இந்திரா பார்த்தசாரதி
(போனவாரம் வந்த கட்டுரைத், தொடக்கத்தில் நான் செய்திருந்த ஒரு தட்டச்சுப் பிழை. ‘1871 ‘ என்பது ‘1877 ‘ என்றிருக்க வேண்டும். பிரதாபசந்திர விலாசம் வெளிவந்த ஆண்டு 1877.)
‘பிரதாபசந்திர விலாசத்தில் ‘ வரும் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க கதா பாத்திரம் ஒரு தமிழ்ப் பண்டிதர். பெயர் சாக்கடை முத்துப் புலவர். சென்னைப் பட்டினத்துச் சாக்கடையில் முத்து இருப்பதாகக் கற்பனை செய்து கவி பாடியவர். இயற் பெயர் சோணாசல முத்தமிழ்க் கவிராஜபண்டித சேகரர். பிராதாபசந்திரன் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றபோது, அவன் பரிவாரத்தில் இப்புலவரும் ஒருவர்.
பி.ஆர்.ராஜமய்யர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திர ‘த்திலும்(1893) அம்மையப்பப் பிள்ளை என்ற ஒரு தமிழ்க் கவிராஜப் பண்டிதர் வருகிறார். இவரும் சாக்கடைமுத்துப் புலவரைப் போல் நகைச்சுவைக்கென்றே படைக்கப்பட்ட கதாபாத்திரம். இருவருயையுமே, நகைச்சுவை கதாபாத்திரம் என்று சொல்வதைவிட, tragic-comic குணச்சித்திரங்கள்என்று சொல்ல வேண்டும். அக்காலத்தில் தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ்ப் புலவர்கள்தாம் இத்தகையப் பாத்திரப் படைப்புக்களுக்குத் தகுதியானவர்கள் என்று நினைத்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
இப்பொழுதும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துவரும் பட்டிமன்றங்களைப் பார்க்கும்போது, தமிழ்ப் பண்டிதர்கள் அக்காலத்தைவிட இன்று அதிகம் மாறிவிடவில்லை என்று ஒருவர் சொல்லக்கூடும். இம்மாதிரியான கதாபாத்திரங்களைப் படைக்கக்கூடிய ஒரு நகைச்சுவை உணர்வு, ராஜுவுக்கோ அல்லது ராஜமைய்யருக்கோ அன்று இருந்ததுபோல் நம்மில் பெரும்பானமையான தமிழர்களுக்கு இன்று இல்லை என்பதை நினைக்கும்போதுதான் நம் மொழியைப் பற்றிய நியாயமான கவலை நமக்கு ஏற்படுகின்றது.
‘சாக்கடைமுத்துப் புலவர் ‘ என்ற விருதுவை அவருக்கு வழங்கிய பாடல்:
‘தென்திசை திலகமன்னத் திருமகள் வாழ்க்கை யென்ன
வன்திறல் மன்னர்க் கெல்லாம் வனப்புறு மாடமென்ன
கொன்றையம் தார் புனைந்த கொற்றவன் கைலை என்ன
தொன்றுதொட்டு இலங்கும் நம்சுந்தரச் சென்னை தன்னில்
கம்புநேர் மடவார் கண்ட முத்தமும்(முத்து போன்ற எச்சில்)
தம்பலத்தோடு(தாம்பூலம்) உமிழத் தவழ்ந்து
நிரம்பி சாக்கடை எங்கணும் முத்தமாய்
அம்பு ராசியின்( கடல்) மேலென ஆகுமால் ‘.
பிராதாப சந்திரனூம் அவன் நண்பர்களும் அவருடைய ‘தமிழ்ப் புலமையை ‘ வியந்து, இரு வெவ்வேறு பொருள்களை ஒப்பிட்டுப் பாட்டு இயற்றுமாறு பணிக்கிறார்கள். ‘இம் ‘மென்றால், இருநூறும். ‘உம் ‘மென்றால் முன்னூறுமாகப் பாடல்கள் கவிராஜர் நாவிலிருந்து வருகின்றன. வேட்டையாடச் செல்லும்போது, பொழுது போக்குவதாற்காக முத்த்மிழ்க் கவிஞரைப் பிரதாபசந்திரன் அழைத்துச் சென்றிருக்கிறான்.அப்பொழுது ‘ மான் வருகிறது ‘ என்று ஒருவன் கூவக்கேட்டு, பிரதாபசந்திரன்,
‘புலவரே, உம் பாட்டை நிறுத்தும் ‘ என்று சொல்லிக்கொண்டே, வேட்டையாட விரைகிறான்.புலவர், தமிழ் தெரியாத ஒரு ராஜபுத்திரக் காவலாளியுடன் தனித்து விடப்படுகிறார். ‘புலி வருகிறது ‘ என்ற சப்தம் கேட்டு, புலிகளுக்கு அவ்வளவாகத் தமிழ்ப் பற்று இருக்க இயலாது என்று உணர்ந்த அவர் அந்தக் காவலாளியின் கைகளைப் பற்றிக் கொண்டு ஓடுகிறார். காவலாளி ஹிந்தியில் ‘தமிழ்ப் புலியை ‘ ஏளனம் செய்துகொண்டு செல்கிறான்.
