அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

எஸ். இராமச்சந்திரன்


2006-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மே மாதம் முதல் தேதி வரை தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு முதன்மையான தொல்லியல் கண்டுபிடிப்புகள் செய்தித் தாள்களின் மூலம் பொதுமக்கள் முன்னர் வைக்கப்பட்டன. அவற்றுள் முதலாவது கண்டுபிடிப்பு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் வி.பி. சதீஷ்குமார், சி. செல்வகுமார் ஆகியோரால் கண்டறியப்பட்ட பிராமி எழுத்துகளில் அமைந்த நடுகற்கள் ஆகும். இவற்றுடைய காலம் கி.மு. 2-3ஆம் நூற்றாண்டு என அறிஞர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


(செய்தி மற்றும் படங்களுக்கு நன்றி: The Hindu April 5, 2006.)

அடுத்த கண்டுபிடிப்பு மயிலாடுதுறை அருகிலுள்ள செம்பியன் கண்டியூர் என்ற ஊரில் தனியார் ஒருவரால் தமது வீட்டுத் தோட்டத்திலிருந்து தற்செயலாகத் தோண்டியெடுக்கப்பட்ட கல்லாலான கைக்கோடரிகள் ஆகும். இக் கைக்கோடரிகள் கி.மு. 1500க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய உலோகப் பயன்பாட்டு யுகத்துக்கு முற்பட்ட புதிய கற்காலப் பண்பாட்டு நிலையைச் சேர்ந்த தொழிற்கருவி ஆகும். தொல்லியலாளர்கள் இக்கருவியை ‘செல்ட்’ (Celt) என்று வழங்குவர். தற்போதைக்கு நாமும் இதனை செல்ட் என்றே குறிப்பிடலாம். இவற்றுள் ஒரு செல்ட்டில் ஹரப்பன் பண்பாட்டுக் காலகட்டத்தை (கி.மு. 2800- கி.மு. 1700)ச் சேர்ந்த சித்திர வடிவக் கருத்துரு எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(செய்தி மற்றும் படங்களுக்கு நன்றி: The Hindu May 01, 2006).

இக் கட்டுரையின் நோக்கம் மேற்குறித்த இரு கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றியும், இவற்றின் மூலம் செய்யப்படும் பரபரப்பு அம்சம் சார்ந்த பிரசாரம் பற்றியும், தமிழ் மொழி குறித்த பெருமித உணர்வுக்கு தீனி போடுகின்ற முயற்சி பற்றியும் விவாதிப்பதே ஆகும்.

சில கேள்விகள்

முதலாவது கண்டுபிடிப்பாகக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நடுகற் கல்வெட்டுகள் ஐயத்துக்கு இடமற்ற வகையில் மிக அரிய கண்டுபிடிப்பாகும். இன்றைய நிலையில் இந்த நூற்றாண்டின் முதன்மையான கண்டுபிடிப்பாக இவற்றைச் சொல்லலாம். ஏனென்றால், சங்க காலம் என்று கருதப்படுகின்ற கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நடுகற்கள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இக்கண்டுபிடிப்பின் மூலம் சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிக் குறிப்பிடப்படும் செய்திகள் சமகாலத்தில் நடைமுறையில் இருந்தவையே என்பது நிரூபணமாகிறது. இது மட்டுமன்றித் தமிழ் எழுத்துகளின் அரசு சார்ந்த, நிறுவனமயமாக்கப்பட்ட வளர்ச்சி என்ற பொருண்மைக்கும் நடுகல் வழிபாட்டை அரசு என்ற நிறுவனம் சுவீகரித்துத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது என்பது போன்ற சமூக அரசியல் வரலாறு குறித்த ஆய்வுப் பொருண்மைகளுக்கும் இக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு துணை செய்கின்றது. இந்நடுகற்களுள் முதலாவது நடுகல்லில் “வேள் ஊர் அவ்வன் பதவன்” என்றும், அடுத்த நடுகல்லில் “அன் ஊர் அதன்.. அன் கல்” என்றும், மூன்றாவது நடுகல்லில் “கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று நடுகற்களும் இறந்து போன வீரர்களின் நினைவுச் சின்னங்களாக எழுப்பப்பட்ட கற்கள் ஆகும். இவற்றில் உருவம் எதுவும் பொறிக்கப்படவில்லை. ஆயினும் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டில் கூடலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள், மாட்டு மந்தைகளை (ஆனிரையை)க் கவர்ந்து செல்ல முயன்ற போது தீயன் அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் ‘மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்’ என்ற ஒரு குறிப்பு உள்ளது. இப்பாடலில் குறிப்பிடப்படும் கூடல் மேற்குறித்த கூடலூராக இருக்கலாம். மறவருள் ஒரு பிரிவினராகிய அகத மறவர் பிரிவினரின் மூதாதையாக இந்த அகுதையைக் கருதுவதில் தவறில்லை. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் ‘பொன்புனை திகிரி’ (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (‘அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ’) கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய ஆனிரை கவரும் மறவர்களின் ஆகோள் மரபினைப் பற்றிச் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் தெளிவான குறிப்புகள் உள்ளன. இத்தகைய கள்வர்-மறவர் மரபினரால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளைக் காத்து மடிந்த வீரனைப் பற்றியதே இந்த நடுகல் என்பது புலனாகிறது. இந்நடுகல் எந்த அரசரின் ஆதரவுடன் எழுப்பப்பட்டது என்ற விவரம் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் பெருவேந்தர்களின் ஆதரவுடன்தான் இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிப்பது எளிது.

