கருப்பை கவிதைகள் அல்லது சொற்களின் இடைவெளி தமிழ் பெண்கவிதையின் அடையாளம்

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

முனைவர் மு. பழனியப்பன்


பெண்ணெழுத்துக்களுக்கு தனித்த அடையாளம் உண்டு. பெண் பெண்ணாகவே படித்து, சித்தித்து, எழுதுபவளாக இருந்தால் அந்த பெண்ணெழுத்தில் நூற்றுக்கு எழுபது சதவிகிதம் தனித்தன்மையை இற்றைக் காலத்தில் உணரமுடியும். அவ்வகையில் தனித்த முத்திரை உடையது மீனாட்சி கவிதைகள்.

கவிதை, அதன் உட்பொருள், வெளிக் கட்டமைப்பு, அதன் பாத்திரப் பேச்சு என எல்லாவற்றிலும் முழுக்க முழுவதுமாய் ஒரு பெண்ணாய் நிறைந்திருக்கிறார் மீனாட்சி. ”நானே பாரதி, என் காலத்தின் கவிச் சக்கரவர்த்தினி” ( ப.109) என்ற கவித்தொடரில் பாரதியைத் தரிசிப்பதை விட ”பா + ரதி = பாரதி” என்பதாவே கவிச்சக்கரவர்த்தினி மீனாட்சியை அடையாளம் காணவேண்டும். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்திற்குத் தக்கவர் யார் என்ற காலகால போட்டியில் கவிச்சக்கரவர்த்தினியைக் காணவேண்டிய காட்ட வேண்டிய போட்டியைத் துவக்கி வைக்கிறார் மீனாட்சி. கவிச்சக்கரவர்த்தினி என்ற சொல்லாட்சிக்குள் ஒளிந்திருக்கும் ஏக்கம்/ உயர்ச்சி ஆண்களின் நோக்கத்¢தில் ஆணவமாக உயர்வு நவிற்சியாகத் தோன்றலாம். பல எழுதிய ஒளவை, தன்னை எழுதிய ஆண்டாள், சிவனை எழுதிய காரைக்காலம்மை இவர்களுக்குக் கிட்டாத கவிச்சக்கரவர்த்தினி பெருமை இனிமேல் யாருக்கு? என்ற போக்கில் பின்தள்ளப்படும் பெண்படைப்புகள் – தன்னை தன் குலத்துத்தோன்றிய படைப்பாளர்களை வைத்தே காலை வாரிவிடும் மேம்போக்கு இவற்றுக்கெல்லாம் சவால் விடுகிறது இந்த ஒற்றைத் தொடர்.

”ஒரு விதை முளைக்கு முன்னே
கவிதைபோல்
கருப்பையில் தூங்குகிறது” (ப,118)

”நானொன்றும் கூமுட்டையில்லை
ஜீவரசத்தைக் குடித்து
ரசனையுள்ள கருவைத் தாங்கியிருக்கிறேன் ”(பட்டுப்பூச்சி ராசி, ப, 26)

”மண்ணின் அடிவயிற்றில்
அண்டத்தின் துளியாக ஆலவிதை
தாய்க்குருதி உணவாக” ( மறுபயணம் 181)

என எல்லாக் கவிதைகளிலும் தாய்மை, கருப்பை, கரு இவற்றின் சாயலை கருவாக வளர்க்கிறார்¢ மீனாட்சி. இவற்றுக்கு என்ன காரணம். ” பெண்மொழி முழுக்கவும் தாயன்பு, சக்தி நிலை தொடர்புடையது. வீரியமாக, நளினமாக, நாணம் கலந்து அத்தனை வலிகளுடன் அவள் சொல்வதைப் போல ஓர் ஆணால் சொல்ல முடியாது” (நான் ஏன் எழுதுகிறேன் பேட்டி ப,208) என்ற அவரின் கருத்துதான் காரணம். பிறப்பித்தல் என்ற ஒன்று, கருப்பை என்ற ஒன்று பெண்ணின் தனித்துவம். அதன் அழகு, அமைப்பு, அனுபவம் இதை வெளிப்படுத்த வேண்டிய படைப்பு வெளி பெண்ணினது. அந்தப் படைப்பு வெளிக்கு வேலி போட்டு தனக்கான சொத்தாய் பெண் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் என்ற படைப்பு நோக்கம் மீனாட்சியினுடையது. அந்த நோக்கம் அவரின் கவிதைகளில் வெளிப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

சொற்களின் இடைவெளி
கவிதைகளுக்குள் வாசகன் புகுந்து தேடினால் உண்மைக் கருப்பொருள் புலப்படுகிறது. விரிவு கொள்கிறது. ஆனால் கவிதையின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இடைவெளி வைத்து அதனுள் வாசகனைப் புகச் செய்தால் ஒரு கவிதையைப் புரிந்து கொள்ளவே ஒரு நாளாகும். பல நாள் கருவைச் சேமித்து எழுதும் படைப்பாளியின் படைப்பைச் சற்று நேரத்தில் வாசித்துவிட்டுத் தூக்கிப் போட்டுவிடலாமா? அதனை அணுஅணுவாய் ரசித்து ருசித்து உள் நுழைந்து உண்மைப் பொருளை அறிந்து கொள்ள வாசகனைத் தூண்டும் ஒரு கருவியாக மீனாட்சி தன் கவிதைகளை தரப்படுத்தியுள்ளார். இது அவரின் பலம்.

