பாவண்ணன்
அப்போது என் மகன் குழந்தையாக இருந்தான். ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்த நான் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். கூடத்தில் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான் அவன். கதவைத் திறந்து உள்ளே நுழையும்போதே ஆவலால் அவன் பெயரைச் சொல்லி அழைத்தபடி நெருங்கினேன். வேகமாக எனது பக்கம் முகம்திருப்பி ஸ் என்று உதட்டின்மீது விரலை வைத்துச் சத்தமிடவேண்டாம் என்று எச்சரித்தான் அவன். திடாரென ஒரு பெரிய மனிதன் பாவனை அவனுக்கு வந்துவிட்டிருந்தது. ‘பாப்பா துாங்குதே தெரியலையா ? ‘ என்று அருகில் துணிவிரிப்பில் சிறிய தலையணை மீது கிடத்திய பொம்மையைக் காட்டினான். ஒருகணத்தில் நிலைமையைப் புரிந்துகொண்டேன். உடனே அவனது உலகுக்குப் பொருத்தமானவனாக மாறி ‘சரி, அப்பறம் பேசலாம் ‘ என்று சைகையாலேயே பதில்சொன்னபடி வேறு அறைக்குள் சென்று விட்டேன்.
ஒரு பொம்மையை உயிருள்ள குழந்தையாகப் பாவித்துக்கொள்ளும் எல்லா உரிமைகளும் குழந்தைப்பருவத்துக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. சற்றே வளர்ந்த நிலையில்கூட அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தைக் குழந்தைகள் தக்கவைத்துக்கொள்ள விடப்படுவதில்லை. உலக ஞானத்துக்கு அவர்கள் மனம் அதற்குள் பழகிவிடவேண்டியதாக இருக்கிறது.
ஒவ்வொரு இனமும் ஒரு தொடர்ச்செயலைப்போலத் தம் மக்களின் மனங்களைக் காலம்காலமாகப் பழக்கி வைத்தபடியே இருக்கிறது. உண்ணுதல், உறங்குதல், எழுதுதல் படித்தல், விளையாடுதல், சிரித்தல், அழுதல், யோசித்தல் என எல்லாச் செயல்களிலும் ஒருவித தனிப்பழக்கம் உருவாக்கப்படுகிறது. நெற்றியில் குங்குமம் வைத்தலில்கூட இந்த நாட்டில் ஒவ்வொரு இனத்தவரும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றுவதைக் காணலாம். சிலர் குங்குமம் வைக்காதவர்களாகவே இருக்கிறார்கள் . ஒரு பண்பாட்டில் இத்தகு பயிற்சிகள் சற்றும் கண்ணுக்குப் புலப்பட்டுவிடாத வகையில் காலம் காலமாகப் பின்பற்றப்படுகின்றன. கட்டுப்படுத்தப்பட்ட ஒரு விலங்கைப்போல மனம் கச்சிதமாகப் பழகிக்கொள்கிறது. அதன் உலாத்துதலுக்கென்று ஒரு உலகமும் அழகாக உருவாகிறது. சில விலங்குக்காட்சிச் சாலைகளில் யானைகளும் புலிகளும் சுதந்தரமாகத் திரியத் தோதாக புதர்கள் அடங்கிய ஒரு சிறு வனம் உருவாக்கப் பட்டிருக்கும். பழகப்பழக அவ்விலங்குகள் அச்சிறு வனத்தையே உண்மையான வனமாக எண்ணத் தொடங்கிவிடும். இதுபோலவே பாடப்படுத்தப்பட்ட மனமும் தன் எண்ணங்கள் உலவும் பகுதியையே உண்மையான பகுதியாக நம்பிக்கொள்கிறது. எப்போதாவது ஒரு கணத்தில் மறுபக்கத்தை நோக்கி நடையிடத் தொடங்கும்போது அம்மனம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். ஒருபுறம் நிரூபணமுறைக்குப் பழகிவிட்ட மனம். மறுபுறம் மறுபக்க இருளுக்குள் இறங்கிக் கண்டதைச் சொல்லும் மனம். இது அதையும் அது இதையும் இழுத்துச் சரிப்படுத்த நடைபெறும் முயற்சிகள் ஒரு போராட்டத்துக்குச் சமமானது என்றே சொல்லவேண்டும்.