இக் கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராமி எழுத்து முறை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் அசோகப் பெருவேந்தனால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாகும். கி.மு. 1500-1000ஆண்டுகளுக்குள் ·பினிஷியா (Phoenecia) என்ற மத்திய தரைக்கடல் நாட்டுப் பகுதியில் உருவாக்கப்பட்ட வட அரமைக் (Aramaic) எழுத்துகளைப் பின்பற்றிக் கி.மு. 4ஆம் நூற்றாண்டு அளவில் வட இந்திய மொழிகளின் ஒலிகளுக்கேற்ப உருவாக்கிக் கொள்ளப்பட்ட எழுத்து முறையே பிராமி எழுத்து முறையாகும். தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்திய அகர வடிவ எழுத்து முறையாகிய பிராமி எழுத்து முறையைத் தமிழ் மொழியின் ஒலிப்பு முறைக்கேற்பச் சில மாற்றங்களுடன் சுவீகரித்து வடிவமைத்து, ஓரளவு கல்வியறிவும் படிப்பறிவும் உள்ள மக்கள் புரிந்து கொள்வதற்குத் தக்க வகையில் அதனைக் கல்லில் பொறித்து வைப்பது என்பது, சமூக அமைப்பும் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களும் பெருமளவு வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்தால்தான் சாத்தியமாகும். எனவே, இந்நடுகல் மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் எழுப்பப்பட்ட நடுகல்லாகவே இருக்க வேண்டும். அதே நேரத்தில், வேறு ஒரு முதன்மையான வரலாற்று உண்மையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மெளரியர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த மெகஸ்தனிஸ் என்ற கிரேக்கர் தாம் எழுதிய இந்திகா என்ற நூலில் பாண்டியா என்ற அரசி தனது நாட்டை 360 ஊர்களாகப் பிரித்து நிர்வாகம் செய்து வந்தாள் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் உண்மையான பொருள், பாண்டிய நாட்டில் சுயச் சார்புடைய ஊராட்சி நிர்வாகம் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது என்பதுதான். அந்த அடிப்படையில் பார்த்தால், வரையறுக்கப்பட்ட ஆட்சி நெறிமுறைகள் மற்றும் சட்ட நெறி முறைகளுடன் கூடிய நிர்வாகம் வட்டார அளவில் பரவலாக நடைபெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. அந்த நிர்வாக அமைப்பின் ஓர் அங்கமான வீரனே இந்நடுகல் வீரன் என்று கொள்வதில் தவறில்லை. அதாவது, அவன் ஒரு பணிமகனாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக, முறையான போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குடிகளுக்குத் தலைமைப் பகுதி வகித்த அல்லது குடி காவலராக இயங்கிய சமூக அமைப்பே அப்போது நிலவியிருக்க வேண்டும். அத்தகைய ஒரு சமூக அமைப்பில் குடிகாவலனாகச் செயல்பட்ட ஒரு வீரனே இந்நடுகல் வீரன் என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.

மாட்டு மந்தைகளே செல்வமாகவும் அறநெறிப்பட்ட வீரமே ஆண்மையின் இலக்கணமாகவும் கருதப்பட்ட அந்தக் காலகட்டத்தில் போரில் ஈடுபடும்போதுகூட, பசுக்கள், பிராமணர், பெண்டிர், நோயாளிகள் போன்றோர்க்கு ஊறு நேராத வகையில்தான் போரிட வேண்டும் என்ற விதி கடைப்பிடிக்கப்பட்டது. ‘ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என அறத்தாறு நுவலும் பூட்கை’ என்ற புறநானூறு 9ஆம் பாடல் வரிகளே இதற்கான ஆதாரம் ஆகும். மாடுகளைக் கள்வர்கள் கவர்ந்து செல்வதென்பது ‘வெட்சிப் போர் முறை’ என்றும், மாடுகளைக் காப்பது அல்லது கள்வர்களிடமிருந்து மீட்பது என்பது ‘கரந்தைப் போர் முறை’ என்றும் வழங்கப்பட்டன. பழந்தமிழ் இலக்கணமாக தொல்காப்பியம் கரந்தைத் திணையுடன்தான் நடுகல் வழிபாட்டைத் தொடர்புபடுத்துகிறது. எனவே, இந்நடுகல்லில் குறிப்பிடப்படும் தீயன் அந்துவன் என்பவன் கூடலூரைச் சேர்ந்த ஆனிரை கவரும் வெட்சிப் போர் மரபினரிடமிருந்து ஆனிரைகளை மீட்கின்ற முயற்சியில் இறந்துள்ளான் என்பதையும், நாகரிக வாழ்க்கை நடைமுறைகளை நிர்ணயித்து நெறிப்படுத்தி நிர்வகித்த ஆட்சியாளர்கள் தமது நிர்வாகத்தின் ஓர் அங்கமாகிய படைப்பிரிவைச் சேர்ந்த தீயன் அந்தவனுக்கு (இவன் படைப்பிரிவின் ஒரு தலைவனாக இருக்கக்கூடும்) நடுகல் எடுத்துள்ளனர் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

