சித்திரையில்தான் புத்தாண்டு

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

எஸ். இராமச்சந்திரன்


இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம் ஜனவரி முதல் தேதியில் பிறக்கின்ற ஆங்கிலப் புத்தாண்டினையே ஓர் ஆண்டின் தொடக்கமாகக் கருதிப் பின்பற்றிவருகின்ற நம் வழக்கத்தை மாற்றித் தமிழ்ப் புத்தாண்டினைப் பின்பற்றச் சொல்லிப் பிரச்சாரம் செய்வதன்று. 2001ஆம் ஆண்டில் தொடங்கிய 21ஆம் நூற்றாண்டைக் கூட ஒரு வருடத்துக்கு முன்னர் 2000ஆவது ஆண்டுத் தொடக்கத்திலேயே கொண்டாடி முடித்துவிட்ட இந்த அவசர யுகத்தில் அவ்வாறு பிரச்சாரம் செய்வது அர்த்தமற்றதாகத்தான் முடியும். மேலும் புத்தாண்டினை ஜனவரியிலிருந்து ஏப்ரல் 14-15 தேதிகள் அளவுக்கு மாற்றுவது என்பது நடைமுறை சாத்தியமோ தேவையோ அற்ற ஒன்றாகும். எனவே இக்கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே.

சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. இவ் விவாதம், 1924ஆம் ஆண்டளவிலேயே சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழறிஞர்களிடையே நடைபெற்றதன் விளைவாகத் தமிழர் திருநாளாகிய தைப் பொங்கல்தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கருதப்பட வேண்டுமென்றும், சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக் கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்றும் முடிவு செய்யப்பட்டனவென்று தெரிய வந்தது. அதனைப் பற்றி ஆழமாக ஆராய வேண்டும் என்ற ஆவல் அச் செய்தியை அறிந்த பிறகே எழுந்தது. அந்த ஆவலின் விளைவே இந்த ஆய்வு ஆகும். பிரபவாதி அறுபது ஆண்டுகள் பற்றி இக் கட்டுரையின் பிற்பகுதியில் ஆராய்வோம். தொடக்கத்தில் தை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதாகக் கொள்வது சரியா என ஆராய்வோம்.

