இந்தி சினிமாவின் பத்துவிதிகள்

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue


1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும். (விதி இரண்டைப் பார்க்கவும்)

2. ஹீரோக்களின் எண்ணிக்கை ஹீரோயின் எண்ணிக்கைக்கு சமமாக இல்லையெனில் உபரியான ஹீரோக்கள் அல்லது ஹீரோயின்கள் அ) இறக்கவேண்டும் ஆ) செஞ்சிலுவைச் சங்கம், ராமகிருஷ்ணா மிஷன், ஸ்விட்சர்லாந்து போன்ற சமாச்சாரங்களில் பட இறுதியில் காணாமல் போகலாம்.

3. ஒரு படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருந்தால், அவர்கள் இருவரும் காட்டுமிராண்டித்தனமாக குறைந்தது 5 நிமிடம் சண்டை போடவேண்டும் (சகோதரர்களாக இருந்தால் 10 நிமிஷம்)

4. எந்த கோர்ட் சீனிலும், ‘அப்ஜக்ஸன் மைலார்ட் ‘ என்ற வசனம் இருந்தே ஆகவேண்டும். அந்த வசனத்தை ஹீரோவோ அல்லது அவரது வழக்குறைஞரோ சொன்னால், அது ஓவர் ரூல்டாகவும், இல்லையெனில் அது ஸஸ்டெய்ண்ட் ஆகவும் ஆகவேண்டும்.

5. ஹீரோவின் சகோதரி ஹீரோவின் உயிருக்குயிரான தோழனை (அதாவது இரண்டாவது ஹீரோ) கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். இல்லையெனில் அவள் படம் ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் வில்லனால் கற்பழிக்கப்படவேண்டும். அவள் பின்னால் தற்கொலை செய்துகொள்ளவேண்டும்.

6. சேஸ் நடந்தால், ஹீரோ எப்படியும் வில்லனை பிடித்துவிடவேண்டும், அது மாட்டுவண்டி காரை துரத்தினாலும் சரி.

7. ஹீரோ வில்லனை நோக்கி சுட்டால்,

அ) குறி தவறவே தவறாது

ஆ) துப்பாக்கிக் குண்டு தீர்ந்து போகும். (அப்படியாயின் கைச்சண்டைதான்).

வில்லன் ஹீரோவை நோக்கிச் சுட்டால், நிச்சயம் குறி தவறும். இல்லையெனில் அது இரண்டாவது (சாகவேண்டிய) ஹீரோ.

8) எல்லா சண்டைக் காட்சிகளும் நடக்கவேண்டிய இடம்

அ) சட்டிப்பானைகள் இருக்கும் இடம்

ஆ) சந்தை.. காய்கறி இன்ன இதர சாமான்கள் தள்ளுவண்டியில் இருக்கும் இடம்

இ) கண்ணாடி பாட்டில்கள் .. இவை அனைத்து நிச்சயம் உடைக்கப்படவேண்டும்

9) காணாமல் போய் சேரும் சகோதரர்கள் பற்றிய கதை இருந்தால், நிச்சயம் அனைவருக்கும் தெரிந்த குடும்பப் பாடல் ஒன்று நிச்சயம் வேண்டும். இது

அ) சகோதரர்கள் பாடவேண்டும்

ஆ) கண்குருடியான அம்மா பாடவேண்டும் (இறுதிக்காட்சியில் அவளுக்கு கண்பார்வை கிட்டும்)

இ) குடும்ப நாய் அல்லது பூனை

10) போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் படத்தில் வந்தால் இரண்டு வகையில் வருவார்கள் (போலீஸாக ஹீரோ இல்லாத பட்சத்தில்)

அ) படு நேர்மையான போலீஸ் அதிகாரி பெரும்பாலும் ஹீரோவின் அப்பா. டைட்டில் போடுவதற்கு முன்னால் இவர் சாகவேண்டும். அப்பாவாக இல்லாத பட்சத்தில், கெட்ட ஹீரோ (அண்டி ஹீரோ)வை ‘சட்டத்திலிருந்து நீ தப்பமுடியாது ‘ என்று பேசிகொண்டே 23ஆவது ரீல் வரை துரத்திவிட்டு, இறுதியில் தன் மகளை அவனுக்கு மணம் முடித்துவைத்து தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும்.

இ) படு மோசமான கெட்ட போலீஸ் அதிகாரி. உண்மையான வில்லனின் கையாள். கிளைமாக்ஸில் ஹீரோவால் சாகவேண்டும்.

Series Navigation

செய்தி

செய்தி