தாமரைத் திருவிழா-ஒரு கலைச் சங்கமம்

This entry is part of 42 in the series 20031023_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


1

லத்தின் அமெரிக்க இசையும்,இந்திய இசையும் சேர்ந்து இசைக்கப்பட்டால், அமெரிக்காவில் ஒரு சிறிய நகரில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த தால் படத்திலிருந்து ஒரு பாடல் ஒரு இசைக் குழுவால பாடப்பட்டால், ரகீ இசையும் ராக இசையும் சேர்ந்தால்- இது போன்ற பலவற்றை சாத்தியமாக்கியிருப்பது லோட்டஸ் பெஸ்டிவல் என்ற கலைத்திருவிழா. அமெரிக்கவில் உள்ள மிக அழகான பல்கலைகழக வளாகங்களில் ஒன்று பூளுமிங்கடனில் உள்ள இந்தியானா பல்கலைகழக வளாகம்.பூளுமிங்டன் பெரிய நகரமல்ல, ஆனால் கலாச்சார ரீதியாக ஒரு குட்டி உலகம் என்றே கூறமுடியும். மிகச்சிறப்பான இசைப்பள்ளி, உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்து படிக்கும்,படிப்பிற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், இந்தியா குறித்து India Studies Program, இது தவிர உலகின் பல்வேறு நாடுகள்/பகுதிகள் குறித்த ஆய்வுப்பிரிவுகள் உட்பட பல காரணங்களால் இங்கு கலாச்சாரப் பன்மை என்பது சாதரணமான ஒன்று.

சில வாரங்கள் முன்பு இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைவர் மாலிக் உரையாற்றினார்,அடுத்த வாரம் பத்திரிகையாளர் ப்ரவீண் ஸ்வாமி உரையாற்றுகிறார்.சில மாதங்கள் முன்பு தலாய் லாமா விஜயம் செய்தார்.இது போல் பலவற்றைக் குறிப்பிடலாம்.இத்தகைய ஊரில் உலகக்கலாச்சாரம் என்பதற்கு ஆதரவு இருப்பதில் வியப்பில்லை.இங்குள்ள பொது நூலகத்தில் சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலியும் உள்ளது, மணி ரத்தினத்தின் தில் சேயும் உள்ளது, சந்தோஷ் சிவனின் டெரரிஸ்டும் உண்டு.அகிரா குரோசாவின் கிட்டதட்ட அனைத்துப்படங்களும் DVD/VHS வடிவில் அங்கே கிடைக்கின்றன.

இந்தத் திருவிழா பத்தாண்டுகள் முன்னர் துவக்கப்பட்டது.இப்போது பெரிய அளவில் நடத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள்,பன்னாட்டு கலை இசையுடன், அமெரிக்காவில் பூர்விக குடியினரின் கலை நிகழ்ச்சிகள் என ஒரு சில நாட்களுக்கு கலை விருந்து படைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நான் பார்த்த ஒரு சில நிகழ்ச்சிகள் குறித்து எழுதுகிறேன்.