நாமிருக்கும் இடம்தான் பிரபஞ்சம் என்று ‘கிணற்று ஆமையைப் ‘ போல் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று பிரதாபசந்திரன் நண்பராகிய வித்தியாசாகரர் முன்பே வேதனையுடன் கூறியிருப்பதை நாம் நினைவு கூர்ந்தால், இந்தப் புலவர் பாத்திரப் படைப்பின் அவசியத்தை நம்மால் உணர முடியும். புராதனர் போன்றவர்களுக்கு, பிராதாபசந்திரன் நட்புறவினால் உலகம், மாறிகொண்டிருக்கின்றது,அதற்கேற்ப நாமும் ஒட்ட ஒழுகவேண்டுமென்று தெரிந்திருந்தும்,மாற்றங்களை எதிர்கொள்ள பிடிவாதமாக அவர்கள் மறுக்கிறார்கள். ஆனால் சாக்கடைமுத்துப் புலவர் போன்றவர்கள், உலகத்தைப் பற்றியே ஒன்றும் அறியாமல், கல் தோன்றி மண் தோன்றா காலத்தையே சொர்க்கமென்று நினைத்து வாழ்கிறார்கள்.
காலனி ஆட்சிக் காலமாகிய பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காலம் என்று சொல்லலாம். ஆங்கிலேயர் ஆட்சியை நிரந்தரமாக்க, நிர்வாக மனித இயந்திரங்கள் தேவைப்பட்டன சுதேசி மக்களுக்கு ஆங்கிலக் கல்வி தேவை என்று உணர்ந்து, மெக்காலே கல்வித் திட்டம் அமூலாக்கப்பட்டது. அதுவரை ஜாதி உரிமையாக இருந்த கல்வி, இப்பொழுது ஜாதியின் அடிப்படையில் இல்லை என்பது, சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. நகர்ப்புற ஆங்கிலக் கலாசார மேல்தட்டு வர்க்கம், தொன்மையான ஜாதி வரையறைகளைக் கடந்து, புதியதொரு அமைப்பாக உருவாயிற்று. நகர்ப்புற மத்தியதர வர்க்கம் ஏற்பட்டதும் இக்காலத்தில்தான்.
சமூக ஏணியில், கலாசார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மேல் படியில் இருந்தவர்களுக்கே புதிய கல்வித் திட்டத்தில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது என்றாலும், மேல் படியில் இருந்தவர்களுடைய ஜாதி, விசாரணைக்கு உள்ளாகவில்லை. ஆங்கிலக் கல்வியினால் ஒரு புதிய உலகம், ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் கண்முன் விரிந்தது. இந்த விழிப்புணர்வு, பலவிதமான மனக் குழப்பங்களுக்கும் காரணமாயிற்று. ஆசிரியர் தம் முன்னுரையில் கூறியிருப்பதுபோல, மேல்நாட்டுக் கலாசாரத்தை மேம்போக்காகப் பின்பற்றியவர்கள், அதில் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய ஆழமான அம்சங்களாகிய, சமூகப் பொறுப்புணர்வு, பொதுநலச் சுகாதாரம் போன்றவற்றைத் தவிர்த்து, அந்நாகரிகத்தின் உணவு, உடை பற்றிய புறவடிவங்களை மட்டும் பின்பற்றத் தொடங்கினர்.
மேல்நாடுகளில், ஒருவனுடைய கடவுள் நம்பிக்கை, ஒழுக்க பலகீனங்கள் போன்றவை அவனுடைய தனிபட்ட விஷயமென்று கூறுவது சரியா என்று ஒரு கதா பாத்திரம் இந்நாடகத்தில் கேள்வி எழுப்புவது, இந்த மனக் குழப்பத்தை எடுத்துக் காட்டுகிறது.
