மெய்மையின் மயக்கம்-22

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

அரட்டை

கதை-கவிதைகளைப் பற்றி அவ் வளவாக எனக்குத் தெரியாது. ‘அவ் வளவாக ‘ என்றால் ‘எவ் வளவாக ‘ ? என்னும் கேள்வி இங்கே எழுகிறது என்பது வேறு விசயம்!

அதாவது, கதை-கவிதைகளின் நுட்பங்களையும் தன்மைகளையும்—-உத்திகளையும் ஓட்டங்களையும்—-வகைப் படுத்திப் பார்த்துக் கொள்ளுகின்ற அளவுக்குப் புனைவு இலக்கியம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், கதை-கவிதைகளின் அடிப்படை என்ன ? என்பது எனக்குத் தெரியும்; அவை தருகின்ற போதையும் தெரியும்!

எடுத்துக் காட்டாக, எனது நண்பர் சொ. கண்ணனுக்குத் தெரிந்து இருந்த அளவுக்குப் புனைவு இலக்கியங்களைப் பற்றி எனக்குத் தெரியாது என்றுதான் நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், புனைவு இலக்கியம் பற்றி எனக்குத் தெரிந்தவர்களிடம் நான் பேசிப் பார்த்த பொழுதுதான் எனக்குத் தெரிந்தது—-எனது நண்பர் சொ. கண்ணனுக்கு மட்டும் அல்ல; கவிஞர் இன்குலாப், நண்பர் ஜெய மோகன், நண்பர் சிவகாமி, முதலியவர்களுக்கும் கூட அவ் வளவாக அது பற்றித் தெரியாது என்று!

‘இவ் வளவு கோயில்கள் நிறைந்த ஒரு நாடு உருப் படாது ‘ என்று ருஷ்யாவைப் பற்றி ருஷ்யாவிற்குள் நுழைந்து இருந்த அலெக்சாந்தர் கூறியதாகப் ‘போரும் அமைதியும் ‘ என்னும் தமது கதையில் தால்ஸ்தாய் கூறுகிறார். இது கூட தெரியாதவர்களும் இவர்களுள் உண்டு என்பதுதான் இதில் வேடிக்கை!

சரி, புறணி எதற்கு ? விசயத்திற்கு நாம் வருவோம். எல்லாக் கதைகளையும் எல்லோரும் படித்து விட முடியுமா, என்ன!

புனைவு இலக்கியங்களைப் பற்றியும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டு வருகின்ற சிற்றுடைமைச் சிந்தனைகள் பற்றியும் எனது நண்பர் சொ. கண்ணனிடம் அவ் வப்போது கேட்டு நான் தெரிந்து கொள்வேன். எனினும், பின்-புதின வாதம் பற்றிக் கொஞ்சமேனும் நான் புரிந்து கொள்வதற்கு எனக்கு உதவியாக இருந்தவர் நண்பர் ஜெய மோகன்தாம் ஆவார். அ. மார்க்சை விட அதிகமாக அதருக்கத்தைப் புரிந்து வைத்து இருப்பவரும் அவர்தாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

இப்படித்தான் ஒரு நாள் தொலை பேசியில் என்னுடன் கண்ணன் தொடர்பு கொண்ட பொழுது அவரிடம் நான் கேட்டேன்—- ‘சொல்லாடல் ‘ என்றால் என்ன ? என்று!

‘என்ன பிரகாசம், இது கூடவா தெரிய வில்லை ? ‘

‘தெரியாமல்தானே கேட்கிறேன். ‘

‘சரி, உறுதியாகச் சொல்லாமல் கருத்துக் கூறுவதுதான் சொல்லாடல்! ‘

‘ஓகோ, சொல்லாமல் சொல்வதா ? ‘

‘என்ன, கிண்டலா ? ‘

‘கிண்டல் இல்லை, கண்ணன்! எதையும் வரையறுக்காமல் ஒன்றைப் பற்றிக் கருத்துக் கூறுவது என்று அதை நான் எடுத்துக் கொள்ளலாமா ? ‘

‘ம்… எடுத்துக் கொள்ளலாம்! ‘

‘அதற்குத்தான் தமிழில் ஏற்கனவே ஒரு வார்த்தை இருக்கிறதே…! ‘

‘என்ன வார்த்தை ? ‘

‘அரட்டை! ‘

ஐயோ, பிரகாசம்! உங்களிடம் எல்லாம் பேச முடியாது. கிண்டல் பேசுகிற விசயம் அல்ல இது. அது ஒரு நுட்பமான பதம். பின்-புதின வாதத்தின் ஒரு கொள்கை! ‘

‘சரி கண்ணன், ‘நுட்பமான அரட்டை ‘ என்று வைத்துக் கொள்ளலாமா ? ‘

‘இது விளையாடுகின்ற விசயம் அல்ல! வரையறைகளில் தவறுகள் நேர்ந்து விடலாம் என்கின்ற முன் எச்சரிக்கை! ‘