2

அமெரிக்காவில் ஒரு காலும், சென்னையில் ஒரு காலும் வைத்துக் கொண்டு global rthyms என்ற இசைக்குழு மூலம் இசையில் பல பரிசோதனைகளை நிகழ்த்துபவர் கிருஷ்ணன் ஸ்ரீநிவாஸ்.இந்த இசைக்குழுவினருடன் இந்த ஆண்டு இவ்விழாவில் பங்கேற்றவர் சென்னை கபாலீஸ்வர் கோயில் மிருதங்கக் கலைஞர் சரவணன்.தென்னமெரிக்க நாடுகள்,அமெரிக்கா,இந்தியா என பன்னாட்டு கலைஞர்கள் ஒருங்கே இசை நிகழ்ச்சி நடத்தினர்.இங்கு வெவ்வேறு பாணியிலமைந்த பாடல்கள்,வெவ்வேறு இசை மரபுகளில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்பானிஷ் மொழிப் பாடலுக்கு மிருதங்கம் பயன்படுத்தப்பட்டால், ஹிந்துஸ்தானி ராகத்தில அமைந்த பாடலை இந்திய, மற்றும் மேற்கத்திய இசைக் கருவிகளின் பிண்ணணி இசையில் பாடினால்,வாசித்தால் எப்படி இருக்கும்.இது போன்ற சங்கமம முயற்சிகள் கொண்டது அவர் நடத்திய இசை நிகழ்ச்சிகள்.இத்துடன் பரத நாட்டியம் வேறு. ஒரு அமெரிக்க மாணவர் இந்திய இசைக் கருவிகளை இசைக்க,மேற்கத்திய இசைக் கருவிகள், மிருதங்கம் சகிதம் பரத நாட்டியம் நிகழ்த்தப்பட்டது. இங்கு பயிலும் இரண்டு மாணவிகள், பூர்ணிமா,வசுதா நடனமாடினர். ஒரு கீர்த்தனையை பலவேறு வகைப்பட்ட இசைக்கருவிகள் வழியாக் இசைக்கும் போது அது கேட்போருக்கு புதிய அனுபவமாக உள்ளது. நம் காதுகளும்,மனமும் ஒரு சில மாதிரியான வாசிப்புகளையே கேட்டுப் பழகியிருந்தால் இவை வித்தியாசமாக, அட இந்த கீர்த்தனையை வேறொரு மரபில் உள்ள இசைக்கருவி மூலம் கூட இப்படி வாசிக்க முடியுமா என்று யோசிக்கக் தூண்டுகின்றன இம்முயற்சிகள்.இங்கு கவனிக்கவேண்டியது இசையின் தூய்மை அல்லது உச்சரிப்பின் தெளிவு அல்ல. எனவே சிலர் இவற்றை இசைக் கொலை எனக்கருதலாம்.தியாகயைரின் கீர்த்தனைக்கு உகந்தவை நம் கர்நாடக சங்கீதத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளே எனக் கருதலாம்.ஆனால் சாக்ஸபோன் மூலம் கூட அதை இசைக்கமுடியும் என்னும் போது, மிருதங்கமும், வேறோரு வாத்தியமும் ‘போட்டி ‘ போடும் போது இசை அனுபவம் வேறு விதமானது. எனவேதான் இத்தகைய முயற்சிகளை எல்லைகளை மீறுகின்றன, ஒரு நெகிழ்வினைத் தருகின்றன, பண்பாடுகள் காற்றுப்புகா சுவர்கள் அல்ல என்று காட்ட முயல்கின்றன.திரை இசையில் இன்று எத்தனை விதமான இசைக்கருவிகளின் ஒலிகளை நாம் கேட்கிறோம். ஒரு பத்தாண்டு முன்பு இருந்த் திரையிசை இன்று எப்படி மாறியுள்ளது. இங்கு மாற்றமும், மாறாததும் முக்கியம். கிருஷ்ணா போன்றோர் முயற்சிகள் வெறும் ஹிந்துஸ்தானி-கர்நாடக இசை மரபுச் சங்கமம முயற்சிகள் என்பதையும் தாண்டி கண்டங்கள் தாண்டிய இசைச்சங்கமம் என்ற அளவில் உள்ளன.மரபின் புனிதம் குறித்து பேசி இசையை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமா என்ற கேள்வியும் உள்ளது. அதே சமயம் இந்த சங்கமம் என்பது அர்த்தமற்ற கலவையாகிவிடுமோ, இன்னொரு பாஷனாக மாறிவிடுமா என்பது போன்ற கேள்விகளும் உள்ளன.வித்தியாசமான இசைகளை கேட்க,ரசிக்க அவர் நடத்திய நிகழ்ச்சி பெரும் வாய்பளித்தது என்பது உண்மை.