நம்முடைய மரபில் இத்தைகையவர் அசுரர்கள், தீயவர்கள் என்ற கருத்து வழிவழியாக இருந்து வருவதால் ஏற்படும் மனக்குழப்பம்
அரைகுறை ஆங்கிலக் கல்வி கற்ற விசுவாசகாதகனும் அவன் நண்பர்களும், மேல்நாட்டு நாகரிகத்தை மேம்போக்காகப் பின்பற்றியவர்களுக்கு எடுத்துக்காட்டு. ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்னு ஜாலியா இருப்போம். இதுதான் ஃபாஷன்
(fashion) என்கிறான் விசுவாசகாதகன். அவன் தான் வாழும் வாழ்க்கையைப் பற்றிக் கடைசி வரை வருத்தப் பட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ‘ எங்கள் தகப்பனார் புழுத்த கத்திரிக்காயிலும் பொத்தல் சோமனிலும்(உடை) காலத்தைக் கழித்து அளவிறந்த திரவியத்தைச் சம்பாதித்து வைத்தார். ஆனால் சிங்கக் குட்டி யானைமீது பாயும் என்பது போல
நமக்கு பாலியம்முதல் குலக் கொழுந்துகளாகிய தாசிகள் நேசத்திலேயே மிக இஷ்டம், ‘ என்று தன் வாழ்க்கைச் சித்தாந்தத்தை எடுத்துக் கூறுகிறான்.
பிறகு அவனூடைய நண்பர்கள், குசும்பா மாஸ்டர், ஸண்டேமாஸ்டர், பத்தாயி மாஸ்டர்,வெட்டுணி ஆகிய எல்லோரும் இதே முறையில் தங்களுடைய வாழ்க்கைத் தத்துவங்களை விதந்தோதுகின்றார்கள்.( ‘குடிகெடும் கடன்கள் ஈயும் குஜராத்திப் பேட்டை ‘ என்று ஸண்டே மாஸ்டர் கூறுவதைப் பார்க்கும்போது எவ்வளவு காலமாக குஜராத்திகள் அல்லது மார்வாரிகள் தமிழ்நாட்டில் இருந்து வந்தார்கள் என்பது வரலாற்றாராய்ச்சிக்குரிய விஷயம். அவன் இன்னொன்றும் கூறுகிறா:. ‘பரமசிவனே சனி பகவானுக்கு பயந்து, சாக்கடைக்குள்ளே பதுங்கினாரே, தெரியாதா ? ‘ இது எந்தப் புராணத்தில் வருகிறது என்பதை சமய ஆய்வாளர்கள் ஆராயலாம்)
வெட்டுணி, தன் அம்மாவின் கூந்தலை வெட்டியதாகக் கூறும் செய்தி ஆங்கிலக் கவிஞர் அலெக்ஸாண்டர் போப்பின்( 18ம் நூற்றாண்டு mock-heroic கவிதையாகிய ‘The Rape of the Lock ‘ யை நினைவூட்டுகிறது. விசுவாசகாதகனின் நண்பர்களாகிய இவர்கள் யாவரும் இறுதியில் தங்கள் தீய நடத்தைக்காக வருந்துகிறார்கள். ஆனால் விசுவாசகாதகன், பிரதாபசந்திரன் நண்பர்களால் நையப் புடைக்கப்படுகின்றானேயன்றி, தன் செய்கைக்கு வருத்தப்படுவதாகவே தெரியவில்லை.
திருவேங்கதானு, வைணவர், பிராமணர். அவர் ‘ பிராந்தியில் வைகுண்டம் காணுகிறார். ‘ பாவாடை ஜித்தர்( இவர் தாசிப் பெண்களுக்குப் பாவாடை தோய்த்துப் போடுவதால் இந்தப் பெயர்) சைவர், பிராமணர் இல்லை. இவருக்கு, ‘ தேவடியாளே ஆவுடையார், நாட்டுச் சரக்கே கைலாஸம் ‘. ஜித்தர் போதிக்கின்றார்:
‘பாடப்பா படிப்பதினால் ஒன்றுமில்லை
பண்பற்ற சாத்திரங்கள் அனைத்தும் தள்ளே
தள்ளப்பா ஏட்டிலுள்ள கல்வி எல்லாம்
தாரணியோர் தம்மை மயக்குவதற்கென்றே! ‘
இந்நாடகத்தில் வகுப்பு விருப்பு, வெறுப்பு எதுவுமின்றி, ஆசாரசீலர்களின் வேஷங்களைப் புலப்படுத்துவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது.
