பி.கே.சிவகுமார்
நவீன பெண்கவிஞர்கள், தம் கவிதைகளினூடே முன்வைக்கிற பெண்மொழியும், உணர்வுகளும், கலகம் தொனிக்கும் எதிர்ப்புக் குரல்களும், ஆளை நிறுத்தி கேள்வி கேட்கிற விமர்சனங்களும் பெண்களை மட்டுமல்லாமல் பெண் விடுதலை பேசுகிற எல்லாரையும் பெருமிதம் கொள்ள வைப்பன. இவர்களின் கவிதைகளுக்கு வரவேற்பிருப்பது போலவே காட்டமான விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. கவனம் பெற வேண்டும் என்பதற்காகவும், வாசகர் மனத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் வலிந்து சில வார்த்தைகளையும் வரிகளையும் இயல்பில்லாமல் ஆபாசம் தெறிக்கும் விதத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று இவர்கள் குற்றம்சாட்டப்படுகிறார்கள். காலம் காலமாய் வீட்டிற்குள்ளே பூட்டி, அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்குரலின் பீறிட்டெழும் எதிர்ப்பு வடிவமே அத்தகைய வார்த்தைகளும் வரிகளுமென்று குற்றம் சாட்டுபவர்கள் ஏதும் கரிசனம் காட்ட மறுக்கிறார்கள். ‘இவர்கள் பேசுகிற பெண்ணியம் எல்லாம் மேலை நாடுகளிலிருந்து பிரதியெடுக்கப்பட்டவை. கட்டுப்பாடற்ற சுதந்திரம் பேசிப் பிறந்த பெண்ணியம் மேலைநாடுகளிலேயே பரிணாம வளர்ச்சியடைந்து ஆக்கபூர்வமான பெண்ணியமாக பங்காற்றிக் கொண்டிருக்கிறது ‘ என்றும் சிலர் குறை சொல்கிறார்கள். ஆற்றின் புதுவெள்ளம் அனைத்தையும் அள்ளிவருவதுபோல் தமிழில் நவீன பெண்கவிஞர்களின் கவிதைகள் அனைத்தையும் எடுத்து வரலாம்; வரவேண்டும். வெள்ளம் சீர்பட்டு, தெளிவடைவதுபோல் பெண்கவிஞர்களின் நிஜமான புலமையும் கவியுள்ளமும் தீட்சண்யமும் விரைவில் வெளிவருமென்று ஓரளவு சரியான விமர்சனங்களும் வெளிவருகின்றன. ஆனால், குட்டி ரேவதி, உமா மகேஸ்வரி என்று இதுவரை நான் படித்த சில பெண் கவிஞர்களின் கவிதைகளை வைத்துப் பார்க்கும்போது வெள்ளமெல்லாம் சீர்பட்டுத் தெளிவடைந்து நாளாகி விட்டதைக் கவனிக்காமல் போய்விட்டோமோ என்று தோன்றுகிறது. தலித்துகளைப் பற்றி தலித்துகள் எழுதுவதுதான் இயல்பாக இருக்கும், உண்மையாக இருக்கும் என்கிற வாதத்தில் உண்மையிருப்பதைப் போலவே பெண்களின் உணர்வுகளைப் பெண்களே சொல்வதுதான் சரியாக இருக்கும் என்கிற வாதத்தின் வலு இவர்களின் கவிதைகளைப் படிக்கும்போது நன்கு புலனாகிறது. முற்போக்குவாதியானாலும் சரி, பிற்போக்குவாதியானாலும் சரி, பெண்ணையும் பெண் உணர்வுகளையும், பெண்ணைப் பற்றிய புரிந்து கொள்ளுதலையும் ஆணின் பார்வையில் பார்த்துப் பழகிப்போன நமக்கு நவீன பெண்கவிகளின் கவிதைகள் பெண்களைக் குறித்த புதிய வெளிச்சத்தையும், புதிய பார்வைகளையும், புதிய பரிவுகளையும் கொண்டுவருகின்றன.
