லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


(லா.ச.ரா. கடந்த 30 அக்டோபர் 2007ல் தமது பிறந்த நாளன்று காலை நான்கு பத்து மணி அளவில் காலமாகி விட்டார். அவரது சிறப்புச் சிறுகதைத் தொகுதியை 1986ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. லா.ச.ரா. நூலுக்கு முதன்முதலாய் வெளிநபர் முன்னுரை தந்தது என அமைந்தது இந்த நூலில்தான். அந்த முன்னரையை நான் எழுதினேன். விதவிதமான சாவிகளின் கொத்து என அட்டைப்படம் வடிவமைத்ததும் நான்தான். ஓவியம் திரு சரண். இன்றைய திரைப்பட இயக்குநர்.

சிறப்புச் சிறுகதை இரண்டாம் தொகுதிக்கு அவரது மகன்கள் லா.ரா.கண்ணன், லா.ரா.சப்தரிஷி இருவரும் முன்னுரை தந்தார்கள். இவை தவிர வேறுநபர் முன்னுரை என லா.ச.ரா. அனுமதித்ததேயில்லை. லா.ச.ரா.வுக்கு நன்றி.)


மு ன் னு ரை

இந்தத் தொகுப்பின் முதல் வாசகனாக அமைவதில் எனக்கு நியாயமான மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.
>>
எழுத்தாளர்களில் லா.ச.ரா. வித்தியாசமானவர். தனித்தன்மை மிக்கவர். நனவோடை உத்தியை முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் லா.ச.ரா.

பொதுவாக இவர் கதைகள் எளிமையானவை அல்ல, இவை எளிமையான கருக்களைக் கொண்டிருந்த போதிலும். லா.ச.ரா. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் உணர்ந்தபடி எழுதுகிறார். அல்லது தான் கண்ட, கேட்ட ஒரு வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாய் உணர்ந்து எழுதுகிறார். பொதுவாக கற்பனைகளுக்கு உண்மையின் சாயத்தைப் பூசிப் படைக்கிற எழுத்தாளர்கள் மத்தியில், தன் தீட்சண்யம் மிக்க ஞானத்தினால், கலாபூர்வமான ரசனைமிக்க கண்ணோட்டத்தினால், மொழி ரீதியான வளமான அறிவினால், லா.ச.ரா. உண்மையை அதன் தீவிரம் விலகாமல் கற்பனையையொத்த அழகும் மெருகும் சேர்த்து வழங்குவதில் பெருத்த வெற்றி பெறுகிறார்.

இவர் கதைகள் என நினைத்ததும் சட்டென்று ‘வித்துக்கள்’ சிறுகதை ஏனோ நினைவில் குதிக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் ‘My dog’ என ஒரு கவிதை வாசித்திருக்கிறேன். நல்லதொன்றும் செய்யாத, உதவியொன்றும் செய்யாத, பெரிதும் துன்பங்களையே விளைவித்து வந்த ஒரு நாய்பற்றிய அந்தக் கவிதையில், பத்தி பத்தியாக அந்த நாயின் உபத்திரவங்களையும், அதனால் தான் அனுபவித்த துன்பங்களையும் சொல்லிக்கொண்டே வருகிற கவிஞன் கடைசியில் இப்படிச் சொல்வான் – ‘And though my dog is as bad as bad can be, I cant leave my dog for all the treasures of the sea.’

உலகத்தின் பெரிய செல்வமான அன்பு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. சுயநலமற்றது. லா.ச.ரா.வின் ‘வித்துக்கள்’ மிகுந்த துஷ்டத்தனங்கள் நிறைந்த தன் குழந்தைகளை நேசிக்கிற ஒரு தாயின் கதை. சில வருடங்களுக்கு முன் ‘சாவி’ வார இதழில் (என நினைக்கிறேன்) படித்த கதை, என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

