எனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

பாவண்ணன்


முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வார இதழுக்குக் கொடுத்திருந்த நேர்காணலில் தம் உணவுப் பழக்கத்தைப்பற்றியும் வேலை நேரங்களைப்பற்றியும் விரிவாகச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. அதில் தம் நாற்பதாவது வயதிலேயே அசைவ உணவுப் பழக்கத்தை நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார் அவர். அந்த நாள்களில் தான் ஆசையாக ஒரு நாயை வளர்த்து வந்ததாகவும் எந்தப் பொதுக்கூட்டத்துக்குப் போய் எவ்வளவு நேரம் கழித்துவிட்டு வந்தாலும் அந்த நாயுடன் சில நிமிடங்கள் கழித்து அதற்குத் தன் கையால் சில கறித்துண்டுகளைப்போட்டு உண்ணவைத்துப் பார்த்தபிறகே உணவுண்ணச் செல்வது தன் வழக்கமாக இருந்ததாகவும் சொல்லியிருந்தார். திடாரென நிகழ்ந்துவிட்ட அந்த நாயின் அகால மரணத்துக்குப் பிறகு அசைவ உணவை உண்ணுவதையே தான் நிறுத்திவிட்டதாகவும் அந்த உணவு ஏதோ ஒரு வகையில் தன் செல்ல நாயின் ஞாபகத்தைக் கிளறிவிடுவதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்றும் சொல்லியிருந்தார்.

பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றில் படிக்க நேர்ந்த குறிப்பும் இதேபோல முக்கியமானது. பாரதிதாசன் தொடக்க காலத்தில் தேசிய இயக்கமாக இருந்த காங்கிரஸ் இயக்கத்தின்மீது ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தார். இயக்க ஈடுபாடு கதர்த்துணிகளின் மீதான ஈடுபாடாகவும் மாற்றம் கொண்டது. உடனே தம் வீட்டில் அனைவரும் கதரே அணியவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டார். அது மட்டுமின்றி, உறுதியும் எடையும் மிகுந்த கதர்த்துணியை கட்டுக்கட்டாக வாங்கி புடவை, ரவிக்கை, கால்சட்டை, மேல்சட்டை என எல்லாவற்றையும் கதரிலேயே தைத்துக் குடும்பத்தினரைக் கட்டாயப்படுத்தி உடுத்த வைத்துவிட்டார்.

இரண்டு சம்பவங்களுக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் கொண்ட மன வைராக்கியம் மட்டுமே. ஒரு வைராக்கியம் தன் முடிவுக்குத் தன்னை மட்டுமே உட்படுத்திக்கொள்கிறது. மற்றொரு வைராக்கியம் தன் முடிவுக்குத் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் உட்படுத்த விரும்புகிறது.

அறுபதுகளில் இந்திமொழியை அரக்கியாகவும் தமிழை அழிக்கவந்த பேயாகவும் சொல்லி வளர்ந்த எதிர்ப்பு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு வளர்ந்த நண்பர் முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் அந்த முடிவுகளிலிருந்து கிஞ்சித்தும் மாறாதவராகவே இருக்கிறார். இத்தனைக்கும் இந்தியை இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவனைவிட சுத்தமாக எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் அவர். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வட இந்தியாவின் பக்கம் அலுவல் நிமித்தமாகச் சென்று வருபவர். வேலை முடித்து திரும்பும் ஒவ்வொரு முறையும் சந்திக்கிற ஏதாவது ஒரு மாலை நேரத்தில் இந்தி மொழியைப்பற்றியும் இந்திக்காரர்களைப்பற்றியும் வயிறெரிந்தும் மனம்குமைந்தும் பேசி மனத்திலிருப்பதையெல்லாம் கொட்டினால்தான் அவருக்குப் பாரத்தை இறக்கி வைத்தமாதிரி இருக்கும்.

ஒருநாள் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவருடைய இரு பிள்ளைகளும் எங்கோ வெளியே செல்வதற்காக அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஏகடையில அது இதுன்னு வாங்கிக் குடிச்சி ஒடம்ப கெடுத்துக்காதீங்கப்பா. கையில ஒரு பாட்டில்ல தண்ணி ஊத்தி எடுத்துட்டும் போங்க. கும்பலா இருக்கற பஸ்ல படியில தொங்கிட்டெல்லாம் வரவேண்டாம். நிதானமா கும்பல் கொறைவா இருக்கற பஸ்லியே வாங்கஏ என்று சொல்லி வழிஅனுப்பி வைத்தபடி இருந்தார். சரியாக நானும் அதே நேரத்துக்குச் சென்றுவிட்டதால் என்னிடமும் ஏவரேன் அங்கிள்ஏ என்று சொன்னார்கள்.