‘தன் ஸ்வாதீனத்தின் மீது நிர்பந்தத்தை பிரயோகிக்கும் புறக்காரணிகள் மீது கசப்புணர்வோ, அவற்றிற்கு எதிராக வளர்த்தெடுத்துக் கொண்ட வன்மமோ இவரிடம் தென்படுவதில்லை ‘ என்று உமா மகேஸ்வரி கவிதைகள் பற்றி எழுதுகிறார் க.மோகனரங்கன். இது ஒரு முக்கியமான அவதானிப்பாகும். இதுவே உமா மகேஸ்வரி கவிதைகளின் சிறப்பென்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் இது பெண்மையின் பொதுவான குணாதிசயங்களுள் ஒன்று என்று சொல்லும் அளவிற்குப் பெண்கள் அன்பின் மற்றும் பொறுமையின் சிகரமாக விளங்குவதை நாம் அறிவோம். எனவே, உமா மகேஸ்வரியின் கவிதைகள் பெண்ணியத்தைப் பெண்மையின் சிறப்பான குணாதிசயத்துடன் சொல்ல விழைகின்றன எனவும் பொருள் கொள்ளலாம். ‘சூழல் மனிதனைப் பாதிக்கிறது என்பது உண்மையில் ஒரு பாதி மட்டுமே. இதன் இன்னொரு பாதி சூழலை மனிதன் பாதிக்கிறான் ‘ என்ற கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளின் அடிப்படையில் சூழலின் மீது வன்மம் தெறிக்காத உமா மகேஸ்வரியின் கவிதைகளை மதிப்பிட்டு, அவற்றின் மேலான தன்மையை உணர இயலும். சூழலால் மனிதன் பாதிக்கப்படும்போது அதை எதிர்க்கும் முகத்தான் சூழலை எதிர்த்துச் சூழலால் பேசப்படாத விஷயங்களைப் பேசுவதும், கலகக் குரல் எழுப்புவதும், சூழலால் அங்கீகரிக்கப்படாத விஷயங்களைச் செய்வதும் இயற்கை. ஆனால், சூழல் என்னவாக இருந்தாலும், சூழல் மாறும் அல்லது சூழலை மாற்றுவேன் என்கிற நம்பிக்கையில் வன்மமின்றி விமர்சனங்கள் வைப்பதும் வாழ்க்கையை எதிர்நோக்குவதும் இன்னொரு மேலான வகை. உமா மகேஸ்வரியின் கவிதைகள் பெரும்பாலும் இந்த இரண்டாவது மேலான வகையைச் சார்ந்திருக்கின்றன என்று சொல்லலாம். அவ்வப்போது அவர் கவிதைகளில் வெளிப்படும் எதிர்ப்புக் குரலையும், கலகத்தையும் கவிஞருக்குள் இயங்கும் முரணியக்கமாக (Dialectics) எடுத்துக் கொண்டால், இந்த முரணியக்கம் கவிதையின் வளர்ச்சிக்கு உதவுகிற ஆளுமையும் செழுமையும் உடையது என்று பொருள் கொள்ள முடியும்.
உவமைகளும் உருவகங்களும் மலிந்து போன கவிதைகளை மேய்ந்து மேய்ந்து சலித்துப்போன விமர்சகர்களும் வாசகர்களும் உவமைகளும் உருவகங்களும் இல்லாத கவிதை இருந்தால் பரவாயில்லை என்று எழுதுகிற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வரிசையில் கட்டுடைக்கத் தெரியாத படிமங்களையும் சேர்த்துக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கும்போது, உமா மகேஸ்வரியின் உவமைகளும் உருவகங்களும் மிகவும் வசீகரமாகவும், பெண் பார்வையின் புதிய நுட்பம் சொல்லும் கவிமொழியாகவும் தெரிகின்றன. சில உதாரணங்களாக – கீழ்க்கண்ட வரிகளைச் சொல்லலாம்.
