வியப்புகளும் உவமைகளும் சிரிப்புகளும் : Six Suspects a Novel By Vikas Swarup (Author of Q&A a.k.a Slumdog Millionaire)

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

பரிமளம்



Slumdog Millionaire என்னும் பெயர் புகழடைவதற்குச் சற்று முன்னர் ஒருநாள் நூலகத்தில் Six Suspects கண்ணில் பட்டது. ஆசிரியர் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் ஓர் அதிகாரி என்ற குறிப்பு காணப்பட்டது. அரசு அதிகாரிகளின் புத்தகம் என் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இராது என்ற எண்ணம் முதலில் எனக்கு எழுந்தது. வெளிநாட்டில் இருக்கும் பெரும்பாலான படித்த இந்தியர்களுக்கு ஒளிவீசும் இந்தியாமட்டுமே கண்ணில் படும் என்பது நான் அனுபவத்தில் அறிந்த ஒன்று. அதுவும் வெளிநாட்டுத் தூதரகத்தில் துணை ஆணையராகப் பணியாற்றும் ஒருவர் அரசாங்கக் கோட்டுக்கு அப்பால் சென்றா எழுதிவிடுவார் என்ற ஐயமும் ஏற்பட்டது. வட இந்தியர்களின் நூல்களைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் இல்லை என்பதாலும் புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைக்க நினைத்தேன். ஆனால் முகப்பு அட்டையில் காணப்பட்ட All deaths are not equal.. என்னும் வாசகம் என்னை யோசிக்க வைத்தது.

இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு விமான விபத்தில் இறந்தவர்களுக்கும் ஒரு ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கும் அரசு வழங்கிய கருணைத்தொகையில் இருந்த பெருத்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டிய எழுதிய தன் கட்டுரையைச் சுஜாதா ‘செத்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே’ என்று முடித்தருந்தார். All deaths are not equal.. என்பது அதை நினைவுபடுத்தியதால் புத்தகத்தை எடுத்துவந்து படித்தேன்.

படித்த பிறகு Q&A வையும் கொண்டுவந்து படித்தேன். சின்னச் சின்ன வியப்புகளும் உவமைகளும் சிரிப்புகளுமாக இந்தப் புத்தகங்கள் என்னைக் கவர்ந்தன. இவை இரண்டுமே ஒருவகை சினிமாத்தனமான Romantic கற்பனைகள். இரண்டிலுமே சினிமாவுக்கும் (நடிக) நடிகைகளுக்கும் அதிக இடம் இருக்கிறது. நாவல் என்ற வகையில் எனக்குப் பிடித்த 100 நாவல்களின் பட்டியலில் கண்டிப்பாக இவை இடம் பெறா. இருந்தாலும் இவை சமூக விமரிசனம் என்ற வகையில் முக்கியமானவை.

அருந்ததி ராயின் கட்டுரைகளும் P.G.Wodehouseம் கலந்த ஒரு கலவையாக இந்தப் புத்தகங்கள் இருக்கின்றன. வேறொரு வகையில் சொல்வதானால் அருந்ததி ராய் நகைச்சுவை கலந்து எழுதியது போன்ற புத்தகங்கள் இவை.
இரண்டு புத்தங்கங்களும் ஒரே கதையின் இரண்டு பாகங்களைப் போல இருக்கின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனி நாவல் என்றும் சொல்ல முடியாது. இரண்டுமே பல்வேறு கதைகளின் தொகுப்புகள். P.G.Wodehouse பாணியில் வெவ்வேறு நிகழ்ச்சிகளையும் மனிதர்களையும் கடைசியில் அழகாகக் கொண்டுவந்து இணைத்து முடிச்சுகளை அவிழ்க்கும் விதம் Six Suspects ல் சற்றுத் தூக்கலாகத் தெரிகிறது.
***
Q&A வின் ஒரு அத்தியாயத்தில் பிச்சைக்காரர்கள் இடம் பெற்றாலும் இது பிச்சைக்காரர்களைப் பற்றிய கதை அல்ல. வெளிநாட்டு வாசகர்களுக்கு இந்தியாவின் வறுமையைக் கடைவிரித்துக் காசு பார்க்கும் செயல் என்று இந்த ஆசிரியரைக் குறை சொல்பவர்களைப் பாரதி பாடிய ‘ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’ போன்றவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று துணிந்து சொல்லலாம். (கதைகளில் தலைகாட்டும் ஒரு சில வெள்ளைக்காரர்களில் பெரும்பாலோர் முட்டாள்களாகக் காட்டப்படுகின்றனர்)

வறுமையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் விவரிக்கப்பட்டாலும் ஆசிரியர் இதற்கும் மேலே சென்று ஆட்சி, அதிகார வர்க்கம், நீதித்துறை, காவல்துறை போன்ற அரசு இயந்திரங்களின், அமைப்புகளின் தோல்வியைக் கண்டு மனம் பதைத்து என்ன செய்வதென்று புரியாத ஒரு கையறு நிலையில் இந்த நாவல்களை எழுதியிருக்கிறார். அரசு அதிகாரி ஒருவர் இப்படி எழுதுவதற்கு துணிவு வேண்டும்.
பண பலமும் அதிகார பலமும் கொண்டவர்களுக்கு காவல் துறை நேரடியாகக் குற்றேவல் செய்ய, நீதித்துறை மறைமுகமாகச் செய்கிறது. ஊடகங்கள் இவர்களுக்குப் பல்லிலிக்கின்றன என்றால் ஒரு பெண் நிருபர் சுயநலத்துக்காக அரசியல்வாதியின் படுக்கைக்கே போகிறார். நேர்மையான ஒரு காவலர் பந்தாடப்பட்டு இறுதியில் படுகொலை செய்யப்படுகிறார். அடித்தட்டு மக்கள் நசுக்கிப் பிழியப்படுகின்றனர். ஏழைகளுக்கு இந்த நாட்டில் வாழ்வு இல்லை. இதுதான் நூலின் சாரம்.
Q&Aல் வெற்றிபெறும் தர்மம் Six Suspects ல் மண்ணைக் கவ்வி மனதைப் பிசைகிறது.


janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்