‘அது சரிதான்! உங்கள் பையில் எவ் வளவு வைத்து இருக்கிறீர்கள் ? ‘

‘உடனே பணத்திற்கு வந்து விடுவீர்களே! தெரியும் எனக்கு! ‘

‘என்ன தெரியும் ? பணமே தேவை இல்லை என்கிறீர்களா ? காசு கொடுத்தால் பொருள் கிடைக்கிறது; இதற்கு மேல் தெரிந்து கொள்வதற்குப் பணத்தில் என்ன இருக்கிறது ? என்று கேட்ட ஆள்தானே நீங்கள்! ‘

‘எப் போது நடந்ததை இப் போது சொல்கிறீர்கள், பிரகாசம் ? ‘

‘விடுங்கள் கண்ணன்! பையில் எவ் வளவு இருக்கிறது ? ‘

‘என்ன, ஒரு பத்து ரூபாய் இருக்கும்! ‘

‘பத்து ரூபாய் என்றால் பணம்தானே! பத்து என்பதையாவது வரையறுக்க முடியுமா ? ‘

கண்ணன் கொஞ்சம் சிந்திக்கத் தொடங்கினார்;

‘சரி, நேரில் வரும் போது இது பற்றிப் பேசிக் கொள்ளலாம்! ‘

என்று கூறித் தொலை பேசியைத் துண்டித்தார்.

அதன் பின்னர் ஒரு நாள் நான்கு-ஐந்து மணி நேரம் இது பற்றி அவரிடம் கேட்டு நான் தெரிந்து கொண்டேன்.

கண்ணனுடன் வாதம் புரிவது மிகவும் எளிது! ஒரு கருத்தமைவின் தொடக்க முனையினை நாம் தொட்டு விட்டால் போதும், அதன் இறுதி முனையில் இருந்து தமது வாதத்தினை அவர் தொடங்கி விடுவார்; மனத்தின் விடுதலை: அணிந்துரையில் தருக்கம்-அதருக்கம் பற்றிப் புதிதாக அவர் சேர்த்து இருக்கின்ற பகுதிகள், அதன் பின்னர் அவர் எழுதியவைதாம் ஆகும்.

இப்படித்தான், ஒரு புதிய வகைப் பாட்டினை—-சிந்தனை முறைமையினை—-நமக்கு ஜெய மோகன் அறிமுகப் படுத்தி வைக்கிறார். அதற்கு அவர் சூட்டி இருக்கின்ற பெயர்தான் ‘மொழிபு ‘ என்பது!

மொழிபு! நன்றாகத்தான் இருக்கிறது சொல்; ஆனால், அதன் பொருளில்தான் சிக்கல்!

மொழிபு

முதலில், ஜெய மோகனைப் புரிந்து கொள்வதற்கு நாம் முயல்வோம்.

அதருக்கமான வாதங்களை அதருக்கமாகத்தான் நாமும் புரிந்து கொள்ள வேண்டும் போல் இங்கே நமக்குத் தோன்றுகிறது என்ற போதிலும், அதருக்கம் என்ன வென்றால், ஆழ் மனத்திற்குள் போய்த் தஞ்சம் புகுந்து கொண்டு கிடக்கிறதாம்! எனினும், அதன் ஆழம் எவ் வளவு ? அதற்குள் நுழைவது எப்படி ? அதற்குள் நுழைந்து விடுவதால் நமக்கு ஏற்படுகின்ற பயன்கள் என்ன ? என்பதுதான் இங்கே மையமான கேள்வி!

எப்படியும், ஜெய மோகனின் கருத்துகளைப் பின் வருமாறு நாம் தொகுத்துக் கொள்வது நல்லது.

(1) ‘புனைவு ‘இலக்கியம் என்பது ஒரு வகை அறிதல் முறை ‘, தனித் தன்மை வாய்ந்த அறிதல் முறை!

(2) கதைகளில் ‘பாதிக்கும் மேல் ‘ ஆனவை, ‘குடும்ப அமைப்பில் பெண்களின் இடம் மாறுவதைப் பற்றிப் பேசுகின்றன…. தமிழ்ச் சமூகத்தின் மனதில் நிகழும் சிந்தனைகள், சுய விசாரணைகள் அவை. இப்படித்தான் சமூகத்தின் சிந்தனைகள் உருவாகுகின்றன; சமூக நெறிகள் உருவாகுகின்றன; சமூகம் இயங்குகிறது. ‘

(3) புனைவு ‘இலக்கியம் என்பது கருத்து அல்ல; அது மொழியின் வழியாகக் கற்பனையைச் செயல் படுத்தி வாழ்க்கையை ஆராயும் முறை ‘. ‘கருத்து மட்டுமாக ‘ அதனை நாம் கருதி விட முடியாது.

(4) ‘சிக்கலான விவாதங்களுக்குள் ‘ நாம் ‘சென்று ‘ விடுவதைத் தவிர்க்கின்ற வகையில் ‘எளிதாகவும் சுருக்கமாகவும் ‘ சொல்வது என்றால், ‘கற்பனை செய்து சொல்லிப் பார்த்து அறியும் முறை ‘தான் புனைவு ‘இலக்கியம் ‘!

(5) ‘தகவல்களைத் தொகுத்தும் பகுத்தும் ஏதேனும் ஒரு ஒழுங்கில் ‘ வைத்துப் பார்ப்பது ‘தருக்கம் ‘ ஆகும்.