‘விசிறிமடிப்புப் பாவாடை நலுங்காது கொசுவியமர்ந்த சிறுமியின் தோற்ற ஒழுங்கிலிருக்கும் சிறகுகள் ‘ (ஏதோ ஒரு பறவை கவிதையிலிருந்து)
‘பருவ காலத்தில் ஓரம் தைத்த தாவணிகளாய் உருவம் மாறிக் கிடந்தது ‘ (எனது நதி)
‘வெடித்த பாதையூடே ஓர் ஒடிந்த மேகம் போல் மிதந்து நகர்கிறது அவளுருவம் ‘ (அவளும் நானும்)
‘தொட்டித் தண்ணீரில் துவண்டு மிதக்கும் பறவை இறகு. ‘ (கவிதை)
‘மருதாணிச் செடியில் மழை கொட்டிப் போன நட்சத்திரங்கள் ‘ (கவிதை)
‘இளைப்பாறும் பறவைகள்போல் இறக்கை கவிழ்ந்த புத்தகங்கள் ‘ (பக்கம் 35)
‘குளித்த கூந்தலை உலுக்கும் விதமாக ஓரிரு தூறல் ‘ (பக்கம் 56)
‘ஊதிப்பறத்திய உமிக்கங்கு விண்மீன்கள் ஒட்டியிருக்கின்றன சன்னலில் ‘ (பக்கம் 64)
‘காலகாலமாயென் காலங்கள் அரைபடும் மிக்ஸியின் ஓலத்தில் ‘ (மோன நிழல்கள்)
‘பித்துற்ற பெண்ணாக பிதற்றும் தென்னை ‘ (பக்கம் 84)
‘இறுகிய கதவுகளோடு இரவின் துணுக்காகவே இருக்கிறது இந்தப் பகல் ‘ (தேடல்)
‘மூலைகளில் உறைந்த பல்லியின் மேற்செதில்களைப்போல் அருவருப்பூட்டுகின்றன உள்ளூர இந்த பாவனைகள் ‘ (பக்கம் 117)
‘அடிமண்ணின் குழைவோடு பொதிந்து கிடக்கிறது என் காதல். கவனியாது நீ கடந்தும் விரிகிறது வேர் ‘ (பக்கம் 126)
‘கடிகாரக் குருவி நிமிடம் கொத்துகிறது ‘ (பக்கம் 152)
‘அஸ்பெஸ்டாஸ் கூரையில் குழந்தைக் கூச்சலிட்டது மழை ‘ (மழை)
நீர்த்துப் போன நெடுங்கவிதைகளும் கட்டுடைக்கத் தெரியாத படிமங்களும் வாசக மனத்தில் அடையும் பெருந்தோல்விகளை கவிஞர் அறிந்து வைத்திருக்கிறார் போலும். எப்போது முடியுமோ என்று பக்கம் பக்கமாய் நீளும் கவிதைகளும், என்ன சொல்ல வருகிறது கவிதை என்று வாசகனை முடியைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் படிமங்களும் இவர் கவிதைகளில் அதிகம் தென்படாதது என் வாசக மனத்திற்கு ஆசுவாசமளிக்கிறது.
‘இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கையில் ஏனோ மனம் அயர்வுறுகிறது. ‘ என்று பின்னுரையில் கவிஞர் எழுதினாலும், அயர்ச்சிகளுக்கிடையேயும், பிரச்னைகளுக்கிடையேயும் வாழ்வின் கீற்றொளியைப் பார்க்கிற, நம்புகிற கவிமனதையே கவிதைகளில் நான் காண்கிறேன். உதாரணமாக, பின்வரும் கவிதையை எடுத்துக் கொள்வோம்:
வயோதிகம் பற்றியெரியும் தலை
காலக் கிறுக்கல்கள் ஓடும் தோல்
பாலிதீன் பையாகத் தொய்ந்த உடல்
அம்மியும், உரலும் ரேகையிட்ட விரல்கள்
ஒன்றாலும் நிரம்பா வெறுமையில் விழிகள்
யாருமின்மையின் வெப்பம் சேரும் நடை.
எதனாலோ ஏற்படுத்தினாள்
அந்தப் பாட்டி எனக்குள்
வாழு வாழ்க்கையை எனும் அவசரத்தையும்
வாழ ஆகுமா வாழ்க்கை என்ற அச்சத்தையும்.
