யமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து சில குறிப்புகள்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


யமுனா ராஜேந்திரனின் கட்டுரையில் தமிழ் பின் நவீனத்துவம், (பொதுவாக) பின் நவீனத்துவம் குறித்த வேறுபாடுகள் தெளிவாக இல்லை.பின் நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்று பூர்வ குடி சிந்தனைப் பெருமிதம் என்ற முடிவிற்கு எந்த அடிப்படையில் அவர் வந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.ஜாபிஸ்டாக்கள் குறித்த அவரது புரிதல் சரியல்ல.அது எழ முக்கியமான காரணம் உலகமயமாதல், NAFTA. அதற்கு ஒரு பிண்ணனி உண்டு.மக்கள் இயக்கமாக,போராட்டமாக அது பல புதிய யுக்திகளைக் கையாண்டது.உதாரணமாக இணையத்தினை பயன்படுத்தியது, சர்வதேச கவனத்தைப் பெற்றது, மற்றும் உலகெங்கும் உள்ள பல முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.ஒருவிதத்தில் இது உலகெங்கும் தோன்றிய சிறு விவாசாயிகள்/பழங்குடி மக்கள் இயக்கங்கள் போன்றது. ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவை உலகப்பரிமாணங்கள் கொண்டவை என்ற நிலைப்பாட்டை முன்வைத்தது. இதை பின்நவீனத்துடன் தொடர்புபடுத்தி பேசமுடியும், யமுனா ராஜேந்திரன் எழுதிய பொருளில் அல்ல.மாறாக நவீனத்துவ அரசியல்,பின் நவீனத்துவ அரசியல்,வெகுஜன இயக்கங்கள் என்ற ரீதியில்.

யமுனா ராஜேந்திரன் கட்டுரை பின் நவீனத்துவம் குறித்த ஒரு குழப்பமான பார்வையையே தருகிறது. பின் நவீனத்துவம் previleged perspective, meta narratives போன்றவற்றை கேள்விக்குள்ளாகுகிறது. அடையாளங்களின் உருவாக்கம்,தன்னிலைகளின் பலவகைத்தன்மை போன்றவை குறித்து பேசும் பின் நிலை வாதம் நக்சைலைட் அனுபவம் பற்றி நக்சலைட் கூறுவதே சரி அல்லது அதுவே சரியான கருத்து என்பதை எற்பதில்லை.மாறாக அப்படி யாரும் உண்மை குறித்து ஏகபோக உரிமை கொண்டாட முடியாது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.அதே போல் சாரம்சவாதத்தின் மீது கடும் விமர்சனங்களை முன் வைக்கிறது.இதன் அடிப்படையில் ஒரு ஒற்றை அடையாளம்(உ-ம் பெண்,உழைக்கும் வர்க்கம்) மூலம் குறுக்குவதை எதிர்க்கிறது.முற்போக்கு இயக்கங்கள்,மார்க்சியர் மற்றும் பின்நவீன பெண்ணிய வாதிகள் இது குறித்து விவாதித்துள்ளனர். ரஜனி தேசாயும் வேறு சிலரும் எழுதிய ஒரு சிறு வெளியீடு இது தொடர்புடையது, அதில் இந்த கோட்பாடு ரீதியான விவாதம் விரிவாக இல்லாத போதும்.ஆனால் இயக்கங்கள் போராட்டங்களை நடத்த,மக்களை திரட்ட சாரம்சவாதம் தேவை, ஒரு அடையாளம் தேவை. (உ-ம்) பாலின அல்லது வர்க்க அல்லது ஜாதிய அல்லது தேசியம்/தேசிய இன அடிப்படையில்.இதை strategic essentialism என்று கொள்ளலாம். ஆனால் இதன் வரையரைகள் அல்லது போதாமைகள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.

வெகு ஜன இயக்கங்களுக்கு பின் நவீனத்துவத்துடன் ஒரு உரையாடல் சாத்தியமா ? ஆம் ,ஆனால் அது

எதற்காக என்ற கேள்வி எழுகிறது.இங்கு கோபால் குரு,வ.கீதா எழுதியுள்ள கட்டுரையிலிருந்து ஒரு

பகுதியைத் தரவிரும்புகிறேன்.

