வாசிப்பின் நீரோட்டம்

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

சுகுமாரன்


இளம் பருவத்தில் வாசிப்பின் ஆரம்ப நாட்களில் கிடைத்த புத்தகங்களை பிடித்தவை,பாதித்தவை,தூண்டியவை என மூன்று வகையாகப் பிரிக்க இன்று முடிகிறது.

பெற்றோரை விட்டுப் பிரிந்து மாமா,அத்தையால் பராமரிக்கப்பட்ட எனக்கு தனிமைதான் முழுநேர உணர்வாக இருந்தது.எப்போதும் மூட்டமான மனநிலையையே தந்த தனிமையைக் கலைக்க எனக்குக் கிடைத்த விளையாட்டுச் சாதனங்களாக இருந்தன எழுத்துக்கள்.நாளிதழ்கள்,மாசிகைகள்,சினிமா நோட்டீஸ், பாட்டுப் புஸ்தகங்கள் என்று அச்சு மையில் பதிந்த சகல காகிதங்களையும்
வாசித்துத் தீர்த்தேன்.தெருப் பையன்கள் எழுத்துக்கூட்டி ஒரு வரியை வாசிப்பதற்குள் ஒரு பத்தியை வாசித்து விடும் அபார திறமை கைகூடியது. அவர்கள் கோலி விளையாட்டிலும் பம்பரம் விடுவதிலும் நிபுணர்களாக இருந்தபோது நான் பட்டம் விடுவதிலும் படிப்பதிலும் சூரனாக இருந்தேன். இரண்டும் ஆகாய சஞ்சாரமாகவே இருந்தது.போதாக்குறைக்கு கோலி ஆடுகிற வம்பர்களை விட உம்மணா மூஞ்சியாகப் புத்தகத்துக்குள் புதைந்து கிடக்கிற பையன் நம்பகமானவன் என்று பெண்களுக்குத் தோன்றியது.அதனால் அவர்கள் வாசிக்கிற பத்திரிகைகளும் புத்தகங்களும் தாரளமாகக் கிடைத்தன.அவையெல்லாம் அந்த வயதில் பிடித்தவையாகவுமிருந்தன.

இந்த அட்சர சிநேகிதிகளில் ஒருத்தியிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பளிப்பு தான் என்னை பாதித்த முதல் புத்தகம். பள்ளியில் நடந்த போட்டியொன்றில் அவள் வென்ற பரிசு அது.மீசைவைத்த ஆசாமியின் உருவம் நட்டநடுவே வட்டத்தில் இருக்க வட்டத்தைச் சுற்றி மயிலிறகு, பெண்முகம்,மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும் குயில்,மூவர்ணக் கொடி,முரசு கொட்டுபவன் என்று ஏராளமான சித்திரங்கள் போட்டிருந்த அந்த வழவழப்பான அட்டைப்படம் மனதுக்குள் ஒட்டிக்கொண்டது.அதிலிருந்த பாட்டுகளை பள்ளிப் பருவத்தின் எல்லா வகுப்புகளிலும் தமிழ்ப்பாடப் புத்தகங்களில் பார்க்க நேர்ந்தது. புத்தகத்தை பரிசளித்தவள் சொன்ன வார்த்தைகளும் புத்தகத்துடன் நிரந்தரமாக உயிருக்குள் ததும்பிக்கொண்டிருந்தன. அது அவளுக்குக் கிடைத்த பரிசுகளில் பிடித்தமானது அதை நான் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.தொலைத்துவிடவே கூடாது. அப்படித் தொலைத்துவிட்டால் அவள் மேல் எனக்கு அன்பில்லை என்று அர்த்தம். ஊர்விட்டு வேறு ஊருக்கு வந்ததில் அந்தப் புத்தகம் காணாமல் போனது.புத்தகம் தொலைந்ததைவிட எனக்கு வேதனையாக இருந்தது அதைக் கொடுத்தவளின் பிரியம் இல்லாமற் போய்விடுமோ என்பதுதான்.அவளுக்கே
எழுதினேன்.அக்கா நீ கொடுத்த புத்தகம் தொலைந்து போய் விட்டது.ஆனால் நான் உன்னை மறக்க மாட்டேன். மறுதபாலில் மீசை வைத்த ஆசாமியின் புத்தகம் வந்தது.ஆனால் வேறு படங்கள். வேறு மாதிரியான எழுத்துக்கள். உள் அட்டையில் அன்புடன் சுமதி அக்கா என்று எழுதி அக்கா என்ற சொல் பேனாவால் வெட்டப்பட்டிருந்தது.

எனக்குப் பிடித்த முதல் புத்தகமும் பாதித்த புத்தகமும் தூண்டிய புத்தகமும் அந்தக் கவிதைநூல்தான்.