இன்னொரு கதை – தலைப்பு நினைவில் இல்லை. ‘த்வனி’ தொகுதியில் படித்ததாக நினைவு. வங்கியில் இவர் மேனேஜராக இருந்தபோது ‘அலுவல் நேரம்’ முடிந்தபின் ஒரு மனிதன் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்ல வருகிறான். மரணப்படுக்கையில் தன் மருமகன் இருப்பதாயும், கடைசியாய் இவன் மகளை மிகுந்த அலங்காரங்களுடன் பார்க்க விரும்புவதாகவும் கூறி நகைகளை எடுத்துப் போகிறான். அதன் பிறகான இவர் மன சஞ்சலங்கள், முகந் தெரியாத அந்த மனிதர்கள் மீதான இவர் பரிவு, கவலை… யாவும் செறிவுடன் அமைந்திருந்தன. பிறகு அந்த நகைகளை லாக்கரில் வைக்க அந்த மனிதன் வரவில்லை. அவரும், அவன் வராதிருப்பதே நல்லது, அவன் வந்து ஏதேனும் மோசமான முடிவைச் சொன்னால் தன்னால் தாள முடியாது, என்று நினைக்கிறதாக அந்தக்கதை முடியும். மனிதாபிமானம் மிக்க இந்தச் சிறுகதை, என்னால் மறக்க முடியாத லா.ச.ரா.வின் கதைகளில் ஒன்று.

பிறகு ‘பா ற் க ட ல்.’ ஒரு கூட்டுக்குடும்பத்தின் அழகினை இவ்வளவு சிறப்பாக நான் வேறு யாரிடமும் வாசித்ததில்லை. பல பகுதிகளாகத் தன் கதைகளைப் பிரிக்கிற லா.ச.ரா. இதை ஒரே வீச்சில் அமைத்ததும் கதையோட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஜனனி, இதழ்கள், கங்கா, த்வனி, மீனோட்டம், பச்சைக்கனவு, உத்தராயணம் (காலரீதியான வரிசை அல்ல) என்கிற இவரது தொகுதிகளில் ‘பச்சைக்கனவு’ மிகவும் சிறப்பானதாக நினைக்க முடிகிறது.

இந்தச் சிறப்புச் சிறுகதைகள் லா.ச.ரா.வே தேர்ந்தெடுத்த கதைகள். முதல் தொகுதி இது. இதில் இடம்பெற்றுள்ள எட்டு கதைகளில் ‘குரு-ஷேத்திரம்’ ஒரு பிரமிக்கத்தக்க சாதனை என்று தோன்றுகிறது. ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கதையின் சில பகுதிகளை இருபது, இருபத்தோரு முறைகள் திருத்தி எழுதியதாய் லா.ச.ரா. என்னிடம் கூறினார்.

‘குரு-ஷேத்திரம்’ ஒரு திருடனின் மனமாற்றம் பற்றிய கதை. வைரங்களை வாரியிறைத்திருக்கிறார் லா.ச.ரா. குறியீடுகளும் சங்கேதங்களும் மிகுந்த கலைநயத்துடன், வார்த்தைகளின் ஓசைநயத்துடன், தத்துவங்களின் தரிசனத்துடன் வெளியாகின்றன.

எத்தனையோ முறை திருடிவிட்டு, திருட்டுக் கொடுத்தவனுடன் சேர்ந்து பொருளைத் தேடுவதாய் நாடகமாடியிருக்கிற திருடன், தான் திருடிய ஒருவன் கோவில் குளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு திடுக்கிடுகிறான். மனசாட்சியின் முதல் விழிப்பு. (”எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்பியிருந்தானோ? அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது?” – பக்/83) சிந்தனையின் முதல் உயிரிப்பு.

தன் தாயை, மனைவியை அந்தக் கணத்தில் அவன் நினைத்துப் பார்க்கிறான். அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தான் பிரிந்து வந்த தன் தவறை உணர்கிறான்.

கதை முழுதும் யதார்த்தத் தளத்தில் நிகழவில்லை எனினும் படிப்படியான அவன் மனமாற்றங்களை ஊடுசரமாய்ப் பற்றிக்கொண்டே வரமுடிகிறது இடையே அற்புதமான தரிசன வரிகள். ”எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா? ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம்?” – பக்/90. ”உலகம் முழுதும் ஒரு உயிர். ஒரே உயிர்தான். அதன் உருவங்கள்தாம் பல்வேறு.” பக்/91.

வாழ்வின் விஷம்போன்ற பொருளாசையை இவன் இன்னும் துறக்கவில்லை என்கிற விதத்தில், பெட்டியைப் பாம்பு பாதுகாக்கிற கதை கனவாக வருகிறது. மனசாட்சியின் உருவோங்குதலில் ”என் எண்ணங்களை நானே நூற்று, என்மேலேயே பின்னிக்கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.” – பக்/99. ”வீட்டில் பெண்டு ஒண்டியாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாப்போல் பயம் என் உள்ளத்தில்.” – பக்/101. ”என் வீடு காலியானதும், அதில் என் குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன.” – பக்/101.