அதே நேரத்தில் இந்த சொல் இடைவெளிகள் பொருள் தொடர்பற்று சொல் தொடர்பற்றுத் தோன்றுகின்றன. இந்த மாயத்தோற்றத்தின் பின்னணி என்ன என்று சிந்தனை தொடரந்தால் அதற்கு ஒரு காரணம் புலப்படும். சாதாரணமாகப் பலர் முன்னிலையில் பெண்கள் சொல்ல வரும் கருத்தில் அவர்கள் நடையில் அவ்வப்போது தடை ஏற்படும். அந்தத் தடை தொடர்பற்ற பொருள்களை, சொற்களைத் தோற்றுவிக்கும். இந்தப் பெண்ணியல்பு மீனாட்சி கவிதைகளில் காணக்கிடக்கிறது. இந்தத் தடைப்பேச்சுக்கு இங்கு இருக்கும் சமூக அழுத்தம் காரணம். அதன் காரணமாக பெண் தன் கருத்துகளைத் தொடரபற்றுத் தெரிவிக்க வேண்டியவளாகிறாள்.

”அவள்தான் வெளியேற
அவளே தடையாகி
அவலத் துடிப்பு
மென்குரலில் வெளியழைப்பு
அவளுக்கோ அவலத்துடிப்பு
கழுத்து முடிச்சு பற்றுக்கோடா” (ப. 18)

எழினி என்ற தலைப்பில் இடம் பெறுகிறது இக்கவிதை. சொற்களை மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால் ஒன்றுக்கொன்று இணையாது. பொருள் தொடராது. திரைச்சீலை காற்றில் படபடக்கிறது. இதனை பெண்ணின் வீட்டுச்சிறையோடு கவிஞை ஒப்பிடுகிறார். அவள் + தான் + வெளியேற என்ற தொடரமைப்பில் ”தான் ” என்ற சொல்லை இடைவெளி கொடுத்துப் படித்துப் பாருங்கள். இடைவெளி தராமல் உச்சரித்துப் பாருங்கள். இரண்டுக்கும் பெருத்த பொருள் வேற்றுமை உண்டாகும். சொல்லுக்கு சொல் இடைவெளி என்ற புதிய போக்கு மீனாட்சியிலிருந்து தொடங்குகிறது. அடுத்த வரிகளைச் சற்றுச் சிந்திப்போம். அவலத்துடிப்பு யாருக்கு- திரைச்சீலைக்கா, அல்லது ……………-? வெளியழைப்பு – யார் அழைப்பது – யார் தடுப்பது – ஆணா – பெண்ணா……. கழுத்து முடிச்சு இந்த சொல்லில் இருந்து கவிதை புரிபட ஆரம்பமாகிறது. திரைச்சீலையின் பெண்ணின் குறியீடு. வெளியில் வர விடாமல் சன்னல் கம்பிகள் தடுக்கின்றன. வெளிவரச்சொல்லி காற்று அழைக்கிறது. திரைச்சீரை பறக்காமல் இருக்க அதன் அகலத்தைக் குறைத்து முடிச்சிடப் பட்டுள்ளது. அந்த திரைச்சீரை வெளி¢யில் வரமுடியாது. அதுபோல பெண்ணும். அவள் வர எண்ணினாலும் அவளால் வர இயலாது. கழுத்து முடிச்சு கடைசி வரை அவளுக்கு பற்றுக்கோடாகுமா. இவ்வாறு கவிதையின் சொல் இடைவெளிக்குள் புகுந்து உலாவ இடம் தருகிறது மீனாட்சி கவிதைகள்.

திரைச்சீலையை ஏன் அவள் என்று உருவகப் படுத்தவேண்டும். எழுதுவது பெண். அதனால் அவள் எழுதும் அனைத்திலும்¢ அவளே நிறைந்திருப்பாள்,

”என்ன பிண்டமோ?
என்னவாம் சுகக்குறைவு?
தயங்காமல் போ
விண்ணில் எகிறாமல்
நீரில் மிதக்காமல்
மண்ணின் இருட்சுரங்க ஆழத்தில்
புதையுண்டால் மௌனம் பேசலாம் ”(மண்ணே சுகம் 12)

பிண்டம், சுகக் குறைவு (சுகப்பிரசவம் இதற்கு மட்டுமே சுக என்ற சொல்லைத் தற்போது தமிழ் மக்கள் பயன்படுத்துகின்றனர்) இவையெல்லாம் பெண்ணடிப்படை வாய்ந்த சொல்லாடல்கள்.

