ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

வா.மணிகண்டன்


நவீனத்துவம் என்பதற்கு சிறிய விளக்கம். ஒரு பொண்ணு/பையன் ‘மாடர்னா இருக்கா’ என்று சொல்வதற்கும் ‘ட்ரெடிஷனா இருக்கா’ என்று சொல்வதற்குமான எளிய வித்தியாசம்தான்.

வழிவழியாக பின்பற்றி வந்த பாதையில் இருந்து விலகி இருத்தல் நவீனத்துவம். மாடர்னிசம், மேற்கத்திய உலகங்களில் தொழிற் புரட்சியின் விளைவாக தனக்கான இடத்தினைப் பெறுகிறது. கட்டிடக்கலை, தொழிற்சாலைகள், மருத்துவம் என யாவும் தத்தம் துறையில் புதிய யுக்திகளைக் கையாளத் துவங்கின. இதுதான் நவீனத்துவத்தின் அடிப்படை.

கலையும் இதில் தப்பவில்லை. உரைநடை, கவிதை, நாடகங்கள் என இலக்கியத்தின் பல கூறுகளும் புது வடிவத்தைப் பெறுகின்றன.

மாடர்னிச காலகட்டத்தில் கவிதைக்கென அதுவரை கட்டமைக்கப்பட்ட வடிவங்களை தகர்த்தெறிந்து புதிய வடிவத்தில் புதிய வீச்சுடன் நவீன கவிதைகள் வாசகர்களை அடைந்தன. பெரும்பாலும் தொழிற்புரட்சியின் விளைவுகள், நகர் சார்ந்த வாழ்வு முறையின் நெருக்கடிகள், தனிமனித துன்பங்கள் போன்றவற்றை கவிஞர்கள் தங்களின் படைப்புகளில் வைக்க ஆரம்பித்தார்கள்.

மேற்கத்திய தொழிற்புரட்சியின் தாக்கம் இந்தியாவில் உடனடியாக உணரப்படவில்லை. அதுவரை படர்ந்திருந்த சுதந்திரப் போராட்டமே முக்கியமான காரணமாக இருந்திருக்கக் கூடும். படைப்பாளிகள் சுதந்திர போராட்டத்திற்கான உணர்ச்சிமிக்க கவிதைகளையோ அல்லது “கொக்கு பறக்குதடி கோண வாய்க்கா மூலையிலே” என மறைமுகமாக ஆங்கிலேயர்களைத் தாக்கும் வகையிலான படைப்புகளையோ படைத்தார்கள். (படிமம் என்பது இப்படிப் பட்டதுதான் என்பதனை கவனிக்கவும்).

பாரதி தனிமனிதன் சார்ந்த விஷயங்களையும், சமூகம் சார்ந்த நிகழ்வுகளையும் தனக்கெனெ புது வடிவத்தில் எழுத முயன்று தமிழில் நவீனத்துவத்திற்கான புது அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கிறார். சொல்லப்படும் முறையும், சொல்லப்படும் தகவல்களும் இதுவரை யாரும் முயன்றிடாத முறையும் இதன் நுணுக்கமான தனித்துவங்கள்.

இது தொடர்ச்சியாக வளராமல், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளும் தமிழின் கவிதைகளுக்குள் நுழைய, நவீன கவிதைகளின் வளர்ச்சிப் போக்கு சுணக்கம் அடைகிறது.

ஓசையின் ஒழுங்கு அமைவிலும், உணர்ச்சிகளை கவிதையில் காட்டுவதிலும் மிகுந்த ஆரவம் கொண்ட கவிஞர்கள் “வானம்பாடி” என்ற குழுவில் இணைந்து எழுத ஆரம்பித்தார்கள். இவர்களில் முற்றிலும் வேறுபட்ட கவிஞர்களான ஞானக் கூத்தன், சி.மணி, ந.பிச்ச மூர்த்தி போன்றவர்கள் “எழுத்து” இதழில் எழுத ஆரம்பித்தார்கள்.”எழுத்து” கவிதைகள் தனிமனித இடர்பாடுகளையும், வாழ்வியல் சார்ந்த துன்பங்களையும், மறைந்து கிடக்கும் வாழ்வின் இருளையும் வெளிப்படுத்தினார்கள்.

சமூகம் சார்ந்த கவிதைகளில் அதீத உணர்ச்சிகளையும், கற்பனாவாதங்களையும், சொற்களுக்கும், ஓசை முறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து கவிதை எழுதிய வானம்பாடிக் குழுவினர், எழுத்து கவிஞர்களை “இருண்மைவாதிகள்” என்றழைக்க, எழுத்து கவிஞர்கள் வானம்பாடியினரை “கூச்சல் குழு” என்றழைக்க, புதிய இலக்கிய உலகத்திற்கான சண்டைகளுக்கு சிறகு முளைக்க ஆரம்பிக்கிறது.

திராவிட இயக்கம் தனது பிரச்சார யுக்திகளிலும், மேடைப் பேச்சு முறையினாலும் சாமானியர்களைக் கவர்ந்து தனித்து கால்பதிக்க ஆரம்பிக்கிறது. இதே கால கட்டத்தில் பிரச்சார யுக்தியைப் பயன்படுத்தி வானம்பாடிக் கவிஞர்கள் கவிதை எழுத, அவை திராவிட ஊடகத்தில் பரவ, கவிதைக்கான வடிவம் இதுதான் என முடிவு செய்த இளைஞர் குழுக்கள் எழுதித் தள்ளின. சற்று பிரிந்த ‘திராவிட’ எழுத்தாளர்கள் (அண்ணா, கருணாநிதி போன்றோர்) முழுமையான பிரச்சார எழுத்துக்களை முன் வைத்தார்கள். அவர்களின் வழித் தோன்றலுக்கு இதுவே பாதையாகிப் போனது.

வானம்பாடியும், திராவிட எழுத்து வடிவமும் பெரும்பாலும் முரண்படாததும், இந்த எழுத்தாளர்கள் அரசியல் நிலையிலும் செல்வாக்கான இடத்தைப் பெற்றதும் கவனிக்கப் பட வேண்டிய அம்சம். இந்த நிகழ்வுகள் சமூகம் சார்ந்த எழுத்துக்களை, எல்லாவிதமான உணர்ச்சிகளையும் பொதித்து வெளிப்படுத்தினால் கவனிக்கப்படலாம் என்ற பிம்பத்தை உண்டாக்குகிறது.

பெரும்பான்மை சமூகத்தில் கவிதை என்பதற்கான எல்லா அங்கீகாரத்தையும் வானம்பாடி, திராவிட எழுத்துக்கள் பெற்றுவிட, மேலோட்டமான வாசகனால் உள்வாங்கிக் கொள்ள முடியாத, திருகலான மொழியமைவுடன் எழுதப்பட்ட நவீன கவிதைகளுக்கான வாசகர் வட்டம், எண்ணிக்கையின் ஒப்பீட்டளாவில் மிகக் குறைந்து போனது.

நவீனகவிதைகள் இயங்குவதெற்கென தளத்தினை சிற்றிதழ்கள் உருவாக்கிக் கொடுத்தன. உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், ஓசைகளுக்கு முக்கியத்துவத்தினை ஒழித்து, கவிஞர்களின் பேச்சு குறைந்து கவிதைகள் பேசின. உத்வேகத்துடன் எழுத ஆரம்பித்த பல கவிஞர்கள், பின்னர் தொடர்ந்து இயங்காமல் போனதும், எழுதிய கவிஞர்கள் தொடர்ந்து தங்களின் வடிவத்தை புதுபித்துக் கொள்ளாததும், தமக்கு சாதகமான வடிவத்தை உதறித்தள்ளி வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான கவிஞனின் பயங்களும் தமிழில் நவீன கவிதைகளின் மிகப்பெரும் சரிவு.

தமிழின் சாலையோர வாசகனுக்கு தெரிந்த கவிதைக்கான சாத்தியக்கூறுகளின் வடிவம் நவீன கவிதைகளின் வடிவத்திற்கு முற்றும் மாறுபட்டதாக அமைந்ததும், அவனை தனக்குள் அழைக்க இயலாத இரும்புச் சட்டகங்களும் இன்னமும் தகர்க்கப்படாமலேயே இருக்கின்றன.

சுயம் சார்ந்த கவிதைகளை வாசகன் புரிந்து கொள்ளுதலே, அவன் தன்னை புரிந்து கொள்கிறான் என்பதற்கான அடையாளமாக அமையலாம். தனி மனிதனில் இருந்து தொடங்கும் இலக்கியம் செறிவானதாக இருக்கும். சமூகத்திலிருந்து தொடங்குகிற இலக்கியத்திற்கான கவர்ச்சியைக் காட்டிலும், தனிமனிதனிலிருந்து தொடங்கும் இலக்கியத்திற்கான கவர்ச்சி குறைவென்றாலும், இவ்வகை இலக்கியத்தின் உள்ளீடு வலிமை வாய்ந்தது.

நவீனத்துவம் சமூக, அரசியல் இலக்கியங்களை புறந்தள்ளுவதில்லை. அவையும் அவற்றின் கூறுகள்தான் என்ற போதிலும் அவை தனிமனிதனில் இருந்து தொடங்குகின்றன.

தமிழில் எழுதப்படுகின்ற பெரும்பானமையான நவீன நெடுங்கவிதைகள் ஏதேனும் ஒரு புள்ளியில் தொய்வுறுகின்றன. இது படைப்பவனின் பலவீனமேயழிய நவீனத்துவத்தின் பலவீனமன்று.

கவிதையின் வடிவமும், பொருளும் தொடர்ந்து மாறுவதும், கவிதையில் வாசகனை சலிப்புறச் செய்யாத படைப்புகளும்,கவிதையின் செறிவான முகத்தினை சாமானிய வாசகனும் உணர்ந்து கொள்ளுதலும் நவீனத்துவத்திற்கான இடத்தை தெளிவு படுத்தும்.

நவீனத்துவத்தில் சில கூறுகளை ஒதுக்கி பின் நவீனத்துவம் நிலை பெறுகிறது. இதே போல உண்மைவாதம், சர்ரியலிஸம் என எண்ணற்ற தளங்களும் இலக்கியத்தில் உருவாகி, உருமாறித் திரிகின்றன.

தேடும் வாசகனுக்கு எல்லாமே சுலபமானதுதான். சுகமானதுதான்.

வா.மணிகண்டன்
www.pesalaam.blogspot.com
vaamanikandan@gmail.com

Series Navigation

வா.மணிகண்டன்

வா.மணிகண்டன்