மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

வெங்கட் சாமிநாதன்


ஒவ்வொரு சனிக்கிழமையும் லோக்சபா சானலில் இரவு ஒன்பது மணிக்கு இந்தியன் க்ளாசிக்ஸ் என்று ஒரு நல்ல திரைப்படம் பார்க்கமுடிகிறது. பல லாபங்கள். ஒன்று இரவு நேரம். சுற்றிலும் அமைதி நிலவும். இரண்டு ஒரு நல்ல படம். ஏன் தான் சமயத்தை வீணாக்கினோம் என்று ஒரு முறை கூட நான் வருந்த வேண்டியிருந்ததில்லை. மூன்று நம் இந்தியத் தொலைக் காட்சிகளுக்கே ஒரு மோசமான அடையாளமாகிப் போன விளம்பரங்கள். பத்து நிமிஷம் படம் பார்த்தால் அடுத்து ஏழு நிமிடங்களுக்கு விளம்பரங்கள். லோக் சபா சானலில் நாம் காணும் படங்களை விளம்பரங்கள் அரித்துச் செல்லாக்கிவிடுவதில்லை. அரசு நிறுவனமாதலால் விளம்பரத்தைப் பற்றிக் கவலை இல்லை என்று தோன்றலாம். தூர்தர்ஷன் சானல் 1-ல் இரவு 9.00 மணிக்கு வரும் ஹிந்தி படங்களை பார்க்க முயலலாம்.

போகட்டும். போன சனிக்கிழமை எனக்குப் பார்க்கக் கிடைத்தது ஒரு அசாமிய படம். படத்தின் பெயர் மோன் ஜாய். ‘எனக்கு ஆசை’, அல்லது ‘நான் ஆசைப்படுகிறேன்’ என்று அர்த்தப்படும்.

இன்றைய அசாமில் மத்திய தர இளைனர்களின் அவதியை சொல்கிறது. வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் எல்லாம் இந்தியா முழுதும் காணும் கதை தான். அந்த அவதிகளோடு இன்னும் சில அசாமிற்கே உரிய வரலாறும் பூகோளமும் தந்த அவதிகளும் சேர்கின்றன. இப்படிக் கதையைச் சொன்னால், அதிதமாக நாடகமயமாக்கப்பட்டதோ, ஒரே அழுகையும் கூச்சலுமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றும். அப்படி இல்லை. A grim reality silently suffered என்று சொல்லவேண்டும். இப்படி ஒரு கூச்சலிடாத குரல் அதிகம் எழுப்பாத சோகத்தையும் ரணத்தையும் சொல்வதற்கு ஒரு classical discipline வேண்டும். அதற்கு தாக்கு வலு அதிகம். தாகத்தின் நீடிப்பும் அதிகம்.

கதை முழுதும் சம்பவங்களால் விரிவதில்லை. நான்கு இளைஞர்கள் (மாணப், அகொன், நயன், பின் நாலாவது ஒருவன், அவன் பெயர் மறந்துவிட்டது). அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அந்நிகழ்வுகளோடு அவர்கள் சந்தித்துக்கொள்ளும்போது நிகழும் பேச்சுக்களில் கதை விரிகிறது. அவர்கள் தினமும் சந்தித்துக் கொள்கிறார்கள். வேலையற்றவர்கள் வேறு என்ன செய்யமுடியும்? ஊர் சுற்றுவார்கள். ரயிலடியில், கடைத் தெருவில், அகொனின் PCO-வில். அல்லது அகோனின் அறையில், இப்படி ஏதோ ஒரு இடத்தில். அவர்கள் இருக்கும் ஊர் அசாமீன் ஒரு இடைநிலை டவுன். கிராமமுமில்லை. நகரமுமில்லை. தின்சுகியாவுக்கும் கவுகாத்திக்கும் இடையில் இருக்கும் ஒரு ஊர். ரயில் நிலையம் உள்ள ஒரு ஊர். சுற்றி தேயிலைத் தோட்டங்கள் உள்ள ஊர்.

