தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

என்.கே. மகாலிங்கம்


அறுபதுகளில் ஈழத்தில் எழுதிய தா.இராமலிங்கத்தின் கவிதை உலகம் மற்றக் கவிஞர்களிலிருந்து மிக மிக வித்தியாசமானது. காரணம், அவர் புதுக் கவிதைகளை எழுதியது மட்டுமல்ல, அக்காலத்தில் மரபுக் கவிதைகள் எழுதிய எவருமே நினைத்தும்; பார்க்காத, தொடத் தயங்கிய கருப் பொருளையும் தன் கவிதைகளில் கையாண்டதும் தான். அவரின் கவிதைகளில் மூன்று குணாம்சங்கள் மேலோங்கி நிற்கின்றன. ஒன்று, காமம். இரண்டாது, ஆசாரம் அல்லது ஒழுக்கம் அல்லது பண்பாடு. அதாவது, யாழ்ப்பாணக் கலாசாரத்தின் போலி ஒழுக்கம். குறிப்பாக, காமம் சார்ந்தது. மூன்றாவது, அடக்குமுறையைக் கண்ணுற்றதால் ஏற்பட்ட இனவுணர்வு. நாலாவது ஒன்றும் உள்ளது. அது சரியாக வெளிவரவில்லை. அதாவது, அவருடைய ஆன்ம விசாரமும் அனுபவமும்.

சிறுகதை, நாவல்களில் காமம் சார்;ந்த யாழ்ப்பாணக் கலாசாரத்தைக் கருப்பொருளாகக் கையாண்டவர்கள் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், கே.டானியல், பவானி ஆழ்வாப்பிள்ளை என்றால் கவிதையில், அதுவும் புதுக் கவிதையில், காமத்தை கருப்பொருளாக பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படுத்தியவர் தா.இராமலிங்கம்.

அவர் கடந்த மாதம் தன் எழுபத்து ஐந்தாவது வயதில் கிளிநொச்சியில் காலமாகி உள்ளார். அவர் இலை மறை கனியாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது இருந்தவர். அவர் பிறந்த இடத்திலோ கற்பித்த, அதிபராகக் கடமையாற்றிய பாடசாலையிலோ கூட அவர் ஒரு கவிஞர் என்று கூடத் தன்னை அறிவிக்காதவர், காட்டிக் கொள்ளாதவர். ஆனால், மறைவாகவும் குறைவாகவும் எழுதி கவிதை உலகு ஒன்றில் தனித்தன்மையுடன் சஞ்சரித்தவர். ஆரம்பத்தில் 1964, 65 இல் முறையே ‘புதுமெய்க் கவிதைகள்’, ‘காணிக்கை’ என்று இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். அவை அக்காலத்தில் அதிகம் கவனிக்கப் படாதவை. ஆனால், இரண்டிற்கும் முன்னுரைகள் வழங்கியவர்கள் இரண்டு முக்கிய இலக்கிய ஆளுமைகள். ‘புதுமெய்க் கவிதை’ தொகுதிக்கு அறிமுக உரை அளித்தவர், கவிஞரும் கவிதை விமர்சகருமான இ.முருகையன். ‘காணிக்கை’ தொகுதிப் பிரதியை அண்ணளவாகக் கவனித்து விமர்சனத்துக்கு உட்படுத்தி முன்னுரை அளித்தவர், விமர்சகர் மு.தளையசிங்கம்.

அந்த இரண்டு தொகுதிகளுக்குப் பிறகு தா.இராமலிங்கம் கவிதைத் தொகுதிகள் எதையும் வெளியிடாவிட்டாலும் அவரின் கவிதைகள் சிலவற்றை ‘அலை’ போன்ற இலக்கியச் சஞ்சிகைகள் வாங்கிப் பிரசுரித்தன. அத்துடன் சில கவிதைகள், ‘ஈழத்துப் பதினொரு கவிஞர்கள்’ என்ற தொகுப்பில் வெளியிடப் பட்டுமுள்ளன.