அந்தவன் என்பது இந்நடுகல் வீரனது பெயராகும். தீயன் என்பது இவனது குலமாக இருக்க வேண்டும். கூடலூர்ப் பகுதிக் கணவாய் மத்திய கேரளம் மற்றும் வட கேரளப் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கும் கணவாய்களுள் ஒன்றாகும். கேரளத்தின் அப்பகுதிகளில் வாழ்வோருள் தீயர் என்று அழைக்கப்படுகின்ற ஈழவர் சமூகப் பிரிவினர் முதன்மையானவர் ஆவர். கி.பி. 10-12ஆம் நூற்றாண்டைய தமிழ்க் கல்வெட்டுகளில் ‘தீயமாள்வான்’ என்ற அடைமொழியுடன் சில வீரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். தீயம் என்பது த்வீபம் (தீவு) என்ற சொல்லின் தமிழ்த் திரிபாகக் கருதப்படுகிறது. ஈழத் தீவுக்கும் இக்குலப் பெயருக்கும் தொடர்பிருக்கக்கூடும். ஈழவர் சமூகத்தவர் ஈழத்தீவிலிருந்து குடியேறியவர்களா என்பது தனித்த ஆய்வுக்குரியது. இப்போதைய நிலையில் தீயர் என்போர் ஈழவர் குலப்பிரிவினர் எனக் கொள்வதில் தவறில்லை. வட கேரளத்திலுள்ள ஒரு மாவட்டப் பகுதியாகிய வயநாடு என்பது வயவர் நாடு என்பதன் சுருக்கமாகும். ஈழவர் சமூகத்தவரை வயவர் என்று அழைப்பது அப்பகுதியில் வழக்கம். எனவே இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் அந்துவன், ஈழவர் சமூகப் பிரிவினனாகவே இருக்க வேண்டும். ஈழவர் சமூகத்தவர் போர்க்கலைப் பயிற்சியில் தேர்ந்தவர்கள் என்பதும் போர்க்கலையைக் கற்பிக்கும் ஆசான் மரபினர் என்பதும் வடக்கன் பாட்டுகள் என்கின்ற கேரள நாட்டின் பழமையான நாட்டுப் பாடல்களால் தெரிய வருகின்றன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நாணயவியல் அறிஞர் தினமலர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிங்கத்துடன் போரிடும் வீரன் ஒருவனின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பழங் காசினைக் கண்டறிந்தார். அக் காசில் ‘தீயன்’ என்று பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்ததையும் படித்து வெளியிட்டார். எனவே ‘தீயன்’ என்ற இக்குலப்பெயர் சங்ககாலத் தமிழரிடையே பரவலாக அறிமுகமான ஒரு பெயரே என்றும் போர்க்கலைப் பயிற்சியுடனும் வீரத்துடனும் அறப்போர் மரபுடனும் தொடர்புடைய ஒரு குலப் பெயராக இருந்துள்ளது என்றும் தெரிகின்றன.

இப்போது தமிழ்ச் சமூக வரலாறு குறித்த அடிப்படையான சில கேள்விகளைப் பரிசீலிப்போம். முதற்கேள்வி, தமிழகத்தில் க்ஷத்திரிய வருணம் அல்லது அரச குலம் என்ற ஒன்று இருந்துள்ளதா என்பதாகும். அடுத்து, அரச குலம் என்ற ஒரு குலம் இருந்தது என்று விடை கிடைத்தாலும் அக்குலம் எவ்வாறு உருவாயிற்று; பிற்காலத்தில் அக்குலம் என்ன ஆயிற்று என்ற கேள்விகள் எழுகின்றன. தீயர் சமூகத்தவரின் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால் இக் கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்புண்டு. மறப்போர்முறை என்பது பிறநாடுகளைக் கொள்ளையிடுவதற்கும், வென்று அடிமைப்படுத்துவதற்கும் எவ்வாறு பயன்பட்டதோ அது போன்றே தம் நாட்டின் குடிகளை ஆள்வதற்கும் காப்பதற்கும் அவர்களுக்குள் ஏற்படுகின்ற வழக்குகளையும் பூசல்களையும் தீர்ப்பதற்கும், அறப்போர் முறையில் தேர்ந்த நிர்வாகிகள் பயன்பட்டனர். ‘தண்ட நீதி’ எனப்படும் க்ஷத்திரிய நீதிமுறைக்கு[1] அடித்தளமாக அமைவன ‘பிரஜானாம் பரிபாலனம்’ என்ற குடிகாவல் முறையும், சரணடைந்தவர்களை எப்பாடுபட்டேனும் காக்கின்ற ‘அபயதானம்’ எனப்படும் வல்லமையும் ஆகும். எனவே, அறப் போர்முறை சார்ந்த பயிற்சிகளைக் கற்பிக்கின்ற குலமாக அறியப்படுகின்ற ஈழவர் குலம் பண்டைக்கால தென்னிந்தியச் சமூக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பங்கு ஆற்றியிருக்க வேண்டும் என்று நாம் ஊகிப்பது தவறாகாது. மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் ஈழவர் சமூக மடத்திலுள்ள கி.பி. 17ஆம் நூற்றாண்டுச் செப்பேடு ஒன்றில்[2] செளந்தர பாண்டியன் என்ற பெயருடன் மதுரையை ஆண்ட சொக்கநாதப் பெருமானின் மாமன் மலையத்துவஜ பாண்டியனைத் தங்கள் குல முன்னோராக ஈழவர்கள் பெருமையுடன் குறித்து வைத்துள்ளனர். பாண்டியா என்ற பெயரில் மெகஸ்தனிஸ¤ம், மலையத்துவஜ பாண்டியனின் மகளான தடாதகைப்பிராட்டி அல்லது மீனாட்சி அம்மை என்று புராணங்களும் குறிப்பிடுகின்ற பெண்மணியைத் தமது குல மூதாதையாக ஈழவர் கருதியுள்ளனர் என்பது இதற்குப் பொருளாகும். இத்தகைய பிற்காலச் செய்திகளைத் தமிழ்ச் சமூக வரலாற்று ஆய்வுக்கு அடிப்படையான ஆதாரங்களாகக் கொள்வது எந்த அளவுக்குச் சரியானது என்ற கேள்வி எழுவது இயல்பு. வேறு பல சாதியினரின் செப்பேடுகளையும் ஆவணங்களையும் சேகரித்து, படித்து, தொகுத்து வெளியிட்டால் இந்த ஆராய்ச்சியை இன்னும் உயர்ந்த ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். அதை நாம் எப்போது செய்யப் போகிறோம் என்பதுதான் முதன்மையான கேள்வி. அத்தகைய ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டால் 21ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க தொல்லியல்-சமூக வரலாற்றியல் நிகழ்வு என்று அதனைத் தயங்காமல் சுட்டிக்காட்டிப் பெருமிதம் கொள்ளலாம்.

