட்டிக் கொண்டு எஸ்கேப் ஆக முடியும் ? என்று நான் சொன்னதை யாரும் தப்பாக நினைக்கவேயில்லை. என்னுடைய தோழிகள் ஆயிற்றே! இதையெல்லாம் தப்பாக நினைத்தால் என்னுடைய ஃபிரெண்ட்ஸாக இருக்கவே முடியாதே!

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramessh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்