‘என்னப்பா கம்பைன் ஸ்டடியா ? ‘

‘இல்லங்க அங்கிள், படத்துக்கு ‘

‘அடி சக்கை. ஞாயித்துக்கெழம கொண்டாட்டமா ? நடத்துங்க நடத்துங்க. என்ன படம் ? ‘

‘இந்திப் படம் அங்கிள். கங்காஜல் ‘

அவர்கள் கிளம்பிப்போய்விட்டார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. அவர்களையும் நண்பரையும் மாற்றிமாற்றி ஆச்சரியத்துடன் பார்த்தேன். நான் நண்பரின் அருகே சென்று உட்கார்ந்தேன். என்னிடம் காட்டுவதற்காக அவர் எடுத்துவைத்திருந்த சில பத்திரிகை நறுக்குகளைக் கொண்டு வருவதற்காக வீட்டுக்குள் சென்றார் அவர். நான் அருகிலிருந்த ஒலிநாடாப் பெட்டியையும் ஒலிநாடாக்களையும் மேம்போக்காகப் பார்வையிட்டேன். பாதிக்கும் மேல் இந்திப் பாடல்களாகவே இருந்தன. என் ஆச்சரியம் மேலும் கூடியது. தந்தை இந்திமொழியைக் காதால் கேட்டாலேயே வெறுப்பின் உச்சத்துக்கே செல்லக்கூடியவர். மகன்களோ இந்திமொழியின் காதலர்கள்.

நண்பர் பத்திரிகை நறுக்குகளைக் கொண்டு வந்து என்னிடம் காட்டி ஒவ்வொன்றாக விளக்கிக்காட்டினார். விளக்கம் முடிந்து அவர் அமர்ந்ததும் நான் தயக்கத்துடன் என் ஐயத்தை முன்வைத்தேன்.

‘என் புள்ளைங்க, என் மனைவிங்கறதனால என் விருப்புவெறுப்புகளை அவுங்கமேல நான் எப்படிங்க திணிக்க முடியும் ? அவுங்கவுங்களுக்கும் ஒரு தனி ருசி, தனி முறை இருக்குமில்லயா ? அத மதிக்கறதும் அவசியமில்லயா ? எனக்கு இந்தி புடிக்காதுங்கறதுக்காக நான் அவுங்கள இப்ப தடுத்தா, நாளைக்கு இதே காரியத்த எனக்குத் தெரியாம செஞ்சா நான் என்ன செய்ய முடியும் ? இங்க பாரு, இன்னின்ன விஷயங்களுக்காக இந்த மொழி புடிக்கலை. எனக்கு வேணாம். வேறு சில விஷயங்களுக்காக உனக்கு அந்த மொழி புடிச்சிருக்கா ? தாராளமா புடிச்சதாவே இருக்கட்டும். எனக்காக எதயும் மாத்திக்க வேணாம் ? அதே சமயத்தில ஐயையோ மத்தவங்க முன்னால அசிங்கமா போயிடுமேன்னு மாத்திக்க வேண்டிய கட்டத்துல அனாவசியமா மான அவமானம் பாத்து வீம்பு புடிச்சி அலையாதேன்னு அவுங்ககிட்டயே எல்லாத்தயும் போட்டு ஒடைச்சிட்டேன். என் கொள்கைக்காக பாவம் சின்னப் புள்ளைங்க சந்தோஷத்த கெடுக்கறதால யாருக்கு என்ன கெடைக்கப்போவுது ? எனக்கு ஒரு நேரம் வந்தமாதிரி அவனுங்களுக்கும் ஒரு நேரம் வரும். அப்ப தானா புரிஞ்சிக்கிடட்டும். ‘

