ஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

சித்ரா ரமேஷ்


மணியின் உடல் நிலையை உத்தேசித்து வீட்டுக்குள்ளேயே விளையாடும் ‘இண்டோர் கேம்ஸ் ‘ விளையாடலாம் மணி வீட்டிலேயே, அவன் வைத்திருக்கும் சீட்டுக் கட்டு, டிரேட், கேரம் போர்ட், எல்லாவற்றையும் அனைவரும் உபயோகிக்கத் தர வேண்டும் என்ற கம்யூனிச சித்தாந்தத்திற்கு உட்பட்டு போன்ற பல நிபந்தனைகளுடன் சமாதான உடன் படிக்கை போட்டு திரும்பவும் ‘ஃபிரெண்ட்ஸ் ‘ ஆகிவிடுவோம். இந்த உடன் படிக்கையில் இரண்டு அம்மாக்களுமே மிகவும் திருப்தியடைந்து விடுவார்கள். இல்லையென்றால் பன்னெண்டு மணி உச்சி வெயிலில் நடுத்தெருவில் விளையாடுவதை விட இது பரவாயில்லை என்று தோன்றி விடும். எண்ணெய் தேய்த்து விடும் போதெல்லாம் ‘எண்ணெய தேச்சிண்டு வெயில்ல போய் விளையாடாதே ‘ என்று சொன்னாலும் அந்த மாதிரி வாக்குறுதி அவசரப் பட்டுத் தர மாட்டோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை அவ்வளவாக எந்த குழந்தையும் விரும்பாது. அதையெல்லாம் பற்றி கவலையேப் படாமல் தேய்த்து விடுவார்கள். கண்ணுக்கு விளக்கெண்ணெய், (Franch oil) உடம்புக்கு தேங்காய் எண்ணெய், தலைக்கு நல்லெண்ணெய் என்று பிரமாதமாக உபசாரம் செய்தாலும் அந்த சீயக்காய்ப் பொடியை பார்த்தாலே வெறுப்பாகத்தான் இருக்கும். அதை எடுத்து தலையில் வைத்து கரகரவென்று தேய்த்து சமயத்தில் கை அழுந்தவில்லையென்றால் வீட்டில் வேலை செய்யும் கண்ணம்மாவைக் கூப்பிட்டு தேய்க்கச் சொல்லி..இதெல்லாம் நாம் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் போது நடந்து விடும். எண்ணெய் தேய்த்துக் குளித்த எரிச்சல், சீயக்காய் பொடி கண்ணில் புகுந்து விட்ட எரிச்சல், இதோடு கண்ணை திறந்து பார்க்கும் போது கண்ணம்மா சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு நம்மேலேயே நமக்கு தன்னிரக்கம் வந்து விடும். அப்புறமா சிடுக்கு எடுக்கறேன், பேன் பாக்கறேன் என்று வந்து தலையையே கழட்டி வைத்து விட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள். எண்ணேய் தேய்த்துக் குளித்தால் நல்லது என்று யார் கண்டு பிடித்தார்கள் ? ஆனால் அம்மா சொன்னது போல் எண்ணெய் தேய்த்துக் குளித்தவுடன் வெயிலில் போய் சுத்தினால் சாயங்காலம் கண்ணெல்லாம் சிவந்து ஒரு மாதிரி ஜுரக்களையுடன் தலைவலியுடன் வீட்டில் பேயறைந்த மாதிரி உம்மென்று உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கண்டு பிடித்து சொன்ன பேச்சு கேட்கவில்லையென்றால் எப்படிப்பட்ட பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது என்பதை விளக்க ஆரம்பித்து விடுவாள். ‘பேப்பர்ல பாத்தியா ? சன்ஸ்ட்ரோக் வந்து ஒரு பையன் செத்துப் போய்ட்டான் ‘ என்று சொல்லி இன்னும் கவலையை அதிகப்படுத்தி விடுவாள். சன்ஸ்ட்ரோக் என்றால் என்ன அதில் செத்துப் போகிற அளவுக்கு என்ன ஆகும் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தால் இன்னும் கிலி அதிகமாகிவிடும். ‘மூக்குலேந்தும் கண்ணுலேந்தும் ரத்தமாக் கொட்டும். அப்படியே சுருண்டு விழுந்து செத்துப் போய்ட்டான் ‘ என்று விவரிப்பதைக் கேட்டால் கொஞ்சம் மரணபயம் வந்து விடும். அப்பாதான் உலகத்திலேயே பலசாலி(இல்லை உலகத்தில் இருக்கும் பலசாலிகளில் அப்பாவும் ஒருவர்) அப்பாவால் எதையும் தூக்க முடியும். (உண்மையாகவே என் அப்பா ஸ்ட்ராங்க் மேன்தான்) அம்மாவுக்குத் தெரியாமல் எந்த விஷயமும் இருக்க முடியாது. அம்மா சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று தீவீரமாக நம்பும் பருவம் அது.