படத்தின் ஆரம்பமே அவர்கள் ஒரு பின்இரவு நேரத்தில் ஒரு அறையில் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். படித்தும் வேலை இல்லை. வீட்டுக்கு உதவ முடியவில்லை. பெற்றோரு படும் அவதியையும் பார்க்க சகிப்பதில்லை. இதுபற்றித் தான் பேச்சு. அனேகமாக ஒவ்வொரு சந்திப்பிலும் இந்த விஷயங்கள் அடிபடும். அசாமின் நிலையும் சரியில்லை. அடிக்கடி ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடிக்கும். சில பேர் சாவார்கள். பலர் காயமடைவார்கள். கடைகளோ வீடுகளோ இடிபடும். “இவ்வளவு நேரம் கழித்து வீட்டுக்கு ஏன் போகவேண்டும்? தூங்குகிறவர்களை ஏன் எழுப்பவேண்டும்? இங்கேயே படு” என்று ஒருவன் சொல்கிறான். வீட்டில் கவலையாயிருப்பார்கள் என்று மாணவ் வீடு திரும்புகிறான். அகோனின் PCO-வுக்கு ஒரு பெண் வருவாள் அடிக்கடி. அம்மாவுக்கு டெலிபோன் செய்யவேண்டும். “பயப்படாதே. நான் சௌகரியமாக இருக்கிறேன். பஜாருக்கு, கூட்டமாக இருக்கும் இடத்துக்கெலலாம் நான் போவதில்லை” என்று வீட்டுக்கு ஆசுவாசம் சொல்கிறாள். அகோனிடம், வேலை கிடைத்தவுடன் பணம் முழுவதையும் தந்துவிடுவதாகச் சொல்கிறாள். அவள் ஏற்கனவே நிறைய பாக்கி வைத்திருக்கிறாள். மானவையும் அவன் அம்மா ஒரு நாள் இரவு வெகு நேரம் கழித்து வருவதே வழக்கமாகிவிட்டதற்குத் திட்டுகிறள். எங்கு பாத்தாலும் குண்டு வெடிப்பாக இருக்கிறது. என்ன ஆச்சோ என்னவோ என்று கவலை இராதா? என்று கடிந்து கொள்கிறாள். மானவின் தந்தை ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். ஒரு வயதான பெண். அவளுக்கும் வேலை கிடைக்கவில்லை ஆனால் வீட்டில் இருந்த படியே ட்யூஷன் சொல்லிக்கொடுத்து அவளும் கொஞ்சம் சம்பாதிக்கிறாள், வீட்டுக்கு உதவ. மானவ் அவளிடமும் அவ்வப்போது பணம் கேட்பான். கடனாக, எல்லாக் கடனையும் சேர்த்து அவள் கல்யாணத்தின் போது தந்துவிடுவதாகச் சொல்வான். “வட்டியோடு தரணும்” என்பாள் ஷெ·பாலி. அதில் பாசம் தொனிக்கும்.

இன்னொருவன் வீட்டில் வேலையின்றி அண்ணனுக்கு சுமையாக இருக்கும் மச்சினனைத் திட்டிக்கொண்டே இருப்பாள் அண்ணி. அண்ணன் ஒன்றும் சொல்லமாட்டார். இரண்டு புறமும் இடிபடும் மத்தளம். ‘திங்கிறதுக்கு மாத்திரம் வந்துவிடு. வேலை செய்யாதே. இப்படி ஒரு ஆம்பிள்ளையா?” என்று திட்டுவாள். “வீடு மூணு லட்சம் பொறும். என் பங்கைக் கொடுத்துவிடு. நான் போகி/றேன். அதை வைத்துக்கொண்டு நான் ஏதோ வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்வேன்” என்பான் மச்சினன். அடிக்கடி இந்த தகராறும் மிரட்டலும் நடக்கும். அண்ணன் வாய்மூடி இருப்பதைச் சொல்லி இரண்டு பேரும் திட்டுவார்கள். ‘Henpecked’ என்று தம்பி திட்டுவான். ‘தம்பியை ஒரு வார்த்தை சொல்ல உங்களுக்கு மனசே வராதே’ என்று பொரிந்து தள்ளுவாள் பெண்டாட்டி. திரும்பவும் மௌனம்.