தா.இராமலிங்கத்தின் கவிதை உருவம்;, சங்க காலக் கவிதைளின் யாப்பைப் போன்றது என்று கூறுகின்றார், கவிஞர் இ.முருகையன். சங்கக் கவிதைகள் உருவத்திற்கு பின் வந்த ஐவகைப் பாக்களிலில் ஏற்பட்ட ஓசை நயமும் மரபு ரீதியான யாப்பிலக்கண அமைப்பும் இவர் கவிதைகளில் இல்லை என்றும் குறைபடுகிறார்.

புதுக் கவிதை, ஓசை நயம், யாப்புத் தளைகள் ஆகியவற்றை வேண்டுமென்றே கைவிட்டது. செவியின்பத்திற்கு உணவளித்த காலம் போய் ஆறுதலாக தனித்திருந்து கண்ணால் வாசித்து, அமைதியாக படிமங்கள், உருவகங்கள் போன்றவற்றைக் கிரகித்து அனுபவிப்பதற்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டது. நவீன காலத்திற்கு ஏற்ப மேற்குலகில் வளர்ந்த கவிதை உருவம் அது. அதை எநசள டiடிசந ழச கசநந எநசளந என்பர். அதை வளர்த்தெடுத்தவர்கள், வோல்ற் விற்மன், டி.எஸ்.எலியற், எர்சா பவுண்ட், டபிள்யு.எச்.ஆடன் போன்றவர்கள். தமிழில் முன்னோடிகளாக, பாரதியையும் ந.பிச்சமூர்த்தியையும் சொல்வார்கள். பாரதியின் வசன கவிதைகள் வோல்ற் விற்மனின் கவிதைகளை அடி ஒற்றியவை. புதுக் கவிதைகளின் முக்கிய பண்பு உருவரீதியான பழைய யாப்புத் தளைகளை மீறியதே. அதனால் அதற்காக ஏற்பட்ட எதுகை, மோனைகளும்;;, கவிதையை அனுபவிக்க முடியாமல் தளைகளாக கட்டிப் போட்டு இறுகப் பிடித்த, யாப்பிலக்கணமும் கைவிடப்பட்டன. இருப்பினும், புதுக் கவிதையும் அதற்கேயுரிய ஓசை அமைப்;மைக் கொண்டிருக்கும் என்பதும் உண்மையே. ஆனால், அது மரபுரீதியான யாப்பிலக்கண ஓசைகளும் அல்ல.

இவ்விடத்தில் ‘கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ்ப் பாட்டாச்சே, பட்டாங்கிலுள்ள படி’ என்ற புதுமைப்பித்தனின் பிரபல்யமான கவிதை அடிகள் இருமுனையும் கூர்மையான, மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் எதிரான கத்தியாகப் பாவிக்கக் கூடியது. உண்மையில் கவிதை உள்ளதா என்று பார்க்க வேண்டுமே அன்றி பிற கருத்துக்கள் கவிதை அனுபவத்திற்;குப் புறம்பானவை, தேவையற்றவை.

உண்மையான கவிஞனுக்கு கவிதை மனமும் எழுச்சியும் வெளிப்பாடும் தான் முக்கியமே தவிர, அசைகள், தளைகள் அல்ல. அதுவும், நவீன காலத்தில், ஊற்றெடுக்கும் அடிமனத்திலிருந்து மேலேழுந்து வரும் சுயமான மேனியிலேயே எழுதப் படுவதே கவிதை.

