மலைப்படுகடாம். ஒரு சித்திரம்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

வளவ துரையன்


நமக்குக் கிடைத்துள்ள சங்கப் பாடல்களாக எட்டுத்தொகையும், பத்துப் பாட்டும் போற்றிப் புகழப்படுகின்றன. சங்க காலத்தில் காதலும் வீரமுமே பாடுபொருள்களாக விளங்கின. புலவர்களும் புறத்துடன் அகத்தையும் சேர்த்தே பாடினர்.

சங்ககால மாந்தர்தம் வீரம் காதல் பற்றிய உதிரிப் பாடல்களின் தொகுப்பாக எட்டுத் தொகை நூல்கள் விளங்குகின்றன. மேலும் அக்கால மக்களின் ஒரே மனவுணர்ச்சியை அல்லது அவர்தம் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியை மட்டுமே கொண்டவைதாம் எட்டுத்தொகை நூற்கள் என்றும் கூறலாம்.

மேற்குறிப்பிட்ட உதிரிப்பாடல்களின் வளர்ச்சியே நெடும்பாடல்களாய் அமைந்தது. நெடும்பாடல்கள் தொகுக்கப்பட்டு பத்துப் பாட்டாய் அமைக்கப்பட்டுள்ளது. பத்துப் பாட்டு நூல்கள் சங்க கால மன்னர்களின் வீரம், கொடை, நாடு, காவல், நாட்டுவளம், மலைவளம், முதலியவற்றை தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

பத்துப் பாட்டு நூல்களைத் தொகுத்தவர் யார் என்று நாம் அறிய எந்தச் சான்றும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் மலைபடுகடாத்துள் ‘தீயினன்ன ஒண்செங்கதிர் காந்தள் ‘ என்ற அடியின் உரையில் நசினார்க்கினியர் ‘இவர் செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுட்களுடன் சஙகத்தார் கோவாமல் நீக்குவர் ‘ என்று எழுதி இருக்கிறார்.

இந்த அடியில் குற்றம் இருந்தால் நூலைத் தொகுக்கும் சங்கத்தார் இச் செய்யுளைச் சேர்க்க மாட்டார்கள் எனும் பொருள்பட நச்சினார்க்கினியர் எழுதி உள்ளார். எனவே பத்துப் பாட்டு நூல்களைத் தொகுத்தவர் சங்கத்தார் என்று தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூல் நூலில் திரு சி. பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.

பேராசிரியர் ‘பாட்டு ‘ என்றே இந்நூல் தொகுப்பினைக் குறிப்பிடுகிறார். மயிலைநாதரின் நன்னூல் உரையில் தான் பத்துப் பாட்டு எனும் பெயர் முதன்முதல் காணப்படுகிறது.

மயிலைநாதர் கி. பி. 14ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர். எனவே பத்துப் பாட்டு எனும் பெயர் பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் என்று ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி ‘ எனும் நூலில் மா. இராசமாணிக்கனார் ‘ கூறுகிறார்.

ஆனால் ‘சங்க இலக்கியம் ‘ எனும் நூலில் திரு. இரா. தண்டாயுதம் ‘உரையாசிரியர்களில் மூத்தவரான இளம்பூரணர் தம் உரையில் பத்துப்பாட்டு என்று குறிப்பிட்டுளார். எனவே இப்பெயர் பேராசிரியருக்கு முன்பே வழங்கி வந்துள்ளது ‘ என்று கூறுகிறார்.

சங்க நூல்கள் பாட்டும் தொகையும் என்று பாட்டை முதலில் நிறுத்தியே கூறப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து நெடும்பாடல்களான பத்துப் பாட்டு நூல்களுக்கு முதன்மை தரப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

பத்துப் பாட்டு நூல்களுல் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்கள் ஆகும்.

ஆற்றுப்படையிலக்கியம் என்பது தமிழ் மொழியில் மட்டும் தான் உள்ளது. வேறு எம்மொழியிலுமில்லை என்பது தமிழுக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

மற்றவற்றைக் காட்டிலும் மலைபடுகடாம் சில தனிச்சிறப்புகளைப் பெற்றுள்ளது. பாட்டுடைத்தலைவன் அல்லது பாடுபவன் பெயரால் மற்ற ஆற்றுப்படைகளின் பெயர்கள் அமைந்துள்ளன. ஆனால் மலைபடுகடாம் மட்டும் அந்நூலில் பயின்று வரும் தொடரின் பெயரால் வழங்கப்படுகிறது

மலைபடு கடாஅ மாதிரத் தியம்ப (348)

எனும் இந்த சிறப்பான அடிக்கு மலைகளாகிய யானை உண்டாகின்ற ஒலி திசைகளெல்லாம் ஒலிப்ப என்று நச்சினார்க்கினியர் உரை எழுதிகிறார். ‘கடாம் ‘ என்பதற்கு ஒலி என்ற பொருளும் உண்டு; எனவே மலைபடுகடாம் என்பதற்கு மலையிடத்தே உண்டாகும் ஒலி எனப் பொருள் கொள்ளலாம் என சிலம்பொலி செல்லப்பனார் கூறுகிறார்.

இந்நூலின் பெயர் ‘கூத்தராற்றுப்படை ‘ என்றிருந்திருக்க வேண்டும் என்று சிலர் கூறுவர். கூத்தன் ஆற்றுப் படுத்தப் படுவதால் அப்பெயர் கொண்டு அழைக்கலாம் எனக் கூறுவர்.

ஆனாலிந்நூலில் கூத்தர் என்ற சொல்லேயில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

மலையின்கண் எழும்புகின்ற இருபது வகையான ஓசைகளூம் ஒரு யானை பிளிறி எழுப்புவது போன்று புலவர்க்குத் தோன்றுகிறது. எனவே மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையை கடாமெனச் சிறப்பித்தனால் குறிப்பிட்ட நூலுக்கு மலைபடுகடாம் என்பதே சாலப் பொருத்தமாகும்.

மலைபடு கடாமை எழுதியவர் ‘இரணிய முட்டத்துப் பெருங்குன்றுர்ப் பெருங்கெளசிகனார் ‘ ஆவார். அவர் மதுரையை அடுத்த நத்தம் மலைப் பகுதியைச் சேர்ந்தவர் என்று மான். இராசமாணிக்கனார் கூறுகிறார்.

ஆனால் திருவாளர்கள் மா. நவநீதகிருட்டினனும் பின்னத்தூராரும் அவரை தொண்டை நாட்டினர் என்று குறிப்பிடுகிறார்கள்.

இரணிய முட்டம் என்பது பாண்டியப் பேரரசின் ஆணைக்குள் அடங்கிய சிறுநாடு என்றும் கூறப்படுகிறது. தொல்காப்பியத்தில் பேராசிரியரின் விளக்க உரை சான்றின்படி அவர் அந்தணர் என்றும் கூறப்படுகிறது. ஆசிரியர் இயற்றியதாக நற்றிணையில் ரண்டு செய்யுள்கள் காணப்படுகின்றன.

நூலின் பாட்டுடைத் தலைவனாக ‘பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் ‘ விளங்குகிறான்.