மேற்கண்ட கவிதையைப் படிக்கிற வாசகன் – நம்பிக்கை வறட்சியினூடே நம்பிக்கையையும் அன்பையும் இழக்காத கவிஞரின் பொதுமொழியை அறியமுடியும். இப்படியே, ‘பூக்காத செடிகள் ‘ என்னும் கவிதை ‘ஏதாவது பேசு ‘ என்று ஆரம்பித்து, ‘அடுத்தமுறை எனை நீ அழுத்தும் இரவுகளில் வெளியிலசையும் தென்னையை வெறிப்பதையாவது விசாரி ஏன் என்று எப்போதாவது ‘ என்று முடியும்போது, கழிவிரக்கத்தைவிட – வாழ்வின்பால் நம்பிக்கை இழக்காத வற்றாத அன்பின் ஜீவனைக் காண்கிறோம். தொகுப்பில் உள்ள கவிதையின் வரியொன்றைப் பயன்படுத்திச் சொல்வதென்றால் – தொலைவிலிருந்தாலும் நனைக்கிற நதியின் ஈரத்தை உணர்ந்த கவிமனமே கவிதைகளின் அடித்தளமாக அமைந்துள்ளன.
உமா மகேஸ்வரி தன் கவிதையில் பயன்படுத்தியிருக்கும் சில படிமங்கள் மேற்கத்திய நாடுகளில் பெண்ணியம் பேசுகிற கவிஞர்களுக்குக்கூட கிடைக்காதவை; இந்திய/தமிழ்ப் பெண்களுக்கே உரித்தானவை; பொருத்தமானவை. அதுமட்டுமில்லாமல், அத்தகைய படிமங்களின் இன்னொரு சிறப்பு அவற்றின் எளிமையினூடே அவை பிரபஞ்சம் போல் விரிக்கும் பொருளும் எனலாம். உதாரணமாக, தோசை என்கிற பின்வரும் கவிதையை எடுத்துக் கொள்ளலாம்.
தோசை:
ஆண்டாண்டு காலமாக அளவு மாறாதது
தோசைகளின் விட்டம்.
விளிம்பு தாண்டாதது அவற்றின் வட்டம்
உலோகக் கடின அடித்தளத்தில்
ஊற்றப்பட்டாலும் அவை
ஒருபோதும் இழப்பதில்லை மென்மையை.
விரிவும் திருப்பமுமற்ற
வெற்றுச் சுழற்சி.
எதனோடும் இணைந்து போகும் சுயமின்மை.
இழப்பின் விழிப்பற்று
மூடிக்குள் புகுந்து வேகும்.
உள்ளே வெந்தாலும்
வெளிக் காட்டாத புன்முறுவல் மேலே.
சுருட்டித் திருப்புகையில்
சோர்ந்த முனகலன்றி
வேறெதுவும் சொல்லாதவை.
நகர்த்தவில்லை அவற்றை,
நவீன வகைப்படுத்தல்கள்
நிஜமான சுதந்திரத்துள்.
வருடங்களால் வளர்ச்சியுறாது,
வடிவம் மாறாது தோசைகள்
வாழும் வாழ்தலற்று.
அம்மாவின் பாட்டியின்
பாட்டியின் அம்மாவின்
இன்னும் என்னுடைய தோசைகள்
ஆண்டாண்டு காலமாய் அப்படியே.
தோசை என்கிற எளிய படிமத்தின் மூலம் இந்தக் கவிதைதான் எத்தனை உண்மைகளை எவ்வளவு இலகுவாய்ச் சொல்லி மனதைப் பிசைகிறது!
யதார்த்தமும், அலங்காரங்கள் அதிகமில்லாமல் எளிமையுடன், இல்லாமல் இருக்கிற மொழியும் இத்தொகுப்பின் கவிதைகளைப் பெரிதும் கவனிக்க வைக்கின்றன. கவிதைகளின் மொழியும் நடையும், கவிதையின் கைப்பிடித்து நடக்கிற அனுபவத்தை முழுமையாகத் தருகின்றன. உதாரணமாகப் பின்வரும் கவிதையைப் பார்க்கலாம்.
என்னதான் நடந்து பார்த்தாலும்
என் ஆக்ரமிப்பு சின்னமூலைதான்.
ஒரேயொரு சிறகுச் சிமிட்டலில்
மாடிப்பரப்பின் அகலத்தை
அழித்துப் போகிறது அந்தச் சிட்டுக்குருவி.