2

காமம், காற்றைப் போல நீக்கமற இராமலிங்கத்தின் ஆரம்ப கவிதைகள் பலவற்றில் வெளிப்படுவது கண்கூடு. அந்தக் காமம், நிறைவான காமத்திலும் பார்க்கக் குறைபட்ட காமம். கள்ளக் காமம். ஓரிடத்தில் கிடைக்காத காமத்தை பிறிதொரு இடத்தில் கிடைக்கும் காமம். பிற இடங்களில் தேடும் காமம். அதற்காக மரணத்தைக் கூடத் துச்சமாக மதிக்கும் காமம். கலாசாரம் என்ற போலிக் கட்டுப்பாட்டை எதிர்க்கும் காமம். தூக்கில் தொங்கவும் தயாராகும் காமம். இப்படிப் காமத்தின் பல பக்கங்களைக் காட்டுகிறார். பின் வரும் பாடல் வரிகள் அவற்றை ஓரளவு காட்டுவதைக் காணலாம்:

‘நான் படுத்த சுடலையிலே,
கள்ளமாய்க் காமம்,
உறவாடும் மனிதனைப் பார்’

‘ஈர விறகு தந்தார்,
புகைக் குடித்து அடுப்ப+தி,
புகைச் சூண்ட பால் குடித்தன்,’

‘அரை வெறியில் வந்திடுவார்,
சுடுகுது சுடுகுது,
மடியைப் பிடி என்பார்,
மீன்னூகூது போலிருக்கும் பாட்டம் ஓய்ந்து,
சிலுநீரும் சிந்திவிடும், போய் விடுவார்,’

‘நரைக்குப் பசை ப+ச
மண்டையிலும் மயிர் கொட்டுகுது!

காமம் கொழுந்தெழுந்து
ஊனை உருக்கி
உறிஞ்சி எரிகிறது’

‘ப+ட்டித் திறப்பதற்குத்
திறப்பினை தேர்ந்தெடுக்கான்
இடித்துப் பிளந்து விட்டான்
இரத்தம் கசிந்ததம்மா’

‘கொளுத்தக் கொளுத்த
விளக்கும் நூருகுது
பெட்டியிலே குச்சியில்லை
ஆராய்ந்து என்ன பயன்?
கிலுக்கினால்…
வெறும் பெட்டி
தடவினால்
குறங்குச்சி’

போலி ஆசாரத்தை மறுத்தும் எதிர்த்தும் பேசுதல்:

‘ஆசார முட்டையிலும், கறுப்பு மயிர் கண்டேன்’

‘ஆசைக்குச் சாதியில்லை’,

‘கற்புக்கரசியாய்,
வாழ் என்று வாழ்த்தி,
சிலப்பதிகாரமும் தந்தார்’

‘உண்மை உணராமல்
மூன்றுகுறி ப+சி
முணுமுணுத்து ஆவதென்ன?’

‘என்தன் பிணிநீங்க
இறைவன் வழிபட்டு
கற்பைக் கொளுத்திவிடக்
கற்ப+ரமாய் எரிந்து
காணிக்கை ஆனதென்றேன்’

காமம் கிடைக்காதபோது, முற்றுப் பெறாதபோது, அதற்குப் பங்கம் வந்தபோது,

‘ஓடிவந்தயல்
விளக்குப் பிடித்து வேலியால் பார்த்தது
விலக்குப் பிடிக்க எவருமே வந்திலர்’

‘உலக்கை கிடந்தது
வலக்கை துடித்தது
உச்சந்தலை அடி
ஓங்கி ஒரே அடி’

அவன் கட்டிய தாலியை அறுத்தெறுந்தேன்’

‘தூக்கட்டும் தூக்கட்டும்
தூய்மை துலங்க –ஒரு
யுகம் பிறக்கும்’

3

தா.இராமலிங்கத்தின் கவிதைகள், பொதுவாக அனைத்துமே, குறியீடுகளும், படிமங்களும் நிறைந்தவை. கவிதைகளுக்கு அணி சேர்க்காமல் அவையே கவிதைகளாக நிற்பவை. அவற்றைப் புரிந்து கொள்ளாவிட்டால் கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது.
வெளிப்படையாகச் சில சொற்கள், சொற்கூட்டம் உள்ளன. அவ்வளவுந்தான். உணர்ச்சி, உருவம், உள்ளடக்கம், கற்பனை என்று ஒன்றை ஒன்று வெட்டி ஒட்டியும் தன் போக்கில் தன் எல்லையைக் கண்டடைகின்றன.