அவனை ‘நன்னன் சேய் நன்னன் ‘ (64) என்று மலைபடுகடாம் சுட்டிக் காட்டுகிறது.

‘நன் ‘ எனும் பொருள் வளம் , நன்மை முதலியவற்றைக் குறிக்கும். அதனுடன் ‘அன் ‘ விகுதி சேர்த்து அப்பெயர் வந்திருக்கலாம்.

அவன் பெண் கொலை புரிந்த கண்கானங்கிழான் நன்னனினும் வேறானவன் என்று மா. இராசமாணிக்கனார் கூறுவார். ஆனால் கலைங்கலஞ்சியமும் அபிதான சிந்தாமணியும் ‘இவன் பெண் கொலை புரிந்த நன்னனின் மகன் ‘ என்று மொழிகின்றன.

நன்னன் என்பது வேளிர் குடியைச் சேர்ந்த அரசர்க்குப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் மன்னர்கள் நாடுகளைக் கோட்டமாகப் பிரித்திருந்தனர். பல்குன்றக் கோட்டம் என்பது நன்னனின் ஆட்சிக்குரிய பகுதியாக விளங்கியிருக்க வேண்டும்.

தற்போதைய திருப்பதியில் கிடைத்த கல்வெட்டு ஒன்று ‘பல்குன்றக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம் ‘ என்று குறிப்பிடுவதிலிருந்து பண்டைய வேங்கட மலைப்பகுதி பல்குன்றக் கோட்டத்தில் அடங்கி இருந்தது என்று கூறலாம்.

தற்பொழுது திருவண்ணாமலைக்கு மேற்கில் உள்ள செங்கமே நன்னனது தலைநகரம் ஆகும். பண்டைக் காலத்தில் அதன் பெயர் ‘செங்கணம் ‘ என்பதாகும்.

தற்பொழுது சண்முக நதி எனப்படுவது சேயாறு என்றும், தற்பொழுது அப்பகுதியில் காளகண்டேசுவரர் என்ற ஆலயம் அந்தக் காலத்தில் காரியுண்டக் கடவுள் என்றும் அழைக்கப்பட்டிருக்ககலாம்.

மேலும் நவிரமலையானது திருசூலகிரி என்றும் பருவதமலை என்றும் வழங்கப்பட்டுள்ளது. ‘திருமழை ‘ என்று மங்கலச் சொல்லில் தொடங்குவதிருந்து 583 அடிகளைக் கொண்டுள்ளது.

இந்நூல் முழுதும் கூத்தனின் கூற்றாகவே இருப்பது தனிச்சிறப்பாகும். பரிசில் பெற்று வரும் கூத்தன் ஒருவன் பரிசில் பெறப்போகின்றவனை

‘கலம்பெறு கண்ணுள ரொக்கல் தலைவ ‘ (58)

என்று விளித்துப் பேசுகிறான். பிறகு அவன் நன்னனை அடைய வழிகூறி ஆற்றுப்படுத்துகிறான்.

வருகின்ற கூட்ட்த்தின் தலைவனைப் பார்த்து அழைப்பதாக அவ்விளியைக் கொள்ளலாம். பலர் கூடி இருக்க ஒருவனிடம் மட்டும் பேசுவதல் ஆகாது. எனவேதான் கூறுகின்றவன் செய்திகளை அனைவரிடமும் கூறுகிறான். கடைசி அடிகளில்

‘…. உம்முன்

தலைவன் தாமரை மலைய…. ‘ (568,69)

என்று அந்தக் கூட்டத்தாரைப் பார்த்தே பரிசில் பெற்றுவரும் கூத்தன் கூறுவதிலிருந்து அதனை அறிய முடிகிறது.

அந்தக் கூட்டம் ஒரு காட்டு மர நிழலில் தங்கி உள்ளது. அக்கூட்டத்தை நோக்கிப் பரிசு பெற்றவன் வருகிறான். ஆறு கடலை நோக்கி வருவது போல் அவன் பல பரிசுப் பொருள்களுடன் வருகிறான்.

தங்கி இருக்கும் கூட்டத்தைக் காண்கிறான். இக்கூட்டத்தில் இருப்பவர்களிடம் பல்வேறு இசைக்கருவிகள் உள்ளன. அவற்றில் சிறப்பாக ‘அரிக்குரள் தட்டை ‘ என்ற ஒன்றக் காண முடிகிறது. அஃது ஒலித்தால் தவளையின் குரல் கேட்கும்.

அது போன்றே ‘கரடிகை ‘ எனும் தோலிசைக்கருவி ஒலித்தால் கரடி கத்தும் குரலைக் கேட்கலாம். மேலும் அவர்கள் முழவு, ஆகுளி, எல்லரி, பதலை, யாழ் போன்ற பல்லிசைக்கருவிகளை வைத்திருந்தனர்.

அவர்கள் வைத்திருந்த பேரியாழ் ஒன்பது நரம்புகளைக் கொண்டதாகும். சங்க காலத்தில் இருபத்தோரு நரம்புகள் கொண்ட பேரியாழும் இருந்தது எனப் புறநானூறும் சிலப்பதிகாரமும் கூறுவதாக தமது யாழ்நூலில் திரு விபுலானந்தர் கூறுகிறார்.

சங்க கால நூலகளில் மலைபடுகடாம் ஒன்றே பதிமூன்று இசைக்கருவிகள் பற்றிக் கூறித் தனிச்சிறப்பு பெறுகிறது. பெருங்கெளசிகனார் இசை மீது பற்றுக் கொண்டிருந்ததால்தான் பல்வேறு இசைக்கருவிகளை ஊன்றிக் கவனித்துள்ளார். மேலும் இசை சார்ந்த உவமைகள் பலவற்றை அவர் ஆங்காங்கே தொட்டுக் காட்டியிருப்பதிலிருந்தும் அதனை அறியலாம்.

அந்த இசைக்கருவிகளை அவர்கள் மிகவும் கவனமாகப் பாதுகாப்புடன் வைத்துள்ளனர். பல சிறிய, பெரிய பைகளில் அவைகளைப் போட்டுச் சுருக்கிக் கட்டி வைத்துள்ளனர்.

ஒரு பெரிய கோலின் இருமுனைகளிலும் சுமை சமமாக இருக்கும்படி அவற்றைப் பிணைத்துள்ளனர். அக்கம்பில் அப்பைகள் இருப்பது கார்காலத்திலே பழுக்கும் பலாக்காய்களைப் போன்று உள்ளது.