அகோன் தன் அப்பாவிடமிருந்து கிடைத்த பணத்தில் ஒரு PCO தொடங்கி அதில் பிழைக்கிறான். அதில் கடன் சொல்லிவிட்டு போன் செய்து போகிறவர்களும் உண்டு. அந்த பெண்ணைப் போல. மற்ற நண்பர்கள் அகோனைத் திட்டுவார்கள். அவளுக்கு என்று வேலை கிடைக்கப்போகிறது. என்றைக்கு உனக்குப் பணம் கிடைக்கப் போகிறது? அவள் வந்தாலே நீ உருகிவிடுகிறாய்? அவளும் சிரித்தும் கெஞ்சியும் பேசி உன்னை ஏமாற்றுகிறாளே” என்று. “நாம தினமும் குடிக்கிறோமே, அந்தப் பணம் இங்கேயிருந்து தானே வருகிறது?” என்பான் அகோன் பதிலுக்கு.

என்னென்னமோ திட்டங்கள் தீட்டுவார்கள். கடைசியில் ஒன்றும் கவைக்குதவாது என்று அவர்களே முடிவும் கட்டிவிடுவார்கள். நேற்று எங்கே குண்டு வெடித்தது, எவ்வளவு பேர் செத்தார்கள் என்ற சர்ச்சையும் எழும். அரசியல் வாதிகள், போலீஸ், மந்திரிகள், தேயிலைத் தோட்ட முதலாளிகள் எல்லோரையும் திட்டித் தீர்ப்பார்கள். வழி ஒன்றும் புலப்படாது.

பகலில் அவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடங்களில் ஒரு டீக்கடையும் உண்டு. அது கலிமுல்லா என்ணும் முஸ்லீமுடையது. அவனை இந்த நால்வரும் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். அடிக்கடி கலிமுல்லா கோபத்தோடு சொல்வான். “எத்தனை தடவை உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன். என் பேர் கோலி இல்லை. கலிமுல்லா. க-லி-முல்-லா. கலிமுல்லா. இரண்டாவது, ஏன் எப்போ பார்த்தாலும் என்னோடு வங்காளியில் பேசணும் நீங்க?. வேணும்னே செய்றீங்க. நானும் அசாமியா தான். அசாமிலே தான் என்னோடு பேசணும்” என்பான். அதற்கு இவர்கள் சொல்லும் பதில் முக்கியமானது. வேடிக்கையாக கலிமுல்லாவைச் சீண்டி விளையாடுவதான பாவனையில் சொன்னாலும். “இதோ பார் கோலி, இப்போ கொஞ்ச நாள்லே இது பங்களாதேஷாகப் போறது. இப்பவே நாங்க வங்காளிலே பேசக் கத்துண்டாத்தானே நாங்களும் இங்கே இருக்கமுடியும்?” என்று அவர்கள் அவனை மீண்டும் சீண்டுவார்கள்.

கலிமுல்லாவைச் சீண்டியதுக்கு உடனே பலன் கிடைக்கும்.” நான் என்ன வங்காளியா. அசாமியாக்கும். வேணும்னா என் ரேஷன் கார்டைக் காமிக்கிறேன். என் கிட்டே ரேஷன் கார்டு இருக்கு. வாக்கு போடற அடையாளச் சீட்டு இருக்கு. பாக்கற்¢யா. உங்கள்ளே யார்கிட்டேயாவது ரேஷன் கார்டு இருக்கா? வாக்கு போடற அடையாளச் சீட்டு இருக்கா? இல்லை. தெரியும் எனக்கு”. என்று கத்துவான். அவன் கத்துவதைக் கண்டு இவர்கள் சிரிப்பார்கள். ஆனால் அதே சமயம், “ஆமாம். கோலி கிட்டே ரேஷன் கார்டு, இன்னும் எல்லாமே இருக்கு. நம்ம கிட்டே தான் இல்லே” என்று திகைத்துப் போவார்கள்.

