‘காலத்தின் சில தோற்ற நிலைகள் ‘ : ‘ரிஷி ‘ யின் நான்காவது கவிதைத்தொகுப்பு

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

மாலதி


காலமும் மனமும் போராட்டமும் தாம் இலக்கியத் தடங்கள் என்பதைப் பல

படைப்பாளிகள் உறுதி செய்திருக்கிறார்கள். ‘ரிஷி ‘ ‘யின் புதிய தொகுப்புக்

கவிதைகளைப் பார்க்க நேர்ந்தபோது காலம்,மனம் மற்றும் போராட்டங்களின்

அழகான மற்றும் வெவ்வேறு விகிதங்களிலான சேர்க்கையனுபவம் பரவசம்

தூண்டுவதாயிருந்தது.

கடைசியில் என்ன தான் மிஞ்சுகிறது இலக்கியக் கடைசலில் என்று

பார்த்தோமானால் ஏதுமற்ற ஒரு கிடைச்சுகம், முயற்சி விலக்கிய ஒரு பறத்தல்

நிலை,ஆணவம் அடிபட்ட ஒரு நீர்வாழ் விலங்கின் நீரடித் தங்கல்.சில நேரம்

தாற்காலிக மரணம் அல்லது குறிகள் சோர்ந்த கூடல் பிற்கிறக்கம்.

இவ்வளவு தான் முடியும் இலக்கியத்துக்கு. இதில் தான் மண்ணில் விண் கைப்படுகிற

தேற்றம் இருப்பதாக நம்புகிறோம்.

ஆனால் ‘சிலருக்குப் பொழுது போக்கு,சிலருக்குப் பீடம் பட்டம் பெயர்

காய்ச்சி மரம்.சிலருக்குப் பந்தய மைதானம்,சிலருக்குப் பால் சுரக்க வைக்கும்

வைக்கோல் கன்று,வேறு சிலருக்கோ மந்திரச்சொல் மாயக்கோல். ‘ ரிஷி

சொல்வது போல.

இந்தச்சூழல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது ரிஷியின்

கவிதைகளில் தெரிய வருகிறது.ரிஷியின் தூய படைப்பாளி இதைத் தொட்டு

இந்த அளவு கலங்கிவிடும்படி…. வாசகப் பிரதிகளை வழிநடத்தவோ

திசைகாட்டவோ தவறிப்போன நேர்மையுள்ள விமரிசகப்பிரதிகள் இதற்கான

பொறுப்பை ஏற்றே ஆக வேண்டும்.

ஆளுக்கொரு அரிவாள்மனை அல்லது கத்தி

அரங்கின் நுழை வாயிலிலேயே தரப்பட்டிருந்து.

அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற

விளக்கக் குறிப்பீடும்.

ஒரு பை நிறைய வெங்காயங்களும்.

இருக்கைகளில் அமர்ந்து கொண்டவர்கள்

பரபரவென்று அவற்றை எழுது மேஜையில் பரப்பி

உரித்து நறுக்கிக் காட்டி

வெறுமையே எல்லாம் என்று

வித்தகம் பேசி முடித்தனர்.

சத்தம் அதிகமாய் ஒலித்த குரலுக்கு

சிறப்புப்பரிசு அளிக்கப்பட்டது.

பிரிவுபசாரமெல்லாம் முடிந்து வீடு

திரும்பும்போது

வெட்டிக்கொட்டியவெங்காயங்களை

மறவாமல்

திரட்டியெடுத்துச் சென்றனர்

இரவு உணவுக்கு.

இப்படியொரு பதிவு இருக்கிறது ரிஷியின் தொகுப்பில்.இதைப்போல நம்

எல்லோருக்கும் பலமுறை உணர்ந்து புழுங்கியிருப்பது நினைவுத் தேங்கலாக இருந்தே

தீருகிறது .இந்த நிலை இலக்கியத்தால் சுயலாபம் அடையப்பார்க்கும்

வியாபாரிகளால் நேர்கிறது.