சங்க இலக்கியங்களில் ‘தைந்நீராடல் ‘ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்பு படுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. இங்கு முதன்மையாகக் கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில் சங்க இலக்கியங்களுக்குச் சமகாலத்தில் எழுத்து வடிவம் பெற்ற நூலான மகாபாரதத்தில், உத்தராயனத் தொடக்கம், அதாவது சூரியனின் தேர் வடக்கு நோக்கித் திரும்புகிற நாள் என்பது மாசி மாத சுக்லபட்ச (வளர்பிறை) சப்தமி திதியே என்றும், அந்நாள் ரதசப்தமி என்று வழங்கப்பட்டது என்றும் ரதசப்தமி முடிந்த பின்னரே பீஷ்மர் மரணமடைந்தார் என்றும் கூறப்பட்டிருப்பதுதான்1. மகாபாரதம் நிகழ்ந்த காலமாகக் கருதப்படும் கி.மு. 1300ஆம் ஆண்டிலிருந்து, மகாபாரதம் எழுத்து வடிவம் பெற்ற கிறிஸ்து சகாப்தத் தொடக்க நூற்றாண்டு வரையிலும் உத்தராயனத் தொடக்கம் என்பது தைமாத முதல் நாளில் (மகர மாதத்தில்) நிகழ்வதாகக் கருதப்படவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய ஓர் உண்மையாகும். எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை. அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக் கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஆங்கிலேய சகாப்தம் – சொல்லப் போனால் ஆங்கிலேய யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்து விட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இந்தச் சிந்தனைப் போக்கு, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடியில் கண்டறியப்பட்டுள்ள டேனிஷ் – தமிழ் ஆவணங்களில் ஜனவரி 1ஆம் தேதி என்பது தை முதல் தேதி என்றும் அதே போன்று பிப்ரவரி 1ஆம் தேதி என்பது மாசி முதல் தேதியென்றுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இவ் ஆவணங்கள் 1800 – 1845ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டவையாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கி.பி. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட செங்கடல் யாத்திரை எனப் பொருள்படும் Periplus Maris Erythraei என்ற கிரேக்க நூலில் (6:24) மார்ச் மாதத்தில்தான் புத்தாண்டு கொண்டாடும் மரபு நிலவிற்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் மாதமே ஆண்டின் முதல் மாதம். இது செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும் மார்ஸ் என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். ரோமானியக் காலண்டர் கணக்கீட்டில் கூட, ஐந்தாம் மாதத்திற்கும் ஆறாம் மாதத்திற்கும் ஜூலியஸ் சீசரும் அகஸ்டஸ் சீசரும் ஜுலை, ஆகஸ்ட் என்று தத்தமது பெயரைச் சூட்டிய பின்னரும், ஏழாம் மாதம் முதல் பத்தாம் மாதம் வரை ( ‘சப்த ‘ முதல் ‘தச ‘ வரை) செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்று தத்தமது எண்ணிக்கை அடிப்படையிலேயே பெயர் பெற்றிருந்தன. ‘தசம ‘ (பத்தாம்) மாதமாகிய டிசம்பர்க்குப் பின்னர் ஜனவரி, பிப்ருவரி ஆகிய மாதங்கள் தெய்வப் பெயரால் வழங்கின. இவ்வாறு, மார்ச் மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். அந்நாள் All Fools ‘ Day என்று வழங்கப்பட்டது. மேலை நாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம் மரபுகள் தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன. காலக் கணக்கீட்டு முறை என்பது வான சாஸ்திரம் என்ற பிரத்யட்ச விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சாந்திரமான முறை (சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு), செளரமான முறை (சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு) ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாடுகள், சாந்திரமான முறையிலேயே பூர்ணிமாந்த முறை (பெளர்ணமியை ஒரு மாதத்தின் முடிவாகக் கொள்ளும் முறை), அமாந்த முறை (அமாவாசையை ஒரு மாதத்தின் முடிவாகக் கொள்ளும் முறை) ஆகிய இரு வேறு முறைகள் – இவ்வாறான பல குழப்பங்கள் காரணமாக, இத்தகைய மாற்றங்கள் தவிர்க்க இயலாத வகையில் நேர்ந்து விடுகின்றன. கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட ‘ஏரீஸ் ‘ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக்கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும். இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின் படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம் மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய மரபின்படி மாசி மாதம் (பிர்தெளஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளன. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது ‘மீன மேஷம் பார்த்தல் ‘ என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா என்று ஆராய்வோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும் உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்து கொள்வது அவசியம். மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. ‘பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் ‘ பிறந்த ஆயர் குலச் சிறுமியர் கண்ணனை ஆயர் குலக் கொழுந்தாகக் கருதி வழிபட்டனர். அவர்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காத்யாயனி விரதம் மேற்கொண்டனர் என்பது ஸ்ரீமத் பாகவதம் தெரிவிக்கின்ற ஒரு செய்தி. இந்த வழிபாட்டு மரபும் சங்க இலக்கியத் தைந்நீராடல் மரபுடன் கலந்து பக்தி இலக்கியங்களில் மார்கழி நீராடல் மரபாக உருமாற்றம் அடைந்துள்ளது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. ‘செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய் ‘ என்பது திருப்பாவைப் பாடல் வரியாகும். பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். ( ‘பொலம்புனை நாஞ்சிற்பனைக் கொடியோன் ‘.) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முழு வளர்ச்சியடைந்த வைணவ பக்தி மார்க்கத்தில், மார்கழிப் பாவை நோன்பில் விவசாயக் கடவுளுக்கு மட்டும் இடமில்லாது இருந்திருக்குமா ? பூர்ணிமாந்தக் காலக்கணக்கீட்டின் படியமைந்த, மார்கழி மாத இறுதி நாளன்று அதாவது தை முதல் தேதிக்கு முந்தைய நாளான மார்கழிப் பெளர்ணமியன்று பாவை நோன்பின் இறுதி நாளாகக் கருதப்பட்டு பலராமன் வழிபாடும் நிகழ்ந்திருக்க வேண்டும். பலராமனை ‘புஜங்கம புரஸ்ஸர போகி ‘ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு (பாண்டியர் செப்பேடுகள் பத்து – 1999, பக்கம் 101, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113) குறிப்பிடுகிறது.எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிரப் பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. மேலும், பலராமனுக்கு வெள்ளை நாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. உலகைத் தாங்கும் ஆதிசேடனின் அம்சம் இவன் எனக் கொள்வது மரபு. நாகம் என்பது போகத்துக்கு அடையாளமாகக் குறிப்பிடப்படுவது உலகளாவிய பல நாகரிகங்களிலும் காணப்படும் வழக்கமாகும். நாகர்களின் தலைநகரத்தை போகவதி என்று குறிப்பிடுவது இந்தியப் பெளராணிக மரபாகும். எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பலராமன் வலிமை மிக்கவன். ஆனாலும் குடம் குடமாக மது அருந்திக் களிப்பதும், வயிறு புடைக்க உணவு அருந்துவதும், உறங்குவதுமே இவனுடைய வேலை. கதை (கதாயுதம்) யுத்தத்தில் மிகச் சிறந்த நிபுணன் இவன். துரியோதனனுக்கே கதை யுத்தத்தில் பயிற்சியளித்தவன். ஆனால் மகாபாரதப் போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தவன் இவன். ( ‘சாப்பாட்டு ராமன் ‘ என்ற வழக்கு கூட இவனைக் குறித்ததாக இருக்கக் கூடும்) இவனை மூதேவியுடன் ஒப்பிட்டு ஒரு தமிழ்ப் பாடல் உண்டு. கண்ணனுடைய குடும்பத்தில் கண்ணுக்கு மட்டும் இனியவனாகிய (ரம்யமானவன் என்பதால் ராமன் என்று பொருள் கொள்க) பலராமன் வந்து பிறந்தானே என்று நொந்து கொள்ளும் புலவர் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொள்வது போல ‘சீதேவி தான் பிறந்த சீதத் திருப் பாற்கடலில் மூதேவி ஏன் பிறந்தாள் முன் ‘ என்று முடிக்கிறார்.