இன்னுமொரு அடிக்கடி இடையில் தோன்றும் காட்சி ஒன்றையும் சொல்லியாகணும். மானவ் வீட்டிலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே போவான். ஷெ·பாலி, எனக்கு சைக்கிள் வேணும். வெளியே போகணும். சீக்கிரம் வந்துடு” என்பாள். மானவ் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சாலையோரம் இருக்கும் சின்ன பாலம் ஒன்றில் உட்கார்ந்து கொள்வான். அல்லது, பார்க் பெஞ்ச் ஒன்றில். அது மெகாலி என்ற பெண் எந்த வழியாக வரப் போகிறாள் என்பதைப் பொருத்தது.மெகாலி பாலத்தைக் கடந்து கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் அவளைத் தொடர்ந்து முன்னே போய் ஒர் இடத்தில் நின்று கொள்வான். மறுபடியும் அவள் அவனைக் கடந்து செல்வாள். அவள் வருவதையும், கடந்து செல்வதையும் ஏக்கத்தோடு பார்த்தவாறே இருப்பான். தூரத்திலிருந்து பார்த்து ஏங்குவதோடு சரி. அதற்கு மேல் அவன் எதுவும் செய்ய எண்ணுவதில்லை. அவனது நண்பர்களுக்கு இவனுடைய ஏக்கம் தெரியும். ‘மானவ் ஏன் இப்படி அவஸ்தை. அவளிடம் போய் சொல். இப்படியே இருந்தாயானால், அவள் உன் கைவிட்டுப் போய் விடுவாள்.” என்று. ஆனால் அவனுக்கு தைரியம் இருப்பதில்லை. “என்ன வென்று சொல்வது? எனக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரு வேலை இல்லை. சம்பாத்தியம் இல்லை. அப்பாவுக்கே பாரமா இருக்கிறேன். என்ன தைரியத்தில் அவளைக் கேட்பது? அவள் தான் என்னைப் போல் ஒருவனுக்கு சம்மதம் சொல்வாள்?” என்று சமாதானம் சொல்வான். ஆனாலும் அவளைத் தொடர்வதும் ஏங்குவதும் நிற்பதில்லை. மேகலா ஒரு சாதாரண அழகுள்ள பெண் தான். அவள் ஹீரோயின் இல்லை. படத்தில் அவள் செய்வதெல்லாம் ரோடில் அடிக்கடி நடந்து போவது தான். இவன் தொடர்வதை தன் பாட்டுக்கு தன் காரியத்தில் இருக்கும் அவள் அறிவாளா என்பது கூட படத்தில் சொல்லப் படுவதில்லை.

எல்லாருடைய குடும்பத்திலும் உள்ள சிக்கல்கள் தொடர்கின்றன. ஒரே ஒருவனுக்கு மாத்திரம் குவஹாத்தியில் வேலை கிடைக்கவே அவன் போய்விடுகிறான். மானவுக்கு வீட்டில் நெருக்கடி முற்றுகிறது. அப்பா உடம்பு க்ஷ£ணத்தில் வீட்டிலேயே நடமாட்டம் குறைந்து கிடக்கிறார். மானவ் எப்போதும் போல் ஊர் சுற்றிக்கொண்டு இரவில் வெகுநேரம் கழித்து வீடு வருகிறான். அம்மா திட்டுகிறாள்.

சயனின் சித்தப்பன் வழக்கம் போல அண்ணனை சொத்தில் பங்கு கேட்டு மிரட்டுகிறான். கொலைக்கும் அஞ்சமாட்டேன் என்று கத்திவிட்டுப் போகிறான். அப்போதும் அண்ணன் வாய் திறப்பதில்லை.