(6) ‘அதே தகவல்களை ஓர் உண்மை நிலை போலவே கற்பனை செய்தும் பார்க்கலாம். முற்றிலும் மாறுபட்ட அறிதல் முறை ‘ இது! இதுதான் புனைவு ‘இலக்கியத்தின் வழி முறை ‘! இதற்குப் பெயர்தான் ‘மொழிபு ‘.

(7) எடுத்துக் காட்டாக, தகவல்கள் மூலம் ‘நிகழ்த்தப் பட்ட கற்பனைதான் வரலாறு ‘! எனவே, ‘வரலாறு என்பது ஒரு மொழிபு மட்டுமே! ‘

(8) மொழிபு என்பது கற்பனைதான் என்றாலும், ‘வரலாற்றை, வாழ்க்கையை, சிந்தனைகளை, ஆராயக் கூடிய—-உள் வாங்கக் கூடிய—-முக்கியமான வழி முறை அது எனலாம் ‘. ‘அதையே ‘ புனைவு ‘இலக்கியத்தின் வழி முறை என்று சொல்கிறோம். ‘

(9) மொழிபு இல்லாமல் உலக ஞானம் இல்லை. இந்த அறிதல் முறைகளின் ‘அடியோட்டமாக ‘ இருப்பது ‘உள்ளுணர்வு ‘தான்.

(10) ‘நாம் ச்சாம்ஸ்கி ‘ கூறுவது போல, ‘மூளைத் திசுக்களின் முடிவற்ற இணைவு ‘களின் மூலம் ‘உருவாகக் கூடிய—-வகுத்து விடவே முடியாத—-அறிதல் முறை அது ‘.

(11) ‘உள் உணர்வை மனிதன் வளர்த்துக் கொள்ள முடியும்; பயில முடியும்;…. பல மடங்கு நுட்பமான அறிதல்களை அடைய முடியும். ‘ சொந்த வாழ்க்கையின் அனுபவங்களில் இருந்து ஜெய மோகன் தெரிந்து கொண்டு இருக்கின்ற உண்மை இது! ‘தன் உச்ச நிலையில் உள் உணர்வின் பாதையை ‘ப் புனைவு ‘இலக்கியம் கூட கண்டு அடைய முடியும். ‘ இதுவும் ஜெய மோகனின் சொந்த அனுபவம்!

(12) ‘முதிர்ச்சி அடைந்த மனிதனுக்குக் கலையே தேவை இல்லை என்று சொல்பவர்…. சாதாரண மனிதர் அல்லர்; ஜீவன் முக்தர்; மனித வாழ்வு என்னும் பெரும் நாடகத்தை வெளியே நின்று பார்க்கும் பரம ஹம்சர்! ‘

ஜெய மோகனின் கருத்துகள் இவை! இவற்றைப் பகுத்தும் தொகுத்தும் பார்த்து அறிவது எப்படி ? என்பதுதான் நமது சிக்கல்.

ஜெய மோகனின் தீவிரமான தேடல்

மொழிபு என்னும் தமது புதிய அறிவு இயக்கக் கொள்கையினை—அணுகு முறையினை—-இங்கே நமக்கு ஜெய மோகன் அறிமுகப் படுத்துகிறார் எனலாம்; தொகுத்துக் கூறல், வகுத்து மெய் நிறுத்தல், முதலிய தொல்காப்பிய வகைப்பாடுகள்

—-ஜாக்ரத், ஸ்வப்னம், முதலிய வட திரவிட மரபுகள்—-ப்ளேட்டோ, அரிஸ்ட்டாட்டில், முதலான ஈரோப்பிய மரபுகள்—-ஆகிய வற்றைப் பற்றியும் அவர் பேசுகிறார்.

இதனைப் படித்த உடன் நாம் என்ன நினைப்போம் ? உலகின் அனைத்துச் சிந்தனை மரபுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு—-அவற்றைப் பகுத்தும் தொகுத்தும் பார்த்ததன் பின்னர்தான்—-மொழிபு என்னும் தமது புதிய சிந்தனை மரபினை நிலைநிறுத்திக் காட்டுவதற்கு ஜெய மோகன் முற்பட்டுக் கொண்டு வருகிறார் என்றுதானே!

ஆனால், இப்படி நாம் நினைப்போம் என்றால், நமது குறைபாடாகத்தான் அது இருந்திட முடியுமே ஒழிய, ஜெய மோகனது சிந்தனையின் குறைபாடாக இருந்திட முடியாது.

ஏனென்றால், இவற்றுள் எவற்றின் உள்ளூம் தீவிரமாக நுழைந்து பார்த்திட வேண்டிய அவசியம் எதுவும் இல்லாமல், அதே நேரத்தில், மிகவும் வாகுவாக அனைத்தையும் தாண்டிக் குதித்து வந்து, அதுவும், சிற்றுடைமைச் சிந்தனைக் கயிற்றினை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தாவிக் குதித்து வந்து, வேறு எதன் மூலமாகவும் இல்லாமல் அனைவருக்கும் தெரிந்து இருக்கின்ற மொழியின் மூலமாக, நமக்கு ஜெய மோகன் அறிமுகப் படுத்தி இருக்கின்ற ஓர் அணுகுமுறைதான் மொழிபு என்பது ஆகும்.

