சுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

சுப்ர பாரதிமணியன்


====

மராத்திய திரைப்பட உலகம் இந்தி திரைப்படங்களின் பாதிப்பால் நசிந்து வருகிறது. நாடகத்துறை சார்ந்தவர்கள் தொடர்ந்து புதிய திரைப்பட முயற்சிகளில் இறங்குவதும், சோதனை முயற்சிகள் செய்வதும், மராத்திய திரைப்பட உலகை ஆசுவாசம் கொள்ளச் செய்கிறது. இவ்வாண்டின் இரு படங்கள் இவ்வகை ஆசுவாசத்திற்கு உதவியிருக்கின்றன.

‘ தேவ்ராய் ‘ படம் பல தயாரிப்பாளர்களின் கூட்டுமுயற்சியாக இருப்பதே இவ்வகைப் படங்கள் வெளிவரும் சிக்கலைத் தொனிக்கின்றன. சுமித்ராபாவ், சுனிட் கூட்டாக இயக்கியிருக்கும் இப்படம் அவர்களின் தொடர்ந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது. அவர்களின் விவரணைப்படங்கள், குறும் படங்கள் தன்னார்வக்குழுக்களின் செயல்பாடுகள், சமூக சேவை இயக்கங்களுக்கு உதவிகரமாக இருந்திருக்கின்றன.

‘ தேவராயி ‘ன் விநியோகப்பொறுப்பில் இருக்கும் சமூக நலக் குழு ஒன்று இதை சரியாக வெளிக்கொணர்ந்திருப்பதில் இப்படம் வெகுவாக சென்றடைந்திருக்கிறது.

மனச்சிதைவு நோய் குறித்த வெகுசனப்படங்களின் வெளிப்பாடு அவ்வகை நோய் குறித்த அருவருப்பையும், அதிர்ச்சியையும் தந்திருக்கின்றன் தமிழில் சேது உட்பட சமீபப் படங்களில் இவ்வகை நோய் குறித்த அதீத உணர்வுக்கதையோட்டங்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவை. கடந்த இரண்டாண்டுகளில் தமிழில் வெளிவந்திருக்கும் மனச்சிதைவு கதாபாத்திரங்களின் தன்மை பற்றின அலசல் மேலோட்டமாக அமைந்திருக்கையில்

‘ தேவராய் ‘ படத்தின் அவசியம் சரியாக உணரப்படும்.

தேவராய் ஆறும், காடுகளும் , இயற்கை ததும்பும் வளமும் கொண்ட கிராமப்பகுதி. சேசாத்திரி என்ற பிரதானப்பாத்திரம் இயற்கையின் மீதான் ஈடுபாட்டாலும் அதன் தொன்மை, இயற்கை வளம் குறித்த ஆராய்ச்சித்தன்மையிலும் ஈடுபட்டிருக்கிறது. தாவரங்கள் , செடிகள்,மரங்கள் பற்றின ஆழ்ந்த ஈடுபாட்டில் அதை ஆராய்ச்சியாகவே மேற்கொள்கிறான்.

ஓர் ஆராய்ச்சியாளனாக ஆவதே அவனின் லட்சியமாக இருக்கிறது. ஆனால் கல்வித்துறையில் இருக்கும் நம்பிக்கையின்மை அவனது ஆராய்ச்சி தடைபட ஏதுவாகிறது. பெரிய நகரங்களுக்கு ஆராய்ச்சிப் படிப்பிற்காக செல்வது என்பது அவனின் கனவாகிறது. ஆனால் இது நிறைவேறுவதில்லை. மனச்சிதைவு நோயிற்கு உள்ளாகிறான். தனிமையில் உட்கார்ந்து பேசிக்கொண்டுடிருப்பது , இயற்கையுடனான் உரையாடல் , ஆராய்ச்சி என்ற ரீதியில் தாவரங்கள் குறித்தவற்றைப் பதிவு செய்கிறான். வீடே கல்யாண விசேசத்தில் களித்திருக்கையில் அவன் தனிமையை நாடி ஓய்கிறான். எரிச்சலும், கோபமும் அவனிடமிருந்து வெளிப்படுவதை புரிந்து கொள்ள முடிவதில்லை. கல்யாணி என்ற சிறு வயது முதல் பழகிய வேலைக்காரப் பெண் அவனுடன் நெருங்கிப்பழகுவதைப் பிடிக்காத தாயால் துரத்தப்படுகிறாள். விதவைத்தாயின் மரணம்அவனைநிர்கதியாக்குகிறது.

