வெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

ஹரன் பிரசன்னா


வெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)

இலக்கியத்தன்மையையும் மாற்று உத்திகளையும் யதார்த்தையையும் ஒருங்கே கொண்ட நவீன நாடகங்களின் உலகம் தமிழில் வேர்கொண்டபோது இவற்றிற்குரிய களமாக 1990ல் வெளி வரத்தொடங்கியது வெளி நாடக இதழ். நவீன நாடகங்களின் கூறுகளை நம் பாரம்பரிய நிகழ் மரபிலிருந்தும் தெருக்கூத்துகளிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் உள்வாங்கி புதிய பரிமாணத்தை, புதிய உலகை சிருஷ்டிக்கமுடியும் என்கிற உண்மையை தொடர்ச்சியாக 9 ஆண்டு காலத்திற்கு வெளியான இந்த வெளி இதழ்கள் தமிழ் உலகிற்கு உணர்த்தின. வெளி ரங்கராஜன், சே.ராமானுஜம், ந.முத்துசாமி, கே.வி.ராமசாமி உள்ளிட்ட பல்வேறு நாடகக் கலைஞர்களும் வெங்கட் சாமிநாதன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் வெளி இதழில் தொடர்ந்து தீவிர பங்காற்றினர். இந்த இதழ்களில் வெளி வந்த சிறப்பான பகுதிகளை கட்டுரைகள், நாடகங்கள், பேட்டிகள் என்கிற மூன்று பிரிவில் வெளி ரங்கராஜன் தொகுத்திருக்கிறார்.

ஆவண முக்கியத்துவம் வாய்ந்ததும் சிறப்பான இலக்கிய வாசிப்பிற்கும் உரியதுமாக சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.

கோபால் ராஜாராம் தனது முன்னுரையில் “தமிழில் சீரிய கலாசார முயற்சிகள் எல்லாமே சிறு பத்திரிகை இயக்கத்தினரால் தான் மேற்கொள்ளப்பட்டது. நாடக முயற்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் தொடர்ச்சிதான் ரங்கராஜன் மேற்கொண்ட “நாடக வெளி” பத்திரிகை வெளியீடு. இதன் பக்கங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவெங்கிலும் நிகழ்ந்த முக்கிய நாடக நிகழ்வுகளும், உலக நாடக இயக்கத்தின் முக்கிய போக்குகளும் பதிவு பெற்றன. பல நாடகப் பிரதிகள் வெளியாயின. தமிழில் வெளிவந்த முக்கிய நாடகங்களின் வரலாற்றுப் பதிவாக பட்டியல் வெளியாயிற்று. நாடக ஆளுமைகள் பற்றிய அறிமுகங்களும், விமர்சனங்களும் வெளியாயின. இந்தத் தொகுப்பு “நாடக வெளி”யின் சாரமான படைப்புகளை உள்ளடக்கியது. ரசனைக்கும் ஆய்வுக்கும் உரித்தாகவேண்டிய இந்தத் தொகுப்பு” என்கிறார்.

வெளி இதழ்த்தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)

தொகுத்தவர்: வெளி ரங்கராஜன் – பக்கங்கள்: 320 – விலை: 160

Series Navigation

ஹரன் பிரசன்னா

ஹரன் பிரசன்னா