அரைகுறைப்புறா….

….

ஆனாலும் தலையைச்சிலுப்பிக்கொண்டு

அரையடி பறந்ததில்

பெருமை தாங்க முடியவில்லை அதற்கு.

தன்னை வளர்த்து வருபவர் தோளில் அமர்ந்துகொண்டு

முன்னிலும் உயரமாய்ப் பறக்க முடிவதாய்

நம்ப ஆரம்பித்தது.

கூடவே நான்மாடம் தாண்டி உயரப்

பறந்துகொண்டிருந்த

சிட்டுக்குருவிகளையும் குயில்களையும்

வேடதாரிகள் என்று இகழவும் தொடங்கியது.

ரிஷியின் இந்த வெளிப்பாட்டின் ஆதங்கம் புரியவேண்டும்.அரைகுறைப்புறாவின்

மற்ற செய்கை எல்லாம் சரி. கடைசி செயலைப் புறா திருத்திக் கொண்டே

ஆக வேண்டும்.

முதிர்ச்சியுள்ள கவிஞர்கள் திருடினார்கள்,முதிர்ச்சியில்லாதவர்கள்

‘போலச்செய் ‘தார்கள்மோசமான கவிஞர்கள் பிறரை வசை பாடினார்கள்,நல்ல

கவிஞரான ரிஷிக்கு இது கூடத் தெரியாதா ?

மிகவும் கரிசனம் கொண்டு கவிதையின் வீச்சைக்காப்பாற்ற நினைக்கும் இந்தப்

பதிவைப் பார்க்கும்போது உண்மையில் கவலை ஏற்படுகிறது ரிஷியின்

மனக்காயம் குறித்து.

அதோ,கடற்கரையை நோக்கி கனவேகமாய்ப்

போய்க்கொண்டிருக்கும் வண்டி நிறைய

விலங்கிடப்பட்ட கவிதைகள்.

இருளோடு இருளாய் சிறைப்பிடிக்கப்பட்டவை.

விசாரணையின்றி குற்றவாளிகளாக்கப் பட்டவை.

அவற்றில் சில குறிப்பிட்ட வரிகளும்

வார்த்தைப்பிரயோகங்களும் ஏற்கெனவே

சிரச்சேதம் செய்யப்பட்டுவிட்டன.

சில சித்திரவதைக்குள்ளாகி குற்றுயிரும் குலையுயிருமாய்க்

கிடக்கின்றன.

சிலவற்றின் அழகிய வதனங்களில் அமிலம் வீசப்பட்டு

அலங்கோலப்படுத்தப்பட்டன.

வாசிப்போன் கண்கள் கருந்துணியால் இறுகக்

கட்டப்பட்டு அவனுடைய கையளவாய்க் குறுக்கப்பட்டுவிட்ட

கவிதைகளும் உண்டு.

பரத்தையாக்கப்பட்டு கர்த்தரின் குரல் பொருட்படுத்தப்படாமல்

பாவிகள் கல்லெறிந்ததில்

குருதி பெருக்கியவாறிருக்கும்கவிதைகள் கணிசமான

எண்ணிக்கையிலுள்ளன

.அடாது கசையடி கொடுத்தபடியிருந்தாலும்

அமிலத்தால் சுந்தரமுகம் சிதைத்தாலும்,கூர்

கல்லெறிந்து குருதி பெருகச்செய்தாலும்

தீரச்சாகடித்து முடித்தாலுமே கூட

அவற்றின் இருப்பும் இருந்த சுவடுகளும் அவர்களை

உறங்கவிடாமல் கலங்கடித்தன.

உருக்குலைந்தது போக எஞ்சியிருப்பவற்றின்

உயிர்சாறைப்பருகிவிடக்கூடும் சிலர்

அதன் அருமையைப்பரிச்சயமாக்கிக்கொண்டு

அடுத்தவருக்கும் அறிமுகப்படுத்தி விட வழியுண்டு என்ற

அச்சம்பிழிந்தெடுக்க.

