நந்திக் கலம்பகம்.

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

வளவதுரையன்


கலம்பகம் என்பது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு + அகம் எனப் பிரிக்கப்படும். அதாவது கலப்பதற்கு உரிய இடமுடையது என்று பொருள்படும். அகம், புறம் முதலாகிய பல்வகைப் பொருள்களும், வெண்பா முதலிய பாவகைகளூம், தாழிசை முதலான பாவினங்களும் கலப்பதால் இப்பெயர் வந்தது.

தோள், வகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தூது, தவம், மடக்கு, மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, ஊர், வண்டு, தழை, ஊசல் முதலான உறுப்புகளோடு பிற்காலத்தில் வந்துள்ள பிச்சியர், கொற்றியார், இடைச்சியார், வலைச்சியார் முதலிய உறூப்புகளும் விரவி வருமாறு கலம்பகம் பாடப்படும்.

கலம்பக நூலில் தேவர்க்கு நூறும், மறையோருக்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூரும், அமைச்சர்ர்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளார்க்கு முப்பதும் பாடுவது மரபாகும்.

கலம்பக நூலின் இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல், வச்சணந்திமாலை, இலக்கண விளக்கம் முதலிய நூல்களில் பார்க்கலாம்.

நந்திக் கலம்பகம் கலம்பக நூல்களுக்கு முதல் நூலாகக் கருதப் படுகிறாது. என்வேதான் இந்நூலில் ஒரு சில உறுப்புகளே அமைந்துள்ளன

பல்லவ மன்னர் மரபில் வந்த மூன்றாம் நந்திவர்மனே நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவனாவான். இம் மன்னனின் காலம் கி. பி. 825 முதல் கி. பி. 850 வரை என்று வரலாற்று ஆசிரியர்கள் கல்வெட்டுச் சான்றுகள் மூலம் நிறுவிகின்றனர். எனவே இவ்வேந்தன் சுமார் 1500 ஆண்டுகளூக்கு முன்னால் வாழ்ந்தவன் என்று தோன்றுகிறது. ஆதலால் இந்நூல் தோன்றிய காலமும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம்.

அரசர்கள் மீது பாடப்படும் கலம்பகம் தொண்ணூறு பாடல்களால் பாடப்படுவதுதான் மரபு எனினும் நந்திக் கலம்பகத்தில் நூறு பாடல்களுக்கு மேல் உள்ளன. நந்தி வர்மன் மீது பாடப்பட்ட தனிப்பாடல்களூம் இக்கலம்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாமோ என ஐயம் தோன்றுகிறது.

இந்நூலின் ஆசிரியர் பெயரும், ஊரும், நாடு பிறவும் சரியாகத் தெரியவில்லை. சில செய்திகள் செவி வழக்காகக் கதைப் போக்காக நிலவுகின்றன.

நந்தி வர்மனின் மாற்றாந்தாய்க்குப் பிறந்த ஆண்மக்கள் நால்வர் அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றனர். இந்நூலில் வரும் ‘தம்பியர் எண்ணமெலாம் பழுதாக வென்ற தலைமான வீரத்துவசன் ‘ எனும் அடியால் இதனை அறியலாம். பிறகு அந்த நால்வருள் ஒருவன் மந்திர வித்தையும், மற்றொருவன் தந்திர(சூழ்ச்சி) வித்தையும், வேறொருவன் வாட்போர் செய்யும் திறமையும், பிறிதொருவன் செய்யுளில் அறம் வைத்துப் பாடும் திறமையும் பெற்றனர்.

செய்யுள் இயற்றும் திறமை பெற்றவர் பாடல்களில் நந்தி வர்மனைப் புகழ்வதுபோல் ஆனால் இடை இடையே வசைக் குறிப்புகளை வைத்து அறம்பாடி இந்நூலை இயற்றினார்.

ஆனால் அவர் இந்நூல் பாடியபின் மனம் மாறித் துறவு பூண்டு வீதிவீதியாய்ப் பிச்சை எடுத்து உண்டு வாழத் தொடங்கினார். அவ்வாறு வீதி வழியே வரும்போது தான் இயற்றிய இந்நூலின் பாடல்களைப் பாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வூரின் கணிகை ஒருத்தியும் அவர் மூலம் இப்பாடல்களைக் கற்று பாடி வந்தாள்.