எங்கே இருந்து இறக்குமதி செய்து கொண்டு வந்து, தமிழ்ச் சந்தையில் இதனை விற்பனை செய்வதற்கு அவர் முயன்று கொண்டு வருகிறார் என்பதோ நமக்குத் தேவை இல்லாத விசயம்!

தாம் எடுத்துக் கொண்டு இருந்த அனைத்துச் சிந்தனைகளிலும் ஒன்றைக் கூட விட்டு விடாமல், அனைத்தையும் ஆய்ந்து பார்த்துக் கொண்டு வந்து இருந்தவர் கார்ல் மார்க்ஸ்!

மொழி ஆய்வுக்குள் நுழைந்து விட்டதன் பின்னர், அனைத்து மொழி ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆக வேண்டும் என்னும் ஆர்வத்தில் தமது மொழி ஆய்வினை மேற்கொண்டு இருந்தவர் மாக்ஸ் முல்லர்! தமிழ் மொழியைத் தமது கணக்கில் அவர் எடுத்துக் கொள்ளாமல் இருந்ததனால்தான் அனைத்தையும் அவர் கோட்டை விட்டு விட நேர்ந்து இருந்தது என்பது வேறு விசயம்.

திரவிடர் இயலுக்குள் நுழைந்து விட்டதன் பின்னர், அது பற்றிய அனைத்துக் கருத்துகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற முனைப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்து இருந்தவர் பி. :டி. சீனிவாசனார்! திரவிடர்தம் இலக்கியங்களாகக் கூட வேத இலக்கியங்கள் தோன்றி இருந்து இருப்பதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று நாம் எண்ணுகின்ற அளவுக்கு அவற்றின் பரப்பினை ஆய்ந்து பார்த்து இருந்தவர் அவர்!

ஆனால் ஜெய மோகனோ, ‘மொழிபு ‘ என்னும் ஒரே வார்த்தையில், அதுவும், அந்தக் கருத்தமைவிற்கு அவர் தருகின்ற வெறும் குழப்பங்களின் மூலமாக மட்டும், அனைத்துச் சிந்தனைகளையும் அடித்து வீழ்த்துவதற்கு முற்பட்டு விடுகிறார்.

எதையும் தெரிந்து கொள்ளாமல் அனைத்தையும் வீழ்த்தி விட முடியுமா ? என்றால், முடியும்; ஜெய மோகனால் முடியும்; வெறும் தீவிரம் மட்டும் இருந்தால் போதும்! வெட்டு ஒன்று என்றால், துண்டு இரண்டுதானே!

எதை வெட்டினார் ஜெய மோகன் ? எதையாவது அவர் வெட்டி இருந்தால் அதன் துண்டுகள் எங்கே ? என்று எல்லாம் அவரிடம் யாரும் கேள்வி கேட்டு விட முடியாது! ஏனென்றால், அவர் ஒரு படைப்பாளி! வெறும் கற்பனை மட்டும் இருந்தால் போதும், பழையது எதையும் அழித்து விடலாம்; புதியது எதையும் ஆக்கியும் விடலாம்; என்று கருதுபவர் அவர்!

ஆனால், வாழ்க்கை என்பது கற்பனை அல்ல; வயிறு-சோறு, காதல்-காமம், அன்பு-அரவணைப்பு, உறவு-சிக்கல், கதைகள்-கவிதைகள், அவை தருகின்ற போதை-ஆறுதல், என எவையும் கற்பனை அல்ல! ஏன், கற்பனை என்பது கூட வெறும் கற்பனை அல்ல; ஏதோ ஒன்றினைப் பற்றிய கற்பனை!

ஜெய மோகனது அதருக்கத்தின் தருக்கங்களைச் சற்று நாம் பார்ப்போம்.

ஜெய மோகன் கூறுவது என்ன ?

(1) புனைவு இலக்கியம் என்பது ஒரு வகையான அறிதல் முறை என்று கூறுகிறார் ஜெய மோகன். ஆனால், அதுவோ ஒரு போதைப் பொருள்; முன்னர் அறிந்திடாத எதையும் புனைவு இலக்கியங்களின் மூலம் யாரும் சுவனித்திடவும் முடியாது.

ஏனென்றால், வாழ்க்கையில் நேரடியாக நாம் அனுபவித்துப் பார்த்து இருக்கின்ற உணர்ச்சி-உணர்மம் போன்றன வற்றினைத்தான் புனைவு இலக்கியங்களின் மூலமாக நாம் நினைத்துப் பார்த்திட முடியும். இந்த வகையில், ஜெய மோகன் கூறுவது போல, ‘ஆழ் மனத்துடன் ‘ நாம் நடத்திப் பார்க்கின்ற ஓர் ‘உரையாடல் ‘தான் அது!