அகோனின் PCO-வுக்கு தினம் கடன் சொல்லி பேசிவிட்டுப் போகும் பெண்ணுடன் அகோனுக்கு நெருக்கம் அதிகமாகிறது. அவளுக்கு வேலை கிடைத்து விட்டதாகச் சொல்கிறாள். ஆனால் அகோன் பாக்கிவைத்த பணத்தைக் கேட்கவில்லை. கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். ஆனால் பெற்றோர்கள் சம்மதிபபார்களா என்று பேசிக்கொள்கிறார்கள்.

ஒரு நாள் வீதியில் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு கார் அவனை உரசிச் செல்ல, சாலை ஒரத்தில் விழுந்த மானவ் திட்டுகிறான். காரில் இருந்தவன் காரை நிறுத்தித் திரும்பி வந்து மானவை அடித்துவிட்டுச் செல்கிறான். மானவ் தன் நண்பர்களைத் திரட்டிக்கொண்டு அவனைத் திரும்பித் தாக்கிவிடுகிறான். காரில் இருந்தவன் ஒரு செல்வந்தனின் மகன். அதிகாரிகளிடம், போலீசில், அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளவன். தனி இடத்துக்கு வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மானவை மிரட்டுகிறான். நண்பர்கள் மானவை மன்னிப்புக் கேட்டு விஷயத்தை முடிக்கச் சொல்கிறார்கள். ஆனால் மானவுக்கு சம்மதமில்லை. செல்வந்தனின் மகன் குண்டர்களோடு வந்து மானவை உதைத்து அவன் நண்பர்களை துப்பாக்கியால் மிரட்டி, மானவ் மன்னிப்புக் கேட்கும் நிலைக்கு வைத்து விடுகிறார்கள். அவன் உதைபட்டுக்கொண்டிருக்கும்போது தம்மால் ஏதும் உதவ முடியாததற்கு நண்பர்கள் வெட்கப் படுகிறார்கள். ஆனால் பணம், அதிகாரம், செல்வாக்கு இவற்றை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று தெரிகிறது.

ஒரு நாள் நண்பர்களுடன் ரோடு ஒரத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு போலிஸ் காரர் அவனை பயங்கரவாதி, எங்கே குண்டு வைக்க, யாரைக் கொலை செய்ய திட்டமிடுகிறாய் என்றுதிட்டி ஜீப்பில் போட்டுக்கொண்டு ஜெயிலில் அடைத்துவிடவே, மானவின் குடும்பத்துக்கு இது தெரியவருகிறது. கோர்ட்டுக்கு அலையவேண்டிவருகிறது. எப்படியோ விடுவிக்கப்பட்டு விடுகிறான். திரும்ப ஒருநாள் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை வழியில் மறித்து மானவும் அவன் நண்பர்களும் பதிலுக்கு உதைத்து அனுப்புகின்றனர். அதற்குப் பிறகு தான் நண்பர்களுக்கு பயமேற்படுகிறது. இன்ஸ்பெக்டர் பழி வாங்குவான் என்று. ஆனால் வழியில் சந்தித்த இன்ஸ்பெக்டர் தன் வழிச் சென்று விடுகிறான்.

நண்பர்கள் கூடிக் கூடி பேசுகிறார்கள். பணம் வேண்டும். நிறைய பணம் வேண்டும். வேலையோ கிடைக்கவில்லை. வியாபாரமோ எதுவும் தெரியாது. அப்போது மானவ் சொல்கிறான். இப்போது நிலவும் சூழ்நிலை பயங்கரமானது. அதை நமக்கு சாதகமாகிக்கொள்ளவேண்டும். என்ன செய்தாலும் அது பயங்கரவாதிகளின் தலையில் தான் விழும். முதலில் தயக்கங்கள் இருந்தாலும் கடைசியில் ஒரு வேகத்தில் அந்தக் காரியத்தைச் செய்துவிடுகிறார்கள். அவர்களிடம் அகப்பட்டது ஒரு அகர்வாலின் மகன். அவன் பிள்ளை உயிரொடு அவனுக்கு வேண்டுமானல் இவ்வளவு லக்ஷம் பணம் வேண்டும், என்று சொல்லி இடம் குறித்து பணமும் கைக்கு வந்துவிடுகிறது. இவ்வளவு சுலபமாக ஒரே நாள் முயற்சியில் லக்ஷக்கணக்கில் பணம் கையில்! ஆனால் இந்த அகர்வால் மகனுக்கு நம் எல்லாரையும் தெரியுமே. அவனை எப்படி உயிரோடு வெளியே அனுப்புவது? அகர் வால் பையன் கதை அத்தோடு முடிந்து விடுகிறது.