இப்போது, மே 1ஆம் தேதி The Hindu இதழில் ‘Discovery of a Century’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள செம்பியன் கண்டியூர் என்ற ஊரில் தற்செயலாகக் கண்டறியப்பட்ட இரண்டு செல்ட்டுகள் பற்றிய செய்தியைப் பரிசீலிப்போம். அவற்றுள் ஒரு செல்ட் கி.மு. 1500ஆவது ஆண்டைச் சேர்ந்தது என்றும் அதில் சிந்து சமவெளி எழுத்துக் குறியீடுகள் நான்கு பொறிக்கப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக் கல்வெட்டாய்வாளர்கள் அக் குறியீடுகளை அடையாளம் கண்டறிந்தனர் என்றும் அத்துறையின் சிறப்பு ஆணையர் திரு. டி. எஸ். ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ். குறிப்பிட்டுள்ளார். தமிழ் பிராமிக் கல்வெட்டுகளை ஐயத்துக்கு இடமற்ற வகையில் படித்துப் பொருள் விளக்கம் கூறி ‘Early Tamil Epigraphy’ என்ற தலைசிறந்த நூலை எழுதி வெளியிட்டுள்ள திரு. ஐராவதம் மகாதேவன் மேற்குறித்த செல்ட்டில் இடம்பெற்ற எழுத்துகள் கி.மு. 2000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையெனக் கணித்துள்ளார். மேலும், இக்கற் கருவி தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட கருவியே என்றும் சிந்து சமவெளியிலிருந்து கொண்டுவரப்பட்டதன்று என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இக் கருவியிற் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளை ஒத்த சில வடிவங்கள் சிந்து சமவெளி சுடுமண் முத்திரைகளில் இடம் பெற்றுள்ளன என்றும் அவற்றைத் தாம் ‘முருகன்’ என்று படித்துள்ளதாகவும் திரு மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். அத்துடனன்றி, சிந்து சமவெளி நகரங்களில் வாழ்ந்த மக்களும் தமிழ் நாட்டில் வாழ்ந்த புதிய கற்காலப் பண்பாட்டு நிலை மக்களும் ஒரே மொழியைத்தான் பேசினர் என்றும் அம்மொழி திராவிடமாகத்தான் இருக்க முடியுமென்றும் இந்தோ-ஆரிய மொழியாக இருக்க முடியாது என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.

இந்தக் கண்டுபிடிப்பு நாம் முன்னர் கண்ட பிராமி எழுத்துப் பொறித்த நடுகல்லை ஒத்ததன்று. நடுகல் கல்வெட்டு அகர வடிவ ஆதியான (ஓரொலிக்கு ஓரெழுத்து என்ற முறைப்படி அமைந்த) எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கற்கால செல்ட்டில் பொறிக்கப்பட்டிருப்பதாக மேற்குறித்த அறிஞர்கள் கருதும் வடிவங்கள் கருத்துகளின் குறியீடுகளாக அமைந்த சித்திர வடிவ எழுத்துகளாகும். இவை எழுதுகின்ற நோக்கில் பொறிக்கப்பட்ட எழுத்துகளா அல்லது தற்செயலாக விழுந்த கொத்துப் பொறிப்புகளா என்பதே ஐயமாக உள்ளது. இது கி.மு. 1500ஆம் ஆண்டைச் சேர்ந்த புதிய கற்கால செல்ட் என்பது ஏற்கத்தக்கதே. வட தமிழகத்தில் சில பகுதிகளில் இத்தகைய கற்கருவிகள் ஏராளமான அளவில் கண்டறியப்பட்டுள்ளன. இவை பயன்படுத்தப்பட்ட நாகரிக நிலையெல்லாம் இறந்த காலமாகப் போய்விட்ட பிறகு இன்றைக்கு சுமார் 1500 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பகுதிக்கு இக்கற்கருவி கொண்டுவரப்பட்டுப் பொற்கொல்லர் போன்ற நுட்பமான பணி செய்வோரால் அடைகல்லாக (Anvil) பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அப்போது விழுந்த கொத்துகளாக இவை இருக்கவும் வாய்ப்புண்டு. இவற்றை எழுதுகிற நோக்கில் பொறிக்கப்பட்ட கருத்துக் குறியீட்டுச் சித்திர எழுத்துகள் என்பது ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டாலும் கூட, புதிய கற்காலப் பண்பாட்டு நிலைக்கும் இத்தகைய பொறிப்பு எழுத்துகளுக்கும் தொடர்பு இருந்தது எனக் கொள்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை. ஹரப்பன் நாகரிகத்தோடு தொடர்புடைய நகரங்கள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அகழ்ந்து கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இந்தியாவின் வடமேற்குப் பகுதி நாடுகளிலும், இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் வரையிலும் விரிந்து பரந்திருந்த ஒரு நாகரிகம் ஹரப்பன் நாகரிகமாகும். இந்நாகரிகம் அழிந்ததற்கான காரணங்கள் இன்று வரை தெளிவுபடுத்தப்படவில்லை. என்றாலும் கூட, கி.மு. 1700 அளவில் ஒரே சமயத்தில் இந்நாகரிகம் அழிந்திருக்கவேண்டும் என்று தொல்லியல் அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

