ஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

ந. முத்து மோகன்


ந. முத்து மோகன் (மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், குருநானக் ஆய்வு மையம்)

கவிஞர் என். டி. ராஜ்குமார் குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வார்ப்பு. இந்த நூலின் முகப்பில் சொல்லப்பட்டிருப்பதைப் போல ஒரு மாந்திரிகப் குடும்பத்தில் பிறந்தவர். கவிஞனைப் புலவன் என்றும் பாணன் என்றும் சொல்லும் மரபைத் தாண்டி, ஒரு மந்திரவாதி என்று சொல்லுவதற்கான முகாந்திரங்களை ஏற்படுத்தியவர் என். டி. ராஜ்குமார். அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகர், நாடக நடிகர் என பலவகை ஆற்றல்கள் கொண்டவர். 1997 ல் இவரது முதல் கவிதை நூலான ‘‘தெறி’’ வெளி வந்த போது அந்த நூலுக்கு நான் அணிந்துரை எழுதினேன். 13 ஆண்டுகளில் ஒடக்கு, ரத்த சந்தணப் பாவை, காட்டாளன், கல் விளக்குகள் போன்ற கவிதைத் தொகுப்புகள் மலையாளத்திலிருந்து இரண்டு கவிதை நூல்கள் மொழிபெயர்ப்பு. வலைய தளங்களில் சுற்றித் திரியும் வேளைகளில் இவரது கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பில் கண்டிருக்கிறேன். இவரது பல கவிதைகள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. இதே 13 ஆண்டுகளில் கலை இலக்கியப் பெருமன்ற நண்பர்களோடு சில சச்சரவுகள், தலித் கவிதை, காலச்சுவடு பத்திரிக்கை என இவரது பயணங்கள். இன்னும் பல புதிய பயணங்களை இவர் மேற்கொள்ளுவாராக இருக்கலாம். இடையிடையே அவ்வப்போது நான் இவரைச் சந்தித்து வந்துள்ளேன். பழக்க வழக்கங்களில் கோபதாபங்கள் குறைந்துள்ளன. பழைய அன்பு, தோழமை மாறவில்லை.
பதநீரில் பொங்கும் நிலா வெளிச்சம் எனும் இக்கவிதைகள் நவீனச் சூழலில் வாழும் ஒரு பழங்குடி மனிதனின், ஒரு காணிக்காரனின் காதல் கவிதைகள். அவரது முதல் கவிதை சொல்லுகிறது:
‘‘கருநாகத்தின்
சுழி முனையில்
வல்லயத்தின் கூர்மையுடன்
மணிச் சதங்கை அதிர
உக்கிரதாண்டவமாடிக் கொண்டிருக்கிறது
அட்டகாசமான
நம் காதல்’’
பலர் நிறைந்த அரங்கின் நடுவிலும் அவளது பார்வை,
‘‘எலுமிச்சைப் பழமாக உருண்டோடி வந்தென்னை
அரவமெனத் தீண்டி நின்றதாக’’த் தெரிவிக்கிறார். சாதாரணமாக வாசித்தாலே இந்த வரிகளுக்கு ஒரு கவிதைப் பொருண்மை கிடைக்கிறது. பலர் கூடிய சபையில், மற்றவர்களுக்குத் தெரியாமல், அவள் பார்க்கும் பார்வையை எலுமிச்சம் பழம் அனக்கமின்றி உருண்டோடி வருவதாக உருவகிக்கிறார். ஆனால் இவ்வரிகளுக்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. பெரிய புலையனின் மகளை சிறிய புலையன் விரும்புகிறான். சிறிய புலையனை அந்தஸ்தில் குறைந்தவன் எனக் கருதும் பெரிய புலையன் இருவரும் நெருங்குவதை தடுக்கிறான். சிறிய புலையன் எலுமிச்சைப் பழ உருவெடுத்து ஒரு தட்டில் அமர்ந்து பெரிய புலையனின் மகளை நெருங்கி விடுகிறான். அவள் எலுமிச்சையை எடுத்து முகர்ந்து பார்க்க சிறிய புலையன் பாம்பு உருவெடுத்து அவளைத் தீண்டி விடுகிறான். காதல் பலித்துவிட்டது.
