விருமாண்டி – ஒரு காலப் பார்வை..!

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

வரதன்


1. கமல் ஒரு தொழில் நுட்ப கலைஞரா.. ?

– ஆம் சந்தேகமேயில்லை.

2. கமல் ஒரு திறமையான நடிகரா… ?

– ஆம் ஒரு திறமையான நடிகர் தான்.

3. கமல் ஒரு சமுக அக்கறையுள்ள நடிகரா… ?

– விவாதத்திற்குறியது.

விருமாண்டியை எடுத்துக் கொள்வோம்.

அதில் தூக்குத் தண்டனையை வைத்து கதை பண்ணி ஒரு விவாத மேடை அமைத்துள்ளதாக சொல்கிறார்.

ஆனால் அதற்காக எடுத்துக் கொண்ட கதைக்களமும், கதாபாத்திர வாழும் முறை சுழல்களும் தான் கேள்விக்குறியது.

அவர் எடுத்துக் கொண்டது, மதுரை மாவட்ட சுழலும், தேவர் ஜாதி கதாபாத்திரங்களும்..

முதலில் மதுரை மாவட்டத்தின் வாழ்வியல் வரலாறு:

— பிரிட்டிஷ் காரர்கள், சென்னையை தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு திட்ட வடிவு தந்து அதனை உருவாக்குவதற்கு முன்பிருந்தே மதுரை நகர் வளர்ந்த நகரமாக இருந்தது.

மொழி வளர்ச்சிக்கான பங்களிப்பிலும் சரி, வணிகத்திலும் சரி, ஆன்மீகத்திலும் சரி மதுரைக்கு வரலாறு உண்டு.

தொடர்ந்த காலத்தில், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்கள் மிக பிரசித்தம்.

அப்படியிருந்த மதுரை பின்னர் பின் தங்க ஆரப்பித்தது.

– தொழில் முறையில் புதிதாக வந்த கோவை மாவட்டம், மதுரையை பின்னுக்குத் தள்ளியது.

– கல்வியில் சிறந்த மதுரை மாவட்டம் இன்று அதிலும் தன் சிறப்பை இழந்தது.

திரு.காந்தி அவர்கள் , தன் இந்திய மக்களின் வேதனையின் அடையாளமாக கொண்டிருந்த ஆடையை தானும் உடுத்திக் கொண்டது எந்த மதுரையில் நடந்ததோ அதே மதுரை இன்று அரசியலிலும் கீழ் மட்ட நிலையில் உள்ளது.

முத்தமிழ் மதுரை இப்படி மூச்சுத் திணறுவது எதனால்.. ?

திருமலை நாயக்கர் காலம் முன்பே வடக்கிலிருந்து வந்து குடியமர்ந்து, நூல் வியாபாரத்தைச் செழிக்கச் செய்த செளராஷ்டிரா மக்கள் வளர்த்த பட்டு நூல் மற்றும் தறி வியாபாரத்தில் இன்று புதிதாய் வந்த திருப்பூர், ஈரோடு போல் செழிக்க முடியாமல் அழிந்தது எதனால்… ?

எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு காரணம் –

மதுரை வன்முறை நகரமாக மாறியது தான்.

அப்படி மாற்றியது எது.. ? யார்.. ?

முதலில் சிலவற்றை பின்னோக்கிப் பார்ப்போம்-

… மதுரையில் மற்ற இடங்களைப் போல், அரசர்கள் , ஜமிந்தார்கள் தானமாக கோவில்களுக்கும் – ஐயர்களுக்கும் தானமாக எழுதி வைக்கப்பட்ட வயல்வெளிகள் ஐயர்களிடமும் இருந்தது.

தனியார்களிடம் இருந்த வயல்வெளிகளை விடுத்து இந்த நிலங்களைப் பார்ப்போம்.

– இந்த நிலங்களில் வேலைக்ளை, தேவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தனர்.

தேவர்கள் பெரும்பாலும் காவல், காளை மாடு பராமரித்தல், அறுவடை போன்றவற்றை பொறுப்பெடுத்துக் கொண்டார்கள்.