இந்தக் கவிதையின் முதல் மூன்று வரிகளுக்குள் நிறைய இடைவெளி உண்டு. இதனுள் புகுந்து பல காத தூரம் பணிக்க முடியும். மண்ணில் புதைந்து போய் அழியும் மரண வாழ்வில் மௌனம் பேச இந்தக் கவிதை அழைக்கிறது. யாரோடு புதைந்தவன் மௌனம் பேசப்போகிறனான். யார் அவனைத் தன் உள் இருத்திக் கொள்வது என்ற இந்தக் கேள்விகளுக்கு இந்தக் கவிதையின் பின்பகுதி விளக்கம் அளிக்கிறது.

”உன்னை நீயே தின்னலாம்
சுயம்புவாகலாம்
கன்னிமையைத் தாய்க்கே கொடுத்திடலாம்” (மேலது)

கன்னிமை என்ற இந்த சொல்லட்சி தரும் விளக்கம் என்ன? ஓர் பிண்டம் அழிவதன் மூலம் அதாவது அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்காமல் கருவிலேயே பிண்டமாக இயற்கையாக (செயற்கையாக அழிக்கப்படுவதன் மூலம்) அழிவதன் மூலம் தாய் தாய்மை என்னும் சுமையை அடையாமல் அவள் கன்னித் தன்மை பாதுகாக்கப் பட்டுவிடலாம். கன்னிமை அதற்கு எதிரானதா தாய்மை? தாய்மை சுகமா? அல்லது பெண்ணின் இழப்பா? அல்லது ஆணின் ஆக்கிரமிப்பா-? எது சரி? கன்னிமைதான் பெண்ணின் உண்மை அடையானமா? இத்தனை கேள்விகளுக்கு இந்தக் கவிவரிகள் இடம் தருகின்றன. சொல்களின் இடைவெளி தமிழ்ப் பெண் கவிதையின் உண்மை அடையாளம். சமூகக் காரணங்களால் பாதிக்கப்படும் தமிழப் பெண் தன்கவிதைகளில் இடைவெளிகளை அதிகம் விட்டுச் செல்கிறாள். அவை நிறையப் பேசும் வலிமையின.

அக்னி சாட்சியாய் முதன் முறை ஒரு பெண்ணை மணந்தவன் அதனை மறைத்து மற்றொரு திருமணத்தை ஏற்கிறான். அவனது திருமணத்திற்கும் அக்னி சாட்சியாகிறது. சாட்சியாகும் அக்னியை கேலி செய்கிறது பின்வரும் கவிதை. அதன் சொல் இடைவெளிகள் உணரத்தக்கன.

”இன்றைய அவளின் அவனோ
வேற்றோர் ஊரில்
மாற்றான் பெண்ணை
அக்னிசாட்சியாய் மறுமுறை தொட்டு
என்ன அக்னி?
காலால் மிதிபடும்
மொட்டினைத் தூவும்
சிகரெட் துண்டு
எச்சில் பட்டு
எறிபடும் குப்பை” (ஒரு தலை அக்கினி ப,121)

கவிதையின் தலைப்பே இடைவெளி மிக்கது. ஒரு தலை பட்சமானதா அக்னி. அல்லது அது பிரிவுகள் அற்று ஒரே ஜூவாலை உடையதா… காலால் மிதிபடும், மொட்டினைத் தூவும், சிகரெட் துண்டு, எச்சில்பட்டு எறிபடும் குப்பை இந்த வரிகள் பொருள் தொடர்பை உடைய வரிகள் அதாவது சிகரெட் நெருப்பை வர்ணிக்கும் வரிகள் என்றாலும் அவை ஒன்றுக் கொன்று இடைவெளி தரப்பட்டே அமைக்கப் பட்டுள்ளன.

எனவே பெண்கவிதைகளுக்க இடைவெளிகளே வலிமை என்பது தௌ¤வாகின்றது.

பெண்கள் பாத்திரங்களாக
மீனாட்சியின் கவிதைகளில் பெண்கள் பாத்திரங்களாக அடர்த்தியாகக் கையாளப் பெற்றுள்ளனர். இது பெண்ணெழுத்தின் தன்மை.

பேருந்தில் பயணிக்கும் அன்றாடம் கூலித்தொழில் செய்து பிழைக்கும் பெண்களின் அவலம்

”பார்வைகளையே கைகளாக்கி
கைகளே கொடுக்குகளாய்ச்
சகபிரயாணிகள் சுமந்திருப்பதை
காலங்கடந்தே
நாங்கள் பார்த்தோம்”(நாங்கள் நகரத்துக்குப்போகும் சின்னப் பெண்கள், ப.102)

என்ற கவிதையில் வெளிப்படுகிறது. இதில் பேருந்து நெரிசலில் பெண்களைத் தொட்டு தடவும் ஆண்களை காலங்கடந்தே பெண்கள் உண்ர்ந்து கொண்ட அவலம் உணர்த்தப்படுகிறது. இந்த அனுபவம் ஏற்பட்ட பின்னரே பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இது குறித்து ஒரு பெண்ணுக்கு எந்தவித முன்னறிவிப்பை எவரும் தருவதில்¢லை. பட்ட பின்ன பாதுகாப்பு என்ற இந்த சூழலை ஒவ்வொரு பெண்ணும் கடந்தே வருகிறாள் என்ற சோகம் இந்தக் கவிதைக்குள் கிடக்கிறது.

இரு சகோதரிகள். அவர்களின் வாழ்வை படம் பிடிக்கிறது ஒருகவிதை.

”அம்மையின்
சுகப்பிரசவத்தில்
வெளிவந்த நானோ பஞ்சு
ஆயுதம் மோதப்
பிறந்தவளோ இரும்பு” (உடன் பிறந்தவள் ப, 16)

முதல்பிரசவம் சுகப்பிரசவம். இரண்டாவது சிசேரியன். இந்த நிதழ்வில் ஏற்பட்ட வலி, வேதனை, தாயின் உணர்வு , இரண்டும் பெண்ணாய்ப் போனதில் சமுகத்தின் கண்ணோட்டம் இவையெல்லாம் இந்தக் கவிதையின் பின்புலங்கள். பிறந்தவர்கள் கவிதையில் வளர்கிறார்கள். ஒருத்தி மணம் முடித்து நோய் வாய்ப் படுகிறாள். மற்றொருத்தி கைம்பெண்ணாகித் தவிக்கிறாள். இதனைக் கவிதையின் நிறைவுக் காட்சி பின்வருமாறு கூறுகிறது,

எனக்கு மங்கலக் குறுவாழ்வு
அவளுக்கோ
அமங்கலப் பேராயுள்
தியாக முனைக் குத்தல்
தந்த பரிசில் (மேலது)

இந்தக் கவிதையிலும் இடைவெளிகள் அதிகம் உண்டு. அதைவிட இதில் பாத்திரப்படைப்பு அதி முக்கியமானது. தாய், மூத்தவள், இளையவள் இவர்களைப் படைக்கும் பெண் படைப்பாளி என்ற வட்டம் ஒன்றுக்குள் ஒன்றாக தனக்குள் தானாக பிரிக்கமுடியாததாக விளங்கி மேன்மை பெறுகிறது. படிப்பரைவயும் பெண் உலகமாக்கிக் கொள்கிறது.

மற்றொரு கவிதையில் ஆண் பாத்திரப்படைப்பு வருகிறது. அதிலும் மறைமுகமாக பெண் இடம்பெறுகிறாள் என்றாலும் ஆணின் படைப்பு விமர்சிக்கப்படுகிறது. அது பின்வருமாறு.

அவன் காதல்
நாயில் ஆரம்பித்து
நாயில் முடிந்தது.
கொஞ்சல்
கடி
வெறி
மாமிசம்
தெருப் பொறுக்கல்
ஊர் சுற்றல்
கழுத்துப்பட்டை
காசுவில்¢லை
பதிவு எண்
ஊசிகள் குட்டிகள்
குரைப்பு
அப்புறமென்ன
காதலாவது
கத்தரிக்காயாவது?( சத்தான காதல் ப. 129)

இந்தக் கவிதையில் காதல்திருமணத்தின் அவலம் அதன் கவர்ச்சி விமர்சிக்கப் படுகிறது. பதிவு எண், ஊசிகள், குட்டிகள் இந்த வரிகளில் பெண்ணின் பாத்திரப்படைப்பு மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் பிள்ளைகள் பெற்றெடுக்கும் எந்திரமாக பெண் கருதப்படுவதைத் தௌ¤வாக்கியிருக்கிறது இந்தக் கவிதை.

மொத்ததில் மீனாட்சியின் கவிதைகள் கவிச்சக்கரவர்த்தினிக் கவிதைகள்தான். இது கவிதைகளின் அளவால் கணக்கிடப்பட்டதல்ல. தரத்தால் அளந்தறியப்பட்டதல்ல. தமி¢ழ்ப் பெண்க் கவிதைப் பரம்பரையினை இடையீடு படாமல் காத்துவருவதாலும், அளவாலும், தரத்தாலும் தான்.


Manidalblogspot.com
muppalam2003@yahoo.co.in

முனைவர் மு. பழனியப்பன்,
விரிவுரையாளர், மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்