நம் சமூகத்தில் பெண்களின் பிரச்னைகளான தனிமையையும், வலியையும், பெண்ணடிமைத்தனத்தையும், பெண்கள் எதிர்கொள்ளும் ஏமாற்றங்களையும், கனவின் சிதைவுகளையும் கருவாய்க் கொண்ட பலகவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. சில படித்ததையே படிக்கும் மனநிலையை சில வாசகருக்கு ஏற்படுத்தலாம். ஆனால், அதைக் கவிஞரின் குறையாகச் சொல்லாகச் சொல்ல முடியாது. அந்தக் கவிதைகளைத் தனித்தனியாகப் படிக்கிற வாய்ப்பு பெற்ற வாசகனை அவை எந்த அளவு பாதித்திருக்கும் என்பதன் அடிப்படையிலேயே அவற்றின் தாக்கத்தை ஒருவர் மதிப்பிட வேண்டும். பழகிப் போன மனநிலையோ ஏற்கனவே படித்த மனநிலையோ வாசகனுக்கு வருமேயானால் அது கவிஞரின் யதார்த்தமான மொழியின் வெற்றி என்றும் கொள்ளலாம். கரணம் தப்பினால் புலம்பல் தொனித்துவிடும் பல இடங்களைக் கவிஞர் கவனமாகக் கையாண்டிருக்கிறார். இதையெல்லாம் மீறி குறைகள் தெரியுமேயானால், கவிதைகள் ஏற்படுத்தும் ஒட்டுமொத்தத் தாக்கத்தில் அவை பெரிதாகப் புலனாவதில்லை.
எதிர்ப்பும் கலகமும் காட்டும் கவிதைகளும் தொகுப்பில் இருக்கின்றன. ‘கத்தரிக்கவே முடியாது கூடக்கூட வரும் – என் கற்பனைக் காதலனின் காலடிகளை ‘ என்று ஆரம்பித்து, மனதில் மெல்லிய ஏக்கங்களை அந்தக் கற்பனைக் காதலன் தீர்க்கும் விதம் சொல்லி, ‘தாலிக்கொடியைப் புறந்தள்ளி அவன் தருகிற முத்தங்களை ரசிப்பதில் எனக்கில்லை எந்தக் குற்ற உணர்வும் ‘ என்று முடிகிற கவிதையைப் படிக்கும்போது அதிர்ச்சியளிப்பது கவிதையின் நோக்கமா என்கிற கேள்வியும், எதிர்ப்பைக்கூட கற்பனைக் காதலர்கள் மூலமே காட்டுகிற நிலையில் நம் பெண் சமூகம் இருக்கிறது என்பதை இந்தக் கவிதைதான் எவ்வளவு நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிறது என்கிற புரிதலும் பிறக்கின்றன. அதேபோல், ‘என் மென்மைகளை ஊற்றிவிடுகிறேன் ஒவ்வொரு நாளும் செம்பருத்தியின் வேருக்கு ‘ என்று தொடங்குகிற ‘ஒற்றை ரகசியம் ‘ கவிதை, ‘சாறுகள் பிழிபட்ட வெற்றுச் சக்கையின் கிடப்பே உன் கட்டிலுக்கு என்றுணர்கையில் அடைகிறேன் உனைவென்ற உவகையை நீ அறியவியலா ஒற்றை ரகசியமாக ‘ என்று முடியும்போது வாசகனும் அந்த உவகையில் பங்கெடுத்துக் கொள்கிறான்.
