சமஸ்க்ருதம்: யோசிக்கும் வேளையில்…..

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

மலர்மன்னன்


மொழியியல் கற்றவனல்ல, நான். ஆய்வுமுறைகளும் அறிந்தவனல்ல. ஆகவே மொழி பற்றித் தீர்மானமாக எதுவும் சொல்ல எனக்கு அருகதை இல்லை என்றா லும் அது குறித்து என்னிடம் கேள்விகள் உள்ளன.

முதலில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பெயர் உள்ளதே அதைச் சூட்டியது யார்? ஒவ்வொரு மொழிக்கும் உரியதாஅக் ஒரு பெயர் சூட்டப்பட்டது எனில் எப்போது சூட்டப் பட்டிருக்கக் கூடும்? அவ்வாறான பெயருக்கு ஏதேனும் பொருள் உண்டா? பிற்பாடு கற்பித்துச் சொல்லப்பட்டதல்ல, இயல்பாகவே அமைந்த பொருளைக் குறிப்பிடுகிறேன். லத்தீன், இங்கிலீஷ், ஃப்ரென்ச் என்றெல்லாம் சொல்லப் படுகிறதே, அவற்றுக்கெல்லாம் தனி அர்த்தம் அந்தந்த மொழிகளிலேயே உண்டா?

சமஸ்க்ருதம் என்று ஒரு மொழி உள்ளது. அதற்கு அந்த மொழியிலேயே ஓர் அர்த்தமும் உள்ளது. சொல்லப் போனால் மொழியைக் குறிக்காமலேயே பொருள் உள்ள சொல்லாகவும் அது உள்ளது. சமஸ்க்ருதம் என்றால் நேர்த்தியாகச் செய்யப்பட்டது என்று பொருள் எனப்படுகிறது. இவ்வாறு எந்த மொழிக்காவது ஒரு காரணப் பெயர் இருக்கிறதா? பொதுவாக எதற்கு வேண்டுமானாலும் பாராட்டுரையாகக் கூறத் தக்கதாகவும் அவ்வாறு பாராட்டுரையான சொல் மொழியின் பெயராகவும் அமைந்திருக்கிறதா?

மானிடவியலாளர் ஆரியம் என ஓர் தனி மனித இனத்தை அங்கீகரிக்கவில்லை என்ற போதிலும், மொழியியலாளர் அதனை மொழி என்ற அடிப்படையில் தனிமைப் படுத்தி, அதைப் பேசுவோர் ஆரியர் என்பதாகத் தெரியப்படுத்து கின்றனர். மொழியின் அடிப்படையில் ஒரு மானிடப் பிரிவு அடையாளப் படுத்தப்படுவது இயல்புதான். ஆனால் சமஸ்க்ருதத்தைப் பொருத்தவரையில் இது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்?

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு மேய்ச்சல் நிலம் தேடியும், சுகமாக வாழத் தகுந்த பிரதேசங்கள் காணவும் அலைந்து திரிந்த நாடோடிக் கூட்டம் என்று சொல்கிறார்கள். அத்தகையதொரு நாடோடிக் கும்பல் இலக்கண ஆழமும் பொருட் செறிவும், ஏராளமான சொற் குவியல்களும், ஒரு சொல் பல்பொருள் வளமும், பலவாறான உச்சரிப்பு களுக்கும் வாய்ப்பளிக்கிற எழுத்துச் செல்வமும் உள்ள சமஸ்தருதத்தைத் தனது மொழியாகக் கொண்டிருப்பது எந்த அளவுக்கு சாத்தியம்?

தேவைக்கும் இருப்புக்கும் ஏற்பவே ஒரு மொழியில் சொற்கள் அமைகின்றன. வறண்ட பிரதேசங்களில் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு திரிந்த நாடோடிகளின் மொழியில் எப்படி ஏராளமான சொற்கள் உருவாக முடிந்தது? அவர்களின் தேவைக்கும், இருப்புக்கும், சிந்தனை எல்லைக்கும் போதுமான அளவுக்குத்தானே சொற்கள் இருக்க முடியும்?

உண்மையில் சமஸ்க்ருதம் பூவுலகின் எந்தப் பகுதியிலாவது, எந்தவொரு மக்கள் தொகுதியாலாவது எப்பொழுதாவது பேசப் பட்டமைக்குச் சான்றுகள் உள்ளனவா?

வானவியல், மருத்துவம், கட்டிடக் கலை, நுண் கலைகள் எனப் பல்வகை சாத்திரங்களும் சமஸ்க்ருதத்தில் மிகவும் ஆழமாக உள்ளன. ஒரு நாடோடிக் கும்பல் இத்தனை நுட்பமான படைப்புகளை உருவாக்கும் அளவுக்குப் பல்வேறு துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கக் கூடுமா?

