உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

பாவண்ணன்


முழுஆண்டுத் தேர்வுகள் முடிந்து விடுப்பில் காலைமுதல் மாலைவரை ஆட்டம் ஆட்டம் என்று பசியையும் தாகத்தையும் மறந்து ஆடிக்கொண்டிருந்த இளம்பருவத்தில் நடந்த நிகழ்ச்சியொன்று மனத்தில் பசுமையாகப் பதிந்திருக்கிறது. நானும் சில நண்பர்களும் ஏரிக்கரையில் விளையாடிக்கொண்டிருந்தோம். திடாரென்று அருகிலிருந்த மாந்தோப்பில் மாங்காய் பறித்துத் தின்னும் ஆசை எல்லாருக்கும் முளைத்தது. உடனே காவல்காரன் கண்ணில் படாமல் தோப்பைச் சுற்றிவளைத்துக்கொண்டு சென்றோம். வேலி விலகியிருந்த ஒரு பக்கத்தின் வழியாக உள்ளே நுழைந்தோம். எனக்கு மரம் ஏறத் தெரியாது. மற்ற மூவரும் மரம் ஏறுவதில் கெட்டிக்காரர்கள். அவர்கள் மரத்தில் ஏறிப் பறித்துப்போடும் காய்களைச் சேகரித்துவைக்கும் வேலையைச் செய்வதாக ஏற்றுக்கொண்டேன் நான்.

நண்பர்கள் சரசரவென்று மேலே ஏறிக் காய்கள் அதிகமாகக் காணப்பட்ட பகுதியை நோக்கிச் சென்றார்கள். காய்கள் விழத்தொடங்கின. ஓடிஓடி ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கால்சட்டைப்பைகள் கொள்ளும் வரையில் நிரப்பிக்கொண்டேன். அச்சமும் ஆசையும் கலந்த மனநிலையில் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தேன். மரத்தில் ஏறிய நண்பர்கள் அப்போதும் விடாமல் காய்களைப் பறித்து வீசியபடி இருந்தனர். நான் ‘போதும் போதும் ‘ என்று அடங்கிய குரலில் அவர்களுக்குத் தகவலைத் தெரியப்படுத்தியபடி இருந்தேன். அவர்களை என் செய்தி எட்டவே இல்லை. தொடர்ந்து காய்கள் விழுந்தபடியே இருந்தன. காய்களின் மணத்தை நுகரும்போதே என் நாவில் எச்சில் ஊறத்தொடங்கியது.

எந்தத் திசையிலிருந்து அந்த மரத்தடிக்கு காவல்காரன் வந்துசேர்ந்தான் என்று தெரியவில்லை. மாங்காயின் மணத்தில் திளைத்திருந்த கணத்தில் என் சட்டையின் பின்புறம் கொத்தாகப் பிடிபட்டபோதுதான் அவன் வரவை அறியமுடிந்தது. ‘இத்தன நாளா காய்ங்கள திருடித்திருடித் தின்னறது நீங்கதானா, இன்னிக்கு ஒங்கள ரெண்டுல ஒன்னு பாக்காம விடறதில்ல, யாரு ஊட்டுப் பசங்கடா நீங்க ? ‘ என்றபடி முதுகில் ஒரு அடிகொடுத்தான். அதுவரை நடந்த திருட்டுகளுக்கெல்லாம் எங்களைக் காரணமாகக் காட்டுகிற அவசரம் அவன் குரலில் தொனித்தது. அச்சத்தில் என்னால் பேசவே முடியவில்லை. அவன் சத்தத்தைக்கேட்டு மரத்திலிருந்தவர்களும் தொப்தொப்பென்று கீழே குதித்தார்கள். தப்பித்து ஓட முயற்சி செய்த அவர்களையும் மடக்கிப் பிடித்தான் காவல்காரன். அவர்களுக்கும் அடிவிழுந்தது. ‘சொல்லுங்கடா யார் வேலை இது ? எத்தன நாளா நடத்தறீங்க இந்த வேலைய ? ‘ என்று அதட்டினான். அவனது மீசையையும் துடிக்கும் கருத்த உதடுகளையும் பார்க்கப்பார்க்க மனம் கலவரத்தில் ஒடுங்கியது.

