வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

தேவமைந்தன்



கணங்கள், காலவெள்ளத்தில் நீர்க்குமிழிகள் போல் உடனே தோன்றி உடனே மறைய வல்லவை. அவற்றை எழுத்தால் பிடிப்பது என்பது எல்லோருக்கும் எளியதன்று. எளிமையாக வாழ்ந்து எளிமையாகப் பழகி அன்புடன் வாழக்கூடிய எழுத்தாளர்களுக்கே அது கைவரக் கூடும். அவ்வாறு வாழ்ந்த வல்லிக்கண்ணன் அவர்களால் வண்ணநிலவன் என்று புனைபெயர் சூட்டப்பெற்றவரான இராமச்சந்திரன், அவற்றைத் தன் எழுத்தால் வளைத்துப் பிடிக்கவும் செறித்து வைக்கவும் சேமிக்கவும் முயல்கிறார்.

‘நாலாறு மாதமாய்க் குயவனை(படைத்தோன்) வேண்டி’ உலகுக்குக் கொண்டுவந்த ‘தோண்டி’யை(உடம்பை) ‘நந்தவன’த்தில்(உலகத்தில்) ஓர் ஆண்டி(“கொ[ண்]டுவந்த தொன்றுமி[ல்]லை / இனிக் கொ[ண்]டுபோவது மொன்றுமில்லை” என்று வாழ்வதால் மனிதனை ஆண்டி என்றார் சித்தர்) கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்த கதையாய் விபத்தேபோல் பிறந்து, வேறு வழியே இல்லாமல் வளர்ந்து, வாழ்ந்த கணங்கள் வசப்படாததால் பிறந்தது முதலே செத்து, ஒருநாள் தாங்களே முற்றிலுமாகத் தொலைந்தே போய்விடும் மனிதர்களிடையே கணங்களைச் செறித்து வைக்கவும் சேமிக்கவும் இயன்றால் தங்கள் படைப்பில் உறைந்துபோக வைக்கவும் முயற்சி செய்பவர்கள் இல்லாமலா போவார்கள்?

இவ்வாறு, கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடிக்கும் ‘விக்கிரமாதித்திய’ முயற்சியினூடே விளையும் தவிப்பை, ‘மனச் சிற்பங்கள்’ என்ற கதையில் படர்க்கைக் கூற்றாக வண்ணநிலவன் பதிவு செய்திருக்கிறார்.

“பொதுவாகவே வாழ்வு கடந்த கால நினைவுகளிலும், நிகழ்காலச் சம்பவங்களிலுமாக அல்லாடிக் கொண்டிருக்கிறது. நினைவிலும் நிஜத்திலுமாக நாட்கள் கழிகின்றன. நிஜம் நினைவுச் சருகாகி மனதை நிறைக்கிறது. இது மனதின் அவஸ்தையா, வாழ்வின் அவஸ்தையா என்பதே புரிவதில்லை. சம்பவங்களின் தொகுப்பு நாளாவட்டத்தில் நினைவுகளாய் செமித்து, நிகழ்காலத்தில் மனமொன்றவிடாமல் சஞ்சலப்படுத்துகின்றன. இச்சலனமே இல்லாமல் காலமும் சம்பவங்களும் உறைந்துபோகக்கூடாதா என்று மனம் ஏங்கிற்று. நிகழ்காலமும் நடப்புலகும் உறைந்து, உலகு பனிச்சிற்பம் போலாகி விடக்கூடாதா?…….எல்லோருமே இப்படி நினைவிலும் நடப்புலகிலுமாக உழன்று உழன்று சஞ்சலப்படுகிறார்களா? ஆனால் அது தன்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும் துக்கமென்று நினைத்துக்கொள்வது அவனுக்கு இதமாக இருந்தது. மற்றவர்கள் ஏதோ முடிவுக்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த முடிவில் நின்று கொண்டுதான் காரியமாற்றுகிறார்களென்பது துல்லியமாகத் தெரிகிறது. அந்தத் தர்க்கநிலை தன் மனதுக்கு மட்டுமேன் கூடிவரவில்லை என்பது அவனுக்கு வெகு விசித்திரமாக இருந்தது. கடந்த காலத்திய நினைவுகள் தரும் அவஸ்தையை அந்த முடிவு நிர்த்தாட்சண்யமாகச் சுருக்கிவிடும் என்ற யுக்தி தோன்றியது. எல்லோருமே கடந்த காலத்தின் துயர நினைவுகளோடுதான் வாழ்கிறார்கள். ஆனால் நிகழ்காலத்தோடு ஒன்றியைந்திருப்பதுபோல் பாசாங்கு செய்கிறார்கள்.”