அமெரிக்க பழங்குடி மக்களின் கலைக்கும் இந்தத் திருவிழாவில் இடமுண்டு.Kevin Locke (Lakota), Larry Yazzie (Meskwaki-Dinளூ), and Edmon Navaquaya (Comanche-Choctaw) இந்த மூவரும் நடத்திய நிகழச்சி மிகப்பிரமாதம்.கெவின் கதை சொல்லி, புல்லாங்குழல் இசைக்க மற்ற இருவரும் நடனமாட நேரம் போனதே தெரியவில்லை.பழங்குடி மக்களின் தொனமங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை கெவின் கூற இவர்கள் நடனமாடினர்.கெவின் புல்லாங்குழல் இசையில் சோகம்,இன்பம்,காதல் என அனைத்து உணர்வுகளும் வெளிப்பட்டன. நதியால் பிரிக்கப்பட்ட இரு காதலர்கள் கண்ணாடி மூலம் ஒருத்தரை யொருத்தர் காண முயலும் கதையை இந்த இருவரும் அபிநயிக்க புல்லாங்குழல் மூலம் அதை உணர்த்தினார் கெவின்.பின்னர் வளையங்கள் கொண்டு நிகழதப்பட்ட நடனங்களும் பிரமாதம். கெவின் பழங்குடிப்பண்பாடு என்பதைத் தாண்டி உலகப்பொதுமை என்ற ரீதியில் தன் கலையை எடுத்துச் செல்பவர்.பஹாய் சிந்தனைகள் மீது பெறுமதிப்பு கொண்டவர். அவர் குறித்து மேலும் அறிய என்ற தளத்தை காண்க. இந்த நிகழ்ச்சி வெட்ட வெளியில் நடத்தப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

பழங்குடிக் கலை என்பதைவிட அனைவருக்கும் பொதுவான கலையாக இதை நிகழத்திக்காட்டியதுதான் இக்குழுவின் சிறப்பு.இங்கு பாரம்பரியம் என்பது மூடிய அறையாக முன்னிறுத்தப்பட்வில்லை. மாறாக ஒரு ஊற்றாக முன்வைக்கப்படுகிறது

3

இத்தகைய கலை நிகழச்சிகளுக்கும், உலகமயமாதல் என்பதற்கும் என்ன தொடர்பு. கலப்புகள், ஒட்டுகள் (hybrids) இன்று கலை வடிவங்கள்,பாரம்பரியங்களிக்கிடையே உள்ள இடைவெளியை குறைக்கின்றன, ஆனால் இவை உலககலாச்சாரம் ஒன்றை நோக்கி செல்கின்றனவா ? அல்லது ஒரு fusion என்ற அளவில் நின்று விடுவின்றுகின்றனவா ? பண்பாட்டு/கலாச்சாரத் தனித்துவமும்,அடையாளமும் இதில் என்னவாகின்றன.

இது போல் பல கேள்விகள் உள்ளன. குறிப்பாக பழங்குடிக் கலாச்சாரம் உலக அரங்கில் நிகழ்த்தப்படும் போது அல்லது அதன் சின்னங்கள் சந்தையில் பலவிதங்களில்,பல வடிவங்களில் விற்கப்படும் போது அது பொருள்மயமாதலுக்கு(commodification) இட்டுச் செல்கிறதா ?இவை குறித்து வேறொரு சந்தர்பத்தில் எழுதுகிறேன்.தாமரைத்திருவிழா போன்ற முயற்சிகள் முக்கியமான்வை.அவை புதிய முயற்சிகளையும், புதிய புரிதலையும் சாத்தியமாக்குகின்றன.இசையும் கலையும் அனைவருக்கும் பொது என்று தெளிவாக்குகின்றன.பழங்குடி இசையின் ஒரு அம்சமான புல்லாங்குழல் இசை ,வேறொரு கண்டத்தில் பிறந்த புல்லாங்குழலை, அதன் இசையை வேறோரு சூழலில் கேட்டு பழக்கப்பட்ட வேறொரு கண்டத்தில் பிறந்த எனக்கு உவப்பளிக்கிறது, அதன் மூலம் கதைகளை,தொன்மங்களைப் பற்றி உணர்த்துகிறது.

Series Navigation