அவர்களின் கீழே தாழ்த்தப்பட்டவர்கள் வேலை செய்தார்கள்.

ஐயர்களைப் பொறுத்தவரை கோவிலுக்குள் வராதே, வீட்டிற்குள் வராதே என்று சொன்னாலும், பிற்காலத்தில் அதே ஐயர் ஜாதியில் வந்த சிந்தனையாளர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் கோவில் பிரவேசம், அவர்களுடன் திருமணம் செய்தல் போன்றவற்றை 40-50 களிலேயே தொடங்கி விட்டாலும், தேவர் ஜாதியினரோ இன்றும் தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளனர்.

சரி, விஷயத்திற்கு வருவோம்.

பின்னர் ஐயர்கள் இடம் பெயர்ந்து நகரங்களுக்கு ( சென்னை, மும்பய், டெல்லி ) சென்றபோது, உழுவபனுக்கே நிலம் சொந்தம் எனும் சட்டம் படி, தேவர்கள் ஏதோ கொஞ்சம் காசு கொடுத்து எடுத்துக் கொண்டார்கள். அதிலும் அந்தப் பணம் 15 பைசா போஸ்ட் கார்டு பல அறுவடைகாலங்களுக்குத் தொடர்ந்து போட்ட பின்னர் தான் கிடைத்தது.

ஆனால், அந்த நிலங்களில் உழைப்பை தேவர்களை விட அதிகமாக போட்டிருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த பயனும் இல்லை.

சட்டம் நிலத்தில் உழைத்தவர்களுக்கு சம உரிமை என்று சொல்லாமல் போய் விட்டது.

பின்னர் புதிதாக வந்த முதலாளிகள், தன் கீழ் வேலை பார்த்தவன் வீட்டுக்குள் அத்து மீறி புகுற ஆரம்பித்தார்கள்.

அந்தக் கதைகள் மனித வராற்றில் கற்கால மன நிலைக்கு ஒப்பானவை.

….. இவ்வாறாக பல கோணங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது மனித நெயமற்ற முறையில் அத்து மீறலைத் தேவர் சமுதாயம் தொடர்ந்த போது, பல பிரச்சனைகளின் காரணமாக, ஜில்லா கலெக்டர் அலுவலகத்தில், தாழ்த்தப்பட்டவர்களின் சமுதாயப் பிரதிநிதிக்கும், தேவர் இன பிரதிநிதிக்கும் அழைப்பு வைக்கப்பட்டு கலெக்டர் முன் சமரச பேச்சை நடத்தினர்.

கலெக்டர் முன் தேவரின , தாழ்த்தப்பட்ட பிரதிநிதி இருவருக்கும் இருக்கைகள்.

பேச்சுத் தொடர்ந்தது.

தேவரின பிரதிநிதி நோக்கி, இவரின் ஜாதியினர், எங்களைக் கொடுமை படுத்துகிறார்கள், எங்களின் பெண்களை பெண்டாடுகிறார்கள், கேவலமாக நடத்துகிறார்கள் என்று சொல்லும் போது, தாழ்த்தப்பட்டத் தலைவர் , அந்த தேவர் ஜாதி பிரதிநிதி நோக்கி கை விரல் காட்டி கலெக்டரிடம் சொன்னார்.

அவ்வளவு தான், வந்தது கோபம் அந்த தேவரின தலைவருக்கு,

வெகுண்டு எழுந்து கலெக்டரின் அலுவலகத்தின் முதல் தளத்தில் நின்றபடி, வெளியே வேல் கம்பு, திருப்பாச்சேத்தி அருவாளுடன் இருந்த

தன் தேவர் ஜாதி கும்பலை நோக்கி,

‘ஏண்டா, ஒரு பறையன் என்னை நோக்கி கையை நீட்டி பேசுறான்.. நீங்க என்னடா வேடிக்கை பார்க்கவா வந்தீங்க… ‘ என்ற பொருளுடன் அவர் தன் நீண்ட தலைமுடியை சிலுப்பிக் கொண்டு சிங்காமாக கர்ஜிக்க,

அவ்வளவு தான், சீறிய ஓநாய்கள், கலெக்டர் அலுவலகம் புகுந்து, கலெக்டர் கண் மற்றும் அவரின் அதிகாரம் முன்னே..