The DIC wants to interrogate the post-modernist attempts in the area of inter-textuality which involve an inter-group dialogue taking place in conditions which make it infinitely inconclusive.In other words, to use a local and very powerful metaphor, it does not want to join

the post-modernists in wrestling with oil applied all over the body but with no intention of producing results. It hopes to rein in those dalit intellectuals who are enjoying such wrestling. [ Dalit Intellectuals ‘ Collective (DIC)]

New Phase of Dalit-Bahujan Intellectual Activity GOPAL GURU, V GEETHA Economic and Political Weekly January 15, 2000

பின் நவீனத்துவம் சாரம்சவாதத்தினை நிராகரிக்கிறது. மாறாக அடையாளங்கள் நெகிழ்வுதன்மை கொண்டவை, மாறுதலுக்கு உட்பட்டவை என்று வாதிடுகிறது. எனவேதான் இது ஒட்டுமொத்தமாக வெகுஜன அரசியலை நிராகரிக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.இது போல் அவர் முன் வைத்துள்ள ஒவ்வொரு கருத்தையும் குறித்து நான் எழுதினால் இது ஒரு நீண்ட கட்டுரையாகிவிடும்.அதற்கான நேரம் எனக்கில்லை.மேலும் அடிப்படைகளை விளக்குவது எனது வேலையல்ல. யமுனா ராஜேந்திரன் தமிழில் எழுதுபவர்கள் குறித்து விமர்சிக்கட்டும்.அதற்கு பின் நவீனத்துவத்தை இப்படிப் பயன்படுத்தி படிப்பவர்களை பயமுறுத்த வேண்டாம்.பின் நவீனத்துவம் வலதுசாரி அரசியலுக்கும் பயன்படும்,இடது சாரி அரசியலுக்கும் பயன்படும். எனவே அதை முத்திரை குத்தி பார்ப்பது தேவையற்றது. மாறாக பின் நவீனத்துவம் என்பது ஒற்றை சிந்தனைப் போக்கல்ல,அதில் பல போக்குகள் உள்ளன, பல மாறுபட்ட பார்வைகள் உள்ளன என்பதினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அறிவியல் தொழில்நுட்பம் மீது விமர்சனம் வைக்கும் பின் நவீனத்துவவாதிகளும் உண்டு, அறிவியல் தொழில்நுட்பம் குறித்து ஆதரவு/எதிர்ப்பு என்ற இரு நிலைபாடுகளுக்கு அப்பாற்பட்ட புரிதல் வேண்டும் என்போரும் உண்டு.எனவே இதுவேதான் பின் நவீனத்துவ நிலைப்பாடு என்று ஒன்றை முன்வைப்பது எளிதல்ல. டேவிட் ஹார்வி எழுதியுள்ள The Condition of Postmodernity, டோனா ஹாராவே, அர்துரோ எஸ்கோபார்,காதரீன் ஹ்ய்லஸ்,ஜேம்ஸ் ஸ்காட் போன்றோர் எழுதிய நூல்கள் முக்கியமானவை. பின் நவீனத்துவம் குறித்து ஜேம்ஸ்ன் எழுதியதும்,அது குறித்த விவாதங்களும் குறிப்பிடத்தக்கவை. நானறிந்த வரையில் தமிழில் பின் நவீனத்துவம் பெருமளவு இலக்கியம்/பண்பாடு சார்ந்தே விவாதிக்கக்பட்டுள்ளது.நான் இதை இலக்கிய/பண்பாடு சார்ந்த ஒன்றாக மட்டும் பார்க்கவில்லை.பின் நவீனத்துவ சிந்தனைகளின் தாக்கத்தினை கல்வி குறித்த தத்துவம்,வரலாற்றியல் ,புவியியல்,நாடுகளுடான உறவுகள் பற்றிய ஆய்வுகள் என பலதுறைகளில் காண முடியும். மேலும் ஆங்கிலத்தில் பின் நவீனத்துவம் குறித்து எழுதப்படுள்ளவை மூலமே எனது புரிதலை உருவாக்கிக் கொள்ள முயல்கிறேன்.தமிழில் எழுதப்பட்டுள்ளவை வழியே கோட்பாடுகளை புரிந்து கொள்வதில் உள்ள பிரச்சினைகளை நான் விளக்க வேண்டியதில்லை. டேவிட் ஹார்வியின் நூல் போன்ற ஒன்று தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. பூக்கோவின் கருத்துகள் குறித்து பெண்ணியவாதிகள் எழுதியவை, பின் நவீனத்துவம்-பெண்ணியம் குறித்த விவாதங்கள்,அறிவியல் குறித்த பின் நவீனத்துவ விமர்சனங்கள் – இவையெல்லாம் தமிழில் அறிமுகப்படுத்தப்படு விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் தமிழில் பின் நவீனத்துவம் குறித்து தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றில் நான் படித்தது வெகு குறைவு. எனவே யமுனா ராஜேந்திரன் தமிழ் பின் நவீனத்துவம் குறித்து எழுதியுள்ளதில் உள்ள சர்ச்சைகள் பற்றி நான் கருத்து சொல்வதை தவிர்க்கிறேன்.

