சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

எம்.கே.குமார்.


சிங்கப்பூரில் தீவிர இலக்கியத்திற்கான முகாந்திரங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்ததாகத்தெரியவில்லை எனவும் சுந்தர ராமசாமி மற்றும் திலீப்குமார் உட்பட யாரும் எந்த சிங்கப்பூரைய படைப்பாளிகளையோ படைப்பையோ முன்னிறுத்தவில்லை எனவும் நல்ல படைப்புகள் இருக்கும்/இருந்த பட்சத்தில் அவர்களாலோ அல்லது அவைகளாகவோ பிரதானப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் தமிழவன் கூறிய கருத்துகளில், சிங்கப்பூரில் தற்போது வாழுகின்ற இளைய வாசகர்களில்/படைப்பாளிகளில் ஒருவனாகிய நானும் இயைந்துபோகும் வேளையில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். அவற்றிற்கு முன்பாக எனக்கெழுந்த சில எண்ணங்களையும் அடையாளப்படுத்துகிறேன்.

சிறுபத்திரிகைச் சூழலையும் சுந்தர ராமசாமி அவர்களையும் முன்னிறுத்தி, திரு.தமிழவன் அவர்களின் ஆராய்ச்சி அமைந்ததின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. உலகெங்குமான தரமான ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு சிறுபத்திரிகையினை அது சார்ந்தவர்களின் பார்வைகளை தமிழவன் அவர்கள் அளவுகோலாகக் கொள்வது சரியான நோக்கா என்பதை இலக்கிய விமர்சகர்கள் சொல்ல முன் வரலாம். தமிழகத்தின் இலக்கியவளர்ச்சியோடு சிங்கப்பூரின் இலக்கிய வளர்ச்சியை பொது நோக்குதலும் சரியான தன்மை கொண்டதுதானா என்பதையும் கொஞ்சம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். இவை எல்லாம் கொஞ்சம் ஆரோக்கியத் தன்மைக்கு அடிகோலினாலும் ஒப்பு நோக்குதலுக்கு பொருந்திவரும் எனக்கூற இயலவில்லை.

திரு. சுப்ரமணியன் ரமேஷ் (மானஸஜென்) அவர்கள் எழுதியதைப்போல, தமிழகத்தின் இலக்கிய நீட்சி கொண்டதாகவே இருக்க விரும்பி பல்வேறு குழுக்களோடு சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் பயணிக்கிறது என்பதை மூன்று (பண்டிதர்/திராவிட, வானம்பாடி மற்றும் நவீன) பிரிவுகளின் வழி நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும். இவற்றில் முதல் இரண்டு குழுக்களானது, இலக்கிய உலகின் முதலும் முடிவும் அதுவே என உருவகப்படுத்திக்கொண்டு ஒரே தளத்தில் இயங்கி வருகிறது. மூன்றாவது குழு, இணையம், சிறுபத்திரிகைகள் என அடுத்த தளத்திற்கு விரிவுபடுத்த முயல்கிறது.

சிங்கப்பூரில் ஜாதிப்பிரச்சனையை வைத்தோ, மதப்பிரச்சனையை வைத்தோ, சமூக அவலங்களை வைத்தோ, அரசின் செய்லபாடுகளை வைத்தோ படைப்புகள் உருவாக்குவது என்பது கடினம். அவற்றின் ஆழமும் சமுதாயத்தில் அவ்வளவாக (ஒரு படைப்பைப் பிரசவிக்கும் நிலையில்) இல்லாததால், அத்தகு படைப்புகளின் நிலைத்தலும் பிழைத்தலும் வேண்டாத பிரச்சனைக்குத்தான் வழி வகுக்கும்.

‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ கதை பற்றி இங்கு எழுதினால் பாதிப்பேர் ஆபாசம் என்றும் மீதிப்பேர் புரியவில்லை என்றும் சொல்லிவிட்டுப்போகக்கூடும். இந்தியாவில் இருப்பதைப்போல கதை வந்து முடிந்து ஆறுமாதம், ஒருவருடம் ஆகியும் யாரும் அதை விமர்சித்துக்கொண்டிருக்கமாட்டார்கள். அத்தகு கதைக்களமும் இங்கில்லை என்பதும் இங்கு சொல்ல வேண்டிய அவசியத்திற்குள்ளாகிறது.

‘ஒரு உரசல் இல்லாமல் எத்தகைய இலக்கிய வளர்ச்சியும் நடைபெற வாய்ப்பில்லாது போகலாம்; வாய்ப்புக்குறைவாக இருக்கலாம். ஆனால் பொருளியலிலோ கருத்தியலிலோ தனிமனித படைப்புகளிலோ ஒரு உரசல் இருக்கும்பொழுது நல்ல படைப்புகள் உருவாகலாம் ‘ என்று ஒரு கூட்டத்தில் சொன்னார் சிங்கை அரசாங்க நிறுவனத்தில் முக்கியப்பதவியில் இருக்கும் திரு. அருண் மகிழ்நன் அவர்கள்.

இக்கூற்றில் இருந்து, படைப்புகள் எழும் நிலை, அவற்றின் அவசியம் நிலவும் தன்மை, அதன் சிங்கப்பூர் நிலைமை ஆகியவற்றை நாம் எளிதாக உணர்ந்துகொள்ளமுடியும். ஆயினும் சிங்கப்பூரில் தமிழை அரசாங்கம்தான் காக்கிறது; வளர்க்கிறது என்பதும் ஒரு மறுக்கமுடியாத உண்மை! (அண்மையில் சென்னையில் நடந்த புத்தகக்கண்காட்சியில் அதிகத்தொகைக்கு புத்தகம் வாங்கியது சிங்கப்பூர் தேசிய நூலகமாம்!)