எவ்வளவு நேரம் வெளியில் விளையாடினாலும் சாயங்காலம் விளக்கு வைக்கும் நேரம் கூட்டில் அடையும் கோழி போல் விட்டுக்கு வந்து விட வேண்டும். காலையில் சீக்கிரம் ஆறு மணிக்குள் எழுந்து விட வேண்டும். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் வெளியில் சுற்றக் கூடாது. வீட்டுக்கு வந்து படிக்க வேண்டும். எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டு ஒன்பது மணிக்குத் தூங்கி விட வேண்டும் என்று ஏகப்பட்ட நேரக் கட்டுப்பாடுகள். சில பேர் வீட்டில் ஆனாலும் அநியாயத்துக்கு காலங்கார்த்த்தாலே நாலு நாலரைக்கெல்லாம் எழுந்து குளிச்சு என்னமோ தீபாவளி மாதிரி கலாட்டா பண்ணுவது கொஞ்சம் ஓவர்தான்! ஆறு ஆறறைக்குள் வீடு திரும்பவில்லையென்றால் ஆள் அனுப்பி தேட ஆரம்பித்து விடுவார்கள். அம்மாவுக்கு யார் யாரை எந்த இடத்தில் தேட வேண்டும் என்பது சரியாகத் தெரிந்திருக்கும். ‘பிராபபிலிட்டி கர்வ் ‘ எல்லாம் சரியாகப் போட்டு இங்க இல்லேன்னா இந்த இடத்திலே இருப்பாங்கன்னு ஹை ஸ்கூல் கிரெளண்ட், எதிர் பக்கத்திலிருக்கும் பாலத்தடி, ஏழுநாள் தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டுபவர் சைக்கிள் ஓட்டும் இடம், சோவியத் யூனியன் புக் எக்ஸிபிஷன் நடக்கும் மைதானம் என்று எந்தெந்த லொகேஷனில் யார் இருப்பார்கள் சரியாக சொல்லியனுப்பி விடுவாள். தொடர்ந்து சைக்கிள் ஓட்டி சாதனை படைக்கும் சாதனையாளர் சாயங்காலம் ஏழு ஏழரை மணிவரை குழந்தைகளை குஷிப் படுத்தும் விதமாக நிறைய வித்தைகள் செய்து காட்டுவார். சைக்கிளிலிருந்தே குனிந்து கண்ணால் ரூபாய் நோட்டை எடுப்பது, ஹாண்டில் பாரில் உட்கார்ந்து கொண்டு ரிவர்ஸில் சைக்கிள் ஓட்டுவது, நெருப்பை முழுங்கிக் காட்டுவது, ஒரே சைக்கிளில் பத்து பேரை ஏற்றிக் கொண்டு ஓட்டுவது(இதை எங்க ஊரிலேயே நிறைய பேர் செய்வாங்க) அவ்வப்போது ஒலி பெருக்கியில் ‘ராணியின் கண் கவர் நடன விருந்து ‘ என்று அறிவிக்க ராணி கூடரத்தை விட்டு வெளியில் வந்து கையசைத்து விட்டுப் போவாள். ரோஸ் நிறப் பவுடரும், கன்னத்தில் ஜிகினா மினுமினுக்க, பளபள உடைகளில் நம்ப பத்மினி சாயலில் பேரழகியாகத் தெரிவாள். ஆனால் அந்த ‘கண் கவர் நடன விருந்து ‘ நாங்க வேடிக்கைப் பார்க்க நின்று கொண்டுருக்கும் வரை ஆரம்பிக்காது. ‘லேட் நைட் ஷோ ‘ தான் இருக்குமோ ? அதற்குள் அம்மாவின் உளவாளி வந்து விடுவார். ராத்திரி சாப்பிட்டு விட்டு படுக்கப் போகும் போது ‘மாமா மாமா, பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ‘ பாட்டுகள் லேசாக காற்றில் கலந்து வரும். திடாரென்று நினைத்துக் கொண்டு ‘அம்மா இந்த டான்ஸ் ஆடறவ பத்மினி மாதிரியே இருந்தாம்மா ‘ என்று சொன்னால் அம்மா இந்த மாதிரி அசட்டுக் குழந்தைகளைப் பார்த்து என்ன செய்ய முடியும் ? தலையில் அடித்துக் கொண்டு சிரிப்பாள். அம்மா பத்மினி ஃபான்! படுக்கைப் போடுவதைப் பார்த்து ‘இப்பவே தூங்கணுமா ? இந்த புக் மட்டும் படிச்சுட்டுத் தூங்கறேனே ‘ என்று சொல்லிக் கொண்டே மறு நிமிடம் தூங்கி விடுவோம்.

‘இண்டோர் கேம்ஸ் பற்றி சொல்ல ஆரம்பித்து…. டிரேடில் இரண்டு வகை உண்டு. பாம்பே டிரேட், இண்டர்நெஷனல் டிரேட். இதில் பாம்பே டிரெட்தான் சூப்பரா இருக்கும். பேங்கரை கையிலே போட்டுக் கொண்டு பணம் சுருட்டுவது, பேங்கர மிரட்டி பணம் பறிப்பது, இன்சால்வென்ஸி கொடுப்பது, பணம் கட்ட முடியாமல் ஜெயிலுக்குப் போவது, பாங்கில் கடன் வாங்குவது, ஓவர் டிராஃப்ட் எடுப்பது, பெரிய தொழிலதிபர்கள் செய்யும் ‘பெரிய விஷயங்கள் ‘ எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளலாம். கிரெடிட் கார்ட் விஷயத்தை மட்டும்தான் கற்றுக் கொள்ளவில்லை. ஜுஹு வாங்க சான்ஸ் கிடைத்தால் ரொம்ப லக்கிதான்! பாம்பே எந்த பக்கம் இருக்கிறது என்ற அடிப்படை பூகோள அறிவு கூட இல்லாமல் பாம்பேயில் ரொம்ப விலையுயர்ந்த இடம் ஜுஹு அப்புறம் வெரேலி, சர்ச் கேட், மரைன் டிரைவ் போன்ற மற்ற இடங்களும் அத்துப் படியாகி விடும். இன்டெர் நெஷனல் டிரேடில் ஐரோப்பிய அமெரிக்க நகரங்கள்! சீட்டுக்கட்டு விளையாட்டில் நாலு சீட்டு, ஏழு சீட்டு டிரம்ப் கார்ட்(மங்காத்தா!!) ரம்மி, டாங்க்கி,மங்க்கி, லிட்ரேச்சர்ன்னு ஒரு விளையாட்டு விளையாடி இருக்கீங்களா ? இது விளையாடினால் நினைவாற்றல் பெருகும் கார்ட்ஸ் விளையாடுவதில் மட்டும் தான்! கேரம் போர்ட்! பாண்ட்ஸ் பவுடர், ரெமி பவுடர் மணக்கும் கேரம் போர்ட். பவுடர் போட்டு கேரம் போர்டைத் தேய்த்தால் ஸ்ட்ரைக்கர் இன்னும் வழுக்கிக் கொண்டு போகும் என்று வீட்டில் இருக்கும் பாண்ட்ஸ்,ரெமி