அந்த தாழ்த்தப்பட்ட பிரதிநிதியைக் கண்ட துண்டமாக வெட்டிச் சாய்த்தனர்.

அவ்வளவு தான் மதுரை, இராமநாதபுர மாவட்டங்கள் கலவர பூமியாகிப் போனது.

ஏன்… ? ஒரு தாழ்த்தப்பட்ட பிரதிநிதி கண்ட துண்டமாக வெட்டப்பட்டதாலா.. ?

இல்லை… தேவர் ஜாதி பிரதிநிதி நோக்கி கை நீட்டி பறையன் ஒருவன் பேசியதால்..!!

அது முதுகுளத்தூர் கலவரம் எனப்பட்டது. மிகப் பெரிய கலவரம். நிறைய தாழ்த்தப்பட்டவர்கள் உயிரிழப்பு.

நல்ல வேளையாக , அப்போது தமிழகம் ஆண்ட ஒரு முதல்வருக்கு தன் கட்சியின் பலன், எதிர்காலம் தாண்டி மனித நேயமும், தன் முதல்வர் பதவிக்குண்டான தர்மம் காக்கும் மன நிலையும் இருந்தது.

அந்த தேவரின பிரதிநியை கைது செய்ய உத்தரவிட்டார்.

முதல்வரின் தளராத மன நிலையால், கலவரம் அடக்கப்பட்டு அந்த தேவரின பிரதிநிதி கைது செய்யப்பட்டார்.

மதுரை கொஞ்சம் (ஆமாம் கொஞ்ச காலம் தான் ) நிம்மதியானது.

இதில் முதல்வர் , தேவரின பிரதிநிதி, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி இவர்களின் பெயர் வரலாற்றில் உண்டு.

தெரியாத சில விஷயத்திற்கு வருவோம்.

அந்த தேவருக்கு, சிவகங்கையில் கொடி கட்டிப் பறந்த ஒரு வக்கீல், தான் சார்ந்திருந்த கட்சியின் ஆட்சி மேலும், அதன் தலைவரின் மேலும் மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்து, ஆஜராக மறுத்து விட்டார்.

அந்த வக்கீல், திரு.கமலஹாசனின் தந்தை திரு.சீனிவாசன்

அதே சமயம், அந்த தேவரின் மக்களுக்காக, ஆஜரான வக்கீல், திரு.கமலஹாசனின் சகோதரர் திரு.சாருஹாசன்.

இப்படி தாழ்த்தப்பட்ட மக்களின் சமுதாய வாழ்வியல் பிரச்சனை பற்றி நன்கு தெரிந்த திரு.கமல், மதுரை கலவர பூமியாகி வளர்ச்சியில் பின் தங்கிப் போனதற்கு காரணமான ஒரு ஜாதிக்கு அதன் தவறான நிலைப்பாட்டை சொல்லாமல், வீரம் என்று அவர்களின் வன்முறை மனோ நிலையை ஆராதித்து திரைப்படம் எடுப்பது தவறென்று ஏன் தெரியவில்லை.

அவரிடமுள்ள அற்புத திறைமையால் தேவரின் மக்களைப் பற்றி அவர்கள் கொண்டது வன்முறைக் கலாச்சாரம் தான் வீரமல்ல என்று , தேவர் மகனில் சொன்ன கமல் பின் ஏன் இன்று இப்படி.

முந்தைய கலவரகாலங்களில், தேவரின மக்களுக்கு தங்களின் அரசியல் காரணங்களுக்காக துதிபாடி தூபம் போட்டு அவர்களுக்கு கொம்பு

சீவி விட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதையில் ஏன் பயணிக்கிறார். அந்த முதல்வர் அப்படி கட்டுப்படுத்திய கலவரம் பின்பு தி.மு.க நிலைப் பாட்டால் பின்னர் தொடர்ந்தது. மதுரை சுத்தமாக முன்னேற்றத்திற்கு வழி இல்லாத மாவட்டமாகப் போனது.

மதுரை மெடிக்கல் கல்லூரியில் பயின்ற திரு.கிருஷ்ணசாமி இந்த வரலாறு தெரிந்தோ தானோ என்னவோ இந்தப் படத்திற்கும், தேவர்களை அர்த்தமில்லாமல் ஆராதிக்கும் மனநிலை எதிர்த்தது.. ?

இதில் வேடிக்கை, இந்தப் வரலாறு தெரிந்தும், சிவகங்கை அருகே வேலைப் பணியாற்றிய திரு,திருமாவளவன் இவ் விஷயத்தில் மெளனம் சாதிப்பது.

இப்படி வன்முறைக் கலாச்சாரத்தை வீரமாக நினைப்பவர்களை வைத்து எப்படி தூக்குத் தண்டனை பற்றிய கேள்வி எழுப்புகிறார்.. ?

சரி விஷயம் எப்படியோ… விருமாண்டி படம் தாழ்த்தப்பட்டவர்கள் – தேவர்கள் பற்றி கதை பண்ணாததால், அதன் இன்னோரு கோணத்தைப் பார்ப்போம்.

அடுத்தவன் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்பவன், காந்தியைக் கொல்பவன், அடுத்தவன் பெண்டாட்டி / புருஷன் ஆகியோரைக் கவர்ந்து பிறரை கொல்பவர், சின்னஞ் சிறு பெண்களின் மேல் பாலியல் வன்முறை புரிபவன் இவர்களுக்கெல்லாம் உங்களின் தூக்குத் தண்டனை கூடாது என்ற செய்தி ஒரு உற்சாக பான மாக இருக்கலாம்.

ஆனால், அடுத்தவனுக்கு இடைஞ்சல் செய்வது தப்பு என்று நினைப்பவர்களுக்கெல்லாம், தூக்குத் தண்டனை அவசியமான ஒன்று.

சட்டம் கடுமையாக இருப்பதால் மக்கள் நிம்மதியாக இருக்கும் ஒரு விஷயத்தை விருமாண்டி ஏன் சிங்கப்பூரிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை… ?

மேலும், கமலின் கதாபாத்திரம் சும்மா தினவு எடுத்த ஊர் சுத்தி சண்டியர் தானே தவிர, சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்த கதாபாத்திரம் இல்லை.

இந்த மாதிரி ஒரு தூக்கில் ஒட்டு மொத்தமாக போட வேண்டிய கும்பலை நியாயப்படுத்த கமல் ஆரம்பத்தில் சில அப்பாவி கைதிகளை டாகுமெண்டரி எடுப்பவரிடம் பேசுவது போல் காட்சி.

ஐயா கமலே அந்த மாதிரி சில புண்ணியவான்கள், விருமாண்டி மாதிரி சண்டியகர்ள் போல் ஆகி விடக் கூடாது எனத் தான், மேல் முறையீடு, ஜனாதிபதி கருணை மனு என பல அடுக்கு சட்டத்தில் உள்ளது.

அதனால் தான், ராஜீவ் கொலையாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட தூக்கு மேடை போவது கேள்விக்குறியாகிறது.

அதுவும் போக வெட்டவெளியில் உடலுறவு கொள்வது போன்ற காட்சிகளுடன் கவித்துவம் என நினைக்கும் வக்கிர புத்தி இயக்குனராக கமல் வெளிப்படுகிறார்.

இன்று அகில இந்தியாவாலும் மதிக்கப்படும் ஒரு தமிழ் இயக்குனர் தன் உதவி இயக்குனர்களிடம் சொன்னது போல், கமல் ஒரு வக்கிரப் புத்தி கலைஞனோ… ? என இந்தப் படம் நம்மை சிந்திக்க வைக்கிறது.

கமல் சற்று ஆரோக்கியமான மனநிலையுடன் படம் செய்யட்டும்.

இந்த லட்சனத்த்தில் படத்திற்கு வந்து விட்டு பதறி குழந்தைகளுடன் வெளியேறிய பெண்கள் பாவம்.

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

மரண தண்டனை நீக்க மாநாடு பற்றி

  • மரண தண்டனை, அறிவுஜீவிகள்.

    Series Navigation

  • வரதன்

    வரதன்