ஒரு கூட்டமும் அதன் மீதான காட்டமும் :காலச்சுவடு x உயிர்மை

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

தமிழ்மணவாளன்


****

முன் கதை சுருக்கம்:

நவீன இலக்கியத்தின் முக்கிய பத்திரிக்கை காலச்சுவடு. அந்த பத்திக்கையில் ஒன்பது ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டு, விலகி உயிர்மை என்னும் பதிப்பகத்தையும், உயிர்மை என்னும் இலக்கிய மாத இதழையும் நடத்துபவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். உயிர்மை மற்றும் காலச்சுவடு இரண்டு இதழ்களையும் தொடர்ந்து வாசிப்பவன் – நவீன இலக்கிய சூழலை உன்னிப்பாக தொடர்ந்து கவனிப்பவன் என்னும் அந்தஸ்த்தோடு இந்த அத்தியாயத்தை எழுதுகிறேன்.

புது அத்தியாயம்

உயிர்மை என்னும் பத்திரிக்கையை ஆரம்பித்து ஒரு வருடம் ஆனதையொட்டி 12 வது இதழை வெளியிடவும், உயிர்மையை இணைய தளத்தில் வெளியிடவும் வேண்டி கடந்த 31-7-04 அன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு மனுஷ்யபுத்திரன் ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். பல இடர்பாடுகளோடு ஒரு இதழை நடத்தும்ஒரு படைப்பாளி ஒராண்டு நிறைவை சந்தோஷமாய் நடத்தவும், சக படைப்பாளிகளும் வாசகர்களும் அதே மனநிலையிலும் கலந்து கொண்ட நிகழ்ச்சியது. மனுஷ்யபுத்திரன் இது தவிர்த்து வேறு நோக்கங்கள் வைத்திருந்தாரா என எனக்குத் தெரியாது. ஆனால் அரங்கினில் நுழையும் போதே வழியில் அமர்ந்தவண்ணம் வரவேற்றதும், நான் அவரை வாழ்த்தி பூங்கொத்து ஒன்றினை வழங்கிய போது அவர் மகிழ்வோடு நன்றியுரைத்தபோதும் அதையே உணர முடிந்தது.

அந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு பதிவை தேவிபாரதி காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறார். தேவிபாரதியை எனக்கு அறிமுகமில்லை. இதன் மூலமே எனக்கு அறிமுகமாகிறார்.

‘பல்வேறு படைப்பாளிகளும் , சிந்தனாவாதிகளும், பல்துறை அறிஞர்களும் உற்சாகத்துடன் பங்கெடுத்துக்கொண்ட விழா இது ‘, எனத் தொடங்குகிறது பதிவு.இந்த அறிமுக வாசகம் சற்று விசாலமாகத்தானிருக்கிறது.ஆனால், தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டவர்கள் குறித்த நையாண்டிகளே, இந்த சொற்றொடரையும் ஓர் ஏளன தொடராய் திரும்பிப் பார்க்கவைக்கிறது. உயிர்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட கோபம். நிகழ்ச்சி குறித்து எத்தனை கடுமையான விமர்சனங்களையும் முன் வைக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்தப் பதிவு முழுக்க இருக்கும் ஏளன தொனி தான் அருவெறுப்பூட்டுகிறது.என்ன செய்வது ?அன்றுகலந்து கொண்ட சிந்தனாவாதிகளும், படைப்பாளிகளும் தான் காலச்சுவடு நடத்தும் கூட்டத்துக்கும் கலந்து கொள்கிறார்கள். துரதிர்ஷ்டம்.

‘மெளனங்களும் இடைவெளிகளும் ‘ என்னும் தலைப்பிலான அப்பதிவிற்கு, ‘காலச்சுவடின் பிணந்தின்னி அரசியல் ‘ என்னும் தலைப்பில் ம.பு எழுதிய பதில் கட்டுரை ஒன்றையும் வாசிக்கநேர்ந்தது. அவர் தரப்பு நியாயங்களை மிகுந்த கோபமாகவே எழுதியிருக்கிறார்.

முரண்பட்ட தளத்தில் இயங்கும் பலரை உயிர்மை கூட்டத்தில் ஒன்றாய் பார்த்ததில் அதிர்ந்து போயிருக்கும் தேவிபாரதிக்கு பதிலாக ம.பு ‘ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை ஒட்டிய விமர்சனங்கள் அப்பிரச்சனைக்கு வெளியே அர்த்தமற்றவை ‘ என்னும் பதில் கவனிக்கத்தக்கது. இலக்கியத்தில் மட்டுமல்ல அரசியல், சமூக. நட்பு – இன்னும் சொல்லப்போனால் கணவன் மனைவி உறவுக்குமது பொருந்தும். மானுடத்தின் மீதான நம்பிக்கை உள்ள யாரும் தனிமனித துவேஷம் கொள்ளும் சிலரைத்தவிர்த்து மற்றவர்களோடு கருத்தியல் மீதான முரண்களை அவைகளாகவே அடையாளங்கொண்டு பாவிக்க முயல்வார்கள். காலச்சுவடும் அத்தகைய நல்ல குணாதிசியங்களைக் கொண்டுதான் உள்ளது.

அதற்கான பல்வேறு உதாரணங்களையெல்லாம் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கிறார். அவர் காலச்சுவடில் பணியாற்றிய போது நடந்த பலசம்பவங்களை நினைவு கூர்கிறார். நமக்கென்ன தெரியும். ?