தத்துவ விசாரமும் ஆன்மிகத் தூண்டுதலும் மிகுந்த, பல் பொருள் அடங்கிய சொற்கள் மலிந்த நான் மறைகள் சமஸ்க்ருதத்திற்கு முந்தைய, ஆனால் தானும் சமஸ்க்ருதமேயான மொழியில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அதற்கென்று தனிப் பெயர் ஏதும் இயல்பாய் இருந்ததாகத் தெரியவில்லை.

சமஸ்க்ருதம் என்றால் பொருள் நேர்த்தியாகக் கடமைக்கப் பட்டது என்பதாகும் என்று தெளிவாகவே புலப்படுகிறது. மொழிக்கு மாத்திரமல்லாமல் நேர்த்தி யாகச் செய்யப்பட்ட எதற்கும் பொருந்துவதாகவும் அது உள்ளது.

ஸன்ஸ்க்ருதி என்பதாக ஒரு சொல் உள்ளது. கலாசாரம், மரபு, நடைமுறை என்பனவற்றைச் சுட்டுவதற்கு இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டும் ஸன்ஸ்க்ருத் என்று ஹிந்தி மொழி பேசுவோர் சமஸ்க்ருதத்தைக் குறிப்பிடுகின்றனர்.

தமிழறிஞர்களிடையே சமஸ்க்ருதத்தை வட மொழி என்று கூறும் வழக்கம் உள்ளது. எந்தவொரு திசையில் உள்ளவர்களுக்கும் உரித்தான சொந்த மொழியாக சமஸ்க்ருதம் இல்லை. எனவே அதனை வட மொழி என்று குறிப்பிடுவது எந்த அளவுக்குப் பொருத்தம்?

ஆரியம்போல் வழக்கொழிந்து என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை (அவர் தம்மை இவ்வாறுதான் தெரிவித்துக் கொண்டார். ஒருவர் தம் பெயரை எவ்வாறு குறிப்பிட்டுக் கொண்டாரோ அவ்வாறே மற்றவர்களும் குறிப்பிடுவதுதான் முறை. சாதியை மறுப்பதாகச் சொல்லிக் கொண்டு தம்மிச்சையாகப் பிறரின் பெயர்களிலிருந்து சாதியைத் துண்டிப்பது சரியல்ல; தமது பெயரிலிருந்து சாதி அடையாளத்தை அகற்றிக் கொள்வதற்கு மட்டுமே ஒருவருக்கு உரிமை உண்டு) என்று சொல்லும்போது அவர் சமஸ்க்ருதத்தைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார். ஆனால் அப்படியொரு, அதாவது வழக்கொழியும் கேள்விக்கே இதில் இடமில்லை. ஏனெனில் சமஸ்க்ருதம் எப்போதுமே வழக்கில் இருந்ததாக நிரூபணம் செய்வதற்கில்லை. ஆனால் ஏராளமான மொழிகள் உலகம் முழுவ தும் வழக்கில் இருந்துள்ளன, இப்போதும் இருந்து வருகின்றன. அவற்றில் எல்லாம் வியக்கத் தக்க விதமாக சமஸ்க்ருதம் வேர்ச் சொல்லாகவும் நேரடிச் சொல்லாகவும் தனது இருப்பைக் காட்டிக் கொள்கிறது. அதிலும் ஹிந்துஸ் தானத்தின் எல்லாப் பகுதிகளிலும் வழக்கில் உள்ள மொழிகளில் அது தவிர்க்க மாட்டாத அளவுக்கு மிகுந்துள்ளது. குறிப்பாகத் தெற்கில் தமிழகம் நீங்கலாக மற்ற மாநிலங்களிலும், வடக்கே உள்ள மாநிலங்களிலும் அவற்றுக்குரிய மொழிகளாக உள்ளவற்றில் சமஸ்க்ருதத்தின் ஆளுமை மிகுதியாக உள்ளது. தமிழிலும் கணிசமான அளவில் சமஸ்க்ருதம் பளிச்சிடுகிறது. சமஸ்க்ருதத்தில் சில தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் சூட்சுமம் என்ன? வடக்கே உள்ள மொழிகள் சமஸ்க்ருதத்திலிருந்தும், தெற்கே உள்ள தமிழ் நீங்கலாக உள்ள மொழிகள் சமஸ்க்ருதத்தின் தாக்கத் திலிருந்தும் தோன்றியதாகக் கூறப் படுவது எந்த அளவுக்குச் சரியாக இருக் கும்? எப்போதுமே வழக்கில் இருந்திராத ஒரு மொழியிலிருந்து பல மொழிகள் தோன்றுவதும், அத்தகையதொரு மொழியின் தாக்கத்திலிருந்து மேலும் சில மொழிகள் உருவாவதும் சாத்தியந்தானா?