(2) சமுதாய வாழ்க்கையில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்ற மாற்றங்களைப் பற்றி, குறிப்பாக, பெண்களின் சமுதாய நிலையில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்ற மாற்றங்களைப் பற்றி, பல கதைகள் பேசுகின்றன என்று ஜெய மோகன் கூறுகிறார்; இந்தக் கதைகளின் மொழிபு மூலமாகத்தான் சமுதாயத்தில் புதிய சிந்தனைகளும் நெறிகளும் உருவாகுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், கதைகள் பேசுகின்ற காரணத்தினால் வாழ்க்கையில் அல்ல, மாறாக, வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்கின்ற காரணத்தினால்தான் கதைகளில், அவை பேசப் படுகின்றன என்பதுதான் உண்மை—-கடவுள் படைத்ததனால் மனிதர்கள் அல்லர், மாறாக, மனிதன் படைத்ததனால் கடவுள் வாழ்கிறார் என்பது போல!

(3) கருத்தின் மூலமாக அல்லாமல், கற்பனையின் மூலமாக வாழ்க்கையை ஆராய்கின்ற ஓர் அறிதல் முறைதான் புனைவு இலக்கியம் என்று ஜெய மோகன் கூறுகிறார்.

அதே நேரத்தில், கருத்துகளால் ஆனதுதான் கற்பனை என்பதையும், எனவே, வாழ்க்கையைப் பற்றிய கருத்துகள் இல்லாமல் வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளுக்கு இடமே இல்லை என்பதையும் அவர் மறந்து விடுகிறார்.

(4) கற்பனை செய்து, சொல்லிப் பார்த்து வாழ்க்கையை அறியும் முறைதான் புனைவு இலக்கியம் என்று ஜெய மோகன் கூறுகிறார்.

இங்கே, நினைத்துப் பார்த்தல், அல்லது சிந்திப்பு என்றுதான் கற்பனை என்பது பொருள் படுகிறது; சொல்லிப் பார்த்தல் என்பதும் நினைத்துப் பார்த்தல் என்றுதான் பொருள் படுகிறது! இந்த நிகழ்ப்பாட்டிற்கு வழி வகுக்கின்ற காரணத்தினால்தான் புனைவு இலக்கியங்களால் நமக்குப் போதை ஊட்டிடவும் முடிகிறது.

எனவே, போதைப் பயன் என்பதைத் தவிர வேறு முக்கியம் எதுவும் புனைவு இலக்கியத்தில் இல்லை என்பது முடிபு.

(5) தகவல்களை ஓர் ஒழுங்கில் வைத்துப் பார்ப்பதுதான் தருக்கம் என்று ஜெய மோகன் கூறுகிறார். தகவல்களாக நாம் அறிந்து கொள்ளுகின்ற மெய்மையின் நிகழ்வுகளை—-ஒழுங்கினை—-கரணிய முறையான இயக்கத்தினை—-நாம் அறிந்து கொள்ளுகின்ற சிந்தனை முறைதான் தருக்கமே அன்றி, மெய்மை நிகழ்ப்பாட்டினுள் கற்பனையாக நாம் நுழைத்து விடுகின்ற தகவல்களின் ஒழுங்கு அல்ல!

தலை-கீழாகத் தாம் நின்று கொண்டு இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு வாழ்க்கையை நோக்குகின்ற ஜெய மோகனின் நேர்ப் பார்வைதான் இதற்குக் காரணம்!

(6) அதே நேரத்தில், மெய்மைகளின் விளைவுகள்தாம் தகவல்கள் என்பதால், கற்பனை செய்து பார்ப்பதற்கு இதில் எதுவும் இல்லை; கற்பனையில் நிகழ்த்திப் பார்க்கின்ற ஓர் ஒழுங்கமைவாக, மெய்மையின் ஒழுங்கமைவினை ஜெய மோகன் கருதிக் கொண்டால் அதற்குப் பொறுப்பு ஆவதும் மெய்மை இல்லை!

இனி, கருத்துகளால் ஆனவைதாம் கற்பனைகளும் கனவுகளும் என்பதால், கருத்துகளுக்கும் அப்பாற் பட்ட ஓர் அப்பாலை நிலையினைக் கற்பனைக்குக் கற்பித்து, மாய்மையான ஒரு பொருளாக அதனைக் காட்டுவதற்கு முயல்வதிலும் உண்மை எதுவும் இல்லை.

(7) தகவல்கள் மூலம் நிகழ்த்தப் படுகின்ற கற்பனைதான் வரலாறு என்று கூறுகிறார் ஜெய மோகன். அதுதான் மொழிபு என்றும் அவர் வரையறுக்கிறார்.

அப்படி என்றால், தகவல்கள் இல்லாமல் கற்பனை இல்லை என்று பொருள் ஆகிறது; எனவே, தகவல்களை ஓர் ஒழுங்கில் வைத்து மொழிவதுதான் வரலாறு என்றும் பொருள் ஆகிறது.

ஆக, இதில் புதிய மொழிபு எதுவும் இல்லை; நேரில் கண்ட ஒரு சாட்சியைப் போல பழங் காலத்து வரலாறு எதையும் யாரும் எழுதிட முடிவதும் இல்லை!