பவுடர் சமயத்தில் அம்மா உபயோகிக்கும் மைசூர் சாண்டல்…. கேரம் போர்டே அம்மா வாசனை அடிக்கும்.அப்பாவின் புது பிளேடு, அம்மாவின் பவுடர் இதையெல்லாம் எடுத்தால் பயங்கரகோபம் வந்து விடும். ஆனால் உண்மையாகாவே அம்மாவை கோபப் படுத்த வேண்டும் என்று செய்வதாக சொல்வது சற்று மனத்தாங்கலாகத்தான் இருக்கும். விளையாடும் போது நன்றாக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்வதுதான். அப்புறம்தான் கேரம் போர்டுக்கு அம்மா உபயோகிக்கும் சந்தன பவுடரெல்லாம் போட மாட்டாங்க! அதற்கென்று ஸ்பெஷலா பவுடர் வாங்க வேண்டும் என்ற பொது அறிவு வளர்ந்தது. தாயக்கட்டை, பல்லாங்குழி என்று பாரம்பரிய விளையாட்டுகளைக் கூட விட்டதில்லை. ஜோடி சேர்த்து வெட்டுவது, மலையேறி பழமாகும் நிலையில் இருக்கும் காய்களை வெட்டுவது, ஒரு தாயம் போட்டு ஒரு காயைக் கூட இறக்காதவங்களை எள்ளி நகைப்பது, இரண்டு பன்னெண்டு, ஈராறு, ஓரைந்து, இரண்டு என்று தொடர்ச்சியாக பயங்கர எண்ணிக்கைகள் போட்டு இரண்டு மூன்று காய்களை வெட்டுவது (ஒரே ஆட்டத்தில் இரண்டு மூன்று காய்களை வெட்டினாலும் வெட்டாட்டத்துக்கு ஒரே ஒரு மறு ஆட்டம்தான்!) என்று சகுனியை விட திறமைசாலிகள் இருந்தார்கள். பல்லாங்குழியில் பன்னிரண்டு சோழிகள் போட்டு விளையாடும் போது வலது பக்கத்திலிருந்து மூன்றாவது குழியிலிருந்து எடுத்து ஆடினால் புதையல் நிச்சயம்! ஞாபகமிருக்கா ? புதையல் வர வய்ப்பிருக்கிறது என்று சோழிகளை எண்ணி வைத்துக் கொண்டு சரியாக வரவில்லை என்று தோன்றினால் ஒரே குழியில் நைசாக இரண்டு சோழிகளைப் போட்டு புதையல் எடுப்பது, காசி பொத்துவது, பசு எடுப்பது சோழிகளின் எண்ணிக்கை குறைத்து குறைத்து கடைசியில் கஞ்சி காய்ச்சி ஓட்டாண்டியாக்கி விடுவது! எத்தனை சுவாரஸ்யமான விளையாட்டு! ரொம்ப அறிவு பூர்வ விளையாட்டான செஸ் கூட விளையாடியிருக்கிறோம். இதில் பேஜாரான விஷயம் என்னவென்றால் எதிராளி ரொம்….ப நேரம் யோ….சித்து யோ…சித்து குதிரைக்கு முன்னாலிருக்கும் பானை நகர்த்தி விட்டு திரும்பவும் பழைய இடத்திற்கே கொண்டு போய் வைத்து குதிரையை ஜம்ப் பண்ணி நகர்த்தி திரும்பவும் யோசித்து ம்ஹும் செமையா படுத்துவாங்க! செஸ் நல்லா விளையாடத் தெரிஞ்சவங்க யாராவது படிக்காமலா இருப்பீங்க! நான் சொன்ன ‘மூவ் ‘ பற்றி கற்பனை பண்ணி பாருங்க! எவ்வளவு முட்டாள்தனமான ‘மூவ் ‘! விளையாட்டுன்னா பரபரன்னு விளையாடணும்னு நினைக்கறவங்களுக்கு இது சரிப் படாது. ராஜா சும்மா டம்மிதான்! ராணிதான் அம்மா மாதிரி இங்கேயும் அங்கேயும் திரிஞ்சு ஆட்டத்தை சுவாரஸ்யமாக்குவாங்க! அதனால் செஸ் மாதிரி ஒரு நல்ல கேம் வேறெதுவும் இல்லை! பெண் விடுதலைக்கு முதலில் குரல் கொடுத்த விளையாட்டு இல்லையா ?

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்