இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

ஜெயமோகன்


‘ ‘காற்றூளிக்கும் ஒவ்வாத கணக்கன் ராமலிங்கன் பாடலா அருட்பாவாகும் ? பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும் ? போலிச்சைவர்களே புகண்மின் புகண்மின்… ‘ [இராமலிங்கம் பாடலாபாச தர்ப்பணம் ]

***

‘ ‘எனையார் கெலிப்பார்கள் என்றிரையு மூடா

நினையோர் பொருட்டாய் நினையோம் – பனையேறும்

பாம்பொத்த பாபிப்பயலே குரக்கிறைவா

நாம்பொத்த நின்னாலென்னாகுமடா – வேம்பொத்த

பாதகனாம் ராமலிங்கன் பட்டியன் அன்றோதான்

வாதுசெல்லும் சண்டியே வாய்மூடாய் ‘ ‘

[திரிகோணமலை இலங்கணிப்பிள்ளை]

**

‘……. ஈழநாட்டு தண்ணீர்ப்பாம்பு தவளை முதலியவைகளைத் தின்னும் ஈழப் பாணச்சாதிப்பயலே…. ஈழச்சேரிப்பாணா, உன் துட்டத்தனத்தையடக்க டாக்கர் சத்திரத்திற் அருட்தங்கும் வடற்பெருவெளியன்பர்கள் இவைகளை எழுதிவிடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வ சாட்சியாய் ஒன்றுமறியா நிர்தோஷிகளான தொண்டைநாட்டு முதலியார்களை ‘ஆங்காலம் வாயிற்புறத்தேகிடக்கும். அகந்தைமிஞ்சி சாங்காலம் நாய் மனை மீதேறும் ‘ என்ற மூதுரைக்கிணங்க ஏண்டா ஏலே தூஷணை செய்து கெட்டாய் ? அடா ஏலே கதிர்வேலா… ‘ [ திருகோணமலை இலங்கணிப்பிள்ளைக்கு சஞ்சீவி ராயன் விடுத்த வெரிநகர் தகனம்]

**

‘ ‘ஏ ஏ திருகோணமலை இலங்கணிப்பிள்ளையே ‘போலி முத்துவீரனுக்கு புறப்படும் பின்னாலே ‘ என்றெழுதினாயே.பின்னாற்புறப்படுகிறது பன்றிகளுக்கு உதவும். இதோ முன்னாற்புறப்படுகிறது ஏற்றுக்கொள் புளி முளகாய் மூசலுண்டைகள் விற்றுக்காலம் கழிக்கும் முண்டைப்பிள்ளைகள் முன் உலண்டத்தனை பிரசங்கம்செய்யும் இலங்கணிப்பிள்ளையே … என்னடா ஏலே பின்னாற் புறப்பட அத்தனை தாமதமேன் ? முன்னாற்புறப்படலாகாதா ? சீக்கிரம் ஓடிவாடா. ஒம்பட்டு சுவாகா. நல்லதிருக்கட்டும். முத்தமிழில் எத்த்னை கற்றாய் ?அடலே ,ஓடாதே நில்.முத்தமிழுக்குமெத்தனை இலக்கணங்கள் ? அதிலுமெத்தனை இலக்கணங்கள் உனக்கு தெரியும் ? ‘ ‘[திரிகோணமலை இலங்கணிப்பிள்ளைக் கெரிகோணமலை இராம பாணம்]

***

மேற்கண்ட வரிகள் வடலூர் ராமலிங்க வள்ளலாரின் பாடல்களை அருட்பா என்று சொல்லலாமா என்ற விவாதத்தில் எழுந்தவை.யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர் இவ்விவாதத்தை எழுப்பினார். மிகக் கடுமையான சொற்களை பயன்படுத்தினார். அதற்கு வள்ளலாரின் சீடர் தொழுவூர் வேலாயுதமுதலியார் முதலியோர் வசைபாதி விவாதம் பாதியாக பதிலுரைத்தார்கள். தொடர்ந்து மானநட்ட வழக்கும் நடந்தது. பின்பு யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை அவ்விவாதத்தை முன்னெடுத்து அதிபயங்கரமான வசைக்கவிதைகளை எழுதினார். அதற்கு பானுகவி முதலான வடலூர் அன்பர்கள் பதில் வசைமாரி பொழிந்தனர். கதிரைவேற்பிள்ளைக்கு உத்தரக்கிரியை நடத்தும் துண்டுப்பிரசுரங்கள் பல அடிக்கப்பட்டன. அவ்வளவும் ‘அடே ஏலே ‘ வகைதான். முழுவதையும் இந்தக்காலத்தில் அச்சிலேற்ற முடியாது, இப்போது நாகரீக வரம்புகள் இன்னும் திட்டவட்டமாகிவிட்டிருக்கின்றன [ முழுமையான தகவல்களுக்கு பார்க்க ‘அருட்பா மருட்பா விவாதம் ‘ . ப.சரவணன். தமிழினி வெளியீடு]

தமிழிலக்கிய உலகில் நிகழும் இலக்கியவிவாதங்களை , அவ்வப்போது அது தனிப்பட்ட தாக்குதல்களின் எல்லைக்குள் புகுவதை, தமிழில் எப்போதுமில்லாத புதுவகை நோய்க்கூறாக சித்தரிப்பவர்கள் உண்டு. பிரபல இதழ்களூம் அவ்விதழ்களின் வாசகர் சிலரும் இதனடிப்படையில் ஒட்டுமொத்த நவீன இலக்கியத்தையே நிராகரித்து தாங்கள் செய்யும் வணிகமே உன்னதமானது என்று சொல்ல முற்படுவதுமுண்டு. இவர்களுக்கு உலக இலக்கிய வரலாறும் தெரியாது, தமிழிலக்கிய வரலாறும் தெரியாது. அதற்கு உதாரணமாகவே மேலெ சொன்ன விவாதத்தை எடுத்துக் காட்டாக சொன்னேன்.

தமிழிலக்கிய மரபும் இலக்கியப்பூசல்களும்

================================

இலக்கியம் என்று நாம் எப்போது அறிய ஆரம்பிக்கிறோமோ அப்போதே இலக்கிய பூசல்களும் ஆரம்பித்துள்ளன. சங்கப்பாடல்களில் மீண்டும் மீண்டும் ‘வரிசையறியாமல் பரிசில் வழங்குவதை ‘ கண்டித்து புலவர்கள் பாடிய பல பாடல்களை காண்கிறோம். ‘அவன் எழுத்து அவனுக்கு நான் எழுதுவது எனக்கு ‘ என்ற , இன்று சிபாரிசு செய்யப்படுகிற , ‘பரந்த மனப்பான்மை ‘ யை அங்கே காணமுடியாது. ‘அவன் கவிஞனல்ல, அவனுக்கு கொடுத்த அதே பரிசை நான் வாங்கமாட்டேன் . கொடுத்த உன்னையும் சும்மா விடமாட்டேன் ‘ என்பதே இப்பாடல்களின் மனநிலையாக உள்ளது.

அடுத்த கட்டத்தில் மதம் வந்துவிட்டது. காப்பியங்களில் நீலகேசிக்கு இணையான ஒரு மதக்காழ்ப்பு நூலை நாம் எங்கும் காணமுடியாது. அதை முழுக்க முழுக்க ஒரு ‘பாலிமிக்ஸ் ‘ நூல் எனலாம். திருத்தக்கதேவர் சமணராக இருந்தும் எப்படி சிற்றின்ப காவியம் எழுதினார் என்று கேட்டு அவரை பழுக்க காய்ச்சிய இரும்புப்பதுமையை தழுவச்செய்யுமளவுக்கு சக மத சக புலவர்களே ஜரூராக இருந்துள்ளார்கள்.

கம்பனின் காலகட்டத்து இலக்கிய பூசல்களை நாம் தனிபாடல்கள் மூலம் அறிவோம் . ஒளவையார் பாடியதாக சொல்லப்படும் ‘ஆரையடா சொன்னாயடா ‘ போன்ற கவிதைகள் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அதற்கான முகாந்திரம் இருந்துள்ளது. வரலாற்றுச் சான்றுள்ள பூசல் கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் இடையே உள்ளது. அதில் புலமைக் காழ்ப்பு முக்கிய இடம் வகிக்கிறது என்பது உண்மையே. ஆனால் அத்துடன் வேறுசில கூறுகளும் உள்ளன. ஒட்டகூத்தர் அன்றைய சோழ அரசில் மிக முக்கியமான அதிகார மையம். ‘குலோத்துங்கன் உலா ‘ பாடிய அரசாங்க கவிஞர். கம்பனோ ‘உன்னையறிந்தோ தமிழை ஓதினோம் ? ‘ என்று சோழனை தூக்கி வீசிய சுதந்திர படைப்பாளி.

பக்திகாலகட்ட மதவிவாதங்களுக்குள் செல்லும்போது நாம் காண்பது தனிநபர் தாக்குதல்களின் கீழ் எல்லையை. கழுவேற்றல்களை. சமணரைக் கழுவேற்ற ஆலவாய் அழகனின் அருள் தேடி சம்பந்தர் இயற்றிய ‘காட்டுமாவது உரித்து… ‘ ‘ என்று தொடங்கும் ‘திருவுளப் ‘

பதிகம் வெறுப்பின் உச்சம் வெளிப்படும் பாடல். சாக்கியப்பேய் என்றும் அமண் சமணர் என்றும் தான் சம்பந்தரால் சொல்ல முடிகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தத்திலேயே சமணரையும் பெளத்தரையும் வசைபாடும் பாடல்கள் பல உள்ளன. மதுரகவியாழ்வாருக்கு இதில் சிறப்பு பட்டயம் அளிக்கலாம். இன்றும்கூட ‘ஸ்ரீ வைஷ்ணவ சுதர்சனம் ‘ போன்ற இதழ்களில் வரும் அளவுக்கு உக்கிரமான மோதல்களை, தனிப்பட்ட தாக்குதல்களை, நாம் நவீன இலக்கியத்தில் காணமுடியாது .

‘கார்மேகம்போல் நெஞ்சிருண்ட காந்திமதிநாதனை பார் அதி சின்னப்பயல் ‘ என்று பாரதி எழுதியதை காந்திமதிநாதனைப்பற்றி நமக்கு ஒன்றும் தெரியாததனால் மன்னிக்கலாம். ஆனால் அவரால் ‘நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு ‘ என்று வசைபாடப்பட்டு ‘ நடிப்பு சுதேசியாக ‘ சித்தரிக்கப்பட்ட ஜஸ்டிஸ். வி. கிருஷ்ணசாமி அய்யர் அப்படி ஒன்றும் சந்தர்ப்பவாத அற்பரல்ல. தமிழக காங்கிரஸை உருவாக்கிய முன்னோடி. பாரதியின் கவிதைகளை அச்சிட்டு தெருத்தெருவாக கொண்டு சென்றவர். அவர் மிதவாதி. இந்தியர்களுக்கு ஜனநாயக நடைமுறைகள் தெரியவில்லை என்றும் , அடிப்படையில் ஊழல்மனநிலை கொண்டவர்கள் என்றும் அவர் எண்ணினார். ஆகவே பிரிட்டிஷ் அரசுடன் போராடியும் ஒத்துழைத்தும் சுயமான நிர்வாக திறனை வளர்க்க வேண்டும் என்றும் , குறிப்பாக ஜனநாயக அமைப்புகளை கட்டியெழுப்பி வலிமைப்படுத்தவேண்டும் என்றும், அதன் பிறகே முழுச் சுதந்திரம் நோக்கி முன்னகர வேண்டும் என்றும் கருதினார். இல்லையேல் சுதந்திர இந்தியாவில் ஊழலே மலியும் என்றார். பாரதி இலட்சியவாதி என்றால் அய்யர் யதார்த்தவாதி. அய்யரே உண்மையின்பால் நெருங்கி இருந்தார் என்று இன்று சிலருக்கு தோன்றலாம். பிரிட்டிஷ் அரசு அளித்த நீதிபதி பதவியை அய்யர் ஏற்றதே பாரதியை கோபமடைய வைத்தது. அதன் பொருட்டே அவர் அய்யரை வசைபாடினார். ஆனால் அய்யருக்கு முற்றிலும் சுயநலமற்ற நோக்கங்கள் இருந்தன. தமிழ்ப்பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் பல முக்கியமான சட்டங்களை தீர்ப்புவிதிகளாக உருவாக்கிய முன்னோடி சட்டமேதை அவர். பாரதியின் கவிதைகளுக்கு சற்றும் குறையாமல் அவரது தீர்ப்புகளும் தமிழ் மக்களுக்கு உதவியுள்ளன. [ அய்யரின் வாழ்க்கையை அறிய அவரது மகன் வி சந்திரசேகரன் எழுதிய ‘ஜஸ்டிஸ் வி கிருஷ்ணசாமி அய்யர் ‘ என்ற நூலை பார்க்கவும் கலைமகள் வெளியீடு ] இன்று அய்யர் பாரதியின் வசையாலேயே நினைவுகூரப்படுவதை துரதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

பாரதிக்கும் அயோத்திதாச பண்டிதருக்கும் இடையேயான பூசல்கள் மிக நுட்பமாக நமது வரலாற்றாசிரியர்களால் தவிர்க்கபட்டுள்ளன. பாரதி ‘ஈனப்பறையர்களேனும் ‘ என்று எழுதியதையும், பறையர்கள் குளித்து சுத்தமானால் அவர்களை ஏற்கலாம் என்று வாதிட்டதையும் அயோத்திதாசப் பண்டிதர் கடுமையாக நிராகரிக்கிறார். பாரதி பண்டிதருக்கு ஒருபோதும் பதில் சொல்ல முற்படவில்லை. ஆனால் தான் எழுதுவது அசல் பறையர்களைப்பற்றி , பட்டினத்து பட்லர் பறையர்களுக்காக அல்ல என்று மறைமுக பதிலடி கொடுத்தார். பண்டிதரின் அப்பா கந்தப்பர் பட்லர்.

இதற்குமேல் சொல்லப்படவேண்டியது இலக்கியத்திறனாய்வில் கையாளப்பட்ட கடுமையான மதிபீட்டுமுறைகள். தமிழில் இலக்கிய மேன்மை கைகூடியதென்றால் அந்த அளவுகோல்களினால்தான். பாரபட்சமற்ற கறாரான திறனாய்வு மதிப்பீட்டின் குறியீடான ‘சங்கப்பலகை ‘ தமிழின் முக்கியமான அடையாளமாக இருந்துள்ளது . அம்மதிப்பீடுகளின் சரிவையே ‘குட்டுவதற்கோ பிள்ளைப்பாண்டியன் இங்கில்லை.. ‘ என்ற பாடல் வருந்தி குறிப்பிடுகிறது. இத்தகைய கறாரான மதிப்பீட்டை நாம் இழந்து விட்டதே சங்கப்பலகைக்கு பதில் பந்திப்பாய் விரிக்கும் இன்றைய நிலைக்கு காரணம். இன்று போலிப் படைப்புகளுக்கு அங்கீகாரமளித்து திறனாய்வுக்கருத்துக்களை வசைகளாக சொல்லி நிராகரிக்கும் அற்பர்களால் நிரம்பியுள்ளது தமிழ் சூழல். தமிழின் இன்றைய அவலம் விவாதங்களை உருவாக்கும் ஆக்கபூர்வமான குரல்களுக்குப் பதிலாக இத்தகைய சமரச குரல்கள் அதிகம் எழுவதே.

நான் அருட்பாவை ஆராதிப்பவன், ஆனால் ஆறுமுகநாவலரின் கறாரான அணுகுமுறை மீது எனக்கு மதிப்பே உள்ளது. வள்ளலாரின் ஆக்கங்களுக்கு கவிதைக்கு வெளியே புராணக் கட்டமைப்பை அளித்து மகத்துவம் தேட முயன்ற முயற்சிகளை நாவலர் எதிர்த்தது சரியான செயலேயாகும். வள்ளலாரின் சீடர்கள் அன்று உருவாக்கியதுபோல அவர் செத்தாரை உயிர்ப்பிப்பவர் என்ற நம்பிக்கையால் இன்று அருட்பா தன் இடத்தை அடையவில்லை , அதன் கவித்துவத்தாலேயே அடைந்துள்ளது. அதன் மீது சுமத்தப்பட்ட போலிநிறங்களை களைந்து அதன் கவித்துவத்தாலேயே அதை நிற்கச்செய்ததில் நாவலரின் பங்கு முக்கியமானது. வள்ளலாரும் நாவலரும் ஒரு ஆக்கபூர்வமான முரணியக்கத்தின் இரு சக்திகளாகவே நான் எண்ணுகிறேன். நாவலர்தரப்பு பலவீனப்பட்டு போனதனாலேயே வள்லலாரை வைத்து இன்றைய கொச்சையான புராணச் சமையல்கள் நிகழ்கின்றன என்பதும் உண்மை. இத்தகைய முரண்பட்டு மோதி முன்நகரும் தரப்புகளின் மூலமே இலக்கியம் மட்டுமல்ல எந்த ஒரு கருத்தியல் இயக்கமும் நிகழமுடியும். மோதல்கள் இல்லாத சூழலில் இயக்கமும் இல்லை என்றே பொருள்.

உலக இலக்கியத்தையே எடுத்துக் கொள்வோம், புத்தெழுச்சிக்காலத்தில் [ரொமாண்டிக்] பிளேக் எழுதிய வசைக்கவிதைகள், அறிவொளிக்காலத்தில் வால்டேர் எழுதியவை….. வரலாறு இன்றும் தொடர்கிறது. சமீபத்தில் ‘மரியோ வார்கா லோஸா ‘ வின் ஒரு பேட்டியின் மொழிபெயர்ப்பை படித்தேன். அதில் அவர் காட்டும் சித்திரம் அருட்பா யுகத்துக்கு சற்றும் குறைந்தது அல்ல. அரசியல் பச்சோந்தி, சுயநலக்காரர் என்று கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸை அதில் வருணிக்கிறார் லோஸா. மார்க்யூஸைப்பற்றி எழுநூறு பக்க நூல் எழுதிய நீங்கள் இப்படிச் சொல்ல அவருக்கும் உங்களுக்கும் நடந்த மதுக்கடைக் குத்துச் சண்டைதான் காரணமா என்கிறார் பேட்டியாளர். அந்த சண்டையே அரசியல் கருத்துவேறுபாடுகளினால்தான் என்கிறார் லோஸா. போர்ஹெயை வழிபடுபவர் லோஸா. அவரது வீட்டைப்பற்றி லோஸா சொன்ன ஒரு சாதாரணமான விமரிசனம் போர்ஹெயை எப்படி கடும் விரோதியாக ஆக்கியது எ புலம்புகிறார் அப்பேட்டியில்.

அதேபோல உலகமெங்கும் எப்போதும் கருத்தியல் விவாதம் எல்லைகளை மீறி தனிநபர் தாக்குதல்களுக்கும் வன்முறைக்கும் சென்றுள்ளது என்று சொல்லலாம். அது சமீபகாலமாக தமிழில் எழுதும் சில வினோதப் பிராணிகளுக்கு உள்ள விசேஷமான நோய் இல்லை. அப்படிச் சொல்பவர்கள் சமீபகாலமாகத்தான் செய்திதாள்களையே படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் நவீன இலக்கியத்தில் ஒருபோதும் விவாதம் எல்லைகளுக்கு உள்பட்டு நிகழ்ந்தது இல்லை. புதுமைப்பித்தனின் விவாதங்களும் வசைகளும் புகழ் பெற்றவை. இவற்றில் சிகரம் கல்கியின் தழுவல் குறித்து புதுமைப்பித்தன் நடத்திய விவாதம்தான். ராஜாஜியின் எழுத்துக்களை பற்றிய அவரது ஆரம்பகட்ட சாடல்கள்[ நாமக்கல் கவிஞன் நல்லகவி தான் என்று சேமக்கலத்தலையன் சொல்லிவிட்டான்..] , மணிக்கொடி கோஷ்டிக்கும் மு அருணாசலத்துக்கும் நடந்த சண்டை போன்றவை முக்கியமானவை. [ ‘மூனா ஆருணாசலமே / முச்சந்தி கும்மிருட்டில் / பேனா குடைபிடித்து பேயாட்டம் போடுகிறாய் ‘. என்ற பிரபல வசைக்கவிதையை நினைவிருக்கலாம். ] அருணாச்சலம் இன்று இவ்வசைமூலமே அறியப்படுகிறார். ஆனால் பழைமை மனநிலை கொண்டவராயினும் அவர் பேரறிஞர். தன் ‘தமிழ் உரைநடை வளர்ச்சி ‘ என்ற நூலில் கல்கியின் உரைநடையை அவர் புகழ்ந்ததே பித்தனை பித்துகொள்ள செய்தது.

வையாபுரிப்பிள்ளையின் காலக்கணிப்பு குறித்து பண்டிதர்கள் நடத்திய வசை விவாதம் பிள்ளையின் தாயின் கற்பு குறித்த ஐயங்களை உள்ளடக்கியிருந்தது. க. நாசு .வின் பட்டியல்கள் குறித்து அகிலன் , பூவை எஸ் ஆறுமுகம் நடத்திய விவாதம் சூடானது. வெங்கட் சாமிநாதன் பிரமிள் நடத்திய இலக்கிய ஊழல்கள் விவாதம் துண்டுபிரசுரப் புயல் . பிரமிளின் வசைக்கவிதைகளை சொல்லவே வேண்டாம். இவ்விஷயத்தில் கதிரைவேற்பிள்ளையின் மறுவடிவம் அவர். நீலபத்மநாபனின் ‘தேரோடும் வீதி ‘ முழுக்கமுழுக்க இலக்கியப் பூசல்களினால் ஆன படைப்பு. சுந்தர ராமசாமியும் கைலாசபதியும் நகுலனும் நுட்பமாக வசைபாடுபவர்கள். இவர்கள் முக்கிய படைப்பாளிகள் என்றால் எதையுமே படைக்காமல் தி க சிவசங்கரனைப்போன்றவர்கள் தறுதலைகள் [பிரமிள் ] புழுத்த நாக்கு [வெங்கட் சாமிநாதன்] இன்னபிற சொற்களால் கட்சிக்குப் பிடிக்காதவர்களை வசைபாடுவதையே முப்பதுவருடத் தொழிலாக செய்துவருகிறார்கள். நான் அறிந்தவரை விவாதங்களில் எல்லைகளை மீறாதவர்கள் கோவை ஞானி, பொன்னீலன், நாஞ்சில்நாடன் , பிரேம் போன்ற சிலரே. ஆனால் பொதுவாக நவீன காலகட்டத்தில் நடந்த எந்த விவாதமும் மேலேசொன்ன அருட்பா மருட்பா ‘தரத் ‘ துக்கு செல்லவில்லை. அதற்கு இன்றைய காலகட்டம் ஒரு காரணம். தமிழில் இன்னும் ‘பார் ‘சண்டைகள் பரவலாகவில்லை.

இலக்கிய பூசல்களின் பின்னணி

=========================

ஏன் இவை நிகழ்கின்றன ? இவற்றை தவிர்க்க முடியாதா ? பண்பாடு கலாச்சாரம் குறித்து பேசும் இலக்கியவாதிகள் ஏன் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்கிறார்கள் ? அவர்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏன் முன்னோடிகளாக இருக்கக் கூடாது ? தங்கள் படைப்புகளை எழுதி அவற்றை காலத்தின் தீர்ப்புக்கு விட்டுவிட்டு ஏன் மெளனமாக இருக்கக் கூடாது ? இக்கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுப்பபடுகின்றன. வணிக எழுத்தாளர்களும் இதழ்களும் மீண்டும் மீண்டும் எழுதி இலக்கியவாதிகளை அற்பர்களாகக் காட்ட முனைகிறார்கள். இது சிந்திப்பதற்குரிய ஒரு விஷயமே.

முதல் பிரச்சினை இலக்கியம் என்பதை நாம் எப்படி புரிந்துகொண்டுள்ளோம் என்பதே. அதை ஒருவகை உயர்தர மனமகிழ்வுமுறையாக, மொழிக் கேளிக்கையாக , போதனை செய்யவேண்டிய ஊடகமாக மட்டும் கண்டோமென்றால்தான் மேலே சொன்ன கேள்விகள் வலுவாக எழுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை கேளிக்கையை அளிக்கிறார்கள். ஒருவர் அல்வா விற்கிறார். மற்றவர் ஆட்டுக்கால் சூப் விற்கிறார். இன்னொருவர் பீட்சா விற்கிறார். இதில் என்ன சண்டை ? ஆட்கள் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு ருசிக்கட்டுமே… தமிழில் பெரும்பாலானவர்கள் எண்ணுவது இப்படித்தான். உண்மையில் வணிகக் கேளிக்கை எழுத்தில் எங்கும் எப்போதும் இதே மனநிலைதான் உள்ளது. லோசாவும் மார்க்யூஸும் சண்டைபோடுவார்கள். வோல் சோயிங்காவும் , சினுவா ஆச்சிபீயும் பூசலிடுவார்கள் .ஆனால் ஃப்ரெடரிக் ஃபோர்சித்துக்கும் இர்விங் வாலஸுக்கும் இடையே சண்டை இல்லை. சிவசங்கரிக்கும் இந்துமதிக்கும் இடையே உரசல்கள் இல்லை .

ஆனால் இலக்கியம் கேளிக்கையும் உபதேசமும் அல்ல. அது வணிகம் அல்ல. இலக்கியம் என்பது உக்கிரமான ஆன்மீகத் தேடல் மற்றும் கருத்தியல் செயல்பாடு. ஓர் இலக்கிய படைப்பு எத்தனை சிறியதாக இருந்தாலும் சரி , அதன் உச்சகட்ட நோக்கம் உலகின் அனைத்து மக்களையும் முழுமையாக வெற்றி கொள்வதே . ஒர் இலக்கியவாதி எழுதும்போது அவனது மனதின் ஆழத்தில் உள்ள படைப்புசக்தி உலகின் மிகச்சிறந்த ஆக்கத்தை உருவாக்கவே தவிக்கிறது. உலகை முழுக்க தன்பக்கம் திருப்பவே அது உன்னுகிறது. ஆம், அது தான் படைப்பாக்கத்தின் அடிப்படை இயல்பு. இப்படிச் சொல்லலாம். ஒரு புல்விதை எதிர்ப்பே இல்லை என்றால் உலகை புல்லால் மூடிவிடும் வல்லமை கொண்டது. அதற்குள் அந்த இச்சையை இயற்கை பொறித்து வைத்துள்ளது. ஆனால் அதன் இச்சையை அதைப்போன்ற பல்லாயிரம் இச்சைகள் தடுக்கின்றன. விளைவாக பூமி மீது ஒவ்வொரு உயிரும் பிற அனைத்தையும் எதிர்த்து மீறி தன் இடத்தை அடைகிறது. கருத்துக்களின் கதையும் இதுவே. ஒவ்வொரு கருத்தும் உலகை வெல்ல துடிக்கிறது. பிறகருத்துக்களின் மோதி உருவாகும் முரணியக்கம் மூலம் அது உலகை ஆக்கும் பலநூறு ,பல கோடி இழைகளில் ஒன்றாக ஆகிறது.

ஆக, கருத்தியல் செயல்பாடு என்பது மிக உச்சகட்ட அதிகார மோதல் நிகழும் ஒரு தளம். இலக்கியம் ஒரு சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் கருத்துச் செயல்பாட்டின் மிக முக்கியமான ஒரு பகுதி என்பதை நாம் பலசமயம் உணர்வது இல்லை. கருத்தியல்களே சமூகத்தின் அனைத்து சமூக அதிகாரங்களையும் கட்டமைக்கின்றன என்பதை இன்று பல தளங்களில் சமூக அறிவியலாளர் விவாதிக்கிறார்கள். நாம் சமூகம் என்று சொல்வது பல்வேறு முரண்படும் கருத்தியல்கள் பின்னி உருவாகிய ஒரு சமநிலைப்புள்ளியை. அது நிலையாக இல்லை, இடைவிடாது மாறியபடி [மாற்றப்பட்டபடி] இருக்கிறது. ஆகவே கருத்துச் செயல்பாடு என்பது அதிகாரம் நுண்ணிய முறையில் உருவாக்கப்படும் , பகிரப்படும், உறுதிசெய்யப்படும் ஒரு நிகழ்வுதான். அதில் வன்முறை இல்லாமல் இருக்க இயலாது. அது பெரும்பாலும் நுண் வன்முறைதான் என்பதே அவ்வன்முறையை நம்மிடமிருந்து மறைக்கிறது. வன்முறையில்லாத சமூக இயக்கம் இருக்க முடியாது. ஆனால் சமூகம் பண்படும்தோறும் வன்முறை நேரடியாக நிகழாமலாகிறது .கருத்தியலுக்கு நகர்ந்து நுண்வடிவம் கொள்கிறது. ஆக இந்த நுண் வன்முறை இல்லாமல் ஒரு இலக்கியச்செயல்பாடு நிகழவே முடியாது. தெருச்சண்டைச்சமூகங்களே கருத்துச் சணடையை தவிர்க்க முடியும் என்பதே உண்மை.

இப்படிச் சொல்லலாம். ஒவ்வொரு செடியும் மற்ற செடிகளை எதிர்த்தே வளர்கிறது . ஒவ்வொரு இலக்கியப்படைப்பும் தன்னளவில் பிற அனைத்து படைப்புகளுக்கும் எதிரானதேயாகும். ஓர் இலக்கியப்படைப்பு எடுத்துக்கொள்ளும் இடம் பிற படைப்புகளிடமிருந்து பெறப்படுவதே. ஓர் இலக்கியப்படைப்பு சிறப்பாக உள்ளது என்று நாம் சொல்லும் போது பிற படைப்புகள் பலவற்றை மோசமானவை என நிராகரிக்கவே செய்கிறோம். ஒரு படைப்பை பிறிதொன்றுக்கு மேலாக வைக்காமல் இலக்கிய வாசிப்பு சாத்தியமே இல்லை .ஏன், ரசனை என நாம் சொல்வதென்ன, நுட்பமான நிராகரிப்பும் தேர்வும்தானே ? தல்ஸ்தோய் ருஷ்யாவின் எத்தனை நூறு எழுத்தாளர்களை தன் படைப்புகள் மூலம் வரலாற்றிலேயே இல்லாமல் செய்துவிட்டிருப்பார் ! காட்டில் ஓங்கும் ஆலமரம் பல்லாயிரம் செடிகளின் இடத்தை தான் எடுத்துக் கொள்கிறது. அதன் வெற்றி அப்பகுதிமீதான அதன் அதிகாரமேயாகும்.

ஓர் இலக்கியவாதி என்ன சொல்கிறான் ? சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறான், அதற்கேற்ப அனைத்தையும் மாற்ற முயல்கிறான். மதத்தை, நம்பிக்கைகளை, அமைப்புகளை, உணர்வுகளை. அதை அவன் ஒரமாக உட்கார்ந்து அமைதியான முறையில் எல்லாரையும் மகிழ்வித்தபடி செய்யமுடியுமா என்ன ? தன் அனைத்து உயிர்சக்தியாலும் அவன் சமூகம் மீது பாய்கிறான், அதுவே படைப்பியக்கம் என்பது. அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் சமூகத்தை பாதிக்க முயல்கிறான். தேனீ பாய்ந்து கொட்டும்போது தன் இறுதி வேகத்தை செலுத்துகிறது. கொடுக்கை செலுத்திவிட்டு இறக்கிறது. படைப்பியக்கமும் அதுவே. படைப்பாளி வண்ணம் பூசுபவனல்ல, தோரணம் கட்டுபவனல்ல. அவன் இடித்துக்கட்ட முனைபவன். பல சமயம் இடிப்பதற்குள் சக்தி தீர்ந்து விடுபவன்.

ஆகவே உன் படைப்பை நீ எழுது , அவன் படைப்பை அவன் எழுதட்டும் , எதற்கு சண்டை என்ற வாதம் பொருளில்லாதது. அதன் ஆசிரியன் தனிப்பட்ட முறையில் ஒரு சொல் கூட எதிர்மறையாகச் சொல்லாமல் இருந்தாலும்கூட ஒரு படைப்பு தன் நிராகரிப்பை நிகழ்த்தவே செய்கிறது . அருட்பா என்பது ஒரு கருத்துப்பிரச்சார படைப்போ , மூர்க்கமான நம்பிக்கைகளை வலியுறுத்துவதோ அல்ல. ஆனாலும் கடந்த இருநூறு வருடங்களில் தமிழில் அதற்கிணையாக ஆத்திரமூட்டிய , எதிர்க்கப்பட்ட, வசைபாடப்பட்ட படைப்பு ஏதும் இல்லை. ஏன் ? காரணம் அது தன் அடிப்படை இயல்புகளால் சைவமரபின் பிற நூல்களுக்கு எதிராக நிற்கிறது. அதன் எளிமையான பக்தி வேத வைதீக அடிப்படையை நிராகரிக்கிறது. அதன் சோதிதரிசனம் சைவத்தின் எல்லா சடங்கு முறைகளையும் நிராகரிக்கிறது. அதை பல்லாயிரம் வருட மரபு கொண்ட சைவமதம் ஏற்கவில்லை, அதன் பிரதிநிதியாக நின்றே நாவலரும் பிற மடாதிபதிகளும் பேசினார்கள். கம்பன் எழுதியது தமிழின் முதன்மைப்பெரும்படைப்பு. ஆனால் அவன் ஒட்டக்கூத்தன் உள்ளிட்ட புலவர்களால் வெறுக்கப்பட்டு சோழனால் கொல்லப்பட்டான் என்கின்றன கதைகள். பிற்காலச்சோழர் காலமே தமிழ் வரலாற்றில் வைதீகம் வேரூன்றிய , பெருமதங்கள் எழுந்த, வலங்கை இடங்கை சாதிப்பிரிவினைகள் உருவாகி பூசல்கள் வலுத்த காலகட்டம். அக்காலகட்டத்தில் நின்று ‘குகனொடும் ஐவரானோம் ‘ என்னும் ‘அறத்தின் மூர்த்தியானாக ‘ ஒரு மன்னனை உருவாக்கிக் காட்டிய கம்பன் அச்சமூகத்தை இடித்த விசை பெரிது. அவன் கொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஓர் இலக்கியப்படைப்பு மகிழ்விப்பதல்ல, அது சூழலில் உருவாக்குவது ஒர் ஊடுருவலை , அதன் மூலம் ஒரு தொந்தரவை. ஆங்கிலத்தில் இதை Rupture என்று சொல்லலாம். அந்த தொந்தரவு ஓர் அறிவார்ந்த சவாலை வாசகனுக்கு விடுத்து அவனை தூண்டுவதனால் இந்த ஊடுருவலை அவன் விரும்பவும் செய்கிறான். இல்லையேல் அவன் நூல்களை வாங்கவும் மாட்டானே. இலக்கிய படைப்பு உருவாக்கும் ‘கேளிக்கை ‘ இத்தகையதே. அவ்வகையில் வெற்றிகரமான வணிக படைப்புகளிடமிருந்து இலக்கியப்படைப்பு மிக மிக மாறுபட்ட ஒன்று. வெற்றிகரமான வணிகப்படைப்பு தன் காலகட்டத்து கருத்தியலில் எது மேலோங்கி உள்ளதோ அதைச் சார்ந்து பேசுகிறது. தன் காலகட்டத்து உணர்ச்சிகளை அதுவும் பிரதிசெய்கிறது. ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகுகிறது ‘ . அதை சந்திக்கும் வாசகன் தனக்குள் இருப்பவை எல்லாமே ஆமோதிக்கப்பெறுகிறான். தனக்கு இனியவை மட்டுமே அதில் நிரம்பியிருக்கக் காண்கிறான். ஆகவேதான் அப்படைப்பு நம்மை மகிழ்விக்கிறது. மகிழ்விக்காதபோது மறக்கப்படுகிறது. அது எப்போதும் நாம் அறிந்தவற்றின் நீட்சியாகவே இருக்கும் .மாறாக இலக்கியப்படைப்பு நம் மீது ஒரு கருத்தியல் தாக்குதலை நிகழ்த்துகிறது. நாம் உறுதிபடக் கட்டிவைத்துள்ள அனைத்தையும் அது கலைத்துப்போடுகிறது. நமது நம்பிக்கைகளை ஐயத்துக்குள்ளாக்குகிறது. பெரிய நாவல்களை படித்து முடித்ததும் நாம் ஒரு வெட்டவெளிக்கு வீசப்படுகிறோம். அந்த வெறுமையிலிருந்து மெல்ல மெல்ல மீளும்போது நாம் மீண்டும் நம்மை கட்டி நிலைநாட்டிக் கொண்டிருப்பதை உணர்கிறோம். சற்று தள்ளி , சற்று மாற்றி. இதுவே அந்நாவலின் பங்களிப்பு.

ஓர் இலக்கியப்படைப்பிடம் அச்சமூகத்தின் எல்லா கருத்தியல் தரப்புகளும் தங்கள் மோதலை நிகழ்த்துவது இயல்பானதேயாகும். ஆகவே அதன் மீதான மதிப்பிடுகளில் சில தவிர பிற அனைத்துமே எதிர்மறையானவையாக நிராகரிப்பாக இருப்பதும் மிக இயல்பே. ‘அருட்பா ‘ முதல் ‘போரும் அமைதியும் ‘ வரை இதை சொல்லலாம். ஆகவே இலக்கிய ஆசிரியன் இந்த எதிர்கொள்ளலையே தனக்கு கிடைக்கும் அங்கீகாரமாகக் கருதவேண்டும். அதில் வருத்தப்பட ஏதுமில்லைதான். அவன் தன் படைப்பை முன்வைத்து விட்டு அதன் வல்லமையில் நம்பிக்கை வைத்து கூடுமானவரை மெளனமாக இருக்கலாம். நல்ல படைப்பை எழுதியவன் அதை செய்யவும் தயங்க மாட்டான். ஆனால் பெரும்பாலும் உலகம் முழுக்க அப்படி நிகழ்வது இல்லை . படைப்புகள் மீதான எதிர்வினைகளின் இயல்புகளைப்பொறுத்து படைப்பாளி தன் குரலையும் எழுப்பவேண்டியுள்ளது.

அருட்பா தன்னளவில் முழுமைகொண்ட ஒரு படைப்பே. ஆனாலும் ராமலிங்க வள்ளலார் பற்பல மேடைகளில் தோன்றி அதை விளக்கியும் நியாயப்படுத்தியும் விரிவாகப் பேசவேண்டியிருந்தது. ஏன், நாவலரை ‘நா வலர் ‘ ‘நா அலர் ‘ என்று பலபடி பிரித்து முட்டாள் என்றும் அயோக்கியன் என்றும் ‘விளக்கி ‘ சொல்லவேண்டியிருந்தது . வள்ளலாரின் மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவருக்காக ஓர் இயக்கத்தையே உருவாக்க நேர்ந்தது. ஏனெனில் வள்ளலாரைப் பொறுத்தவரை அவ்விவாதம் என்பது உறைந்துபோன மதத்துக்கும் ஆன்மீகத்தின் சுதந்திரத்துக்கும் இடையேயான போர். தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் தங்கள் ஆக்கங்கள் பற்றி பற்பல பக்கங்கள் எழுதவேண்டியிருந்தது. டி எச் லாரன்ஸ் தன் வாழ்வின் பிற்பகுதியை தன் ஆக்கங்களை நிலைநாட்டவே செலவிடவேண்டியிருந்தது.இதன் விளைவான விவாதங்கள் கோபதாபங்கள் ஆகியவற்றிலிருந்து தப்புவது எளிய விஷயமல்ல. பெருபாலும் எவருக்கும் அது சாத்தியமானதும் இல்லை.இலக்கிய விவாதம் என்பது எப்போதுமே குறியீட்டுரீதியாக சமூகப்போர் தான். இலக்கிய விவாதம் ஒரு போதும் இலக்கிய விவாதம் மட்டுமல்ல. அது அரசியல் , அதிகாரச் செயல்பாடே. இலக்கியத்தில் எல்லா கருத்தியலுக்கும் பிரதிநிதிகள் உண்டு. இங்குள்ள பிரதிநிதியே அக்கருத்துக்களின் அதி தீவிர நம்பிக்கையாளன். ஆகவே போர் உக்கிரமாக அனைத்து தளங்களிலும் நிகழும்.

ஆம், இலக்கியப் பிரதி அரசியல் கட்டுமானமும் கூடத்தான். ஆனால் இங்கே அதை அரசியல் கட்டுமானம் மட்டுமாக பார்ப்பவர்களே அதிகமாக பேசி கொண்டிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை படைப்பின் அரசியல் என்பது அரசியல்வாதிகள் அசட்டுத்தனமாக மேலோட்டமாக அடையாளப்படுத்தும் ஒற்றைப்படைக் கட்சி அரசியல் அல்ல. அதை அரசியல்வாதிகளும் அமைப்புமனிதர்களும் தாங்கள் பேசிக் கொண்டிருக்கும் தளங்களிலிருந்து மேலெழுந்துவந்துதான் உள்வாங்க முடியும். இலக்கியப் படைப்பின் அரசியல் மிக மிக சிக்கலானது. அதை உருவாக்கிய படைப்பாளியினால்கூட ஒரு படைப்பின் அரசியலை தெளிவாக வகுத்துவிட முடியாது. நல்ல இலக்கிய படைப்பு நிலைபாடுகளினால் ஆனதல்ல. அது தேடலினால் ஆனது.ஆது கருத்துக்களை முன்வைப்பது இல்லை. அது முன்வைப்பது படிமங்களை. நான் எனக்கு பிரியமான உவமையை சொல்கிறேன். இலக்கியப்படைப்பு ஒருவகை கனவு. கனவு வாழ்க்கையில் இருந்து பிறப்பது என்பதனால் அது அரசியலற்றது அல்ல. ஆனால் அதன் அரசியல் ஒரு துண்டுபிரசுரத்தின் அரசியல் அல்ல. கருத்தியல் நிலைபாடு சார்த அமைப்புசார்ந்த வாசகர்கள் படைப்பை சிறுமைப்படுத்திய பிறகே பேச ஆரம்பிக்கிறார்கள். இவ்வாறு படைப்பை ‘நிலைபாடாக ‘ ‘கருத்தாக ‘ சுருக்கி சிறுமைப்படுத்தி எதிர்கொள்வது உலகமெங்கும் நிகழ்வதே. படைப்பியக்கம் இவர்களுடைய குறுக்கல்களை மீண்டும் மீண்டும் எதிர்த்து போராடியபடியேதான் இருக்கவேண்டியுள்ளது.

எழுது, சும்மா இரு என்று எழுத்தாளனிடம் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அவன் உங்களுக்கு ‘எழுதித் தரும் ‘ குத்தகையை எடுத்திருக்கவில்லை. அவன் தான் வாழும் சமூகத்துடன் மோதி, அதை மாற்றியமைக்க விரும்புகிறான். அவன் கதை எழுதலாம், கட்டுரைகள் மதிப்புரைகள் எழுதலாம், சொற்சண்டைபோடலாம், கைச்சண்டையும் போடக்கூடும். [ ஜெயகாந்தனின் சுயசரிதைக் குறிப்புகளில் இலக்கியக் கைச்சண்டைகள் பல உள்ளன ] விருதுகளை மறுத்தவர்கள், மரபுகளை உடைத்தவர்கள் உண்டு . ஏன் பொதுஇடத்தில் நிர்வாணமாக வந்து அதிரவைத்த எழுத்தாளர்கள் கூட உண்டு. அவனுள் எழும் இச்சாசக்தியின் வெளிப்பாடு அது. அவனது வழிமுறைகளே வேறு. ஓர் அரசியல் இயக்கச் செயலாளனின் , சமூகப்பணியாளனின் வழிமுறைகளுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை . ஒரு எழுத்தாளனின் பாணிக்கும் இன்னொரு எழுத்தாளனின் பாணிக்கும் தொடர்பில்லை. ப. சிங்காரம் எழுத்தைதவிர வாயே திறந்தது இல்லை. புதுமைப்பித்தன் பதில் சொல்லாத விஷயமே இல்லை. இருவருமே முக்கிய படைப்பாளிகள்தான். அவன் எதிர்வினையாற்றுகிறான் என்றால் அவனுக்கு அது தேவையாகிறது. எதிர்வினயாற்றல்லை என்றால் அதுவும் அவனுக்கு தேவைப்படுவதே.

விவாதங்களின் எல்லைகள், சிக்கல்கள்

==============================

இங்கே எழும் கேள்வி இலக்கிய விவாதம் ஏன் அத்து மீறுகிறது என்பதே. எழுத்தாளனின் அகங்காரம் மிக முக்கியமான காரணமேயாகும் . இலக்கியம் அதிகாரப்போர் என்பதும் , போரில் வெற்றியளவுக்கு முக்கியமான எதுவும் இல்லை என்பதும் முக்கியமான காரணமே. அதைவிட முக்கியமான காரணங்கள் பல உண்டு. இலக்கிய விவாதங்கள் பல சமயம் குறியீட்டு ரீதியாக நிகழ்கின்றன., ஆழத்தில் மிக சிக்கலான சமூக அதிகாரப்போர்களை அவை பிரதிபலிக்கின்றன. கம்பனுக்கும் ஒட்டக்கூத்தருக்குமான விவாதத்தை சொன்னேன். ஒட்டக்கூத்தர் மரபின் பிரதிநிதி. சோழப்பேரரசை உருவாக்கிய விழுமியங்களின் அடையாளம். கம்பன் குடிகாரன் . தாசித்தெருவில் அலைந்தவன். கர்வி. ஆனால் தன் காலகட்ட நம்பிக்கைகளை தாண்டிசென்று மானுட அறங்களைக் கண்டவன். ஆக மோதல் இருவகை மதிப்பீடுகளின் மோதல்.

அருட்பா விவாதம் இலக்கிய விவாதம் மட்டுமல்ல. ராமலிங்க வள்ளலார் சாதியில் குறைவான தொண்டைமண்டல முதலியார். [ வேளாளார் அல்ல] ஆறுமுக நாவலர் சைவ மடங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருந்த கார்காத்த வேளாளர். ஆகவே மடாதிபதிகள் வள்ளலாரை தாக்க பின்புலம் உருவாக்கினர். சைவ மடங்களுக்கும் சிதம்பரம் அந்தணர்களுக்குமான மோதலால் ராமலிங்க வள்ளலாரை சிதம்பரம் அந்தணர்கள் ஆதரித்தனர். அது சாதிப்போராக, மத ஆதிக்க போராக உருமாறியது. ஆகவே எல்லைகள் இலக்கியத்துக்குள் நிற்கவில்லை. நிற்பதுமில்லை.

நான் இங்கே சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் நவீன வாசக எதிர்வினை திறனாய்வுக் [Reader ‘s response criticism] கோட்பாடுகளை வைத்து விரிவான முறையில் விளக்க முடியும். இங்கே ஓர் வெளிவரைபடம் மட்டுமே அளிக்க விரும்புகிறேன். முதல் விஷயம், ஏற்கனவே சொல்லப்பட்டது போல வாசிப்பு என்பது ஒற்றைப்படையாக நிகழும் ஓர் எளிய நிகழ்வு அல்ல. வாசகன் ஒரு காலியான பாத்திரமும் அல்ல. அவனுக்கு ஒரு கருத்தியல் நிலைபாடு உள்ளது. அனுபவ மண்டலம் உள்ளது. அவனுக்கென்று ஒரு ஆன்மீக தளமும் உள்ளது. அதை இலக்கியப்படைப்பு பாதிக்கிறது. அவன் அதை எதிர்த்துத்தான் தன்னை முன்வைக்கிறான். அவன் உருவாக்கும் எதிர் வியூகத்தை உடைத்துத்தான் படைப்பு தன்னை நிறுவுகிறது. [ஆகவேதான் வாசகன் மேலும் மேலும் வலிமையான படைப்புகளை தேடிச்செல்கிறான். தன் தளத்தை விட தாழ்ந்த படைப்பு அவனுக்கு எந்த இன்பத்தையும் அளிப்பதில்லை. ]அவன் அடையும் படைப்பு என்பது அவனது உலகுக்கும் அப்படைப்பின் உலகுக்கும் இடையேயான ஒரு பொதுவான தளம் மட்டுமே. எந்த வாசகனும் ஒரு படைப்பை முழுமையாக அடைய முடியாது. இந்த எதிர்கொள்ளலுக்கு வாசகன் எடுக்கும் முறையை ‘வாசிப்புத் தந்திரம் ‘ என்று இன்று சொல்கிறார்கள். ஆக இவ்வாசிப்பு தந்திரத்துடன் ஒரு படைப்பு மோதியே ஆக வேண்டும். இது ‘எழுத்துX வாசிப்பு ‘ என்ற போரின் ஒரு தளம்.

வாசிப்பு என்பது ஒப்புக்கொடுப்பதல்ல எதிர்கொள்வது. ஏற்பதிலிருந்தல்ல, மறுப்பதிலிருந்தே வாசிப்பு தொடங்குகிறது. மறுப்பதற்கான உத்திகளை நாம் பலவகையில் உருவாக்குகிறோம். நமது அனுபவ மண்டலத்துக்கு அதை கொண்டுவந்து பரிசீலிக்கிறோம், நம் அறிதல்களை போட்டுப்பார்க்கிறோம், நமது கோட்பாடுகளை செயலாக்கிப்பார்க்கிறோம். இதில் பலசமயம் நம் நேர்மையின்மை வெளிப்படலாம். அப்படைப்பை நிராகரிக்க நாம் நமது உதாசீனத்தை, தந்திர புத்தியை நாம் பயன்படுத்தலாம். எல்லா காலத்திலும் இலக்க்கியப்படைப்புகள் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளன, திரிக்கப்பட்டுள்ளன, அவமதிக்கவும் வசைபாடப்படவும் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீறி படைப்பு நம் ஆழ்மனதுடன் உரையாடமுடியும் என்பதே அதன் வலிமை . நாம் ‘நிராகரித்துவிட்ட ‘ ஒரு படைப்பை நம் மனம் வருடக்கணக்கில் நினைவு வைத்திருக்கிறது, முக்கியமான தருணங்களிலெல்லாம் அது எழுந்துவருகிறது. அதன் பாதிப்பு நம் சிந்தனையில் இருப்பதை நாம் பலசமயம் ஆச்சரியத்துடன் உணர்கிறோம். இந்த எதிர்ப்பை ஒவ்வொரு படைப்பும் எதிர்கொண்டாகவேண்டியுள்ளது. அத்தகைய நிராகரிப்பு ஓர் அமைப்புபோல , திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படும்போது அவற்றை படைப்பாளிகள் எதிர்கொண்டாக வேண்டுமென்ற கட்டாயம் ஏற்படுகிறது . பலவகைகளில் எதிர்கொண்டிருக்கிறார்கள். ‘சீரிய கூரிய செஞ்சொல் ‘ [கம்பன்] என்றும் ‘ நவ கவிதை எந்நாளும் அழியாத மாகவிதை ‘ [பாரதி ] என்றும் ‘வாழையடி வாழையாக வரும் எவருக்கோதான் எழுதிக் கொண்டிருக்கிறேன் ‘ [புதுமைப்பித்தன்] என்றும் படைப்பாளியே தன்னைப்பற்றி சொல்லி நிலைநாட்டவும் வேண்டியிருக்கிறது.

வாசிப்புத் தந்திரங்களின் பொதுமைகளை வைத்து வாசகனை ஒரு தனியாளுமையாக பார்க்காமல் வாசிப்புக்குழுக்களாக [ பெண்கள், தலித்துக்கள், ஆய்வு மாணவர்கள் இவ்வாறெல்லாம் ] பார்க்கும் பார்வை இன்று இலக்கிய உலகில் உள்ளது. அதை நான் ஏற்பவனல்ல. ஓர் உதாரணமான வாசகன் வாசிப்பின்போது தனிமனிதனாக, அந்தரங்கமாக, படைப்பை எதிர்கொள்பவனே என்றுதான் நான் எண்ணுகிறேன். எந்த படைப்பும் அவனை நோக்கியே தன்னை நிறுத்திக் கொண்டுள்ளது என்பதே என் எண்ணம். ஆனால் நடைறையில் தன்னை ஒரு கருத்தியலுடன் ,அல்லது அமைப்புடன் பொருத்திக் கொண்டு அதன் துளியாக நின்று வாசிக்கும் வாசகர்கள் மிக அதிகம். அத்துடன் அந்தரங்க வாசகர்களை விட இவர்களே அதிகமாக பேசி, எழுதி தங்களை வெளிக்காட்டுகிறார்கள். நாம் வாசக எதிர்வினையாக காண்பது அதிகமும் இவர்கள் குரலையே. அந்தரங்கமான வாசிப்பு கொண்டவர்களுக்கு அவர்களின் எதிர்கொள்ளல் மிக அந்தரங்கமானதே. இவர்களில் மிக மிக சிலரே அந்த எழுத்தாளனிடமாவது தங்கள் வாசிப்பை தெரிவிப்பவர்கள். இன்னுமொரு விஷயம், கருத்தியல் அல்லது அமைப்பு சார்ந்த வாசகர்களுக்கு அவர்களின் கூட்டுச்செயல்பாட்டு தளம் சார்ந்து ஒரு வெளிப்பாட்டுமுறையும் தர்க்கமும் மொழியும் அமைந்து விடுகிறது. ஆனால் அந்தரங்க வாசகனால் தன்னை தெளிவாக சொல்லிவிட முடிவது இல்லை . அவன் வாசகனே ஒழிய எழுத்தாளனோ கருத்தியல் செயல்பாட்டாளனோ அல்ல. அவனுக்கு தன் மொழியில் உள்ள போதாமை குறித்த அச்சமும் தயக்கமும் அதிகம். எந்த எழுத்தாளனும் இப்படிப்பட்ட அந்தரங்க வாசகர்களையே வாசகர்களாக எண்ணுவான், பொருட்படுத்துவான்

உறுதியான கருத்தியல் நிலைபாடு கொண்ட , அல்லது அமைப்பு சார்ந்த வாசகர்களிடமுள்ள முக்கியமான சிக்கலே அவர்கள் படைப்பு உருவாக்கும் சொற்களனில் [டிஸ்கோர்ஸ்] வரமறுப்பவர்கள் என்பதுதான். தாங்கள் ஏற்கனவே புழங்கும் சொற்களனுக்குள் படைப்பையும் படைப்பாளியையும் இழுத்துச் சென்றுவிடுபவர்கள் அவர்கள். அவர்களுடைய உலகில் ஏற்கானவே இருக்கும்தரப்புகளுக்குள் ஒன்றாக எந்த ஒரு புது விஷயத்தையும் மாற்றி அதன் பின் அதை ஏற்கனவே தங்களிடமுள்ள கருத்தியல்சட்டகத்தை செயல்படுத்திப்பார்க்கவே அவர்களால் முடியும். சிறந்த உதாரணம், சமீபத்தில் மு.கருணாநிதி அவர்களின் இலக்கிய ஆர்வம் குறித்த என் கருத்தை அவர்கள் உடனே அவர்கள் அறிந்த ஜெயலலிதா அரசியலுக்குள் கொண்டுபோய்தான் விவாதித்தார்கள். அவர்களுடைய ஆயுதங்களின் எல்லைக்குள் போரைக்கொண்டுசெல்லும் முயற்சி இது. இதையே மார்க்ஸியர்கள், தலித் கோட்பாட்டாளர்கள் , மதவாதிகள் எல்லாரும் செய்கிறார்கள். மேலைநாடுகளில் இது நுட்பமாக நிகழ்கிறது. இங்கே தங்களை வெளிப்படையாக ஏற்று தங்கள் கோஷங்களை போடாதவர்களை தங்கள் எதிரிகளின் பட்டியலில் சேர்த்து வசைபாட ஆரம்பித்துவிடுவார்கள்.

தமிழில் இன்று சில எழுத்தாளர்கள் வெறுக்கப்படுகிறார்கள், நேற்று சிலர் வெறுக்கப்பட்டதுண்டு. ஆனால் எவருமே டி எச் லாரன்ஸ் பெற்றதற்கு இணையான வெறுப்பை அடைந்திருக்க மாட்டார்கள். லூகி பிராண்டெல்லா சொன்னார் ‘ நோபல் பரிசு பெறும்போதாவது என் மீது என் இத்தாலிய சமூகம் கொண்ட வெறுப்பும் அவமதிப்பும் குறையும் என்று எதிர்பார்த்தேன். அதுவே என் வாழ்வின் கடைசி நிராசை ‘ . தாகூர் உயிர் வாழ்ந்திருந்தபோது வங்க சமூகத்தில் அவரைப்பற்றி வந்த வசைகளைப்பற்றியும் அவதூறுகளைப்பற்றியும் அவரடைந்த மனவருத்தம் குறித்து ஏராளமாக எழுதப்பட்டுள்ளது. ‘என் பெட்டி நிறைய வசைகள், அவதூறுகள் ‘ என்றார் லோஸா . தன் சமூகத்தை பாதித்த எல்லா எழுத்தாளனும் அதையே சொல்வான். இவ்வாறு அரசியல் மற்றும் பல கருத்தியல் காரணங்களினால் திரட்டப்பட்டு ஒட்டுமொத்தமாக முன்வைக்கப்படும் எதிர்ப்பையும் , படைப்பை தங்கள் எல்லைகளுக்குள் கொண்டு செல்லும்பொருட்டு செய்யப்படும் திரிபுகளையும் தொடர்ந்து எதிர்கொள்வது படைப்பாளி செய்யவேண்டிய இரண்டாவது விஷயம்.

மூன்றாவதாக படைப்பிலக்கியவாதி ஒருவன் தான் கொண்ட அடிப்படை நம்பிக்கை சார்ந்து , தனக்கு தன் படைப்பியக்கம் மூலம் கிடைத்த அகவெளிச்சங்கள் சார்ந்து , சமூகத்தின் எல்லா தளங்களைப்பற்றியும் தன் கருத்துக்களை கூறும் உரிமையைக் கொண்டிருக்கிறான். அது அவனுக்கு அளிக்கப்பட்ட உரிமையல்ல, அவனே எடுத்துக் கொண்ட உரிமை . அதற்காக அவன் அவமதிக்கப்பட்டாலோ தாக்கப்பட்டாலோ அவன் அதை செய்யாமலிருக்க போவது இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளை , ஏற்கப்பட்ட மரபுகளை, மையமாக உள்ள மனிதர்களை அவன் நிராகரிக்கலாம். எல்லைகளை மீறிச்செல்லலாம். அவன் சொல்லும் விஷயங்களை ஏற்க அவனன்றி வேறு எவருமே அச்சமூகத்தில் இல்லையென்றாலும் அவன் அதை சொல்வான். அப்படித்தான் இக்கணம் வரை உலக இலக்கியத்தின் அத்தனை முக்கிய படைப்பாளிகளும் செயல்பட்டுள்லார்கள். அதை சொல்ல இவன் யார் என்பார்கள் , கோடிபேர் கும்பிடும் மையமல்லவா என்பார்கள். நூறு வருடம் முன்பு மன்னர்கள் ஐம்பதுவருடம் முன்பு மடாதிபதிகள் இன்று அரசியல்வாதிகள் அப்படிப்பட்ட பீடங்களில் இருக்கிறார்கள். அவர்கள் மீதான விமரிசனம் மூலம் எழுத்தாளனுக்கு வசையும் அவதூறும் வந்துசேரலாம். வேறு வழி இல்லை.

ஒரு மதிப்பீட்டை முன்வைக்கும் படைப்பாளி அதற்கு எதிரான மதிப்பீடுகளை மறுப்பது இயல்பானதும் தவிர்க்க முடியாததுமாகும். நான் பிரமிளின், தேவதேவனின், ஞானக்கூத்தனின் , சுகுமாரனின் , மனுஷ்யபுத்திரனின், பிரேமின் , எம் யுவனின் கவிதையை ஏற்கிறேன். அதனாலேயே நான் வைரமுத்துவை, அப்துல் ரகுமானை , மு மேத்தாவை தமிழன்பனை ஏற்க முடியாது. அவர்களை நான் நிராகரித்தாகவேண்டும்ளீந்த கோணத்தில் பார்த்தால் எல்லாம் கவிதையே என்பதும் கவிதையே தேவையில்லை என்பதும் ஒரே பொருள்கொண்ட சொற்றொடர்களே. வாசிக்கும் அனைவருமே ஒன்றை ஏற்று அதனாலேயே பிறிதொன்றை நிராகரிப்பவர்களே. ஒரு படைப்பாளியிடம் அவன் எழுதிய அனைத்துப் படைப்புகளும் உங்களுக்கு சரிசமமாக பிடிக்கும் என்று சொன்னால் வசைபாடப்பட்டதாகவே எண்ணுவான். ஒப்பீடு இல்லாமல், ஏற்பும் நிராகரிப்பும் இலாமல் இலக்கிய இயக்கமே இல்லை. எழுதிய அனைத்தையும் ரசிப்பவன் மனநோயாளியாகவே இருக்க முடியும்.

என்ன இங்கே சிக்கல் என்றால் வைரமுத்துவையோ மு கருணாநிதியையோ ஏற்க ஒருவனுக்கு சுதந்திரம் உண்டு , மறுக்க சுதந்திரம் இல்லை என்ற மூர்க்கமே. மறுப்பதை மட்டும் காலத்துக்கு விட்டுவிடவேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கையே. இலக்கியப்படைப்புகளை எப்படி ஏற்பது எப்படி மறுப்பது என்ற அடிப்படைக்கேள்வியிருந்தே இலக்கிய ரசனை ஆரம்பிக்கிறது. இலக்கணம் ஆரம்பிக்கிறது. இலக்கிய விமரிசனம் என்ற மாபெரும் அறிவுத்துறை, பல்லாயிரம் கோட்பாடுகள் எல்லாம் அதன்மூலமே உருவாகியுள்ளன. இலக்கியவாதி தன் ஏற்புகளை நிராகரிப்புகளை முன்வைப்பது எல்லாகாலத்திலும் நிகழ்வதே. வரிசையறியா பரிசில் நோக்கி சீறும் ஒளவையார் முதல் கல்கியை நிரகாரித்த புதுமைப்பித்தன்வரை நமக்கு அதற்குமரபு உள்ளது. அதன் பொருட்டு விவாதங்களில் இறங்குவதும் வசைகளை பெற்றுக் கொள்வதும் இலக்கியவாதியின் பணிகளில் ஒன்றுதான். தமிழில் உள்ள வேடிக்கை ஒன்று உண்டு. நவீன இலக்கியவாதி ஒருவன் பிறரை விமரிசித்தால் அதற்கு அவனுக்கு தகுதியில்லை என்று வாதிட வருபவர்கள் அந்த நவீன இலக்கியவாதியை மட்டும் திட்டி நொறுக்குவார்கள். அதற்கு தங்களுக்கு தகுதி இருப்பதாக நம்புகிறார்கள். அதற்கு அவனது படைப்பை அவர்கள் படித்திருக்கவேண்டுமென்ற தேவை கூட இல்லை. ஆக பிரச்சினை நவீன எழுத்தாளன் மீது இங்குள்ள கருத்தியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புமனிதர்களுக்கு எந்தவிதமான மதிப்பும் இல்லை என்பதே. அவன் இம்மனிதர்களை நோக்கியே பேசவேண்டிய நிலை உள்ளது. ஆகவே வசைகள் மட்டுமே அவனுக்கு கிடைபதில் ஆச்சரியமில்லை.

இறுதியாக உள்ளது புலமைக்காய்ச்சல். இது சங்கடமான ஒன்றுதான். ஆனால் தவிர்க்கவே முடியாது . எழுதுபவனுக்கு தன் எழுத்து மிக மிக அந்தரங்கமானது . அந்த அந்தரங்கத்தன்மை காரணமாகவே அவனால் அது குறித்து ஒரு உணர்ச்சி சமநிலை கொள்ள இயல்வது இல்லை . நல்ல படைப்பை யார் எழுதக் கண்டாலும் எழுத்தாளனுக்கு வயிறு சற்று எரியும் என்றுதான் நான் எண்ணுகிறேன். எனக்கு எரியும். சமீபத்தில் நாஞ்சில்நாடனின் ‘பாம்பு ‘ [ ‘பிராந்து ‘ தொகுப்பு. விஜயா பதிப்பகம். கோவை. ] என்ற கதை என்னை ஆழமான பொறாமைக்கு தள்ளியதை நான் மறக்கவில்லை .அதேபோல எந்த விமரிசனமும் , எத்தனை நேர்மையாக இருந்தாலும் என்னை முதலில் கோபம் கொள்ள செய்கிறது. ஆனால் ஒரு பொதுப்புத்தி அவற்றை கட்டுப்படுத்தி முன்னெடுத்து செல்கிறது. அது எப்போதும் செயல்பட இயலாது. இலக்கியம் ஆழமான அந்தரங்கமான விஷயமாக இருப்பதனாலேயே ஒருபோதும் அதில் புலமைக்காய்ச்சல் ஓயாது. அதன் விளைவான மோதல்களும் இருக்கும். படைப்பின் மீது படைப்பாளிக்கு இருப்பது ஆழமான பற்று என்பதனாலேயே படைப்பாளிக்கு அதன் மீதான உணர்ச்சிவேகங்களைக் கட்டுப்படுத்துவது மிக மிகச் சிரமம்.

ஆக இலக்கியவாதி எங்கும் ஓயாத போராட்டத்தில்தான் இருக்கிறான். அ]. தன் வாசகனின் கருத்தியல், ஆன்மீக நிலைபாடுகளுக்கு எதிரான படைப்புரீதியான போராட்டம் . ஆ] தன்னைச் சிறுமைப்படுத்தும் சமகால கலாச்சார அரசியல் அணிகளுக்கு எதிரான போராட்டம் இ] தான் எதிர்க்கும் மாற்றுக்கருத்துக்களுடனான கருத்தியல் போராட்டம் ஈ] தன்னுடைய சொந்தச் சிறுமைகளுடன், சகபடைப்பாளிகளின் சிறுமைகளுடன் போராட்டம். ஆக, இந்தப்போர் இது போர் என்பதனாலேயே கட்டற்றதாகவே உள்ளது. எப்போதுவேண்டுமானாலும் அது தன் எல்லைகளை மீறலாம். ஆம், அது நேர்த்தியாக நாகரீகமாக நிகழ்வதே சிறந்த நிலை. உகந்த நிலை. அருட்பா விவகாரத்தைவைத்துப் பார்க்கும்போது இன்றைய நிலை பலமடங்கு மேம்பட்டுள்ளது. நாளைமேலும் மேம்படலாம். ஆனால் இன்று இப்படித்தான் இது இருக்கிறது, எங்கும். வேறுவழியில்லை

=================

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்