முதலில் நாங்கள் யாருமே வாய்திறக்கவில்லை. ஒருவித அதிர்ச்சியில் உறைந்திருந்தோம். ‘ஒழுங்கா சொல்லிடுங்க, இல்ல போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்ட்டுட்டுப் போயிடுவேன். யார்டா ஒங்கள மரத்துல ஏறச் சொன்னது ? ‘ என்று ஒவ்வொருவருடைய முகத்தையும் பார்த்து அதட்டினான். சொல்லி வைத்தமாதிரி மூன்று நண்பர்களும் ‘அவன்தான் சாமி ஏறச் சொன்னான் ‘ என்று என் பக்கம் கையைக் காட்டினார்கள். என்னால் அதை நம்பவே முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஒருவித திணறலோடும் அதிர்ச்சியோடும் நான் அவர்களைப் பார்த்தேன். அவர்கள் என்னைக் கவனிக்கவே இல்லை. என் பக்கம் திரும்பிய காவல்காரன் என்னைக் கொன்றுவிடுவதுபோல பார்த்தான். ‘பாத்தா பசுபோல இருந்துகிட்டு இந்த வேலையெல்லாம் செய்யறியா ? ஒன்ன இன்னிக்கு உண்டு இல்லன்னு செய்யாம விடறதில்ல பாத்துக்கோ ‘ என்று சத்தமெழுப்பினான். நண்பர்கள் பைகளில் சோதனை போட்டான். அவர்களிடம் எதுவும் இல்லை. என் பைகளோ ஏற்கனவே மாங்காய்களால் நிரம்பியிருந்தன. நண்பர்களை மிரட்டலோடு அனுப்பிவைத்த காவல்காரன் பைநிறைய மாங்காய்களோடு இருந்த என்னைத் தோளைப்பற்றி நெட்டித் தள்ளியபடி என் வீட்டைநோக்கி நடத்தி அழைத்துவந்தான்.

தாங்கிக்கொள்ள முடியாத அந்த அவமானமான நேரத்திலும் அழைத்துச் சென்ற நண்பர்கள் இப்படி ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுச் சென்றுவிட்டார்களே என்று வருத்தம் கொண்டேன். வீட்டில் என் அம்மா முன்னிலையில் நிறுத்தப்பட்டதும் என் நிலைமை இன்னும் மோசமானது. சரமாரியான அடிகளும் வசைகளும் விழுந்தபடி இருந்தன. அடித்துஅடித்துக் கைசோர்ந்து என்னை இறுதியில் விட்டுவிட்டார்கள்.

அடிகளால் உண்டான வலியைவிட நண்பர்கள் அவசரம்அவசரமாக என்னைக் கைவிட்ட விதம்தான் என்னைப் பெரிதும் துக்கத்தில் ஆழ்த்தியது. பல நாட்கள் அதைப்பற்றியே யோசித்தபடி இருந்தேன். என்றோ ஒருநாள் தற்செயலாக எங்கள் பாடபுத்தகத்திலேயே ஒரு கதையைப் படிக்கநேர்ந்தது. இரண்டு நண்பர்கள் காட்டுக்குள் செல்கிறார்கள். வழியில் புலி எதிர்ப்படுகிறது. உடனே ஒருவன் அடுத்தவனுடன் கோர்த்திருந்த கையை உதறிவிட்டு சரசரவென்று மரத்திலேறித் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான். கைவிடப்பட்ட நண்பனுக்கு மரம் ஏறத் தெரியவில்லை. எதிர்பாராத விதமாக மனத்தில் ஓர் எண்ணம் உதிக்க, நின்ற இடத்திலேயே சவத்தைப்போல விழுந்துவிடுகிறான். புலி நெருங்குகிறது. சவமாகக் கிடக்கும் ஆளை முன்னும் பின்னும் நுகர்ந்து பார்க்கிறது. பிறகு வெளியேறிவிடுகிறது. புலி வெளியேறி வெகுநேரம் கடந்த பிறகு சவமாகக் கிடந்தவன் விழித்துக்கொள்கிறான். மரத்தின்மீது ஏறியிருந்த நண்பன் இறங்கிவந்து ‘புலி உன் காதில் என்னவோ சொன்னதே ? என்ன சொன்னது ? ‘ என்ற கேட்கிறான். வருத்தத்தில் இருந்த மற்ற நண்பன் ‘ஆபத்தில் உதவாத நண்பனை நம்பாதே ‘ என்று சொன்னதாக அமைதியுடன் எடுத்துரைக்கிறான். அதைப்பற்றியே சிறிதுநேரம் யோசித்தபடி இருந்தேன். ஆபத்து என்ற வரும்போது அவரவர்களுக்கு அவரவர் உயிரே முக்கியமாகப் படுகிறது. உதவி, தருமம் எல்லாம் தன்னைக் காப்பாற்றிக்கொண்ட பிறகே செய்யவேண்டிய செயல்களாகப் படுகின்றன. காலம் கடந்தபிறகு இது தவறான செயல்பாடு என்று தோன்றக்கூடும். குற்ற உணர்ச்சியும் பச்சாதாபமும் எழலாம். தன்னையே ஒருவன் கேவலமாக எண்ணிக்கொள்ளவும் கூடும். ஆனால் நெருக்கடியான கட்டத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதே முக்கியமாகிவிடுகிறது என்று தோன்றியது. எதிர்பாராத விதமாக என் நண்பர்கள் மாந்தோப்பில் நடந்துகொண்ட முறையையும் மனம் நினைத்துக்கொண்டது. அவர்கள் மீதிருந்த கசப்பு சற்றே தணியத்தொடங்கியது.

