மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம்(23.10.1908-31.08.1989)

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

முனைவர் மு.இளங்கோவன்



சுப்பிரமணியபாரதியாரின் புதுச்சேரி வருகை நமக்கு ஒரு பாவேந்தரைத் தந்தது.பாவேந்தரின் தமிழ் இலக்கிய வருகை நமக்குப் பாரதிதாசன் பரம்பரை என்ற ஒரு பாட்டுப்பட்டாளத்தையே தந்தது.ஆம்.பாவேந்தரைத் தம் ஆசிரியராக எண்ணிக்கொண்டு பாடல் எழுதும் ஒரு பாவலர்கூட்டம் தமிழகத்தின் கவிதைத்துறையை ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தம் கைப்பிடியில் வைத்திருந்ததையும் இன்றும் அதன் தாக்கம் தமிழகத்தில் உள்ளதையும் நடுநிலையுடன் சிந்திப்போர் உணர்வர்.அப்பாவேந்தர் வழியில் பாடல்புனைந்து மறுமலர்ச்சியை உண்டாக்கியவர் புதுவைச்சிவப்பிரகாசம் என்னும் புதுவைச்சிவம்.இவர்தம் நூற்றாண்டு விழாக்கள் புதுவையில் அரசுசார்பிலும்,தமிழ்இலக்கிய அமைப்புகள் சார்பிலும் நடைபெறும் வேளையில் அவர்தம் வாழ்க்கையையும் தமிழ்இலக்கியப் பணியையும் இக்கட்டுரை நினைவுகூர்கிறது.
புதுவைச்சிவம் இளமைப்பருவம்

புதுச்சேரியின் முத்தியால்பேட்டையில் தளவாவீராசாமி வீதியில் வாழ்ந்த சண்முக வேலாயுதம், விசாலாட்சி யம்மாள் ஆகியோரின் மகனாகப்பிறந்தவர் புதுவைச்சிவம் எனப்படும் சிவப்பிரகாசம். திண்ணைப்பள்ளியிலும், பின்னர் அரசுப்பள்ளிகளிலும் பிரஞ்சும்,தமிழும் பயின்றவர்.சின்னாத்தாமுதலியார் என்பவரின் வழியாகக் குடிஅரசு இதழைப் படிப்பதில் ஆர்வம் காட்டினார்.இதனால் தந்தை பெரியாரின் கருத்துகளில் ஈடுபாடும் பிடிப்பும் ஏற்பட்டன.

புதுவை முத்தியால்பேட்டை இராசகோபால் செட்டியார் இல்லப் புதுமனைவிழாவிற்குப் பெரியார் வருகைபுரிந்தார்.புதுவைச்சிவம் நேரடியாகப் பெரியாரிடம் அறிமுகமானார். பெரியாரின் புதுச்சேரி வருகை சமய உணர்வாளர்களை எதிராகச் செயல்படத்தூண்டியது. இதனால் புதுவையில் வைதீகமாநாடு(1927) என்னும்பெயரில் பெரியார்கொள்கைக்கு மறுப்புகூறும் மாநாடு ஒன்று புதுச்சேரியில் நடைபெற்றது.திரு.வி.க அவர்களும் கலந்துகொண்டு மேடையில் இருந்தார்.சுப்புரத்தினவாத்தியார்(பாரதிதாசன்) மேடையில் பேசுபவர்களின் பேச்சை மறுத்துப்பேச கால்மணிநேரம் தமக்கு ஒதுக்குமாறு கேட்க,வாய்ப்புமறுக்கப்பட்டது. அப்பொழுது பாவேந்தரைச்சூழ்ந்திருந்த தோழர்களுள் புதுவைச்சிவமும் ஒருவர்.அன்றிலிருந்து பாவேந்தருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பைப்பெற்றவர் புதுவைச்சிவம்.

மாணவராகவும்,தோழராகவும்,நண்பராகவும் பழகினர்.பாவேந்தரின் கவிதைகளைப் படியெடுத்து இதழ்களுக்கு அனுப்பும் பணிகளில் சிவம் துணையாக இருந்தார்.பாவேந்தரின் தொடர்பு புதுவைச்சிவத்தின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.புதுவைச்சிவம் நல்ல மாணவராகவும், ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் , கவிஞராகவும்,திராவிட இயக்க உணர்வாளராகவும் மாறினார்.
பாவேந்தரின் தொடர்பு புதுவைச்சிவத்தைக் கவிஞராகவும்,சீர்திருத்தக்காரராகவும் மாற்றியது என்பதைப்
புதுவைச்சிவமே பதிவுசெய்துள்ளார்.’அது(சுயமரியாதை இயக்கம்)தன்னிகரற்ற இருவரை எனக்கு ஆசிரியராகவும் அளித்துள்ளது.அவர்களுள் ஒருவர் எனக்கு உலகப்பொது அறிவை ஒருவாறு உணர்த்தி வருபவர்; மற்றவர் தமிழறிவை வளர்த்தவர்;முதல்வர் பெரியார் அவர்களாவர்;இரண்டாமவர் கனகசுப்புரத்தினம் அவர்களாவர்(பெரியார் பெருந்தொண்டு, ப.7,8) என்று தம் ஆசிரியர்களைப்பற்றி நினைவுகூர்ந்துள்ளார் புதுவைச்சிவம்.

பாவேந்தர் புதுவைச்சிவம் தொடர்பு

பாவேந்தர் அரசுப்பணியில் இருந்ததால் சமூகப்பணிகளில் நேரடியாக ஈடுபடமுடியாத நிலை இருந்தது. எனவே தமக்கு நம்பிக்கைக்கு உரியவர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு இதழ்களை நடத்தியும், இயக்கப் பணிகளை நடத்தியும்,பல்வேறு அமைப்புகளைக் கட்டியும் பணிகளைச் செய்தார்.இவ்வகையில் பல்வேறு இதழ்களை நடத்தும்பொழுதும்,இயக்கப்பணிகளைச்செய்த பொழுதும் புதுவைச்சிவம் பாவேந்தரோடு துணைநின்றுள்ளார்.பின்வரும் சான்றுகள் இதனை மெய்ப்பிக்கும்.

பாவேந்தரின் முயற்சியால் ம.நோயல் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த புதுவைமுரசு இதழின் பொறுப்பாளராகவும் சிவம் விளங்கியவர்.1931 இல் கிறித்தவ பாதிரியார்களைப் பற்றி எழுதியமைக்கு அப்பாதிரியார்கள் புதுவைச் சிவம் மீது மான இழப்பு வழக்கினைத் தொடுத்தனர். புதுவைச்சிவத்திற்கு ஆறுமாதத் தண்டனையும் 500 பிராங் தண்டத்தொகையும் அளிக்கப்பட்டது. பின்னர் பாரீசில் நடைபெற்ற வழக்கு வினவலில் வழக்குத்தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுவைச்சிவத்தின் தந்தையார் மறைவுற்ற சூழலில் அவர்களின் வீடு ஏலத்தில் போனது. அப்பொழுது பாவேந்தர் தம்வீட்டின் ஒருபகுதியை ஒதுக்கிப் புதுவைச்சிவம் குடும்பம் தங்கியிருக்க உதவினார்.பிரவே என்னும் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தனியார் பள்ளியொன்றில் தமிழாசிரியர் பணியேற்றார்.
1935 இல் பாவேந்தரின் விருப்பத்திற்கு ஏற்ப சுப்பிரமணியபாரதி கவிதாமண்டலம் என்னும் இதழ் வெளிவந்தது.அதன் பொறுப்பாளராகப் புதுவைச்சிவம் செயல்பட்டார்.

1940 இல் பாவேந்தர் தலைவராகவும்,புதுவைச்சிவம் செயலாளராகவும் இருந்து நடத்திய புதுவை இலக்கியமன்றத்தின் சார்பு அமைப்பாகத் தமிழிசை இயக்கம் இருந்தது. இத்தமிழிசை இயக்கத்தின் தேவை உணர்ந்து பகுத்தறிவு,தமிழ் உணர்வு ததும்பும் பல பாடல்களை இயற்றினார். ஞாயிறு நூற்பதிப்பகம் தொடங்கிப் பல்வேறு திராவிட இயக்கம் சார்ந்த எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டார்.அவ்வகையில் அறிஞர் அண்ணாவின் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட நூலான ஆரியமாயை நூலைப் பிரஞ்சு இந்தியாவில் வெளியிட்டார்.மேலும் பாவேந்தரின் புரட்சிக்கவி,மகாகவி பாரதியார் முதலான நூல்களையும் வெளியிட்டார்.

புதுச்சேரியில் 02.07.1945 இல்நடைபெற்ற திராவிடர் கழகத் தொடக்கவிழா மிகப்பெரிய மாநாடு போலத் திட்டமிடப்பட்டு நடந்தது.இம்மாநாட்டில் பாவேந்தரும்,கலைஞர் கருணாநிதி அவர்களும் அரம்பர்களால் தாக்கப்பட்டனர்.பாவேந்தர் வரவேற்புக்குழுத் தலைவராகவும்,புதுவைச்சிவம் செயலாளராகவும் செயல்பட்டனர்.இவ்வாறு திராவிட இயக்கப்பணிகளில் ஈடுபாட்டுடன் உழைத்த புதுவைச்சிவம் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரைப் பிரிந்து திராவிட முன்னேற்றக்கழகம் கண்டபொழுது தி.மு.க.வில் இணைந்து பணிசெய்தார்.புதுவையில் திராவிடமுன்னேற்றக்கழகம் வளர்வதற்குப் புதுவைச்சிவம் அவர்கள் பெரிதும் காரணமாக இருந்தவர்.புதுவையின் துணைமேயராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.பின்னாளில் தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டார்(1969- 1975).அப்பொழுது நாடாளுமன்றத்தில் இராச மானியத்தை ஒழிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட 26 வது அரசியல்திருத்த மசோதாவை ஆதரிக்கும் முறையில் பேசினார்.அப்பேச்சில் மன்னராட்சியை ஒழிப்பதற்குப் பாவேந்தர் பாடிய,

‘ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன்
புலிவேசம் போடுகின்றான் பொதுமக்கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?’ (புரட்சிக்கவி)

என்னும் பாடலடிகளை எடுத்துக்காட்டியும்,பொதுவுடைமைக் கருத்துகள் இடம்பெறும் அடிகளையும் எடுத்துக்காட்டித் தமிழில் பேசிப் பரபரப்பு ஊட்டினார்.மேலும் தம் ஆசிரியர் பாரதிதாசனுக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

புதுவைச்சிவம் இலக்கியப்படைப்புகள்

புதுவைச்சிவம் பகுத்தறிவு,திராவிட இயக்க உணர்வுடன் விளங்கியதுடன் தம் எண்ணங்களைப் பல்வேறு படைப்புகளாகத் தந்துள்ளார்.இவற்றைக் கவிதை,நாடகம்,இதழ்கள் என வகைப்படுத்தலாம். மூன்று துறைகளிலும் ஆர்வத்துடன் உழைத்துப் பகுத்தறிவு இயக்கத்தில் செல்வாக்குடன் இருந்துள்ளமையை அவரின் படைப்புகள் வழி அறியமுடிகிறது.

கவிதைகள்

பாவேந்தரிடம் யாப்பு இலக்கணம்,இலக்கியறிவு பெற்ற சிவத்தின் கவிதைகளில் ஆழமான புலமையினையும், யாப்பு வளமையினையும் காணமுடிகிறது.பல்வேறு இசைவடிவங்களில்,யாப்புவடிவங்களில் பாடல்களைப் புனைந்துள்ள இவர்தம் படைப்புகள் இவரை மிகச்சிறந்த படைப்பாளராகக் காட்டுகிறது.அக்காலகட்டங்களில்(1928 -1960) தமிழகத்தில் நிலவிய திராவிடநாட்டுக் கோரிக்கை,பகுத்தறிவு,சமுதாயச்சீர்திருத்தம்,தன்மதிப்பு(சுயமரியாதை),தமிழ்மொழிமீட்பு முதலிய பாடுபொருள்களில் தம் கவிதைப்படைப்புகளை யாத்துள்ளார்.
புதுவைச்சிவத்தின் கவிதைப்படைப்புகளைப்பொருண்மை நோக்கிச்சில பகுப்புகளுக்குள் அடக்கலாம்.அவை :

1.வாழ்க்கை வரலாற்றுக்கவிதைகள்
2.சமுதாய மறுமலர்ச்சிக்கவிதைகள்
3.பழந்தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கவிதைகள்
4.தமிழிசை பற்றிய கவிதைகள்

என்பனவாகும்
1.வாழ்க்கை வரலாற்றுக்கவிதைகள்

பெரியார் பெருந்தொண்டு

சிவப்பிரகாசம் எழுதிய நூல் ‘பெரியார்பெருந்தொண்டு’ ஆகும்.66 பக்கம் கொண்ட இந்நூல் 1944 இல் வெளிவந்தது. தந்தை பெரியாரின் வாழ்வியல்,தியாகம்,நாட்டுமக்கள் அவர் கருத்துக்கு அளித்த வரவேற்பு,ஒரு பகுதியினர் காட்டியெதிர்ப்புணர்வு முதலியன இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. பாவேந்தர் எதிர்பாராதமுத்தம் நூல் வெளியிட்டபொழுது நீயும் இதுபோன்ற நூல்களை எழுதுவதுதானே என்றார்.அதன்பிறகு ‘பெரியார் பெருந்தொண்டு’ நூலை எழுதினார்.

ஆரியர்களின் வருகைக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய தமிழகம் அவர்தம் வருகைக்குப்பிறகு தாழ்ந்ததும், வள்ளுவர் தோன்றித் திருக்குறளை வழங்கினார் எனவும் நூல்முகப்பில் பேசப்பட்டுள்ளது.எனினும் பெரியாரின் பெரும்பணியே தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியது என்று சிவப்பிரகாசம் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பெரியாரின் பிறப்பு,காங்கிரசு தொண்டு,போராட்டங்களில் ஈடுபடுதல்,வைக்கம் வீரர் எனப்புகழப்படுதல், காங்கிரசைவிட்டு வெளியேறுதல்,சுயமரியாதை இயக்கம் தொடங்குதல்,தமிழர்களிடம் நிலவிய சாதி,மதம்,மூடப்பழக்கவழக்கங்களுக்கு எதிராகப் பகுத்தறிவு முழக்கமிடல் முதலிய செய்திகள் இந்நூலில் பேசப்பட்டுள்ளன.

2.சமுதாய மறுமலர்ச்சிக்கவிதைகள்

மறுமலர்ச்சிக்கவிதைகள்

1946 ஆம் ஆண்டு சிவம் மறுமலர்ச்சிக்கவிதைகள் என்றநூலை74 பக்கங்களில்வெளியிட்டார். தமிழகநிலை, தமிழர்நிலை,தமிழ்மொழிநிலை,பெண்ணுலகு, தொழிலுலகம்,காதல்,சீர்திருத்தம்,திருமணவாழ்த்து என்னும் எட்டுப்பொருண்மைகளில் 49 கவிதைகளை இந்நூலில் சிவம் வழங்கியுள்ளார்.தமிழக மக்கள் தங்கள் நிலையினை உணரும்ம்படி மறுமலர்ச்சி எண்ணங்களை ஊட்டும் நூலாகச் சிவத்தின் மறுமலர்ச்சிக்கவிதைகள் நூல் உள்ளது.

கவிஞர் சிவம் பொதுவுடைமை எண்ணம்கொண்டவர்.தம் படைப்புகளில் தொழிலாளர் நிலைபற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளார்.அப்பாடல்களில் தொழிலாளர்களின் துன்ப வாழ்வு,உரிய கூலியின்மை, முதலாளிகளின் கொடுமைக்கு ஆளாதல் முதலியவற்றைப் பாடியுள்ளார்.

3.பழந்தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கவிதைகள்

பெண்களுக்கு மறவுணர்வும்,நற்பண்புகளும் உருவாகப் பழந்தமிழ் நூலான புறநானூற்றில் இடம்பெறும் பெண்களின் மற உணர்வினைக் காட்டும் பாடல்களை எளிமையுடன் விளக்க ‘மறக்குடி மகளிர்’ ‘கைம்மை வெறுத்த காரிகை’ என்னும் நூல்களைச்சிவம் படைத்துள்ளார்.

தமிழிசை பற்றிய கவிதைகள்

தமிழிசை புறக்கணிக்கப்பட்டுத் தெலுங்கிசை ஆதிக்கம் தமிழகத்தில் இருந்தபொழுது தமிழ் உணர்வுடையவர்கள் பல தமிழிசைப்பாடல்களை உருவாக்கினர்.இவ்வகையில் தமிழர் தன் மதிப்புப் பாடல்கள்,தமிழிசைப்பாடல்கள் முதலியநூல்களையும் வேறுசில நாடகப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

புதுவைச்சிவம் பல இதழ்களில் எழுதியுள்ளார்.அவ்விதழ்களுள் குடிஅரசு,விடுதலை,நகரதூதன், புதுஉலகம்,பொன்னி,போர்வாள்,திராவிடநாடு,முரசொலி,தமிழரசு,தென்றல்,மன்றம்,கழகக்குரல், திராவிடன்,தொழிலாளர்மித்திரன்,ந்ம்நாடு,அறிவுக்கொடி முதலான இதழ்களில் இவர்தம் கவிதைகள் வெளிவந்தன. பல்வேறு மலர்களிலும் எழுதியுள்ளார்.