கறுப்பு தொகுப்பினை நான் படித்ததில்லை,அதன் தொகுப்பாளர்கள் குறித்தும் எனக்குத் தெரியாது. மேலும்

காலச்சுவட்டில் வெளியான பத்தி மூலம்தான் அந்த கட்டுரை தமிழில் தரப்பட்டுள்ளதை நான் தெரிந்து கொண்டேன். காலச்சுவட்டை இணையத்தில் படிக்க முடிவதால்தான் இது சாத்தியாமாயிற்று.இல்லையெனில்

இதை நான் தெரிந்து கொள்ள சில மாதங்கள் ஆகியிருக்கலாம் அல்லது எனக்கு தெரியாமலும் போயிருக்கலாம்.அனைத்து சிறுபத்திரிகைகளையும் படித்து யார் தலையை உருட்டுவது என்று யோசித்து நான் எழுதுவதில்லை.பல சிறுபத்திரிகைகளில் என்னென்ன வெளிவருகிறது என்பதே எனக்குத் தெரியாது.கறுப்பு தொகுப்பினை நான் படித்திருந்தால் இது பற்றி விரிவாக எழுதியிருப்பேன்.தொகுப்பில் என்ன உள்ளது என்பதை முன்வைத்தே நான் அதைப் பற்றி பேசமுடியும்.யமுனா ராஜேந்திரன் வேண்டுமானால் குரு-சீடர்கள்

என்ற கண்ணோட்டத்தில் அதை விமர்சிக்கட்டும்.அ.மார்க்ஸ் எழுதியுள்ள அனைத்து கட்டுரைகள்/நூல்களை

நான் படித்ததில்லை.தமிழ்ச் சூழலில் நிலவும் குழு அரசியல் குறித்து எனக்கு அதிகம் தெரியாது, அக்கறையும் இல்லை.

நான் தமிழில் எழுதுவது எனது கருத்துக்களை சொல்வதற்கு.இதையும் தமிழ் சிறுபத்திரிகை குறுங்குழு

அரசியலையும் தொடர்புபடுத்திபார்க்க வேண்டாம்.அதற்கு அப்பாற்பட்டே நான் எழுதுகிறேன்.எனவே நான்

சிலரை வாழ்த்தவேண்டும், சிலரை வசைபாட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். என் கருத்துகள் பிறரால் எப்படி கருதப்படும் (நட்பு முரண்,பகை முரண் etc) என்பதை யோசித்தோ அல்லது யாரையும் திருப்திபடுத்தவோ நான் எழுதுவதில்லை.எனவே தயவு செய்து இந்தக் குறுங்குழு சச்சரவுகளுடன்,

நான் எழுதியதை தொடர்புபடுத்தாதீர்கள்.

யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ளதன் அடிப்படையில் பின் நவீனத்துவத்தை புரிந்து கொள்ள முயலாதீர்கள்

என்று வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். தமிழ்ச் சூழலில் சோகலுடனான உரையாடலை மொழிபெயர்ப்பதை விட EPW ல் வெளிவந்த கட்டுரைகள்,மீரா நந்தா எழுதியுள்ளவை,மீரா நந்தா நூல் பற்றி ஆனந்த் எழுதிய மதிப்புரை போன்றவற்றை அறிமுகப்படுத்தி பின் நவீனத்துவம்,அறிவியல்,அறிவியல் போர்கள்,ஹிந்துத்வம் முன்வக்கும் ‘அறிவியல் கண்ணோட்டம் ‘ குறித்து விவாதிப்பதே பொருத்தமாக இருக்கும். தமிழ் பின் நவீனத்துவதிற்கும் இந்த உரையாடலுக்கும் என்ன தொடர்பு ? அ.மார்க்ஸோ அல்லது வேறு யாராவது இங்கு சோகல் விவாதிக்கும் கோட்பாடுகள்,சர்ச்சைகள் குறித்து விரிவாக எழுதி இதுதான் எங்கள் நிலைப்பாடு என்று கூறியுள்ளார்களா ?.ஒரு சராசரி வாசகருக்கு,இந்த உரையாடலை, பிண்ணனி தகவல்கள்,விளக்க குறிப்புகள் இன்றி தமிழில் படிப்பது ,வசன உச்சரிப்பு தெளிவாக கேட்காமல்,ரீல்கள் சரியான வரிசையில் ஒட்டப்படாத, ஒரு ஊகிக்க முடியாத வேற்று மொழி திரைப்படத்தை பார்ப்பது போல் இருக்கும்.