இளமையில் நேர்ந்த இந்த அனுபவத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் பல விஷயங்களை நேருக்குநேர் பார்க்கநேர்ந்திருக்கிறது. செய்தித்தாள்களில் இதையொத்த பல செய்திகளைப் படிக்கவும் நேர்ந்திருக்கிறது. புத்தகங்களில் பல கதைகளை வாசிக்கவும் நேர்ந்திருக்கிறது. குறிப்பாக ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘ என்னும் கதை பல தருணங்களில் மனத்தில் மிதந்துவருவதுண்டு.

அக்கதை ஒரு போர்முகாமில் நடப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது. குளிர் காலம். கடுமையான பனி பொழிந்தபடி இருக்கிறது. ஆற்றின் இப்பக்கத்தில் வீரர்கள் காத்திருக்கிறார்கள். மறுபக்கத்தில் எதிரிகள் முகாமிட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தாக்குதலுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை. உறைபனி தோன்றுவதற்கு முன்னர் தாக்குதலை நிகழ்த்திவிட வேண்டும் என வீரர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தலைமையிடமிருந்து எவ்விதமான தகவலும் இல்லாமலிருப்பது அவர்களைக் குழப்புகிறது. எனவே, சில நாட்களுக்குப் பின்னர் அவர்களுள் ஒருவன் மூலம் அந்தப் படைப்பிரிவின் மேலதிகாரி இருக்கும் ராணுவத் தலைமை அலுவலகத்துக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைக்கிறார்கள். கடிதத்தைக் கொண்டு சென்றவன் ஏதோ இனம்காண இயலாத அச்ச உணர்வு மிகுந்தவனாக இருக்கிறான். எப்படியே கடுமையான சிரமங்களுக்கிடையே தலைமையைச் சந்தித்து கடிதத்தைக் கொடுக்கிறான். அவர்கள் அவனிடம் சில கேள்விகள் கேட்கிறார்கள். அது அவனை விசாரணைக்கு உட்படுத்துவதைப்போல இருக்கிறது. அதன் விளைவாக அவனது அவநம்பிக்கை கலந்த அச்சஉணர்வு மேலம் அதிகரிக்கிறது.

நீண்ட நேரம் காத்திருந்தபிறகு அவர்கள் முத்திரையிடப்பட்ட ஒரு கடித உறையை அவனிடம் தருகிறார்கள். அன்று இரவுக்குள் எப்படியாவது அவன் அக்கடிதத்தைத் தன் படைப்பிரிவினரிடம் சேர்ப்பித்துவிட வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள். வந்த வழியில் திரும்பாமல் குறுக்கு வழியில் செல்லுமாறு அவர்கள் அவனைப் பணிக்கின்றனர். அவனது விருப்பத்துக்கு மாறாக ஒரு வழிகாட்டியையும் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கின்றனர். நடுப்பகல் கடந்த நிலையில் அவர்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள். பாதை மிக மோசமாக இருக்கிறது. காரோட்டி அடிக்கடி அவனைத் திரும்பிப் பார்ப்பதை அவன் எரிச்சலாக உணர்கிறான்.