சிங்கப்பூரிலிருந்து தமிழின் அடையாளமாக விளங்கும் சில விஷயங்களை இப்போது பார்ப்போம். தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் வானொலி. தொலைக்காட்சியில் தமிழின் பங்கு சிங்கப்பூரின் இலக்கியத்தரத்துக்கு இணையாகவே உள்ளது. வாசிக்கப்படும் செய்திகளில் மட்டும் தமிழ்நாட்டின் செய்திவாசிப்பை விட இங்கு தமிழைக் கொஞ்சம் ரசிக்கமுடியும். அவ்வளவுதான்! வானொலியில் த மிழின் பங்கு உண்மையில் கொஞ்சம் நன்றாக இருக்கிறது. சினிமாப்பாடல்களுக்கும் விளம்பரங்களூக்கும் நடுவில் அவ்வப்போது தமிழையும் ஞாபகப்படுத்துகிறார்கள். ஆனால் பத்திரிகையின் நிலைமை ?

தமிழ்முரசு என்றொரு நாளேடு. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 16 பக்கங்கள் போடும். அவற்றில் ஒரு பக்கம் முழுவதும் தமிழ்நாட்டு சினிமா செய்திகள்(அதற்கு முந்தைய வாரம் வந்த தினமலர்-வாரமலர் செய்திகள்!). இன்னொரு பக்கம், அப்பதிப்பில் தமிழில் வந்திருக்கும் முக்கிய செய்திகள் ஆங்கிலத்தில்! ஒரு பக்கம் ராசிபலன் தவிர கவிதை, கதை என்பதற்கு இருபக்கங்கள். இவைபோக வரிவிளம்பரங்கள்! மற்ற

‘c0டி முந்தைய நாள் சன் டிவியில் வந்த செய்திகள் தலைப்புச்செய்திகளாய்! கொஞ்சம் உள்ளூர் செய்திகள்!

மற்ற நாட்களில் பத்துபக்கங்கள் மட்டும் என நினைக்கிறேன். சிங்கப்பூரின் தமிழ் மக்கள்தொகையில் மிக மிகச் சிறிய அளவே இதன் சர்குலேஷனாம். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கொஞ்சம் அதிகம். ‘இவ்வளவு எளிமையானதாக வழங்கியுமே சிங்கப்பூரர்கள் வாங்குவதில்லை ‘ என அவர்களும், ‘என்ன இருக்கிறது வாங்குவதற்கு ‘ என ஒரு சிலரும் அடிக்கடி பேசிக்கொள்வது காதில் விழுகிறது.

விகடன், குமுதம் தரத்தை ஒப்பிடுகையில் இந்நாளேடுவும் தமிழக மக்களின் ரசனைக்கு குறைந்ததல்ல. உண்மையில் இந்திய மக்களின் வாசிப்பும் குறைவாகவே இருக்கிறது. ஆங்கிலசெய்தித்தாள்கள் இலவசமாகவே கிடைக்கும்பொழுது இதையெல்லாம் யார் காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. பெரும்பாலும் தமிழ் செய்தித்தாள் வாங்குபவர்கள் இந்தியாவிலிருந்து வந்து உழைக்கும் தொழிலாளிகள் என்பதும் பரவலாக இருக்கும் கருத்து.

இதற்கிடையே நல்ல பத்திரிகைகளாய் ஆரம்பித்தவர்கள் எல்லாம் ‘கைகடி ‘யோடு போய்விட்டார்கள். 1935ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்முரசு இன்னும் நிலைத்து நின்று வருகிறது. அதை ஆரம்பித்த திரு. கோ.சாரங்கபாணி அவர்களின் ஆர்வத்துக்கும் தமிழ் உழைப்புக்கும் ஏற்றவகையில் இப்போது தமிழார்வலர்கள் யாரும் செயல்படுவதில்லை போன்று ஒரு தோற்றம் தமிழிலக்கிய உலகில் நிலவுகிறது.

ஒரே ஒரு பத்திகை (மாத இதழ்) மட்டும் பல வருடங்களாக தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. அது இந்தியன் மூவி நியூஸ்! பாலிவுட் கோலிவுட் செய்திகள், கவர்ச்சிப்புகைப் படங்கள், கிசுகிசுக்கள் மற்றும் பேட்டிகள் என அது வெளிவருகிறது. இவற்றை, தமிழர்கள் மட்டுமின்றி, பாலிவுட்டில் பெரும் ஆர்வம் கொண்ட வட இந்தியர்களும் மலாய் சமூகத்தினரும் தொடர்ந்து வாங்கி வருவது ஒரு காரணமாய் இருக்கலாம்.

பிழைப்பும் அது சார்ந்த பொருளியல் வாழ்க்கையுமாய் ஓடிக்கொண்டிருக்கும் இவ்வாழ்வில் இலக்கியத்தரங்களும் படைப்புகளும் பிறந்து சிறு குழந்தையாகவே நெடுநாட்களாக வளராமல் ஒதுங்கிக் கிடக்கின்றன. அரசாங்கத்தின் உதவியோடு இளைய தலைமுறை, தமது மூதாதையர்களின் துணைகொண்டு காரியத்தில் இறங்கினால் தமிழவன் ஆசைப்படும் விஷயம் வெளிவரலாம். ஆனால் அதற்கு முன்னால் அந்த இளைய த லைமுறையை இலக்கிய உலகின் பக்கம் திருப்பவேண்டியது அவசியமாகிறது. எப்படி அது என்பதுதான் இன்றைய கேள்வி!

எம்.கே.குமார்.

yemkaykumar@yahoo.com

Series Navigation

எம்.கே.குமார்

எம்.கே.குமார்