பலராமன் தொடர்பான போகிப் பண்டிகை மதுவைப் பொங்க வைக்கின்ற சடங்குடன் நிகழ்ந்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் கொள்வதற்கு நேரடி ஆதாரம் கிடைக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் பக்தி இயக்கக் காலகட்டத்தில் மார்கழி நோன்பின் இறுதி நாளன்று அல்லது நோன்பு முடிகின்ற நாளை அடுத்துப் பால் சோற்றுப் பொங்கல் சமைத்து அதில் நெய்யைப் பெய்து உண்டு களித்தனர் (பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்) என்று அறிகிறோம். கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளில் பக்தி இயக்கம் பழங்குடிச் சடங்குகள் பலவற்றை மென்மைப்படுத்தி அல்லது திருத்தித் தன்மயமாக்கிக் கொண்டது. எனவே சங்க காலத்தில் பலராமன் வழிபாட்டில் பாற்சோற்றுக்குப் பதிலாக மதுப் பொங்கல் இடம் பெற்றிருக்க அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தன என்பதில் ஐயமில்லை. பூம்புகாரில் இந்திர விழாவின் போது ‘சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை / புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து ‘ மூதிற் பெண்டிற் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64-69களில் குறிப்பிடப்படுகிறது. விழுக்குடை மடை என்பது ‘மாமிசம் விரவின சோறு ‘ என்றும் பொங்கல் என்பது ‘கள்ளு ‘ என்றும் உரையாசிரியர்கள் பொருள் கண்டுள்ளனர். (பக்கம் 140 & 159 சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் உ.வே.சாமிநாதய்யர் நூலகப் பதிப்பு 1978) எனவே தைப் பொங்கல் விழா என்ற பெயர் கூட மதுப் பொங்கல் தொடர்பானதே; விவசாயக் கடவுளான பலராமனுக்குரிய வழிபாட்டு விழாவே என்பதும் தெளிவாகும். போகியை மார்கழி மாத இறுதி நாளன்று தனி விழாவாகவும் பொங்கலைத் தை முதல் நாளன்று தனி விழாவாகவும் கொண்டாடுவது மட்டும்தான் இன்று நாம் காணும் வெளிப்படையான வேறுபாடே தவிர இவை இரண்டும் ஒரே விழாவாகவே இருந்துள்ளன என்பது தெளிவான உண்மையாகும்.