பத்து பதினைந்து வரிகள் எழுதுவதற்குள்ளாகவே இவரது கவிதைக்கு ஒரு கதைப் பண்பு கிடைத்து விடுகிறது. பத்து பதினைந்து வரிகளுக்குள்ளாகவே இரவது கவிதை மொழி ஒரு குறியீட்டு உலகத்திற்குள் நுழைந்து விடுகிறது. பத்து பதினைந்து வரிகளுக்குள்ளாகவே இவர் தன்னை ஒத்த ஒரு பழைய மந்திரவாதியைக்-காதலியை ‘‘ஜடாமுடிக்குள் ஒளித்து வைக்கும் பழைய மந்திரவாதியைக் – கண்டடைந்து விடுகிறார். கருநாகம், வல்லயம், அரவம், பித்தன், பிறை வடிவு, ஜடாமுடி போன்ற சொற்கள் வந்து விழுகின்றன – மந்திரம் ஓதி எறிந்த சொற்கள்.
என். டி. ராஜ்குமாரின் கவிதைச் சொற்களை ஓதி எறியப்பட்ட சொற்கள் என்று சொல்லும் போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. தமிழில் வேதம் என்பதற்கு ‘‘ஓத்து’’ என்ற பெயருண்டு. ஓதி எறியப்பட்ட சொற்கள் தாம் ஓத்துக்கள்.
அவரது காதலைப் பற்றிக் கூடுதலாக மேலும் சில தகவல்களைத் தருகிறார். அது குரு / சிஷ்யை உறவில் தோன்றிய காதல் போலத் தோன்றுகிறது.
‘‘தாமதமாக ஓடி வந்த கறுப்பு நதி’’
‘‘சூசகமாய் உள்நுழைந்தென்னை ஆட்டிடும் பாம்பே’’
‘‘குற்றம் ஒன்றும் இல்லையென்று விளையாடு பாம்பே’’ இந்த வரிகளிலிருந்து இவரது காதல் குறித்த சில அத்தியாவசியமான தகவல்களை வாசகர்கள் திரட்டிக் கொள்ள முடியும்.
காதலில் பித்தனாய் இவர் அலைவது ‘‘மலைத்தெய்வம் மறுபோதைக்காய் அலைந்து திரிவதை’’ப் போல இவருக்கே காட்சியளிக்கிறது.
கவிஞரது பழங்குடி மனதில் புதைந்து கிடக்கும் பழங்கதைகள் சிலவற்றை நம்மால் உடனடியாக அர்த்தப்படுத்த இயலவில்லை.
