கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [2]

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


கில்காமெஷ் காவியம் மேற்கின் அதி பழமையான முழு காவியமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு முக்கிய தொன்மப் படிவத்தை அது உள்ளடக்கியுள்ளது. மரணத்தை
வெல்ல முயலும் மானுடத்தின் தேடல் அது. நிரந்தர வாழ்வின் இரகசியத்தை தேடும் பயணம். இறப்பிலிருந்து விடுதலை. மரணம் குறித்த அச்சம். தனது மரணத்தை அமைதியாக ஏற்கிறான் என்கிடு. ஆனால் என்கிடுவின் மரணத்தின் சாட்சியாக விளங்கும் கில்காமெஷ¤க்கு அதுவே தூண்டுதலாக அமைகிறது. அதுவே அவனது மரணத்தை காட்டுகிறது. அண்மையில் வெளியான ஸ்டார்வார்ஸ் திரைப்படத்தில் ஜெடை வீரனான அனாகின் ஸ்கைவாக்கர் டார்த் வாடராக மாற அவனை தூண்டுவது மரணத்த்தின் அச்சமே. ஹாரி பாட்டரில் வரும் லார்ட் வோல்டர்மார்ட் அஞ்சுவது மரணத்தையே. பிரபு டிராகுலாவின் மாற்றம் அவன் மனைவியின் மரணத்தை தொடர்ந்து நிகழ்வதாகும். மரணமற்ற நித்தியவாழ்விற்கு இரத்தம் அருந்தும் இத் தொன்ம பதிவு மேற்குலகில் இரு துருவங்களிலும் இயங்குவதாகும்.

எதுவாயினும் மேற்கின் பிரக்ஞையில் மரணத்தை வெல்லும் மகா இச்சையின் தூண்டுதலின் வேர்களை கில்காமெஷிலிருந்து காணமுடியும். அது போலவே மூன்றில் ஒருபாகம் இறைத்தன்மையும் ஒரு பாகம் மானுடத்தன்மையும் கொண்ட மேய்ப்பனாகவும் அரசனாகவும் திகழும் புராண நாயகன் வழக்கு மேற்கத்திய பிரக்ஞையில் இருப்பதை காட்டுவது இது. ஏசுவின் உடலில் இருந்து இரத்தமும் நீரும் வெளிவந்த (யோவான் 19:34) கூற்று இதிலிருந்தே எழுந்ததாகும். கிரேக்க புராண மரபில் கடவுளரின் உடலில் ஓடுவது நீரே ஆகும். ஏசு மனிதகுமாரன் தேவகுமாரன் ஆகிய இரண்டும் என்பதால் அவரது உடலிலிருந்து இவை இரண்டும் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இந்த விவிலிய கதையாடலின் வேர்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாபிலோனிலிருந்தன.

என்கிடு வந்த பின் ஏன் கில்காமெஷ் மாறிவிட்டான்? ஷெல்டன் கோப் மனநல சிகிட்சையாளர். மனநல சிகிச்சையை ஒரு புண்ணிய யாத்திரையாக காண்பவர். அவர் தன்னுடைய புகழ்பெற்ற ‘If you meet Buddha in the road kill him’ எனும் நூலில் ஒரு அத்தியாயம் கில்காமெஷ¤க்கு ஒதுக்குகிறார். “ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது என்கிடு இருக்கிறான் – அவனது மறுபாதி அவனது மறைந்திருக்கும் சுயம். எந்த அளவுக்கு ஒரு மனிதன் இந்த மறைவான சுயத்திடமிருந்து தன்னை விலக்கி வைத்துள்ளானோ அந்த அளவு அவது வாழ்க்கை வெறுமையும் பிடிப்பும் இல்லாத கேலிக்கூத்தாகவே அமைந்திருக்கும். என்னிடம் வரும் அத்தகைய ஒரு யாத்திரீகனுக்கு (மனசிகிச்சை பெற வருபவனுக்கு) நான் அருரு தேவியைப் போலவே அவனது மறைவான சுயத்தினை அறிமுகப்படுத்த முயல்கிறேன்.” என விளக்குகிறார் ஷெல்டான்.பி.கோப் (‘If you meet Buddha…’ பக்.22) அதே நேரத்தில் சுயத்தின் இருமைத்தன்மை என்பது கில்காமெஷ் கதைக்கு நடுவோட்டமாக இருப்பினும் சுயத்தின் இருகூறுகளின் பாலியல் தன்மையைக் குறித்து அது அறியாமையுடனேயே இருப்பதாக கருதுகிறார் கோப். பெண் அதில் ஒரு மயக்கும் பொருளாகவே அமைந்துள்ளாள். (அதே, பக்..23) இறுதியாக கில்காமெஷின் முக்கியத்துவம் என்ன?