எனக்கு அவருடைய பெருந்தன்மையும் ஆழ்ந்த நம்பிக்கையும் மிகவும் பிடித்திருந்தன. தன் வைராக்கியத்தை யார்மீதும் திணிக்காமலும் தன் உறுதியை மாற்றிக்கொள்ளாமலும் நடந்துகொள்ளும் அவர் ஜனநாயக அணுகுமுறையை மனம்திறந்து பாராட்டினேன். குடும்பத்தை ஒரு சர்வாதிகாரியாக நடத்திச்செல்லாமல் அனைவரையும் மதித்து அன்புடன் அரவணைத்துச் செல்வதுதான் அவர் வெற்றியின் ரகசியம் என்பதையும் புரிந்துகொண்டேன். அவருடைய ஜனநாயக வைராக்கியம் நினைவுக்கு வரும்போதெல்லாம் எதார்த்தம் புரியாமல் உணர்ச்சிவேகத்தில் அவசரமான ஒரு முடிவை எடுத்து எதார்த்தம் புரிந்த பின்னர் அம்முடிவைத் தளர்த்திக்கொள்கிற ஒரு மேல்தட்டுப் பெண்ணைப்பற்றிய சிறுகதையையும் நினைத்துக்கொள்வேன். அச்சிறுகதை சிவசங்கரி எழுதிய ‘வைராக்கியம் ‘

தன் வளர்ப்பு நாய்க்கு வழக்கமாக மாட்டிறைச்சி வாங்கிவருகிற ஆள் வராததால் தானே நகருக்குச் சென்று வாங்கிவர முடிவெடுக்கும் மேல்தட்டுப் பெண்ணொருத்தியின் அறிமுகத்தோடு தொடங்குகிறது கதை. நகருக்குத் தெற்கே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியபடி இருந்த தொழிற்சாலைக்கு உள்ளேயே வீடும் அமையப்பெற்றவள் அவள். அவளுக்கு அந்த அல்சேஷன் நாய்மீது பிரியம் அதிகம். அதற்குச் செல்லமாக சியாமா என்று பெயரிட்டிருக்கிறாள். அவள் அந்த நாயைப் பெற்ற பெண்ணைவிட மேலாக வளர்க்கிறாள் என்பது அவளை அறிந்த எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. அந்த நாய் குட்டியாக இருந்தபோது கால்நடை வைத்தியர் ஒருவர் அல்சேஷன் வகைப்பட்ட நாய்களுக்குப் பின்னங்கால்கள் பலவீனமானவை என்றும் தொடர்ந்து மாட்டிறைச்சி கொடுத்துவருவது நல்லதென்றும் சொன்ன ஆலோசனையின்படி நடந்து வருகிறாள்.

தானே சென்று மாட்டிறைச்சி வாங்குவது என்ற முடிவெடுத்தபிறகு காரோட்டியை அழைத்து வண்டியை எடுக்கச் சொல்கிறாள். ‘ஐயையோ அங்கல்லாம் நீங்க வேணாங்கம்மா, அங்க வந்தா ஒங்களுக்குப் பிடிக்காதும்மா ‘ என்று இழுக்கிறான் அவன். அதற்கு அவள் தான் கல்லுாரியில் விலங்கியல் படித்தவள் என்றும் தவளை, முயல், புறா, எலி என எல்லா வகை விலங்கினங்களையும் அறுத்துப் பார்த்த அனுபவமுண்டு என்றும் தனக்கு எவ்விதப் பயமும் இல்லையென்றும் சொல்லி வண்டியை எடுக்க வைக்கிறாள்.

நெடுஞ்சாலையில் சென்று, அந்த நகரை முக்கால்பங்கு கடந்ததும் வலதுபக்கம் தெரிந்த கப்பிச்சாலையில் வண்டியைத் திருப்பி ஓட்டுகிறான் காரோட்டி. அங்கே பச்சைப்பசேலென்ற ஒரு குட்டை காணப்படுகிறது. குட்டையைக் கடந்ததும் மாலைமாலையாய் மாமிசத் துண்டுகள் காணப்படும் கடை தென்படுகிறது. குப்பென்ற அவ்வாடையை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காரோட்டியிடம் பணத்தைக் கொடுத்து விரைவில் கறியை வாங்கிக்கொண்டு வருமாறு சொல்கிறாள்.

அதன் பக்கத்திலேயே சேரி தெரிகிறது. காரைக் கண்டதும் ஏழெட்டுச் சின்னக் குழந்தைகள் ஓடிவந்து வண்டியைச் சூழ்ந்துகொள்கின்றனர். சிக்குப் பிடித்த தலையும் கோவணம் தொங்கும் இடுப்புமாக அவர்களைப் பார்க்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. சில சிறுவர்களின் மூக்கில் சளி வழிந்தபடி இருக்கிறது. அதற்குள் ஒரு சிறுவன் கையிலிருந்த குச்சியால் ங்ர் என்று வண்டியில் ஒரு கோடு கிழிக்கிறான். அவர்கள் அனைவரையும் விரட்டியபடி காரோட்டி வெறும் கையோடு வருகிறான். இப்போதுதான் மாடு வெட்டப்பட்டது என்றும் துண்டுபோட சிறிது நேரம் ஆகுமென்றும் பத்து நிமிஷமாவது காத்திருக்க வேண்டுமென்றும் சொல்கிறான்.