(8) வரலாற்றை, வாழ்க்கையை, சிந்தனைகளை, ஆராய்ந்து நாம் புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு கற்பனைதான் மொழிபு என்று ஜெய மோகன் கூறுகிறார்.

இங்கே, அறிதல் என்றும் உணர்மைப் படுத்திக் கொள்ளுதல் என்றும் கற்பனை என்பது பொருள் படுகிறது. புனைவு இலக்கியத்தின் வழி முறை இதுதான் என்றால், அப் பொழுதும், ஓர் ஒழுங்கில் வைத்து வாழ்க்கையை அறிந்து கொள்ளுதல் என்றுதான் கற்பனை என்பது பொருள் படுகிறது.

ஆனால், அறிதல் என்பது அல்ல, மாறாக, நினைத்துப் பார்த்தல் என்பதுதான், அல்லது சிந்திப்பு என்பதுதான் புனைவு இலக்கியத்தின் பயன் ஆகும். வெற்றியைப் பற்றிய நேரடியான சிந்திப்புதான் மகிழ்ச்சி என்றும் தோல்வியைப் பற்றிய நேரடியான சிந்திப்புதான் துயரம் என்றும் வரலாற்றின் முரண் இயக்கத்தில் கூறப் பட்டு இருப்பதற்கு இதுதான் காரணம்.

இனி, இவற்றின் நேரலடியான (இண்டாரக்ட்) சிந்திப்புகளை நம்முள் கிளறச் செய்து, போதையான ஓர் ஆறுதலினை நமக்குள் நிகழ்ந்திடச் செய்வதுதான் புனைவு இலக்கியம் என்பதும் ஆகும்!

(9) உலக ஞானத்திற்கு அடிப்படையே உள் உணர்வுதான் என்று ஜெய மோகன் கூறுகிறார்.

அறிவாக இருந்தாலும் சரி அல்லது ஆசையாக இருந்தாலும் சரி, இவை போன்றன வற்றைத் தீர்மானப்பாடு அற்ற (அன்-டிட்டர்மைன்ட்) ஒரு நிலையில் புரிந்து கொள்வதுதான் உள் உணர்வு என்பது ஆகும். உணர்வு நிலையிலோ ஊகங்களாக இவை மாறி விடுகின்றன. இவற்றின் தீர்மானப் பாடான ஒரு நிலைதான் கருத்து என்பதும் ஆகும். மனத்தின் விடுதலையில் இது விவாதிக்கப் பட்டு இருக்கிறது.

(10) திசுக்களால் ஆனதுதான் மூளை என்றும் முடிவு அற்ற இணைவுகளாக மூளை ஆக்கப் பட்டு இருப்பதற்கு இந்தத் திசுக்கள்தாம் காரணம் என்றும் நாம் ச்சாம்ஸ்கி கூறுகிறாராம்! இதனால்தான், யாரும் வகுத்து விட முடியாத ஓர் அறிதல் முறை உருவாகியும் இருக்கிறதாம்!

ஆனால், மூளையின் மூலமாகத்தான் எதையும் நாம் அறிந்து கொள்கிறோம் என்பது வேறு; வகுத்து விட முடியாத ஓர் அறிதல் முறை என்பது அதனினும் வேறு! எனினும், வகுத்து விட முடியாத அறிவினைச் சுமந்து கொண்டு வருகின்ற நாம் ச்சாம்ஸ்கிக்கு நமது வாழ்த்துகள்! மூளையின் மூலமாகத்தான் மனிதர்கள் சிந்திக்கிறார்கள் என்பதை அவர் கண்டு பிடித்து இருப்பதற்காகவும் அவருக்கு நமது வாழ்த்துகள்!

(11) உள் உணர்வை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டுமாம்; பயிலவும் வேண்டுமாம்—-ஜெய மோகன் கூறுகிறார். இது மட்டுமா ? புனைவு இலக்கியத்தின் மூலம் உள் உணர்வின் பாதையை நாம் கண்டு அடைந்திடவும் முடியுமாம்! இதுதான் ஜெய மோகனின் சொந்த அனுபவமும் ஆகுமாம்!

வேடிக்கைதான்! இவரைத் தவிர வேறு யாருக்கும் உள் உணர்வு என்பது இல்லை என்று எண்ணிக் கொண்டுதான் தமது போதை இலக்கியங்களை ஜெய மோகன் வடித்துக் கொண்டு வருகிறார், போலும்! உள் உணர்வு இல்லாதவர்கள் என்று யாரேனும் உலகில் இருந்தால், இனியேனும் அதனை அவர்கள் பெறுவார்களாக!

(12) கலையே தேவைப் படாத மனிதன் என்று உலகில் யாரும் இல்லை. ஆனால், அப்படிப் பட்ட ஒருவர்தாம் பரம ஹம்சர் என்று கூறி நமக்கு ஜெய மோகன் மாயம் காட்டுகிறார். ஆனால், கதைகளின் மூலமாகக் கருத்துகளை வெளிப் படுத்துவதில் வல்லவர் என்றுதான் அவரைப் பற்றி நாம் கேள்விப் பட்டு இருக்கிறோம்.