கவிதை மனதிற்குள் ஓர் அசைவை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார் பிச்சமூர்த்தி. மனதிற்குள் ஓர் அசைவை ஏற்படுத்துகிற, வாழ்வின் சிடுக்குகளைச் சிடுக்கற்ற மொழியில் சொல்லுகிற பல கவிதைகளை இத்தொகுப்பில் காண்கிறேன். பலகவிதைகளின் கரு பொதுவானதுதான். ஆனால், அவற்றில் மென்மையும், நம்பிக்கையின்மையும் – அதனால் வாழ்வின்பால் பிறக்கிற அச்சமும், தனிமையும் வலியும் ஏமாற்றங்களூம் நிறைந்த எதிர்பார்ப்புகளும் – ஆனால் இவையெல்லாவற்றின் அடிநாதமுமாய் – வன்மமும் கசப்புணர்வும் இல்லாது இழையோடும் அன்பும் நம்பிக்கையும் கலந்தோடுகின்றன. அத்தகைய உணர்வுகளைப் பெண் பார்வையிலும் பெண் மொழியிலும் சொல்கிற உமா மகேஸ்வரியின் கவிதைகளைப் படிக்கும்போது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்குகிற தாய்மை உணரப்படுகிறது எனலாம். மனிதனுக்குள் தூங்குகிற தாய்மையை தட்டி எழுப்புகிற கவிதைகளை நம்பிக்கை வறட்சியும் அயர்வும் தருவன என்று எப்படிச் சொல்ல முடியும் ?
(கவிஞரைப் பற்றி: 1985 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வரும் உமா மகேஸ்வரி ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மகி என்கிற புனைப்பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார். கணையாழி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறார். 2001-ஆம் ஆண்டில் சிறுகதைக்கான ‘கதா ‘ விருது பெற்றிருக்கிறார். ‘யாரும் யாருடனும் இல்லை ‘ என்னும் நாவலும், ‘மரப்பாச்சி ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. இவரின் ‘நட்சத்திரங்களின் நடுவே ‘ என்னும் முதல் கவிதைத் தொகுப்பில் வெளியான கவிதைகளும் இந்த ‘வெறும் பொழுது ‘ தொகுப்பில் உள்ளன.)
புத்தக விவரம்:
வெறும் பொழுது (கவிதைகள்) – உமா மகேஸ்வரி
தமிழினி வெளியீடு, 342, டி.டி.கே. சாலை, சென்னை – 14. முதல் பதிப்பு: டிசம்பர், 2002
pksivakumar@att.net
- வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் ‘வெறும் பொழுது ‘
- தேவகுமாரன் வருகை
- கலைக்கண் பார்வை
- அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (பிறப்பு:1906)
- அறிவியலில் மொழியின் தேவை – நாகூர் ரூமியின் ‘தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் ‘ முன்வைத்து.
- வேறு புடவிகள் இருப்பதற்கான சாத்தியமும், அறிதல்வெளுயின் விளிம்பும்
- அன்பும் மரணமும் – வானப்பிரஸ்தம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 91-நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து ‘
- யமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து சில குறிப்புகள்
- உத்தரவிடு பணிகிறேன்
- அந்தரங்கம் கடினமானது
- விளக்கு பரிசு பெற்ற கவிஞர் சி மணிக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- கடிதங்கள் (ஆங்கிலம்) டிசம்பர் 25 , 2003
- வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
- ஆரியம் இருக்குமிடம்… ? ? ? ?
- மேரி மாக்தலேன் அருளிய பரிசுத்த நற்செய்தி
- பண்பட்ட நீலகண்டன், மதிப்பிற்குரிய நரேந்திரன்- இவர்களிடம் அதிகபிரசங்கி அநாகரிகமாய் சொல்லிகொள்வது.
- திருமாவளவனின் அறைகூவலும், ‘ஜாதி இந்துக்களின் ‘ சப்பைக்கட்டுகளும்
- அர்த்தமுள்ள நத்தார்
- படிகளின் சுபாவம்
- நவீன மதவாதத்தின் முகங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)
- பலகை
- அம்மாயி
- ‘எது நியாயம் ? ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
- மறுபக்கம்
- கடிதங்கள் – டிசம்பர் 25 -2003
- பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டம்
- வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
- விடியும்!-நாவல் – (28)
- ரவி சீனிவாசின் பார்வையைப்பற்றி
- சில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும்
- நேர்காணல் – இர்ஷத் மஞ்ஜி
- பின் நவீனத்துவ டெஹெல்கா, மைலாஞ்சி, அம்பிச்சு வொயிட் மெயில்கள் குறித்து.
- போன்சாய் குழந்தைகள்
- கவிதைகள்
- தாம்பத்யம்
- முற்றுப் பெறாத ஒரு கவிதை
- கோபம்