கவிதைக் கோட்பாடு பற்றி…

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

தமிழவன்


என் நண்பர் திரு.பிரம்மராஜன் உலகத் தமிழ் மின்இதழில் தமிழவனின் கவிதைக் கோட்பாட்டில் முன் தீர்மானம் இருக்கிறது என்று கூறியிருப்பது குறித்து என் சில சிந்தனைகளை முன் வைக்கலாம் என்று கருதுகிறேன்.

அவர் சமீபத்தில் புதுக்கவிதைகள் பற்றிச் சில நல்ல கட்டுரைகளை எழுதி இருப்பதை நண்பர்கள் சமீபத்தில் எனக்குச் சுட்டிக் காட்டினார்கள்.அதனால் சற்று அதிக ஊக்கத்தோடு எதிர்வினை ஆற்றத் தோன்றுகிறது.

நான் தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும் என்று ஒரு கட்டுரைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.அந்த நூலைப் படிப்பவர்களுக்குக் கோட்பாடு என்பது என்ன என்று தெரியும். போதிய விளக்கங்கள் அந்த நூலில் உண்டு. ‘தமிழாய்வுச் சரித்திரத்தில் முதன்முதலில் செய்யப்படும் கவிதைக் கோட்பாடாகும் இது ‘ என்று எழுதப்பட்டுள்ளது.

பிரம்மராஜன் ஒரு ஆங்கிலப் பேராசிரியராகவும் நான் மிக மதிக்கும் உயர்ந்த கவிஞராகவும் இருப்பதால் தமிழ் ஆய்வுச் சரித்திரத்தில் முதல் கவிதைக் கோட்பாடு என்ற என் உரிமைகோரலை அவர் மறுக்கிறார் என்றே படுகிறது.( குறிப்பிடும் நூலையே படிக்கவில்லை என்று கூறி என்னைக் காலை வாரிவிடமாட்டார் என்று நம்புகிறேன்)

இனி பிரச்சனைக்கு வருகிறேன்.அந்த நூலின் முதல் கட்டுரையில் சுமார் 5 பக்கங்களில் நான் கோட்பாடு என்றால் என்ன என்று விளக்கியிருக்கிறேன்.கோட்பாடு என்பது ஏற்கனவே ஏதோ ஒரு மொழியில் செய்யப் பட்டதாய் இருக்கலாம், அல்லது சுயமொழியில் மிகுந்த தரவுகளைத் தொகுத்து அகில உலகக் கவிதைகளுக்குப் பொருந்துமாறு செய்யபட்டதாய் இருக்கலாம்.இது மரபான கோட்பாடு.சமீபத்திய கோட்பாடு இந்த அகில உலகத் தன்மையைக் கேள்விக்கு உள்படுத்தாமலேயே இன்னும் ஓர் அம்சத்தையும் சேர்த்துக் கொள்கிறது.அதாவது அமைப்பியல் வந்தபிறகு மொழிசார்ந்த ஓர் பெளதீகத் தன்மையைச் சேர்த்துக் கொள்கிறது.

அகில உலகத்தன்மைக்காக, நாம் நம் மொழியில் கோட்பாடு எழுதும் போதும் கூட ஒருவகையான முன்தீர்மானத்தை மேற்கொண்டே ஆக வேண்டும்.சுமார்165 பக்க அளவில் இன்றைய தமிழ்க் கவிதையை மேற்குறிப்பிட்ட நூலில் ஆய்ந்துளேன்.தொல்காப்பியம் போன்ற நூல்களில் காணப்படும் கூற்று முதலான கருத்தாக்கங்களையும் பயன்படுத்த முடியும் என்று காட்டியுள்ளேன்.

நான் கண்டடைந்த சில முடிபுகள்:1)தமிழ்க் கவிதையியலும் இன்றைய அகில உலகப் போக்கை

அனுசரித்துச் செல்கிறது2)முன்தீர்மானம் கோட்பாட்டில் தவிர்க்கவியலாமல் இருந்தாலும் எதிர் பாராத புது முடிபுகளை ஆய்பவன் கண்டடைய முடியும்.(விமர்சகன் -ஆய்பவன் எதிர்வு பிரச்சனைக்குரியதாகிறது.ஆய்வுத்தன்மை நல்ல விமர்சனத்தில் கண்டிப்பாக இருக்கும். அல்லது விமர்சனம் வெறும் அபிப்பிராய உதிர்ப்பாக சிறுத்துவிடும் அபாய முள்ளது))3)மொழியில் செயல்படும்

நாங்கூரம் போன்ற இலக்கணக் கூறுகளான தன்மை மற்றும் முன்னிலை, கவிதைமன வெளிப் பாட்டிலும் நாங்கூரமடித்துக் கிடக்கும்.இதனால் எவ்வளவுதான் அரூபவகைக் கவிதையானாலும்

அதை ஒரு அளவைக்கு உட்படுத்த முடியும்.அதாவது மன இயங்கு போக்கை அளவிடமுடியும் என்ற உளவியல்வாதிகளின் கருத்து. அல்லது உளவியல் சாத்திய மற்றுப் போய் விடும்.லக்கான்

உண்மை என்று ஒருவகை இன்மையைக் கூறுகிறார்.அதாவது மொழிசார்ந்த மெளனங்களின் வழியான,வந்துமறையும் சாயல்களின் ஆய்வு இது.4)பிரம்மராஜனின் கவிதை ஒன்றில் வரும் ஆவியின் சொல்முறைக் குரலை இந்த விதமாய் கண்டுபிடிக்க முடியும் என்று காட்டியுள்ளேன் ( நம் கவிஞர்களுக்கு அவர்களைிப் பற்றி வரும் திறனாய்வைப் படிக்கவும் நேரமில்லை) 5)தமிழில் அடிக்கடி நாம் விமர்சனக் கட்டுரைகளில் பார்க்கும் ‘மெளனங்கள் படுத்துக்கிடக்கும் மன அவசம் தான் கவிதை ‘ என்பது போன்ற வாசகங்கள் அர்த்தம் பெற வேண்டுமானால் பல கவிதைகளை எடுத்து அவற்றை ஒவ்வொன்றாக விளக்கவேண்டும்.கோட்பாடு அதற்கு ஒரு முறைமையைக் கொடுக்கும். கோட்பாடு இல்லையென்றால் இத்தகைய வாசகங்கள் வெறும் பேத்தல்கள். 6)மார்க்சீயர்கள் கூறியது போல் புதுக்கவிதை அகமுகக் கவிதை அல்ல, மொழியடிப்படையிலான பொருள்முதல் வாதக்கவிதை என்றும் காட்டி யுள்ளேன்.

நூலின் சுருக்கத்தைக் கூறிக்கொண்டிருக்க முடியாது என்பதால் விட்டு விடுகிறேன்.புதியதாகப் பரிச்சயமில்லாத சிந்தனைகளை எழுத விரும்புபவர்களுக்கு ஒரு சூழல் இல்லாத தமிழில் யார் தான் எழுத விரும்புவார்கள் ?

—-

carlossa253@hotmail.com

பிரம்மராஜன் பற்றி

  • மாலதி
  • கலாப்ரியா

    கவிதை மொழியும் உரைநடை மொழியும்

  • நாகூர் ரூமி

    பிரம்மராஜன் கவிதைகள்

  • -கவிதைகள்
    Series Navigation

  • தமிழவன்

    தமிழவன்