உச்சபட்ச தண்டனையாய்

கடலுக்கடியில் உள்ள எரிமலையில் தூக்கிப்போட்டு

சொச்சமிச்சம் எதுவுமில்லாமல் சாம்பலாக்கி

விடத்தான்

அவர்கள் பயணமாகிக்கொண்டிருந்தார்கள்.

நீர்மூழ்கிக்கப்பலொன்று அங்கே தயாராக

நின்றுகொண்டிருப்பதைப்பார்த்து

முகம் மலர்ந்த அவர்களுக்குத் தெரியாமல்

வளர்ந்து வருகிறது

சாம்சன் தலைமயிரும்

ஃபீனிக்ஸ் பறவையின் புத்துயிரும்

மிக அற்புதமான பல கவிதைகளைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கிறது இந்த

தொகுப்பு. அற்புதங்களும் துரதிர்ஷ்டமானவைதாம் கவனிக்கப் படும்வரை .யாரும்

கவனிக்காமல் போகும் காலைப் பொழுதுகளைப்போல.

ரிஷியே சொல்வது போல,

கனவின் மார்க்கத்திற்கு மார்க்கண்டேயப்

புள்ளினங்கள் வரைந்திருக்கும்

விண்ணிலான அருவத் தடங்களின் நீள

அளவைகள்

நிலாவிலுள்ளன.

நம்மிடமுள்ளதெல்லாம் வெறும் கிலோமீட்டர்கள் மட்டுமே.

உதாரணத்துக்கு இது

போரென்று வந்தாலே ரத்தம் சிந்தும்.

சில தலைகள் உருண்டே தீரும்.

காயங்களும் இழப்புகளும் கட்டாயம்.

ஓயாமல் கேட்டவாறிருக்கும்

வலியோல அழுகைகள்.

பலிகொள்ளும் வியூகங்கள்

மலியும் சூழ்ச்சிகள்.

வீழ்ச்சியோ வாகையோ

நிறையும் துயர் இறுதியில்.

போரைப்போலவே பிரியமும்.

All is fair in war and Love என்று தான் சொன்னார்கள். காதலோடு

வலி சேர்ந்திருப்பது ஏன் என்று ரிஷி சொல்வதில் தர்க்கம் நிறைவு

பெறுகிறது.

‘ஒற்றைத் துளிக்கண்ணீருக்குள் முற்றிக்கொண்டு வரும் என் மறுமைகள் ‘, ‘இனி

நானேயாகட்டும் என் கடவுளும் காதலனும் ‘, ‘விழுந்துடையும் மனம் தினம்

இழவுச்சோரமொன்றில் ‘, ‘திமிங்கில அடிவயிற்றுத்

தழுதழுப்பாய் ‘, ‘அதிஅலங்காரமாய் அம்மணம் தரித்தவனை ‘ ….,இவ்வாறாக

இன்னும் பலவாக வார்த்தைகளும் வாக்கியங்களும் பூத்துள்ளன

தொகுப்பில்.சராசரிகளைத்தாண்டின சொல்லும் சொல்லாடலும் தானே கவிதை ?

தலைப்புகளிலேயே நயமும் பின்நவீனத்துவமும் அழகியலும் ஆழமும் வைக்கத்

தெரிந்தவர் ரிஷி.

நிர்வாணியின் நிகழ்காலங்கள்,மரணத்தின் ஒப்பனைக்காரர்களுக்கு,இன்னும்

இன்னமும்,கல்மரக்காலம்.பிம்பத்தின் பிரதி,ஒரு கரங்களின் பத்து

விரல்,பூவின் பூக்கள்….தலைப்புகள் தாம் இவை.

சொற்சிலம்பமும் பிடிக்கும் ரிஷிக்கு. இன்னும் இன்னமும்,அழைப்பு,அளிப்பு

போன்ற கவிதைகளில் இதைச்சரி பார்க்கலாம்.