ஒருநாள் ஊர்க்காவலர், அவள் பாடிய ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம் ‘ என்ற பாட்டைக் கேட்டு அப்பாட்டில் தம் மன்னன் மாண்டு போனதாக வரும் வசைபற்றி அறிந்து திடுக்கிட்டனர். அரண்மனை சென்று அரசனிடம் தெரிவித்தனர். அரசன் கணிகை மூலம் பாடிய துறவியை வரவழைத்தான்.

பாடலின் இனிமையை உணர்ந்த நந்திவர்மன் துறவியிடம் முழுநூலையும் பாடுமாறு வேண்டினான். துறவி தன் வரலாற்றைக் கூறித் தமையனிடம் உண்மையைக் கூறினார். பாடல்களைப் பாடுமாறு வற்புறுத்த வேண்டாம் என்றார். மன்னன் சீற்றம் கொண்டு வலியுறுத்த துறவி ஒப்புக் கொண்டார்.

‘பச்சை ஓலைகளால் நூறு பந்தர் அமைத்து மன்னன் அரச கோலத்துடன் அவற்றின் கீழ் வீற்றிருந்து பாடல்களைக் கேட்க வேண்டும். ஒரு பாட்டு முடிந்த உடன் அப்பந்தர் எரிந்து விடும். இறுதிப் பாட்டைக் கேட்கக் கடைசிப் பந்தலில் விறகுகள் அடுக்கி பிணம்போல் படுத்துக் கொள்ள வேண்டும். பாட்டு முடிந்ததும் விறகிலும் உடலிலும் தீப்பற்றும். இதற்ற்குச் சம்மதமா ‘ என்று துறவி கேட்டார்.

தமிழின் மீது பற்றும் தமிழ்ப்பாக்களின் மீது காதலும் கொண்ட நந்தி வர்மன் இசைந்தான். இறுதிப் பாடல் கேட்ட மன்னன் வானுலகு அடைந்தான்.

‘நந்திக் கலம்பகத்தால் மாண்டகதை நாடறியும் ‘

என்ற சோமேசர் முதுமொழி வெண்பாப் பாடலும்

‘…. கலம்பகமே கொண்டு காயம் விட்ட

தெள்ளாறை நந்தி என்னும் தொண்டைமான் ‘

என்னும் தொண்டை மண்டல சதகப் பாடலும் மேற்கூறிய நிகழ்ச்சிக்குச் சான்றாக விளங்குகின்றன.

மேலும் இந்நூலில் நந்திவர்மன் ‘காடவற்கு முந்தோன்றல் ‘ என்று குறிப்பிடப்படுவதால் நூலாரசியரின் பெயர் ‘காடவர் ‘ என்று இருந்திருக்கலாம் எனக் கூறுவர்.

எவ்வாராயினும் இந்நூல் சொற்சுவை, பொருட்சுவைகள் நிரம்பப் பெற்று இன்றும் அழியாப் புகழுடன் விளங்குகிறது. நந்திவர்மன் கேட்டு மயங்கிய பாடலை முதலில் காண்போம். இப்பாடலில் நந்திவர்மன் புகழ்வது போல் மறைமுகமாகப் பழிக்கப்படுகிறான்.

‘நந்திவர்மனே! உன் முக அழகு நிலவை அடைந்து விட்டது; உன் புகழ் கடலில் மூழ்கி விட்டது; உன் வீரமோ புலியிடம் புகுந்து விட்டது; உன் கரங்களின் கொடை கற்பக மரத்திடம் சேர்ந்து விட்டது; உன் நாட்டின் திருமகள் திருமாலிடம் புகுந்து விட்டாள்; உன் உடல் செந்நிற நெருப்பை அடைந்தது ‘ எனும் பொருளில் அமைந்துள்ள பாடல் இதோ.

வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறூ புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்

செந்தழல் அடைந்ததுன் தேகம்

நானுமென் கலியும் எவ்விடம் புகுவேம்

நந்தியே நந்தயா பரனே

எல்லாமே உன்னைவிட்டு அகன்றன. எனவே நீயே இல்லை எனும் மறைபொருள் இதில் ஒலிப்பதை நாம் உணரலாம்.

இதுபோன்றே இந்நூல் அறம் வைத்துப் பாடி மறைந்துள்ள சில வசைக்குறிப்புகளை ஆங்காங்கே காணலாம்.

நூல் ‘மண்டலம் ‘ என்ற மங்கலச் சொல்லால் தொடங்குகிறது என்பர். மண்டலம் எனும் சொல்லுக்கு உலகம் எனப்பொருள் இருந்தாலும் அது மண்டு + அலம் எனப்பிரிந்து ‘மிக்க வருத்தம் ‘ என்று மங்கலம் அல்லாத பொருளையும் காட்டுகிறது.