‘‘நல்ல மிளகு போன்ற கருத்த முத்துக்களை
பத்திரகாளியின் உடல் காமத்திலிருந்து
ருத்திரதாண்டவத்தால் பு+தக்கண்டன்
நக்கியெடுக்க’’
பத்திரகாளியின் உடலில் துளிர்க்கும் காம வேர்வையை பூதக்கண்டன் ருத்திரதாண்டவமாடி நக்கியெடுத்தான் என்ற காட்சி நமக்குள் விரிகிறது. அந்த வரிகளுக்குப் பின்னாலும் ஒரு கதை உள்ளது. பயங்கரமான கோடை நாட்களில் ஊர்மக்களுக்கெல்லாம் அம்மை நோய் கண்டுவிட்டது. தன்மக்களைக் காப்பாற்ற பத்திரகாளி எல்லோருடைய உடல் வெப்பத்தையும் தான் ஏற்றுக்கொண்டாள். அவளது. உடலெங்கும் நல்லமிளகுகள் போல அம்மை நோயின் பொக்களங்கள். அவளது துன்பத்தைப் பொறுக்காத பூதக்கண்டன் அந்த பொக்களங்களை தன் நாவால் நக்கி எடுத்தான். இந்த பழங்கதையைத் தான் இப்போது கவிஞர் வேறொரு செய்தியைச் சொல்லுவதற்குப் பயன்படுத்துகிறார். கவிஞன் பழம்புராணங்களை எத்தனைச் சுதந்திரமாக எடுத்தாளுகிறான் என்ற வியப்பு தோன்றுகிறது. ‘‘என் கவிதை பீ அள்ளச் செல்லட்டும்’’ என்று 13 ஆண்டுகளுக்கு முன்பு என். டி. ராஜ்குமார் எழுதியது எனக்கு நினைவிலிருக்கிறது. அன்று, நவீனத்துவ இலக்கிய விமர்சனம் சப்த பிரமாணத்திலிருந்து தன் கவிதை ஊற்றெடுக்கிறது என்று கதைத்துக் கொண்டிருந்தது. அதற்கு மாற்றுக்குரலாகத்தான் பீ அள்ளச் செல்லும் கவிதை குறித்து ராஜ்குமார் எழுதினார். இப்போது பத்திரகாளியின் உடல் காமத்தை பூதக்கண்டன் நக்கியெடுக்க என எழுதுகிறார். நக்கியெடுக்க என்ற சொல் வெறும் சொல்லாக இல்லை. அது பௌதீகத் தன்மையுடன் ஒலிக்கிறது. தேகப் பிரமாணம் பற்றியது அது. என் நண்பனின் போர்க்குணம் குறையவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இப்போதும்
‘‘வெப்பம் தாளாது வெடித்துச் சிதறுகின்றன இவரது கவிதைகள்’’.
‘‘எப்பொழுது பார்த்தாலும்
எனக்குப் பிடித்தது போலவே வந்து நிற்கின்றாய்’’ என்று தொடங்குகிறது ஒரு கவிதை. மறுவரியிலேயே ‘‘தலைவிரிக்கோலம் பாலப்பூவின் வசீகரம்’’ என்கிறார். பாலப்பூ என்பது பேய்களுக்குப் பிடித்தது. தலைவிரிக்கோலத்தில் பேய் போல வந்து நிற்கிறாய், அது தான் எனக்குப் பிடித்த கோலம் என்கிறார். இவரது காதல் பேய்க்காதல்.
‘‘பலவேசமெடுத்தென்னை விழுங்க வந்த பேயை
பிரபாவத்தோடு நானெடுத்து விழுங்கி
பேயாட்டம் ஆடுகிறேன்’’
தமிழும் கவிதையும் காதலும் என். டி. ராஜ்குமாரின் கவிதைகளில் அடித்தளம் நோக்கிப் பாய்கின்றன. சென்ற ஆண்டு ஒருநாள் மதுரையில் பேசும்போது, எழுத்தாளர் கோணங்கி. நமது காலத்திய எழுத்தில், ‘‘திணைகளின் எழுச்சி’’ என்ற மிகப் பெரிய சம்பவம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ராஜ்குமாரின் கவிதைகள் ஆரம்பத்திலிருந்தே திணைகளின் எழுச்சியைக் குறித்து நிற்பவை. பின்னை நவீனத்துவச் சிந்தனை இதற்கு வேறுபாடுகளின் அரசியல் என்று பெயரிடுமாக இருக்கலாம். ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டுக் கிடந்த திணைகள் இற்றை நாட்களில் தமது சொந்தச் சொற்களுடன், சொந்த அழகியல்களுடன் முன்னுக்கு வருகின்றன. சமூக உடலின் அடியாழம், காயம் புதைந்த நனவிலி என அவை பயணிப்பதால் கோபங்களும் வெறுப்புகளும் இயலாமைகளும் அராஜகம் சுமந்து வெளிப்படுகின்றன. பலவேளைகளில் அவை சமூக அடக்குமுறைகளால் மிகைநிர்ணயம் செய்யப்பட்ட குறியீடடு மொழியில் வெளிப்படுகின்றன. நனவு மனத்தின், சமூக மனத்தின் குண்டாந்தடிகள் இன்னும் உயிர்ப்புடன், சந்தர்ப்பம் தேடிக் காத்திருப்பதை அவை அறியும்.
