கதைகளுக்குள் நர்த்தனமாடும் கதைகளும் கதையாசிரியர்களும்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

புதியமாதவி, மும்பை


” கதை என்றால் வாழ்க்கை இருக்க வேண்டும், நீ பார்த்ததை, உனக்குத் தெரிந்ததை, உன்னைப் பாதித்ததை
எழுது. அப்படியே எழுது. வாழ்வின் சுழிப்புகளோடு, பிரச்சனைகளின் தீவிரத்தோடு துன்பங்களின்
தீட்சண்யத்தோடு….. புரிகிறதா?” (பக் 49)

கதையைப் பற்றிய – இலக்கியப் படைப்புகளைப் பற்றிய மிகவும் சரியானப் புரிதல்களுடனேயே எழுத்தாளர்
ஷங்கரநாராயணன் அவர்களின் ‘விரல் நர்த்தனம்’ ஆடுவதை ஒவ்வொரு கதைகளிலும் பார்க்கிறோம்.
இது என் கை. என் விரல்கள். ஆனால் எல்லா விரல்களும் ஒன்றுபோலிருப்பதில்லை. குட்டையாக,
நெட்டையாக, தட்டையாக .. வலது கை விரல்களின் நர்த்தனங்களை இடது கை விரல்கள் செய்ய
முடிவதில்லை. அது அது அது அதற்கான செயல்களைச் செய்யும் போது செயல் முழுமையடைகிறது.
விதிவிலக்கிற்கு பயிற்சிகளும் முன் கூட்டியே திட்டமிடலும் தேவைப்படுகிறது.
இவருடைய விரல் நர்த்தனங்களிலும் இத்துனையும் விரவிக் கிடக்கின்றன.

>நைட்டிங்கேல்
>வட்டங்கள் உள்ளும் புறமும்
>எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை
>நானே சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்
>நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும்
>நிர்த்தாட்சாயணி

13 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் மேற்கண்ட 6 சிறுகதைகள் கதை- கதையாசிரியன் என்று சுற்றி
வரும் படைப்புகள். சில கதைகளில் கதை எழுதுவதே ஒரு கதையாக படைக்கப்பட்டிருப்பதால்
கதைகளுடனும் கதைப் படைப்பின் அனுபவங்களுடனும் தன்னை- தன் சுயத்தை. தன்னிலிருந்து விலகி
நின்று ஓர் இரண்டாம் மனுஷனாக பார்த்து விமர்சித்தும் எள்ளல் தொனி சில இடங்களில் பளிச்சிட
எழுதியிருக்கும் பாங்கு ‘கதைகள் பற்றிய கதைகள் எழுதும் இவர் கதைகளின் தனித்துவமாக’ விளங்குகிறது.

பல்வேறு கதைகளில் பிரபலமான கதையாசிரியர்களின் முகங்கள் பளிச்சிடுகின்றன. சில நிகழ்வுகள்,
சில வசனங்கள், சிலரின் இரட்டை முகம்.. இப்படியாக பல வந்து போனாலும் இது யாராக இருக்கும்?
அவரா .. இவரா.. என்கிற வெறும் கிசுகிசுப்பாகிவிடாமல் அனைத்தையும் தன் கதைக்கும் கதை மாந்தர்களுக்குமான
முகங்களாக்கி ஒற்றைப் புள்ளியிலிருந்து தன் கதைகளை வளர்த்துச் சென்று தன் விரல் தாளத்திற்கேற்ப நடனமாட
வைத்திருக்கும் வித்தையை ரசிக்கலாம்.

சில எ-கா:

*”ராமச்சந்திரன் ஒரு ஆரம்பக்கால எழுத்தாளன், பிள்ளையார் சுழி. அதனால் அவன் கதைகளைப் பொதுவாய்
நான் விமர்சனம் செய்வதில்லை. காரணம் அது பலமும் பலவீனமுமான பருவம். நாம் அளிக்கிற
ஊக்கங்கள் அவனை மலைமேல் தூக்கும். அதே நேரம் நாம் சுட்டிக் காட்டும் தப்பிதங்கள் அவனைப் பாதாளம் வரை
சுலபமாய்ச் சரித்துப் போட்டுவிடும்”.
ஓர் ஆரம்பக்கால எழுத்தாளனை, அப்போது தான் எழுத பிள்ளையார் சுழி போட்டிருக்கும் எழுத்தாளனை
வல்லிக்கண்ணன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் இப்படித்தான் அணுகினார்கள்.

* வட்டங்கள் உள்ளும் புறமும் கதையில் வரும் பத்திரிகை ஆசிரியர் சந்தனக்குமரன் எங்கள் கல்லூரி நாட்களில்
வர்ணனை ரஸம் சொட்ட சொட்ட சரித்திரக் கதைகள் எழுதி பிரபலமாக இருந்த எழுத்தாளர் சாண்டில்யனை
நினைவு படுத்துகிறார். சாண்டிலயனின் கதை வர்ணனைகளைப் படித்துவிட்டு அவரை நேரில் சந்தித்தவர்கள்
பலருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் ஏமாற்றமும் எப்படி இருந்திருக்கும் என்று சந்தனக்குமரனைச் சந்தித்த
அனுபவத்தைப் படிக்கிற போது புரிந்து கொள்ள முடிகிறது.

* நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும் கதையில் வரும் எழுத்தாளர் சிவராமனில் ஒளிந்து கொண்டிருக்கிறது
பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமனின் அனுபவம்.
சிவராமனிடம் நீங்கள் ஏன் எழுதறீங்க என்று ஒருவர் கேட்டார்.
“ஏண்டா எழுதறேன்ற அளவுக்கா மோசமா எழுதிப்பிட்டேன்? என்று சிரித்தார்
அப்போது சிவராமன் ஜாலியான மூடில் இருந்தார்.
‘ஏய்யா கதை எழுதறதுல திருட்டு ருசி ஒன்று இருக்குப்போவ். தெரியாத பெண்ணை
அனுபவிக்கிற ருசி” (பக் 98)

எழுத்தாளர் தி. ஜானகிராமனிடம் எழுத்தும், எழுதுவது பற்றியும் கேட்டார்கள். அவர் சொன்னார்:
“எனக்கே எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப் பற்றித்தான் சொல்ல வேண்டும்.
அதுதான் உயர்வு, அது தான் கவுரவம்.
எனக்கே எனக்காக எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாகச் சொல்ல
என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன்.
அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது.
காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிபோதல், வேதனை- எல்லாம் அதில்
இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறன் மனைவியை
காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு- எல்லாம் அதில் இருக்கின்றன. …”

இப்படியாக கதைகளில் பல பிரபலமான எழுத்தாளர்களின் முகங்கள் நிழலாடுவது கதைகளைப் பலவீனப்படுத்தாமல்
பிரபலங்களின் முகங்களைத் தாண்டி தன் கதைகளை நகர்த்திச்
செல்வதில் அசாதாரணமான வெற்றியைப் பெற்றுள்ளன.
எழுத்தாளர் தி.ஜா.வின் இக்கருத்தை தன் கதைப் போக்கில் கையாண்டிருக்கும் இக்கதை இம்மாதிரியான கருத்துகளை
கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வையில் கடுமையாக விமர்சித்தவர்களின் நிஜமுகங்கள் எவ்வளவு கீழ்த்தரமாக
இருந்தது என்பதை வேலைக்காரி கல்யாணியின் மூலமாக
காட்டுவார்.
“வெளிப்படையா திருட்டு ருசின்னு பேசற மனுசன் பெண்டாட்டி செத்த மனுசன் – வேலைக்காரின்னு அதும் மத்த வேலை முடிச்சி சாயந்தரமா புடைக்க வந்ததாச் சாக்கு சொல்லி வந்த கல்யாணியைச் சும்மா விட்டிருப்பாரா?”

கீழ என்னமோ சத்தம், பாதித் தூக்கம் கலைந்து அவர் இறங்கி வந்தால் திண்ணையில் படுத்திருந்த கல்யாணி மூச்சிறைக்க எழுந்து நிற்கிறாள். விசயம் துப்புரவா விளங்கிட்டது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதுக்கு?

ஐயா இத்தனை நாள் எப்படி பயமில்லாமல் வந்து போயிட்டிருக்கேன்.. இந்நாளு ஒரு நிமிசத்ல..என்னா தைரியம்..இவரை எப்படி உங்க சிநேகிதர்னு கூட்டியாந்தீங்க..”

‘தப்புதான்’ என்று கைகூப்பியவர் திரும்பி அவனைப் பார்த்தார்.
வெளியே போ..போயி.. என்னைப் பத்தி கேவலமா எழுது. அது உன் தீராவிதி” என்றார்.

நிர்த்தாட்சாயிணி, பிரபஞ்ச ரகசியம் மாதிரி கதைகளில் வரும் பெண்கள் ஆண் விரும்பும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்,
அப்படி இல்லாததால் ஆண் அனுபவிக்கும் அவஸ்தை என்ற போக்கில் அமைந்தவை. இதிலிருந்து மாறுபட்ட கதைகள்
” நானே சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்’
“அதோ பூமி” என்ற இரண்டு கதைகளும். அதிலும் குறிப்பாக
அதோ பூமியில் வரும் எழுத்தாளனின் மனைவி பெண்ணின்
எவராலும் நிரப்ப முடியாத இடத்தை மிகத் தெளிவாகவும்
அறிவுப்பூர்வமாகவும் சொல்லியிருப்பாள்.