‘மனச்சிற்பங்கள்’ கதை வெளியான இதழ் – ஆகவும் பொருத்தமாக, கணங்களின் முழுமையான ‘காலம்’ என்ற பெயரையே தாங்கியதும் இன்னொரு வியப்பு. ஒவ்வொரு உவர்நீர்த்துளியும் கூட்டிணைந்திருப்பதுதானே கடல்? கடல் என்பது அந்த ஒவ்வொரு உவர்நீர்த் துளியும்தானே? கடலிலுள்ள அந்த ஒவ்வொரு உவர்நீர்த்துளியும் தான் கடலல்ல; கடல் முற்றிலும் வேறானது என்று நினைப்பது போன்ற சஞ்சல உணர்வுடன்தானே ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்து சலிக்கிறோம்! கடலை எண்ணி உவர்நீர்த்துளி தன்னை வேறுபடுத்திக்கொண்டு ஏங்குவதேபோல் நாம் அதைக் கடவுள் என்றாலென்ன! ‘Collective Unconsciusness’ என்றாலென்ன?

ஏனோ, மெய்யுணர்வாளர் ஜே.கே. நினைவுக்குள் வருகிறார். ஜே.கே. என்று உலகத்தாரால் அன்புடன் அழைக்கப்பெறும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, இந்த – கணங்களை வளைத்துக் கையகப்படுத்தும் முயற்சியை உறுதிப்படுத்தி வைத்தார். ஒவ்வொரு சொற்பொழிவின் தொடக்கத்திலும் இந்த முயற்சியில் விடாது இறங்கியவர் அவர். அவ்வாறே நம்மைச் செய்து பார்க்கவும் தூண்டியவர். ‘Living in the Present’ என்ற தன் வாழ்வியல் கோட்பாட்டை வெறும் கருதுகோளாகக் கொள்ளாமல், ஒவ்வொருவரும் செயல் வடிவமாக்கிக் கொள்ள, அவர் அவ்வாறு பரிந்துரைத்தார். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு நம்மைச் சூழ்ந்து நிகழும் ஒவ்வொன்றையும் எழுத்தில் பதிவு செய்து பார்க்க அறிவுறுத்தினார். ‘Conditioning And The Urge To Be Free’ என்ற பொழிவில் முதல் மூன்று பத்திகள் அதாவது ஐம்பத்தாறு வரிகளில் அவர் அந்த வித்தையைச் செய்து காட்டியிருக்கிறார். அதைப் புரிந்து கொண்டால், வண்ணநிலவன் ஆங்காங்கே குறிப்பிடுவதுபோல், விண்மீன்கள் செய்யும் ஒலியையும் நாம் கேட்க முடியும். மரஞ்செடிகளின் மணத்தையும் – ஊரைத் தாண்டிய, பனைவடலிகளின் சொந்தமான தேரிக்காட்டு மணலானது – நிலவொளியில் குளிர்ந்துபோயிருக்கும் பொழுது வெளிவிடும் விவரிக்க முடியாத மணத்தையும்; விடிவதற்குச் சற்று முன்னால் வெளிவிடும் பச்சைப் பனை ஓலைகளின் வாடையையும்; நல்ல மத்தியான வேளையில் வெளிவிடும் – எண்ணெயில் வறுத்த முறுக்கு வற்றலின் மணத்தையொத்த ஒருவிதமான காரநெடியையும் [அதே மணம் தன் தாயின் உடல்மணமாக விளங்கிய ஞாபகத்தையும் – ‘மெஹ்ருன்னிஸா’ கதை); ஆடுவளர்க்கும் கீழ்நடுத்தரக் குடும்பத்து வீட்டு வாசல் பக்கமிருந்து திடீரென்று வீசும் ஆட்டுப்புழுக்கை மணத்தையும் உணர – முகர முடியும். ‘எங்காவது குரைக்கும் நாய்கள், எப்போதாவது கேட்கும் சைக்கிள் மணிச் சத்தம்,’ ‘தோட்டத்தில் பனை ஓலைகள் காற்றில் உராயும் சத்தம்.’ ‘ஆடு, தூணில் கட்டியிருந்த அகத்திக் கீரையை மொறுக் மொறுக்கென்று அவசரத்தோடு கடித்துத் தின்கிற சத்தம்’ முதலான பற்பல ஓசைகளைச் செவிமடுக்கவும் முடியும். அடிவானத்தின் மேலே நிலவு வரும் வேளையில் பூவரச மரங்கள் காற்றில் லேசாக அசைந்து கொண்டிருக்கும் கோலம்; அரசியல் தொண்டன் வீட்டு வாதமடக்கி மரத்தடியில் தொய்ந்துபோன ஒரு நார்க்கட்டிலும், முதுகுப்பட்டை இல்லாத இரண்டு ஸ்டீல் சேர்களும் கிடப்பதும், அந்த வீட்டுக்கு உடையவன், தன்னைப் பார்க்க வருபவர்களை அந்த நாற்காலிகளில் அமர்த்திவிட்டு, தான் அந்த நார்க்கட்டிலின் மிகவும் தொய்ந்துபோயிருக்கும் மத்திய பகுதியில் உட்கார்ந்து சமாளிப்பதும் பிறவும் கண்டுணர முடியும். இந்தக் கண்டுணர்தல்(observation) வண்ணநிலவன் கதைகளில் சற்றுத் தூக்கலாகவே உள்ளமைக்குத் ‘தாய்’ இதழில் வெளிவந்த ‘வலி’ கதை, பானைச் சோற்றுக்கு ஒரு பதம் மட்டுமே.