பரிமாணங்களும் விரிகோணங்களும்,தாகம்.நின்னைச்சரணடைந்தேன்,காலத்தின்

சில தோற்ற நிலைகள்,இயங்கு விதிகள்,பூதகணங்கள்….போன்ற அற்புதமான

நீண்ட கவிதைகள் இருக்கின்றன.மிக வித்தியாசமான சிக்கல்களைப்பற்றிப்

பேசுபவை.படித்து அனுபவிக்கப்பட வேண்டியவை.

பிரமீளுக்கு அடுத்தபடி நையாண்டியும் அங்கதமும் ரிஷிக்கு தான் வரும் என்பதை

நான் தீர்மானமாக நம்புகிறேன்.எனக்குப் பகுதிகளைக் காட்டித்தர எப்போதுமே

பிடிக்காது ஒரு முழுப் பிரதியை இங்கே தருகிறேன். நீங்களே

தெரிந்துகொள்ளூங்கள்.

பராமரிப்பு,மராமத்து ,மற்றும் பிற…

—-

மக்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள்.மன்னனைக் கேள்வி

கேட்கிறார்கள்.மனுநீதிச்சோழனாய் அவன் தன் மகனைத்

தேர்க்காலிலிடவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.எதிரி நாட்டை

வெற்றிகண்டு மாண்டவர்களீன் எலும்புகளால் செய்த மாலையணிந்து பவனி வந்தால்

‘எம் மக்களின் துண்டங்களும் இதில் உண்டே ‘ என்று இயம்புகிறார்கள்.அவர்தம்

விழிகளில் தளும்பும் துலக்கம் கலக்கமூட்டுகிறது. அரசவையைக்கூட்டுவது அவசியம்

என்று அபிப்பிராயப்பட்டார்கள் அமைச்சர்களும்,அறிஞர்பெருமக்களும். அடுத்தடுத்து

நடந்தேறிய ஒத்திகைகளில் கவனமாய்க் கட்டமைக்கப்பட்டன கேள்விகளும்

பதில்களும்.

‘மாதம் மும்மாரி பொய்யாக்காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

மக்கள் தீராவறுமையில் உழலக்காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

ஆலமரங்களில் தேங்காய் தாங்காத காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

காலமெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறக் காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

‘மச்சகன்னிகைக்கும் இச்சையுண்டோ ‘ என்று அச்சமயம் மனதில் எழுந்த

சந்தேகத்தைச் சற்றே உரத்துக் கூவியவன் சிரச்சேதம் செய்யப்பட்டான்.விட்ட

இடத்திலிருந்து தொடர்ந்தனர் மற்றொரு எட்டுபேர்.

திரைப்படங்களில் வன்முறை கொண்டாடப்படக்காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

உறைபனி உருகிக் கரைபுரளக்காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

பயங்கரவாதம் தலைவிரித்தாடக்காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

பக்கவாதம் தாக்ககாரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

உடலியல் பாடங்கள் தடைசெய்யப்பட்டபின் ஒருநாள்.விடைவேண்டிக்கேட்டான்

சிறுவன். ‘எப்படி வந்தேன் நான் ? ‘ ‘கடவுள் படைத்தார்.கருணைத்தேவதை

கொண்டுவந்து கொடுத்தாள். ‘என்ற தாயிடம் ‘தேவதைக்கு ஆய்,மூத்திரம்

வருமா.வராதா ? ‘என்று மெல்லக் கேட்டான் பிள்ளை.அதிர்ச்சியில்

வாயடைத்துப்போனவள் ஆத்திரம் தீர மகனைஅடித்துப் புடைத்தபின் தன்னைத் தான்

கேட்டுக் கொண்டாள் அதையே.அடுத்த எண்மர் வந்து நின்றனர்.

மரங்கள் வெட்டப்படக் காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

மரித்தோர் மீட்டுயிர்க்காத காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

மறதிக்குக் காரணம் ?