விஜயவாடாவில் சிலவாரங்கள் தங்கியிருந்தபோது பார்க்க நேர்ந்த ஒருவனுடைய நினைவு வருகிறது. பார்ப்பதற்கு நன்றாக உடுத்தியிருப்பான். நன்றாகப் பேசுவான். காலையில் எழுந்ததும் அந்தச் சாலையைத் துப்புரவாகப் பெருக்கித் துாய்மையாக மாற்றுவான். அழுக்கு என்பதே அவனுக்குப் பிடிக்காது. அழுக்கைக் கண்டாலே அவனுக்குக் கோபம் வரும். அவன் எதிரில் யாரும் ஒரு துண்டுத்தாளைக்கூட கீழே எறிய முடியாது. சண்டைக்கு வந்துவிடுவான். துாய்மையாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை என்று அவர்களிடம் சென்று சொற்பொழிவாற்றத் தொடங்கிவிடுவான். எக்கணத்திலும் குப்பை சேர்ந்துவிடாதபடி சாலையின்மீது சதாகாலமும் கவனத்தைப் பதித்திருப்பான். அவனுடைய நடவடிக்கை ஒவ்வொன்றம் குப்பைகளிலிருந்தும் அழுக்கிலிருந்தும் இந்த உலகைக் காப்பாற்றுவது தம் கடமை என அவன் அழுத்தமாக நம்புவதைப்போல இருக்கும். அழுக்கை அகற்றுவதற்காகவே ஜென்மமெடுத்ததைப்போல நடந்துகொள்வான். அவன் நினைவு வரும்போதெல்லாம் ந.முத்துசாமியின் சிறுகதையொன்றில் இடம்பெற்றவனுடைய மனப்பயணத்தையும் நினைத்துக்கொள்வேன்.
அக்கதையில் இடம்பெறும் பெயரற்ற ஒருவனுக்குத் தன் நண்பர்களைக் கொல்லவேண்டுமென்றுத் திடாரென தோன்றுகிறது. ஏன் அப்படித் தோன்றியது என்று தெரியாமலேயே அந்த எண்ணம் எழுந்து வலிமையடைகிறது. நண்பர்களோடு சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது 13ஆம் நம்பர் பேருந்து கடந்துசெல்கிறது. அப்போது நண்பர்களை ஒவ்வொருவராக சக்கரத்தில் தள்ளிக் கொன்றுவிடவேண்டுமென்று தோன்றுகிறது. அந்த நினைப்பை மனத்தில் அழுத்திவிட வேண்டுமென்று கண்ணை இறுக மூடிக்கொள்கிறான். நேர்மாறாக வேறொரு தீவிரமான எண்ணம் எழுகிறது. கொல்லைப்புறத்தில் இருக்கும் வைக்கோல்போருக்குப் பின்னால் சாணம் மிதிக்கும் வேலைக்காரப் பெண்ணின் உருவம் வழியாக அந்த எண்ணம் தீவிரம் கொள்கிறது. அவள் கால்கள் ஓர் எந்திரத்தின் இரண்டு பிஸ்டன்களைப்போல இயங்குவதாக எண்ணத்தொடங்கியதும் பிஸ்டன்கள் உதவியால் வேகமாக இயங்கும் சக்கரத்தின் சித்திரமும் ஓடும் சக்கரத்தில் அடிபட்டு இறக்கும் நண்பனுடைய சித்திரமும் எழுகின்றன. தவிர்க்க நினைக்கும் சித்திரங்கள் பாசியைப்போல விலகிவிலகி மீண்டும் கூடுகிறது.
அந்த நினைவின் பாரத்தைக் குறைக்க ஒரு வசதியாக ஒரு பேய்க்கதையைப் பற்றிக்கொள்கிறது அவன் மனம். உடனே பேயை ஏமாற்றுகிற கிருஷ்ணசாமி ஐயரின் கதையும் அலமேலுவின் கதையும் நினைவில் படர்கின்றன. நினைவின் இறுதியில் யாராவது ஒரு நண்பனைப் பேயின் கைகளில் பிடித்துக் கொடுத்துச் சாகடிக்கவேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. இறப்பைப்பற்றிய எண்ணம் மனத்தில் மிதந்தபடி இருக்கிறது. கடைப்பெயர்ப்பலகைகளில் எரியும் நியான் எழுத்துகளின் சிவப்பு இறந்தவனுடைய ரத்தமாகத் தெரிகிறது.