“மிகப் பல சமயங்களில் நான் என் இறப்பு நிகழ்ந்துவருவதை -நாம் அனைவருமே இந்த மரணப்பிணியால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதனை- மறந்துவிடுகிறேன். அத்தருணங்களில் நினைத்திட வேணுமென்பதனை நினைந்திடாத அத்தருணங்களில் நான் ஆட்டமாடுகிறேன். எனக்கு வாழ்வின் மற்றும் மரணத்தின் மடத்தன்மை, தவறவிட்ட சாத்தியங்கள், சாகஸத்தனங்களின் நினைவுகள், தவறவிட்ட பூரணத்துவத்தின் நினைவிசை அலைகள்,…ஏன் தோழர்களின் அன்பு – இவை அனைத்துமே மரணமிழைக்கும் இகழ்வின் முன் தோற்றுவிடுவதை கில்காமெஷின் யாத்திரை எனக்கு நினைவுபடுத்துகிறது. கில்காமெஷ் – என் சகோதரன்- அவனது புண்ணிய யாத்திரை என்னை மறக்கவிடுவதில்லை.” (பக். 43)

காம்பெல்லை பொறுத்தவரையில் கில்காமெஷ் கதையில் வரும் சிதூரியின் அறிவுரையில் யூதவிவிலியத்தின் (கிறிஸ்தவர்களின் ‘பழைய’ ஏற்பாடு) பிரசங்கி பாடல்களில் பின்னாளில் எதிரொலிப்பதைக் காட்டுகிறார். உதாரணமாக “இரவும் பகலும் ஆனந்தமாக இரு. நடனமாடு விளையாடு. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்கட்டும். உன் தலை சுத்தமாக இருப்பாதாக. நீ சுகந்தங்களுடன் நீராடு உன் கையினை பற்றும் குழந்தையின் ஸ்பரிசத்தில் இன்பத்தினை உணரு. உன் மனைவி உன் இதயத்தில் ஆனந்திக்கட்டும்.” இது கில்காமெஷில் சிதூரி. ” நீ போய் உன் ஆகாரத்தை சந்தோசத்துடன் புசித்து உன் திராட்சை இரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி….உன் வஸ்திரங்கள் எப்போதும் வெள்ளையாயும் உன் தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக….நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்க்கையை அனுபவி” (பிரசங்கி 9:7-9) அடுத்த வரியை வாசிக்கையில் இதற்கு கில்காமெஷ் காவியத்துடன் இருக்கும் தொடர்பு தெள்ளத்தெளிவாகும். “நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் ஞானமும் இல்லையே.”(பிரசங்கி 9:10) மேலும் காம்பெல் இறுதியில் பாம்பு மரணமின்மையின் இரகசியத்தினை விழுங்குவதைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்: ” எனவேதான் சர்ப்ப சக்தி அழிவின்மையின் சக்தியாக ஒருகாலத்தில் மானுடத்திடம் இருந்தது. அது எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கீழ்நிலை அடைந்துவிட்ட தேவியின் சக்தியாக ஆகிவிட்டது. இழந்த சொர்க்கத்தில் கபடற்ற அச்சமாக.” (Occidental mythology பக்.92)

பாரத தொன்ம சித்திரங்களிலும் கில்காமெஷின் தொன்மத்துடன் ஒற்றுமை கொண்ட சில சித்திரங்களை காணமுடியும்.