பாலியல் கவிதைகள்

‘மாநகரச்சாலைகளின் மேடுபள்ளங்களுக்குக் காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

வாராந்தரிகள்,மாதாந்தரிகள்,விளம்பரப் பலகைகள்,எஸ்.எம்.எஸ், ‘மில்ஸ்

அண்ட்பூன்,திருட்டு விஸிடிக்கள்

இருட்டுக்கடற்கரை,திருக்கோயில்பிரகாரங்கள்,தெப்பக்குளப்

படிக்கட்டுகள்.தணிக்கையில்லா திரைப்பாடல்கள்தொப்புள் தெறி

நடனங்கள்,வீடியோகேம்.வெப்கேமரா,வெளிச்சத்தில்

நிகழ்த்தப்படும்வன்புணர்ச்சி மறுஒளிபரப்புகள்..திக்கெட்டும் வாயில்கள் திறந்து

வைக்கப்பட்டிருக்கின்றன.

மற்றுமொரு எட்டுபேர் சுற்றி நின்றார்கள்.

பாதத்தால் மட்டுமே நம்மால் நடக்கமுடிவதற்குக் காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

சாதிமோதல்களுக்கெல்லாம் காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

மீதமுள்ள சேதமெல்லாவற்றுக்கும் மூல காரணம் ?

பாலியல் கவிதைகள் ‘

யாரோ கரைத்துக் குடித்திருந்ததாகப்படும் சரோஜாதேவிபுத்தகக் கட்டுகளின்

வழியே கூடுவிட்டுக் கூடு பாய்வதோடில்லாமல் அடுத்தவர் எழுத்திலும் அவற்றையே

நாடித் தேடி ஒடும் இவர்களின் பையெல்லாம் மஞ்சள் நிற

மூக்குக்கண்ணாடிகள்,மற்றும் பாதரஸம் போன முகம் பார்க்கும்

கண்ணாடிகளும்,பூதக்கண்ணாடிகளும், மலிவான மாயக்கண்ணாடிகளுமாய்….

முடிவுரை வழங்கிக்கொண்டிருந்தான் மன்னன்.

ஆதலால் என்னரும் மக்களே

பெருமாக்களே

புறப்படுவீர்,பாலியல்கவிதை புண்ணறுத்துப்

புவியைப்பரிபாலித்துவர

வெஞ்சினம் கொள்வீர் நெஞ்சில்

அஞ்சவேண்டாம்

அவைகலைகிறது

அந்தப்புரம் செல்ல நேரமாகிவிட்டது.

கும்பகர்ணத் தூக்கத்திலிருந்து குளவிகொட்டியதாய் கண்விழித்தவர்கள் தன்பாட்டில்

தூரத்தே போய்க் கொண்டிருந்த காலத்தைத் துரத்திப் பிடிக்க குறுக்குவழியில்

ஓட்டமாய் விரையத் தொடங்கினார்கள். கைபோன போக்கில் அவர்கள்

எழுதியிறைத்துச் செல்பவையெல்லாம் ஆறெங்கும் நிறைகின்றன நாறுன்

கழிவுகளாய்….

அடுத்ததாய் ஒரு ‘மனச்சூழல் விழிப்புணர்வு ‘ கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது.

அப்புறம் ரிஷிக்கு மன்னிக்கவும் லதா ராமகிருஷ்ணனுக்கு ஒரு வார்த்தை.

The hardest three tasks in the world are neither

physical feats nor intellectual achievements but moral

acts…to return love for hate,to include the

excluded,and to say ‘I was wrong ‘.

இலக்கியத்தில் இந்த மூன்று காரியமும் செய்துவருவதோடு மதிப்பீடுகளுக்காகவே

இயங்கியும் வரும் நீங்களா அங்கலாய்க்கலாகும் ?

சதாரா மாலதி

7.4.06

Series Navigation

மாலதி

மாலதி