‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

கோவிந்த்


சில படங்கள் ஒரு குறிப்பிட்ட தள பரிமாணத்தில் தமிழ்சினிமாவை யதார்த்த சினிமா இலக்கணம் கொண்டு ஒரளவிற்குப் படைக்கப்படுகிறது. சமீபகாலத்தில் வந்த ‘அழகி ‘ அதற்கு ஒரு சான்று. அதே சமயம் அழகியின் பாதிப்பில் எடுக்கப்பட்ட ‘ஆட்டோகிராப் ‘, ‘விஷ்வ துளசி ‘ படங்களில் சினிமாத்தனம் மேலோங்கி இருந்தது.

அதிலிருந்து விலகி, ‘காதல் ‘ படம் ஒரு அருமையான தளத்தில் உள்ளது. பூதக்கண்ணாடி கொண்டு குறைகள் தேடும் நிலை இந்தப் படத்திற்கு தேவையில்லை. முதல் தோல்வியின் பிறகு ( சாமுராய் ) எடுத்த படமாக இருப்பினும் , அபரிதமான உழைப்பை பாலாஜி சக்திவேல் நம்பிக்கையுடன் போட்டுள்ளார். தோல்வியே வெற்றியின் முதல்படி என்பதற்கு பாலாஜி ஒரு சாட்சி.

சங்கரும் இந்தப் படத் தயாரிப்பின் மூலம், முலை முடுக்கெல்லாம் பாய்ஸ் சாபம் விட்டவர்கள் சந்தோஷமாகும் வண்ணம் ஒரு சரித்திரத்திற்கு தயாரிப்பாளராய் இருந்துள்ளார்.

சின்ன சின்ன விஷயங்கள் அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றவுடன் ஞாபகத்திற்கு வரும் அந்த பெருத்த சந்தன உருண்டை அருமை.

ஏப்ரல் 1 , மை தெளித்து விளையாடுதல், கூட்டமாய் பாடும் கோரஸில் மெளனமாய் இருப்பது, அப்பத்தா புலம்பல், கட்டப்பஞ்சாயத்தில் நடந்து கொள்ளும் முறைகள், ஜில் ஜில் ஜிகர்தண்டா, இப்படியாக…

மேலும், அந்த பெண்ணின் நடிப்பு, கூர்ந்து பார்த்து நமட்டு சிரிப்புச் சிரிப்பதாகட்டும், புதிதாய் பூத்த மல்லி போன்ற மென் தேக வார்ப்பு ஆகட்டும்… அப்பாவின் அந்த பயமுறுத்தும் உருவம்… ‘ஏங் கழுத இதுக்கா என்னய…. ‘ என்று பேசும் விதமாகட்டும்.. ஒத்தக் கை சித்தப்பா… அந்த வண்டி டிரைவர்….

அப்பப்பா சொல்லிக் கொண்டே போகலாம்….

சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை இந்தப் படம் அளவிற்கு எந்த தமிழ்படமும் நிரூபித்ததில்லை.

ஒரு சான்று: முருகனின் சைக்கிள் கடை ஒட்டியுள்ள மைல்கல் காட்டும் எண், முருகனும், ஐஸ்ஸும் தினமும் எவ்வளவு தூரம் நகருக்கு வெளியே சென்று சந்திக்கிறார்கள் என்பதை வசனமின்றி சொல்கிறது.

அதே மாதிரி, சடங்கு நிகழ்ச்சியில், ஐஸ்ஸின் முகபாவம் ரொம்ப ரொம்ப யதார்த்தம். முன்பு சொல்லுவார்கள், ஒரு புகைப்படம் ஒரு ஓவியம் மாதிரி இருக்கனும் என்று

அது போல், ஒரு சினிமா, ஒரு விடாயோ கவரேஜ் மாதிரி இருக்கனும் தற்போது, சடங்கு நிகழ்ச்சி ஏதோ ஒரு உண்மைச் சடங்கை வீடியோ எடுத்தது மாதிரி தான் இருந்ததே தவிர, சினிமா சூட்டிங் என்ற நினைப்பே வரவில்லை.

வசனங்கள் மிக மிக யாதார்த்தம்.

பெண்களை மதுரை வட்டாரத்தில் குறிப்பிடும் ‘ஜாரி ‘ என்ற வார்த்தையாகட்டும், வீடியோ கோச் பதிவாளர், ‘… என்ன பங்கு ஓட்டம் எப்படியிருக்கு… ‘ என்ற வசனமாகட்டும்…. ‘ அருமை பாலாஜி.