‘ஒரு சிறு பத்திரிக்கையை நடத்துவதிலுள்ள சிரமங்கள், செய்ய வேண்டிய தியாகங்கள், ஏற்கவேண்டிய தழும்புகள்,பற்றியெல்லாம் பவாவும், மனுஷ்யபுத்திரனும் கட்டியெழுப்பியிருந்த கோட்டையின் கற்களையெல்லாம் தனது பேச்சினூடாக ஒவ்வொன்றாக உருவிப் போட்டுக்கொண்டிருந்தார் ‘.

உண்மையில் இத்தகைய உணர்வுதான் தோன்றியது என்னும் பட்சத்தில் சக சிறுபத்திரிக்கையாளராய், ஐயத்தை, அக்கருத்தின் மீதல்லவா நிறுவ வேண்டும்.

ஆனால் அது தான் நிகழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறதாம்.

பயணச்சீட்டை தொலைத்துவிட்டு பரிசோதகரிடம் மாட்டிக்கொண்டவனைப் பார்த்து பயணச்சீட்டே வாங்காதவன் பல்லிளித்த கதையாய். என்ன உவமை பொருத்தமாக இல்லையோ ? எப்படியெல்லாம் மனிதனுக்கு மகிழ்ச்சி முகிழ்க்கும் என்பதற்காக சொல்கிறேன். தனக்கும் அது பொருந்தும் என்பதைக்கூட உணர முடியாத கணநேர சந்தோஷம்.

அசோகமித்திரன் பேசும்போது, சிறு பத்திரிகை நடத்த படைப்பாளியாய் இருக்க வேண்டியதில்லை; நல்ல நிர்வாகத்திறன் தான் தேவை எனக்குறிப்பிட்டது தேவிபாரதியை குதூகலம் அடையச்செய்கிறது. உயிர்மைக்கு எதிரான செங்கல் பிடுங்கல் இதில் என்ன இருக்கிறது. உயிர்மை பத்திரிக்கையின் மூலமாக மனுஷ்யபுத்திரன் தன் படைப்பை நிறுவ முயன்றதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு இதழாளராக அவரின் முயற்சியில் அவர் வெற்றியே அடைந்திருக்கிறார்.

‘பவாசெல்லதுரையின் அடை மொழிகள் சம்பந்தப்பட்டவர்களை நெருக்கடிக்குள்ளாக்கின ‘, என்னும் தேவிபாரதியின் கருத்தில் நானும் உடன்படுகிறேன். ‘தமிழின் இலக்கிய சூழலை புரட்டிப் போட்டவர்கள் ‘, என்னும் பொருள்பட அவர் பேசியது நவீன இலக்கியச்சூழலுக்கு சற்றும் பொருத்தமில்லாதது தான். அன்று இரவே நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது இந்தக் கருத்தைத் தெரிவித்தேன்.

மற்றபடி பவாசெல்லதுரை, ‘சதா ‘ என்கிற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்தியதை கேலி செய்வதை தவிர்க்கவேண்டும் எனப்புரிவதற்கு இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது போலும். அது முற்றிலும் தனி மனித வாடிக்கையால் நேர்வது. இது போல தன்னிச்சையாய் சில சொற்களை, சில உடல் மொழிகளை பலரும் பல இடங்களில் பயன்படுத்தக் காண்கிறோம். இத்தகைய குறைகள் சுட்டிக்காட்டப் படலாமேயன்றி ,ஏளனம் செய்யப்படக்கூடாதவை.

இத்தருணத்தில் எனக்கு, சண்முகம் தான் ஞாபகத்திற்கு வருகிறான்.

சண்முகம் யார் தெரியுமா ?

என்னோடு பட்டப்படிப்பு படித்தவன். எங்கள் பேராசிரியர் ஒருவர், ஒரு ஒரு வாக்கியம் முடிந்ததும் ‘ரைட் ‘ என்பார். ஒரு மணிநேர வகுப்பில் எத்தனை தடவை ‘ரைட் ‘ சொன்னார் என்று எண்ணி சொல்பவன் தான் சண்முகம். நல்ல எண்ணம்.

இ.பா, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களைப் பற்றி கிண்டலோகிண்டல். சுஜாதாவைப் பற்றி பெரிய கமெண்ட் ஒன்றும் இல்லை. சந்தோஷப்பட அதில் ஏதுமில்லை. புனிதம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன்.

ஜெயமோகன் காலச்சுவடு பற்றிக் கூறிய positive விஷயத்தைகூட ஞாபகமாய் தவிர்த்திருக்கிறார்; அவர்போக்குக்கு இடையூறெனக்கருதி. ஜெயமோகன், அலங்காரத்தோடு ஆற்றிய உரையை சலனமே இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்ததாம் கூட்டம்.

ஆமாம் ! சே. என்ன கூட்டம் ?

பின்கதை சுருக்கம்:

தேவிபாரதி மற்றும் மனுஷ்யபுத்திரன் இரண்டுபேருமே குறிப்பிடாத கதையொன்று உண்டு. சு.ரா புத்தக வெளியீடு இதே புக் பாயிண்ட் அரங்கில் நடந்தது. ஏனோ இரண்டு நிகழ்ச்சியும் ஞபகத்துக்கு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கும் வராமலா போகும்.

நவீன இலக்கிய சூழலில் காலச்சுவடின் முக்கியத்துவத்தை இத்தகைய கட்டுரைகள் வாயிலாக பதிவு செய்ய வேண்டிய சூழல் இல்லை என்றே நம்புகிறேன்.

தமிழ்மணவாளன்

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்