இனி நாம் முதன்மையாகப் பரிசீலிக்க வேண்டிய பிரச்சினை, பிற்காலச் சோழராட்சியின் போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப்புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா என்ற கேள்விகள் தொடர்பான பிரச்சினையாகும். இவை இரண்டிற்குமே தெளிவான விடை: ‘அல்ல ‘ என்பதுதான். சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக் கணக்கீட்டின் அடிப்படையிலும் தை மாதம் முதல் தேதி என்பது கொண்டாட்டத்திற்குரிய ஒரு நாளாகக் கருதப்படவில்லை என்பது முன்னரே தெளிவுபடுத்தப்பட்டது. சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். சென்னையை அடுத்த குன்றத்தூரிலுள்ள திருநாகேஸ்வரம் என்பது அவரால் கட்டப்பட்ட கோயில் என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது வெள்ளை நாகனாகிய பலராமனைத் தமது குல முன்னோராகக் கொண்டிருந்தவரே சேக்கிழார் ஆவார். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், ‘வாசுதேவ சகாயகன் ‘ எனப்பட்ட பலராமனுக்கும் பூமிதேவிக்கும் பிறந்தவர்கள் என்றும் சித்திரமேழியை (கலப்பையை)க் குலச்சின்னமாகக் கொண்ட பெரிய நாட்டவர்கள் என்றும் தமது மெய்க்கீர்த்தியில் (South Indian Inscriptions Volume VIII No. 442) பெருமை கொண்டாடிய வேளாளர் சமூகக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவே சேக்கிழாரைக் கருதிட முடியும். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில் கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப் படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப்பார்க்கத் தக்கது. சோழ நாட்டு மள்ளர்களை (பள்ளர்களை)க் குறிப்பிடுகையில் ‘இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம் ‘ என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12.) தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும் நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை. வேளாளர் சமூகத்தவரின் எழுச்சிக்குரிய சமூக – சமய அடித்தளம் பிற்காலச் சோழர் ஆட்சியில் அமைக்கப்படத் தொடங்கிற்றென்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக ஒரு செய்தியை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக அமையும். இராஜராஜ சோழனால் கட்டுவிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலில் முதல் திருச்சுற்றின் நுழைவாயிலான கேரளாந்தகன் திருவாயில் கோபுரத்தின் மேற்குப் புறத்தில் கிழக்குத் திசைக்குரிய திக்பாலகராகிய இந்திரனின் சிற்பம் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும். பிற ஏழு திசைகளுக்கும் உரிய திக்பாலகர்களின் சிற்பங்கள் அடங்கிய சிறு சன்னிதிகள் (பரிவார ஆலயங்கள்) அவ்வத் திசைகளில் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளன. கிழக்குத் திசையில் மட்டும் மேற்கு நோக்கிய வண்ணம் இரண்டு சிறு சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு சன்னிதியில் இந்திரனின் சிற்பமும் மற்றொரு சன்னிதியில் நாகராஜனின் சிற்பமும் உள்ளன. இந்திரனுக்குரிய சன்னிதியில் இந்திரன் சிற்பம் தற்போது இல்லையென்றாலும் இச் சிற்றாலய விமான சிகரப்பகுதியில் ஐராவதத்தின் மீது அமர்ந்த இந்திரன் சிற்பம் உள்ளது. நாகராஜனைக் கிழக்குத் திசையின் திக்பாலகனாகவோ இத் திசையில் அவனது பரிவார ஆலயம் அமைக்க வேண்டுமென்றோ எந்த ஆகம நூலும் குறிப்பிடவில்லை. அவ்வாறிருக்க, இந்திரனுக்குச் சமமாக நாகராஜனுக்கும் ஒரு சன்னிதி அமைத்து இருவரையுமே கிழக்குத் திசையின் காவலர்களாக அமர்த்தியிருப்பது புதிராக அமைந்துள்ளது. இது பூர்வீக விவசாயக் கடவுளான, மழையின் தெய்வமான வேத கால இந்திரனையும், ஏர்க்கலப்பை விவசாயத்தை அறிமுகப்படுத்திய, இதிகாச காலத் தெய்வமாகிய, வெள்ளை நாகனாகிய பலராமனையும் சமமாகப் போற்றி கெளரவிக்க நேர்ந்த சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இருக்கலாம். எவ்வாறாயினும், பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கூட இந்திர விழாவை விட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. சோழ குல மூதாதையருள் ஒருவனாகிய மனுநீதிச் சோழன் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தினான் என்பது தமிழிலக்கிய மரபாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டுச் சோழர் கல்வெட்டுகளில் இப்புராணச் செய்தி வெளிப்படையாகவும் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் இது மறைமுகமாகவும் குறிப்பிடப்படுகிறது. திருவாரூர் வீதிவிடங்கப் பெருமான் மூர்த்தம் (திருமேனி), இந்திரனால் முசுகுந்த சோழனுக்கு வழங்கப்பட்டதாகப் புராண மரபு குறிப்பிடுகிறது2. மேலும், பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கிய செய்திகளை இக் கட்டுரையில் முன்னரே பரிசீலித்தோம். இச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப் பொங்கலை விட இந்திர விழா பழமையானது என்பதும் புலனாகின்றன. பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக் கணக்கீட்டுக்கு வருவோம். வெப்பம் என்பது உயிர் இயக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. உடம்பில் சூடு தணிந்துவிட்டது; உடல் குளிர்ந்துவிட்டது என்றால் அந்த உடலில் குடியிருந்த உயிர் உடலை