அழகான பெண்ணின் அடிவயிற்றிலிருந்து மேல்நோக்கி வளர்ந்து படிந்த மயிரின் ஒழுங்கு போல் யாழில் தையல் உள்ளது என்பது மிகச் சிறப்பான உவமையாகும். அதே உவமையை பொருநராற்றுப்படையும்

‘எய்யா இளஞ்சூல் செய்யோன் அவ்வயிற்று

ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல ‘ (பொரு. 6-7)

என்று கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

‘ஆகுளி ‘ எனும் நல்லிசைக்கருவி ஒலிப்பது போன்று ஆந்தைகள் கத்தின என்பதை

‘…. ஆகுளி கடுப்பக்

குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்து ‘ (140-141)

என்று பாடுகிறார். மேலும் பலவகை கருவியிசை ஒரே நேரத்தில் ஒலிப்பதைப் போல் ஆல மரத்திலிருந்த பறவைகள் ஒலி எழுப்பின என்பதை

கோடுபல முரஞ்சிய கோளி யாளத்துக்

கூடியத் தன்ன குரல்புணர் புள்ளின் ‘

என்று காட்டுகிறார். அவ்வாறு ஓசைகளில் தம் நெஞ்சைப் பறிகொடுத்ததால் தான் மலையிடை எழுந்த ஓசையை தம் நூலுக்கே பெயராக அமைத்தார் என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்தக் கூட்டத்தில் உள்ள விறலியின் வருணனை சிறப்பாகக் கூறப்படுகிறது. பெரும்பாணாற்றுப்படையில் விறலி வருணனை இல்லை. பொருநராற்றுப்படையில் விறலியினிருபது உறுப்புகளும், சிறுபாணாற்றுப்படையில் பத்து உறுப்புகளும் வருணிக்கப்படும் போது மலைபடுகடாத்தில் மூன்று உறுப்புகளே வருணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் மற்ற ஆற்றுப்படைகள் முடிமுதல் தொடங்கி அடிவரை கூறும் கேசாதிபாத முறையில் அமைந்திருக்கையில் மலைபடுகடாம் பாதாதிகேச முறையைப் பின்பற்றுகிறது.

விறலியின் அடி மலையில் நடந்து வருந்தியதால் இளைத்திருக்கிறது. அதற்கு உவமையாக நாயின் நாக்கைக் கூறுவது சங்க நூல்களின் வழக்கமாகும். மற்ற ஆற்றுப்படைகளில் விறலியின் அடிக்கு உவமை கூறும் பொழுது நாய் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டிருக்கும் பொழுது மலைபடுகடாத்தில் மட்டுமே ‘ஞமலி ‘ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிற ஆற்றுப்படைகளில் பிறமொழிச் சொற்கள் மிகையாகக் கலந்திருக்க மலைபடுகடாத்தில் மட்டுமே பிறமொழிச் சொற்கள் இடம் பெறவில்லை என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சியில் திரு மா. இராசமாணிக்கனார் கூறுகிறார்.

பரிசில் பெற்று வருபவன் தான் நன்னனிடமிருந்து வருவதைக் கூறுகிறான். நன்னனை அறிமுகம் செய்யும் முன்னர்

‘புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்

வளைபுனை யெழின்முலை வாங்கமைத் திரடோன்

மலர்போன் மழைக்கண் மங்கையர் கணவன் ‘ (56-58)

என்று அவன் தேவியர் அறிமுகம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு முதலில் மனைவியரைப் புகழ்ந்து கூறி அவர் கணவன் என்று தலைவனைக் கூறுவது மலைபடுகடாத்தில் மட்டுமே காணப்படுகிறது. மேலும் பிற ஆற்றுப்படைகள் பாடப்படும் தலைவனின் பிறப்பு முன்னோர் பற்றிக் கூறும்போது மலைபடுகடாமும் சிறுபாணாற்றுப்படையும் அங்ஙனம் கூறாதது ஈண்டு நோக்கத்தக்க ஒன்றாகும். நன்னது வீரமானது ‘முனைபாழ் படுக்கும் துன்னரும் துப்பின் ‘ (59) என்று பாராட்டப்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய நன்னன் நாட்டிற்குச் செல்லும் வழியைக் கூத்தன் கூற முற்படுகிறான்.

அவர்கள் கூடியிருக்குமிடம் நன்னனது நவிரமலை என்றும் அந்த மலை அடிவாரத்திலிருந்தே கூத்தன் ஆற்றுப் படுத்துகிறான் என்று கூறலாம். மா. இராசமாணிக்கனார் தம் பத்துப்பாட்டு ஆராய்ச்சியிலிதை உறுதியாகக் கூறுகிறார். அடுத்து நன்னனது நாட்டை அடையும் வழியைக் கூத்தன் கூறத் தொடங்குகிறான்.

செல்லும் வழியில் எள் விளைந்திருக்கும். அவை மிக வளமாகத் தோற்றம் அளிக்கும். ஒரு கைப்பிடியில் பருத்த ஏழு காய்கள் கொள்ளத்தக்க அளவு அவை இருக்கும். அவற்றின் உள்ளே நெய் நிரம்பி இருக்கும் என்பதை

‘பிடிஏழ் நெய்கொள ஒழுகின

பல்கவர் ஈர் எள் ‘ (105-106)

என்ற அடிகள் காட்டுகின்றன.

மேலும் அந்த முல்லை நிலத்தின் கண் ஏர்கொண்டு உழாமல் களைகொட்டினாலே கொத்திப் பயிர் செய்யும் தோட்டங்களுண்டாம். அவற்றில் வெண்சிறுகடுகு விளைந்திருக்கும்.

கிழங்குகளை அதிகமாகப் போகும் வழியில் காணலாம். பெண்யானையின் மடிந்துள்ள முழங்காலின் அளவுக்கு அந்தக் கிழங்கு பருத்திருக்கும். உயவைக்கொடி எனும் ஒரு கொடி காணப்படும். அக்கொடியை உண்டால் நீர்விடாய் தீர்ந்துவிடும்.

ஆங்கே பெரிய ஆந்தைகள் கூவிக் கொண்டே இருக்கும் அசைகின்ற கிளைகளிலே பலாக்காய்கள் காய்த்துத் தொங்கும். அவை பார்ப்பதற்குக் கூத்தருடைய மத்தளங்கள் போல் காட்சி தரும்.

முன்பு கூத்தருடைய இசைக்கருவிகளுக்கு பலாக்காய்களை உவமையாகக் கூறிய பெருங்கெளசிகனார் தற்பொழுது பலாக்காய்களுக்கு கூத்தனின் மத்தளத்தை காட்டும் நயம் மகிழத்தக்கதாகும்.

வயல்களிலே கரும்பும் ஐவன நெல்லும் வெண்ணெல்லும் முற்றி விளைந்திருக்கும். படைவீரர்கள் எதிரிகளால் தாக்கப்பட்டுப் பின்வாங்குகையில் தடுமாறுவது போல கரும்புகள் காற்று மோதுவதால் அசைந்து தடுமாறும்.

பருந்துகள் தசைத்துண்டம் என்று எடுத்து ஏமாற்றம் அடைந்து போகும் அளவுக்கு தீயைப் போன்று ஒளிதரக்கூடிய செங்காந்தள் அரும்புகள் சிதறி இருக்கும்.

தொடர்ந்து சற்று தொலைவு சென்றால் அங்கே கானவர் வசிக்கின்ற சிறுகுடிசைகள் இருக்கும். அக்குடிசைகளில் வாழ்வோர் செல்கின்றவர்களை விருந்தினராக ஏற்றுக் கொள்வார்கள்.

மான், பன்றி, உடும்பு ஆகியவற்றின் தசைத் தொகுதியையும் மூங்கில் அரிசியையும் அங்குள்ள குறமகளிர் கொடுத்து உபசரிப்பார்கள்.