கற்கருவிகளையும், செம்புக் கருவிகளையும் பயன்படுத்திய நாகரிகம் (Chalco-lithic Civilisation) என்று இதனைக் குறிப்பிடுவது வழக்கம். இரும்பை உருக்கி எடுக்கும் தொழில்நுட்பத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படுகின்ற உறுதியான மரங்களை வெட்டுதல் போன்ற பணிகளுக்கு அவர்கள் கற்கோடரிகளையே கழிகளில் பொருத்திப் பயன்படுத்தினர். செம்பு மற்றும் செம்பு சார்ந்த உலோகக கலவைகளால் ஆன பல கருவிகளையும் வேறு பல பணிகளுக்காக அவர்கள் பயன்படுத்தினர். அதே வேளையில் அந்நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகம். பல்வேறு விதமான படிநிலைகள் கொண்ட சமூக அமைப்பினையும், ஒருவிதமான அடிமை முறையையும் ஆதாரமாகக் கொண்டே அந்த நாகரிகம் இயங்கியது. அதற்கெனத் தெளிவான இலக்கணங்களுடன் கூடிய எழுத்து முறை இருந்தது என்பது தெரிய வருவதால் எழுத்து வடிவிலான சட்டங்கள் நிர்வாக நடைமுறை போன்றவையும் அவை சார்ந்த கல்வி முறையும் அங்கு வழக்கத்திலிருந்திருக்க வேண்டும். பிற வெளிநாடுகளுடன் வணிகத்தொடர்புகள் இருந்துள்ளன. அரசு என்ற அமைப்பு இருந்தால்தான் இவையெல்லாம் சாத்தியம். ஆனால், புதிய கற்கால நாகரிகம் என்பது கி.மு. இரண்டாயிரம் முதல் கி.மு. ஆயிரம் வரை தென்னிந்தியாவில் நடைமுறையிலிருந்த பண்பாட்டு நிலையாகும். புதிய கற்காலப் பண்பாட்டு நிலையிலிருந்த மக்கள் சமூகத்தவரிடையே ஒருவிதமான பழங்குடிச் சமூகக் குடியரசு இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், ஊர் என்று குறிப்பிடத்தக்க நிரந்தரக் குடியிருப்புகளோ சொத்து எனக் குறிப்பிடத்தக்க நில உடைமையோ இல்லாத பண்பாடு நிலை அது. அக்கால கட்டத்தில் நதி நீர்ப்பாசன வசதிகளோ நில வருவாய் நிர்வாக அமைப்புகளோ இருந்தன என ஊகிக்பதற்குரிய தடயங்களோ, காரண காரிய அடிப்படையோ எவையும் இல்லை. நெருப்பின் பயன்பாட்டினை அவர்கள் அறிந்திருந்தனர் என்பது உண்மை. விலங்குகளின் தோலையும், இலை தழைகளையுமே அவர்கள் ஆடையாக உடுத்தியிருக்க வேண்டும். பருத்தியின் பயன்பாட்டை அவர்கள் அறிந்திருந்தனர் என்றோ நெசவுக் கருவிகள் பயன்பட்டில் இருந்தன என்றோ சொல்வதற்கு எந்த அடிப்படையும் ஆதாரத் தடயமும் இல்லை. மாடுகளை அவர்கள் வீட்டு விலங்குகளாகப் பழக்கத் தொடக்கி விட்டனர் எனத் தெரிகிறது. புதர்களைக் கொளுத்திவிட்டு அந்தச் சாம்பலையும் மாட்டுச் சாணத்தையும் உரமாகப் பயன்படுத்தி நேரடியாக மழையைப் பயன்படுத்தி பயிர்செய்யும் மானாவாரி (வானமாரி?) விவசாயத்தை அவர்கள் அறிந்திருந்தனர்.

மாடுகள் பொதி சுமக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், உழவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், ஏர்க்கலப்பை என்பது அவர்கள் அறியாத ஒன்றாகும். நிலத்தைக் கிண்டிக் கிளறிச் செய்யப்படும் களைக்கொட்டு வேளாண்மை என்று சொல்லக்கூடிய விவசாய முறையையே அவர்கள் பயன்படுத்தினர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய கருவிக்கு தமிழில் என்ன பெயர் என்று ஆராய்ந்தால் ஒரு சில குறிப்புகள் கிடைக்கின்றன. கணிச்சி என்ற ஒருவித ஆயுதத்தை ஏந்திய கூற்று என்ற தெய்வம் காளையை வென்ற தெய்வம் என்றும், எருமையைக் கொன்ற தெய்வம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் எருமையைக் கொன்ற தெய்வம் என்ற படிமம் கொற்றவை என்ற பெண் தெய்வத்துக்கு உரியதாக்கப்பட்டு அத் தெய்வம் திகிரி என்ற வளைதடியை ஏந்திய தெய்வமாக பிற்காலச் சிற்ப மரபில் சித்திரிக்கப்பட்டது. ஆனால், கொற்றவையின் ஆண் வடிவமாகிய கூற்று என்ற ஆண் தெய்வமோ, காளையைக் கொல்லாமல் வென்று அடிமைப்படுத்தியதோடு, கணிச்சி என்ற ஆயுதத்தையும் ஏந்திய தெய்வமாக இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதற்கேற்பப் பிற்காலச் சிற்ப மரபில் காளையைக் கொடியாகவோ அல்லது வாகனமாகவோ ஏற்றுக் கொண்டும், மழு என்ற கோடரியை ஆயுதமாகக் கொண்டும் விளங்குகின்ற சிவனாகச் சித்திரிக்கப்பட்டது. மழு என்பது பயன்பாட்டு அளவில் பார்த்தால் கணிச்சியுடன் தொடர்புடையதன்று. மழுவினைக் கோடரி என்று கொள்ளலாம். கணிச்சி என்பது நிலத்தைத் தோண்டுவதற்கும் பயன்பட்ட ஓர் ஆயுதமென்பது சங்க இலக்கியங்களில் தெளிவுபடக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில், கணித்ர என்ற சொல் இதனோடு தொடர்புடையாதகத் தோன்றுகிறது. கணித்ரிமா என்ற சமஸ்கிருதச் சொல் கணித்ர என்ற கருவியால் தோண்டப்பட்டது என்ற பொருளில் கிணற்றைக் குறிக்கும். எனவே சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கணிச்சி என்ற உலோகக் கருவியின் பூர்வ வடிவம் கூற்றுத் தெய்வத்தின் கையில் இடம் பெற்றிருந்த நிலத்தைத் தோண்டுவதற்கும் வேட்டைக்கும் பயன்படுத்தப்பட்ட கருவியே ஆகும். இதுதான் புதிய கற்கால செல்ட்டாக இருக்க வேண்டும்[3].

