ஈரநிலம்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

பாலாஜி


———–

ஓடாத படம்; பாரதிராஜா இயக்கம்; ஹீரோவாக மனோஜ் கே பாரதி;

என்று பல பயங்களுடன் பார்க்கத் துவங்கினேன். பாடல்கள் பலமுறை

கேட்டு மனதில் நின்றிருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத ஆரம்பம். அட்வைஸ்

கொடுக்காத நகைச்சுவை.

சுகாசினிக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் இருவரும் ராணுவத்தின்

போர் வீரர்கள். திருமணமாகி ஆளுக்கு ஒரு ஆண் குழந்தை. வீட்டையும்

நிலத்தையும் பார்த்துக் கொள்ளும் கொழுந்தனராக மனோஜ். மதனிகள்

மேல் ரொம்ப பாசமும் மரியாதையும் வைத்துள்ளார்.

கார்கில் போரில் அண்ணன்கள் இறக்க கருமாத்தூர் பட்டி, கார்கில் பட்டி

என பெயர் மாற்றப்படுகிறது. மதனிகளின் பொறுக்கி அண்ணன் ( ‘மெட்டி

ஒலி ‘யில் போஸ்) வில்லனின் மகுடிக்கு ஏற்ப ஆடி தங்கைகளை பிறந்த

வீட்டுக்கு அழைத்து செல்கிறார். கொஞ்சம் வெட்டு குத்துக்குப் பிறகு

மனோஜுக்கு விடுதலையும் கிடைக்கிறது.

முதல் பாதியில் நந்திதா-ஜெனிஃபருடன் நிறைய ரொமான்ஸ். இப்பொழுது

வரும் எ.20.உ.18 போன்ற படங்களில் இருந்து நல்ல மாறுதலான

காதல் காட்சிகள். ஹீரோயினுக்கு ஒரு அப்பாவித்தனத்துடன் குறும்பு

நிறைந்த கிராமத்துக் களை. கொடுத்த வாய்ப்புகளில் கலக்கி இருக்கிறார்.

இவரை ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ஆட வைத்துக் காணாமல் போக்குவது

அநியாயம்.

அந்த அம்மாவாக சுகாசினி மணிரத்னம் தேவையே இல்லை. போருக்கு

வழியனுப்பும் ரயில் ஸ்டேஷன் காட்சியில் மட்டுமே உருக வைக்க வாய்ப்பு.

இந்தப் படத்துக்காக ‘சிறந்த குணச்சித்திர நடிகை விருது ‘ கிடைக்கும்

வாய்ப்பு லேது. மனோஜின் காரெக்டர் மனதில் பதிந்தாலும் artificial sweetener

போட்ட காபி போல் எதையோ தொக்கி வைக்கிறார்.

அருணா போல் முழிக்கும் பெரிய அண்ணி, ‘நாட்டுச் சரக்கு நச்சுனுதான் இருக்கு ‘

என்று ஆட வந்துவிடக் கூடிய சிறிய மதனி, சிறிய மதனியின் மேல் ஆசைப்படும்

வில்லன் என துணைக்கு வருபவர்கள் அனைவரிடமுமே ஒழுங்காக வேலை

வாங்கி இருக்கிறார் பாரதிராஜா. கோர்ட் சீன்களில் நம்மை ரொம்பப்

படுத்தாமல், சண்டைக் காட்சிகளைப் புகுத்தாமல், கிராமிய அழகுகளைக்

காமிராவில் மிரட்டாமல் ரொம்ப எதார்த்தமான திரைக்கதை.

படத்தின் அபார பலம் வசனங்கள். டைட்டில் படத்தின் முன்பே போட்டு

விட்டதால் முழுப் படத்தையும் பின்னோட்டிப் யார் என்று தெரிந்து கொள்ள

வைக்கும் வட்டார வழக்கு. தேன்மொழியின் வசனங்களில் தெறிக்கும்

சொலவடைகள் கிராமிய பாண்ட்ஸ் மணம் கொடுக்கிறது.

ஆர். செல்வராஜின் கொஞ்சம் பெரிய கதையை இரண்டரை மணி

நேரத்துக்குள் அடக்குவதில் கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறார் இயக்குநர்.

அவருக்கு யாராவது ஒன் லைனர் கதைகளான ஜேஜே-வைப் போட்டுக்

காட்டி இருக்கலாம். ‘புதுமைப் பெண் ‘ணை விட வேகத்துடன், ‘மண் வாசனை ‘யை

விட வாசனையுடன், ‘ஜூட் ‘டை விட நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்

இந்தப் படம் கொஞ்சமாவது ஓடியிருக்க வேண்டும்.

———————–

bsubra@yahoo.com

Series Navigation

பாலாஜி

பாலாஜி