பள்ளி நாட்களில் கிடைத்த புத்தகங்களில் பாதித்தவை பல. ஓநாய்ப் பையன், இந்திரஜால் காமிக்ஸ்,பூவண்ணன் எழுதிய புலவர் மகன் என்ற சிறுவர் நாவல், இரும்புக்கை மாயாவி, கழக வெளியீடாக வந்த ஆலிவர் டுவிஸ்ட், ராபின்சன் குரூசோ, எல்லாப் போட்டிகளிலும் பரிசாகக் கொடுக்கப்பட்ட அகல் விளக்கு, இவை ஓர் அத்தியாயம். அடுத்த குறுகிய அத்தியாயத்தில் பழுப்பான தாளில் அச்சிடப்பட்ட அடுத்த வீட்டு அழகி, அச்சுப் பிழைகளுள்ள ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ரசவந்தி,பத்திரிகையிலிருந்து கிழித்துப் பைண்டு செய்த கல்கியின் பொன்னியின் செல்வன்,அலை ஓசை,சிவகாமியின் சபதம்,ஜெகசிற்பியன் எழுதிய ஜீவகீதம்,கிளிஞ்சல் கோபுரம்,ராஜம் கிருஷ்ணனின் மலர்கள். பிந்தைய வாசிப்பில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தின் ஜமீலா, கண் தெரியாத இசைக் கலைஞன்,மண் கட்டியை காற்று அடித்துப் போகாது, லேவ் தல்ஸ்தோயின் கதைகள்,அதிகாலையின் அமைதியில், தென்மொழிகள் புத்தகடிரஸ்ட் வெளியிட்ட சித்தார்த்தா, கடலும் கிழவனும்,பேர்ல் பப்ளிகேஷனின்தாத்தாவும் பேரனும், குருதிப் பூக்கள்,கொஞ்சம் காண்டேகர் – எவ்வளவு அழகான பெண்கள், கொஞ்சம் சரத் சந்திரர் -எவ்வளவு அன்பான அண்ணிகள்,கொஞ்சம் தாகூர் – எவ்வளவு அருமையான மனிதர்கள் இன்ன பிற. வாசிப்பில் ருசி உருவான கட்டத்தில் பாடத்திட்டத்துக்கு அப்பால்கிடைத்த பொக்கிஷம்’ காஞ்சனை’ என்ற புதுமைப்பித்தன் தொகுப்பு.ஒரே இருப்பில் நூலகத்தில் வாசித்து முடித்த புத்தகம்.நூலகம் மூடப்பட்டு வெளியேறி இருட்டில் வீடு திரும்பியபோது காஞ்சனைப் பேய் என்னைப் பின்தொடர்வதாகவும் சூடான விபூதியின் வாசனை கமழ்வதாகவும் தோன்றியது.

கதையைப் படிப்பது மட்டுமல்ல எழுதிய ஆசிரியரையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உசுப்பிவிட்டதும் அந்தக் கதைத் தொகுதிதான்.முன்னுரையில் ஆசிரியர் கர்வத்துடன் தன்னைப் பற்றிச் சொல்லியிருந்தருந்த வரிகள் காரணம். ரகுநாதன் எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ உள்ளூர் நூலகத்தில் அகப்பட்டது.வாசித்தேன்.ஒவ்வொரு பக்கம் புரளும்போதும் அதற்குள்ளிருந்து
ஒரு கை நீண்டுவந்து முகத்தில் குத்திவிட்டுப் போனதுபோல உணர்ந்தேன். எழுத்தை நம்பி உபஜீவனம் செய்யாதே என்று எச்சரிக்கும் குத்து.இப்போதும் அவ்வப்போது அந்தக் குத்துக்களைக் கலவரத்துடன் உணர்கிறேன்.என்னைப் பாதித்த புத்தகங்களில் அவை இரண்டும் முதன்மையானவை.அதே கட்டத்தில் வாசித்தவற்றில் பாதித்த மற்ற இரண்டு புத்தகங்கள் வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு’ம் வே.ஆனைமுத்து தொகுத்த ‘பெரியார் சிந்தனைக”ளும்.