அவன் மீண்டும் தன் மனைவியையும், குழந்தையிடமும் சென்றடைவதுவரை கதை ஒரு கவிதையின் நளினத்துடன் அற்புதமாய்ச் செல்கிறது.

‘தாட்சாயணி’ கதையைப் படிக்கையில் இவரது இன்னொரு கதை ‘அபூர்வ ராகம்’ நினைவுக்கு வருகிறது. ”சில விஷயங்கள் சிலசமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்த விதம் அல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது.” – பக்/71. இதே தன் கருத்தை ‘அபூர்வ ராகம்’ னகதையிலும் வலியுறுத்துகிறார். சங்கீதம் பற்றிய தன் ஆழ்ந்த ரசனையை இந்தக் கதைகளில் முன்வைக்கிறார் லா.ச.ரா. பாத்திரங்கள் மென்மையும் மூர்க்கமும் ஒருங்கே பெற்று வார்த்தைகளின் சிறப்பில் பொலிகின்றன.

லா.ச.ரா. பெண்களை மிக மதிக்கிறார். படித்தவர்களாக, தெளிவானவர்களாக அவர்களை அவர் சித்தரிக்கிறார். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், இந்தக் கதைகள் நிகழ்கிற காலத்தையும் வைத்துப் பார்த்தால் லா.ச.ரா.வின் இந்தத் தன்மையின் சிறப்பு புரியும்.

லா.ச.ரா. தன் கதைகளில் உத்திகளை மிகத் திறமையாய்க் கையாள்கிறார். உவமைகளை மிகுந்த லாவகத்துடன் வெளிப்படுத்துகிறார். ”மெத்தைஉறை போன்ற அங்கி அணிந்த பாதிரி” என்பார். ”மழையில் நனைந்ததில் மார்பில் கொலுசு” என்பார். ”இறந்த பிணத்தின் கண்ணில் பளிங்கு ஏறியிருந்தது” என்பார். இவையெல்லாம் எங்கோ படித்திருந்தும் மனதில் தளும்புகின்றன.

இந்தத் தொகுதியில் ”தலையை இளநீர்போல முடிந்தாள்.” – ”வயிற்றில் பசி தேளாய்க் கொட்டிற்று.” – ”கேசுக்கு அலையும் போலிஸ்காரன் கவனிப்பது போல கவனித்தாள்.” – ”கற்கண்டுக் கட்டிகள்போல் நட்சத்திரங்கள்.” ”தலையில் சுருள்சுருளான மோதிரக் குவியல்.” – என்பனபோன்ற ஏராளமான ஜாலங்கள் மனதை நிறைக்கின்றன.

‘இதழ்கள்’, ‘கொட்டுமேளம்’ இரண்டுமே நீண்ட கதைகள். ‘இதழ்கள்’ ஒரு மனிதன் உறவுக்கிளைகள் ஒவ்வொன்றாய் இழப்பதைச் சொல்லி, அவன் தனிமை ஆழப்பட்டு வருவதை விஸ்தரித்து, அவனது நம்பிக்கை சிதையச் சிதைய உடல் வற்றிவருவதை விவரித்து அவன் மரணத்துடன் முடிகிறது. ‘கொட்டுமேளம்’ முழுக்க யதார்த்தத் தளத்தில் அமைந்த கதை. இளம்விதவையான தன் சகோதரியை நேசிக்கிற சகோதரன் கதாநாயகன். கதை சகோதரியின் பார்வை சார்ந்தது. தன் மனைவி அன்புவழிப்பட்ட பொறாமைரீதியாய் அவர்கள் இருவரையும் பற்றி அவதூறாய்ப் பேசிப் பிறந்தகம் செல்கிறாள். ஊரே மூக்கும் காதும் வைத்துப் பேசுகையில் பொறுமையாய் இவர்கள் வெற்றி பெறுகிற கதை. குழந்தை பிறந்ததும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு மீண்டும் கதாநாயகனின் மனைவி வீட்டுக்குள் வந்து, (”இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடம்தேடி அலையும் வெளவால் போன்று…” -பக்/86) மன்னிப்பு கேட்கிறாள். பிறகு அந்தக் குழந்தையின் கல்யாணத்தோடு விதவையின் வாழ்வு முடிகிறதாக கதை முடிகிறது.

‘கஸ்தூரி’, ‘மண்’ திருப்பம் சார்ந்த கதைகள். சொல்நேர்த்தியால் சிறப்பு பெறுகின்றன.