அவர்களின் விருந்தோம்பலை ஏற்று அன்றிரவு அங்கே தங்கி களைப்பாறி விடிந்தபின்பு செல்லலாம். மறுநாள் பயணத்தில் மலைச்சாரலிலிருக்கும். சிறிய ஊர்கள் குறுக்கிடும்.

அவ்வூர்களில் உள்ளோரிடம் நன்னனின் கூத்தர் நாங்கள் என்று கூறினால் மென்சொல் பேசுவர். மேலும் தினைச்சோறு, முள்ளம்பன்றியின் தசை, நெல்லால் ஆக்கிய கள், புளிச்சாறு மோர் ஆகியனவற்றை வயிறு நிரம்பும் அளவுக்கு அவர்கள் கொடுப்பர்.

சந்தனக்கட்டை, அகில் மாணிக்கம் ஆகியவற்றைப் பரிசில்களாகத் தரும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. வழியில் செல்பவர்கள் புதிய குவளை மலர்களைத் தொடக்கூடாது. பாதைகளில் அவ்வப்போது காட்சி அளிக்கும் வரையர மகளிர் இருக்கும் நிலைமையைப் பார்த்தல் கூடாது. மீறிச் செய்தால் உயிர் போகும்படி வெம்பி நடுங்கும் நிலையை அடையக் கடவர்.

அவ்வழிகளில் பல தீமைகளும் உண்டாம். தினைக்கதிரைத் தின்றழிக்கும் பன்றிகளைத் தடுக்கப் பொறி அமைக்கப்பட்டிருக்கும். மக்கள் நடமாட்டம் அற்ற வழிகளில் பாம்புகள் மறைந்துள்ள குழிகள் உள்ளன. குறவர்கள் பரண்மீது இருந்து ஆனைக்கூட்டங்களை விரட்ட வீசும் கவண் கற்கள் வந்து விழும். கருங்குரங்குகள் வழியில் வந்து விளையாடும்.

முதலைகள் நிறைந்த வழுக்குகின்ற காட்டாறுகள் உள்ளன. குளங்களில் பாசி படர்ந்து வழியை மறைத்துக் கொண்டிருக்கும். மரக்கொடிகளையும் மூங்கில் கோல்களையும் பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொண்டு மிக்க கவனத்துடன் மேற்கண்ட பகுதிகளைக் கடக்க வேண்டும்.

அவ்வாறு வழி சொல்லும் கூத்தன் ஆபத்து நிறைந்து உள்ளது என்று கூறுவது ஆற்றுப்படைகளுள் மலைபடுகடாம் ஒன்றில்தான் காணப்படுகிறது.

வழியில் பழைமையான கோடையில் உள்ள காரி உண்டிக்கடவுளைத் தொழுது செல்லல் நலம் பயக்கும். அங்கு நரம்பிசைக் கருவிகளை ஒலித்தல் கூடாது. ஏனினில் அவ்வப்போது பெய்யும் சிறு தூறலில் யாழின் நரம்பு மத்தளத்தின் கண் ஆகியன நனைந்து விடும்.

அழகிய காட்சிகளை அளவுக்கு மீறிச் சுவைத்து மகிழ்ந்து மயில்கள் ஆடுவதையும், குரங்குகள் பாய்வதையும், தேனடைகள் ஒழுகுவதையும் நீண்ட நேரம் பார்த்திருந்தால் செல்கின்ற வழி மாறுபட்டுப் போகும்.

அடுத்து காட்டு வழியில் செல்ல நேரிடும். வேடர்கள் அம்பு பட்டு வீழ்ந்த பன்றி அங்கு கிடக்கும். உராய்ந்த மூங்கிலின் தீயில் மயிர்ப்புகை கமழாதபடிக்கு, சுட்டுப் பதமாக அப்பன்றியை உண்ணலாம். மிச்சம் உள்ள தசைத் தொகுதியை கட்டிப் பொதியாக எடுத்துக் கொண்டு சுனைநீர் குடித்து இரவில் கற்குகைக்குள் தங்கலாம்.

மறுநாள் விடியலில் கிளம்பிப் பயணம் மேற்கொள்ள வேண்டும். வழியில் களிற்றை விழுங்கி பெரிய படம் உடைய பருத்த பாம்பு கிடக்கும். அதைப் பார்த்து விலகிச் செல்ல வேண்டும்.

மேலும் சென்றால் நச்சுப்பூக்கள் காணலாம். தின்றவர்கள் உயிரைப் பறிக்கும் பழங்களும் உண்டு. அவற்றைத் தாண்டிச் சென்றால் மலை உச்சியை அடையலாம். அங்கிருந்து பார்த்தால் பல நாடுகளைக் காணலாம்.

மலைக் குறவரும் அவ்விடம் வந்தால் வழி தெரியாமல் மருள்வர். எனவே மலையில் எதிரொலிக்கும்பட்யாக பல வித கருவிகளை ஒலித்து நல்லிசை எழுப்ப வேண்டும். அதைக்கேட்டு காட்டைக் காக்கின்ற கானவர் விரைவாக ஓடிவருவர்.

நல்ல பழம், பூக்கள், தந்து உபசரிப்பார்கள் மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சி செல்லும் வழியை வழி சொல்லும் கூத்தன்அவ்வாறு கூறி மலையில் எழும் ஒலிகளை விவரிக்கிறான்.

வரைமகளிர் அருவியில் வந்து குளிட்து குடைந்து ஆடும் ஓசை, முள்ளம்பன்றியின் முள் குத்தியதால் அழும் கானவர் அழுகை ஆகியன கேட்கலாம். மேலும் தங்கள் காதலனின் மார்பில் புலி பாய்ந்து உண்டான புண்ணை ஆற்ற கொடிச்சியர் பாடும்ப்பாடலைக் கேட்கலாம் என்பது

கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்

நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென

அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல் (302-304)

என்ற அடிகளிலிருந்து புலனாகிறது.

பெரிய கொல்லையில் தவறி விழுந்த குட்டிக்காக மந்தி சுற்றத்துடன் கலங்கும் ஓசை, கண்ணேணியில் ஏறித் தேனடை அழிக்கும் கானவர் ஓசை, யானைப்பாகர் எழுப்பும் ஓசை, கிளி ஓட்டும் மகளிர் ஓசை, எருமைக்கடாக்களின் ஆரவார ஒலி, பன்றியை விரட்டும் பறையின் ஓசை ஆகிய ஒசைகள் எல்லாம் கூடி மலைகளாகிய யானைகளிடமிருந்து பிறந்த ஓசையாக எல்லாத் திசைகளிலும் ஒலிக்கும்.

இக்கருத்துதான் முன்பே குறிப்பிட்டபடி ‘மலைபடுகடாத்து மாதிரத்து இயம்ப ‘ என்று காட்டப்படுகிறது.

அங்கிருந்து என்றால் மலையூர் என்ற ஊரைக் காணலாம். மலை ஏறிய களைப்பு நீங்க அவ்வூரில் சிலநாள்கள் தங்கலாம். பிறகு சிறிது தொலைவு சென்றால் நன்னனுடைய மலையைக் காணலாம்.