எல்லோர் கையிலும் பணம் நிறைய. இருப்பினும் பழையபடியே தெருவில், கடையில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஊர் நிலவரம் பேசுகிறார்கள். ஊர் பூராவும் ஒரே சர்ச்சையும் பரபரப்பும். அகர்வாலின் மகனைக் கடத்திச் சென்று, பணமும் வசூலித்துக்கொண்டு கொலையும் செய்துவிட்டார்கள். பத்து நாட்களாக இதே செய்தி, ஒவ்வொரு தினமும் கதையின் ஒவ்வொரு கட்டமும் பத்திரிகையில் செய்தி. ஊரில் பரபரப்பாக இதே பேச்சு. இவர்கள் பத்திரிகையில் அவ்வப்போதைய செய்தியைப் படிக்கிறார்கள். போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது பயங்கரவாதிகளை. இவர்களை யாரும் சந்தேகப் படவில்லை.

ஒரு சந்திப்பு கலியுல்லாவின் டீக்கடையில் நடக்கிறது. இவர்களை கொஞ்ச நேரம் கவனித்த கலியுல்லா சொல்கிறான், “என்ன ஆச்சு உங்களுக்கு? கொஞ்ச நாளா பாக்கறேன். வழக்கம் போல “கோலி”ன்னு கூப்பிடக் காணும். பெங்காளி பேச்சைக்காணோம். என்ன ஆச்சு?” என்று கேட்கிறான்.

சயன் தன் சித்தப்பனுக்கு அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து, ஒடிப்போ, இனி இங்கே தலை காட்டாதே என்று விரட்டி விடுகிறான். மானவ் மறுபடியும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறான், மேகாலியைப் பார்க்க. அவளை கடைத்தெருவில் தன் அம்மாவுடன் நிறைய துணிமணிகள் வாங்குவதைப் பார்த்த நண்பன் பவனுக்கு விஷயத்தைச் சொல்கிறான். இன்னமும் தாமதிக்காதே என்று. ஆனால் அதே காட்சியின் மறு ஒளிபரப்புதான் நடக்கிறது. அவனுக்கு அவளிடம் சொலல தைரியம் வருவதில்லை. “இப்போ என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. இருந்தாலும் அவளிடம் பேசவே தைரியம் வரமாட்டேன் என்கிறதே, இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நான் எதுவும் செய்யமுடியவில்லையே. முன்னர் பணம் இல்லாத போது இருந்தது போலத் தான் இப்பவும் இருக்கிறேன்” என்று நண்பர்களிடம் வேதனைப் படுகிறான்.

ஒரு நாள் மானவ்வின் தங்கை ஷெ·பாலி மானவ்வின் படுக்கையை வெயிலில் உலரப் போடு வதற்காக எடுத்து உதறும் போது படுக்கையின் அடியில் கட்டுக் கட்டான நோட்டுகள். அலறிக் கொண்டு பெற்றோரிடம் சொல்கிறாள். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. மானவ் வீட்டுக்கு வருகிறான். இதெல்லாம் என்ன என்று அம்மா கேட்கிறாள். மானவ் பதில் ஒன்றும் சொல்லாது தனது அறைக்குச் செல்கிறான். வீட்டில் ஒரே பயங்கர அமைதி. ஒவ்வொத்தரும் ஒவ்வொரு மூலையில் சுருண்டு கிடக்கிறார்கள். ஷெ·பாலி கூட மானவ்விடம் பேசவில்லை.