கோபமும் , எரிச்சலும், வன்முறையான அதிரடி நடவடிக்கைகளும் மருத்துவமனையை நாட வைகிறது.மத ரீதியான மந்திரச் சடங்குகளும், வைத்திய முறைகளும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இருந்தும் பலனளிக்கவில்லை. மருத்துவமனையில் தன்னை விந்நானி என மருத்துவரிடம் அறிமுகப்படுத்தி கொள்கிறான். கவுன்சிலிங், குரூப்தெரப்பி, ECT போன்றவற்றின் மூலம் அவனின் நோய் அவனின் குடும்பத்தருக்கு விளங்குகிறது. உலகமே மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாய் தோன்றுகிறது. சுற்சுச்சூழல் கேடும், தொலைக்காட்சியின் வன்முறையும், விரக்தியும் நோயாய் விரிவடைவது காட்டப்படுகிறது. HALFWAY HOME, DAY CARE CENTRE போன்றவற்றின் உதவியால் மருத்துவ நிலையோடு அவனும் அவனை வைத்துக்காப்பாற்றும் அக்காவின் குடும்பத்தினரும்அலைகிறார்கள். ‘ தேவராய் ‘ கிராமத்தின் மீதான் அவனின் ஈடுபாடு கிராமத்திற்குத் திருப்பிப் போகிற ஆசையைத் தெரிவித்துக் கொண்டெ இருக்கிறது. இளம் வயது தோழிி கல்யாணி கணவன் மரணத்தால் விதவையாகி நகரத்தில் வேலை செய்து கொண்டிருப்பவளின் உதவி நாடப்படுகிறது. மறுமணம் பற்றின அக்கறை இல்லாதவள் . ஆனால் சேசாத்திரியின் நோய் அனுதாபத்தை வளர்த்திருக்கிறது,

அவனின் அம்மாவால் கல்யாணி துரத்த்ப்பட்டவள். அவளின் அக்காவால் சேசாத்திரியின் மறுவாழ்வுக்காக வலியுறுத்தப்படும் போது கல்யாணி ஒப்புக் கொள்கிறாள். கல்யாணியும் சேசாத்திரியும் தேவராய் திரும்புகிறார்கள். மருந்தின் உதவியோடு சேசாத்திரி இயல்பாக இருக்கப்பழகுகிறான்.மருந்தில்லாமல் அவன் உலகம் இல்லை என்பதோடு, தனது ஈடுபாட்டிலான கிராமத்தின் அக்கறையில் மூழ்குகிறான்.

மனச்சிதைவு நோய் குறித்த முழு அக்கறையையும்,அறிவியல் ரீதியான அதன் பார்வையும் முழுமையாக அலசப்படும் இப்படத்தில் நோய் குறித்த விபரங்கள் என்று அதுவும் தனியே தொனிப்பதில்லை. காரணம் சரியான சம்பவங்களின் ஊடே அவை வைக்கப்படுவதுதான். தேர்ந்த அனுப்வங்கள் மூலம் நோய் குறித்த கல்வி எப்படி சாத்தியமாகியிருக்கிறதுஎன்பதற்கு இப்படம் முக்கியமான உதாரணமாகும். மனச்சிதைவு நோயாளிகளின் சதவீதம் அதிகரித்து வரும் தற்சமயத்தில் இப்படத்தின் தேவை எல்லா இடங்களிலும் சரியாக உணரப்படும். கல்வி அக்கறையுடன் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு கொண்டு செல்வது அவசியமாகிறது.

மராத்திய நாடக உலகின் மிக முக்கியமான் நடிகரான அட்டுல் குல்கர்னி நோயாளிப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரின் கவிதைகள் சிதைவுற்ற உலகத்தைக் காட்டுவதற்காக சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அட்டுல் குல்கர்னியை சமீப ஆண்டுகளில்தமிழ் திரைப்பட உலகம் பயன்படுத்தி வரும் பாத்திரங்களின் மாதிரிகள் அவரின் நடிப்புத் திறமை வீணடிக்கப்பட்டுருப்பதைக் காட்டுகின்றன. ( ஒளிப்பதிவாளர் மது அம்பட்டின் 1:1.6 an ode to lost love என்றொருத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் கதா பாத்திரத்தில் பயன்படுத்தப்பட்டு வீணடிக்கப்பட்டிருக்கிறார். அதில் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியில் இறங்கும் அட்டுல் மலையாற்று–ர் ராம்கிருஸ்ணனின் கவிதைகளை ஒலி நாடாவில் கேட்டபடி தூக்க மாத்திரைகளை விழுங்குகிறார். )

‘ சுவாஸ் ‘ சென்ற ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்ற படம்.

ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.மிகை உணர்ச்சிக்கான எல்லாத்தன்மைகளையும் கொண்டிருக்கும் கதையமைப்பு. இளம் இயக்குனர் என்ற பலவீனமும் இப்படத்தை சாதாரணமாக்கியிருக்கும். ஆனால் அவை தவிர்க்கப்ப்ட்டிருக்கின்றன. ஏழு வயது பையன் ஒருவன் – கொங்கன் கரையியோரப்பகுதியில் வசிப்பவனுக்கு கண்களில் தென்படும் ஒரு வகை புற்று நோய் காரணமாய் பார்வை மங்கலாகிறது. இரு கண்களையும் நீக்கினால்தான் அவன் பிழப்பான் என்பது உறுதியாகிறது. கிராமத்துத் தாத்தாவும், அப்பாவும் அதிர்ந்து போகிறார்கள். கண்களை நீக்கும் சிகிச்சை நாளில் திடார் வேலையால் மருத்துவர் வர இயலாமையால் தடைபடுகிறது. தாத்தா பேரனை கூட்டிக் கொண்டு போய் அவன் இனி பார்க்க முடியாத இடங்களையும், இயற்கை அழகையும் காட்டுகிறார். இயற்கை சார்ந்த ஒலிகளை ரசிப்பதை முன்பே திட்டமிட்டு பேரனுக்கு உணர்த்தியிருக்கிறார்.

கண்கள் இல்லாத உலகத்தில் அவன் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அக்கறையாக் பேரனைப் பழக்குகிறார்.இறுதியில் சிகிச்சை முடிந்து கண்கள் முழுமையாய் அகற்றப்பட்ட பையன் கிராமத்திற்குத் திரும்புகிறான். பறவைகளின் ஒலிகளைக் கேட்டு ஆனந்திக்கிறான். இனி அவனின் உலகம் ஒலிகளால் நிரம்பியது.

ஆரம்பம் முதல் மருத்துவமனைக் காட்சிகளும், கிராமமும் மாறி மாறிக் காட்டப்படுவதில் அவன் இழக்கப்போகும் உலகம் பற்றியதாக இருக்கிறது. இயற்கை சார்ந்து ஒரு சிறுவனின் மன உணர்வுகளைப் பதிய வைத்தல் மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்கு அவன் சிறு வயது முதலே ஆட்பட்டிருப்பதும் குறிப்புகளால் சரியாக உணர்த்தப்படுகிறது. மருத்துவமனையில் கிராமவாசியின் தத்தளிப்பின் போது மவுனம் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. அங்கு அவர்களின் குரல்களுக்கு மதிப்பில்லைதான். பணத்தை வாங்குகிறவன் கூட அது எதற்கான செலவுக் கணக்கு என்று விளக்கம் சொல்வதில் அக்கறையில்லாம்லும், பொறுமையில்லாமலும் இருக்கிறான். இந்த அவஸ்தைகளுக்கு மத்தியில் கிராம வாழ்க்கையின் நிதானத்தையும்காட்டத்தவறுவதில்லை. சிறுவனும், அவன் குடும்பமும் இழக்கப்போகிற உலகம் மெல்ல நழுவுகிறது.

இளம் இயக்குனர் காட்சிப்படுத்தலில் தனது தனிதன்மையை உணர வைக்கிறார்.

மருத்துவரை வீட்டிற்கு அவசர அழப்பிற்காக அழக்கும் மனைவியின் தொடர்ந்த தொலை

பேசி அழப்பின் போது அவளது முகமோ உருவமோ தேவையற்றதாய் அமையும் இடம் சரியான உதாரணம். மருத்துவரின் அறைக்குள் வராதவரைக்கும் சிறுவனும், தாத்தாவும் தொலைபேசி உரையாடலில் முக்கியத்துவம் பெற்றாலும் அவர்கள் காட்டப்படுவதில்லை. இது போன்று பல காட்சியமைப்புகளில்வெவ்வெறு வகை பாத்திரங்களின் பிரேம்கள் தவிர்க்கப்பட்டு உரையாடல்கள் பிரதானப்படுத்படுகின்றன.

சிறுவனின் உலகம் இனி என்னவாக இருக்கும் என்பதைப்பற்றின அதிர்ச்சி அவனின் குடும்பத்தினருக்கும், பார்வையாளர்களுக்கும் ஏற்படுவது இயல்பே. இச்சூழலில் அவன் நுழந்து விட்டான். அதில் புக பிறரின் அனுமதியையும் அவன் பெறத் தேவையில்லை. அவனின் உலகம் பிரமாண்டமானது. ஒலிமயமானது என்பதை அவன் உணர்ந்து அதில் அமிழ்கிற காட்சி உதாரணம்.

ஒரு உண்மைச் சம்பவம் சிறுகதையாகி, அதையொட்டினத் திரைக்கதையில் இப்படம்

வெளிவந்துள்ளது. தமிழ்ப்படங்கள் ஆஸ்கார் பரிசுக்கு சிபாரிசு செய்யப்படும் போதெல்லாம் அது பற்றின எள்ளலும் விமர்சனமும் இயல்பாய் கிளம்பும். இப்படம் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட போது ( பரிசுத் தகுதிக்குள் இல்லையென்றாலும்) அப்படி எள்ளல் எதுவும் தோன்றாதபடி படத்தை இயக்கியிருந்தார் இளம் இயக்குனர் சந்திப் சாவந்த்.

= சுப்ரபாரதிமணியன்

srimukhi@sancharnet.in

====

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்