அங்க நாட்டரசன் தன் நாட்டு பஞ்சம் தீர்த்திட ரிஷ்யசிருங்கரை வரவழைக்கிறான், பெண்களையே அறியாத அவரை பெண்கள் மூலம் தன் நாட்டிற்கு வரவழைத்து அவருக்கு தனது மகளான சாந்தாவை திருமணம் செய்து வைக்கிறான் ரிஷ்யசிருங்கர் மானின் கொம்புகளுடன் பிறந்தவர் என்கிறது கதை. என்கிடுவின் தொடக்கத்தன்மையுடன் ஒப்பிடத்தக்கதாக இவ்விவரணம் விளங்குகிறது. சாயாகிரகமான ராகு சர்ப்பமாக அமுதத்தை விழுங்கிய புராணக்கதையும் இங்கு நினைவுக்கு வரலாம். ராகும் கேதுவும் அமுதத்தை அடைய பயன்படுத்தப்பட்ட சர்ப்பமான வாசுகியே என்றும் அது அமுதத்தை அருந்தியததால் ராகு கேது என பிளக்கப்பட்டது எனவும் மற்றொரு வழக்கும் உண்டு.


Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [1]

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்



கிமு 1750களைச் சார்ந்ததாகக் கருதப்படும் அகாடிய மண்சுவடிகளிலிருந்தும் கிமு 650 களைச்சார்ந்த அசிரிய மண்சுவடுகளிலிருந்தும் பிற்கால ஹிடடைட்டில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கிவந்த பாடல்களிலிருந்தும் திரட்டப்பட்டு கில்காமெஷின் கதை அறிஞர்களால் சொல்லப்படுகிறது.

கில்காமெஷ் மூன்றில் இருபங்கு தெய்வத்தன்மையும் ஒருபங்கு மனிதத்தன்மையும் உடையவன். வீரன். அவனது மக்களின் மேய்ப்பன். அவன் உருக் (Uruk) எனும் நகரினை ஆள்கிறான். இந்நகரின் பெரும் மதில்களைக் கட்டியவன் கில்காமெஷ். என்ற போதிலும் “தந்தைகளுக்கு மகன்களை அவன் விட்டுவைப்பதில்லை; தாய்களூக்கு புதல்விகளை அவன் விட்டுவைப்பதில்லை. கேள்வி முறையில்லை. இரவும் பகலும் அவனது ஆணவ அதிகாரமே நடந்து வருகின்றது.” மக்கள் கலக்கமடைகின்றனர். அவர்கள் படைப்பு தெய்வமான அருரு தேவியிடம் சென்று முறையிடுகின்றனர். “நீயே கில்காமெஷை உருவாக்கினாய். இப்போது அவனுக்கு இணையானவனை படைத்திடு” என வேண்டுகின்றனர். இவர்களின் விண்ணப்பத்தினை கேட்ட அருரு தேவி விண்ணக தேவனான அனுவின் உருவினை ஒத்த களிமண் பதுமையை செய்கிறாள். அதனை பூவுலகுக்கு அளிக்கிறாள். அதுவே பராக்கிரமசாலியான என்கிடு ஆகிறது. அவன் உடல் முழுக்க மயிர் மயமாக இருக்கிறது. அவனது சடைகள் பெண்களின் குழல்கள் போல உள்ளன. மனிதர்களின் குடியிருப்புகள் குறித்து என்கிடு அறியான். அவன் மிருகங்களுடன் இணைந்து அவைகளில் ஒன்றாக வாழ்க்கை நடத்துகிறான். “அவன் மான்களுடன் மேய்கிறான். காட்டுயிர்கள் எங்கு நீர் அருந்துமோ அங்கு செல்கிறான். நீர்நிலைதனில் அவன் மனமும் அவ்விலங்குகளுடன் இன்பமடைந்திட”அவன் வாழ்கிறான். அச்சமயம் கில்காமெஷின் வேடுவன் ஒருவன் வைக்கும் பொறிக்கு ஒரு விசித்திர மானுட விலங்கு (என்கிடு) தப்புவதை காண்கிறான். அவன் இந்த அதிசய விலங்கினைக் குறித்து கில்காமெஷிடம் கூறிட கில்காமெஷ் அதனை கானகத்தினின்றும் வெளிக்கொணர ஒரு கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நடனமாதினை (தேவதாசி) அனுப்புகிறான்.

