சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

பாவண்ணன்


அன்றாட வாழ்வில் பார்க்கவும் கேட்கவும் வாய்ப்புள்ள பல சம்பவங்களையும் அவற்றை உள்வாங்கி மாற்றிமாற்றிக் கலைத்து அடுக்கும் சூழலில் தற்செயலாக மனம் கண்டடைகிற அபூர்வமான எழுச்சியையும் பிரதானமான வகையில் எழுதிப் பார்த்தவையாக உள்ளன தமிழ்மணவாளினின் கவிதைகள். ஒரு காட்சி. எல்லாருடைய மரணங்களின்போதும் துக்கத்துடன் ஒப்பாரி வைத்து அழுபவள் அங்கம்மாள். அவளைக் கண்டதும் விடைகாண முடியாமல் தத்தளிக்கவைக்கிறது ஒரு கேள்வி. அவள் மரணத்துக்கு யார் அழக்கூடும் ? இன்னொரு காட்சி. திருவிழாவுக்காக துார்வாரப்பட்ட குளத்தில் தண்ணீர் இல்லை. பொய்த்துவிட்ட பருவமழையால் வானம் பார்த்து வரண்டுகிடக்கிறது குளம். நான்கு ஆண்டுகளாக நடைபெறாத திருவிழா நடைபெற ஏற்பாடாகிறது. எங்கிருந்தோ அவசரம் அவசரமாக வாகனங்கள் கொண்டுவந்த தண்ணீரால் குளம் நிரப்பப்படுகிறது. கரையில் இருந்தவர்கள் மழைவேண்டிப் பாடும் சித்திரத்துடன் நிறைவடைகிறது அக்காட்சி. மற்றொரு காட்சி. செருப்பிலிருந்து நகைவரை ஒன்றுவிடாமல் கொண்டுசேர்க்கும் சிரமங்கள் தொடர்ச்சியாக அடுக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் கொண்டு செல்பவர்கள் குப்பையைமட்டும் கொண்டுசெல்வதில்லை என்னும் ஐதிகக் குறிப்புடன் முற்றுப் பெறுகிறது கவிதை. தொகுப்பு முழுக்க இப்படி ஏராளமான சித்திரங்கள் காணப்படுகின்றன.

அன்றாடச் சங்கதிகளின் சித்திரங்கள் கவிதைத் தளத்தை எப்படி அடைகின்றன என்பது முக்கியமான கேள்வி. எங்கோ இருக்கிறது புல்நுனியில் தேங்கிநிற்கிற பனிமுத்து. வேறெங்கோ தொலைவில் காற்றிலாடும் பனைமரத்தின் நிழல் அத்துளியில் தெரிகிறது. சட்டென இந்த உவமைதான் நினைவுக்கு வருகிறது. அன்றாடச் சங்கதிகளின் சித்திரங்களில் எக்காலத்தக்குமான ஒரு பெருமூச்சையும் கையறு நிலையையும் ஒருகணமெனும் காட்டிமறையும் வலிமை பொதிந்திருக்கும்போது அந்தச் சித்திரங்கள் மிகநல்ல அனுபவங்களைக் கொடுப்பவையாக அமைந்துவிடும். சங்கக் கவிதைகளிலிருந்து அருண் கொலேட்கரின் ஜஜூரி கவிதைகள் வரை இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ‘ என்று தொடங்கும் புறநானுாற்றுக் கவிதையில் முன்வைக்கப்படும் சித்திரம் மிகத் தெளிவானது. நிலா உருக்குலைந்து உருப்பெறும் கால அளவுக்குள் ஒரு யுத்தம் நடந்துமுடிகிறது. நாட்டின் அதிகாரம் கைமாறி விடுகிறது. ஒரு குடும்பம் குலைந்துவிடுகிறது. பல உயிர்கள் உலகத்தைவிட்டே பிரிந்துவிடுகின்றன. நிலா தன் உருவை மெல்லமெல்ல இழக்கிறது. ஆனால் மீண்டும் மெல்லமெல்ல கூடிச் சீரடைந்துவிடுகிறது. ஆனால் மானுடர்களுக்கு அந்த மீட்சி வாய்ப்பதில்லை. இயற்கையின் முன் மீண்டும் மானுடம் பணிந்துதான் நிற்கவேண்டி உள்ளது. இழப்புகளைப் பட்டியலிட்டுப் புலம்பும் வரிகளுக்கிடையே நிலவின் படிமம் வாழ்வின்முன் பேரிழப்புகள் சகஜம் என்கிற குரல் மெளனமாக ஒலித்தபடியே இருக்கும் அழகு எண்ணிஎண்ணி வியக்கத்தக்கது. ‘ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே ‘ என்பது புறநானுாற்றில் காணப்படும் மற்றொரு சித்திர வரி. மனைவி, மக்களின் பட்டினிக் கோலத்தைப் பார்க்க சகிக்காமல் நகரத்தைநோக்கி நடக்கிறான் ஒருவன். வழியில் களர்நிலத்தில் கால்சிக்கித் தவிக்கிற மானொன்றை வேடனொருவன் தாக்கி வீழ்த்தும் காட்சியைக் காண்கிறான். எங்கோ போய் பசியையும் வறுமையையும் அனுபவித்து அந்த வேட்டைக்கு ஆளாவதைவிட வீட்டிலேயே மனைவி மக்களோடு பட்டினிக்கு ஆளானாலும் பரவாயில்லை என்று திரும்பிவிடுகிறான். காட்டைவிட்டு களர்நிலத்தைநோக்கி ஓடிவந்த மானோடு வாழ்வை இணைத்துப் பார்க்கிற வாய்ப்பையும் கவிதை உருவாக்கி விடுகிறது. இத்தகு தன்னெழுச்சியாக வாய்ப்புகள் உருவாகாத நிலையில் எவ்வளவு பெரிய கவிதைகளானாலும் எளிய சித்திர முயற்சிகளாக மட்டுமே சுருங்கிவிடும். சித்திரங்களை உய்த்துணர்ந்து வெளிப்படுத்தும் தமிழ்மணவாளனின் ஆர்வம் பாராட்டுக்குரியதே. என்றாலும் அவை மேலெழுந்து உச்சம்கொண்டு வாழ்வின் ஆட்சியை உணர்த்தாமல் எளிய சித்திரங்களாகமட்டுமே சுருங்கிவிட்டதுதான் முக்கிய பலவீனம்.