கடிதத்தில் என்ன எழுதியிருக்கக்கூடும் என்று அறிவதில் அவன் மனத்தில் ஆவலெழுகிறது. எதிரியின் கண்காணிப்புக்கு உட்பட்ட நிலையில் பயணப்படுவதால் கடிதத்தில் அடங்கியிருக்கிற செய்தியை அறிந்துகொள்வது நல்லது என்று தனக்குள் கூறிக்கொள்கிறான். அந்த விருப்பம் மெல்லமெல்ல ஒரு ஜூரத்தைப்போல அவன் மனத்தில் படர்கிறது. காலம் கடத்தும் நோக்கில் காரோட்டியிடம் தம் இருக்கைகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் சிறிதுநேரம் வண்டியைத் தானே வண்டியை ஓட்டுவதாகவும் சொல்கிறான். ஒரு சதுப்பு நிலத்தை அடைந்தபோது வண்டி பழுதடைந்து நின்று விடுகிறது. இளைஞனான காரோட்டி வண்டியைச் சரிசெய்வதாகச் சொல்லிவிட்டு வண்டிக்கடியே செல்கிறான். அந்த இடைவெளியில் அவன் கடிதத்தை அவசரமாகப் பிரிக்கிறான். முத்திரை கலைந்துபோவதைப்பற்றி அவன் சிறிதும் கவலைப்படவில்லை. அவனைச் சுட்டுக் கொன்றுவிடுமாறு அக்கடிதத்தில் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பழுதைச் சரிபார்த்ததும் அந்த இளைஞனே வண்டியை ஓட்டுகிறான். தான் ஒரு கைதியாக ராணுவப்பாதுகாப்பின் கீழ் இருப்பதைப்பற்றி இப்போது அவனுக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை. காரோட்டியைக் கொன்று தப்பித்துச் செல்வதைப்பற்றி அவன் மனம் தீவிரமாக யோசிக்க ஆரம்பிக்கிறது. இரவு கவிகிறது. காரோட்டி தன் பள்ளிநாள்களில் காட்டின் மூலம் பெற்ற அனுபவங்களைப் பேசிப் பகிர்ந்துகொள்கிறான். அடர்ந்த காட்டுப்பகுதி வந்ததும் சுட்டுவிடலாம் என்ற முடிவில் இருக்கிறான் துாதுவன்.

தருணத்துக்காகக் காத்தபடி முழங்கால் மூட்டின்மீது துப்பாக்கியைப் பிடித்திருக்கிறான் துாதுவன். திடுமென ஒரு துப்பாக்கிக்குண்டு வெடிக்கிறது. அவன் தனது துப்பாக்கியிலிருந்தே குண்டு எழுந்ததாக எணணிக்கொண்டிருக்கையில் குண்டடி பட்டது தாமே எனத் தாமதமாக உணர்கிறான். துப்பாக்கி அவனது கையிலிருந்து நழுவுகிறது. வெகுவேகமாக வண்டியை ஓட்டிச்சென்று அவர்கள் மீண்டும் கானகப் பகுதியை அடைவதற்குள் பல குண்டுகள் சீறிப் பாய்ந்துவிடுகின்றன. ஆனால் அவை குறிதவறிச் செல்கின்றன. தான் அடிபட்டிருப்பதாகச் சொல்லி வண்டியை நிறுத்தச் சொல்கிறான் துாதுவன். காயத்தைச் சுற்றிக் கட்டுப்போட்டு ரத்தப்பெருக்கை நிறுத்துகிறான் காரோட்டி. விரைவில் முகாமை அடைந்துவிடலாம் என்றும் அச்சப்படக் கூடாது என்றும் ஆறுதல் சொல்கிறான். கடிதத்தைக் கொண்டுசெல்லும் பொறுப்பை அவன் காரோட்டியிடம் ஒப்படைக்கிறான். நம்பிக்கை இழந்த அந்த நிலையில் கடிதத்தின் வாசகங்களுக்கு அவனால் ஒரு புதிய விளக்கத்தைக் காணமுடிகிறது. கொண்டுவருகிறவனுடைய மரணத்தைப்பற்றிக் கடிதம் குறிப்பிடுகிறதே தவிர எந்தப் பெயரையும் அது குறிப்பிடவில்லை என்று தோன்றுகிறது. அடுத்த அரைமணிநேரப் பயணத்துக்குப் பிறகு படைப்பிரிவு தங்கியிருக்கும் கிராமத்தை அடைகிறது வாகனம். அங்கே ஒரு வீட்டாரிடம் அவனை ஒப்படைத்துக் கவனிக்குமாறு சொல்லிவிட்டு படைமுகாமை நோக்கிச் செல்கிறான் காரோட்டி.