ஷோக்குசுந்தரம், மத்தாப்பு சுந்தரம் என்ற இரண்டு தாஸிப் பெண்களும் அக்காலக் கட்டத்தில் பெண்கள் இருந்த அவலநிலையின் சித்திரிப்பு. கோயில் கலாசாரம் சீரழிந்து, கணிகையர் வயிற்றுப் பிழைப்புக்காக நகர்ப்புறத்துக்கு வந்து, வலிமையுடையது எஞ்சும் என்ற நிலையில், தம் கலையையும் உடலையும் விற்று வாழும் பரிதாபகரமான நிலை.
ஷோக்குசுந்தரம் பாடுகிறாள்;
பதம்-இராகம்-கலியாணி; தாளம்-சாபு.
பல்லவி
பேச்சில்பிரபுக்களே பின்னை ஒன்றுமில்லை பேசக் கூச்சமில்லையோ
அனுபல்லவி
ஆச்சு போச்சுதென்று ஆடம்பரமாக
அட்டகாசமின்றி துட்டுக்குக் கதியில்லை (பேச்சில்)
சரணம்
கட்டிய பெண்டாட்டிக்கு எட்டுப் பாங்காகவே
காதல்மிக உங்கள் மீது வைத்த என்னை
தட்டிப் பூ சுற்றுகிறீர் சரஸ வார்த்தைகளாலே
தாஸி எங்கேனும் மோசம் போவாளோ போம் போம் (பேச்சில்)
குப்பை உயர்ந்தது கோபுரம் தாழ்ந்தது
கூழுக்கு இல்லாதவர் குடித்தல் பாயஸமாச்சு
துப்பற்ற நான் உங்கள் ஸ்வாதீனம் ஆனபின்
துரும்புக்கும் கதியில்லை சொகுசாய்ப் பேசுறீர் போம் போம் (பேச்சில்)
இப்பாட்டைக் கேட்டு அகமகிழ்ந்து, ஸண்டேமாஸ்டர் கூறுகிறான்: ‘ஆ! ஆ! அண்ணே, திரைகடல் ஓடி திரவியம் தேடு என்று ஒளவை எதற்காகச் சொன்னாள் ? தேடிய பொருளை தேவடியாளுக்கு இடுவதற்கன்றோ ? ‘
இந்தப் பகுதிகளை இந்நாடகத்தில் படிக்கும்போது, நமக்குத்தற்காலத்தில் தமிழில், பின்நவீனத்துவ கலக இலக்கியம் உருவாக்கிவரும் படைப்பாளிகள் நினைவுக்கு வருகிறார்கள். பாவாடைஜித்தர் கூறுவதுதான் முத்தாய்ப்பு.
‘ அப்பனே! என்ன போ! இப்போ எங்கே பார்த்தாலும் காலேஜிகள் ஏற்பட்டுப் போச்சுது! சிறு பிள்ளைகளெல்லாம் வாசித்துத் தெளிந்து போனார்கள்! தேவடியா என்றால் சீச்சீ என்கிறார்கள்! சைவமதம் என்றால் ‘சட் போ ‘ என்கிறார்கள்! நாம் அடியோம் என்றால் நான்ஸென்ஸ் என்கிறார்கள்! ஐயோ கலிகாலம் என்றால், யூ பீ டாம்ட்( You be damned) என்கிறார்கள்! எந்தவெளியைப் பார்த்தாலும் மந்தை வெளியாயிருக்குது ‘
இந்நாடகத்தை எழுதியபோது, ராஜுவுக்கு வயது 25. அவருடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும் ஆங்கிலேய உயர்தர அதிகாரிகள். ராஜூ ஆங்கிலேய ஆட்சியினால் பல நண்மைகள் இந்தியாவுக்கு ஏற்பட்டன என்பதை உறுதியாக நம்பியவர். அதேசமயத்தில், இந்தியா ‘ஸ்வாதீனம் ‘ (சுய ஆட்சி) பெறவேண்டுமென்றும் விரும்பியவர். ஆங்கிலேய துரைத்தனம் தம்மைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பற்காகவோ என்னவோ, 1869ல் கவர்னர்-ஜெனரல் பதவி ஏற்ற லார்ட் மாயோவின்