வீட்டில் சோறு பரிமாறிய மனைவியையும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த குழந்தையையும் சாகடிக்கத் திட்டமிட்டிருந்த நண்பர்களுடைய பக்கம் பிடித்துத் தள்ளவேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. எண்ண வேகத்தில் அவர்களை உண்மையாகவே பிடித்துத் தள்ளத்தொடங்குகிறான். அந்தத் தள்ளலை விளையாட்டாக எண்ணிக்கொண்டு குழந்தை சிரிக்கிறது. மனைவியோ மிரண்டு சிரிக்கிறாள். ஏன் இப்படித் திடாரெனத் தோன்ற ஆரம்பித்தது என்னும் விஷயம் அவனுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. அந்த எண்ணத்தை விரட்ட மற்றொரு எண்ணத்தைத் தழுவ நினைக்கும் மனம் மறுபடியும் பேயையே பற்றிக்கொள்கிறது. குழந்தையைக் குட்டிப்பேயாகவும் மனைவியைத் தாய்ப்பேயாகவும் எண்ணிக்கொள்கிறது. அதன் தீவிரம் மெல்லமெல்ல அதிகரித்தபடியே இருக்கிறது. மறுநாள் காலையில் வீட்டைத் தேடிவந்து பேசும் நண்பனிடமும் கொல்லும் விஷயத்தைப்பற்றியே பேசுகிறான். வெளியேறுகிறவனை பஸ் சக்கரத்தில் தள்ளிக் கொன்றுவிடவேண்டுமென்று தோன்றுகிறது. எண்ணத்தின் தீவிரத்தில் உண்மையிலேயே அப்படி நிகழ்ந்துவிட்டதாகவும் மனைவியிடம் சொல்கிறான்.
மறுநாள் அலுவலகத்துக்குத் தாமதமாகச் செல்கிறான். ஏன் என்று கேட்டவர்களிடம் வரும் வழியில் தன் நண்பன் பஸ்ஸில் மாட்டி அரைபட்டுச் செத்துவிட்டதாகச் சொல்கிறான். ஆனால் அலுலவகத்துக்குள் செல்லாமல் சைக்கிளைத் திருப்பி வீட்டுக்குச் செல்கிறான். சந்தேகத்துடன் கேள்வி கேட்கும் மனைவியிடம் தாறுமாறாகப் பதில் சொல்கிறான். தான் மட்டுமே பூமியில் பாதம் பதிக்கும் மனிதன் என்றும் மற்றவர்கள் எல்லாரும் பேய்கள் என்றும் சொல்கிறான். ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாகப் பயத்துடன் கழிகிறது. உலகத்தில் தான் மடடும் தனியாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. பேய்கள் மனித உருக்கொண்டு தரையில் பாதம் படாமல் தோன்றினால் மனிதன் பேயாகப் பதுங்குவதே மேல் என்று தோன்றுகிறது. உடனே சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே புறப்படுகிறான். தொலைவில் ஒரு பஸ் வெகுவேகமாக வருகிறது. அதை ஒரு பேய் ஓட்டிக்கொண்டு வருவதாக அவனுக்குத் தோன்றுகிறது. அப்பேயின் செயலை நிறுத்த பஸ்ஸின் முன் பாய்ந்து நிறுத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. உடனே சற்றும் யோசிக்காமல் பஸ்ஸின்மீது பாய்கிறான். அவன் மேல் ஏறி இறங்கிய பஸ் சற்றுத் துாரத்தில் போய் நிற்கிறது.
கதையில் எது இழப்பு என்பது முக்கியமான கேள்வியாகத் தொக்கி நிற்கிறது. மனித நாகரிகம் காலமெல்லாம் பக்குவப்படுத்திய மரபுகளின் உலகில் உலவி அடைகிற மகிழ்ச்சியை இழந்துபோனது இழப்பா ? ஒரு சிறிய தாவலில் தற்செயலாகப் பயணப்பட்டுவிட்ட பழக்கப்படாத இருள் பாதைகளுக்குள் தொடர்ந்து செல்ல இயலாமல் உயிரைத் துறப்பது இழப்பா ? குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் அலுவலக உலகிலும் அவனுக்கென்று ஆகி வந்திருக்கிற ஸ்தானத்தையும் கெளரவத்தையும் இழந்துதான் இருள்மண்டிய உலகின் ஆழத்தைநோக்கி அவன் விரைகிறான். ஆனால் கட்டுப்பாடற்ற எண்ணங்களின் ஈர்ப்பினுடைய ஆற்றலை அவனால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை என்றே சொல்லவேண்டும். கண்ணில் படும் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு எண்ணத்தை நோக்கி இழுக்கிறது. அதே சமயத்தில் எதிலும் லயித்துவிடாதபடி இடையில் முளைக்கும் இன்னொரு எண்ணம் இழுக்கத் தொடங்குகிறது. பஸ்ஸன் முன்னால் பாய்வது பேய்களின் கொடுமையிலிருந்து இந்த உலகை மீட்கவேண்டும் என்கிற எண்ணத்தின் உந்துதலாகவோ அல்லது பேய்களை ஏமாற்றும் கிருஷ்ணய்யரைப்போலவோ அலமேலுவைப்போலவோ அல்லாமல் தன்னால் நேருக்குநேர் எதிர்த்தே பேயை வெல்லமுடியும் என்னும் நம்பிக்கையின் உந்துதலாகவோ இருக்கவேண்டும். எந்த உந்துதல் செயல்படுத்தத் துாண்டியது என்று சொல்ல அவன் உயிருடன் இல்லாமல் போனதுதான் பெரிய இழப்பு.