தனியறையில் கிடத்தப்பட்ட துாதுவன் தன் காயத்துக்கு மருந்திட யாராவது வரக்கூடும் என்று காத்திருக்கிறான். ஒருவரும் வந்து எட்டிப் பார்க்கவில்லை. எழுந்து உட்கார்ந்து தான் போலியாகக் காண்பித்த பலவீனம் உண்மையிலேயே எந்த அளவில் உள்ளது என்று சிந்திக்கிறான். கட்டு பிரிந்து ரத்தப்பெருக்கு சட்டையை நனைப்பதை அவனால் உணரமுடிகிறது. தொலைவில் துப்பாக்கிகளால் பலமுறை சுடுவது கேட்கிறது. கடித உறையைக் காரோட்டியிடம் கொடுத்தனுப்பியது மிகப்பெரிய அறிவற்ற செய்கை என்று தன்னையே நொந்துகொள்கிறான். இங்கே அவன் ரத்தப்பெருக்கினால் மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும்போது அவர்கள் அங்கே தவறான மனிதனைச் சுட்டுக்கொள்கிறார்களே எனக் குற்ற உணர்ச்சியால் மனவேதனைக்கு ஆளாகிறான். அவன் கண்கள் கட்டப்பட்டு சுட்டுவிழ்த்தப்படும் காட்சியை மனத்துக்குள் எண்ணிப்பார்த்துக்கொள்கிறான். அப்படியே மயங்கி விழுகிறான்.

மீண்டும் சுயநினைவு வரும்போது காயங்களுக்குக் கட்டு போடப்பட்டிருப்பதை உணர்கிறான். மரணமடைந்தவனுக்குத் தேவதுாதன் செய்யும் உதவி இது என்று அவன் மனத்தில் எண்ணஅலைகள் நகர்ந்தபடி இருக்கின்றன. அருகில் நின்றிருந்த காரோட்டி அவனை வணங்கி அழைத்ததும் முற்றிலுமாக சுயநினைவு திரும்புகிறது. கட்டிலின் ஒருமுனையில் அலுவலக அதிகாரி ஒருவரும் நிற்பதைக் காண்கிறான். அப்போதுதான் தான் மரணமடையவில்லை என்னும் உண்மையை அவனால் உணரமுடிகிறது. உடனே கடிதஉறையைப்பற்றிக் கேட்கிறான் அதிகாரியிடம். அவர் அந்த உறை துப்பாக்கி ரவையினால் சிதைந்துபோய்விட்டது என்றும் செய்தியைப் படித்துப் புரிந்துகொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் சொன்னார். கடிதத்தை நான்தான் கொண்டுவந்திருக்கவேண்டும் என்று தயக்கத்துடன் சொல்கிறான் துாதுவன். சரியான நேரத்துக்குள் வந்து சேர்ந்துவிட்டதாகவும் முழுத்தாக்குதலை ஆற்றின் மறுகரையிலிருந்து எதிரிகள் நிகழ்த்தத்தொடங்கிவிட்டார்கள் என்று காரோட்டி சொல்கிறான். போரிடச்சொல்லும் அந்தக் கடைசிச் செய்திக்காகத்தான் தாம் காத்திருந்ததாக அதிகாரியும் சொல்கிறார். தொடர்ந்து ‘கடித உறையின் வாசகம் உங்களுக்குத் தெரியாமல் இருந்தது நல்லதாயிற்று. போரைத் தொடங்குவதற்காக ஒரு விசித்திரமான குறியீட்டுச் செய்திமுறையை நாங்கள் பயன்படுத்தினோம் ‘ என்று சொல்லி முடிக்கிறார்.

*

காஃப்காவின் பாதிப்புடன் எழுதிய ஜெர்மானியப் பெண் எழுத்தாளர் ஐல்ஸ் ஐக்கிங்கர். ஜெர்மானிய இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியவர். 1921 ஆம் ஆண்டில் பிறந்தவர். மருத்துவத்துறையில் பட்டம் பெற்றிருந்த போதிலும் உயர்நிலைப் பள்ளி உதவியாளராகவும் பதிப்பகத்தாரிடமும் பணியாற்றியவர். சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள், கவிதைகள் என எல்லாத் துறைகளிலும் படைப்புகளை எழுதியவர். 1968 ஆம் ஆண்டில் தென்மொழிகள் புத்தக டிரஸ்டு ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட 13 சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் ‘தற்கால ஜெர்மானியச் சிறுகதைகள் ‘ என்கிற தலைப்பில் வெளியிட்டது. அவற்றுள் ஒரு சிறுகதையே ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘. தமிழாக்கம் சி.ஆர். கண்ணன்.

—-

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்