முதல் பாடலில் ‘உலகுடையான் திருமுடியும் ‘ என்பது நந்திவர்மனின் புகழ்மிக்க முடியைக் குறிப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் ‘திருமுடியும் ‘ என்பது திரு, முடியும் என்று இரு சொற்களாகி செல்வமானது அழிந்து போகும் எனும் பொருள் தருகிறது.

ஏழாம் பாடலில் ‘முதல்வனுக்குப் பழுது ‘ என்பது நந்திவர்மனுக்கு கேடு எனும் பொருளை மறைமுகமாகச் சுட்டுகிறது.

இதுபோலவே 53ஆம் பாடலில் நந்திவர்மன் ‘கரியாய் நின்ற மன்னா ‘ என்ற சொற்றொடரால் சிறப்பிக்கப்படுகிறான். கரி என்பதற்கு சான்று எனப்பொருள் கொண்டு இவ்வுலகத்திற்குச் சான்றாக விளங்குபவனே என்பது இதன் தெளிவான உரையாகும். ஆனால் இதில் ‘எரிந்து கரியாய் சாம்பலாய் போகும் அரசே ‘ என்ற வசைபொருள் மறைந்திருப்பதையும் கூறலாம்.

இவ்வாறு ஆங்காங்கே பல வசை பொருள்கள் இருந்தாலும் இக்கலம்பகப் பாடல்களின் சிறப்பு அவற்றையும் மீறி வெளிக்கிளம்பி மிளிர்கிறது.

மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியும் காலம்

மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம்

கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம்

கொகனக நகைமுல்லை முகைநகைக்கும் காலம்

செங்கைமுகில் அனையகொடைச் செம்பொன்பெய் காலம்

தியாகியெனும் நந்தியருள் சேராத காலம்

அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம்

அவரொவருவர் நாமொருவர் ஆனகொடுங் காலம்

என்று தலைவி தன் தோழியிடம் கார்காலத்தைப் பற்றிக் கூறும் பாடல் பல்வேறு நயங்களை எழுப்புகிறது. கார்காலத்தில் மழை பொழியும்; அதோடு தலைவரைப் பிரிந்திருக்கின்ற கண்களும் கண்ணீரைப் பொழியும்; நந்திவர்மனைச் சிறப்பிக்குமுகத்தான் கொடுத்துக் கொடுத்துச் சிவந்தகை என்பதைக் காட்ட செங்கை என்று அவள் கூறுகிறாள். மேலும் மேகத்தை உவமையாகக் கூறவந்த ஆசிரியர் மேகத்தைக் குறிக்கும் கார், மாசு, புயல் போன்ற சொற்களை விடுத்து முகில் என்று கூறுகிறார். ஏனெனில் முகில் என்பது நீர்கொண்டு எழுந்த மழை பெய்யத்தயாராய் இருக்கும் மேகமாகும். அதுபோல நந்திவர்மன் எப்போதும் உடனே கொடைவழங்க அணியமாய் உள்ளானாம்.

மற்றொரு தலைவி தலைவன் வருவான் எனக் காத்திருக்கான். மணமாகி இல்லறம் நடத்திய அவன் பரத்தையர் பால் சென்றுவிட்டான். இப்போது அவன் மீண்டு தலைவியிடம் வர எண்ணுகிறான். ஆனால் ‘தலைவி தன்மீது வெறுப்பாக இருப்பாள்; எனவே அவள் சினம் தவிர்க்க வேண்டும் ‘ எனக்கருதிப் பாணன் ஒருவனைத் தூதாக அனுப்பினான்.

பாணன் தலைவி முன் சென்றான். ஆடினான்; பாடினான்; ஆனால் தலைவி மனம் ஒப்பவில்லை. அவள் தலைவனுக்காக வந்த பாணனை வெறுத்தாள்; இகழ்ந்து பேசினாள்; உடனே அங்கிருந்து போகும்படி கூறினாள். ‘பாணனே! உன் பாட்டு ஒலி கேட்டு அதைக் காட்டிலே அழுகின்ற பேய் என்று என் தாய் கூறினாள். மற்றவர்கள் இல்லை, இல்லை அது நரியின் ஊளைஒலி என்றனர். என் தோழியோ நாயின் குரைப்பொலி என்றாள். இவ்வாறு தலைவி நகைச்சுவையைக் கலந்து பேசும் பாடல் இதுதான்:

ஈட்டு புகழ்நந்தி பாண!நீ எங்கையர்தம்

வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்

பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி

நாயென்றாள் நீஎன்றேன் நான்.