மறு நாள் மானவிடம் அப்பா சொல்கிறார்: “நான் இது நாள் வரை கௌரவமாக எந்தத் தப்பும் செய்யாமல் வாழ்ந்துவிட்டேன். . மானத்தோடு எப்படியோ காலம் ஓடிவிட்டது. உன்னிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. என் அஸ்தியைக் கரைக்க நீயிருந்தால் போதும் என்றிருந்தேன். இனி அதுவும் வேண்டாம். நீ வேறு எங்காவது வாழ்ந்துகொள்.” என்று தன் மெல்லிய ஈனக்குரலில் சொல்கிறார்.

மானவ் வீட்டை விட்டுப் போய்விடுகிறான். ‘தான் செய்த பாபத்திற்கு தன்னை அப்பாவும் அம்மாவும் மன்னிக்கவேண்டும்” என்று மானவ் எழுதி வைத்த கடிதம் ஒன்று அங்கு கிடக்கிறது.

கதை, வசனம், இயக்கம் மணிராம் என்பவரது. பெயர் எனக்கு புதிது. ஜாஹ்ன் பருவா என்னும் ஒரு சிறந்த கலைஞரை அசாம் திரையுலகம் தந்துள்ளது. இன்னம் ஓரிருவர் பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை. ஆர்ப்பட்டமே இல்லாது, நாடகத் தன்மையையும் தவிர்த்து, வெகு அமைதியான அடங்கிய குரலில் அசம் மாநிலமே ஒரு நிலையற்று, திசையற்று, கொந்தளித்துக் கொண்டிருப்பதை, சில குடும்பங்களில் அன்றாட வாழ்க்கையின் பாதிப்பில், அக்குடும்பங்களின் வேலையற்ற இளைஞர்களின் தவிப்பில் பிரதிபலிப்பதை அழகாகச் சொல்லி விட முடிகிறது இந்த புதிய இயக்குனரால். எல்லோரும் சாதாரண அன்றாடம் பார்க்கும் மத்திம வர்க்க மனிதர்கள். இன்றைய அசாமின் ஒரு குறுக்கு விட்டுப் படம்.

அசாம் தீர்க்க முடியாத ஒரு சிக்கலில் மாநில அரசின், இந்திய அரசின் கையாலாகாத் தனமா, குறுகிய கால சுயலாபத்திற்காக, அசாமின், நாட்டின் சரித்திரத்தையே காவு கொடுத்துவரும் சோகத்தை இந்த சாதாரண அன்றாட வாழ்க்கைச் சித்திரத்தின் மூலம் சொல்லும் தைரியம் மணிராமுக்கு இருக்கிறதே ஆச்சரியம் தான். 2008-லும் 2009-லும் அகில இந்திய திரைப்பட விழாவிலும் அசம் திரைப்பட விழாவிலும் திரையிட இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றோ அல்லது ஏதோ பரிசு பெற்றது என்றோ சொல்லப்பட்டது.

எதாக இருந்தால் என்ன, நமது அரசியல் தலைமைகள் பார்க்க, ஒப்புக்கொள்ள தைரியம் இல்லாத் ஒரு தொடரும் சோக நிகழ்வை இப்படம் முன் வைக்கிறது. மிகப் பெரிய விஷயம்.

என்னுடைய வழக்கம் போல ஒரு கடைசி வார்த்தை: ஆரவாரம் இல்லாது இந்த மாதிரி இன்றைய தமிழ் அரசியல் சமூக வாழ்க்கையை அப்பட்டமாக முன் வைக்கும் தைரியம் நம் தமிழ் நாட்டில் இல்லை. இனியும் வெகு காலத்துக்கு இராது என்று தான் தோன்றுகிறது.

வெங்கட் சாமிநாதன்/11.8.09

vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்