இந்தக் கட்டுரை வெளிவரும்பொழுது முதிய(அறுபது வயதும் அதற்கு மேலும்) வயதில் இருப்போர்க்குத் தெரிந்த ஒன்றை வண்ணநிலவன் மறவாமல் பதிவு செய்திருப்பதையும் இங்கே குறிக்க வேண்டும். இவர்களின் இளம் வயதில் இவர்கள் பார்த்துப் பழகிய இரயில்வே ஸ்டேஷன்களின் ‘ஜீவன்,’ இன்றைக்குள்ள தொடர்வண்டி நிலையங்களில் உயிர்த்துக்கொண்டிருக்கிறதா என்ன? நான் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை அரசியல் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கல்லூரிக்கு மேற்கே இருந்த கோவை இரயில்வே நிலைய ‘ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டா’லில் ஆக்கபூர்வமாகக் கழித்த கணங்களும்; அங்கே ‘மாணவர் சலுகை’யில் ஆறே ஆறு ரூபாய்க்கு வாங்கிய ‘Complete Shakespeare'(E.L.B.S. வெளியீடு) புத்தகமும் மறக்கக் கூடியவையா?

இது “பழசைப் பேசும்” பழக்கமல்ல. ‘டென்ஷனும் அவசரமும்,’ உண்ணும் உணவில்கூடக் கைவைத்துவிட்ட – கைவைக்க விட்டுவிட்ட இன்றைய இளந்தலைமுறைக்கு, இப்படி நீங்களும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்து பார்க்கவும் பதிவு செய்யவும் முடியும் என்று அக்கறையோடு பரிந்துரைக்கிற முயற்சி… அவ்வளவே.

வண்ணநிலவன் பதிவிலுள்ள – இரண்டு தலைமுறைக்கு முந்திய(30 ஆண்டுகள் கொண்டது ஒரு தலைமுறை ) இரயில்வே ஸ்டேஷனைப் பார்த்துவிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்வோம்…

“அந்த ஊரைப் போலவே அந்த ஸ்டேஷன் கூட மாறித்தான் போய்விட்டது. ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டாலில் இப்போது யாரோ இருந்தார்கள். ஸ்டாலுக்கு எதிரே பிளாட்பாரத்தின் கூரையில் தொக்கிக் கொண்டிருந்த ‘இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்தீர்களா?’ போர்டைக் காணவில்லை. உடனே மனம் நழுவிக் கீழே விழுந்து விட்டது. அந்த போர்டு இலாமல் அந்த ஸ்டேஷனை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அது இல்லாமல் ஸ்டேஷன் மூளியாகிவிட்டிருந்தது……..

கூட்ஸ் வேகன்கள் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. பின்புறமிருந்த வேகன்களில் ஒன்றில் ஒரு ரயில்வே தொழிலாளி தொற்றிக்கொண்டு பச்சைக் கொடியை வேகமாக ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் கொடியை ஆட்டிய வேகத்துக்கும் அந்த வேகன்கள் நகர்ந்து சென்ற வேகத்துக்கும் சிறிதும் இசைவே இல்லாமல் இருந்தது……

அரசமரத்தைச் சுற்றி வட்டமான சிமெண்ட் மேடை இருந்தது. அவ்விடம் பிளாட்பாரத்தின் ஒருகோடிதான் என்றாலும் ஸ்டேஷனுக்குள் இன்னும் அரச மரத்தைப் பேணி வந்தது அவனுக்கு ஏதோவொரு இதத்தைத் தந்தது. எல்லாமே இப்படிப் பழமையும் புதுமையுமாகக் கலந்துதானிருக்கின்றன போலும்…

காற்றில் நிலக்கரி மணம் மிதந்து வந்தது. எங்கோ பக்கத்தில் நீராவி இஞ்சின் நின்று கொண்டிருக்க வேண்டும்……

ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டால்களுக்கும் ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் விவரிக்கவொண்ணாத மதுரமான தொடர்பு இருப்பதுபோல், ரயில்வே பிளாட்பார வெண்டர்களுக்கும், ஸ்டேஷன்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோல் தோன்றியது.”

*******
பார்வை நூல்:
வண்ணநிலவன் கதைகள். சந்தியா பதிப்பகம், 52, முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை – 600 083, தமிழ்நாடு.
E-Mail: piththan@yahoo.com

****
karuppannan.pasupathy@gmail.com
http://360.yahoo.com/pasu2tamil
http://kalapathy.blogspot.com
http://httpdevamaindhan.blogspot.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்