சமஸ்க்ருதம் என்றால் நேர்த்தியாகக் கட்டமைக்கப் பட்டது என்று சொல்லும்போது அது ஏதோவொரு கால கட்டத்தில், எவராலோ சிந்தித்துச் சிந்திதித்து, கூடிக் கலந்து ஆராய்ந்து, சிறுகச் சிறுக உருவாக்கப்பட்டது என யூகித்துக் கொள்ள முடிகிறது. அவ்வாறு அது கட்டமைக்கப்படுகிற பொழுது, ஏற்கனவே வழக்கில் உள்ள மொழிகள் பலவற்றிலிருந்தும் பொருத்தமான சொற்களைத் திரட்டிச் செம்மைப்படுத்திக் கதம்பச் சரம்போல நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டதால்தான் அது சமஸ்க்ருதமா?

விவாதித்தும் ஆராய்ந்தும் தேர்ந்து தெளிந்து தீர்மானிக்கப்பட்ட சாத்திரங்கள் சமஸ்க்ருதத்தில்தான் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை இயற்றியவர்களும் பல்வேறு திசைகளைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே உள்ளனர். தாம் ஆய்ந்தறிந்த சாத்திரங்களை சமஸ்க் ருதத்தில் இயற்றிய சான்றோர் எவரும் சமஸ்ருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டு வீட்டிலும் வெளியிலும் அதைப் பேசுபவர்களாக இருந்ததில்லை. ஏனெனில் சமஸ்க்ருதம் எப்போதுமே, எங்குமே மக்கள் மொழியாக இருந்த தில்லை. ஆனால் சாத்திரங்கள் சமஸ்க்ருதத்தில் இருப்பதால் அது சான்றோர் பழகும் மொழியாக இருந்துள்ளது எனக் கொள்ள வேண்டியுள்ளது.

காளிதாஸன் சமஸ்க்ருதத்தில் இயற்றிய காவியங்களில் சமுதாயத்தின் மேல்படி நிலையில் உள்ளவர்கள் சமஸ்க்ருதத்தில் உரையாடுவதாகவும் அடுத்த படி நிலையில் உள்ள பாத்திரங்கள் வழக்கில் உள்ள மக்கள் மொழியில் பேசுவதாக வும் அமைந்திருப்பது சமஸ்க்ருதம் மேல் நிலையில் உள்ள சான்றோர் எனத் தகும் நபர்கள் தமக்குள் கருத்துப் பறிமாற்றம் செய்து கொள்வதற்கெனத் தோற்றுவிக்கப்பட்டதேயன்றி, மக்கள் அனைவரும் பேசுவதற்கானது அல்ல என்பதைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம் அல்லவா?

ஆக, சமஸ்க்ருதமானது, எந்தவொரு திசைக்கோ, எந்தவொரு திசையில் வாழும் மக்களுக்கோ உரித்தானது அல்ல; திசைகள் பலவற்றைச் சார்ந்த சான்றோர் பலரும் கலந்து பேசி, தமக்கென ஒரு பொது மொழியின் அவசியம் கருதி, அவரவர் மொழியிலிருந்து தக்க சொற்களைத் தேர்வு செய்து மிகச் சிறந்த முறையில் மொழியொன்றை உருவாக்கியதன் பயனாகக் கிட்டியுள்ள ,அனைவருக்கும் பொதுவான சான்றோர் மொழி எனக் கொள்வது சரியாக இருக்குமா?

இன்று ஆய்வுக் கட்டுரைகளும் கருத்தரங்குகளும் அவசியம் கருதி ஆங்கிலத்திலேயே அமைவதைக் காண்கிறோம். சீன , ஜப்பானிய, ஜெர்மானிய
ரஷ்ய ஆய்வாளர்களும், அறிஞர்களுங்கூட தம் கருத்து விரைவாக அரங்கேறி அங்கீகரிக்கப்படவோ ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படவோ வேண்டும் என்பதற் காக ஆங்கிலதிலேயே தமது கருத்துகளை எடுத்துக் கூறும் நிலை உள்ளது. இதே அடிப்படையில், ஆய்வாளர்கள், சான்றோரிடையே ஆங்கிலம் இன்று வகிக்கும் இடத்தை முன்பு சமஸ்க்ருதம் வகித்துள்ளது எனக் கொள்ளலாம் அல்லவா?

எனவே ஆரியம் போல் வழக்கொழிந்து என்று நாகரிகமாகவும் செத்த மொழி என்று இழிவாகவும் சமஸ்க்ருதத்தை விமர்சிக்கத் தேவையில்லைதானே?

+++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்