அம்மலையை வாழ்த்தி விறலியர் குறிஞ்சிப் பண் பாடி அங்கே உறையும் தெய்வங்களை வாழ்த்தலாம். அப்பொழுது மழைத்திவலைகள் தூவும். எனவே கருவிகளில் நீர்பட்டு நனையாதபடி மலைக் குகைக்களில் தங்கிக் கொள்ளலாம்.

பிறகு மலையை மிகவும் கவனமாகக் கடந்து செல்லல் நலம் பயக்கும். மத்தளங்களை பிணைத்துள்ள தடியை ஊன்றுகோகாகக் கொண்டு வழுக்குக்குழிகளிீல் விழாமல் மெல்ல மெல்லச் செல்ல வேண்டும்.

அவ்வழி மிகவும் துன்பம் தரும். எனவே வெயில் தணிந்த நேரத்தில் செல்ல வேண்டும். கொடிகள் அடைத்திருக்கும் பாதையில் உள்ள சிறுவழியில் தொடர்ச்சியை விடாமல் ஒருவர் பின் ஒருவராய்ச் செல்லல் நலம்.

மேற்கொண்டு செல்லும் போது வழியில் பல காடுகள் குறுக்கிடும். ஆண்யானைகள் ஒன்றோடு ஒன்று தாக்கிப் போர் செய்வது போல் அங்கே பெரிய துறுகற்கள் கிடக்கும் என்பதை

‘களிறு மலைந்தன்ன கண்கூடு துறுகல் ‘ (384)

என்ற அடி காட்டுகிறது. அங்கே எப்பொழுதும் மழை பொழிந்து கொண்டிருக்கும்.

வழியில் நடுகற்களை நிறையக் காணலாம். நடுகல் நடப்பட்டதற்குச் சான்று பத்துப் பாட்டு நூல்களில் மலைபடுகடாத்தில் மட்டுமே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

‘நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்

செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட

கல்லேசு கவலை ‘ (387-389)

என்ற அடிகள் நடுகற்களின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றன. பகைவரிடம் தோற்கும் போது பகைவர்கள் வெற்றியால் ஆரவாரம் செய்தனர். அதைக்கண்டு நாணம் மிக்க மறவர்கள் போரிட்டு உயிர் கொடுத்தார்கள். பகைவரை வெல்ல இயலாத போது உயிர் கொடுத்தல் நல்வழி என்றும் நாணத்திற்காக உயிரை விட்டதால் நாணுடை மறவர் என்றும் குறிப்பிடும் நயம் பாராட்டத்தக்கது.

மேலும் ‘கல்ஏசு கவலை ‘ எனும் சொற்றொடர் ‘புறமுதுகிட்ட வீரர்களை அக்கற்கள் ஏசும் ‘ எனும் பொருளையும் தருகின்றன. அவ்வீரக்கற்களில் உள்ள தெய்வத்தை யாழை வாசித்துப் பயணம் தொடரலாம். பலவழிகள் ஒன்றாய்க் கூடும் இடம் அங்கே வந்து சேரும்.

சரியான வழியைத் தேர்ந்தெடுத்து அந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்ரு பின்னால் வரும் புதியவர்களுக்கு அடையாளம் காட்ட அவ்வழியின் தொடக்கத்தில் ஊகம்புல்லை முடிந்து வைக்க வேண்டும். இவ்வாறு வழிகாட்ட வேண்டுவதை

‘சந்து நீவிப் புல் முனைந்திடுமின் ‘ (393) எனும் அடி கூறுகிறது.

தொடர்ந்து செல்லும் வழியில் நன்னனது பகைவர் வாழும் நிலங்களூமிருக்கும். ஆனால் பாணரும் புலவரும் அவ்வழிச் செல்ல அஞ்ச வேண்டாம். அவர்களிடம்

‘தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை

ஓம்பா வள்ளல் ‘ (399-400) எனப் புகழப்படும் நன்னன் ஊர்நாடிச் செல்வதாகக் கூறினால் எத்துன்பமும் அவர்கள் விளைக்க மாட்டார்கள். எனவே நன்னனின் பகைவர்களூம் பண்பு உடையவர்கள் என்பதை அறிய முடிகிறது.

அடுத்து காடுகள் உள்ளன. ஒரு புலி பிணை மானை வீழ்த்தி விட்டது. அதனால் நடுங்கிய கலைமான் கூவுகிறது.

‘புலியற வெறுத்ததன் வீழ்வினை உள்ளிக்

கலை நின்று விளிக்கும் கானம் ‘ என்று அக்காடு காட்டப்படுகிறது.

தொடர்ந்த பயணத்தில் முல்லை நிலத்தை அடையலாம். கானகத்தில் நடந்து வந்த களைப்பும் ஊர்விட்டு வந்த வருத்தமும் நீங்கும் படியாக அங்குள்ள ஆய்ச்சியர் பசும்பால் தருவர். அவர்களுக்காக அவர்கள் சமைத்துள்ள பால் சோற்றினை வழிச்செல்பவர்களுக்கு அளித்து உபசரிப்பர். ஆயர்களின் ஆட்டு மந்தைக்கு அருமையான உவமையை பெருங்கெளசிகனார் காட்டுகிறார்.

பண்ட மாற்றுமுறை வணிகத்தில் பலரிடம் தம் பொருளை விற்று அவர்களிடமிர்ந்து பெற்ற பல நிற அரிசிகள் ஒன்றாய்க் கலந்திருந்தால் எப்படி இருக்குமோ அது போன்ற பல நிறமுள்ள ஆடுகளைக் கொண்ட ஆட்டு மந்தை என்று கெளசிகனார் கூறுவதை

‘பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன

தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇ ‘ (413-414)

என்ற அடிகள் எடுத்துக் காட்டுகின்றன.

முல்லை நில ஆயர்கள் அன்றிரவு தங்கச் சொல்லி ஆடுகளின் உரித்த தோலால் செய்யப்பட்ட படுக்கை தருவர். அப்படுக்கை ‘அதட்பள்ளி ‘ எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது.

‘அதள் உண்டாயினும் பாய் உண்டாயினும்

யாதுண்டாயினும் கொடுமின் வல்லே ‘

என்று புறநானூறு கூறுவதை இங்கு எண்ணிப் பார்த்தல் சுவை தரும்.

மேலும் ஆயர்கள் கொடிய விலங்குகள் வராதபடி அவ்விரவில் தீ வளர்த்துத் தருவார்கள்.

அங்கு அவ்விரவு தங்கிப் பயணம் தொடர்ந்தால் சிறிய காடு வரும். அக்காட்டில்

‘கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பில்

கொடுவில் கூளியர் ‘ (421-422)

பலர் இருப்பர். கூப்பிடும் தொலைவிற்கு அப்பால் அம்பு விடக்கூடிய அவர்கள் நன்னனைக் காணச் செல்பவர்களூக்குத் தசையும் கிழங்கும் உண்ணக் கொடுத்து அனுப்புவர்.

