மெதுவாக உன்னைத் தொட்டு..

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

சுமதி ரூபன்


கடந்த வாரம் கனடாவில் வேலவன் சினிமாவில் ரவி அச்சுதனின் மற்றுமொரு வெளியீடான ‘மெதுவாக உன்னைத் தொட்டு. ‘ எனும் முழுநீளத் திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.. 1995 களிலிருந்து ரவி அச்சுதன் தனது கலைப்படைப்புகளாகிய நவராகங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், மூலம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மத்தியில் (கனடாவில்) தனக்கென்றொரு பெயரைத் தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார்..

இதுவரை காலமும் கனடாவில் மட்டும் தனது படைப்புக்களை ஒளிப்பதிவு செய்து வந்த ரவி அச்சுதன் முதல் முறையாக ‘மெதுவாக உன்னைத் தொட்டு.. ‘ மூலம் இலங்கை, இந்தியா, கனடா என்று மூன்று நாடுகளையும் இணைத்து மூன்று நாடுகளிலும் வாழும் கலைஞர்களை நடிக்க வைத்து ஒரு புதுமையைச் செய்துள்ளமை பாராட்டப் படவேண்டியது..

அண்மையில் வெளியான ‘கனவுகள் ‘ எனும் இவரின் இன்னுமொரு திரைப்படத்தின் மூலம் இந்தியர்களின் வழமையான மசால திரைப்டங்களை அப்படியே மற்றுமொரு பிரதியாக்கித் தந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர் மத்தியில், புலம்பெயர்ந்த மக்களின் எதிர்பார்ப்புக்கள், போராட்டங்களை படமாக்கித் தந்து பலரின் பராட்டைப் பெற்றவர் ரவி அச்சுதன். ‘மெதுவாக உன்னைத் தொட்டு.. ‘ திரைப்படத்தில் ரவி அச்சுதனின் பங்களிப்பு நடிப்பு, கமெரா, எடிட்டிங், இயக்கம் எனும் போது அவற்றை மிகவும் கவனமாகவும் கச்சிதமாகவும் செய்துள்ளார் என்றே கூறவேண்டும்..

‘மெதுவாக உன்னைத் தொட்டு.. ‘ திரைப்படத்தைப் பார்த்த போது பல இந்தியத் தமிழ் திரைப்படங்களைப் பார்த்த ஒரு உணர்வு எனக்குள் எழுந்தது.. இந்தியத் தமிழ் திரைப்படம் போல் ஒரு திரைப்படத்தைத் தருவது ரவி அச்சுதனின் கனவு எனின் அதில் அவரிற்கு இரட்டிப்பு வெற்றி கிடைத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.. காரணம் அவர் ஒரு இந்தியத் தமிழ் திரைப்படத்தின் திரைக்கதையை எமக்குத் தராமல் பல திரைப்படங்களின் தொகுப்பை எமக்காகத் தந்துள்ளார்..

திரைக்கதை இதுதான்.. ராகேஷ் எனும் இளைஞனை அவன் எழுதிய ஒரு கவிதைக்காக சந்தேகத்தின் பேரில் இலங்கை இராணுவம் பிடித்து துன்புறுத்துகின்றது. தமது மகன் எங்கிருந்தாலும் உயிருடன் இருக்க வேண்டும் என்று விரும்பிய ராகேஷின் பெற்றோர் அவனைத் தமது சொத்துக்களை விற்று கனடாவிற்று அனுப்ப முடிவெடுக்கின்றார்கள்.. பெற்றோரின் சொல்லைத் தட்ட முடியாமல் கனடா செல்லச் சம்மதிக்கின்றான் ராகேஷ். அவனது பயணம் ஆரம்பமாகிறது.. பயணத்தின் முதல் கட்டமாக இந்தியா வருகின்றான் ராகேஷ். இந்தியாவின் நிலையைக் காட்டுவதற்காகவோ இல்லாவிட்டால் திரைக்கதைக்கு முக்கியம் என்று எண்ணியோ என்னவோ ராகேஷ் வந்து இறங்கியவுடன் தனது பொருட்களை எல்லாம் ஒரு ஓட்டோகாறனிடம் பறி கொடுத்து விடுகின்றான். இந்தியாவில் சீர்காழியில் தங்கியிருக்கும் ராகேஷ் இந்தியப் பெண்மணியான சுஜி மேல் காதல் கொள்வதும்.. பின்னர் கனடா வந்து தான் தங்கியிருந்த உறவினரின் வீட்டுக்காறப் பெண் மாயாவிற்கு தன்மேல் காதல் என்று தெரியவந்த போது தான் இந்தியாவில் ஒரு பெண்ணைக் காதலிப்பதாக மாயாவின் காதலை அவன் ஏற்க மறுப்பதும்.. சுஜி தனது முறைமாப்பிள்ளையை மணம்முடித்து விட்டாள் என்ற பொய்யான தகவலை நம்பி மாயாவை அவளின் பெற்றோர் மேல் உள்ள நன்மதிப்பால் திருமணம் செய்யச் சம்மதிப்பதும்.. பின்னர் கனேடிய நாகரீகத்தில் மூழ்கிப்போய் இருக்கும் மாயாவின் குணத்தை எண்ணி குழம்புவதும்… இறுதியில் இந்தியக் காதலிக்குத் திருமணமாகவில்லை முறைமாப்பிள்ளை செய்த போக்கிரித்தனம் அது என்று தெரிந்து கொண்டு இந்தியா சென்று அவளிற்குத் தாலி கட்டுவதும்.. என்று 80களில் வெளியான பல இந்திய வியாபாரத் திரைப்படங்களைப் போல் சுபமாக முடிகின்றது.. ‘மெதுவாக உன்னைத் தொட்டு ‘.