“உன் மடியை அவனுக்குத் திறந்திடு உன் எழிலினில் அவனை மயக்கிடு. அவன் உன்னைக் கவனித்ததும் உன்னிடம் வருவான். உன் ஆடையை நெகிழவிடு. அவனை உன் மேல் படரவிடு. பெண்ணாகிய உன் திறத்தினை காட்டு. அவனுள் காமத்தை மூட்டு. அவன் காமம் உன்னிடம் எழுந்திடும். அனைத்து உயிரினங்களும் அவனிடம் வேறுபாடு கொண்டிடும்.”

அந்த தேவதாசியும் அவனை மயக்குகிறாள். ஆறு நாட்களும் ஏழு இரவுகளும் அவர்கள் கூடுகின்றனர். பின்னர் அவன் அவளிடம் திருப்தி அடைந்து எழுகிறான். அவனிடமிருந்து காட்டுயிர்கள் விலகிச்செல்கின்றன. தேவதாசியுடன் உருக் நகருக்கு வருகின்றான் என்கிடு. அங்கு அந்த மாது அவனை சிங்காரிக்கிறாள். அவன் கில்காமெஷ் போலவே இருக்கிறான். அனு-இஷ்தார் கோவிலில் இருக்கும் கில்காமேஷ¤டன் என்கிடு போரிடுகிறான். நிலமதிர கோவிலின் சுவர்கள் நடுங்க இருவரும் கட்டிப்புரண்டு சண்டை செய்கின்றனர். வெற்றி தோல்வி இன்றி நடக்கும் இந்த சண்டையின் இறுதியில் அவர்கள் நண்பர்களாகின்றனர். பிரிக்கமுடியாத இரு சகோதரர்கள்.

ஒரு புனித வனத்தில் இருக்கும் செவ்வகில் மரத்தினை (தேவதாரு வகை – cedar) வெட்ட இருவரும் புறப்படுகின்றனர். தெய்வங்கள் உறையும் இவ்வனத்தினை சிங்க முகம் கொண்ட ஹ¤வாவா (அகாடிய வழக்கில் ஹ¤பாபா) காத்து வருகிறான். அவனை இருவருமாக சேர்ந்து சாமர்த்தியமாக வெல்கின்றனர். இப்போது கில்காமெஷின் தாய் தன் மகனின்
வெற்றிக்காக துதிக்கிறாள். கில்காமெஷ் இரவில் தூங்கி இறுதியில் செவ்வகில் மரத்தினை அடைகிறான். பின்னர் ஆதவ கடவுள் ஷமாஷை கில்காமெஷ் துதிக்கிறான். ஹ¤பாபா குழப்பமடைகிறான். அவனால் சரியாக காணமுடியவில்லை. அவனது வசம் இருக்கும் ஏழு உன்னதங்களையும் எடுத்துவிட்டு என்கிடுவின் தூண்டுதலால் கில்காமெஷ் அவனது தலையை
துண்டாடுகிறான். என்லில் தெய்வம் இதனால் கோபமடைந்து ஹ¤வாவாவின் ஏழு உன்னதங்களையும் இந்த இருவரிடமிருந்தும் எடுத்துவிடுகிறார்.

வெற்றியுடன் கில்காமெஷ¤ம் என்கிடுவும் ஊருக்கு திரும்புகின்றனர். ஒருகாலத்தில் ஆணவம் நிரம்பிய கொடுங்கோலனாக கருதப்பட்ட கில்காமெஷ் இப்போது மக்களால் போற்றப்படுகிறான். அன்பு செய்யப்படுகிறான். கில்காமெஷ் ஊர்வலம் வருகிறான். ஊர் விழாக்கோலம் பூணுகிறது. கில்காமெஷ் தனது சிறந்த ஆடை ஆபரணங்களுடன் வலம் வருகிறான்.இஷ்டர் தேவி கில்காமெஷிடம் மயங்கி அவனை தன்னிடம் அழைக்கிறாள். ஆனால் கில்காமெஷ் அவளை மோசமாக திட்டி மறுத்துவிடுகிறான். அவள் இதற்கு முன்னர் அவளது காதலருக்கு செய்த தீமைகளை நினைவுபடுத்துகிறான் கில்காமெஷ். பறவையினை காதலித்து புணர்ந்த நீ பின் அதன் சிறகினை ஒடித்தாய்; குதிரையினை புணர்ந்த பின் அதனை கசையினால் அடித்தாய்; இடையனை மணந்து பின் அவனை ஓநாயாய் மாற்றினாய் அவனது சக இடையர்களும் நாய்களும் விரட்டிட செய்தாய்.” என கூறுகிறான். ஆத்திரமடைந்த இஷ்டார் தனது தந்தையான அனுவிடம் சென்று சொர்க்கத்தின் காளை மாட்டினை கில்காமெஷ் மீது ஏவிட கூறுகிறாள். அனு இஷ்டரை எச்சரிக்கிறாள். சொர்க்கத்தின் காளை வெளிவந்தால் ஏழு ஆண்டுகள் பஞ்சம் ஏற்படும் என்கிறார். ஆனால் இஷ்டர் அந்த பஞ்சத்திலிருந்து தமது மக்களை காப்பாற்றிட தம்மிடம் வேண்டிய அளவு உணவு இருப்பதை கூறி கட்டாயப்படுத்துகிறாள். இந்த சொர்க்கத்தின் காளையை கில்காமெஷ¤ம் என்கிடுவும் இணைந்து வதைத்து அதன் இதயத்தை எடுத்து சூரியக்கடவுளுக்கு அளிக்கின்றனர். இது குறித்தும் கில்காமெஷின் வெற்றி குறித்தும் புலம்புகிறாள் இஷ்டர்.

