நாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

லதா ராமகிருஷ்ணன்


திரு.வெளி ரங்கராஜன் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகள் ஒரு தொகுப்பாக நூல்வடிவம் பெற்றுள்ளன. அடையாளம் பதிப்பக வெளியீடாக மேற்கண்ட தலைப்பில் ( பக்கங்கள் 144. விலை ரூ.90) வெளியாகியுள்ள அந்த நூல் குறித்து சொல்ல வேண்டிய சில…
_லதா ராமகிருஷ்ணன்

’கலை இலக்கியத் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் வெளி ரங்கராஜன். தமிழில் புதிய நாடக விழைவுகளுக்கான களமாக ‘வெளி’ என்ற சிற்றிதழை நடத்தியவர்.’

_இலக்கியம், நாடகம், நிகழ்கலை, திரைப்படம் குறித்து அண்மைக்காலங்களில் வெளி ரங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ’நாடகம் நிகழ்வு அழகியல்’ என்ற தலைப்பில் அடையாளம் வெளியீடாக கடந்த வருட இறுதிவாக்கில் வெளியாகியுள்ளது. அந்த நூலின் பின்னட்டை வாசகங்களில் ஒரு சிலவே மேலே தரப்பட்டுள்ளது. திரு.வெளி ரங்கராஜனை அறிந்தவர்களுக்கு அந்த வாசகங்கள் எத்தனை உண்மையானவை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். புத்தகங்களின் தலைப்புகளை மட்டுமே படித்து அது குறித்து எழுதவும், பேசவும் துணிச்சலாக முன்வருபவர்கள் மத்தியில், எனக்குப் பின் அல்லது என்னைத் தாண்டி எழுத்தாளர்களே கிடையாது, கலைஞர்களே கிடையாது என்று கடிவாளப் பார்வையுடையவர்களாய் புழங்கி வருவோர் மத்தியில் சமீபத்திய நூல்கள் வரை ஆர்வமாகப் படித்துவருபவரும், மாற்றுக் கருத்துகளையும் பொருட்படுத்திக் கேட்டுக் கொள்பவரும், சக-படைப்பாளிகளிடம் அன்பும் அக்கறையும் கொண்டவருமான வெளி ரெங்கராஜன் தமிழின் மாற்றிதழாளர்களுக்கும், திண்ணை வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமானவரே.

‘நாடகத்தை வெறும் பிரதி சார்ந்து அணுகாமல், நிகழ்தளத்தில் செயல்படும் எண்ணற்ற உத்வேகங்களையும் எழுச்சிகளையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும்போது தான் தமிழில் தொடர்ந்த நாடக இயக்கமும் புதிய சொல்லாடல்களும் உருவாகும் என்பதை தொகுப்பிலுள்ள கட்டுரைகள் வலியுறுத்துகின்றன என்று நூலின் பின்னட்டை வாசகங்கள் நமக்குத் தெரியப்படுத்துகின்றன. எப்படி கவிதைக்கு எழுத்தாளப் பிரதி, வாசகப் பிரதி என்று குறைந்தபட்சம் இரு பிரதிகள் இருக்கின்றனவோ அதைப் போலவே நாடகமும் குறைந்த பட்சம் இரண்டிற்கு மேற்பட்ட பிரதிகளைக் கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது மேடையாக்கத்தின் வழியாக, நிகழ்த்துகலை என்ற அளவில் நாடகத்திடமிருந்து பெறப்படும் பிரதி என்ற கருத்தை நேர்ப்பேச்சிலும் வலியுறுத்தும் வெளி ரங்கராஜன், மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் இலக்கியமும் நாடகம், ஓவியம் முதலான பிற கலைகளும், கலைஞர்களும் ஒன்றுக்கொன்று, ஒருவருக்கொருவர் தொடர்பற்று இருப்பது குறித்த தனது வருத்தத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர். அவருடைய இந்தக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கும் வண்ணமாகவே அவருடைய இந்த சமீபத்திய நூலிலும் நாடகம் என்ற நிகழ்த்துகலை வடிவத்தை மையப்புள்ளியாகக் கொண்டு பல்வேறு கலைகளும், கலைஞர்களும், அவர்களுடைய கலைவாழ்க்கையின் சவால்களும், சோகங்களும், அவற்றின் வழியாக வாழ்வெனும் மாபெரும் நாடகமேடையும், கதாபாத்திரங்களும மிகுந்த நுண்ணுணர்வோடும், தோழமை யுணர்வோடும் அகல்விரிவாகப் பேசப்படுகின்றன. கட்டுரைகள் பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து பக்கங்களில் முடிந்துவிடுகின்றன. எனில், அவை தரும் வாசிப்பனுபவம் நீண்ட நேரம் நிலைத்திருக்கிறது!