உலோகத்தின் பயன்பாட்டை அறிந்திராத புதிய கற்காலப் பண்பாட்டு நிலை மக்கள் வேட்டையாடுதல் – உணவு சேகரித்தல் என்ற நிலையிலிருந்து சற்று முன்னேறிப் பழங்குடி வேளாண்மை என்று சொல்லக்கூடிய ஒரு நிலையை எட்டியிருந்தனர். இவர்களால் சாம்பல் நிற மட்பாண்டங்கள் (Grayware) பயன்படுத்தப்பட்டன. இப்பண்பாட்டின் இறுதிக் கட்டத்தில்தான் சக்கரம் போன்ற ஓரமைப்பின் மூலம் மட்பாண்டம் வனைந்து அதனை நெருப்பில் சுட்டுப் பதப்படுத்திப் பயன்படுத்தும் அறிவு முதிர்ச்சி ஏற்பட்டது. மொத்தத்தில் இம்மக்கள் முன்னேறிய சமூகத்தவருடன் நெருக்கமான உறவுகளோ பொருள் பரிவர்த்தனையோ வைத்துக் கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்படி இருக்க, இவர்களையும், ஹரப்பன் நாகரிக மக்களையும் ஒரே நாகரிக நிலை என்ற தட்டில் வைத்துப் பார்ப்பது பொருத்தமற்றது. ஹரப்பன் நாகரிகக் காலகட்டத்தைச் சேர்ந்த வாழ்விடம் என்று சொல்லத்தக்க கட்டடச் சிதைவுகள் எவையுமே தென்னிந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை நாம் இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் ஹரப்பன் நாகரிகம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொன்மையான ஒரு மொழியைப் பேசிய மக்கள் தொகுதியினரின் நாகரிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது என்ற உண்மையை மறுப்பதற்காக அல்ல. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு தொன்மையான மொழியை ஹரப்பன் நாகரிக மக்கள் பேசியிருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இன்றைக்குத் தமிழ்நாடு என்று வழங்கப்படுகிற நிலப்பகுதியுடன் ஹரப்பன் நாகரிகத்தை இணைக்கின்ற ஓர் அவசரக் கோல முயற்சியில் தொல்லியலாளர்கள் மற்றும் கல்வெட்டாய்வாளர்கள் இறங்கும்போதுதான் இதில் பிரச்சினை எழுகின்றது. திராவிட மொழிகள் என்ற சொல்லாட்சி கி.பி. 1819இல் சென்னையில் மாவட்ட ஆட்சியராக இருந்த ‘பிரான்சிஸ் வைட் எல்லிஸ்’ என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். தமிழ் என்ற சொல்லின் சமஸ்கிருதத் திரிபாகிய த்ரமிடம் அல்லது த்ராவிடம் என்ற வழக்கு தமிழ் மொழியை முதன்மையான உறுப்பினராகக் கொண்ட ஒரு மொழிக் குடும்பத்தைக் குறிப்பிடுகிறது என்பதில் ஐயமில்லை. ஹரப்பன் பண்பாட்டு மக்களிடையே இம் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு தொன்மையான மொழிதான் வழங்கியிருக்க வேண்டும் என்பதும் வலிமையான ஒரு கருத்தே. ஆனால், அம் மொழியின் பெயர் திராவிடம் என்றோ தமிழ் என்றோ இருந்திருக்க முடியாது. அம் மொழியின் பெயர் என்ன; சொற்கள், சொற்றொடர்க் கட்டுமானங்கள், அவற்றிற்கான இலக்கணங்கள் ஆகியவற்றை நாம் எவ்வாறு புலனாய்ந்து கண்டுபிடித்து மறுநிர்மாணம் செய்யப் போகிறோம் என்பன போன்ற மிகப் பெரிய சவால்கள் நம்முன் எழுகின்றன. இவற்றையெல்லாம் நாம் எதிர்கொள்ள வேண்டிய தொடக்க நிலையில் இருக்கின்றோம். அப்படி இருக்க, இப்பொழுதே ஹரப்பன் சித்திர வடிவ குறியீடுகளுக்கு பொருள் விளக்கம் கூறி அவற்றைத் தமிழகத்தில் கண்டறியப்பட்ட கற்காலக் கருவியில் உள்ள சில கொத்துப் பொறிப்புகளுடன் தொடர்புபடுத்துவது என்பது சரியான ஆய்வு நெறிமுறையின் பாற்பட்டதாகுமா? முருகு என்ற தெய்வத்தின் அடையாளக் குறியீடாகக் கருதி வழிபடப்பட்ட ஆயுதம் ‘வேல்’ ஆகும். அது உலோகக் கருவியாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. கற்கருவியாகிய கணிச்சியுடனோ பழங்குடி வேளாண்மையுடனோ முருகு என்ற தெய்வத்தைத் தொடர்புபடுத்துவதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? புதிய கற்காலக் கருவியில், அப்பண்பாடு நிலவிய காலகட்டத்திலேயே கற்கருவிகளைக் கொண்டு இந்த எழுத்து பொறிக்கப்பட்டிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு காலநிர்ணயம் செய்யப்பட்டிருக்குமானால் அது வரலாற்றின் வளர்ச்சிப் போக்குக்கு முற்றிலும் முரணான ஒரு விஷயமாக அல்லவா இருக்கிறது? அவ்வாறன்றித் தமிழகத்தில் இரும்பு யுகம் அறிமுகமான காலகட்டம் என்று உத்தேசமாகக் கணிக்கப்படுகின்ற கி.மு. 9-8ஆம் நூற்றாண்டளவில் இரும்பு, ஆணி அல்லது உளி கொண்டு இவ்வாறு பொறிக்கப்பட்டிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் இக்கருத்து கூறப்பட்டிருப்பதாக நாம் பொருள் கொண்டாலும் செம்பு-கற்கருவிப் பண்பாடாகிய ஹரப்பன் பண்பாட்டுக்கும் இரும்பு யுகம் எனப்படுகின்ற பெருங்கற்படைக் காலப் பண்பாட்டுக்கும், பண்பாட்டு மட்டத்திலும் கால அடிப்படையிலும் பெருத்த வேறுபாடுகள் உள்ளனவே – அவற்றை எப்படி இட்டு நிரப்புவது? இவை போன்ற அடிப்படையான பல கேள்விகளை ஆய்வாளர்கள் முன்னிலையில் நாம் எழுப்ப விழைகிறோம்.