என்கிடு தானும் இஷ்டருக்கு இதே பதிலைத்தான் அளித்திருப்பேன் எனக்கூறுவதுடன் காளையின் வலது தொடையை கிழித்து இஷ்டாரிடம் எறிகிறான். இஷ்டார் கோவில் தேவதாசிகளைக் கொண்டு சுவர்க்க காளைக்காக துக்க ஊர்வலம் நடத்துகிறாள். அதேசமயம் “வீர புருஷர்களில் வீர புருஷன் எங்கள் கில்காமெஷ்; மனிதருள் மாபெரும் வீரன் எங்கள் கில்காமெஷ்” எனும் கோஷங்களுடன் உர்க் நகர மக்களைக் கொண்டு ஊர்வலம் நடத்துகிறான் கில்காமெஷ்.

என்கிடு நோய்வாய்ப்படுகிறான். ஹ¤வாவாவையும் சுவர்க்க காளையையும் கொன்றதற்கு கிடைத்த தெய்வ தண்டனை என அறிகிறான். வேடனையும் தேவதாசியையும் நொந்துகொள்கிறான். அவன் கனவில் சூரியக்கடவுள் தோன்றி அவனை சமாதானப்படுத்துகிறார். அவன் காட்டினை விட்டு வந்ததால் கில்காமெஷ் கிடைத்ததை நினைவூட்டுகிறார். என்கிடு ஆறுதல் அடைகிறான். பன்னிரண்டு தினங்கள் நோய்வாய்ப்பட்டு மரணிக்கிறான். என்கிடுவின் மரணம் கில்காமெஷை வதைக்கிறது. அத்துடன் தனது வாழ்க்கையும் மரணத்தில் முடியவேண்டியது என்பதனை கில்காமெஷ் உணர்கிறான். மரணமின்மையை அடைய பிரயாணம் செய்கிறான். சந்திரக் கடவுளை தொழுகிறான். தெய்வங்கள் அனுப்பும் கனவுகள் வழிநடத்த அவன் செல்கிறான். சிங்கங்கள் சூழ்ந்த பாதைகள், கானகங்கள் என சென்று இறுதியில் சூரிய அஸ்தமனமாகும் மலை ஒன்றினை அடைகிறான். அங்கு தேள்மனிதர் காவல்காக்கும் பாதை ஒன்று திறந்துவிடப்படுகிறது. இருண்ட அப்பாதை வழியே அவன் செல்கிறான். அங்கு ஒரு அதிசய மரத்தினை காண்கிறான். கண்ணைப்பறிக்கும் அம்மரத்தினையும் அவன் தாண்டி செல்கிறான். இறுதியில் கடற்கரைக்கு வருகிறான்.