காரோட்டியைக்கண்டதும் ஓடிப்போன சிறுவர்கள் மேட்டில் இறங்கி பச்சையாய் மிதந்த அந்தத் தண்ணீரில் தொப்பென்று விழுந்து ஆனந்தமாக நீந்துகிறார்கள். அந்த அழுக்குத் தண்ணீரை வாய்க்குள் நிரப்பிக் கொப்பளிக்கிறார்கள். அதன் கரையில் ஊறப்போடப்பட்டிருந்த மாட்டுத்தோலை அருகில் கிடந்த கல்மேல் போட்டுப் பரபரவென்று தேய்க்கிறான் ஒருவன். வெள்ளையும் சிவப்புமாய் அழுக்குத் திரவம் வழிந்தோடுகிறது. குப்பென்ற கவிச்சைவாடை அவளுக்குச் சங்கடமாக இருக்கிறது.

அப்போது எலும்பும் தோலுமான இன்னொரு மாட்டை இழுத்துக்கொண்டு வருகிறான் முண்டாசு கட்டிய ஒருவன். அதைப் பார்த்ததும் கூட்டம் அன்று அதிகமிருப்பதால் கூடுதலாக இன்னொரு மாட்டையும் வெட்ட இருப்பதாகச் சொல்கிறான் காரோட்டி. வெட்டவெளியிலேயே ஒரு மாடு வெட்டப்படுவதை எதிர்பார்க்காத அவள் அதிர்ச்சியுறுகிறாள். அதே நேரத்தில் கடைக்குள் போன ஓர் ஆள் ஒரு கையில் உலக்கையோடும் மற்றொரு கையில் பட்டாக்கத்தியோடும் திரும்பிவருகிறான். அவள் தடக்கென்று காரிலிருந்து ஏஇறங்கி இந்தாப்பா, இப்போ வெட்டாதே. ஒரே ஒரு நிமிஷம் பொறுத்துக்கோ. நான் போயிடறேன்ஏ என்று பதற்றத்துடன் குரல்கொடுக்கிறாள். பிறகு காரோட்டியின் பக்கம் திரும்பி விரைவாகச் சென்று கறித்துண்டுகளை வாங்கிக்கொண்டு வருமாறு விரைவுபடுத்துகிறாள்.

அவன் கடைக்குள் சென்று திரும்புகிற இடைவெளியல் அந்தப் பச்சைக்குட்டையையும் அதில் மிதக்கும் ஆயிரமாயிரம் அசுத்தங்களையும் அதில் துள்ளி விளையாடும் பிள்ளைகளையும் அந்த மாட்டின் அவலநிலையையும் மாறிமாறிப் பார்த்து வாட்டமுறுகிறாள். காரோட்டி கறியுடன் திரும்பியதும் வண்டியை ரிவர்ஸிலேயே எடுத்துச்செல்ல முயல்கிறான். அந்தச் சின்னச் சாலையில் வண்டியைத் திருப்புவது அவனுக்குச் சிரமமாக இருக்கிறது. அதுவரை வெட்டுவதை ஒத்திப்போட்டவன் இரும்பு உலக்கையால் மாட்டின் கொம்புகளுக்கிடையே நெற்றிப்பொட்டில் ஓங்கி அடிக்கிறான். அம்மா என்று பரிதாபகரமான குரலுடன் கீழே சாய்கிறது பசு. கண்கள் பிதுங்க நாக்கில் நுரைதள்ள கால்கள் இழுத்துக்கொள்ள பின்பக்கம் சாணம் தள்ள, பொத்தென்று கீழே விழுகிறது. அதன் கால்கள் துடித்துக்கொண்டிருக்கையிலேயே மற்றொருவன் பட்டாக்கத்தியை அதன் கழுத்தில் வைத்து அறுக்கத் தொடங்குகிறான்.