வைதீஸ்வரன் கவிதைகளின் படிமங்கள் ஓர் எளிமைப்படுத்தப்பட்ட நிலைக்கும், ஒரு அதீத நிலைக்கும் இடையே ஊடாடுவதாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்த நிலையில் காட்சிப்படுத்தலுக்காக அணுகியபோது அவை உள்வாங்கப்பட்ட விதமும், அங்கு வெளீப்பட்ட உணர்வுகளும் அனுமானிக்க இயலாதவைகளாக இருந்தன. கவிதை தன்னிச்சையாக எங்கோ பயணித்துக் கொண்டிருந்தது” என்று ‘இலக்கிய வாசிப்பும், நாடக வாசிப்பும்’ என்ற முதல் கட்டுரையில் வெளி ரங்கராஜன் கூறியிருப்பது மிகவும் உண்மை என்பதை அத்தகைய கவிதைக் காட்சிப்படுத்தல் ஒன்றை நேரில் பார்த்தபோது உணர முடிந்தது! இலக்கியம் அதன் சாராம்சவாதப் போக்கிலிருந்து விடுபட்டு அது வெறும் கருத்தாகச் சுருக்கப்படும் அபாயத்திலிருந்து தப்பவேண்டுமானால் அதன் நிகழ்த்து சாத்தியங்களை ஆராயும் நிலையில் இலக்கியமும், நிகழ்வும் ஒன்றின் இயக்கத்தில் மற்றொன்று புத்துயிர் பெறுவதைப் பார்க்க முடியும். நம்முடைய காப்பியங்களின் இலக்கிய மதிப்பு தொடர்ந்து நீடிப்பதன் காரணம் அவற்றிலிருந்து பெறப்படும் நிகழ்த்து சாத்தியங்களே என்று கட்டுரை முடிகிறது. அதேபோல் சிறுகதைகளின் நாடமாக்கம் பற்றிக் குறிப்பிடும்போது “உண்மையில் கலாச்சாரம் சார்ந்த பிரச்னைகளில் ஒரு நாடக்காரனின் குரலும், ஓர் இலக்கியவாதியின் குரலும் இணைந்து ஒலிக்கும்போது, அந்தப் பிரச்னைகள் அதிகப் பரிமாணங்களைப் பெறும் சாத்தியங்க கொண்டிருக்கின்றன”, என்று குறிப்பிடுபவர், ‘ஆனால், புதினத்தின் தொனி நாடக வடிவில் காப்பாற்றப்படும் நிலையிலேயே இது சாத்தியப்படும் எனச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை!

நாடகம், நிகழ்வு, அழகியல், புரிசை நாடக விழாக்கள் ஆகிய இரண்டு கட்டுரைகளிலும் தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவமான கூத்து குறித்தும், நவீன நாடகங்கள் குறித்தும் அவை இரண்டிற்கும் இடையே இருக்கக்கூடிய, இருக்க வேண்டிய அழகிய, ஆழமான பிணைப்பு குறித்தும், கூத்து, நாடகக் கலைஞர்களின் திறமைகள், நிலைமைகள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார் வெளி ரங்கராஜன்.