நனவிலி, அராஜகக் குறியீட்டு உலகம் என்று நான் கூறுவதால், ராஜ்குமாரின் கவிதைகள் அதன் சமூக உள்ளடக்கத்தை எவ்வகையிலும் இழந்து விடவில்லை. மாறாக, குறிப்பிட்ட ஒரு சமூகப் பிரச்சினைதான் இவரது காதலையும் கவிதையையும் பேயாட்டம் போடச் செய்கின்றது. காதலர்களுக்கிடையில் ஒரு வழிமறிச்சான், ஒரு கண்ணாடி மதில் குறுக்கே நிற்பதாக எழுகிறார். ‘‘பொழுதுகளையெல்லாம் கொடும் பறவைகளின் சிறகுகள் மறைத்து கொண்டிருப்பதாய்ச்’’ சொல்லுகிறார். வழிமறிச்சான் என்பது குமரி மாவட்டத்தில் சாதித் தடைகள், சாதியும் மதமும் கொடும் பறவைகளின் சிறகுகளாய் இவர்களது பொழுதுகளையெல்லாம் மறைத்துக் கொண்டிருப்பதாய் எழுதுகிறார். ஆலயம் / கோவில், குருசு மாலை / குத்து விளக்கு, சிலுவை மரம் / நந்தி என்ற எதிர்வுகள் இவரது கவிதைகளுக்குள் வந்து விழுகின்றன. குமரி மாவட்டத்தல் கிறித்தவத்தின் வரலாறு முரண்பட்ட பண்புகளைக் கொண்டது. அது விடுதலைச் செய்தியை மட்டும் தான் கொண்டு வந்தது என்று ஒற்றை வரியில் கூறி முடித்துவிட முடியாது. அவற்றைக் கவிஞர் நினைவுக்கு கொண்டு வருகிறார். சிலுவை மரமே இப்போது வழிமறிச்சானாக மாறிவிட்ட நிலையைச் சுட்டிக்காட்டுகிறார்.
‘‘இரு கரைகளையும் இணைத்தபடி
நடுவிலொரு கருப்பு நதி’’யாகப் பாயும் இவர்களது காதலின் மீது ‘‘துரோகிகள் வாளெடுத்து வீசு’’கிறார்கள். ‘‘பனஞ்சோலைகளுக்கிடையில் இவர் நடுநிசியாய் நிற்கிறார்’’. ‘‘பித்தனாய்ப் பிறை சூடி அலைகிறார்’’.
இப்போது, கவிஞர் முன்பு பயன்படுத்திய பழம் குறியீடுகளெல்லாம் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. பித்தன், பிறை, ஜடாமுடி, கங்கை, பத்திரகாளி ஆகியவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்க நேரிடுகிறது. ஆதிசிவன் என்ற அந்தப் பழங்குடிக் கடவுள் ஏன் பித்தனானான்? ஏன் மௌனியானான்? கங்கையையும் பிறையையும் ஏன் ஜடாமுடிக்குள் மறைத்து வைத்தான்? ஏன் உடல் தடதடக்கத் தாண்டவமாடினான்? அவன் ஏன் விஷமுண்டான்? இந்தப் பழம் புராணக் குறியீடுகளெல்லாம் எப்போது தோன்றின? ஏன் தோன்றின? இப்போது கவிஞனுக்கு எதிர்ப்பட்டது போன்ற வழிமாறிச்சான்கள் அந்த ஆதிசிவனுக்கும் எதிர்ப்பட்டிருக்குமோ? அப்படித்தான் கவிஞர் கருதுகிறார்.