அவ்வேடுவர்கள் காட்டும் வழியில் தொடர்ந்து சென்றால் வழியில் நிறைய மலர்கள் பூத்துக் கிடக்கும். அம்மலர்களை மரலினது நாரினால் மாலைகட்டி அழகாக அணிந்து கொண்டு செல்லல் நல்லது. அந்த இடத்தில் தண்ணீர் பருகிக் குளித்துச் செல்லும் வழிக்கு வேண்டிய அளவு நீர் முகந்து கொண்டு செல்ல வேண்டும்.

பகல் முழுதும் தொடர்ந்து சென்றால் இரவில் புல் வேய்ந்த குடிசைகள் குறுக்கிடும். அங்கிருக்கும் மக்கள் மூங்கில் அரிசியால் ஆன பால் சோறு தருவர். வேங்கைப் பூ நிறத்தில் இருக்கும் செவ்வரிசிச் சோறு தருவர். அதோடு மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லரிசி கலந்து அவரை விதைகள் உள்ள புளியைக் கரைத்து ஆக்கிய குழைந்த ‘புளிங்கூழ் ‘ கொடுப்பர். இதையே ‘கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ் ‘ என்று புறநானூறு கூறுகிறது.

அரிசிச் சோற்றைக் குழித்து நெய் இடுவார்கள். ‘தண்ணென் எழுது உள்ளீடாக ‘(442) எனவரும் சொற்றொடரில் தண்ணென் எழுது என்பதற்கு சிலர் நெய் என்றும் சிலர் குளிர்ந்த வெண்ணெய் என்றும் பொருள் கொள்வர்.

இதுபோன்றே ‘விசயம் ‘ என்பதற்கு கருப்பட்டி என்றும் சருக்கரை என்றும் பொருள் கூறப்படுகிறது. கருப்பட்டியை இடித்து ஆக்கப்பட்ட தெனைமா தருவர். அவ்விரவில் தங்கினால் நொய்ய மர விறகால் தீ மூட்டிக் காவல் காப்பர்.

பிறகு விடியலில் கிளம்புகையில் பறவைகளின் குரல் கேட்டு எழுந்து செல்ல வேண்டும் என்பதை ‘விடியல் புள்ளோர்த்துக் கழிமின் ‘ (448) என்ற அடி காட்டுகிறது. பறவைகளின் குரலால் நன்னிமித்தம் பார்த்துச் செல்ல வேண்டும் என்பதையும் அது குறிப்பதாகக் கொள்ளலாம்.

அடுத்து மருத நிலப்பகுதியைக் காணலாம். ‘புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின் ‘ (449) என்று மருத நிலத்தின் கருவான காஞ்சி மரம் காட்டப்படுகிறது. அத்துடன் அருகம்புற்களும் அங்கு காணப்படுகின்றன. யாழைப்போல இனிய இசை எழுப்பும் வண்டுகள் முரலும் சோலைகளும், தவ முனிவர் வாழும் பள்ளிகளும் தண்பனைநாடாகிய அம்மருத நிலப்பகுதியில் உள்ளன.

அங்கே தங்கினால் செவிக்கின்பமும் கிடைக்கும்; நாவுக்கு இன்பம் தரும் சுவையான பண்டங்களும் கிடைக்கும். தொடர்ந்து செல்கையில் நீர் நிலைகளைக் காணலாம். அப்பொய்களில் கண்பங்கோரைகள் நிறைய இருக்கும்.

அக்கோரை தற்போது சம்பங்கோரை என வழங்கப் படுகிறது. ‘சகரக் கிளவி ‘ மொழி முதல் வராது என எண்ணியவர்கள் இதை ‘கண்பங்கோரை ‘ என மாற்றி இருக்கலாம். ககரமும் சகரமும் நிறைய மாறி உள்ளன. இது போன்றுதான் கைகளைக் கொட்டிகின்ற கைப்பாணிப்பருவம் சப்பாணிப்பருவம் என ஆகி இருக்கலாம். இது மேலும் ஆய்வுக்கு உரிய ஒன்றாகும்.

அங்கே உள்ள வலைஞர்கள் விருந்தோம்பலில் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் வரால் மீன்களின் துண்டுகள் தருவர். வரால் மீனைப் பெருங்கெளசிகனார் ‘பிடிக்கை அன்ன செங்கண் வரால் ‘(457) எனக் கூறுகிறார். பிடி எனப்படும் பெண் யானையின் துதிக்கை போன்று பருத்ததும் சிவந்த கண்களை உடையதுமான எனக் கூறும்போது புலவர் வரால் மீனை எந்த அளவுக்கு கூர்ந்து நோக்கி இருக்க வேண்டும் என்பது புலனாகிறது. ஏனெனில் மற்ற மீன்களை விட வரால் மீன் சிவந்த கண்கள் உடையது எனக் கூறுவர்.

வாளை மீனைக் குறிப்பிடுகையில் ‘இருஞ்சுவல் வாளை ‘ என்று அவர் கூறுகிறார். பெரிய கழுத்து உடைய வாளை என்பது அதன் மூலம் தெரிய வரும். ‘இருஞ்சுவல் வாளை பிறழும் ‘ என்று புறநானூறு கூறும்.

மேலும் அந்த வலைஞர்கள் உழவர்களிடம் மீனைவிற்று நெல்லைப் பெறுவார்கள். உழவர்கள் மலை போல நெற்போர்களை வைத்திருப்பார்கள். அவற்றைப் பிரித்து அவற்றின் உள்ளேயிருந்து நெல்லை அளந்து கொடுப்பார்கள். ‘விலங்கல் அன்ன போர்முத தொலைஇ ‘ (461) என்ற அடியால் நெற்போர்கள் மலைகளுக்கு நிகராக இருந்ததை அறியமுடிகிறது. கம்பன் தனது நாட்டுப் படலத்தில் ‘போரொடு நிகர்வன புணர்மலை ‘ என்று பாடுவதிங்கு நோக்கத்தக்கது ஆகும்.

மருத நில மக்கள் நன்னனும் விரும்பக்கூடிய உணவை வருபவர்க்கு அளிப்பார்களாம். அதை ‘திண்தேர் நன்னற்கும் அயினி காண்பன் ‘ (467) என்ற அடி காட்டும். மேலும் அவர்கள் முள்நீக்கிய கொழுப்பு மிகுதியாக உள்ள மீன் துண்டங்களையிட்ட வெள்ளிய சோறு தருவர்.

அவற்றை உண்டபின் எருதுகளை ஓட்டுகின்ற உழவரின் பாட்டுடன் கலந்து மருதப்பண்ணிசைத்துச் செல்லலாம். அந்த உழவர் பாட்டை சிலம்பு ‘ஏரொடு நின்றார் ஏர்மங்கலம் ‘ என்று சுட்டும்.

மேலும் ஒரு அரிய செய்தியையும் இங்கு மலைபடுகடாம் காட்டுகிறது. வயலின் நடுவே பறவைகள் கூடுகட்டிக் குடியிருக்கும். அறுவடையைத் தொடங்கும் முன்னர் பறைஒலி எழுப்பினால் அப்பறவைகள் பறந்து பாதுகாப்பான இடத்தை அடைந்துவிடும்.

அப்பறை ஒலி கேட்டு அஞ்சி எருமைக்கடாக்களும் விரைவாக அங்கும் இங்கும் திரிந்து ஓடி வரும். செல்பவர்கள் அக்கடாக்களிலிருந்து தப்பி விலகி பாதுகாப்பாய்ச் செல்ல வேண்டும்.