பாடல் என்பது நம்முடைய உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்திக் கொண்டும் ஆடல் என்பது நம்முடைய சுதந்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டும் வருவதையும், இவற்றின் சங்கமமான நாடகம் என்பது ஒரு செறிவான மனித இயக்கத்தையும் மதிப்பீடுகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதையும் நாம் பார்க்க முடியும் என்று குறிப்பிடும் திரு.வெளி ரங்கராஜனின் கட்டுரைகள் கலைகள் மனித வாழ்க்கையை, மனித மனதை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்ற கருத்தோட்டத்தையே உரத்த கோஷமாக அல்லாமல் ஒரு இதமான தனிமொழியாக, தோழமையுடன் கூடிய கலந்துரையாடலாக, செறிவான அனுபவப் பகிர்வாக தொடர்ந்து அழுத்தமாக முன்வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த கவிஞர் சதாரா மாலதியின் கவித்துவத்திற்கும், கவிமனதிற்கும் மரியாதை செய்யும் விதமாக, அவர் மொழிபெயர்த்து அனுப்பியிருந்த மணிமேகலை நாடகப் பிரதியை(சில பகுதிகள்) நாடக வடிவத்தில் தந்தது குறித்து எழுதியுள்ள கட்டுரையிலும் அந்தக் கவிஞரை ஒரு மனுஷி என்ற அளவில் அறிமுகப்படுத்தவும் தவறவில்லை திரு. ரங்கராஜன். ஒரு படைப்பாளியை அவருடைய படைப்பின் மீதான அடிப்படை நம்பிக்கையோடு, மரியாதையோடு அணுகவும், படைப்பாளி இதை ஏன் எழுதவில்லை, இதை ஏன் இப்படி எழுதவில்லை என்று கேட்கப் புகாமல் படைப்பாளியின் படைப்பிலிருந்து விஷயங்களை உள்வாங்கிக் கொள்ளவும், ஒரு படைப்பாளியாகவும், ஒரு பார்வையாளராகவும்/வாசகராகவும் திரு. ரங்கராஜனுக்கு முடிகிறது என்பதைக் குறிப்பிட்டு சொல்வது அவசியமாகப்படுகிறது.

சமகால நாடக முயற்சிகள் உலகெங்கிலுமானவை எவ்விதம் அமைந்திருக்கின்றன, எவ்விதம் செயல்படுகின்றன என்ற விவரங்கள், சமகால, சக-படைப்பாளிகள் குறித்த அக்கறை, அவர்களுடைய படைப்பியக்கத்தை சீரிய முறையில் அறிமுகம் செய்ய வேண்டிய தேவையை அகவயமாக உண்ர்ந்திருத்தல், மொழிவளம், பேச எடுத்துக் கொள்ளும் கருப்பொருள்கள் குறித்த ஆழ்ந்த அறிவும், பரிச்சயமும், எந்தவொரு விஷயத்தையும் நுனிப்புல் மேய்தலாக அணுகாமல் அகல்விரிவாக, முழுநிறைவாக அணுகும் போக்கு, பொத்தாம்பொதுவாக, பொதுப்படையான கருத்துகளை, பார்வைகளை அள்ளி வீசாத கண்ணியம், எந்தவொரு தருணத்திலும், பேச எடுத்துக் கொண்ட எந்தவொரு விஷயத்தையும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தாத பண்பு, மொழிவளம் என ரங்கராஜனுடைய கட்டுரைகளில் பாராட்டப்பட வேண்டிய அம்சங்கள் அதிகம். எந்தவொரு விஷயம் குறித்தும் கறாறான பார்வைகளை கண்ணியமாக முன்வைக்க முடியும் என்பதற்கு ரங்கராஜனுடைய தற்கால திரைப்படம் குறித்துப் பேசும் கட்டுரையை உதாரணங்காட்டலாம்.

கட்டுரைத்தொகுப்பாக இருந்தாலும் படிக்க அலுப்புத் தட்டாமல் இந்த நூல் அமைந்திருப்பதற்கு வெளி ரங்கராஜன் பேச எடுத்துக் கொண்ட படைப்புலகங்கள், அந்த வெளிகளில் உண்மையான அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் இயங்கி வந்த, வரும் மனிதர்கள் முதலியவற்றோடு ரங்கராஜன் என்ற மனிதரின், படைப்பாளியின் ஆளுமையும் முக்கியக் காரணமாக விளங்குகிறது என்பதும் அடிக்கோடிட்டுச் சொல்லப்பட வேண்டியது.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்