‘‘என்னைப் போலவே
ஆலகால விஷம் குடித்து
கால்மாற்றி ஆடிய நீலகண்டனோ
தீண்டப்படாதவனாய்
புறந்தள்ளப்பட்டுக் கிடக்கின்றான்’’
ஆதிசிவன் என்ற பழம் புராண மாந்திரிகக் குறியீடு இக்கவிதைகளினுள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. திடீரென. இக்கவிதைகள் காதலைப் பற்றியவை அல்ல, வழிமறிச்சான்களைப் பற்றியவை என்ற உணர்வு தோன்றுகிறது. தீட்டு என்ற மிகப் பெரும் சமூக முரணைச் சந்தித்ததாலேயே அன்று அந்த ஆதிசிவனும் பித்தனானானா? சடாமுடி வளர்த்தானா? தாண்டவமாடி தன் அவமதிப்புகளைத் தேய்ததுக் கொண்டானா? ஆலகால விஷம் அருந்தினானா? என்ற கேள்விகள் எழுகின்றன. கவிஞர் ராஜ்குமாரின் ஆதிசிவன் குறித்த வாசிப்புகளுக்கு முன்னால் வேதாந்த சித்தாந்தப் பொருண்மைகளெல்லம் வெளிறிப்போய் விடுகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராணக் குறியீடுகளை கணிதவியல் துல்லியத்தோடு கவிஞரால் பொருள்கொள்ள முடிந்திருக்கிறது. ஒரு பழைய மந்திரவாதியும் கால இடைவெளியைக் கடந்து கவிதை உலகில் சந்தித்துக் கொண்டபோது இது சாத்தியப்பட்டிருக்கிறது. நனவிலி மனத்தின் அராஜகக் குறியீடுகள் எங்கே, எப்படித் தோற்றம் பெருகின்றன என்ற பழைய ரகசியம் நமக்குத் தெரிய வருகிறது.
இந்தியத் தத்துவங்கள் பலவற்றின் அடியாழத்தில் தேகமும் காமமும் உள்ளன. என் ஆதித்தாயும் கை எங்கே, கால் எங்கே எனத் தெரியாமல், வலம் எங்கே, இடம் எங்கே எனப் புரியாமல், தம்மை மறந்து (ஆணவம், அகங்காரம் இழந்து), புனிதமும் தீட்டும் துறந்து ஆடிய லீலைகளினின்றும் விளையாட்டுகளினின்றும் தான் இவ் உலகம் பிறப்பெடுத்தது. நனவு மனத்தின் ஒடுக்கும் ஒழுங்குகளெல்லாம் கட்டுடைந்து சிதறிச் சூன்ய சமத்துவமானது நனவிலிகளின் சங்கமத்தில் தான். அந்த ஆதி முதல் சமத்துவம் குறித்த ஏக்கம் எமது தத்துவங்களில் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. ஈராயிரம் வருட இந்தியத் தத்துவங்களால் மூடிமறைக்கப்பட்ட அந்தப் பூர்வ உண்மையை அதன் சொந்த வடிவில் ராஜ்குமாரால் கையகப்படுத்த முடிந்திருக்கிறது.
‘‘பதனீரின் மணம்’’
‘‘தந்திரம் நிறைந்த மரச்சீனிக் கிழங்கின் மணம்’’
‘‘பதனீரில் அவித்தெடுத்த மரச்சீனிக் கிழங்கு’’
ஆண் விந்து ரகசியம் அவிழ்ந்து இந்தக் கவிதை நூல் முழுவதும் பரசியமாய்க் கலந்து நிற்பதைக் கண்டுகொள்ள முடியும். அதனாலேயே இந்நூல் பெண்ணியவாதிகளின் விமர்சனத்திற்கும் ஆளாக நேரிடலாம்.
2.9.2010

Series Navigation

ந. முத்து மோகன்

ந. முத்து மோகன்