கடவுளில் அல்லாமல், ஜெய மோகனின் ‘முதிர்ச்சி அடைந்த மனிதனை ‘ வேறு எங்கேனும் நாம் காண முடியுமா ? என்பது நமக்குத் தெரிய வில்லை. ஆனால், கடவுளோ ஓர் அப்பாலைப் பொருள்!

கடவுள் மட்டும்தானா, தன்னை அப்பால் நிறுத்தி, தனக்கு வெளியே இருந்து வாழ்க்கை என்னும் நாடகத்தை நோக்கிடாத மனிதர் யாரும் உலகில் இல்லை என்பதுதான் உண்மையும் ஆகும்.

கடவுளில் மட்டும் இன்றி, கதைகளிலும் கூட ஓர் அப்பாலைப் பொருளாகத்தான் தன்னை மனிதன் நிறுத்திக் கொள்கிறான்—-பாமரன் முதல் படித்தவன் வரை! மனிதனின் அப்பாலைத் தன்மைதான் கடவுளின் அப்பாலைத் தன்மையும் ஆகும்.

இங்கே, நமது நினைவுக்கு ஆதி சங்கரர் வருகிறார்.

ஆதி சங்கரரும் கார்ல் மார்க்சும்

‘தனித் தனியான தன்மைகளில் இருந்து மேற்கொள்ளப் படுகின்ற ஒரு நுண்மைப்பாடுதான் பொதுத் தன்மை என்பதே ஒழிய, தனித் தனியான தன்மைகளைப் படைப்பது அல்ல. ஆனால் ஆதி சங்கரரோ, இந்தப் பொதுத் தன்மையுடன் தமது ஆய்வினை நிறுத்திக் கொண்டு, தனித் தன்மைகளை மாயைகள் என்று வரையறுத்து வைத்து விடுகிறார் ‘ என்றும்

‘புலன் அறிவு நிலையில் இருந்து காரண அறிவு நிலையினை எய்தி இருந்த ஆதி சங்கரர், காரண அறிவின் முழு வீச்சுடன் மீண்டும் புலன் அறிவினை வந்து அடைந்திட வில்லை என்பதுதான் அவரது சிந்தனையின் குறைபாடு என்று எனக்குத் தோன்றுகிறது ‘ என்றும்

ஆதி சங்கரரைப் பற்றி ‘ஜெய மோகனின் ஆறு தரிசனங்கள்: அணிந்துரையில் ‘ நான் எழுதி இருந்தேன். அரைக் கிணறு தாண்டியவர் என்று கூட அவரைப் பற்றி நான் குறிப்பிட்டுக் கொண்டும் வந்து இருந்தேன்.

எனினும், சரியாக அவரைப் புரிந்து கொள்வதற்கு நான் முற்பட்டு இருக்க வில்லை என்பதைத்தான் இவை எல்லாம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

ஏனென்றால், முழுக் கிணற்றையும் தாண்டுவதற்கு ஆதி சங்கரரால் முடியாதது அல்ல, அதனை அவர் விரும்பாமல் இருந்ததுதான் அதற்குக் காரணம் என்று இப் பொழுது எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், ஓர் அப்பாலைப் பொருளாக மனிதன் வாழ்ந்து கொண்டு வருகின்ற அவல நிலையில் இருந்து அவன் மீள்வது எப்படி ? என்பதுதான் அவரை உந்தித் தள்ளிக் கொண்டு வந்து இருந்த ஒரு கேள்வி ஆகும்.

ஏன், ஆதி சங்கரர் மிச்சம் வைத்து விட்டுச் சென்று இருந்த அரைக் கிணற்றையும் முழுமையாகத் தாண்டி வந்த இராமானுஜரால், ஓர் அப்பாலைப் பொருளாகத்தானே கடவுளைக் காட்டிட முடிந்தது! விண்ணில் கோட்டை கட்டிதானே விண்ணவனைக் குடியேற்றி வைத்திடவும் முடிந்து இருந்தது!

தனக்குத் தானே அயன்மைப் பட்டுப் போகாத ஒரு மனிதன்தான்—தனக்குத் தானே ஓர் அப்பாலைப் பொருளாக ஆகி விடாத ஒரு மனிதன்தான்—-அனைத்து மலங்களில் இருந்தும் விடு பட்டு, ஒரு பரம் பொருளாகத் திகழ்ந்திடக் கூடிய ஒரு மனிதன்தான்

—-ஆதி சங்கரரின் வேட்கை!

ஒரு வேள்வியாக இந்த மனிதனை உருவாக்குவதற்குத் தேவை வெறும் சிந்தனை மட்டும் அல்ல, மாறாக, செயற்பாடு—-மனிதர்களின் விடுதலைச் செயற்பாடு—-என்பதை அவர் உணர்ந்தும் இருந்தார் எனலாம்! இதனால்தான், வழி பாட்டுச் சடங்குகளை எல்லாம் தமது சிந்தனைக்குள் அவர் எடுத்துக் கொள்ளவும் இல்லை.

எனவே, விடுதலையான மனித உறவுகளில் தனது இயல்பினை மெய்மைப் படுத்திக் கொள்கின்ற ஒரு மனிதன்தான் ஆதி சங்கரரது சிந்தனையின் விளைவான மனிதன் என்றால் அது மிகை ஆகாது.