அடுத்து சேயாற்றின் கரைமீது பயணம் தொடரும். சேயாறு பற்றிக் கூறும் போது அந்த ஆற்று நீரின் சுழற்சியை ‘வணைகலத் திகிரியின் குமிழி சுழலும் ‘ (476) என்று கெளசிகனார் கூறுகிறார். அதாவது சேயாறு குயவனின் மட்கலம் போன்று குழிகள் சுழல ஓடிக் கொண்டிருக்கும்.

சேயாற்றங்கரைக்கு அருகிலேயே நன்னனின் மூதூர் உள்ளது என்பதை ‘நனிசேய்த்தவன்றன் பழவிறன் மூதூர் ‘ (487) எனும் அடி காட்டும்.

மூதூரின் அழகை கெளசிகனார் பத்து அடிகளில் கூறுகிறார். மூதூரின் மதில் ‘நிவந்தோங்கு வரை ‘ எனக் காட்டப்படுகிறது. அந்நகரில் செல்வம் துயில் கொண்டு அங்கேயே கிடக்கும் என்பதை நிதியம் துஞ்சும் எனும் சொற்றொடர் மூலம் அறியலாம். மேலும் அந்நகர் மக்கள் ‘பதிஎழல் அறியாப் பழங்குடி ‘யைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு எழுதுதல் மரபு என்பதை ‘பதிஎழு வறியாப் பழங்குடி கெழீஇஅ ‘ என்று புகார் பற்றி சிலம்பு காட்டுவதிலிருந்து அறியலாம்.

‘ நியமம் ‘ என்ற சொல்லால் அங்குள்ள அங்காடித் தெரு குறிக்கப்படுகிறது. ‘வாணிகர் உறையுள் நியமம் ‘ எனத் திருவிளையாடற்புராணமும் கூறுகிறது. மேலும் தெருக்கள் ஆறுகள் போன்றும் வீடுகள் ஆறுகளின் கரைகள் போன்றும் உவமிக்கப்படுகின்றன. மலை முகில் போன்ற மாடங்கள் இருந்தனவாம். மலைகள் அடிவாரத்தே அடிப்பக்கம் ஒழுங்காகவும் உச்சிகள் மாறுபட்ட உயரங்களிலும் காணப்படும் தோற்றத்தை உடையன. அது போன்றே மாடங்கள் உயரத்தால் உச்சிகள் வேறுபட்டு அடியில் ஒழுங்காக காணப்பட்டன எனும் நயம் பாராட்டத் தக்க ஒன்றாகும்.

இதே உவமையை ‘மழையென மருளும் மகிழ் செய்மாடம் ‘ என மதுரைக் காஞ்சி கூறுகிறது. நகரின் அரண்மனை வாயிலில் யாவரும் அஞ்சத்தக்க மறவர்கள் காவல் காத்து நிற்பார்கள். பாணரும் கூத்தரும் அஞ்சாமல் அவ்வழியே செல்லலாம். பண்டை மன்னர்கள் வாயில் பற்றி சிறுபாணாற்றுப்படை

‘பொருநர்க் காயினும் புலவர்க் காயினும்

அருமறை நாவின் அந்தணர்க் காயினும்

அடையா வாயில் ‘

எனக் கூறும் கருத்து எண்ணத்தக்கது.

நன்னனிடம் பரிசில் பெற வருபவர்களைப் பார்ப்பவர்கள் மகிழ்ந்து நோக்குவர்! விருந்தினராகத் தங்க அழைப்பர்!

அடுத்து நன்னனின் அரண்மனை முற்றத்தை அடையலாம். அம்முற்றத்திலே நன்னனுக்கு மக்கள் அன்பாய் வழங்கிய பொருட்கள் குவிந்து காணப்படுகின்றன. அப்பொருள்களில் ஒன்றாக ‘ஊமை எண்கின் குடாவடிக் குருளை ‘ (501) எனும் வாய் திறவாக் கரடிக் குட்டியைக் காணலாம். மேலும் ‘வரை வாழ் வருடை ‘ என்ற சொற்றொடர் ‘வருடை ‘ எனும் மலை ஆட்டைக் காட்டுகிறது. இந்த வருடைக்கு எட்டுக் கால்கள் இருந்தன ; இதற்கு முதுகிலும் கால்கள் உண்டு. என்று நீலகேசி கூறும். மானின் கன்று, யானையின் சிறு கன்று, சிறிய கீரி, காட்டுக் குதிரை, உடும்பு, மயில், காட்டுச் சேவல், பலாப்பழம், சாறுள்ள பழம், நறைக் கொடி, கற்பூரம், நூறைக் கிழங்கு, காந்தட்பூ, நாகப்பூ, சந்தனம், பச்சை மிளகு, மூங்கிற்குழாயில் ஊரிய தேன், கள், தயிர், தேன் அடைகள் போன்ற பல பொருள்கள் அங்கே குவிந்து கிடக்குமாம். அவை குவிந்து கிடப்பதை

குடமாலை பிறந்த தண்பெருங் காவிரி

கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப

என்ற அடிகள் மூலம் கெளசிகனார் பாடி இருக்கிறார். காவிரி ஆறானது பல பொருள்களை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் புகார் போல நன்னனுடைய முற்றமானது விளங்கியதாம்.

மேலும் அம்முற்றத்தில் யானைகள் முழங்கிக் கொண்டு இருக்கும். பூந்தாதுகள் எங்கும் பரவிக் கிடக்கும்.

பரிசில் பெற விரும்புபவர்கள் அம்முற்றத்தை மழை முழக்கம் போல மத்தளத்தை ஒலிக்கச் செய்ய வேண்டும். குழலை இசைத்து ஒலியெழுப்பிப் பாடவேண்டும். விறலியர்கள் மரபு நிலை மாறாது ஆட வேண்டும்.

அவ்வாறு ஆடிப் பாடும் போது முதலில் கடவுளை வாழ்த்திப் பாடவேண்டும். பிறகு நன்னன் புகழ் பாடி அவனை வாழ்த்தல் நலம் பயக்கும்.

புகழ் நிலைபெற கொடைத்தொழில் செய்பவனே! என அவனை விளித்து அவனது வெற்றிகளைப் பாடுங்கால் தொடர்ந்து பாட விடாது நன்னன் வந்து ‘வந்தது சாலும் வருத்தமும் பெரிதென ‘ (546) எனக் கூறுவான்.

என்மேல் விருப்பம் வைத்து வந்த வழியில் உங்களுக்கு உண்டான வருத்தமும் பெரிது என்று கூறி உள்ளே அழைத்துச் செல்வான். சான்றோர் அவையில் நல்ல இருக்கையில் அமர்த்துவான்.