ஒன்றிரண்டு முயற்சிகள் அப்பலவீனத்திலிருந்து தப்பி இருக்கின்றன. அவையே இத்தொகுப்பை நியாயப்படுத்தும் முயற்சிகள். இன்னும் கவியனுபவம் கூடிய மொழியுடன் இவ்வரிகள் தீட்டப்பட்டிருக்குமெனில் மேலும் பொலிவு பெருகியிருக்கக்கூடும்.

‘இசைநாற்காலி ‘ கவிதையில் வட்டமாக போட்டிருக்கும் நாற்காலிகளைச் சுற்றி பங்கேற்பாளர்கள் உற்சாகத்துடன் ஓடிவரும் காட்சி இடம்பெறுகிறது. பின்னணியில் இசை ஒலிக்கிறது. நிற்கிறது. ஒவ்வொருமுறையும் யாராவது ஒருவர் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். மீண்டும் இசை ஒலக்கிறது. நிற்கிறது. ஆட்கள் ஒவ்வொருவராக வெளியேற வெளியேற ஆட்டத்தில் வேகமும் விறுவிறுப்பும் பெருகிக்கொண்டே போகிறது. தொடங்கும்போதுதான் அது மகிழ்ச்சிக்குரிய விளையாட்டு. அப்போது சிரிப்பும் ஆனந்தமும் கூடி ஆடும் களிப்புமே பிரதானமாக உள்ளன. ஆட்கள் வெளியேற வெளியேற அது ஆட்டத்தன்மையை இழந்து போட்டித்தன்மை கொண்டதாகிறது. பிறகு வெறியும் அகம்பாவமும் கொண்டதாகிறது. புறங்கைகொண்டு அருகில் நிற்பவர்களைத் தள்ளி விதிமீறி நடக்கவும் கூட துாண்டுகிறது. யாருக்கும் அதில் வெட்கமில்லை. வெற்றி. அது ஒன்றே இலக்கு. அதை அடையும்வரை மனத்தில் பொங்கும் வெறி ஓய்வதில்லை. நாற்காலி ஒன்றாகவும் சுற்றி ஓடுபவர்கள் இருவராகவும் இருக்கும் நிலையில் இந்த வெறி உச்சத்துக்கே சென்றுவிடுகிறது. மானுட மனத்தில் மகிழ்ச்சியின் அடியில் உறங்கும் வெறியையும் அன்புக்கு மறுபுறம் ஒளிந்திருக்கும் ஆவேசத்தையும் சிரிப்புக்குப்பின்னால் திரையிட்டிருக்கும் கள்ளத்தனத்தையும் அடையாளம் காட்டி மறைகிறது அக்காட்சி. ஓர் ஆட்டத்தின் குறிப்பாகத் தொடங்கும் கவிதைவரி மெல்லமெல்ல உயர்ந்து வெற்றி தோல்விக்கிடையே வெறியுடன் அலையும் வாழ்க்கையின் தளத்துக்கு சட்டென மாறி இயங்கும் தன்மையை அடைந்துவிடுகிறது. இதற்கு முன்னோடியான ஒரு சித்திரம் புறநானுாற்றில் இடம் பெற்றிருக்கிறது. சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும் புலவர் தாமப்பல் கண்ணனாரும் சொக்கட்டான் ஆடுவதோடு தொடங்குகிறது அக்கவிதை. முதலில் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கிறது. காய்களை வெட்டிவெட்டி முன்னேறும்போது இருவருமே வெறிகொண்டவர்களாக மாறுகிறார்கள். தொடர்ந்து ேதுாற்றபடி இருக்கும் புலவர் தன்னை மீட்டுக்கொள்ளும் முயற்சியாக ஒரு கட்டத்தில் ஆட்டத்தில் அரசருக்கு முக்கியமான காயொன்றைத் திருடிவிடுகிறார். அதைக்கண்டு மாவளத்தான் கடுங்கோபத்துடன் ஆட்டக்காயாலேயே புலவரின் நெற்றியில் ஓங்கி அடிக்கிறான். அடிபட்டு ரத்தம் பொங்கிவழிகிறது. வலிதாளாத புலவர் துடித்தபடி எந்தக் குலத்தில் பிறந்தவன் நீ என்று சீறுகிறார். புலவர் அவைக்குத் தகாத வார்த்தையைப் பேசுவதும் அரசன் தன் பெருமைக்குப் பொருத்தமற்ற முறையில் கல்லெறிவதும் எதற்காக ? ஒரு வெற்றிக்காக. வெற்றியைத் துாண்டும் வெறிக்காக. இரண்டாயிரம் ஆண்டுகளாக மானுடன் இந்த வெற்றியின் வெறிக்கு தொடர்ந்து பலியாகிக்கொண்டே இருப்பது எவ்வளவு விசித்திரம். அப்போது சொக்கட்டான். இப்போது இசைநாற்காலி. களம் மாறியிருக்கிறது. ஆனால் வெறி குறையவில்லை. காலம்காலமாக குறையாத அவ்வெறியின் ஒரு பகுதியை அடையாளம் காட்டி நிற்கிறது தமிழ்மணவாளனின் கவிதை.