இவை எல்லாவற்றையும் விட, சூழ்நிலையை மிக அழகாக கதைக் களத்திற்குள் வைத்தது தமிழுக்கு புதிது. அந்த வீடியோ கோச்சில் பின் புற தொந்தரவு, ‘.. வண்டி 5நிமிஷம் நிற்கும் …காபி டா.. சாப்பிடறவங்க…. ‘ என்ற சத்தம்.. அந்த இரவு நிறுத்தத்தில் ஒலிபரப்பப்படும் அந்த பாட்டு…. மேலும், இரவில் பஸ்ஸில் ஏறி கஞ்சா சோதனை செய்யும் காவலர்கள், அதிகாலை குளிரில் ஜன்னலை மூடுவது,, மடியில் ஐஸ் படுத்து வருவது… நாத்தமெடுக்கும் அந்த தேவித் தியேட்டர் பாத்ரூம் ஏரியா…

ஒண்ணுக்கு ஓடை முட்டுச் சந்து.

எண்ணெய் வழிய, பேஸ்ட் நுரை தள்ள பேசும் அந்த பாத்ரூம் அருகாமைப் பேச்சு(லர்) … என நுணுக்கமாக சூழ்நிலையை அழகுற யதார்த்தப் படுத்தியுள்ளார்.

கடைசி காட்சியில், வயிற்றில் அடித்து கொள்ளுவது நமது ஈரக்குலையயே புரட்டிப் போட்டது.

வில்லன்களை அப்படியே சித்தரித்தது… கதாநாயகன் கைசொடக்கு போட்டு, ‘அது ‘ என்றும், ‘கட்டளை ‘ என்றும் உதார்விடாமல், நிஜவாழ்வு போல் சிங்கம் கையில் சிக்கிய மானாய் சின்னா பின்னமாகும் காட்சி….

‘மனுஷன்னல்ல நீ சிங்கமா, புலியா, மாடா…. ‘ -எனும் அன்றாட பேச்சு வசனமாய்….

பதிவுத்திருமணம் பற்றி தமிழ்ச் சினிமா பிதற்றிய காட்சிகளுக்கு ஆப்பு வைக்கும் அந்த பதிவாளர் வசனம்…

சடங்கில், மொய்யை போட்டோவிற்று போஸ் கொடுத்தவாறு தரும் போலீஸ்கள் காட்சி…

அடடா பாலாஜி.. அருமை….

அந்தக் குருட்டு அப்பத்தா…. எலேய் பாலாஜி நான் மதுரைக்கே போய்ட்டேன்ல….

காதல் காட்சி என்ற பெயரில் சமீபகாலமாக காமக் களியாட்டம் நடத்தும் பல தமிழ்ப்படங்கள் நடுவே, சிலிர்க்க வைக்கும் சின்ன சின்ன சம்பவங்கள் காட்சியமைப்புகளாய்…

இரண்டு தோழிகளும் இணைந்து பேசிவரும் காட்சியில், அந்த கூச்சத்தை கொண்டு அமைக்கப்பட்ட காட்சி படு யதார்த்தம்.

முருகன் காதல் வயப்பட்டு வேலை கெடுத்துக்கொள்ளுவது ரொம்ப அருமையாக காட்டப்படுகிறது.

முதல் காட்சியில் பைக்கிலிருந்து விழும் முருகனும், ஐஸ் பேசும் காட்சிகளில் காமிரா முறை, தமிழ் சினிமா டெக்னிகல் முறைகளை சமீபகால உலகசினிமா தரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ‘Rosetta ‘ படத்தின் காமிரா யுக்தி கண்டு ஏங்கிப் போயிருந்த நேரத்தில், அது போன்ற யுக்தி கண்டது ரொம்ப நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சிறு சிறு சினிமாத்தனங்களைத் தவிர்த்திருந்தால், நமக்கு ‘BEST FOREIGN FILM ‘ தொகுப்பில் சர்வசாதாரணமாக OSCAR வாங்கி வந்திருக்கும் இந்தக் காதல் திரைப்படம்.

டெக்னிகல் என்ற பெயரில், கதை சொல்லும் பாணியில் குழம்பிப் போயிருந்த தமிழ்சினிமாவிற்கு ஒரு வாராது வந்த சினிமா தான் ‘காதல் ‘

16வயதினிலே போன்று தமிழ்சினிமாவில் புதிய மறுமலர்ச்சிக்கு ஒரு விழுதே, ‘காதல் ‘

இப்படியோரு அற்புத திரைப்படம் தந்து பாலாஜி, நாளைய தமிழ்சினிமா செல்லும் இலக்கிற்கு ஒரு நம்பிக்கைத் தந்ததற்கு நன்றி.. நன்றி..

கட்டாயம் காசு கொடுத்துப் பாருங்கள்.

கோவிந்த்

gocha2004@yahoo.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்