சில ஆலோசனைகள்

ஹரப்பன் நாகரிகத்தவரால் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறையைப் பற்றியும் அவர்களிடையே வழங்கிய மொழி பற்றியும் ஆய்வு செய்வதற்கு முனைபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முதன்மையான அறிவுரையை செக்கோஸ்லோவேக்கிய நாட்டுத் தமிழியல் அறிஞர் கமில் சுவலபில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அகழ்வாய்வுகளின் மூலமும் தர்க்கவியல் அடிப்படையில் அமைந்த ஊகங்களின் மூலமும் ஹரப்பன் மக்களால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருள்களைப் பற்றிய விவரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அப்பொருள்களின் பழம்பெயர்கள் என்ன என்பதைக் கண்டறிந்து மொழியியல் அடிப்படையில் அப்பெயர்களை மறுநிர்மாணம் செய்வதில் அறிஞர்கள் ஈடுபடலாம் என்று கமில் சுவலபில் ஆலோசனை தெரிவித்துள்ளார்[4]. அவருடைய அந்த ஆலோசனையைப் பின்பற்றிக் கீழ்வரும் கருதுகோள் நம்மால் அறிஞர்களின் பரிசீலனைக்கு வைக்கப்படுகிறது:

சங்க இலக்கியங்களில் நாஞ்சில் என்ற உழுகருவி குறிப்பிடப்படுகிறது. இது ஏர்க்கலப்பையையே குறிப்பிடுகிறது என்றாலும் இரும்புக் கொழு பொருத்திப் பயன்படுத்தப்பட்ட ஏர்க்கலப்பை வடிவத்துடன் பிற்காலத்தில் கலந்து ஒன்றிப்போன ஒரு பழமையான உழுகருவியே நாஞ்சில் எனத் தெரிகிறது. நமது ஊகத்துக்கு அடிப்படையாக அமைவது ‘நாஞ்சில் படையோன்’ எனக் குறிப்பிடப்படும் பலராமன், இரும்பு யுகத்துக்கு முற்பட்ட செம்பு-கற்கால நாகரிகத்தவன் என்றும் தனது நாஞ்சிலை மாடுகளில் பூட்டி உழுவதற்குப் பதிலாகத் தன் கைகளாலேயே பயன்படுத்தினான் என்றும் நாம் பொருள்படுத்துவதற்கான சில குறிப்புகள் புராணங்களில் காணப்படுவதுதான்[5]. நாஞ்சில் என்ற இச்சொல் நாங்கிர் என்று மராட்டிய மொழியிலும் நாகலி எனத் தெலுங்கிலும் நேகிலு எனக் கன்னடத்திலும் லாங்கல என சமஸ்கிருதத்திலும் வழங்கப்படுகிறது. தமிழ் நிகண்டுகள் நாஞ்சில் என்ற சொல்லுக்கு ஏர்க்கலப்பை என்ற பொருளையும் மதிலுறுப்பு என்ற பொருளையும் குறிப்பிடுகின்றன. மதிலுறுப்பு என்பது கற்கோட்டைகளின் பிரம்மாண்டமான வாயிற்கதவுகளை மூடிய பின்னர் குறுக்கே அணைத்து இடப்படும் வலிமையான மரக்கட்டை என்று பொருள்படக்கூடும். ஏனென்றால், இன்றைக்கும் கோயிற் கோபுரங்களின் வாயிற்கதவுகளை மூடிய பின்னர் கதவுகளின் பின்புறம் இடப்படும் மர உத்தரங்களை நாங்கில் மரம் எனப்படும் சில்வர் ஓக் மரங்களால் செய்து இடும் வழக்கம் உள்ளது. இதற்கு நாங்கில் மரத்தைத் தேர்வு செய்ததன் நோக்கம் தற்போதைய தச்சாசாரிமார்களுக்குக் கூடத் தெரிவதில்லை. ஆனால், இம்மரம் அதிர்வுகளைத் தாக்குப் பிடித்து வளைந்து கொடுத்து எதிர்த்து நிற்கக் கூடியவை என்றும், அதே நேரத்தில் கனம் குறைந்தவை என்பதால் எளிதில் சுமந்து செல்ல முடியும் என்றும் தச்சாசாரிமார்கள் கூறுகின்றனர். பழங்காலத்தில் கோட்டை வாயிற் கதவுகள் எதிரி அரசர்களின் யானைகளால் தாக்கப்படும்போது, அந்தத் தாக்குதலை எதிர்த்துத் தாக்குப் பிடிப்பதற்காக நாங்கில் மரத்தைப் பயன்படுத்தி இருக்கலாம். சுமப்பதற்கு எளிது என்பதால் மனிதர்களே தம் கைகளால் இதனை உழுகருவியாகப் பயன்படுத்தி நிலத்தை உழுதிருக்க வாய்ப்புண்டு. நாங்கில் மரங்கள் படகுகள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுவதுண்டு என்று தச்சர்கள் குறிப்பிடுகின்றனர். பலராமன் ‘லாங்கல’ என்ற தன் ஆயுதத்தால் யமுனை ஆற்றை இழுத்து வந்தான் என்ற குறிப்பு புராணங்களில் காணப்படுகிறது. இது நதி நீர்ப்பாசன முயற்சிகளைக் குறிக்கும் என நாம் புரிந்துகொள்ள இயல்கிறது. சிந்து நதி பாய்ந்த செழிப்பான நிலப்பகுதிகளில் வாய்க்கால்கள் வெட்டி நீரைத் தேக்கி விவசாயம் செய்து வாழ்ந்த ஹரப்பன் பண்பாட்டு மக்கள் கைகளின் உதவியுடன் நிலத்தை உழுகிற நீண்ட கழிகளையே உழுகருவிகளாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது தொல்லியல் அறிஞர்களின் முடிபு ஆகும். மேலும், ஹரப்பன் பண்பாட்டு காலகட்டத்தைச் சேர்ந்த ‘லோதல்’ போன்ற துறைமுகங்களில் கப்பல்களும் படகுகளும் கட்டும் பணிகள் பெருமளவில் நடந்திருக்க வேண்டும். இத்தகைய பணிகளுக்கெல்லாம் நாங்கில் மரம் பெரிதும் பயன்பட்டிருக்க வாய்ப்புண்டு. நாங்கில் என்ற சொல் கூட ஹரப்பன் மொழியில் வழங்கியிருக்கலாம்.