விட்டுப் பிரிந்து விட்டது என்பதுதான் பொருள். ஆவி என்ற சொல்லுக்கே சூடான காற்று என்பதுதான் பொருள். (நீராவி என்ற சொல் வழக்கைக் காண்க) ஆவி பிரிந்து விட்டது என்றால் உடலில் இருந்த காற்று நெருப்பு ஆகியவற்றின் இயக்கம் நின்று விட்டது என்பதுதான் பொருள். இயற்கையிலும் குளிர்காலம் என்பது இயற்கை உறங்குகின்ற காலகட்டமாகக் கருதப்பட்டது. உயிரினங்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்குத் தம்மைத் தாமே ஆயத்தப்படுத்திக் கொள்ளும் காலமே குளிர்காலம் ஆகும். கோடை காலம் தொடங்குகின்ற ஏப்ரல் மாதத்தில் மரங்கள் துளிர்விடும்; பூப்புப் பருவம் தொடங்கும்; பூப்புப் பருவத்தில் இளம் தளிர்களைக் கொத்திக் கொத்தி, குறிப்பாகப் பூத்துக் காய்த்திருக்கும் மாமரத்தின் தளிர்களைக் கொத்திக் கொத்திக் குயில்கள் கூவும். மாங்குயில் என்ற வழக்கு கவனிக்கத்தக்கது. வசந்த கோகிலம் என்ற வடமொழி வழக்கும், கோடைக் காலத்தை வரவேற்றுக் கூவுகின்ற குயிலையே குறிப்பதாகும். ஜோதிட அடிப்படையில் பார்க்கப்போனால் விஸ்வபுருஷனின் தலையாகக் கருதப்படும் மேஷ ராசியின் முதல் பாகையில் சூரியன் பிரவேசிக்கின்ற காலமே சித்திரை முதல் நாளாகும். இயக்கத்தின் தோற்றுவாயாகக் கருதப்படுகின்ற கோடைக் காலத்தையே ஆண்டின் தொடக்கமாக முன்னோர்கள் கருதினர். ‘திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம் ‘ என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் வரியாகும். மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட ‘ஏரீஸ் ‘ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும். ரிக்வேதத்தின் ஒரு பகுதியான புருஷசூக்தத்தில் (X:90: 6-7), உலகின் பருவச் சுழற்சி என்பதே ஒரு யாகம் என உருவகித்துக் கூறப்பட்டுள்ளது; எரிகின்ற யாகத்தீயான இத்மா, க்ரீஷ்மருது (வேனிற்காலம்) என்றும் அத்தீயில் இடப்பெறுகிற அஜம் (மேஷ மாதமாகிய சித்திரை) வசந்தம் என்றும், நீர் தெளித்தல் (புரோக்ஷணம்) சடங்கு என்பது வர்ஷருது (மழைக் காலம்) என்றும் ஹவிஸ் எனப்படும் சமைக்கப்பட்ட அவியுணவு சரத்ருது (பனிக்காலம்) என்றும் புருஷசூக்தம் குறிப்பிடுகிறது. இக்ஷ்வாகு மன்னர்களின் கிபி 3-4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் இதே வரிசையில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில்-முதுவேனில், கார்-கூதிர், முன்பனி-பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல்-ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும். சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070-72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, ‘தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள் ‘ என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக் காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும். இந்தியக் குயிலானாலும் சரி, ஐரோப்பியக் குயிலானாலும் சரி வசந்தத்தை அல்லது இளவேனிலைத்தான் வரவேற்றுக் கூவும். இளவேனில் அரசாளனான மன்மதனுடன் குயிலைத் தொடர்புபடுத்திப் புராணங்கள் பேசும். முக்கூடற் பள்ளு குறிப்பிடுவது போல மாங்குயில் மாராயம் பாடுவது வேனிலை வரவேற்றுத்தான். வசந்த விழா அல்லது காமன் பண்டிகை எனப்படும் ஹோலிப் பண்டிகையைப் புராண நூல்கள் ஹூளா ஹூளி என்றே குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியங்களில் ‘உறையூர்ப் பங்குனி முயக்கம் ‘ என்றும் ‘கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் உள்ளிவிழவு ‘ என்றும் குறிப்பிடப்படும் விழா, பங்குனி மாதப் பூர்ணிமை நாளான உத்தர பல்குன நட்சத்திரத்தன்று நடைபெற்ற ஹோலி விழாவே ஆகும். இவ்விழா பங்குனி மாத இறுதி நாளில் கொண்டாடப்பட்டது. வேனில் காலத்தை வரவேற்கின்ற விழாவாக இது அமைந்தது எனத் தெரிகின்றது. இவ்விழா, காமன் பண்டிகை எனக் குறிப்பிடப்படுகிறது. இதனையும் இந்திரவழிபாட்டுடன் தொடர்புடையதாக – நாம் முன்னர் குறிப்பிட்ட பிரதேச வேறுபாடுகள் காரணமாகக் கருதுவதற்கு ஆதாரம் உண்டு. ‘பல்குனன் ‘ என்ற பெயர் இந்திரனுக்குரியது. இது பல்குனி மாதத் தொடர்புடையது3.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் ‘பிரபவ ‘ தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை ‘வியாழ வட்டம் ‘ (Jovian Circle) எனப்படும். அதாவது வானமண்டலத்தின் 12 வீடுகளிலும் இடம் பெற்றிருக்கிற ஒன்பது கிரகங்களும் ஒருமுறை தாம் இருக்கின்ற அவ்வவ் வீடுகளிலேயே மீண்டும் இடம் பெறுகிற நிகழ்வு 60 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழும். மற்ற கிரகங்களைப் பொருத்தவரை அவை தாமிருந்த பழைய இடத்துக்கு மீண்டும் வருவதென்பது, மிக விரைவாக நிகழக்கூடியதே என்றாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை. 60 ஆண்டுச் சுழற்சி என்பது முற்றிலும் வானநூலை – கிரகங்களின் சுழற்சியை – அடிப்படையாகக் கொண்டது. சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும். கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், தமிழ்ச் சமூகத்தின் – சமயத்தின் அடையாளங்களை நிர்ணயிக்கிற அதிகாரம் வேளாளர் சமூகத்தவரின் கைக்குச் சென்றுவிட்டதால் தைப் பொங்கலே தமிழர்களின் முதன்மையான விழா என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.