Science As Culture ஆரம்பகாலத்தில் மார்க்சிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளை வெளியிட்டது.பின்னர் அதில் பல்வேறு தரப்பு கண்ணோட்டங்களை முன்வைக்கும் கட்டுரைகள் வெளியாகத் துவங்கின.இன்று அதில் எழுதுபவர்கள் பலர் மார்க்சியர்கள் அல்ல.உ-ம் ஷீலா ஜசனோப். யமுனா ராஜேந்திரன் ரிச்சர்ட் லெவின்ஸ்(1),ஸ்டான்லி அரோனோவிட்ச், ஹிலாரி ரோஸ் போன்றவர்களை எப்படி கருதுகிறார் என்று தெரியவில்லை. சோகலையும், மீரா நந்தாவையும் மட்டும் முன்னிறுத்தி பேசும் அவர் இந்தியச் சூழலில் நடந்த விவாதங்கள் பற்றி என்ன கருதுகிறார் என்பதை குறிப்பிடவேண்டும்.இந்தியாவில் சோதிடம் எந்தப் பல்கலைகழகத்தில் விஞ்ஞானப் பாடதிட்டத்தில் இடம் பெற்றது ?.பிரான்சில் சோதிடம் ஒரு துறையாக அங்கீகரிக்கபட்டதா இல்லை சோதிடம் குறித்த ஆய்வுகளுக்கு கலாநிதிப் பட்டம் தரப்பட்டதா ?

ethnoecology,ethnopharmacology இவை குறித்து அவர் கேள்விப்பட்டதில்லையா ? கடந்த 20 ஆண்டுகளில் பாரம்பரிய அறிவு(traditional knowledge/indigenous knowledge *) குறித்த ஒரு புரிதலில் ஒரு பெரும்மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாக இவை குறித்த ஆய்வுகள் பல்கலைகழகங்களில் அதிகரித்துள்ளன. பாரம்பரிய இந்திய அறிவியல் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகள் தேவை, இங்கு சித்த மருத்துவம் போன்றவற்றையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்.இவற்றை மேற்கத்திய அறிவியல் போன்றவை

அல்ல, போலி விஞ்ஞானங்கள் என நிராகரிப்பது எளிது. சோதிடம் குறித்து பல்கலைகழகங்கள் ஆராய்வதில் என்ன பிரச்சினை. அதை அறிவியல் என்று முத்திரை குத்தி முன்னிறுத்துவதுதான் பிரச்சினைக்குரியது.

பாரம்பரிய வேளாண்மையினை ஒரு காலத்தில் சரியாக பயன்படுத்த தவறியதன் விளைவினை இன்று அனுபவிக்கிறோம். எத்தனை வேளாண் பல்கலைகழகங்கள் உழவர்களின் அறிவு குறித்து ஆராய்ந்தன. ?

அஷிஸ் நந்தி அறிவியல்-தொழில்நுட்பம் பற்றி மட்டும் விமர்சிக்கவில்லை.ஹிந்த்துவம் குறித்தும், தேசியம்-தேசிய அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.ஷிவ் விஸ்வநாதனின் எழுத்துக்களும்

இவ்வாறே.இவர்கள் நர்மதை நதித் திட்டம் குறித்து விமர்சனம் முன்வைப்பவர்கள்,வளர்ச்சியினால் பாதிப்புற்றோர் குறித்து எழுதுபவர்கள்.Science As a Reason of State என்ற கட்டுரை (நந்தி எழுதியது)

ஒரு முக்கியமான பங்களிப்பு.மீரா நந்தா நர்மதை நதி திட்டத்தை ஆதரிப்பவர்.மக்கள் அறிவியல் இயக்கங்கள் பல இத்தகைய பெருந்திட்டங்கள் மீது விமர்சனங்களை முன்வைதுள்ளன.வினோத் ரைனா

உட்பட பலர் இது குறித்து எழுதியுள்ளனர்.எனவே மீரா நந்தாவின் நிலைபாடுதான் மக்கள் அறிவியல் இயக்கங்கள்/இடதுசாரிகள் நிலைப்பாடு என்று கருத முடியாது.யமுனா ராஜேந்திரன் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சோகால், மீரா போன்றோர் கருத்துக்களை ஆதரித்து எழுதியுள்ளார்.அவரது

கட்டுரையில் மார்க்சிய கண்ணோட்டத்தில் அறிவியல் குறித்து நடந்துள்ள விவாதங்களைப் பற்றி விபரம்