இது தொடர்பாக நாம் கூற விரும்புகின்ற ஆலோசனை என்னவென்றால், ஹரப்பன் எழுத்து பொறிப்புகளைப் படித்துப் பொருள் விளக்கம் அளிக்கின்ற முயற்சியில் முதன்மையாக ஈடுபட வேண்டியவர்கள் பன்மொழிப் புலமை வாய்ந்த அறிஞர்களும், திராவிட மொழியியல் அறிஞர்களும் ஆவர். இவர்களுக்குத் தொல்லெழுத்தியல் (Palaeography) பற்றிய பரிச்சயம் தேவை. இவர்களுடன் தொல்லியல் அறிஞர்களும், கல்வெட்டு அறிஞர்களும், மானிடவியல், சமூகவியல் அறிஞர்களும் இணைந்து முயற்சி மேற்கொண்டாலன்றி ஹரப்பன் எழுத்துகளைப் படித்துப் பொருள் விளக்கம் சொல்வதென்பது ‘சித்தம் போக்கு சிவன் போக்கு’ என்று நிலைக்குத்தான் இட்டுச் செல்லும்[6].

அடிக்குறிப்புகள்:

[1] “நேமியளவும் வழங்கிய ஈழ தண்டம்” என்ற தொடர் தமிழிலக்கிய உரையாசிரியர்கள் சிலரால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழவர் தண்ட நீதி என்பது ‘சான்றவர் சிரம நீதி’ என்று வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணத்தில் அங்கம் வெட்டிய படலத்தில் குறிப்பிடப்படும் போர்க்குடியினரின் நீதிமுறையோடு ஒத்ததாக இருக்கலாம். அரச குலத்தவர் இருவருக்குள் சொத்துரிமை குறித்து நேர்கின்ற வழக்கினைத் தீர்க்க முடியாத நிலை தோன்றினால் அங்கப் போர் முறையின் மூலம் அவ்வழக்கு தீர்க்கப்படும். இது போன்ற தண்ட நீதி முறைகள் இலங்கையில் வழக்கில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பார்க்க: ‘South India and Sri Lanka’ by K.K. Pillay, Madras University, 1975 – pp. 168-170.

[2] இச்செப்பேடு சுமார் 20 ஆண்டுகளுக்கும் முன்பு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் மதுரை பதிவு அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. தற்போது சென்னையிலுள்ள அத்துறைத் தலைமை அலுவலத்தில் பாதுகாக்கப்படுகிறது. இச்செப்பேட்டின் வாசகங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் பொறிக்கப்பட்டுள்ள கி.மு. முதல் நூற்றாண்டாகக் கருதப்படும் ஒரு கல்வெட்டில் ‘அந்துவன்’ என்ற ஆட்பெயர் குறிப்பிடப்படுகிறது. (p. 319, Early Tamil Epigraphy, Iravatham Mahadevan, Cre-A, Chennai, India, 2003) அதே மலையில் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிற “எருகாடூர் இழகுடும்பிகன் (ஈழக் குடும்பிகன்) போலாலையன்” என்பவனின் பெயர் குறிப்பிடப்படுகிறது. மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் (மதுரையிலிருந்த ஈழவர் சேரியைச் சேர்ந்த பூதன் தேவனார்) என்ற புலவர் பெயர் சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்துவன் அல்லது அந்தவன் என்ற ஆட்பெயர் மதுரைப் பகுதியில் பரவலாக வழங்கியுள்ளது என்பதையும் ஈழவர் சமூகத்தவர்கள் குறிப்பிடத்தக்க சமூக அந்தஸ்துடன் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் இக்குறிப்புகளால் தெளிவாக உணர முடிகிறது.

[3] கொற்றவை என்ற பெண் தெய்வமே வெட்சிப் போர் மரபினராகிய வேட்டைக்குடியினரின் தெய்வமாகும். இத் தெய்வம் late palaeolithic civilisation எனத் தொல்லியல் பரிபாஷையில் வழங்கப்படுகிற, பழைய கற்காலத்தில் பிற்பட்ட பண்பாட்டு நிலையைச் சார்ந்த எயினர், கள்வர் போன்ற குலத்தவர்களின் வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திற்று என்று கொள்ளலாம். மாறாக, கூற்று என்ற ஆண் தெய்வம், வெட்சிப் போர் மரபிலிருந்து முன்னேறி, தொடக்க நிலை விவசாய முயற்சிகளை மேற்கொண்ட மள்ளர் (பள்ளர்) குலத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்திற்று எனலாம்.

[4] ‘சிந்து வெளி – அண்மைக்கால முயற்சிகள்’ என்ற தலைப்பில் கமில் சுவலபில் அவர்களின் ஆய்வுக் கட்டுரை என்னால் மொழிபெயர்க்கப்பட்டு, சென்னை ஆய்வு வட்டம் வெளியிட்டுள்ள ‘ஆய்வு வட்டக் கட்டுரைகள்’ முதல் தொகுதியில் வெளிவந்துள்ளது.

[5] Velir: Were they the Velalars? – S. D. Nellai Nedumaran and S. Ramachandran. A paper presented at the XXIV annual Congress of the Epigraphical Society of India, Trissur, Kerala, 15th-17th May, 1998.

[6] இந்தியத் தொல்லியல் துறை தொல்லியல் கண்காணிப்பாளர் (ஓய்வு) திரு. தியாக. சத்தியமூர்த்தி அவர்களுடன் இணைந்து இது தொடர்பான முயற்சிகள் என்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

maanilavan@gmail.com

Series Navigation

எஸ். இராமச்சந்திரன்

எஸ். இராமச்சந்திரன்