திரைக்கதையை மேலோட்டமாகப் பார்த்தால் சிலவேளைகளில் ஓ.கே சொல்லி விடலாம்.. ஆனால் ஒரு திரைப்படத்தில் திரைக்கதையை ரசிக்க வைப்பதும் வெறுக்க வைப்பதும் திரைக்கதை சொன்ன விதம் சம்பவங்கள் அமைக்கப்பட்ட விதம் என்றால் ரவி அச்சுதன் இரண்டாவது வகையை நன்றாகவே செய்துள்ளார்..

ஒரு இளைஞனிற்கு ஒரு பெண்மேல் காதல் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும்.. ஒரு பெண்ணின் தனித்தன்மை, ஆளுமை, திறமை என்று. ஆனால் ‘மெதுவாக உன்னைத் தொட்டு நாயகனுக்கோ.. இடை, தொடை, மார்பு என்று பெண்ணின் அங்களைக் காட்டிக் காதலை வரவழைத்திருக்கின்றார்கள். இந்திய ஜனரஞ்சகத் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் தாம் போட்ட பணத்தை எப்படியாவது திருப்பி எடுத்து விடவேண்டும் என்ற நோக்கத்தோடு பெண்களைப் போதைப் பொருளாகவும் வெறும் பாலியல் பிண்டங்களாகவும் காட்டிவருவதை தவிர்க்க முடியாது என்று கூறுகின்றார்கள், ஆனால் ரவிஅச்சுதனிற்கு அந்தத் தேவை ஏன் என்று புரியவில்லை. அவரின் ‘கனவு ‘களைப் பார்த்து சிறிது நம்பிக்கையை வரவழைத்துக் கொண்ட என்னை ‘மெதுவாக உன்னைத் தொட்டு ‘ மூலம் அதாள பாதாளத்திற்குள் தள்ளி விட்டார் ரவிஅச்சுதன். மிகவும் வேதனையாகவே உள்ளது..

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழருக்கு கதைக்கா பஞ்சம் எதற்காக புளித்துப்போன இந்தியச் சினிமாவை நாம் அப்படியே ‘காப்பி ‘ அடிக்க வேண்டும். ‘காப்பி ‘ அடிப்பதென்று முடிவெடுத்துவிட்டால் ஏன் வீணாக இந்தியா செல்கின்றீர்கள்.. அருகில் இருக்கும் ெ ?ாலிவூட்டை காப்பி அடிக்கலாமே.. கொஞ்சம் புதுமையாகவாவது இருக்கும்.

‘மெதுவாக உன்னைத் தொட்டு ‘ திரைப்படத்தை முற்று முழுதாக நிராகதித்து விட முடியாது.. கலைஞர்களின் நடிப்பு, நகைச்சுவை, பாடல்கள,; காட்சி அமைப்பு என்று சில பிளஸ் பாயிண்டுகளும் உள்ளன. அண்மையில் சிங்களத்திரைப்படமான ‘சின்ன தேவதை ‘ திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எமது மக்கள் வளர்வதற்கு காத தூரம் இருக்கின்றது என்பது மட்டும் புலனாகின்றது.


thamilachi2003@yahoo.ca

Series Navigation

author

சுமதி ரூபன்

சுமதி ரூபன்

Similar Posts