இதற்குள் மேலுதட்டில் அரும்பியிருந்த பூனைரோமம் மெல்ல மெல்ல அடர்ந்து மீசையாக மாறியிருந்தது.பள்ளிச் சீருடை தேவையற்றுப் போய் கல்லூரிக்கான புது மோஸ்தர் உடைகள் பிடிக்க ஆரம்பித்திருந்தது. ரசனை மாறியிருந்தது. ஜெயகாந்தன், ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அழகிரிசாமி என்று வாசிப்பின் பரிமாணம் மாறியது.பாரதியிடமிருந்து கிளர்ந்த கவிதையூக்கம் பாரதிதாசனிடம் தயங்கி நின்று பிச்சமூர்த்திக்கும் புதுக்கவிதைக்கும் தாவியது. சார்லஸ் டிக்கன்சிடமிருந்து விலகி ஹெமிங்வே, ·பாக்னர் என்று பரிச்சயம் கொண்ட நாவல் வாசிப்பு தாஸ்தயேவ்ஸ்கியில் முழுமை தேடியது.மலையாளத்தில் எழுத்துக்கூட்டி வாசித்த வைக்கம் முகம்மது பஷீர் ஆராதனைக்குரியவரானார். குமாரன் ஆசானின் ‘உதிர்ந்த பூ’ வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய ஏதோ உணர்வுகளைத் தந்தது.கல்லூரித் தமிழாசிரியர் ‘ஒரு இழவும் புரியவில்லை’ என்ற பீடிகையுடன் பரிசளித்த சார்த்தரின் ‘இருப்பும் இன்மையும்'(பீயிங் அண்ட் நத்திங்னெஸ்) புத்தகம் எனக்கு லேசாகப் புரிந்தது.அடிவயிற்றைக் கலக்கியது.
வாழ்க்கையின் வெறுமை பற்றி உணர்த்தியது.அதே கட்டத்தில் வாசித்த புத்தகங்களான வில்லியம் பாரட்டின் ‘இர்ரேஷ்னல் மேன்’, ‘டைம் ஆ·ப் நீட்’, ‘இல்ய்யூஷன் ஆ·ப் டெக்னிக்’ ஆகிய புத்தகங்கள் ஆழமாகப் பாதித்தன. அந்தப் புத்தகங்களின் நீட்சியாகக் கொஞ்சம் தத்துவப் புத்தகங்களை வருடிப் பார்த்தேன்.அவை எனது மூளைக்குள் நுழைய மறுத்தன.

தமிழ் வாசிப்பில் மிகவும் பரவசப்படுத்திய புத்தகம் ‘மோகமுள்’.மலையாளத்தில் ‘பால்யகால சகி’,ஆங்கிலத்தில் ‘லஸ்ட் ·பார் லை·ப்’. இவற்றுக்கெல்லாம் கற்பனாவாத சுபாவமிருந்தது.அதை மீறி வாழ்க்கையின் புலப்படுத்த முடியாத வசீகரமும் இருந்தது.இன்றும் அவற்றின் மீதான நாட்டம் குன்றிவிடவில்லை.

பொழுதுபோக்கோ, தோளை உயர்த்தி பீற்றிக் கொள்வதற்கான வாய்ப்போ அல்ல இலக்கிய வாசிப்பு என்ற ஞானம் பிறந்த பின்னர் நூல்களில் தேர்வு ஏற்பட்டது. வாழ்க்கையைச் செழுமைப்படுத்திக்கொள்ளும் கணங்கள் புத்தகங்களில் மறைந்திருக்கின்றன என்ற தெளிவு வந்தபோது வாசிப்பின் பொருளே மாறியது. வாழ்க்கையை உணர்வோ அல்லது அறிவோ சந்திக்கும் ஒரு கணத்தையாவது எந்த புத்தகமும் தராமலிருந்ததில்லை.அப்படித் தராத புத்தகங்கள் கவனத்தில் இடம் பெறாமல் மறைந்தன.

காற்று வீசும்போது சலசலக்கும் நீரலை;புதிதாக வந்து சேரும் நீர்ப்பெருக்கு; உள்ளுக்குள்ளிருந்து சுரக்கும் ஊற்று – இந்த மூன்று உவமைகளாகப் பிடித்த, பாதித்த,தூண்டிய புத்தகங்களை வகைப்படுத்தலாம்.சலசலக்கும் அலைகளும் நீர்ப் பெருக்கும் பட்டியலிட்டால் அதிகமாக இருக்கும்.பிடித்தவை பின்னர் ஒரு கட்டத்தில் ஆர்வத்தைக் கிளறாமல் போயின.பாதித்தவையும் கருத்து வளர்ச்சியில் தீவிரம் குன்றின.ஊற்றைத் தூண்டியவையாக இன்னும் சில புத்தகங்கள் உணர்வில் புரண்டு கொண்டேயிருக்கின்றன.பாரதி கவிதைகள், புதுமைப்பித்தன் கதைகள்,பஷீரின் படைப்புகள், மோகமுள்,ஜே.ஜே. சில குறிப்புகள் ஆகிய நாவல்கள், ஆல்பெர் காம்யுவின் குறிப்பேடுகள், தாஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள்,வில்லியம் பாரட்டின் ‘டைம் ஆ·ப் நீட்’ என்ற நூல்,பைபிள், மகாபாரதம்,செசார் வயெஹோ, நெரூதா கவிதைகள் என இன்று சிலவற்றைச் சொல்லிவிட முடிகிறது.இந்த எழுத்துக்களின் சாரத்திலிருந்து சிறு அணுவாவது என் நாளங்களுக்குள் கரைந்திருக்கிறது.அந்த அணுக்கள் இல்லாமல் சிந்தனையோட்டம் இல்லை.என் எழுத்துமில்லை.வாழ்வின் துடிப்புமில்லை.


nsukumaran@gmail.com

நன்றி: ‘புதிய புத்தகம் பேசுது’

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்