‘பரிச்சயம் ‘ குறிப்பிடத்தக்க இன்னொரு கவிதை. மனிதர்கள் தமக்கு அறிமுகமாகும் சந்தர்ப்பங்களை அடுக்குவதைப்போல தொடங்குகிறது கவிதை. முடிவில் எப்போதோ ஓர் அந்திப்பொழுதில் அன்னியோன்யமாக விசாரித்து ஓடாமல் நின்றுபோன வண்டிக்கு எரிபொருள் தந்துதவியவரைப்பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. உதவி செய்தவர்தான் அன்னியோன்யமாகப் பேசினாரே தவிர, இவருக்கு அவர் யார் என்றே தெரியவில்லை. முகம் மறந்துபோன நட்பா என்பதும் புரியவில்லை. ஆழ்ந்த அன்பு அறிமுகத்தை வேண்டுவதில்லை. அதன் கைகள் எப்போதும் உதவவும் தேவைப்படின் தன்னையே வழங்கவும் தயாராகவே இருக்கின்றன. உடுக்கை இழந்தவன் கைபோல நட்பின் கைகள் தாங்குவதற்கு எல்லாத் தருணங்களிலும் தாங்குவதற்கு மலர்ந்தபடியே இருக்கின்றன. விழும் ஒருவரை விழாதவண்ணம் ஏந்திக்கொள்ளும் அன்பும் இக்கட்டுகளிலிருந்து மீட்டுத் தாங்கிக்கொள்ளும் கனிவும் மானுட குலம் தோன்றிய காலத்திலிருந்தே இயங்கும் சக்திகள். அவை தொடர்ந்து இயங்கும் அடையாளமே அறிமுகற்ற ஒருவரின் எரிபொருள் உதவி.

நல்ல சித்திரங்களே என்றாலும் போதுமான கவித்துவ எழுச்சியின்றி சரிந்துபோன கவிதைகள் ‘அணில்பாட்டு ‘, ‘மையம் ‘, ‘எதிர்கொள்ளல் ‘, ‘கோடைக்காலப் பகற்பொழுதொன்று ‘. இதில் குறையாக உணர்வதற்கு ஒன்றுமில்லை. இத்தகு விடாத பயிற்சிகளின் விளைவாகவே நல்ல கவிதைகள் புனையப்படுகின்றன.

(அதற்குத் தக- தமிழ்மணவாளன். கோமளவல்லி பதிப்பகம், 18, பத்மாவதி நகர், மாதவரம் பால்பண்ணை, சென்னை- 600 051. விலை. ரூ50 )

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்