புதுவைச்சிவத்தின் நூல்கள்

1.புதுவை நெசவுத்தொழில் எழுச்சிப்பாட்டு(1932)
2.பெரியார் பெருந்தொண்டு(1944)
3.கைம்மை வெறுத்த காரிகை(1945)
4.மறக்குடி மகளிர்(1945)
5.தமிழர் தன்மதிப்புப்பாடல்கள்(1945)
6.திராவிடப்பண்(1946)
7.காதலும் கற்பும்(1946)
8.மறுமலர்ச்சிப் பாடல்கள்(1946)
9.இந்தி மறுப்புப்பாடல்கள்(1948)
10. தமிழிசைப்பாடல்கள்(1950)
11.தன்மதிப்புப்பாடல்கள்(1951)

கவிஞர்புதுவைச்சிவம் அவர்களின் மறைவுக்குப்பிறகு முல்லைப்பதிப்பகம் அவர்தம் பாடல்களைத்தொகுத்து வெளியிட்டுள்ளது(1993). புதுவை அரசின் கலை,பண்பாட்டுத்துறை1997 இல் அவர்தம் ஒன்பது கவிதை நூல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது.

புதுவைச்சிவம் நாடகங்கள்

புதுவைச்சிவம் பல்வேறு நாடகங்களைச் சமூகச் சீர்திருத்த நோக்கில் எழுதியுள்ளார்.

1.ரஞ்சித சுந்தரா(அ) ரகசியசுரங்கம் (1935)
2.அமுதவல்லி(அ) அடிமையின் வீழ்ச்சி (1937)
3சமூகசேவை(1938)
4.கோகிலராணி(1939)
5.வீர நந்தன்(1940-1945)
6.காந்திமதி(அ) கல்வியின் மேன்மை(1940-1945)
7.மூன்றுபெண்கள்(1945-1950)
8.தமிழர்வீழ்ச்சி(அ) இராமாயண சாரம்(1935-1940)
9.வீரத்தாய் (ஈரங்கநாடகம்) 1935-1940)
10.தமிழச்சியின் தேசபக்தி(ஓரங்கநாடகம்)1935-1940
11.கோவலன்கண்ணகி(1940-1945)
12.சிதைந்தவாழ்வு(1951)
13.புதியவாழ்வு(1950-1955)
14.நிலம் யாருக்குச் சொந்தம்(1970)

புதுவைச்சிவத்தின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக விழிப்புணர்ச்சிக்கும்,அறப்பணிகள் செய்வதற்குமாக நடைபெற்றன.

புதுச்சேரியின் திராவிட இயக்கத் தந்தையாகவும்,தமிழாசிரியராகவும்,பாவேந்தர் பற்றாளராகவும், பாவலராகவும், நாடக ஆசிரியராகவும்,புதுவை நகரமேயராகவும்,மாநிலங்களவை உறுப்பினராகவும் விளங்கிய புதுவைச்சிவம் அவர்கள் 31.08.1989 இல் இயற்கை எய்தினார்.புதுச்சேரியின் பெருமைக்குக்காரணமாக விளங்கிய அறிஞர்களைப் புதுவை அரசு பல்வேறு வகையில் போற்றுவதுபோல் இவருக்குச் சிலை எடுப்பித்தும்,அவர்தம் படைப்புகளை வெளியிட்டும்,ஆண்டுதோறும் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடியும் வருகின்றது. புதுவைச்சிவம் அவர்களின் படைப்புகள் ஆய்வுக்குட்பட்டுள்ளன.பாடநூல்களாக்கப்பட்டுள்ளன.புதுவை வரலாற்றில் புதுவைச்சிவம் அவர்களின் பெயர் என்றும் நின்று நிலவும்.


முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

மின்னஞ்சல் : muelangovan@gmail.com
இணையம் : www.muelangovan.blogspot.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்