டில்லி தர்பார், எந்தவித சம்பந்தமுமில்லாமல் ( நம் தமிழ்ப் படங்களில் கதாநாயகியின் பிறந்த நாள் கொண்டாடப்படுவது போல்) இந்நாடகத்தில் விரிவாகக் காட்டப்படுகிறது.(லார்ட் மாயோ காலத்தில்தான் இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கு எடுக்கப் பட்டது. இவர் 1872ல் ஓர் ஆப்கானியக் கைதியினால் அந்தமானில் கொல்லப்பட்டார்). ‘கவர்னர் ஜெனரல், இந்திய சமஸ்தான அரசர்கள், நாட்டின் பெரிய மனிதர்கள் யாவரும் தர்பாரில் கொலு வீற்றிருக்கிறார்கள் ‘ என்பதை நாடக மேடையில் எப்படிக் காட்ட்யிருப்பார்களென்று புரியவில்லை. நாட்டையும், கவர்னர்ஜெனரலையும் பாராட்டிப் பாடல்கள், தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறிப் பாடப்படுகின்றன. பிரதாபசந்திரனின் தந்தை லக்ஷ்மிவிலாசர் டெல்லி கவர்னர்ஜெனரல் தர்பாருக்கு அழைக்கப்படுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக, இந்த தர்பார் காட்சி விவரித்துக் காட்டப்படுகிறது.
இந்நாடகத்தில் வரும் கதாபாத்த்திரங்கள் அனைவருமே, தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் கதைமாந்தர்களைப் போல, ஒற்றைப் பரிமாணமுள்ளவர்கள். கறுப்பு, வெள்ளையைத்தவிர, வேறு வண்ணங்கள் அறியாத குணச்சித்திரங்கள். கீழைய, மேல்நாட்டுப் பழைய இலக்கியங்களில் நல்ல தேர்சச்சியைத் தெரிவிக்கும் ராஜுவிடமிருந்து நான் அதிகம் எதிர்பார்த்தது சிறிது ஏமாற்றைத்தான் தந்தது.
இருந்தாலும், அக்காலத்திய சமூக மாற்ரங்களை அறிவதற்காகன ஓர் அற்புத வழிகாட்டி, ‘பிராபசந்திர விலாசம் ‘. இதை மீந்தும் பிரசுரம் செய்ய ஆர்வலர்கள் முன் வர வேண்டும்.
—-
ps0710@yahoo.com
- பிரதாபசந்திர விலாசம் -2
- ஒரு கிராமத்து இளைஞனும் புலமைப் பரிசிலும்
- சகுனம்
- பொங்கல் வாழ்த்துக்கள்
- வ.ந.கிரிதரன் கவிதைகள்!
- விடியலை நேரம் உணர்த்தினாலும் ….
- ஓராண்டு கடந்து ஸ்ரீலங்காவில் சுனாமி மீட்சி வசதிகள் -2
- திறந்திடு சீஸேம்! / கவிதாவதாரம் / எஸ். ஷங்கரநாராயணன்
- வளர்ச்சி
- கற்பனையும் சித்தரிப்பும் : எம். யுவனின் ‘கைமறதியாய் வைத்த நாள் ‘
- நம்பி வந்த வழியில் சேக்கிழார்
- பிரெஞ்சு படைப்புலகில் ‘சுயகதைகள் ‘(Autofiction)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 6. கல்வி- மருத்துவம் எல்லாம் இலவசம்.
- ஆகாயப் பந்தலிலே
- கடிதம்
- வாக்களிக்கப்பட்ட பூமி ஸிண்ட்ரோம்-2 (Promised Land Syndrome- 2) வாக்களிக்கப்பட்ட பூமி: ஆப்பிரிக்க கண்டம்
- ஹிந்து சமூகப் பிளவும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவமும்
- சி.என்.ஜி
- முரண்பாடுகளின் அறுவடை
- கதை
- பாக்கி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4
- தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் ?
- எதிர் குலக் கல்வி எனும் சிந்தனையின் அடியொற்றி…
- வகாபிசமும் நவீன முதலாளியமும்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்
- இயற்கையும்,விடுதலையும்…
- ‘தமிழ் பாதுகாப்புக்குழு ‘ ஒரு கண்ணோட்டம்
- எடின்பரோ குறிப்புகள் – 6
- கீதாஞ்சலி (57) வலியூட்டும் இன்னிசை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- வார்த்தை
- பெரியபுராணம் – 73 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி