நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

திசைகள் அ.வெற்றிவேல்


(ஒரு சிவாஜிகணேசன் ரசிகனின் ஆதங்கக் கட்டுரை)

நடிகர்திலகம் காலமாகி நான்கு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது.நடிகர்திலகம் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று சொல்ல ஒரு ரசிகர் கூட்டமும்,அவர் ஒரு நடிகரே அல்ல என்று சில இலக்கியவாதிகளும்,அவர் ஒரு ‘நடிப்புக் குற்றாலம் ‘ என்று அறிவு ஜீவி ‘மதன் ‘ போன்றவர்களும், அவர் ஒரு ‘மகாகலைஞன் ‘என்று நம்மிடையே வாழும் கலைஞானி கமல்ஹாசனும்,தமிழக கலையுலகின் ‘ஞானகுரு ‘ என்று தமிழக திரையுலகக் கலைஞர்களும் கொண்டாடும் விதமாக,அவரைப் பற்றி பல்வேறு

அபிப்பிராயங்கள் உண்டு.

நான் அவர் படம் பார்த்து, அவர் ரசிகன் என்ற பெருமையில் வளர்ந்தவன்.அது பெருமையா அல்லது

சிறுமையா என்பது அறுபது-எழுபதுகளின் சினிமா ரசிகர்களைக் கேட்டால் தெரியும்.தமிழ் திரைப்படக் கலைஞன் என்பதாலும்,பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர் தகுதிக்கு

கிடைக்கவேண்டிய புகழ், மரியாதை கிடைக்கவில்லை என்று இன்றும் நம்பும் பல கோடித் தமிழர்களில்

நானும் ஒருவன்.வாழ்க்கையில் நடிக்கத் தெரியாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நடிகன் என்பவன் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, நடிப்பில் வித்தியாசம் (வெரைட்டி)

கொடுக்கவேண்டும்.அதைத் தமிழ்த்திரையுலகில் முதன்முதலாக திறம்படச் செய்தவர் நடிகர்திலகம்.அவர்

நடித்து தமிழ்த் திரையுலகில் உலவவிட்ட பாத்திரங்கள் ஏராளம்.நடிப்பில் மட்டுமின்றி,நடை,உடை,தோற்றம், வசன உச்சரிப்பு,பாவனை,ஸ்டைல் என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியவர்.பராசக்தி முதல் சவாலே சமாளி வரை (முதல் 150 படங்கள்) உள்ள படங்களில் அவர் சிகரங்களைத் தொட்ட படங்கள் நிறைய உண்டு.பல இலக்கியவாதிகள் அவரை ‘மிகு உணர்ச்சிக் கலைஞன் ‘ (overacting) என்று ஒரங்கட்டியது உண்டு..overacting என்று இவர்கள் சுட்டிக்காட்டும் ‘பாசமலர் ‘ படத்தில் கூட வசனம் பேசாமல் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் காட்சிகள் உண்டு.

எது எப்படியோ, சிவாஜி தமிழ் திரை உலகத்திற்கு செய்துள்ள பங்களிப்பையும் யாராலும் புறக்கணிக்க இயலாது.தமிழ் திரை உலக வரலாற்றை எழுதுபவர்கள் சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின் என்று தான் எழுதமுடியும்.

‘அன்பேசிவம் ‘ வெளிவந்த சமயம்.கமல்ஹாசனுடன் ஒரு பேட்டி.வாரப்பத்திரிக்கைலோ அல்லது

தொலைகாட்சியிலோ வந்தது.பேட்டியாளர் கமலை நோக்கி ‘ தற்பொழுது சிவாஜியின் நாற்காலி காலியாக உள்ளது.அதில் உட்கார தகுதி வந்து விட்டதா ? என்ற கேள்விக்கு கமல் சொன்ன பதிலை இப்பொழுது

இங்கு குறிப்பிடுவது அவசியம் என்று நினைக்கிறேன்.கமல் சொன்ன பதில் இது தான். ‘அவர் இருந்த

நாற்காலியில் உட்காரவேண்டும் என்பதுதான் நடிக்க வந்துள்ள எங்கள் அனைவரது லட்சியமுமே.இத்தனை

படங்கள் நடித்த பிறகு கூட நாற்காலியின் ஒரமாகத்தான் உட்கார முடியுமே ஒழிய, முழுமையாக உட்கார முடியாது.ஏனென்றால் அவர் சாதித்துப் போனது அவ்வளவு. நாற்காலியில் உட்காருவது எவ்வளவு

முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த நாற்காலியில் வேறு யாரும் தகுதியில்லாதவர்கள் அமரவிடாமல்

பாதுகாத்துக் கொள்வதும்தான்.அதைத் தான் நாங்கள் இப்பொழுது செய்து கொண்டு இருக்கிறோம். ‘

ஒரு தமிழ்த் திரைப்படக் கதாநாயகனாக மட்டுமின்றி, சிவாஜி ரசிகனாகவும் இருந்து அவர் வெளியிட்ட கருத்து இது என்று நினைக்கிறேன்.

கமல்ஹாசன் கடைசியாகக் குறிப்பிட்டபடி அவர் விட்டுச்சென்ற இருக்கைக்கு தற்பொழுது வந்துள்ள

ஆபத்து குறித்துத்தான் சிவாஜி ரசிகனாக எனக்கு கவலை.தமிழ்கூறும் நல்லுலகம் முழுதும் சிவாஜி என்றால்

இன்றுவரை அது சிவாஜிகணேசன் அவர்களை மட்டுமே குறிக்கும்.தமிழ்ப் புத்தாண்டுக்குப்பிறகு ஏ.வி.எம்மின்

‘சிவாஜி ‘ வந்தபிறகு படையப்பா ரஜினி மாதிரி சிவாஜி ரஜினி ஆவதுதான், ரஜினிக்கு குறிக்கோளாக இருக்குமோ..தெரியாது.ஆனால் அவரது ரசிகர்கள் அப்படிக் கூப்பிடுவதை யாராலும் தடுக்க இயலாது.மேலும் ஏ.வி.எம்.தரும் விளம்பர வெளிச்சத்தில் நடிகர்திலகம் மறைந்து,அவர் சாதனைகள் மறக்கடிக்கப்பட்டு,

சிவாஜி என்றால் ரஜினி நடித்த ஒரு தமிழ்ப்படம் என்று தான் வரும் தலைமுறை நினைக்கக் கூடும்.

சிவாஜி என்றால் தமிழகமெங்கும் தந்தை பெரியாரால் பட்டம் வழங்கப்பட்டு,பாரட்டப்பட்ட சிவாஜி கணேசன் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கும் விதமாகவும் சிவாஜி ரஜினி என்று வரும் தலைமுறை தன்னை அழைக்கச் செய்யும் ஒரு சூழ்ச்சி மாதிரித் தான் தெரிகிறது.அதற்கான முதல் விதை சந்தரமுகி வெற்றிவிழாவில் பிரபு வாயால் தன்னை ‘அடுத்த சிவாஜி ‘ என்று அழைக்க வைத்து, படம் வருவதற்கு முன்னரே பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது. ஒரு வகையில் சிவாஜியின் பெருமையையைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியா இது என்று சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.

இது எப்படி இருக்கு ? என்றால் திருவிளையாடல் படத்தின் ஆரம்பக் காட்சி தான் நினைவுக்கு

வருகிறது.தமிழ்க் கடவுள் முருகன் மயிலைத் துணை கொண்டு உலகைச் சுற்றிவரப் புறப்படுவதும், விநாயகர்

அப்பா அம்மாவைச் சுற்றி ஞானக்கனியைப் பறித்துக் கொள்வது மாதிரியான திருட்டு விளையாட்டாகத்தான்

தெரிகிறது.

உண்மையான தமிழ்க் கலைஞனான கமல்ஹாசன் 16வயதினிலே,நாயகன்,தேவர்மகன்,மகாநதி,குணா,அன்பேசிவம் என்று படிப்படியாக ‘சிவாஜி இருக்கை ‘ என்ற இலக்கை நோக்கி தமிழ்க் கடவுள் முருகன் மாதிரி முன்னேறி வருகையில்,தடாலடியாக ‘சிவாஜி ‘ என்ற படத்தில் நடித்து அந்தப் பெயரைத் தன் பெயருக்கு முன்னால் கொண்டுவருவதும் தன்னை ‘அடுத்த சிவாஜி ‘ என்று மற்றவர்கள் அழைப்பதில் ஒருவித ஆனந்தம் அடைவதும் ஒருவகையில் குரூரமாகப் படுகிறது.

ரஜினிக்கு இன்றுள்ள மார்க்கெட்டுக்கு,அவர் படம் ஒடுவதற்கு,அவர் படப்பெயர் என்றுமே காரணமாக இருந்தது இல்லை.ஆகவே அவர் தன்னுடைய இயற்பெயரான ‘சிவாஜி ராவ் ‘ என்று இப்படத்தின் பெயரை

மாற்றிக் கொள்வதால் இப்படத்தின் வெற்றி வாய்ப்பு எவ்விதத்திலும் பாதிக்கப் போவதில்லை.

திசைகள் அ.வெற்றிவேல்

ஜித்தா-சவூதி அரேபியா

vetrivel@nsc-ksa.com

Series Navigation

திசைகள் அ.வெற்றிவேல்

திசைகள் அ.வெற்றிவேல்