‘பச்சைக்கனவு’ ஒரு வித்தியாசமான கதைதான். இளம் வயதில் கண்ணிழந்த ஒரு குருடன் பற்றிய கதை. கண் இருக்கையில் அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றியே அந்த வர்ணம் மனதைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு விட்டது. (பக்/5) அதிலிருந்து தான் கேள்விப்படுகிற உணர்கிற பொருட்களுக்கெல்லாம் பச்சை வர்ணமே அமைந்திருப்பதாய்க் கற்பனை செய்துகொள்வது இவனுக்குப் பிடிக்கிறது. லா.ச.ரா.வின் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பாத்திரங்களூடே திடீரென்று வாழ்க்கை பற்றிய தரிசனங்களை மிக நெருக்கமாய் நுணுக்கமாய்த் தெரிவிக்க முடிவதுதான்.

‘பச்சைக்கனவு’ கதையில் குருடனின் நினைவோட்டமாக, ”தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்? எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா? அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா? தூக்கம் நிஜமா? விழிப்பு நிஜமா?” – பக்/14. என்று அற்புதமாய் இவரால் எழுத முடிகிறது.

‘இதழ்கள்’ கதையில் தன் சகோதரனை இழந்த நோயாளி இப்படி நினைக்கிறான். ”சந்துருவின் அகாலமான திடீர் மரணம் தேவலையா? அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா? இம்மரணத்தில் நோயின் அவஸ்தை ஒருபக்கமிருக்கட்டும். இதில் எங்கோ ஒரு மூலையில் ஒருவிதமான அவமானம் ஒளிந்துகொண்டு ஊமையாய் உறுத்துகிறது.” – பக்/ 139-140.

கொட்டுமேளம் கதையிலும் இப்படி ஓரிடத்தை ரசிக்க முடிந்தது. ஜானாவின் மன்னி, தன் கணவனையும், ஜானாவையும் பற்றி அவதூறு பேசிப் பிறந்தகம் செல்கிறாள். பிறந்தவீட்டில் இவள் கணவனை விட்டுவிட்டு வந்த துக்கம்கூடத் தெரியாமலேயே வளைய வருகிறாள். பிறகு அவளுக்கும் அவள் தாயாருக்கும் முதல்பிணக்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா? ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே! நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா தங்கை பிறந்திருக்காம். அதிலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம்.” – பக்/180.

‘தரிசனம்’ இந்தத் தொகுப்பிலேயே தனித்தன்மை வாய்ந்தது. ஏனோ திருமணம் குதிராமல் தடைப்பட்டு வருகிற பெண்களை நினைத்த இவர் சோகம், மிகுந்த கலைநயத்துடனும் கவிதையின் அழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. ”எதிர்வீட்டில் ஒரு பெண் வயது முப்பத்திரெண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்… அவளை அவள்பயிலும் வீணையின் இசையாய்த்தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹ¤தியாய்ச் சொரிகிறாள்… நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை?” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன? இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா? கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய மூக்குத்தி உண்மையில் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்றுதிரண்ட கண்ணீர்ச் சொட்டு.” (பக்/117)

லா.ச.ரா.வின் ஒவ்வொரு கதையும் சிறப்புச் சிறுகதைதான். லா.ச.ரா.வின் சொற்செட்டும், கற்பனை அழகும், கவிதை மனமும் மிகுந்த சுவையும், அதேசமயம் கருத்துச் செறிவும் நிரம்பியவை.

எங்களைப்போன்ற இன்றைய இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.வும், ஜானகிராமனும் தவிர்க்க முடியாத ஆதர்சங்கள். இருவரது கதைகளையும் தொடர்ந்து ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சியோடு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

1) லா.ச.ரா. மரபுரீதியான பழக்கவழக்கங்களை தம் கதைகளில் ஆதரித்தார். எனினும் அவைகளை மரபை உதறிய புது முறைகளில் சொன்னார்.

2) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் கட்டுரைகளுக்கு சுந்தர ராமசாமியையும், கதைகளுக்கு லா.ச.ரா.வையும் சொல்லியாக வேண்டும்.

3) லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப். சொற்களின் சூத்ரதாரி. இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்களால்கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது.

எஸ். ஷங்கரநாராயணன்
சென்னை 101
10.12.1986
(ஐந்திணை பதிப்பகம் – லா.ச.ரா.வின் சிறப்புச் சிறுகதைகள் – முதல் தொகுதி.)

>>>
லா.ச.ரா.வுடன் நட்பு (அடுத்த இதழில்)
storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்