நந்திவர்மன் நாட்டில் மகளிர் காலில் அணிந்துள்ள சிலம்புகளில் முத்து விளங்கித் திகழும். அவர்கள் மேலாடைமீதும் மாலையாகச் செய்து அணிந்திருப்பதும் முத்துகளே ஆகும். முத்துகள் குவியல் குவியலாக வேடுகளில் குவித்து வைக்கபடிருப்பதால் அவற்றின் ஒளி விளக்கேற்றி வைத்திருப்பது போல் தோன்றும். போர்க்கலத்திலும் படைவீடுகளில் இம்முத்துகளே ஒளி வீசத்திகழ்கின்றன. இவ்வாறு நந்தி நாட்டின் முத்துகளின் பெருமையை ஒரு தலைவி கூறும் பாடல் இது:

அடிவிளக் கும்துகில் ஆடைவிளக்கும் அரசர்பந்திப்

பிடிவிளக் குமெங்கள் ஊரார்விளக்கும் பெரும்புகழால்

படிவிளக் கும்நந்தி எங்கோன் பெரும்படை வீட்டுக்கெல்லாம்

விடிவிளக் கும்இது வேறாங்கள் பூண்பதும் வெண்முத்தமே

நூலின் ஆசிரியர் நந்திவர்மனின் கொடைச்சிறப்பை ஒரு வெண்பாவில் வெகுவாகப் புகழ்ந்துரைக்கிறார். புலவர்கள் அவனை நாடி வருகின்றனர். அவன் புகழைப் பாடிப் பெரும் பரிசில்களைப் பெறுகின்றனர். பெற்ற அப்புலவர்கள் பெரிய செல்வராகி மன்னராக மாறிவிட்டனர். எனவே இரவலர்களே அங்கு இல்லை. இனி இந்த மண்ணுலகில் இரவரலர்கள் உண்டென்றால் அவை குமுதமாகிய அல்லி மலர்களே ஆகும். ஏனெனில் அவை மட்டுமே இரவில் அலர்கின்றன(மலர்கின்றன)

இந்தப் புவியில் இரவலர்உண் டென்பதெல்லாம்

அந்தக் குமுதமே அல்லவா – நந்தி

தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி

அடங்கப்பூ பாலரா னார்.

ஒரு தோழி தன் தலைவியின் நிலை கண்டு வருந்துவதாக ஒரு பாடல் காணலாம். இந்தத்தலைவி தேச பண்டாரி எனும் பட்டப் பெயருடைய நந்தி மன்னன் மீது காதல் கொண்டாள். அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். கனவு கண்டு அதில் அம்மன்னன் தன் படுக்கையில் வருவதாக மகிழ்கிறாள். ஆனால் நனவில் அவன் வராததால் துன்புறூகிறாள். ஆயர்கள் ஊதுகின்ற புல்லாங்குழலின் இன்னிசைக்கே அவள் வருந்துகிறாள். இவள் மாமரச் சோலையில் வாழ்கின்ற குயிலின் குரலைக் கேட்டால் என்ன பாடுபடுவாளோ என்று தோழி தலைவி நிலைகண்டு இரங்குகிறாள்.

ஆயர் வாய்க்குழல் காற்றுஉறு கின்றிலள்

ஏயும் மாங்குயில்க் கென்னைகொல் ஆவதே

தேயம் ஆர்புகழ்த் தேசபண் டாரிதன்

பாயல் மேல்வரல் பார்த்துநின் றாளுக்கே!

இவ்வாறு நந்திக் கலம்பகத்தின் பாடல்கள் எல்லாச் சுவைகளும் நிரம்பி, அகத்துறையும் புறத்துறையும் கலந்து, சொல்நயமும் பொருள்நயமும் கொண்டு படிப்போரின் சிந்தனையும் தூண்டி இன்பம் தருகின்றன.

தமிழ்கூறும் நல்லுலகில் சிற்றிலக்கிய வரிசைகளில் நந்திக் கலம்பகத்திற்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு என்று துணிந்து கூறலாம்.

—-

திண்ணை பக்கங்களில் வளவ துரையன்

  • பரிபாடலில் திருமால்

  • அ முத்துலிங்கம் பற்றி
  • கிரீஷ் கார்னாட் நாடகம் பற்றி
    Series Navigation

  • வளவ.துரையன்

    வளவ.துரையன்