இல்லை. Science For the People,Radical Science Collective போன்றவை, அல்லது ரிச்சர்ட் லெவிண்டின், ஸ்டாவ் ரோஸ்,ஹிலாரி ரோஸ்,ஸ்டாபன் ஜெ கோல்ட எழுப்பிய சர்ச்சைகள்-இவையெல்லாம் தெரியாத வாசகரால் சோகல் கூறுவதையோ அல்லது இந்த சர்ச்சையையோ எப்படித் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.இங்கு சிக்கல் என்னவெனில் சோகல் குறிப்பிடும் பலவற்றைக் குறித்து தமிழில் அறிமுக விபரங்கள் கூட இல்லை.யமுனா ராஜேந்திரன் எழுதியிருக்கும் கட்டுரை படிப்பவருக்கு அதிக குழப்பத்தை உண்டாக்ககூடிய விதத்தில் உள்ளது.இதை தவிர்த்துவிட்டு அறிவியல் போர்கள்,இடதுசாரி/முற்போக்கு கண்ணோட்டத்தில் அறிவியல் பற்றிய பின்ணனி தகவல்கள் கொண்ட ஒரு கட்டுரையை அவர் எழுதியிருக்கலாம்.

அல்லது இது குறித்த ஒரு கட்டுரையை மொழிபெயர்த்தாவது தந்திருக்கலாம்.

யமுனா ராஜேந்திரன் மார்க்சிய/இடதுசாரி கண்ணோட்டம் என சோகல், மீரா எழுதுவதை மட்டும் ஏற்கிறாரா ? லெவின்ஸ் போன்றோர் எழுதியதை நிராகரிக்கிறாரா ? அவர் இது குறித்து இக்கட்டுரையில் விரிவாக எழுதவில்லை என்றாலும் அவ்வாறே ஊகிக்கமுடிகிறது. இந்த நிலைபாடு மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு.அவர் தன் நிலைப்பாட்டை விரிவாக எழுதினால் நான் அதை விவாதிக்க முடியும்.இந்த சர்ச்சைக்கு

(சோகல் கட்டுரை/அறிவியல் போர்கள்) அப்பாற்பட்டு மார்க்சியம்-அறிவியல்-தொழில்நுட்பம்-சமூகம்-ஜனநாயகம் குறித்து விவாதிக்க முடியும்.

சோகல் கட்டுரை குறுக்கப்பட்டு,வெட்டப்பட்டு தமிழில் எந்தப் பிண்ணனி தகவல்களுமின்றி கறுப்பு தொகுப்பில் வெளியாகிறது.கண்ணன் தன் பத்தியில் கிண்டல் செய்ய இதை பயன்படுத்துகிறார், அவரும் பிண்ணனி

தகவல்களை சரியாகத் தருவதில்லை. யமுனா ராஜேந்திரன் படிப்பவர்கள் குழம்பும் வண்ணம் ஒரு கட்டுரையை எழுதி, பேட்டியை மொழிபெயர்த்து வெளியிடுகிறார், போதுமான விபரங்கள்,தகவல்கள் தராமல்.

எதற்காக இந்த முயற்சிகள்.இவற்றால் என்ன பயன்.ஏன் ஒரு கட்டுரையையும்,ஒரு சர்ச்சையையும் இப்படி

பயன்படுத்துகிறார்கள்.யமுனா ராஜேந்திரன் கட்டுரை சோகல் கட்டுரை குறித்த சர்ச்சையை இங்குள்ள குறுங்குழு அரசியலுக்கு பயன்படுத்தும் இன்னொரு முயற்சி.

1,http://www.hsph.harvard.edu/facres/lvns.html , http://www.counterpunch.org/levins02282003.html

* பாரம்பரிய அறிவு என்பதை இங்கு ஒரு பரந்தபட்ட பொருளில் பயன்படுத்துகிறேன்.indigenous knowledge,traditional knowledge,local knowledge – இவை குறித்து பல விளக்கங்கள் உள்ளன.

இவற்றை ஒன்றாக கருதுவதில் சில சிக்கல்கள் உள்ளன.அதே சமயம் இவற்றை ஒரே பொருளில்

(non western knowledges) பயன்படுத்துவதும் உண்டு.சிலர் இந்தப் பாகுபாடை(western/non-western,

scientific/non-scientific) ஏற்பதில்லை.இது குறித்த விவாதத்திற்கான கட்டுரை இதுவல்ல.

ravisrinivas@rediffmail.com

Series Navigation