அப்படி என்றால், முழுக் கிணற்றையும் தாண்டிட வேண்டியவர் ஆதி சங்கரர் அல்லர்; செயற்பாட்டு முறையான மனிதர்கள்; என்பது முடிபு. முதலாண்மையின் அழிவின் ஊடாகப் பிறந்து வந்திடக் கூடிய ஒரு விடுதலையான மனிதனாகக் கார்ல் மார்க்ஸ் கணித்து இருக்கின்ற மனிதனும் இந்த மனிதன்தான் ஆவான்.

ஏனென்றால்,

‘தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் தம்மில் இருந்துதான் தமது நடவடிக்கைகளை எப் பொழுதும் தொடங்கி வந்து இருக்கிறார்கள்; தொடங்கவும் செய்கிறார்கள். இந்தத் தனி மனிதர்களின் உறவுகள் அனைத்தும் அவர்களது மெய்மையான வாழ்க்கை நிகழ்ப்பாட்டின் உறவுகள் ஆகின்றன.

எனினும், அவர்களுக்கும் அப்பால் பட்டது ஒரு நிலை நிற்பினை அவர்களின் உறவுகள் பெறுகின்றனவே, எப்படி ? அவர்களது சொந்த வாழ்க்கையின் சக்திகள், அவர்களுக்கும் மேற் பட்ட சக்திகளாக மாறுகின்றனவே, ஏன் ? ‘ (ஜெர்மன் கோட்பாடு, பக்.102.)

என்பவைதாம் கார்ல் மார்க்சினது தேடலின் தொடக்கக் கேள்விகள் ஆகும்.*

—-

* என்னுள் அடங்கிய ஒரு திறலாக, என்னையும் உள்ளடக்கிய ஒரு திறலாக, ஆனாலும் எனக்கு அப்பால் பட்டுப் போய் விட்ட ஒரு திறலாக, மேலும் என்னை ஆட்டிப் படைத்து அடிபணிய வைக்கின்ற ஒரு திறலாக, இந்தச் சமுதாயம்—-எனது சமுதாயம்—-மாறி நிற்பதற்குக் காரணம் என்ன ? (வாழ்க்கையின் கேள்விகள் (2002), பக்.75.)

—-

ஆக, ஜெய மோகன் கருதுவது போல கதைகளாலும் கற்பனைகளாலும் அல்ல, மாறாக, செயற்பாட்டின் மூலமாகத்தான் தன்னை மனிதன் முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்பது தெளிவு.

எந்தச் சாதியையும் எந்தச் சமயத்தையும் சாராதவர்தாம் ஆதி சங்கரர் என்பது எனது கருத்து.

சரி, மொழிபுக்கு நாம் வருவோம்.

மொழிபு என்பதுதான் என்ன ?

சிந்தனை என்பது வேறு; செயற்பாடு என்பது வேறு; என்பது எல்லோருக்கும் தெரியும். இது போல, சிந்தனை என்பதும் மொழிபு என்பதும் வெவ்வேறு ஆனவை என்பதும் நாம் அறிந்ததுதான்.

ஓர் எழுத்தாளனைப் பொறுத்த வரை, தனது சிந்தனைகளைச் சிதறாமல் அவன் வெளிப் படுத்தி இருக்கிறானா ? என்பதில்தான் அவனது மொழிபுத் திறமை அடங்கி இருக்கிறது எனலாம். ஓர் எடுத்துக் காட்டாக, முதல்: தொகுதி ஒன்று: அதிகாரம் ஒன்றில், தமது சிந்தனைகளைக் கார்ல் மார்க்ஸ் வெளிப் படுத்தி இருக்கின்ற மொழிபு, கொஞ்சம் இடறல் ஆனது என்பது எனது கருத்து.

ஆக, ஒரு கருத்தினை வெளிப் படுத்துகின்ற, எடுத்துக் காட்டாக, எழுதிக் காட்டுகின்ற ஒரு செயல்தான் மொழிபு என்பது ஆகும்.

இந்த வகையில் பார்க்கின்ற பொழுது, கதைகளுக்கு உரிய மொழிபு என்பது வேறு; கவிதைகளுக்கு உரிய மொழிபு என்பது வேறு; அனுபவ அறிவிற்கு உரிய மொழிபு என்பது வேறு; காரண அறிவிற்கு உரிய மொழிபு என்பது வேறு; என்று இதனை நாம் வகைப் படுத்திக் கொள்ளலாம், அவ் வளவுதான்!

மற்ற படி, ஓர் அறிதல் முறை என்று கொள்வதற்கு ஜெய மோகனின் மொழிபில் எதுவும் இல்லை என்பது உறுதி.

இனி, கதை-கவிதைகளின் போதைப் பயன் பற்றிய விவாதங்களுக்குள் நாம் நுழைவதற்கு முன்னர், சிவகாமியின் பழையன கழிதலும், ஜெய மோகனின் விஷ்ணு புரம், நிழலின் குரல், மற்றும் காடு, ஆகியவற்றிற்குள் சற்று நாம் நுழைந்து பார்த்து விடுவது நல்லது.

8-9-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்