தமிழக வேளாண் குடிப் பெரியோர்களால் வடிவமைக்கப்பட்ட சைவ சித்தாந்தமே தமிழர் சமயம் என்ற அடையாளத்தைப் பெற்றுவிட்ட படியால், அறுவடைத் திருநாளான தைப் பொங்கல் விழாவுக்கும் நாஞ்சிற் படையோனான பலராமனுக்கும் உள்ள பழைய தொடர்புகளை நினைவு கூர்வது கூடத் தேவையற்ற ஒன்றாகி விட்டது. இரவின் கால அளவு அதிகமாக இருக்கிற தக்ஷிணாயனம் மார்கழி மாதத்துடன் முடிவடைந்து, பகலின் கால அளவு அதிகரிக்கிற ஒளிக்காலமாகிய உத்தராயன புண்யகாலம் மகர (தை) மாததில் தொடங்குகிறது என்ற சோதிட நூற் கோட்பாடும் இக் காலகட்டத்தில் உருவாகி விட்டது. ஐரோப்பியரின் எழுச்சியைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப் படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகி விட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், ‘இனம் புரிந்த ‘, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா ‘தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற ‘ காலகட்டத்தில், ‘நேரங் கெட்ட நேரத்தில் ‘ மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் ‘தை மாதம் தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு ‘ என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்து விடாமல் ‘சுதந்திர ‘மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: ‘சித்திரையில்தான் புத்தாண்டு ‘.