அக்காட்சியின் வேதனையையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாததால் ஊமையாகிப்போன அவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக வழிகிறது. அந்த உணர்ச்சிகளின் உச்சவெளிப்பாடாக தன் நாய்க்கு மாட்டுக்கறியைத் தருவதில்லை என்று முடிவெடுக்கிறாள். மறுநாள் மாட்டிறைச்சி வாங்க வந்த பையனை வேலையில்லை என்று திருப்பி அனுப்பிவிடுகிறாள். காலையில் முட்டையும் பாலும் சாப்பிட்ட நாய் மதியம் இரண்டுமணிக்கு வழக்கம்போல கறிச்சோற்றை எதிர்பார்த்து கொல்லைப்பக்கம் சென்று உட்கார்கிறது. ஒரு ஆழாக்குச் சாதத்தில் பருப்பையும் நெய்யையும் விட்டுப் பிசைந்து நாயின் உணவுத்தட்டில் போடுகிறாள் அவள். பசியோடும் ஆவலோடும் ஓடிவந்த நாய் அதை முகர்ந்துபார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்கிறது. ஏமாற்றத்துடன் வழக்கமாகக் கறி சமைக்கிற இடத்துக்குச் சென்று சமையல் பாத்திரங்களை முகர்ந்து பார்க்கிறது.

நாயின் வைராக்கியத்தைக் கண்டு அவளுக்கும் வைராக்கியம் அதிகரிக்கிறது. பசி வந்தால் தன்னால் சாப்பிடும் என்று முணுமுணுக்கிறாள். அன்று முழுக்க நாய் பட்டினியாக இருக்கிறது. மறுநாள் அந்த நாய் காலையில் வழக்கமாக அருந்தக்கூடிய பாலைக்கூடத் தொட மறுத்துவிட்டது. நாயின் பிடிவாதத்தைக்கண்டு அவளுக்கு ஒரு பக்கம் கோபமாகவும் மறுபக்கம் வருத்தமாகவும் இருந்தது. மதியம் ஆவதற்குள் நாயின் தவிப்பு அதிகமானது. கொல்லைப் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது. காரணமில்லாமல் குலைத்தது. அவள் காலையே சுற்றிச்சுற்றி வந்தது. பால் சாதம், ரொட்டி, முட்டை எதையும் முகர்ந்து பார்க்கக்கூட அது தயாராக இல்லை. அன்றும் பட்டினியாகவே கழிந்தது. உடல்சோர்ந்துபோன நாயின் பிடிவாதம் மட்டும் தளரவில்லை. தன் வைராக்கியத்தைச் சற்றே தளர்த்திக்கொள்கிற அவள் காரோட்டியிடம் ஆட்டை எப்படிக் கொல்வார்கள் என்று கேட்கிறாள். மாட்டைப்போல அதிகம் தவிக்க விடுவதில்லை என்றும் ஒரே வெட்டில் சாய்த்துவிடுவார்கள் என்றும் பதில்சொல்கிறான் காரோட்டி. அதைக் கேட்டு ஓரளவு அவள் மனம் திருப்தியுறுகிறது. ஓடிச்சென்று ஆட்டுக்கறி வாங்கிவருமாறு சொல்கிறாள். வழக்கமாக மாட்டுக்கறி வாங்கக்கூடிய ஒரு ரூபாய்க்கு ஆட்டுக்கறி வராது என்று சொல்கிறான் காரோட்டி. அதனால் இரண்டு ரூபாய்க்கு வரவழைக்கப்படுகிறது. அதில் வெறும் எட்டுத்துண்டுகள் மட்டுமே இருக்கின்றன. நாயின் பசி அதனால் தணியவில்லை. மறுநாள் மூன்று ரூபாய்க்கும் பிறகு நான்கு ரூபாய்க்கும் வாங்கிவரச் சொல்கிறாள். அத்துண்டுகளாலும் நாயின் பசி தீரவில்லை.

அரைவயிற்றோடு அது வளையவருவதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உட்கார்ந்து யோசிக்கிறாள் அவள். கொசுத் தொல்லைக்காவும் எறும்புத் தொல்லைக்காகவும் மருந்தை அடித்துக்கொல்வது தன்னுடைய நலத்துக்காக என்னும்போது மாட்டுக்காரன் தன் வயிற்றை வளர்ப்பதற்காகத் தனக்குத் தெரிந்த விதத்தில் மாடுகளைக் கொல்வதையும் அவனுடைய நலத்துக்காக என்று எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்று தோன்றுகிறது. யோசிக்க யோசிக்க அவன் வைராக்கியம் தானாகவே கரைகிறது. மறுநாள் நாய்க்கு மாட்டிறைச்சி வாங்கும் பையனை வரவழைக்கச் சொல்கிறாள்.