உலகில் பலர் தோன்றுகிறார்கள்; மறைகிறார்கள். அவர்தம் எண்ணிக்கை குவியலான மணலின் அளவைவிடப் பெயது. ‘வடுவாழ் எக்கர் மணலினும் பலரே ‘ (556) அதனால் நன்னன் ‘புகழொடும் கழிக நம்வரைந்த நாள் ‘ (557) என்று எண்ணுவானாம். அவ்வாறு தன் வாழ்நாளைப் புகழுடன் கழிக்க நினைப்பவன் வந்தவர்க்கு முதலில் ‘இழை மருங்கறிய நுழைநூற் கலிங்கம் ‘ (561) உடுத்துவான். அங்கேயே பலநாள் தங்கி இருக்கும்படி வேண்டுவான். வெண்ணெல் அரிசியும், தசைத்துண்டங்களூம் தருவன்.

சிலநாள் இருந்தபின் நன்னன் மனம் வருந்தாதபடி ‘எங்கள் பழைய நகருக்குப் போக எண்ணம் கொண்டோம் ‘ எனக் கூறினால் வந்த விருந்தினர்க் குழுவின் தலைவனுக்குப் பொற்றாமரை மலர் சூட்டுவான். அவ்வாறு பொற்றாமரை மலர் சூட்டுவதை ‘பைம்பொற்றாமரை பாணர் சூட்டி ‘ எனப் பதிற்றுப் பத்தும் காட்டுகிறது.

விறலியர்க்குப் பொன்னாலான அணிகள் தருவான். நீரொட்டம் போலச் செல்லும் நெடிய தேர்கள் அளிப்பான் என்பதை ‘நீீரியக் கன்ன நிரைசெலல்ல் நெடுட்தேர் ‘ (571) எனும் அடி காட்டுகிறது. பெரிய யானைகள் மணி கட்டிய காளைகளுடன் பசுக்கள் ஆகியன அளிப்பான்.

நன்னன் அளிக்கும் குதிரையைக் கெளசிகனார் கொய்சுவல் புரவி என்கிறார். அதன் பொருள் மயிர் கத்தரிக்கப்பட்ட கழுத்துள்ள புரவி என்பதாகும்.

அக்குதிரை சிறந்தது என உரை எழுதும் நச்சினார்க்கினியர் செருக்குள்ள குதிரைக்கு மயிர் அதிகம் வளரும் என்று கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

‘நிலம் தின்னக் கிடந்த நிதியம் ‘ அனைத்து அளிக்கும் நன்னன் முதல் நாள் எப்படிப் பழகி மகிழ்ந்தானோ அதே போல் மலர்ச்சியுடன் தருவான்.

தன்னிடம் பொருள் பெற்றவர்களிடம் எப்போதும் செல்வம் குறையக் கூடாது என்ற எண்ணத்தில் தன்னுடைய நவிர மலை எவ்வாறு கைம்மாறு கருதாமல் மழை பொழியச் எய்கிறதோ அதே போல நன்னன் சிறப்பு செய்வான்.

அவ்வாறு நன்னனிடம் பரிசு பெற்று வரும் கூத்தன் கூறுகிறான். நீங்களூம் நன்னனிடம் செல்லுங்கள் என்று அவன் அக்கூட்டத்தலைவனை அற்றுப்படுத்துகிறான்.

மலைபடுகடாத்தில் மட்டுமே பிறமொழிச் சொற்கள் இடம் பெறவில்லை என திரு மா. இராசமாணிக்கனார் கூறுவது பிற ஆற்றுப்படைகளிலிருந்து இதை வேறுபடுத்துகிறது.

பிற ஆற்றுப்படைகளில் நாய் எனும் சொல் காணப்பட இதில் ஞமலி எனும் சொல்லைக் காண முடிகிறது. எனவே பத்துப் பாட்டுள் இதைத் தூய தமிழ்ப் பாட்டு என்று திரு. ஆ. இன்னாசி கூறுகிறார்.

மேலும் பதின்மூன்று இசைக்கருவிகள் பற்றிக் கூறும் நூல் மலைபடுகடாம் ஒன்றே ஆகும். அதில் வரும் நன்னன் மட்டுமே வருபவர்க்கு தேர், யானை, புரவி இவற்றுடன் ஆநிரைகளையும் அளிக்கிறான். அது பிற ஆற்றுப்படைகளுல் காணப்படாத ஒன்றாகும்.

மற்ற ஆற்றுப்படைகளில் காணப்படாத மலைவழி இதில் மட்டுமே கூறப்பெறுகிறது. செல்பவர்க்கு வழியில் ஏற்படும் ஊறுகளும் அவற்றை நீக்கும் வழிகளுமிதில் மட்டுமே காணப்படுகிறது.

வழிச் செல்வோர் தங்கக் கூடிய இடங்கள் மலைபடுகடாத்தில் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. மேலும் பிற ஆற்றுப் படைகள் விறலியைப் புனைந்து கூறும் போது ‘கேசாதி பாதம் ‘ எனும் முடிமுதல் அடிவரை முறையைப் பின்பற்றி உள்ளன.

மலைபடுகடாம் மட்டுமே இறைவனைக் கூறும் முறையான பாதாதி கேச முறையில் விறலியைப் புனைந்து எழுதிகிறது. மலைபடுகடாத்துள் மட்டுமே மன்னனின் முன்னோர் குறிப்பு இல்லை. மாறாக மன்னனின் தேவியைப் புகழ்ந்து கூறிப் பிறகு மன்னனை அறிமுகப்படுத்தும் புதிய முறை இதில் பின்பற்றப்படுகிறது. மேலும் அடித்தொடரே நூலின் பெயராக அமைந்த சிறப்பு மலைபடுகடாம் மட்டுமே பெறுகிறது.

பல்வேறு உவமைகள் இந்நூலில் உள்ளனவெனினும் ஒரே ஒரு உருவகமாக ‘மலைபடுகடாஅ மாடிரத் தியம்ப ‘ என்பது விளங்குகிறது.

நடுகற்களைப் பற்றிய செய்திகள் பிற ஆற்றுப்படை நூல்களில் இல்லை. ஆற்றுப்படுத்தும் கூத்தன் முதலில் நன்னது புகழ், போய்ச்சேரும் வழி, அவனது ஊர், மதில், அரண்மனை, கொடை முதலியவற்றைத் தொகுத்துக் கூறிவிட்டு பிறகு தனித்தனியே விரித்துக் கூறுவான் .அவ்வாறு முதலில் தொகுத்தும் பிறகு விரித்தும் சொல்லும் முறையை மலைபடுகடாம் காட்டுகிறது.

மலைபடுகடாத்தில் கூறப்பட்டுள்ள வழி கற்பனை வழியன்று; உண்மையானது என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

நன்னனின் முற்றத்தில் உள்ள பொருள்கள் பல மக்களால் தரப்பட்டவை என்பதால் மக்கள் மன்னனிடம் எந்த அளவு அன்பு வைத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

ஆகவே பத்துப்பாட்டு நூல்களுல் மலைபடுகடாம் தனக்கென சில தனிப்பண்புகள் பெற்றுத்திகழ்கின்றது என்பது தெளிவாக விளங்குகிறது எனலாம்.

====

திண்ணையில் வளவ துரையன் படைப்புகள்

  • பரிபாடலில் திருமால்
  • அ முத்துலிங்கம் பற்றி
  • கிரீZ கார்னாட் நாடகம் பற்றி

    Series Navigation

  • வளவ.துரையன்

    வளவ.துரையன்