அடிக்குறிப்புகள்:

1. சிரவையாதீனக் கவிஞர் திரு. ப.வெ. நாகராசன் அவர்களுடனான உரையாடலில் பெற்ற கருத்து.

2. பள்ளு நூல்களுள் காலத்தால் முற்பட்டது கி.பி. 1540-50இல் கமலை ஞானப்பிரகாசரால் இயற்றப்பட்ட திருவாரூர்ப்பள்ளு ஆகும். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை அரண்மனையின் வடக்கு வாசலுக்கு நேர் வெளியே, வயல் வெளியில் மள்ளர் சமூகத்தவரால் வழிபடப்பட்ட இந்திராணி கோயில் இருந்துள்ளது. இக் கோயில், தற்போது சிதைந்து காணப்படுகிறது. மூலஸ்தானத்தில் சிற்பம் இல்லை. இது, ‘வடக்கு வாசலில் வயலுழை நின்று அயிராணி ஆடிய கடையம் ‘ என்று சிலம்பில் (1:6: 62-63) கூறப்பட்டுள்ள மரபுக்கேற்பப் பிற்காலத்தில் உருவாக்கிக் கொள்ளப்பட்ட கோயிலாகலாம். தொன்மையான மரபின் எச்சங்கள் எவ்வாறு தொடர்ந்து வந்துள்ளன என்பதையும், அவ்வக்காலச் சமூகங்களில் ‘இட ஒதுக்கீடுகள் ‘ எங்ஙனம் நிகழ்ந்துள்ளன என்பதையும் இவை நமக்கு உணர்த்துகின்றன.

3. அஸ்வதி நட்சத்திரத்தன்று முழு நிலா அமைகிற மாதமே ஐப்பசி ஆகும். இது போன்றே கிருத்திகை, மிருகசிரஸ், திஷ்யம் (பூசம்), மகம், பல்குணம், சித்திரை, விசாகம், அனுஷம், ஆஷாடம், சிராவணம் (திருவோணம்), பூர்வபத்ரபத (பூரட்டாதி) ஆகிய நட்சத்திரங்களில் முழு நிலா அமைகிற மாதங்கள் அவ்வவற்றுக்குரிய பெயர்களைப் பெற்றன. மேற்குறித்த பட்டியல்படி அனைத்து மாதங்களிலும் பூர்ணிமை அமையாமல் இருப்பது பல்வேறு காலகட்டங்களில் காலக்கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அடையாளங்கள் ஆகும்.

maanilavan@gmail.com

நெல்லை நெடுமாறன், எஸ். இராமச்சந்திரன் படைப்புகள்

Series Navigation

எஸ். இராமச்சந்திரன்

எஸ். இராமச்சந்திரன்

1 Comment

Comments are closed.