ஈழத்துப் பதினொரு கவிதைகள் தொகுதிலுள்ள கவிதைகள் எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதப் பெற்றவை. அவற்றின் கரு எமது இனப் பிரச்சினையினால் ஏற்பட்ட துன்பங்கள்.

‘மாரி மிகுந்து
நிலம் கசிந்து ஒட்டுகுது
ஓடு கசிந்து சிந்த
ஒளியும் அணைகிறது!

கோழி குளறுகுதே!!
மரணாய்தான்! மரணாய்தான்!
குழறக் குழறக் கொண்டு போகுது!!

‘கதவைத் திறப்பம் என்றால்
நெஞ்சு பதறுகுது!’

என்றும்,

பாட்டம் பாட்டமாய்
மழை கொட்ப் போவதனை
மூடிக் கிடக்கும்
முகிற் கூட்டம் காட்டுகுது
எமக்கு
ஓலைக் குடிசை என்றாலும்
ஒதுங்கி இருக்க
இடம் வேண்டும்
வாருங்கள்..

என்றும்,

கேணி
சிதறி விட்டது

இளைஞரை இதனுள்
கொணர்ந்து நிறுத்தி
குண்டால் தகர்த்து
படிக்கட்டு எல்லாம்
பாறிப் பிளந்தன
இரத்தப் பெருக்கில்
தீர்த்தம் சிவந்தது’

இராமலிங்கம் தன் கவிதை மொழிக்கு யாழ்ப்பாண வட்டார மொழியையே தேர்ந்தெடுத்திருக்கிறார். அதை மிக இலாவமாகவும் அதற்கேயுரிய இழுப்புக்களுடனும் அளபெடைகளுடனும் உபயோகிக்கிறார், அவை கவிதைகளுக்கு ஒரு பின்னணியையும் மொழியையும் தாக்கத்தையும் கொடுக்கின்றன.

தா.இராமலிங்கம் தன் கவிதைகளை யாரையும் தேடிப் போய்; பிரசுரித்தவர் அல்ல. அதனால் அவர் கவிதைகளில் பல பிரசுர வெளிச்சத்தை எட்டிப் பார்க்காமல் இருட்டறைகளிலும் நிலத்திற்கடியிலும் மூட்டை கட்டி புதைத்து வைத்திருப்பதாக அவருடைய மகள் செல்வி என்னிடம் சொன்னார். அந்தப் புதையல்கள் யார் கையில் அகப்படுமோ அல்லது அகப்படாமல் போய் விடுமோ என்ற பயம் எனக்குண்டு. அவை வெளி வரவேண்டும். அவருக்கு இன்னொரு பக்கம் இருந்ததை சக பயணியாகவும், அவரின் தமிழ் மாணவனாகவும் இருந்த நான் அறிவேன். அப்பக்கம் அவர் வெளியிட்ட கவிதைகளில் எதிலுமே சரிவர வெளிவரவில்லை என்பது என் ஆதங்கம். அது அவருடைய ஆன்ம விசாரமும், அனுபவமும். அவர் ஒரு சித்தரைப் போன்று வாழ்ந்தவர். தன்னை அழுத்தாதவர். பிரபல்யம் வேண்டாதவர். தன்னுள் ஒடுங்கிச் சுகம் கண்டவர். அவரின் கவிதைகள் பேசும் அளவு கூட அவர் பேசாதவர். அவரைக் கண்டு பிடிப்பது தமிழ்க் கவிதையின் ஆன்மாவைக் கண்டு பிடிப்பது போன்றது.

Series Navigation

என்.கே. மகாலிங்கம்

என்.கே. மகாலிங்கம்