பேய்களை விலக்கி வைக்கும் எண்ணம் அழுத்தமான ஒரு நோக்கமாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவன்மனத்தில் உருவாகிவிடுகிறது. குழந்தையைக் குட்டிப்பேய் என்றும் மனைவியைப் பெரியபேய் என்றும் சொல்லித் தள்ளிவிடுவது கூட அத்தகு விலக்கிவைக்கும் முயற்சிதான். ஆனால் குழந்தையையோ மனைவியையோ தள்ளிவிடுவதைப்போல பஸ்ஸைத் தள்ளமுடியாமல்போய்விடுகிறது. அதுதான் துரதிருஷ்டம்.
*
தமிழ்ச்சிறுகதையாளராக முதலில் அறிமுகமான ந.முத்துசாமி முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய பின்னர் நாடக உலகில் தன்னை மேலும் வலிமையுடன் வெளிப்படுத்திக்கொள்ள முடியும் என்கிற எண்ணத்தில் தெருக்கூத்தின் கூறுகளை உள்ளடக்கிய புதிய நாடக வடிவை அடைவதில் முதன்முயற்சியை மேற்கொண்டார். ‘நாற்காலிக்காரர் ‘, ‘சுவரொட்டிகள் ‘ ஆகிய நாடகங்கள் தமிழ்நவீன நாடகத்துறையில் முக்கியமான முயற்சிகள். தெருக்கூத்து பற்றிய இவருடைய கட்டுரைகள் ‘அன்று பூட்டிய வண்டி ‘ என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிவந்திருக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட இவருடைய சிறுகதைகள் ‘நீர்மை ‘ என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டு க்ரியா வெளியீடாக 1984 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1969 ஆம் ஆண்டில் நடை என்கிற சிற்றிதழில் வெளிவந்த ‘இழப்பு ‘ என்கிற சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
================================================
paavannan@hotmail.com
- மீராவின் கனவுகள்
- எட்டு நூல்கள்.
- கவிதைகள்
- இசை அசுரன்
- தீபாவழி
- ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நிபுளாக்கள்!
- கவிதையின் புதிய உலகங்கள்
- தாமரைத் திருவிழா-ஒரு கலைச் சங்கமம்
- உயிர்மை வெளியீடு
- எனக்குப் பிடித்த கதைகள் – 82- மனத்தின் மறுபக்கம்- ந.முத்துசாமியின் ‘இழப்பு ‘
- தி விண்ட் வில் ஃபால்- இரானிய திரைப் படம்.
- பகுதி விகுதியானதேன் ?
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)
- திரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது
- ஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…
- பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.
- அன்னை தெரேஸாவின் அமுத மொழிகள் (1910-1997)
- மீண்டும் மீளும் அந்தத் தெரு.
- வணக்கம் தமிழ்த்தாயே !
- கவிதைகள்
- அலைகளின் காதல்
- கல்லூரிக் காலம் – 4 -Frustration
- விடியும்!- (19)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்பது
- ே ப ய்
- அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை
- தீபாவளிப் பரிசு
- குட்டியாப்பா
- இது தாண்டா ஆஃபீஸ்!
- கடிதங்கள் – அக்டோபர் 23,2003
- குருட்டுச் சட்டம்
- வாரபலன் – அக்டோபர் 23, 2003 – உடல் ஆரோக்கியம்
- நேரம்
- உதயமூர்த்தி சுவாமிகள்
- பகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் – குறுகிய கண்ணோட்டம்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -2
- காரேட் ஹார்டின்(1915-2003)
- பொது இடம், தனிமனித இடம் ,சமூகக் குழுவின் தகுதரங்கள்
- கொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்
- தாண்டவன்
- மறுபடியும்
- பரிணாமம்