இக்கதையின் முக்கியமான அம்சம் இருவேறு ச்முகத் தட்டுகளின் சந்திப்பு. ஆண்டாண்டு காலமாக தன் நாய்க்கு மாட்டுக்கறி கொடுத்துவருகிற உயர்தட்டுப் பெண்ணுக்கு அந்த மாட்டுக்கறி எங்கிருந்து வருகிறது, எப்படிப்பட்ட சூழலில் அம்மாடு வெட்டப்பட்டு கறியாகிறது, அதை வெட்டுவது யார், அவர்களது வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கிறது என்பதைப்பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் சேரி, அழுக்குக் குளம், மாட்டுத்தோல் மிதக்கும் குளம், அதில் குதுாகலத்துடன் குளிக்கும் சிறுவர்கள் என எதையுமே அறியாதவள் அவள். வழக்கமாகக் கறி வாங்கித் தருபவன் வராத காரணத்தால் தன் பிரியத்துக்குரிய நாய்க்காக மாட்டுக்கறியை வாங்குவதற்காக மாடு வெட்டப்படும் இடத்துக்கே வருகிறாள் உயர்தட்டுப் பெண். நாயின் மீதிருக்கிற அன்புதான் அவளை அங்கே கொண்வந்து நிறுத்துகிறது. இரண்டு வெவ்வேறு ச்முகங்கள் ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன. அங்கே அவள் காண நேர்கிற கொலைக்காட்சியால் நாளைமுதல் தன் நாய்க்கு மாட்டுக்கறியே தரக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். ஆனால் அவள் வைராக்கியம் நாலே நாள்களில் கரைந்துவிடுகிறது. நாயின் பட்டினிக்கோலம் அவளைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது. கொசு அடிப்பதையும் மாட்டைக்கொல்வதையும் ஒப்பிட்டுத் தனக்குத்தானே ஒரு நொண்டிச்சமாதானம் சொல்லிக்கொள்கிறது. அவள் மனத்தில் குடியிருந்த அந்த நாலுநாள் வைராக்கியம்தான் இந்த அனுபவத்தின் ஒரே விளைச்சல். வழக்கமான தன் உலகத்திலிருந்து வேறொரு உலகத்துக்கு வந்ததால் அவள் மனமடைந்த மாற்றத்தால் பெற்ற வைராக்கியம் மீண்டும் தன் உலகத்துடனேயே பொருந்திப்போக வேண்டிய சூழலில் சீக்கிரமாகவே உதிர்ந்துவிடுகிறது. ஒருகணக் காட்சியால் மனத்தில் ஏற்படக்கூடிய இந்தத் தற்காலிக மாற்றத்தைப் படம்பிடித்திருப்பது இக்கதையின் பலம். கதை முடிந்த பிறகும் வைராக்கியம் என்கிற சொல்லுக்குப் பொருள் சொல்கிற மாதிரி மயான வைராக்கியம், பிரசவ வைராக்கியம் என்றெல்லாம் எழுதிச்செல்வது பலவீனமான அம்சம்.

*

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஏராளமான தொடர்கதைகளை எழுதியவர் சிவசங்கரி. இலக்கியத்தின் வழியாக இந்தியாவை இணைத்தல் என்கிற நோக்கோடு இந்தியா முழுக்கப் பயணம் செய்து ஒவ்வொரு மொழியிலும் முக்கியமான ஐந்தாறு எழுத்தாளர்களோடு கலந்து பேசி உரையாடல் நிகழ்த்தி, அந்த நேர்காணல்களைத் தொகுப்பாக்கியவர். இன்றைய இந்திய இலக்கியப் போக்கைத் தெரிந்துகொள்ள விரும்பும் ஓர் இலக்கிய வாசகன் தெரிந்துகொள்ள இத்தொகுதிகளில் ஏராளமான விஷயங்கள் உண்டு. தம் அறுபதாம் வயதின் நிறைவையொட்டி தமிழ் எழுத்தாளர்கள் அறுபது பேர்களின் சிறுகதைகளை ‘நெஞ்சில் நிற்பவை ‘ என்கிற பெயரில் தொகுப்பாக்கி வெளியிட்டுள்ளார். ‘வைராக்கியம் ‘ என்னும் இச்சிறுகதை 1974 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் தினமணிக்கதிரில் வெளிவந்தது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்