“சும்மா வீட்டு வேலை வீட்டு வேலைன்னு செக்குமாடா ஆயிர்றீங்க நீங்க. நீங்க வெறும் ஸீரோவாவே, அன்னிலேர்ந்து இன்னிவரைக்கும் இருக்கறதுக்கு இதான் காரணம்..:

ஸீரோ.. ஸீரோவைக் கண்டுபிடிச்சவனே இந்தியந்தான், தெரியுமா?
ஸீரோனு கண்டுபிடிச்சப்பறம் கணிதம் எத்தனைப் புதிர்களை விடுவித்தது தெரியுமா?… நீங்க நம்பர் ஒன்னா இருங்க. வாழ்த்துக்கள். சம் ஃப்ராக்ஷன்லேர்ந்து ஒண்ணா ஆறது கஷ்டம்ன்றது உங்களுக்குத் தெரியும்.. ஆனா எதுலேர்ந்து ஸீரோவா ஆறது? அது இதை விட எத்தனை கஷ்டம், இல்லியா?”
அவளுடைய ஆளுமைக் கவிந்த கேள்வியில் மற்ற அனைவரும்
வெறும் புள்ளிகளாகிவிடுவதைக் காணலாம்.

‘இறந்தவனின் புல்லாங்குழல் ‘
இக்கதைதான் இத்தொகுப்பில் ஷங்கர் நாராயணனின் படைப்பு ஆளுமையை முழுக்க கொண்டு வந்திருக்கும் படைப்பு.
முரளி, பத்மினி, ஈஸ்வர மூர்த்தி பாத்திரப்படைப்புகள் ,
கதைவடிவம், கதையில் பயன்படுத்தப் பட்டிருக்கும் பின்னோக்கிச் சொல்லுதல் உத்தி.. எல்லாமே கட்டுக்கோப்புடன் கதைக்கு வலு
சேர்க்கின்றன.
முரளி தற்கொலை செய்து கொண்டான் என்பதுடன் கதை முடிந்து விடுகிறது. ஆனால் அதை கதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவதால் கதையின் இறுதியில் முரளியைப் பற்றி ஈஸ்வர மூர்த்தி தான் நினைக்கிற அபிப்பிராயங்களை எழுத இடம் கொடுக்கிறது. உளவியல் சிக்கலை கருவாக்கிப் படைக்கப்பட்டிருக்கும் இக்கதையில் அவரவர் பார்வையில் முரளியைப் பற்றிய அபிப்பிராயங்களைச் சொல்ல அந்த அபிப்பிராயங்களே முரளி என்ற பாத்திரப்படைப்பாகிவிடுகிறது.
‘நம் அளவுகோல்கள் சுயம் சார்ந்தவை’ என்ற பார்வையிலிருந்து விரிந்து முரளியின் தற்கொலைக்கான காரணங்களைச் சாதாரணமாக யோசிக்க முன்வரும்போது
‘அவளது அங்கீகாரம் முரளிக்குப் பிடித்தும் முரளி தட்டிக் கழித்தானோ.. தனது ஆளுமைப் பிம்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை அவனுக்குப் பாவம். பிம்பங்களைச் சுமந்து திரிதல் சோகமானதுதான்: என்று அலசிப் பார்த்து அதில் எல்லாம் திருப்திப்படாமல்
‘முரளி உன் இசை, உன் கருத்துகள் உன்னைவிட மேலானவை. நீ ஆச்சரியமானவன்..” என்று வியந்து கதையை முடிக்கும்போது
முரளி என்ற கதைப் பாத்திரம் ஆச்சரியமான பிம்பத்தை நம் முன் நிறுத்தி இருக்கும்.

‘புலிக்குகை’ கதையில் மகாகவி, விநோதினியைப் பார்த்தப்பின் அந்தச் சூழலில்
‘ஆசையுடன்
காதலனைத் தேடி விரையும்
காதலியைப் போல
இரவு’
என்கிற பாடலைப் பாடி இருப்பாரா?
என் இனிய நண்பர் இந்திரன் அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதைகள் ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ கவிதைகள் சிறந்தவை. ஆனால் இந்தக் கதைப் பாத்திரங்களுடனும், பாடல்கள் கதையில் இடம் பெற்றிருக்கும் சூழலும் கதையுடன் ஒட்டவில்லை. அபத்தமாகவே இருக்கிறது.

கொஞ்சம் லா.ச.ரா
கொஞ்சம் தி.ஜா.. இவர் கதைநடையில் கலந்திருப்பதை ஓரளவு வாசக அனுபவமுள்ளவர்களும் உணரமுடிகிறது.
திண்ணை மின்னிதழில் அவர் கதைகளின் மூலம் அறிமுகமான
எழுத்தாளர் ஷங்கர் நாராயணன் கதைகளை அவர் முன்னிலையில்
பேசுவதும் கலந்துரையாடுவதும் நாளைய விரல்நர்த்தனங்களின்
கதையாகக் கூடும்!

——————–

(பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் 28/10/07 மாலை எழுத்தாளர் ஷங்கர் நாராயணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கூட்டத்தில்
பேசிய கருத்துகளின் சுருக்கம்)


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை