எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

பாவண்ணன்


நாலைந்து மாதங்களுக்கு முன்னர் செய்தித்தாளில் ஒரு செய்தி இடம்பெற்றிருந்தது. அதைப் படித்தபிறகு என் மனைவி அமுதா அன்று முழுக்க அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். கடலுாருக்கு அருகில் ஒருவர் தம் மனைவியையும் ஏழு பிள்ளைகளையும் கொன்று யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டு ஊரைவிட்டு வெளியேறிய ஒருவர் நாகர்கோயிலுக்கு அருகில் ஏறத்தாழ ஒரு மாதத்துக்கும் மேல் சுற்றியிருந்துவிட்டு குற்றஉணர்வு தாளாமல் காவல் நிலையத்துக்குச் சென்று தானாகவே சரணடைந்தார் என்பதுதான் அச்செய்தி.

கொலைக்கான காரணம் மனைவியின் நடத்தையின்மீது அவருக்கு உருவான சந்தேகம். திருமணத்துக்குப் பிறகு அரேபியாவுக்கு வேலை தேடிச் சென்ற அவர் பதினைந்து ஆண்டுக்காலம் உழைத்துப் பொருளீட்டியிருக்கிறார். இரண்டாண்டுக்கு ஒருமுறை விடுப்புக்கு ஊர்திரும்பி அனைவரோடும் கலகலப்பாக இருந்துவிட்டுத் திரும்பிவிடுவது அவர் வழக்கம். வேலைக்குச் சென்றபிறகு ஏழுமுறை இந்தியாவுக்கு வந்து சென்றிருக்கிறார். சம்பாதித்தது போதும் என்கிற எண்ணத்துடன் நிம்மதியாக வாழ ஆசைப்பட்டு கிராமத்துக்கு நிரந்தரமாகத் திரும்பியவரால் ஒருநாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. மனைவிக்கும் யாரோ ஒரு இளைஞனுக்கும் தொடர்பு இருப்பதாக யாரோ ஒருவர் சொன்ன தவறான தகவலை நம்பத் தொடங்கி நிம்மதியைப் பறிகொடுத்தார்.

சந்தேகத்தின் பாரம் தாளாமல் மனைவியையே ஒருநாள் நேரிடையாகக் கேட்டார். அந்தச் சந்தேகத்துக்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை என்பதை அழுகையுடன் சொன்னார் மனைவி. அவரால் மனைவியின் வார்த்தைகளை நம்பவும் முடியவில்லை¢. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனால் மெளனமாக அந்தச் சந்தேக நெருப்பு அவர் நெஞ்சைத் தீய்க்கத் தொடங்கியது. மனைவியையே மறைந்திருந்து சில நாட்கள் உளவறியத் தொடங்கினார். அவரால் எந்த உண்மையையும் கண்டறிய முடியவில்லை. துாக்கமின்மையும் சந்தேகமும் அவரை அணுஅணுவாக அரித்தெடுத்தன. கணத்துக்கு ஒருமுறை கொத்திக்கொண்டே இருக்கிற பாம்பைப்போல சந்தேகம் அவரைக் கொத்தியபடியே இருந்தது.

தன் துன்பங்களுக்கெல்லாம் அவர் மனம் ஒருநாள் வழியைக் கண்டுபிடித்தது. வீட்டுத் தோட்டத்துக்குப் பின்னால் ஒரு பெரிய பள்ளத்தைத் தோண்ட ஏற்பாடு செய்தார். வீட்டின்மீது படிந்திருக்கிற தீய சக்திகளை விரட்டுவதற்காகவும் கழிப்புகளை விலக்குவதற்காகவும் ஒரு பூசைக்காக அந்தப் பள்ளம் தேவைப்படுவதாக அனைவரிடமும் சொல்லிவைத்தார். முன்னிரவு நேரத்தில் மனைவியைத் தன்னந்தனியாக அப்பள்ளத்தின் அருகில் அழைத்துச்சென்று பள்ளத்தின் அருகே நிற்கவைத்து கண்ணை¢முடி வணங்கவைத்தார். நம்பிக்கையுடன் கண்களை மூடி நிற்கும் மனைவியின் கழுத்தை மறைவிடத்தில் வைத்திருந்த தாம்புக்கயிற்றால் நெரித்துக் கொன்றார். மூச்சு அடங்கிய மனைவியின் உடலை அந்தப் பள்ளத்துக்குள் தள்ளி மறைத்தார். இவ்வாறே ஒவ்வொரு பிள்ளையையும் பள்ளத்துக்கு அருகே அழைத்துவந்து கழுத்தை நெரித்துக் கொலைசெய்து பள்ளத்துக்குள் தள்ளிவிட்டார். எட்டு உடல்களைக் கொண்ட பள்ளத்தைத் தனியாகவே மண்ணைத் தள்ளி மூடினார்.

மறுநாள் காலை மனைவியைப்பற்றி விசாரித்த அக்கம்பக்கத்தினரிடம் அவர் தாய்வீட்டுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார். இரண்டு நாள்கள் கழித்தபிறகு மனைவியின் பெற்றோர் ஊருக்குச் சென்று மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துப்போக வந்திருப்பதாக நாடகம் ஆடினார். அவர்கள் அங்கே வரவே இல்லையே என்று சொன்ன மாமனாரிடம் அவர்கள் அங்கு செல்வதாகச் சொல்லிவிட்டுத்தான் இரு நாட்களுக்கு முன்னர் கிளம்பி வந்ததாகச் சொன்னார். உடனே எல்லாத் திசைகளிலும் தேடுதல் படலம் தொடங்கியது. மனைவியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதைப்போல போக்குக்காட்டிவிட்டு அவரும் ஊரைவிட்டு வெளியேறிவிட்டார்.

மனைவியையும் பிள்ளைகளையும் இந்த உலகத்திலேயே இல்லையென்றாக்கிய பிறகு தன் சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி விழும் என்றும் மனஅமைதி திரும்பும் என்றும் அவர் கொண்டிருந்த நம்பிக்கை முற்றிலுமாக நொறுங்கிப்போனது. ஒவ்வொரு கணமும் அவரைக் குற்ற உணர்ச்சி அரித்தெடுக்கத் தொடங்கியது. மனத்துக்குள் அடுக்கடுக்காக எழுகிற கேள்விகளுக்கு அவரால் பதில்களை அளிக்க முடியவில்லை. கண்களை மூடினால் மனைவி பிள்ளைகளின் முகங்கள் நிழலாடத் தொடங்கின. மனைவியின் அருங்குணங்களும் அக்குடும்பத்தை நிலைபெறவைக்க அவள் மேற்கொண்ட தியாகங்களும் நெஞ்சில் அலைமோதத் தொடங்கின. ஒரே ஒரு கணம்கூட நிம்மதியாகக் கண்களை மூடி உறங்க அவரால் இயலாமல் போனது. ஒரே ஒரு கவளம் சோற்றை எடுத்து உண்ணவும் இயலாமல் போனது. உடல் மெலிந்து பைத்தியத்தைப்போல அலையத் தொடங்கினார்.

ஒரு மாதத்துக்கும் மேலான தலைமறைவு வாழ்க்கையில் குற்ற உணர்வு தாளாமல் சிலமுறைகள் தற்கொலைக்கு முயற்சி செய்தார். எவ்விதமான நடுக்கமும் இல்லாமல் எட்டுக் கொலைகள் செய்தவரால் தற்கொலை செய்துகொள்ள இயலவில்லை. அச்சத்தில் நடுங்கினார். கடலில் விழுந்து சாகச் சென்றவர் அதற்கான துணிச்சலின்றி இரவெல்லாம் வேடிக்கை பார்த்திருந்துவிட்டுத் திரும்பினார். வாகனங்களின் சக்கரங்களில் அடிபட்டு இறக்க எடுத்துக்கொண்ட முயற்சியும் பலிக்கவில்லை. குலுக்கலுடன் வாகனத்தை நிறுத்திய வண்டியோட்டியிடம் வசைபட்டதுதான் மிச்சம். தன் முயற்சிகள் தோல்வியில் முடிவடைகிற மனஅழுத்தம் மேலும்மேலும் அவரைப் பைத்தியமாக்கிக்கொண்டிருந்தது. ஒருநாள் அதிகாலை காவல்துறையிடம் சரணடையும் முடிவெடுத்து அவசரம்அவசரமாக ஊருக்குத் திரும்பி உண்மையைக் காவல்துறைக்கு எடுத்துரைத்துவிட்டுச் சரணடைந்தார்.

இச்செய்தியின் அதிர்ச்சியிலிருந்து அமுதாவால் மீளவே முடியவில்லை. மனிதர்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ என்று முனகியபடி இருந்தாள். மனச்சமநிலை குலைகிற கணத்தில் மனிதர்கள் எடுக்கிற முடிவுகள் பெரும்பாலும் இப்படித்தான் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன என்று சொன்னேன். குழப்பமான மனநிலைகளிலோ அல்லது பதற்றம் மிகுந்த சூழல்களிலோ நாம் ஒருபோதும் எந்த முக்கியமான முடிவையும் எடுத்தல் கூடாது எனப் பெரியவர்கள் சொல்வதற்கான காரணம் இதுதான். இது ஒன்றும் யாருக்கும் தெரியாத விஷயமல்ல. எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் பதற்றத்தில் வெடிக்கிற மனம் முதலில் இந்த உண்மையைத்தான் புறக்கணித்துத் தள்ளுகிறது. தான் நினைப்பதைச் சாதிக்கும் வெறியை உடலெங்கும் ஊட்டி உந்தித் தள்ளுகிறது. வெறி தணிந்தபிறகு இயல்பான நிலைக்குத் திரும்பியபின்னர் சுயஇரக்கத்தால் அவஸ்தைப்படத் தொடங்குகிறது. காலம் காலமாக இந்தக் காட்சிகளே உலக அரங்கில் மீண்டும் மீண்டும் அரங்கேறியபடி உள்ளன.

தான் வைத்த பலியை இறைவன் எடுக்கவில்லை என்கிற ஆத்திரத்தில் சகோதரனைக் கோபத்தில் அடித்ததையும் அடிவாங்கியவன் துரதிருஷ்டவசமாக இறந்துவிடுவதையும் தன் நிதானமின்மையால் நேர்ந்துவிட்ட கொலைக்காக அஞ்சி, குற்ற உணர்வால் நலியும் சகோதரனுடைய கதை இடம்பெற்றிருக்கும் பைபிள் சம்பவத்தை அவளுக்கு எடுத்துச் சொன்னேன். நாங்கள் உரையாடிக் கொண்டிந்த சமயத்தில் மேசையின் மீது இருந்த தாஸ்தாவெஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும் நாவலைக் காட்டி ‘இந்த நாவலின் கதையும் இதுதான் தெரியுமா ‘ என்றேன். அவள் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள். அவளுக்கு அக்கதையைச் சுருக்கமாகச் சொன்னேன்.

அடகுக்குப் பொருளை வாங்கிக்கொண்டு கடன்கொடுக்கிற மூதாட்டியிடம் கடன்வாங்கச் செல்கிற ஓர் இளைஞன் சந்தர்ப்பவசத்தால் அவளைக் கொல்ல நேர்ந்துவிடுகிறது. அந்தத் தருணத்தில் எதிர்பாராதவிதமாக உள்ளே வரும் மற்றொரு உறவுக்காரப் பெண்மணியையும் அவன் கொல்ல நேரிடுகிறது. தேவையான தொகையுடன் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிடுகிறான் இளைஞன். காவல்துறை அக்கொலையை விசாரிக்கத் தொடங்குகிறது. அந்த இளைஞனும் விசாரிக்கப்படுகிறான். விசாரணையின் முடிவில் அவன் குற்றமற்றவனாக அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறான். சுதந்தரனாக சிறையிலிருந்து வெளியேறி வாசல்வரை வந்தவனை எதிரே காணப்படும் தேவாலயத்தின் காண்டாமணியோசை வரவேற்கிறது. அந்த மணியோசை அவனுக்குள் உறங்கியிருக்கும் குற்ற உணர்ச்சியை மிகுதிப்படுத்துகிறது. அவனால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. மறுபடியும் காவல்நிலையத்துக்குள் சென்று தானே அக்கொலைகளைச் செய்தவன் என்றும் தன்னைக் கைதுசெய்யுமாறும் சொன்னபடி நிற்கிறான். இதுதான் கதை.

‘உலகம் முழுக்க இதுதான் நடக்கிறதுபோலும். தவறு செய்வதும் பிறகு அந்தக் குற்ற உணர்ச்சியால் நலிவதையும் மனிதர்களால் விடவே முடியாது போலும். ‘

‘கொலைகளைத் தொழிலாகவே செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு குற்ற உணர்ச்சி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் சந்தர்ப்பவசத்தால் மனச்சமநிலை இழந்து இப்படிப்பட்ட செயல்களைச் செய்துவிடுகிறவர்களைக் குற்ற உணர்ச்சி அரித்தெடுத்துவிடுகிறது. ‘

புரிந்துகொண்டதற்கு அடையாளமாக என் மனைவி தலையாட்டினாள். அந்த விஷயத்தை மேலும் விளக்கமாகச் சொல்வதற்கு அவளுக்கு வேறொரு கதையையும் சொன்னேன். அது எட்கர் ஆலன்போ எழுதிய ‘இதயக்குரல் ‘ என்னும் சிறுகதை.

பயத்தால் தன் புலன்கள் மேலும்மேலும் கூர்மையடைவதையும் கேட்கும் திறன் அதிகரிப்பதையும் உணர்ந்துகொள்கிற ஒருவன் தன் கதையை வாசகர்களை முன்னிலைப்படுத்திச் சொல்வதைப்போல தொடங்குகிறது அக்கதை. திடாரென ஒருநாள் இரவு அவன் உள்ளத்தில் தன்னுடன் தங்கியிருக்கும் ஒரு கிழவரைக் கொலைசெய்யும் எண்ணம் தலையெடுக்கிறது. தலையெடுக்கத் தொடங்கிய நாள்முதலாகவே அவனைத் துளைத்தெடுக்க ஆரம்பிக்கிறது. அதற்கு எந்தவிதமான குறிக்கோளோ ஆத்திரமோ காரணமில்லை. ஒளிமங்கிய மென்திரை படர்ந்த அவருடைய நீலநிறக் கண்கள்தாம் காரணம். அந்தக் கழுகுப்பார்வை தன்மீது படும்போதெல்லாம் அவன் ரத்தம் உறைவதைப்போல மாறிவிடுகிறது. அதிலிருந்து மீள்வதற்காகத்தான் அந்தக் கிழவரைக் கொன்றுவிட்டால் நல்லது என்கிற முடிவுக்கு வருகிறான் அவன். அதன்பிறகு மிரட்டும் அக்கண்களின் துன்பத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்று திட்டமிடுகிறது அவன் மனம்.

கிழவரைக் கொல்வதற்கு ஒருவாரம் முன்பாகவே அவன் அவரிடம் மிகவும் நேசம் காட்டிப் பழகுகிறான். தான் செய்யவிருக்கிற கொலை மிகவும் தற்செயலாக இருக்கவேண்டும் என்பதற்காக மிகவும் பிரயாசை எடுத்துக்கொள்கிறான். ஒவ்வொரு இரவிலும் பன்னிரண்டு மணிக்குப் பிறகு அவருடைய அறையின் கதவுப்பிடியைத் திறந்து தந்திரமாக உள்ளே நுழைகிறான். முதல் வேலையாக லாந்தரின் துருப்பிடித்த திருகிலிருந்து ஓசை எழாவண்ணம் மிக ஜாக்கிரதையாக கிழவரின் கழுகுக்கண்களில் மட்டும் ஓரிழை வெளிச்சம் விழும்படி அதைத் திருகுகிறான். ஒருநாள் அல்ல, தொடர்ந்து ஏழுநாள்கள் நள்ளிரவு நேரத்தில் இதையே செய்தவண்ணம் இருக்கிறான். ஆனல் அந்தக் கண்கள் மூடியவண்ணமே இருக்கின்றன. அதனால் தான் வந்த வேலையைச் செய்யாமலேயே திரும்புகிறான் . அவனுடைய வெறுப்பு முழுக்க கிழவருடைய கண்கள் மீதுதான்.

எட்டாவது நாள் நள்ளிரவில் வழக்கம்போல உள்ளே நுழைகிறான் அவன். லாந்தரைத் திறந்து வெளிச்சமுண்டாக்க நினைத்த நேரத்தில் கைபிசகி தகரஇணைப்பில் பட்டுவிடுகிறது. உடனே ‘யார் அங்கே ? ‘ என்று அலறியவண்ணம் அந்தக் கிழவர் படுக்கையில் எழுந்து உட்கார்கிறார். உடனே அசையாமல் அப்படியே நின்று விடுகிறான் அவன். ஏறத்தாழ ஒருமணிநேரம் அப்படியே கழிகிறது. கிழவரும் உறங்காமல் செவிகளைத் தீட்டிக்கொண்டு தன்னை நெருங்கும் சத்தத்தைக் கவனித்தபடி உட்கார்ந்திருக்கிறார். அவருடைய அச்சம் அதிகரித்தபடி வருகிறது. பயத்தினால் பீடிக்கப்பட்ட இதயத்திலிருந்து ஒரு முனகல் எழுகிறது. வெகுநேரம் மிகப்பொறுமையாகக் காத்திருந்துவிட்டு அவர் இன்னும் படுக்கவில்லை என்பதை உணர்ந்து லாந்தரின் சிறுஇழை ஒளியை வெளிக்காட்ட முடிவு செய்கிறான். அதன்படி மிகமிக கவனத்துடன் சிலந்தியின் நுாலிழை போன்ற ஒரு மங்கிய இழை லாந்தரின் சிறுசந்து வழியாக வந்து அந்தக் கழுகுக்கண்களின்மீது விழும்படி செய்கிறான். திறந்திருந்த அக்கண்கள் மீது அந்த வெளிச்சம் படர்கிறது. அதைப் பார்க்கப்பார்க்க அவனுக்குள் ஒரு வெறி எழுந்து தலைவிரித்தாடுகிறது. பஞ்சில் அடைத்த கடிகாரம் ஏற்படுத்தும் சத்தத்தைப்போலத் துடித்த கிழவருடைய இதயத்துடிப்பைக் கேட்கிறான் அவன். முரசம் ஒரு போர்வீரனின் நெஞ்சில் வீரத்தை ஊட்டுவதைப்போல அந்த ஓசை அவன் சினத்தை அதிகமாக்குகிறது. ஒரு நொடியில் அவரைத் தரையில் இழுத்து வீசி கனமான படுக்கையை அவர்மீது இழுத்துப்போட்டு மூடுகிறான். கிழவர் இறந்துவிடுகிறார். இனி அவருடைய கண்கள் அவரைத் தொல்லைப்படுத்தாது என்று நினைத்துக்கொள்கிறான். தலையையும் கைகளையும் கால்களையும் தனித்தனியாக வெட்டி எடுக்கிறான். பிறகு மூன்று பெரிய தளங்களை அறையின் தரையிலிருந்து அகற்றி அதற்குள் கிழவரின் சடலப்பகுதிகளை ஒழுங்காக அடுக்கிவைக்கிறான். அதற்கப்புறம் தளங்களை அழகாகத் திரும்பவும் பொருத்திவைக்கிறான்.

எல்லா வேலைகளும் முடிவடையும்போது அதிகாலை மணி நான்கு. அப்போது கீழே உள்ள அழைக்கும் மணி ஒலிக்கிறது. மூன்று மனிதர்கள் உள்ளே நுழைந்து பணிவுடன் தம்மைக் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்.நடு இரவில் ஓலமொன்றை அடுத்த வீட்டுக்காரர் கேட்டுச் சந்தேகித்துக் காவல் துறைக்குப் புகார் செய்திருப்பதாகவும் வீட்டைச் சோதனைபோடத் தம்மை நியமித்திருப்பதாகவும் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒன்றும் தெரியாத அப்பாவியைப்போல அவர்களுக்கு முகமன் கூறி வரவேற்கிறான் அவன். தானே இரவில் பயங்கரக் கனவொன்றைக் கண்டு ஓலிமிட்டதாகச் அசால்கிறான் அவன். கிழவர் ஊருக்குச் சென்றிருப்பதாகச் சொல்கிறான். வந்தவர்களைக் கூட்டிச் சென்று வீடு முழுக்கச் சுற்றிக் காண்பிக்கிறான். கடைசியாகக் கிழவருடைய அறைக்கே அழைத்துச் சென்று காண்பிக்கவும் செய்கிறான். தன்னுடைய தளராத தன்னம்பிக்கையால் ஏற்பட்ட உற்சாகத்துடன் அந்த அறைக்குள்ளேயே அவர்களுக்கு நாற்காலிகளைப் போடுகிறான். எந்த இடத்தில் அக்கிழவருடைய பிணம் மறைக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு மேலேயே தன் ஆசனத்தைப் போட்டுக்கொண்டு அமர்கிறான்.

சில நிமிடங்களுக்குள் அவனிடம் பெருத்த மாற்றம் ஏற்படுகிறது. அவனுடைய முகம் வெளிறத் தொடங்குகிறது. அந்த மனிதர்கள் பொய்விடக்கூடாதா என்று எண்ணுகிறான். செவிகளில் ஒரு ரீங்காரம் கேட்கிறது. அது மேலும் மேலும் தொடர்ந்து தெளிவாகிக்கொண்டே வருகிறது. அந்த உணர்வை மறப்பதற்காக அவனும் கவலையின்றிப் பேச முயற்சி செய்கிறான். முடியவில்லை. திடாரென்று அது தன் செவிகளில் ஏற்பட்ட ஓசையல்ல என்பதை உணர்கிறான். பஞ்சுக்குள் பொதியப்பட்ட கடிகாரத்தின் மெல்லிய அடங்கிய ஓசை அது. உடனே எழுந்து தான் அமர்ந்திருந்த நாற்காலியைச் சுழற்றி அந் தப் பலகையின் மீது இழுத்தெறிகிறான். ஆனால் அதையும் மீறி அந்த ஓசைமட்டும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. வந்தவர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்தும்கூட வேண்டுமென்றே வாளாவிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது அவனுக்கு. அவனுடைய குலைநடுக்கத்தைக் கண்டு அவர்கள் சிரிப்பதைப்போல இருக்கிறது. அந்த வஞ்சப்புன்னகையைத் தன்னால் இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது என்று எண்ணுகிறான். உடனே அச்சத்தில் அலறுகிறான் அவன். ‘வேஷதாரிகளே, இன்னும் நாடகமாட வேண்டாம். நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன். அந்தத் தளங்களைப் பிரித்துப் பாருங்கள். இதோ இங்கேதான் அந்தப் பொல்லாத இதயம் ஓடுகிறது ‘ என்று காவலர்களைப் பார்த்துச் சத்தமிடுகிறான்.

*

நவீன சிறுகதைத்துறையில் அழுத்தமான தடம் பதித்தவர் எட்கர் ஆலன்போ. அமெரிக்க எழுத்தாளர். உளவியலின் அடிப்படையில் இவருடைய கதை மாந்தர்களை அணுகிஅலசிப் புதுப்புது விஷயங்களை விமர்சகர்கள் கண்டுரைப்பது மிகமுக்கியமான விஷயம். அவருடைய சிறுகதைகளில் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து ‘இதயக்குரல் ‘ என்னும் தலைப்பில் தொகுப்பாக்கி 1967 ஆம் ஆண்டில் ஹிக்கின்பாதம்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நுாலாக வெளியீட்டது. மொழிபெயர்த்தவர் குமாரி.லீலா.

———————————-

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்