அங்கு சிதூரி எனும் பெண் அவனை வரவேற்று அவனது தேடலின் பொருளின்மையை கூறுகிறாள்: கில்காமேஷ் நீ எதனை தேடி இத்தனை தூரம் வந்தாய்? அந்த வாழ்க்கை உனக்கு கிடைக்கப்போவதில்லை. கடவுளர் மனிதனை படைத்த போது மரணத்தை அவனுக்குரியதாக விதித்தனர். அமரவாழ்க்கையை தம்முடையதாக்கினர். ஓ கில்காமெஷ் உன் வயிறு புடைக்க சாப்பிடு. இரவும் பகலும் ஆனந்தமாக இரு. நடனமாடு விளையாடு. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்கட்டும். உன் தலை சுத்தமாக இருப்பாதாக. நீ சுகந்தங்களுடன் நீராடு உன் கையினை பற்றும் குழந்தையின் ஸ்பரிசத்தில் இன்பத்தினை உணரு. உன் மனைவி உன் இதயத்தில் ஆனந்திக்கட்டும்.” என்கிறாள். ஆனால் கில்காமெஷ் உறுதியாக இருக்கிறான். இறுதியாக யுர்ஷனாபி எனும் ஓடக்காரனின் ஓடத்தில் மரணக்கடலை கடக்கிறான் கில்காமெஷ். மரணமற்ற வாழ்வு வாழும் யுத்னபிஷ்டிம் என்பவனை அடைகிறான் கில்காமெஷ்.

“ஒரு வீடு என்றென்றும் இருக்கும் என்றா நாம் கட்டுகிறோம்?… வெறுப்பு நிலமதில் என்றென்றும் நிலவுகிறதா? ஆறு என்றென்றும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகின்றதா?…தொல்பழங்கால முதல் நித்தியம் என்பது இல்லவேஇல்லை” என கில்காமெஷ¤க்கு சுட்டிக்காட்டுகிறான் யுத்னபிஷ்டிம். ஆனால் யுத்ன பிஷ்டிமே மரணமில்லா வாழ்க்கை வாழ்வதை பதிலுக்கு சுட்டிக்காட்டுகிறான் கில்காமெஷ். யுத்னபிஷ்டிம் தான் அந்நிலை எய்திய கதையை கூறுகிறான். யுத்னபிஷ்டிம் ஏழுநாள்-ஊழியின் போது அனைத்து உயிர்களையும் ஜோடியாக ஒரு பெரும் கப்பலை செய்து அதில் வைத்து காப்பாற்றியவன். ஆகவே தெய்வங்கள் அவனையும் அவன் மனைவியையும் தம்முள் ஒருவராக ஏற்றுக்கொண்டன. இது தமக்கு ஏற்படாது என உணருகிறான் கில்காமெஷ். அவனுக்காக பரிதாபப்படும் யுத்னபிஷ்டிம் ஏழு நாட்கள் தூங்காமலிருக்க கூறுகிறான். ஆனால் கில்காமெஷ் தூங்கிவிடுகிறான். பின்னர் நீருக்கடியில் இருக்கும் ஒரு செடியினை பிடித்து வரச்சொல்கிறான் யுத்னபிஷ்டிம்.

‘அது முட்செடி அதன் முட்கள் உன் கையை கிழிக்கலாம் ஆனாலும் அதனை நீ கொண்டுவர வேண்டும்’ என்கிறான். கால்களில் எடையைக் கட்டிக்கொண்டு நீருக்கு வெகு ஆழத்தில் சென்று அந்த செடியை காண்கிறான் கில்காமெஷ். அதே நேரத்தில் ஒரு பாம்பு வந்து அந்த செடியை விழுங்கிவிடுகிறது. பாம்புகள் தோலுரித்து வாழ்வது இதனால்தான். தோல்வியடைந்து வருகிறான் கில்காமெஷ். மரணமில்லா வாழ்க்கையை தேடுவதில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை கசப்புடன் ஜீரணித்து உருக் திரும்புகிறான். மற்றொரு கதையில் அவன் அச்செடியை எடுத்து ஊர் திரும்புகிறான். வழியில் அவன் குளிக்க போகும் போது அச்செடியின் மணத்தால் கவரப்பட்ட பாம்பு அதனை எடுத்து விடுகிறது. அழுகை பீறிட தோல்வியை ஏற்றுக்கொண்டு ஊர் திரும்பிய கில்காமெஷ் மீதி வாழ்நாட்களை அங்கேயே கழிக்கிறான்.


Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்